Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசுக் கட்சியின் எதிர்காலம்? — கருணாகரன் — 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியின் எதிர்காலம்?

தமிழரசுக் கட்சியின் எதிர்காலம்? 

               — கருணாகரன் — 

“தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் எப்படியிருக்கும்?” -இந்தக் கேள்வி இப்பொழுது பலமாக எழுந்துள்ளது. இதற்குச் சில காரணங்களுண்டு. அதனால் தமிழ் மக்களுக்கான நிகழ்கால– எதிர்கால அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லக் கூடிய கொள்கையும் திறனும் அர்ப்பணிப்பும் உண்டா? என்ற சந்தேகம் எழுந்துள்ளமையாகும். முன்பும் சரி, இப்பொழுதும் சரி தமிழரசுக் கட்சியினால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் எதற்கும் தீர்வைக் காண முடிந்ததில்லை. (அப்படி ஏதாவது ஒரு விடயத்தில் அது தீர்வைக் கண்டிருந்தால் அதை யாரும் குறிப்பிடலாம்). 

ஒரு நீண்டகால அரசியற் கட்சி என்ற வகையிலும் அதிகமான காலம் தமிழ் மக்களுடைய ஆதரவைப் பெற்றுள்ள கட்சி என்ற வகையிலும் ஆகக் குறைந்த பட்சம் மக்களுடன் நெருக்கமான உறவைப் பேணி, மக்களுடைய துயர் துடைப்பு,வாழ்க்கை மேம்பாட்டுப் பணிகளில் கூட அது செயற்படவில்லை. 

மாறாக அது தன்னைத் தொடர்ந்தும் அரசியல் அரங்கில் பலமாக வைத்துக் கொள்வதற்கான உபாயங்களையே கொண்டிருக்கிறது. அதாவது, தலைவர்கள் வாழ்ந்து கொள்வதற்கான பொறிமுறையே அதனுடையது. அதற்கமைவாக அது தமிழ் மக்களை ஏனைய சமூகங்களோடு இணைய விடாமல் பார்த்துக் கொள்கிறது. எந்தத் தரப்பு ஆட்சிக்கு வந்தாலும் 

அரசாங்கத்தோடு எப்போதும் எல்லாவற்றுக்கும் முரண்பட்டுக் கொண்டேயிருக்கிறது. ஐ.தே.க சார்பாகச் சில சந்தர்ப்பங்களில் செயற்பட்டாலும் அதனால் தலைவர்கள் நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறார்களே தவிர, மக்களுக்கு எந்த வகையான நன்மைகளும் கிட்டுவதில்லை. எளிய உதாரணம், “ரணில் – மைத்திரி நல்லாட்சி” காலத்தில் தமிழரசுக் கட்சி (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு) மிக நெருக்கமான உறவைப் பேணியது. 

அதனால் தலைவர்கள் சிறப்புச் சலுகைகள் பலவற்றைப் பெற்றனர். பதிலாக மக்களுடைய எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை. அந்தக் காலகட்டத்தில் அரசியற் கைதிகளை விடுவித்திருக்க முடியும். கல்முனை பிரதேச செயலகத்தை தனியாக உருவாக்கியிருக்கலாம். காணாமலாக்கப்பட்டோருடைய பிரச்சினைக்கான தீர்வைக் கண்டிருக்க முடியும். வடக்குக் கிழக்கில் பௌத்த விரிவாக்கத்தை நிறுத்திருக்க முடியும். அரசியற் தீர்வை நோக்கி நகர்ந்திருக்கலாம். அதற்குச் சாத்தியமான வகையில் அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொண்டிக்கலாம். அதற்கான சர்வதேச  அழுத்தம் கூட இருந்தது. போரிலே பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான நிவாரணத்தைப் பெற்றுக் கொடுத்திருக்க முடியும். புலம்பெயர்ந்தோரின் முதலீடுகளை வடக்குக் கிழக்கில் ஏற்படுத்தியிருக்கலாம். வடக்கிலும் கிழக்கிலும் மக்களுடைய காணிகளில் நிலைகொண்டிருக்கும் படையினரை விலக்கியிருக்க முடியும். மாகாணசபைகளுக்கான அதிகாரத்தைப் பெற்றிருக்கலாம். முழுதாக இல்லாது விட்டாலும் நிதி,காணி விடயங்களில் சுயாதீனமாகச் செயற்படக் கூடிய நிலையை உருவாக்கியிருக்கலாம். இப்படி பல பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டிருக்க முடியும். இதில் ஒன்றைக் கூட தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) செய்யவில்லை. பதிலாக சுமந்திரன், சம்மந்தன், மாவை சேனாதிராஜா உள்ளிட்ட அனைவரும் அன்றைய அரசாங்கத்தில் செல்லப்பிள்ளைகளாகவே இருந்தனர். 

