Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.எம்.எப் கடன்கள் கசப்பான மருந்து!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.எம்.எப் கடன்கள் கசப்பான மருந்து!

 

-நஜீப் பின் கபூர்-

இன்று நமது நாட்டில் பிரச்சினைகள் சங்கிலித் தொடர் போல வந்து கொண்டிருக்கின்றன.பொருட்களின் விலைகளில் மிகச் சிறியதோர் சலுகையை மக்களுக்கு கொடுத்து அதனைவிட பல மடங்கு பணத்தை மக்களிடம் பறிக்கின்ற ஒரு வேலைத் திட்டத்தைத்தான் அரசு இன்று முன்னெடுத்து வருகின்றது.இதனை மின் கட்டணங்கள் உயர்வில் நாம் பார்த்தோம்.மக்களுக்கு நெருக்கடியில் எந்த விமோசனங்களும் கிடையாது.பொருளாதாரத் துன்பங்கள் அப்படியே தொடர, ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் கடந்த 30ம் திகதி சமர்ப்பித்த இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் அரசு எந்தச் சலுகைகளையும் குடிகளுக்கு வழங்கவில்லை.

இந்த வரவு-செலவுத்திட்டங்கள் பற்றி பேசும் முன்னர் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐ.எம்.எப் பற்றிய செய்தியை முதலில் பார்ப்போம்.அது  காரியாலய மட்டத்தில் ஊடக சந்திப்பை நடத்தி தனது நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கின்றது. அனேகமான ஊடகங்கள் ஐ.எம்.எப் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வாரி வழங்கி இருக்கின்றது என்ற தொனியில் செய்திகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.ஆனால் அது உண்மையல்ல.தற்போதைய நிலையில் இது ஒரு கசப்பான மருந்து என்பதுதான் நமது கருத்து.2020களில் நாம் ஐ.எம்.எப் உதவியை நாடி இருந்தால் இலங்கை அரசும் ஐ.எம்.எப்.பும் நேரடியாக இதில் பங்காளிகளாக இருந்திருக்க முடியும்.

காலதாமதமாக இன்று இது நடந்திருக்கின்றது.அதாவது நாடு வங்குரோத்து என்ற நிலையில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருக்கின்றன.அதனால் இதில் பல தரப்புக்கள் பச்சைக் கொடியைக் காட்ட வேண்டி இருக்கின்றது.அல்லது விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய வேண்டிய ஒரு நிலை இருக்கின்றது.இலங்கை ஏற்கெனவே வெளிநாடுகளிடம் நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட கடன்கள் பெரும் தொகையில் இருக்கின்றன.அவற்றை இலங்கை எப்படிக் கையாளப் போகின்றது-திருப்பிக் கொடுக்கப் போகின்றது? குறிப்பாக சீனா, இந்தியா, ஜப்பான், உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி என்பனவற்றில் இருந்து பெற்றுக் கொண்ட கடன்கள் விடயத்தில் இலங்கை எப்படிக் கையாளப் போகின்றது என்ற விடயத்தில் அந்தத் தரப்பிடம் இருந்து ஒரு மென்போக்கை எதிர்பார்க்க வேண்டி இருக்கின்றது. இதுவிடயத்தில் இலங்கையே அந்தத் தரப்புடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டியும் இருக்கின்றது.இதனை ஐ.எம்.எப் ஒரு கோரிக்கையாக முன் மொழிந்திருக்கின்றது.

