Jump to content

டாக்டர் ஜி: பெண்கள் மத்தியில், ஆண் மகளிர் நோய் மருத்துவர்களின் உலகம் எப்படி இருக்கிறது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

டாக்டர் ஜி: பெண்கள் மத்தியில், ஆண் மகளிர் நோய் மருத்துவர்களின் உலகம் எப்படி இருக்கிறது?

  • வந்தனா
  • இந்திய மொழிகள் தொலைக்காட்சி ஆசிரியர், பிபிசி
20 அக்டோபர் 2022, 06:16 GMT
 

டாக்டர் ஜி

பட மூலாதாரம்,SPICE PR

 

कोरोना वायरस

 ஆண் மகளிர்நோய் மருத்துவர்களுக்கு இந்திய சட்டத்தில் தடைஇல்லை.

• சில மாநிலங்களில் ஆண் மகளிர் நோய் மருத்துவர்களை பணியமர்த்துவதற்கு எதிராக உத்தரவுகள் இருந்தன. ஆனால் நீதிமன்றம் அவற்றை தள்ளுபடி செய்தது.

• நோயாளியின் அந்தரங்க பரிசோதனையின் போது சிறப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படவேண்டும்.

• ஆண் மகளிர்நோய் மருத்துவருடன் ஒரு பெண் செவிலியர் அல்லது உறவினர் கண்டிப்பாக இருக்க வேண்டும்

 

• அந்தரங்க பரிசோதனைக்கு பெண் நோயாளியின் ஒப்புதல் தேவை

 

कोरोना वायरस

"பெண்களின் உடலை பெண்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை சிலருக்கு உண்டு. நான் ஒரு ஆண் மகப்பேறு மருத்துவர். இதுவரை நான் கர்ப்பம் தரிக்காததால், கர்ப்பிணிப் பெண்ணுக்கு என்னால் சிகிச்சை அளிக்க முடியாது என்பது இல்லை. நான் ஒரு மனநல மருத்துவர் என்றால், மனநலப் பிரச்னைகளை நான் சந்தித்தால் மட்டுமே மனநோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியுமா என்ன?."

டாக்டர் புனித் பேடி கடந்த முப்பது ஆண்டுகளாக டெல்லியில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

மகப்பேறு மருத்துவர் என்று நினைக்கும் போதெல்லாம், ஒரு பெண் மருத்துவரின் பிம்பம்தான் பலரது மனதிலும் வரும். பல பெண்கள் ஒரு பெண் மகப்பேறு மருத்துவரிடமே செளகரியமாக உணர்கிறார்கள்.

ஒரு ஆண், மகப்பேறு மருத்துவராக இருப்பது எப்படி இருக்கும்? ஒரு ஆணாக இருந்துகொண்டு, பெண் நோயாளிகளின் அந்தரங்க வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பது எப்படி இருக்கும்? இதைச்சுற்றி பின்னப்பட்டிருக்கும் புதிய இந்தி படம்தான் 'டாக்டர் ஜி'.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

ஆண் மகளிர்நோய் மருத்துவரிடம் பேசுவதில் வெட்கப்பட ஒன்றும் மில்லை.

மருத்துவக் கல்லூரியில் கைனகாலஜிஸ்ட் ஆவதற்காக படிக்கும் ஒரே மாணவர் அவர். பெண்களுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்று தெரியாமல் குழம்பும் அவர், தன் துறையை மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறார்.

ஆயுஷ்மான் குரானாவின் 'டாக்டர் ஜி' படத்தின் கதை இது.

அந்த மாணவர் தனது பேராசிரியையிடம் (ஷெஃபாலி ஷா) மகப்பேறு தொடர்பான பிரச்னைகளுக்கு பெண் மருத்துவரிடம் செல்வதையே பெண்கள் விரும்புகிறார்கள் என்று கூறும்போது, இதில் ஆண் பெண் வித்தியாசம் என்ன, மருத்துவர் ஒரு மருத்துவர்தான் என்று ஷெபாலி பதிலளிக்கிறார்.