சிறிய அளவுக்குக் கூடப் பாதிக்கப்படும் மக்களைக் குறித்து இவர்கள் ஒரு போதுமே சிந்தித்ததில்லை. இதனால்தான் பெருமளவு தமிழர்கள் இன்று சலித்துப் போயிருக்கிறார்கள். குறிப்பாக இளைய தலைமுறையினர் வேறுவழியின்றி நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது வெளியேறுவதைப்பற்றிச் சிந்திக்கிறார்கள். இன்றைய பொருளாதார நெருக்கடிகளால் வெளியேற முற்படுவோரின் கதை வேறு. இது வேறு. 

ஆகவே நமது மக்கள் சிதறி, உலகமெங்கும் அகதிகளாக்குவதற்கான அரசியலையே தமிழரசுக் கட்சி  முன்னெடுத்து வருகிறது. ஆனால், இனரீதியாக ஒடுக்கப்படும் மக்கள் எந்த நிலையிலும் தங்கள் நிலத்தை விட்டுப் பெயர்ந்து செல்லக் கூடாது. அப்படிப் பெயர்ந்து செல்வது நிகழுமானால் அது அந்தச் சமூகத்தினுடைய தேசிய இருப்பையும் அடையாளத்தையும் அழித்து விடும். ஒரு சமூகத்தின் அல்லது ஒரு இனத்தின் தேசிய இருப்பென்பது அதனுடைய நிலம், அந்த நிலத்தில் வாழ்கின்ற வாழ்க்கை, அதனுடைய மொழி, பண்பாடு போன்றவற்றை உள்ளடக்கியதாகும். 

குறித்த நிலத்தை விட்டு குறித்த இனமோ சமூகமோ பெயர்ந்து செல்லுமாக இருந்தால் அதனுடைய மொழியும் பண்பாடும் சிதைந்து விடும். வாழ்க்கையே மாறி வேறொன்றாக ஆகி விடும். என்னதான் ஆயிரம் நியாயங்களைச் சொன்னாலும் புலம்பெயர்வு தேசிய அடையாளச் சிதைவிற்கு முக்கிய காரணமாகும். ஆகவேதான் எந்தச் சூழலிலும் சொந்த நிலத்திலேயே மக்களுடைய வாழ்க்கை நிகழ வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. சொந்த நிலத்தில் மக்கள் வாழ வேண்டுமாக இருந்தால் அதற்கான ஏது நிலைகள் இருக்க வேண்டும். அவரவர் ஊர்களில் அவரவர் வாழக்கூடிய தொழில்வாய்ப்புகள் கிட்ட வேண்டும். பிள்ளைகளுடைய கல்விக்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். முறையான ஆசிரிய வளம் தொடக்கம் பௌதீக வளங்கள் வரை சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனைகளை அவற்றுக்குரிய வளங்களோடு சரியாக இயங்க வைக்க வேண்டும். தேவையான உட்கட்டுமான விருத்திகளைச் செய்ய வேண்டும். போக்குவரத்துத் தொடர்பாடல்களை மேம்படுத்த வேண்டும். அதாவது மக்களுடைய வாழ்க்கைக்கான அடிப்படைகளை வளப்படுத்த வேண்டும். இதை அபிவிருத்தி அரசியலினால்தான் முன்னெடுக்க முடியும். இதற்கு அரசாங்கத்துடன் ஏதோ ஒரு வகையில் இணக்கப்பாட்டை (Negosiation) கண்டேயாக வேண்டும். இதனுடைய அர்த்தம், அரசாங்கத்திடம் சரணடைவதோ அதனுள் கரைந்து போவதோ என்பதல்ல. இதற்குப் பொருத்தமான உபாயங்களை வகுத்துச் செயற்பட வேண்டும் என்பதேயாகும். அதாவது அரசியல் உரிமைக்கான முயற்சிகளையும் செயற்பாடுகளையும் விட்டு விடாமல், மக்களுடைய வாழ்வுரிமைகளை –வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். இதில்தான் அரசியல் திறனும் நிபுணத்துவமும் தேவைப்படுகிறது. இதையே இலங்கையில் தமிழ் மக்களையும் விட சிறிய எண்ணிக்கையில் உள்ள முஸ்லிம்களும் மலைய மக்களும் செய்கின்றனர். (இப்பொழுதுள்ள மலையக, முஸ்லிம் தலைமைகள் ஏறக்குறைய தமிழரசுக் கட்சியைப் போல சுருங்கி, தமது நலனோடு நின்று விட்டன). 