அத்துடன் ஐ.எம்.எப் இணங்கி இருக்கின்ற தொகை ஒரேயடியாக காசோலை மூலம் நமக்கு இன்றோ நாளையோ வருகின்ற காசல்ல.இது 48 மாதங்களுக்குள் அதாவது நான்கு வருட கால அட்டவணைப்படிதான் வந்து சேர இருக்கின்றது.இதனை முறையாகப் பெற்றுக் கொள்வதற்காக பல நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன.அதில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.அரசாங்கம் பொருளாதார ஸ்தீரத்தன்மையை நாட்டில் விரைவாக ஏற்படுத்தியாக வேண்டும்.அரச நிறுவனங்களை நஷ்டத்தில் இயங்கிச் செல்லக் கூடாது.குறிப்பாக எரிபொருள், மின்சாரம், நீர் வினியோகம்,போக்குவரத்து சேவைகள் போன்றவை இன்று நஷ்டத்தில் போய்க் கொண்டிருக்கின்றது.அதனை இலாபமீட்டுகின்ற துறைகளாக மாற்ற வேண்டும்.இதுவும் ஐ.எம்.எப் கோரிக்கை.அப்படியானால் அந்த சுமை பொது மக்கள் தலைகளில்தான் வந்து விழ இருக்கின்றது என்பதும் தெளிவு.

மத்திய வங்கிக்கும் இது சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றது.மத்திய வங்கி விடயத்தில் அரசியல் ரீதியான தலையீடுகள் தடுக்கப்பட வேண்டும்.(கடந்த காலங்களில் மத்திய வங்கி என்பது ராஜபக்ஸக்களின் சொந்த கஜானாபோல்தான் பாவிக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே) அது ஏதோ வழிகளில் அன்னியச் செலாவாணியை கையிருப்பில் வைத்திருப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.நாட்டில் நடந்து கொண்டிருக்கின்ற ஊழல் மோசடி போன்றவற்றை கட்டுப்படுத்த கண்டிப்பான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.இன்றுவரை இதுதான் நாட்டின் பிரதான பிரச்சனை என்பதும் தெரிந்ததே.அரசு பல்வேறு மட்டங்களில் தனது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்.ஐ.எம்.எப் சிபார்சு செய்கின்ற காசு குடித்துக் கும்மாளமடிப்பதற்கான கடன்கள் அல்ல.இது முறையாக கையாளப்பட வேண்டி இருக்கின்றது.இந்த விதிமுறைகள் திருப்தியாக நடக்கின்ற போதுதான் காசு கட்டம் கட்டமாக 48 மாதங்கள் வரை கிடைக்கும்.

இந்தப் பணம் முழுமையாக நமக்கு வந்து சேரும் போது 2026 ஆம் ஆண்டாகிவிடும்         . அப்போது பதவியல் இருக்கின்ற அரசாங்கத்தின் ஆயுள் காலமும் முற்றுப் பெற்றிருக்கும்.எனவே எதிர்காலத்தில் அரசாங்கம் ஐ.எம்.எப்.பை நாடியது தவறு என்று கூட பேசுவதற்கு நிறையவே இடமிருக்கின்றது.இந்த ஐ.எம்.எப் பணத்தை மட்டும் நம்பி இந்த நாட்டை ஒருபோதும் முன்னெடுத்துச் செல்ல முடியாது.என்றாலும் இந்த கசப்பான மருந்தை குடிப்பதைத் தவிர அரசுக்கு மாற்று வழிகள் கிடையாது.வாசு போன்ற அரசியல்வாதிகள் ஐ.எம்.எப்.பை நாடுவதைக் கடுமையாக எதிர்த்தனர். சிலர் தங்களது சடலத்தின் மேல்தான் இந்தக் கடன்களைப் பெற முடியும் என்றெல்லாம் கடந்த காலங்களில் பேசியும் வந்தார்கள்.

இப்போது மீண்டும் ஜனாதிபதி ரணிலின் இடைக்கால வரவு -செலவுத் திட்டத்துக்கு வருவோம்.ஆளும் தரப்பினரும் ரணில் விசுவாசிகளும் இந்த இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை புகழ்வார்கள்.வழக்கம் போல எதிரணியினர் இதனை எதிர்ப்பார்கள்.இதுதான் இந்த நாட்டில் வழக்கமாக நடந்து கொண்டிருக்கின்றது. இப்போதும் அப்படித்தான் நிலமை இருக்கின்றது.நமது நாட்டில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக முன்வைக்கப்பட்ட எந்தவொரு வரவு -செலவுத் திட்டமும் வெற்றி பெறவில்லை.அதில் சொல்லப்படுகின்ற வார்த்தைகளும் இலக்கங்களும் நடைமுறையில் தனது இலக்கை அடைவதில்லை.இதே மொட்டு அரசு 2022 வரவு செலவுத் திட்டத்தை கடந்த திசம்பரில்  பசில் சமர்ப்பித்த போது, அதற்கு வரலாற்றில் என்றுமில்லாத சிறப்பான வரவு செலவு அறிக்கை என்றார்கள்.தெருக்களில் பட்டாசு கூட கொழுத்தப்பட்டது.இதனை எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கின்றார்களோ தெரியாது.