லேபர் ரூமுக்கு அவர் செல்லும்போது குடும்பத்தினர் கோபப்படுவார்கள்.

இது படத்தில் வரும் கதை. ஆனால் உண்மையில் ஒரு ஆண் மகப்பேறு மருத்துவரின் சிந்தனை எப்படி இருக்கும் ?

 

டாக்டர் ஜி

பட மூலாதாரம்,SPICE PR

டாக்டர் அமித் டாண்டன் ஆக்ராவில் ஒரு பிரபல மகப்பேறு மருத்துவர் ஆவார். "ஆக்ராவின் பிரபல மருத்துவரான நவல் கிஷோர் அகர்வாலை தனது மகளின் பிறப்பிற்காக நேபாள மன்னர் பிரத்யேகமாக அழைத்ததாக சொல்லப்பட்ட கதைகளைக்கேட்டு நான் வளர்ந்தேன். பல தொழிலதிபர்கள் முன்பதிவு செய்த ஒரு பெரிய மகப்பேறு மருத்துவராக அவர் இருந்தார். இதன்மூலம் ஆண் மகப்பேறு மருத்துவருக்கு கிராக்கி இருப்பது புரிந்தது. ஆனால் வேலையை தொடங்கியபோது, ஆண் மகப்பேறு மருத்துவர்களுக்கு சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் அங்கீகாரம் இல்லை என்பது புரிய வந்தது," என்று அமித் டாண்டன் குறிப்பிட்டார்.

ஆரம்ப கட்டத்தில் தான் எதிர்கொண்ட சவால்கள் பற்றிப்பேசிய டாக்டர் அமித் டாண்டன், "நான் என்னை நிரூபிக்க வேண்டியிருந்தது. என் அம்மாவும் ஒரு மகளிர்நோய் மருத்துவ நிபுணர். ஆரம்பத்தில் மருத்துவமனைக்கு வரும் பெண்கள், பெண் டாக்டரையே கேட்டனர். அந்த அசௌகரியத்தைப் பார்த்து என் அம்மாவும் நான் ஒரு பயிற்சி பெற்ற மருத்துவராக இருந்தபோதிலும்கூட பெண் நோயாளிகளுக்கு அந்தரங்க பரிசோதனை செய்ய வேண்டாம் என்று என்னிடம் கூறினார். பெண் நோயாளிகள் என்னுடன் வசதியாக உணர மாட்டார்கள் என்று ஒருவேளை அம்மாவும் நினைத்திருக்கலாம்," என்றார்.

"வீட்டில் உள்ள ஆண்களைத் தவிர வெளி ஆண்களுடன் அதிகம் பழகாத பெண்கள், இளம் ஆண் மகப்பேறு மருத்துவரிடம் பேசத் தயங்குவார்கள் என்று அம்மா சொல்வார். ஆரம்பத்தில் நான் லேபர் ரூமுக்கு(பிரசவ அறை) செல்லும்போது குடும்பத்தினர் எதிர்ப்பார்கள். அது பெரிய சவாலாக இருந்தது. ஆனால் பின்னர் பிரசவத்தின்போது நான் அவர்களை எப்படிக் கவனித்துக்கொண்டேன் என்று அந்தப் பெண்கள் குடும்பத்தாரிடம் சொல்லும்போது, அவர்களின் அணுகுமுறை மாறும்,"என்று அவர் கூறினார்.

"இக்கட்டான சூழ்நிலைகளில் ஒரு பெண் நோயாளியின் உயிரைக் காப்பாற்றும் போது, பாதுகாப்பான குழந்தைப் பேற்றை உறுதி செய்யும் போது, திருமணமாகாத பெண்களின் மகளிர் நோய் பிரச்னைகளை நீக்கி, அவர்களின் எதிர்கால வாழ்க்கையை எளிதாக்கும் போது, அந்தப் பெண்கள் மெல்ல மெல்ல நம்பிக்கை கொள்கிறார்கள். பிறகு அந்த ஆண்-பெண் வேறுபாடு தானாக தீர்ந்துவிடும்," என்று அவர் குறிப்பிட்டார்.