அப்படிச் செய்தே அவர்கள் ஓரளவுக்குத் தம்மை மேம்படுத்தியுள்ளனர். அவர்களுக்கும் அரசுடனும் சிங்கள அதிகார வர்க்கத்தோடும் முட்டி மோதல்களும் முரண்களும் உண்டு. நெருக்குவாரங்கள் உண்டு. ஆனாலும் அவர்களுடைய வளர்ச்சி வேகமும் வளர்ச்சி வீதமும் அதிகமே. 

ஆனால், தமிழரசுக் கட்சியினதும் அதை ஒத்த தரப்புகளுடையதும் அரசியல் இதற்கு மாறாகவே உள்ளது.  இவற்றின் வழிமுறைகள் தமிழ் மக்களுடைய தேசிய இருப்பை அழிக்கும் விதமாகவே உள்ளது. தமிழ்த்தேசியத்தைப் பாதுகாக்கிறோம் என்ற பேரில் அதைச் சிதைப்பதாகவே தொடர்கிறது. பேரளவில் மட்டுமே தேசிய அடையாளம் உள்ளது. நடைமுறையில் இல்லை. 

இதற்குக் காரணம், தானொரு அரசியற் தரப்பு என்பதை மறந்து, ஊடகச் செயற்பாட்டு அமைப்பைப் போலப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவது மட்டுமே அதனுடைய வழிமுறையாக இருப்பதாகும்.  பாராளுமன்றத்திலும் ஊடக வெளியிலும் பேசினால் மட்டும் போதும் என்று கருதுகின்றனர். இதையே  கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழரசுக் கட்சி செய்து வருகிறது. அதைக் கூட அது உரிய முறையில்  செய்யவில்லை. சான்றாதாரங்கள், புள்ளி விவரங்களோடு பேசுவதுமில்லை, முன்வைப்பதுமில்லை. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொறிமுறைகள், அணுகுமுறைகள், தந்திரோபாயம் போன்ற எதையும் கூட அது கொண்டிருக்கவில்லை. 