அப்போது பசில்  வட் வரியை எட்டு சதவீதம் குறைத்திருந்தார்.இப்போது ரணில் அதனை 12 சதவீதமாக உயர்த்தி இருக்கின்றார்.இது மறைமுக 20 சதவீதத்தை தொடும். இதனையும் சிறப்பான திட்டம் என்று அதே ஆட்கள் இன்று நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.இப்படித்தான் வரவு செலவு அறிக்கை பற்றிய கதைகள் போய்க் கொண்டிருக்கின்றன.இதன் பின்னர் அரச அதிகாரிகளுக்கு மின்சாரத்தில் இயங்குகின்ற கார்களை இறக்குமதி செய்து எரிபொருளைக் கட்டுப்படுத்துவது பற்றியும் ரணில் ஆலோசனை கூறி இருக்கின்றார்.அப்படியாக இருந்தால் பழைய கார்களுக்குப் பதில் புதிய கார்களைக் கொள்வனவு செய்ய வேண்டும்.அதற்கு நிதியை எங்கிருந்து பெறுவது.?அப்படி இறக்குமதி செய்யும் போது அதிலும் கமிஷன் வியாபாரம் ஒன்று நடக்கும்.!

அரசியலிலும் நிருவாகத்துறையிலும் மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை ஊழல் மோசடிகள் நடக்கின்ற நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிகளை செலுத்துவதற்கான கோவைகளை திறக்கின்ற யோசனையையும் ரணில் முன்வைத்திருக்கின்றார்.வேடிக்கை என்னவென்றால் தற்போது இந்த நாட்டில் சனத் தொகை 22 மில்லியன்.இதில் 17 மில்லியன் பேர் அளவில் இந்த வயதுப் பிரிவில் வருவார்கள்.தற்போது வரி செலுத்துவோரின் எண்ணிக்கை சில இட்சம் பேர் மட்டுமே. அதுவும் முறையாக நடப்பதில்லை.அப்படி இருக்க அரசு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரி அறவிடும் கதை எந்தளவுக்கு நடைமுறை சாத்தியமாக முடியும்.

கர்ப்பிணித் தாய்மாருக்கு மேலதிக கொடுப்பனவு என்று சொல்லப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொடுப்பதாக சொல்லப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் நிலை என்ன என்று தெரியவில்லை.பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவுக்கு மேலதிக நிதி, வலது குறைந்தவர்களுக்கும் நோயாளிகளுக்கும் கொடுப்பனவுகள், வறிய மக்களுக்கு சலுகைகள் என்றெல்லாம் இந்த வரவு செலவுத் திட்டத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.ஆனால் நடை முறையில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை.இப்படித்தான் விவசாயிகளுக்கு உரம் இலவசம் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டா மேடைகள் தோறும் கூவி விவசாயிகளின் வாக்குகளைக் கொள்ளையடித்தார் இன்று இலவச பசளைக்கு என்ன நடந்திருக்கின்றது? இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடுத்துவது பற்றியும் ஜனாதிபதி ரணில் கருத்துத் தெரிவித்திருந்தார்.இன்று விவசாயிகள் அனுபவிக்கின்ற துயரங்களை பார்த்துவிட்டு எவராவது விவசாயத்தில் ஈடுபட முன்வருவார்களா என்று நாம் ஜனாதிபதியிடத்தில் கேள்வி எழுப்புகின்றோம்.

இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் வருமானம் 2 ரில்லியன்கள், செலவு 4 ரில்லியன்கள் வரை என்று கணக்கு சொல்லப்படுகின்றது.மீதமுள்ள பற்றாக்குறையை எப்படிச் சமாளிப்பது.இதற்கு சர்வதேசம் நமக்கு எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பது இன்னும் தெளிவில்லாத ஒரு நிலை.வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பு முடியும்வரை புதிய அமைச்சர்கள் நியமனமும் இல்லை என்று ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தனது திட்டங்களுக்கு மாற்றமான யோசனைகளை முன்வைத்து தன்னை ஒரு குற்றவாளியாக்கும் யோசனைகளை ஜனாதிபதி இந்த வரவு-செலவுத் திட்டத்தில் முன்வைத்திருப்பதால் பசில் ரணிலுடன் கடுப்பில் இருக்கின்றார்.

வரவு -செலவுத்திட்டம் ஒரு புறம் இருக்க, இப்போது தினந்தோறும் பொருட்களின் விலையை அரசு அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.இந்த வருட முடிவில் பாண் 300 ரூபா, அரிசி ஒரு கிலோ 400 ரூபா என்று போனாலும் ஆச்சர்யம் இல்லை.இது எந்த வகையில் நியாயம்.மக்கள் பொருளாதார சுமையைத் தாங்க முடியாது வீதிக்கு வரும் போது அரசு படைபலத்தை வைத்து பதில் கொடுக்கும் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி ரணில் நிருவகத்தை மொட்டுகளின் அரங்கில் நாடகமாடுகின்ற யானை என்றுதான் அறிமுகம் செய்ய வேண்டி இருக்கின்றது.ரணிலால் சுயமாக எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது.அத்தனை தீர்மானங்களின் போதும் மொட்டுக்காரர்களின் முக்கியஸ்தர்களுடன் கலந்து பேசிவிட்டுத்தான் அவர் மேற்கொண்டு வருகின்றார்.குறிப்பாக அவரது ஒவ்வொரு நகர்வும் கோட்டா, மஹிந்த, பசில் ஆகியோர் அங்கீகாரம் பெறப்படுகின்றது என்று சொல்கின்றது.உள்ளகத் தகவல்கள்?எனவேதான் மொட்டு அரங்கில் யானையின் நடனம் என்று நாம் இந்த ஆட்சியை பார்க்கின்றோம்.ஜனாதிபதி ரணிலால் இந்த அரசாங்கத்தினால் எந்தத் தீர்மானத்தையும் ஒருபோதும் தனித்து எடுக்க முடியாது.அதேபோன்று கோட்டா ஆட்சிக்காலத்தில் அவர் சர்வதேசத்துக்கு அஞ்சியே தனக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களை அடக்குவதில் படைத்தரப்பை பாவிப்பதைத் தவிர்த்து வந்தார். ஆனால், ரணில் மக்களின் அகிம்சை வழியிலான போராட்டங்களை அடக்குவதற்கு தற்போது படைபலத்தை முடியுமான மட்டும் பாவித்து வருகின்றார்.

பொதுமக்கள் படுகின்ற இன்னல்கள் மட்டும் சர்வதேசத்தின் நல்லெண்ணத்தைப் பெற்று ஒரு நல்லாட்சியை நாட்டுக்கு வழங்குவது என்ற விடயங்களிலும் ஜனாதிபதி ஆரோக்கியமாக சிந்திக்கின்ற நிலையில் இல்லை.எடுக்கின்ற சின்னச் சின்ன விடயங்களில் கூட மொட்டுக் காட்சியினரின் நல்லெண்ணத்துக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதில் ரணில் மிகவும் விளிப்புடன் காரியம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.அதேபோன்று தனக்கு நெருக்கமான ஐ.தே.க குழுவொன்றையும் பதவிகளைக் கொடுத்து துணைக்கு வைத்திருக்கின்றார் ஜனாதிபதி ரணில்.அவர்களின் நலன்கள் வரப்பிரசாதங்கள் போன்றவற்றிலும் அவர் மிகுந்த அக்கறையுடன் செலாற்றிக் கொண்டிருக்கின்றார்.