 

அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர் அமித் டாண்டன்

பட மூலாதாரம்,DR AMIT TONDON

 

படக்குறிப்பு,

அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர் அமித் டாண்டன்

நீங்கள் மருத்துவரிடம் செல்லும்போது என்ன நினைக்கிறீர்கள்?

" பெண்கள் தங்கள் கர்ப்பம், கருவுறுதல் அல்லது அந்தரங்க உறுப்புகள் தொடர்பான பிரச்னைகள் பற்றி ஆண் மகளிர்நோய் மருத்துவரிடம் பேசினால், சமூக மற்றும் கலாசார காரணங்களுக்காக அது வெட்கக்கேடான விஷயம் என்று சமூகத்தில் ஒரு எண்ணம் உள்ளது. இது மிகவும் அந்தரங்க விஷயம் என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் ஒரு மருத்துவராக, நான் சொல்கிறேன், உங்களுக்கு மாதவிடாய் தொடர்பான பிரச்னைகள் இருந்தால் அதை நிமோனியா அல்லது வேறு ஏதேனும் உடல் நலப்பிரச்னை போலவே கருதுங்கள். ஒரு நல்ல மகளிர்நோய் மருத்துவ நிபுணர் வேண்டும் என்றால், பயிற்சி பெற்ற மருத்துவரிடம் செல்லுங்கள். பாலினத்தைப் பற்றி சிந்திக்க வேண்டாம்,"என்று டாக்டர் புனித் தனது அனுபவத்திலிருந்து விளக்குகிறார்,

ஒருவேளை இதே 'மேல் டச்'(ஆணின் தொடுதல்) தான் டாக்டர் ஜி படத்தின் ட்ரெய்லரிலும் பேசப்பட்டிருக்கலாம்.

டாக்டர் ஜி படத்தில் மகப்பேறு மருத்துவம் படிக்கும் ஆயுஷ்மான் குரானா ஒரு இடத்தில், நோயாளிகள் ஒரு டாக்டரை டாக்டராக கருதுவதில்லை. ஆண் அல்லது பெண் என்றே பார்க்கிறார்கள் என்று கூறுகிறார்.

நீங்கள் முதலில் இப்படி யோசிப்பதை நிறுத்துங்கள் என்று இதற்கு பதில் அளிக்கும் பேராசிரியை, நீங்கள் ஆண் தொடுதலை அதாவது மேல் டச்சை கைவிட வேண்டும் என்கிறார்.

இந்த 'ஆண் தொடுதல்' விஷயத்தை டாக்டர் புனித்திடம் கூறியபோது அவருடைய பதில் இப்படி இருந்தது. "பெண்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று ஆண் மகளிர் நோய் மருத்துவர், முழு தொழில்முறை பயிற்சி பெறுகிறார். நாங்கள் பரிசோதனை செய்யும்போது அங்கு பெண் செவிலியர்களும், மருத்துவர்களும் இருக்கவேண்டியது அவசியம். எத்தனை தேவையோ உடலின் அந்த பகுதியிலிருந்து மட்டுமே ஆடைகளை அகற்ற வேண்டும் என்று கற்பிக்கப்படுகிறது. மருத்துவர்களில் நல்லவர்கள் மற்றும் கெட்டவர்கள் உள்ளனர். இதில் பாலினம் என்பது முக்கியமல்ல."

 

டாக்டர் ஜி

பட மூலாதாரம்,SPICE PR

மருத்துவர் ஒரு மருத்துவர்தான், ஆணோ பெண்ணோ அல்ல...

டாக்டர் ஜி படத்தில் நடிகைகள் ரகுல்ப்ரீத் மற்றும் ஷெபாலி ஷா பெண் மகப்பேறு மருத்துவர்களாக நடித்துள்ளனர்.