அதாவது செயற்பாட்டியக்கமே அதற்கில்லை. 1949 இல் தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரையில் அதற்குச் செயற்பாட்டுப் பாரம்பரியம் என்ற ஒன்றே கிடையாது. அரசியல், பொருளாதாரம், சமூகவியல், பண்பாடு என எந்த விடயத்திலும் அது எத்தகைய நிபுணத்துவத்தையும் நிபுணர்களையும் கொண்டதில்லை. இதற்கான கட்டமைப்பு எதையும் உருவாக்கியதுமில்லை. முன்னராவது பலரும் மதிக்கக் கூடிய அளவுக்கு செல்வநாயம், நாகநாதன், திருச்செல்வம், அமிர்தலிங்கம், கா.பொ. இரத்தினம், வன்னியசிங்கம், செல்லையா இராசதுரை, இராசமாணிக்கம், தருமலிங்கம், சூசைதாசன் போன்ற ஆளுமையுள்ள தலைவர்கள் இருந்தனர். சில போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்ததும் உண்டு. மக்களுடன் உறவாடலை நிகழ்த்தியிருக்கிறார்கள். இன்றோ அதுவும் இல்லையென்றாகி விட்டது. 

இதைக்குறித்து தமிழரசுக் கட்சியை ஆதரிப்போர்  கூடச் சிந்திப்பதில்லை. இதில் படித்தவர்கள், மூத்தவர்கள், இன்றைய தலைமுறையினர் அனைவரும் அடக்கம். எல்லோரும் தெரிந்து வைத்திருப்பது ஒன்றே ஒன்றுதான். அதுதான் அரச எதிர்ப்பாகும். எந்த நிலையிலும் அரசாங்கத்தை எதிர்த்து விட்டால்போதும் என்றே பலரும் கருதுகிறார்கள். இது காகம் திட்டி மாடு சாகாது என்பதற்கு ஒப்பானது. இதனால்தான் தமிழர்கள் எதிர்பார்த்த எதுவுமே நிகழாமல் இருக்கிறது. தற்போது இன்னொன்றும் சேர்ந்துள்ளது. அதுதான் புலிகளுக்கான ஆதரவாக் காட்டிக் கொள்ளும் போக்கும் தமிழ்த்தேசியம் என்ற சொல்லாடலுமாகும். உண்மையில் இவர்கள் இது இரண்டுக்கும் நேர்மையாகவும் இல்லை.   

அடுத்த காரணம், அதனுடைய அரசியல் நிலைப்பாட்டினாலும் செயற்பாட்டின்மைகளாலும் தமிழ் மக்கள் மேலும் மேலும் நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாகும். இப்பொழும் நெருக்கடிகளை உற்பத்தி செய்கின்ற விதமாகவே அதனுடைய அரசியல் உள்ளது. தொடக்கத்தில் சமஸ்டி, பிரிவினை என்ற அரசியல் நிலைப்பாட்டிலிருந்த தமிழரசுக் கட்சி, இப்போது ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது. அப்படி இறங்கி வந்தாலும் அதனுடைய தலைவர்கள், பாராளுமன்றப் பிரதிநிதிகளின் பேச்சுகள் எதிர்ப்பரசியல், யதார்த்தத்துக்கு மாறான அரசியல், பிரிவினை அரசியல் என்ற விதமாக உயரத்திலேயே உள்ளன. 

அதாவது தேர்தல் (வாக்கு) அரசியலுக்கு ஏற்றவிதமாகப் பேசுகிறார்கள். இது ஒரு முரண் நிலையாகும். பேசுவது ஒன்றாகவும் நடைமுறை வேறு விதமாகவும் (இரகசிய இணக்கப்பாடாகவும்) உள்ளது. ஒடுக்குமுறையிலிருந்து விடுதலையைப் பெற வேண்டும் என்ற நிலையிலுள்ள மக்களுக்கு இத்தகைய முரண் நிலை அரசியல் பொருத்தமானதே அல்ல. 