எப்படியும் அரசு தனது பதவிக்காலம் முழுவதிலும் அதிகாரத்தில் எப்படியாவது இருந்து விட்டுப் போவது என்றுதான் முடிவெடுத்திருக்கின்றது.இதற்கிடையில் தொடர்ந்தும் கோட்டா மீண்டும் நாட்டுக்கு வருவது பற்றிய கதைகள் தொடர்ச்சியாக அரசியல் அரங்கில் கேட்கின்றது.அப்படி வருகின்றவருக்கு பிரதமர் பதவி என்றும் ஒரு கதை சொல்லப்படுகின்றது.நாட்டில் கோட்டா இல்லாத நிலையில் இங்கு மொட்டுக் கட்சியில் ஆதிக்கம்தான் நடந்து கொண்டிருக்கின்றது.இதனை கோட்டா வந்துதான் செய்ய வேண்டும் என்பதில்லை.யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற மொட்டுக்கட்சியின் பெரும்பான்மையினர் பதவிக்காலம் முழுவதும் அதிகாரத்தில் இருப்பதற்கும் இந்த நெருக்கடியில் கூட நாங்கள் எப்படிப் பிழைத்துக் கொள்ள முடியும் என்பதுதான் அவர்களது சிந்தனையாக இருக்கின்றது.

இதனால்தான் கோட்டா அதிகாரத்தில் இருந்தபோதே கொரோனா தடுப்பூசி ஒன்றுக்கு ஐந்து டொலர்கள் என்ற விகிதத்தில் கொள்ளையடித்தார்கள்.சாவிலும் பணக் கொள்ளை என்று இதனை அழைக்க முடியும்.நெருக்கடிகளுக்கு மாற்றுத் திட்டம் என்று வரும்போது நிச்சயம் அதிலும் ஊழல் மோசடிகள் வரும்.இவற்றைத் தவிர்த்து நாடு நகர முடியாத அளவுக்கு நிருவாக ரீதியில் வலைப்பின்னல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றது.புரட்சிகரமான ஒரு ஆட்சி மாற்றத்தில் தான் இதற்கு பதில் கொடுக்க முடியும்.அபூர்வமாக அப்படி ஒரு அரசு அதிகாரத்துக்கு வந்தாலும் அதனை முன்னெடுப்பதிலும் நிறையவே முட்டுக்கட்டைகள் வரும்.நாம் சொல்கின்ற வகையிலான ஒரு ஆட்சி மாற்றம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை என்பதும் வேறு விடயம்.

ஆளும் தரப்பினர் இன்று ரணிலை மீட்பாளராகப் பாவித்துக் கொண்டாலும் மிகவிரைவில் அவர்கள் ரணிலை அந்தப் பதவியில் இருந்து வெளியேற்ற அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.இன்றுவரை ரணில் மொட்டுக் கட்சியைத் தாளாட்டிக் கொண்டு அரசாங்கத்தை முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார்.ஏதாவது ஒரு இடத்தில் மோதல்கள் வரும் போது அவர்கள் ஜனாதிபதியை கதிரையில் இருந்து தூக்கி வீசுவார்கள்.அப்போது தனக்குப் பெரும்பான்மை பலம் நாடாளுமன்றத்தில் இல்லாத காரணத்தால் தனது ஆரோக்கியமான திட்டங்களை தன்னால் தொடர முடியாது போனது என்று அப்போது ரணில் மக்களுக்கு கதை சொல்வார்.அதே நேரம் ஜனாதிபதி எடுத்த பிழையான நடவடிக்கைகளினால்தான் இந்த நிலை என்று மொட்டுக்கட்சியினர் அவர் மீது பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்ளும் நிலையும் எதிர்காலத்தில் நடக்கும் என்று நாம் நம்புகின்றோம்.

https://thinakkural.lk/article/205517

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.