"இப்போது எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் நான் பதின்பருவ வயதில் இருந்தபோது, ஆண் மகளிர்நோய் மருத்துவரிடம் எப்படி செல்வது என்று தயங்கினேன். ஒரு முறை நான் மருத்துவரிடம் செல்ல வேண்டியிருந்தது. அவர் ஒரு ஆண் மகப்பேறு மருத்துவர். எப்படி என் பிரச்னைகளை சொல்வது என்று மனதில் குழம்பினேன். வீடுகளில் கூட பெண்களின் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை வெளிப்படையாக பேசுவதில்லை. ஆனால் மெல்ல மெல்ல என் அணுகுமுறை மாறியது," என்று டெல்லியில் வளர்ந்த ரகுல்ப்ரீத் தனது தனிப்பட்ட அனுபவத்தைப் பற்றிக்கூறுகிறார்.

"டாக்டருக்கு பாலினம் இல்லை என்று படத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் பெரிய

மாற்றத்தை கொண்டு வந்துள்ளோம் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால், மக்களை அது மகிழ்வித்து, இந்த விஷயம் பற்றி பேசவைத்தால்கூட அது எங்களுக்கு நல்லதுதான்," என்கிறார் அவர்.

அதேசமயம் மும்பையில் வளர்ந்த ஷெஃபாலியின் பார்வை வேறாக உள்ளது.

"டாக்டர் ஒரு டாக்டர்தான் என்பதால் நான் ஒருபோதும் தயங்கியதில்லை. ஆண், பெண், திருநங்கை, இதில் என்ன வேறுபாடு உள்ளது? என் பெண் மாணவி சரியாக செயல்படவில்லை என்றால், ஆயுஷ்மானிடம் ஆண் தொடுதலை கைவிட்டு நல்ல மருத்துவராக ஆகுமாறு சொன்னது போல அவளிடம் 'பெண் தொடுதலை' கைவிடுமாறு சொல்லியிருப்பேன். சமூகத்தைப் பொருத்த வரையில் ஒரு திரைப்படம் எந்தப் பிரச்னை தொடர்பாகவும் விவாதத்தைத் தொடங்கலாம். ஆனால் ஒரு படம் ஒட்டுமொத்த சமூகத்தின் அணுகுமுறையை மாற்றுவது என்பது மிகப் பெரிய பொறுப்பு," என்று ஷெஃபாலி குறிப்பிட்டார்.

இந்தியாவின் பிற பகுதிகளை விட வட இந்திய சமூகத்தில் இந்தத் தயக்கம் அதிகம் காணப்படுகிறது என்பதை இரு நடிகைகளின் கண்ணோட்டமும், டாக்டர் பேடி மற்றும் டாக்டர் டாண்டன் ஆகியோரின் அனுபவங்களும் நிரூபிக்கிறது.

 

டாக்டர் ஜி

பட மூலாதாரம்,@AYUSHMANNK

நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியிருந்தபோது

இந்தத் தொழிலைப் பற்றி பேசுகையில், ஆண் மகளிர்நோய்மருத்துவ நிபுணர்கள் அவ்வப்போது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

மகளிர் நோய் தொடர்பான பிரச்னைகளுக்கு, முடிந்தவரை பெண் மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்கவேண்டும் என்று 2016 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து இந்த உத்தரவை ராஜஸ்தான் அரசு திரும்பப் பெற்றது.

முன்னதாக 2010 ஆம் ஆண்டும் ஒரு சர்ச்சை ஏற்பட்டது. இதில் அலகாபாத் நீதிமன்றம் தலையிட வேண்டியிருந்தது. மகளிர்நோய் மருத்துவ நிபுணர் ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம் என்று நீதிமன்றம் கூறியது.

சுல்தான்பூரில் ஒரு ஆண் மகப்பேறு மருத்துவ நிபுணர் அரசுப் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று விளம்பரத்தில் எழுதப்பட்டிருந்தது. அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டபோது, அந்த மருத்துவர் நீதிமன்றம் சென்றார்.