இதற்குக் காரணம், தாம் பேசுகின்ற அரசியலை செயல் வடிவமாக்குவதற்கான ஆளுமையோ அறிவோ திராணியோ, அர்ப்பணிப்போ இவர்களில் எவருக்குமே கிடையாது என்பதாகும். இதனால்தான் மக்களுக்குத் தொடர்ந்தும் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த பட்சம், மாகாணசபை, உள்ளுராட்சி சபைகளைக் கூட வினைத்திறனோடு இயக்க முடியாத நிலையில் தமிழரசுக் கட்சி உள்ளது. வடமாகாணசபையில் நடந்தவை என்ன என்பது அனைவரும் அறிந்தது. 600 க்கு மேற்பட்ட பிரேரணைகளை நிறைவேற்றிய வட மாகாணசபை அதனுடைய ஆட்சிக் காலத்தில் உருப்படியாக எதையும் செய்யவில்லை. மட்டுமல்ல. ஆளும் தரப்புக்குள்ளேயே அடிதடி குத்து வெட்டு, குழி பறிப்பு என்றே அதனுடைய ஆட்சிக்காலம் முடிந்தது. உள்ளுராட்சி மன்றங்களிலும் இதுதான் நிலை. இதனால்தான் அது பல உள்ளுராட்சி மன்றங்களை இழந்தது. இருக்கின்றவையும் ஜனநாயக அடிப்படையி்ல் செயற்படுவதில்லை. தமிழரசுக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட உள்ளுராட்சி மன்றங்கள் ஏதேச்சாதிகாரமாகவும் ஊழல் மோசடிகளிலும்தான் சிக்கியுள்ளன. இது ராஜபக்ஸ தரப்பினரின் ஆட்சி முறைக்கு ஒப்பானது. பிற தரப்புகளை மதிப்பதுமில்லை. அவற்றுக்கான இடத்தை அளிப்பதுமில்லை. 

செயற்திறனோடு அரசியல் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் பிரச்சினைகள் படிப்படியாகத் தீர்ந்திருக்கும். மக்களுடைய வாழ்க்கை மேம்படும். இது அரசியலுக்கு மட்டுமல்ல, எந்தத் துறைக்கும் பொதுவான விதியாகும். அப்படி மக்களுடைய நெருக்கடிகள் தீர்க்கப்படாமல்,அவர்களுடைய வாழ்க்கை மேலும் சிக்கலுக்குள்ளாகி வருகிறது என்றால், அந்த அரசியலினால் பயனில்லை என்றே அர்த்தமாகும். இதற்கு மேல் இதற்கு விளக்கம் தேவையில்லை. 

நீங்கள் உங்களுடைய சொந்த வாழ்க்கையில் பயன் தராத எதையும் தொடர்ந்து செய்யமாட்டீர்கள். அதை ஆதரிக்கவும் மாட்டீர்கள். அதை வைத்துக்கொண்டிருக்கவும் மாட்டீர்கள். அதை விட்டு விலகவோ அல்லது அதை விலக்கவோதான் முயற்சிப்பீர்கள். இதுதான் நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றப்படுவது. அதாவது, காய்க்காத தென்னையை தொடர்ந்தும் விட்டு வைக்க மாட்டீர்கள். கன்று ஈணாத, பால் தராத பசுவை யாரும் வைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், எந்தப் பயனும் தராத ஒரு அரசியற் கட்சியை தமிழர்கள் எப்படி தொடர்ந்தும் ஆதரித்துக் கொண்டிருக்க முடியும்? அப்படி ஆதரித்தால் அது மடத்தனமாகும் அல்லவா! 

அரசியலில் ஒரு தரப்பை ஏற்பதும் நிராகரிப்பதும் அந்தத் தரப்பின் மக்கள் மீதான கரிசனை, அதன் செயற்பாட்டுத்திறன். அர்ப்பணிப்பு, நேர்மை, அது மக்களுக்கு ஈட்டித் தரும் வெற்றிகள் போன்றவற்றினாலேயே அமையும். இதற்குத்தான் தேர்தல்கள் வருகின்றன. எந்த முன்னேற்றமும் அற்று, எத்தகைய நன்மையும் இல்லாம் தொடர்ந்தும் ஒரு தரப்பை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் அது மூடத்தனம். அடிமைத்தனமன்றி வேறில்லை. இத்தகைய மூடத்தனத்தினால்தான் மக்கள் நலிந்து கொண்டு போகிறார்கள். தலைவர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்தத் தலைவர்களுக்கு சொம்பு தூக்கும் ஆட்களும் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். 