"இந்திய சட்டத்தின்படி, ஆண் மகப்பேறு மருத்துவர்கள் தொழில் செய்வதில் எந்த தடையும் இல்லை. ஆனால் அந்தரங்க பரிசோதனைக்கு முன், பெண் நோயாளியின் ஒப்புதலைப் பெறுவது அவசியம் என ஆண் மருத்துவர்களுக்கு பல வழிகாட்டுதல்கள் உள்ளன. மேலும் சட்டப் பிரச்சனை ஏற்பட்டால், பெண்கள் மற்றும் மருத்துவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் ஒரு குறைதீர்ப்பு பிரிவும் உள்ளது,"என்று இந்திய மருத்துவ சங்கத்தின் செயலர் ஜெயேஷ் லேலே சுட்டிக்காட்டினார். .

 

டாக்டர் ஜி

பட மூலாதாரம்,@AYUSHMANNK

மகப்பேறு மருத்துவ படிப்பு படித்த ஒரே மாணவர்

டாக்டர் ஜிக்கு மீண்டும் வருவோம். இந்தப் படத்தை அனுபூதி காஷ்யப் இயக்கியுள்ளார். இதன் கதையை எழுதியவர் செளரப் பாரத்.

சௌரப் பாரத் BDS பட்டம் பெற்றவர். ஆனால் பின்னர் அவர் தனது பல் டாக்டர் தொழிலை கைவிட்டு திரைப்படங்களில் நுழைந்தார்.

இந்த திரைப்படக்கதையின் பின்னணியில் உள்ள கதையும் சுவாரசியமானது. சௌரப்பின் மனைவி மகளிர் நோய் மருத்துவர். அவர் கல்லூரியில் படிக்கும் போது சௌரப் அவரை சந்திக்கச் சென்றார். அந்த பேட்ச்சில் ஒருவரைத்தவிர மற்ற அனைவருமே பெண்கள் என்பதை செளரப் கண்டார்.அந்த மாணவர் எப்படி உணர்ந்திருப்பார் என்று யோசித்துப்பார்த்தார். அங்கிருந்துதான் இந்தக்கதையின் யோசனை வந்தது.

2015 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'சமக்' திரைப்படத்தை தற்செயலாக சில நாட்களுக்கு முன்பு நான் பார்த்தேன். அதில் ஹீரோ ஒரு மகப்பேறு மருத்துவராக இருந்தார்.

படத்தின் முக்கிய கதைக்கரு அது இல்லையென்றாலும், ஒரு பெண்ணுக்கோ அல்லது தம்பதிக்கோ உதவ முடியும்போது, ஒரு சிறு உயிரை இந்த உலகிற்கு கொண்டுவர முடியும்போது அவர் எவ்வளவு மகிழ்ச்சியாக உணர்கிறார் என்பதை சித்தரிக்கும் ஒரு காட்சி படத்தில் உள்ளது. புதிதாகப் பிறந்த ஒரு குழந்தையைக் காப்பாற்ற முடியாதபோது, அவர் மனதளவில் உடைந்து போகிறார்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

இது தொடர்பான தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட டாக்டர் புனித் பேடி, "நான் எம்பிபிஎஸ் படிக்கும் போது குழந்தைப்பிறப்பு பற்றி மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். எனவே நான் மகப்பேறியல் மற்றும் மகளிர்நோய் மருத்துவம் அதாவது Obstetrics and Gynaecology படிக்க வேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய முடிவு குறித்து நான் எப்போதுமே வருந்தவில்லை. குழந்தையைப் பெற்றெடுக்கும் போது என் பாட்டி இறந்துவிட்டார். வேறு எந்த ஒரு மருத்துவரும், ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவார். ஆனால் ஒரு மகப்பேறு மருத்துவ நிபுணர், தாய் மற்றும் குழந்தை உட்பட முழு குடும்பத்தையும் காப்பாற்றுகிறார் என்று என் தந்தை சொல்வார்," என்று குறிப்பிட்டார்..

 

மருத்துவர்

 

படக்குறிப்பு,

ராஜஸ்தானில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் இறந்தபோது நடந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தை அடுத்து, பெண் மகப்பேறு மருத்துவர் டாக்டர் அர்ச்சனா ஷர்மா தற்கொலை செய்து கொண்டார்.

தொழில் சவால்கள்

ஆணா அல்லது பெண்ணா, மகளிர்நோய் மருத்துவ நிபுணராக இருப்பது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்கப்படவேண்டிய சங்கல்பம் என்று டாகடர் புனித் பேடி எச்சரிக்கிறார்.

"ஹோலி பண்டிகையோ, தீபாவளியோ, நீங்கள் ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும். நான் 25 ஆண்டுகளாக இந்த துறையில் இருக்கிறேன், இரவும் பகலும் இந்தத்தொழிலுடன் பிணைக்கப்பட்டுள்ளேன். ஏனென்றால் பிறப்பு எந்த நேரத்திலும் நிகழலாம். நீங்கள் அப்போது அங்கே இருக்க வேண்டும். எந்த கொண்டாட்டத்திற்காக நீங்கள் விருந்துக்கு சென்றாலும், ஒருபோதும் மது அருந்தக்கூடாது என்று எங்களிடம் கூறப்பட்டது. மகளிர் மருத்துவத்தில் உள்ள மற்றொரு பிரச்னை என்னவென்றால், ஒரு குழந்தை பிறப்பில் பிரச்னை ஏற்பட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கைக்கான அதிக ஆபத்து உள்ளது,"என்று அவர் குறிப்பிடுகிறார்.

 

कोरोना वायरस

• மருத்துவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு IMA வின் குறைதீர்ப்பு பிரிவு

• பிரசவத்தின் போது கர்ப்பிணிப் பெண் இறந்தது தொடர்பாக மருத்துவர்கள் மீது வழக்குகள் உள்ளன

• இந்த ஆண்டு ராஜஸ்தானை உலுக்கிய மகப்பேறு மருத்துவரின் தற்கொலை.

 

कोरोना वायरस

இந்த ஆண்டு ராஜஸ்தானில் பெண் மகப்பேறு மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு கர்ப்பிணிப் பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு காலமானார். அதைத் தொடர்ந்து உள்ளூர் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் மற்றும் பெண் மருத்துவர் மீது IPC இன் பிரிவு 302 (கொலை) கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் டாக்டர் அர்ச்சனா ஷர்மா மன உளைச்சலுக்கு ஆளாகி தனது தனியார் மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டதாக மருத்துவரின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

டாக்டர் அர்ச்சனா ஷர்மா எழுதிய ஒரு உணர்ச்சிகரமான குறிப்பும் கிடைத்தது, அதில் அவர் "நான் என் கணவரையும் குழந்தைகளையும் மிகவும் நேசிக்கிறேன். நான் இறந்த பிறகு அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை, யாரையும் கொல்லவில்லை. பிபிஹெச்(postpartum hemorrhage) சிக்கல் ஏற்பட்டது. இதற்காக டாக்டரை சித்திரவதை செய்வதை நிறுத்துங்கள். என் மரணம் நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்கலாம். தயவுசெய்து அப்பாவி மருத்துவர்களை துன்புறுத்தாதீர்கள்,"என்று எழுதியுள்ளார்.

 

டாக்டர் ஜி

பட மூலாதாரம்,@AYUSHMANNK

மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையே மிக அழகான விஷயம்...

இத்தனை சவால்கள் இருந்தபோதிலும், இந்தத் தொழிலில் உள்ள சிறந்த விஷயம் என்ன?

"இது மிகவும் தூய்மையான உறவு. ஒரு பெண் நோயாளி உங்களை அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நுழைய அனுமதிக்கிறார். அந்தரங்க சோதனைக்கு தயாராகும்போது அவர் உங்கள் மீது நம்பிக்கை காட்டுகிறார். இந்த நம்பிக்கைதான் இந்த தொழிலில் மிக அழகான விஷயம்.

ஆனால் இந்த நம்பிக்கை பல வருட கடின உழைப்பு மூலம் உருவாகிறது," என்று டாக்டர் டாண்டன் பதில் அளித்தார்.

" இந்த நம்பிக்கையைப் பெற ஆண் மகப்பேறு மருத்துவர் இன்னும் அதிகமாக உழைக்கவேண்டும். ஆனால் பிரசவத்திற்குப் பிறகு எனக்கு தையல் வலியே தெரியவில்லை என்று ஒரு பெண் என்னிடம் சொன்னால், அது என்னுடைய வெற்றி. கீறல் இல்லாமல் லேப்ராஸ்கோபி மூலம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவது என்னுடைய சாதனை. அடிவயிற்றில் கீறல் இருந்தால் பழமைவாத சமூக நம்பிக்கைகள் காரணமாக பின்னர் திருமணத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதாக பெண்கள் கூறுகிறார்கள். இது சிறந்த எதிர்காலத்திற்கான எங்கள் சிறிய பங்களிப்பு,"என்கிறார் அவர்.

திரைப்படத்தில் காட்டப்படும் மகப்பேறு மருத்துவர் மற்றும் நிஜ வாழ்க்கை மகளிர் மருத்துவ நிபுணரைப் பற்றிப் பேசிய டாக்டர் புனித், படத்தைப் பார்க்காமலேயே ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.

"இந்த விஷயம் குறித்து ஒரு விவேகமான திரைப்படத்தை பாலிவுட் உருவாக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பாலிவுட்டில் ஒரு வணிக மாதிரி உள்ளது. அதில் நட்சத்திர அந்தஸ்தே கோலோச்சுகிறது. நாங்கள் இங்கு ஆராய்ச்சி செய்வதில்லை. ஒரு குறிப்பிட்ட கதைகரு படத்தை வெற்றிபெறச் செய்யும் என்று பாலிவுட் கருதினால், அது சரியான சித்தரிப்பாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதை பாலிவுட் உருவாக்கிவிடும். அங்கு எவ்வளவு அறிவியல் இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை," என்று அவர் கூறினார்.

ஒரு ஆண் மகப்பேறு மருத்துவராக இந்தப் படத்துடன் தன்னை தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது என்றும், படத்தின் மூலமாக ஆண் மகப்பேறு மருத்துவர்களைப் பற்றியும், பெண்களின் ஆரோக்கியம் பற்றியும் மக்களிடையே

ஓரளவு விழிப்புணர்வு ஏற்படும் என்றும் டாக்டர் டாண்டன் குறிப்பிட்டார்.

படம் நன்றாக உள்ளதா இல்லையா என்பதைத்தாண்டி டாக்டர் புனித் ஒரு விஷயத்தை வலியுறுத்துகிறார். "பாலியல் பிரச்சனைகள், கர்ப்பம் தொடர்பான பிரச்சனைகள், மெனோபாஸ், பெண்களின் ஆரோக்கியம் என்று எந்தப்பிரச்சனையாக இருந்தாலும் ஒரு நல்ல மகளிர்நோய் மருத்துவ நிபுணரை தேர்ந்தெடுங்கள். அவர் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி எந்த வேறுபாடும் காட்டாதீர்கள். ஒரு குழந்தையை உலகிற்கு கொண்டு வருவது ஒரு பெரிய பொறுப்பு. இந்த நாட்டில் பெண்களின் ஆரோக்கியம் முக்கிய விஷயமாக இருக்கவேண்டுமே தவிர மருத்துவரின் பாலினம் அல்ல,"என்று அவர் குறிப்பிட்டார்.

(இந்த அறிக்கையின் உருவாக்கத்தில் உதவியுள்ளார் மும்பையைச் சேர்ந்த சுப்ரியா சோக்லே)

https://www.bbc.com/tamil/india-63292345

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.