இந்த நிலையில்தான் தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் எப்படியாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. வினைத்திறனற்ற, கால இழுத்தடிப்பில் சலித்துப் போனதால்தான் தமிழரசுக் கட்சியை விட்டு மக்கள் விலகிச் சென்று கொண்டிருக்கின்றனர். இதைச் சிலர் மறுத்துரைக்கக் கூடும். இல்லை. இப்பொழுதும் தமிழரசுக்கட்சிக்குத்தான் மக்களிடத்திலே ஆதரவுண்டு. அதுவே அடுத்த தேர்தலிலும் வெற்றியடையும் என்று அவர்கள் சொல்லலாம். அப்படியென்றால் தமிழ் மக்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு விடுதலையைப் பெற முடியாமல், முன்னேற்றம் எதையும் காணாமலே இருக்கப்போகிறார்கள். அல்லது கோத்தபாய ராஜபக்ஸ பெற்ற வெற்றியைப் போல வாக்களித்த மக்களுக்கே நன்மையில்லாத வகையில்தான் அது இருக்கும்.   

இவ்வாறன சரிவு ஏற்பட்டிருக்கும் இந்த நிலையிற்கூட தமிழரசுக் கட்சி தன்னை மறுபரிசீலனை செய்து கொள்ளவில்லை. அதை ஆதரிப்போரும் இதைக்குறித்தெல்லாம் சிந்திக்கவில்லை. தமிழரசுக் கட்சிக்குள்ளே நடந்து கொண்டிருக்கும் மோதல்கள் இதை நிரூபிக்கின்றன. அதனுடைய மூத்ததலைவர் சம்மந்தனுடைய சொல்லை யாரும் கேட்பதாக இல்லை. தலைவர் மாவை சேனாதிராஜா செல்லாக்காசாக்கப்பட்டுள்ளார். ஆனாலும் இவர்கள் உயிரோடு இருக்கும் வரையில்தான் தமிழரசுக் கட்சியும் கூட்டமைப்பும் இந்த வடிவத்தில் இருக்கும். அதற்குப் பின்னர் அது எப்படி இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். உடைந்து சிதறி உக்கிப் போய் விடும். 

இப்பொழுது தமிழரசுக் கட்சியின் தலைவராக இருக்கும் மாவை சேனாதிராஜாவுக்கு எதிரான குரல்களும் நடவடிக்கைகளும் வெளிப்படையாகவே முன்வைக்கப்படுகின்றன. மாவைக்கு எதிராக பலரும் வயிறு பொருமுகிறார்கள். மாவைக்குப் பின்னர் அந்த இடத்துக்கு வருவதற்கு சுமந்திரன் மிகத்திறமையாக வியூகங்களை வகுத்துக் கொண்டு செயற்படுகிறார். ஒரு கட்டம் வரையில் அவர் சிறிதரனை இதற்கு அனுசரணையாகப் பாவித்தார். ஆனால், சிறிதரனுக்கு தலைமைத்துவக் கனவு உண்டு என்று தெரிந்தவுடன், அவரை விட்டு விட்டு சாணக்கியனைக் கைக்குள் போட்டுக் கொண்டு செயற்படுகிறார். சாணக்கியன் கிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்கின்றவர் என்பதாலும் மொழி, தொடர்பாடல், திறமை போன்றவற்றால் மேலெழுந்திருப்பவர் என்பதாலும் சுமந்திரனுக்கு இது சாதகமானது. 

இதேவேளை சி.வி.கே சிவஞானத்துக்கும் அந்தக் கனவுண்டு. சரவணபவன் நீண்டகால அடிப்படையில் அதற்காகக் காத்திருப்பவர். துரைரத்தினசிங்கம் மல்லுக்கட்டிப் பார்த்துக் களைத்து விட்டார். சி.க. சிற்றம்பலம் சலித்துப் போய்த் தூரப்போய் விட்டார். இப்படி ஆளாளுக்கு தலைமைத்துவக் கனவோடிருக்கிறார்களே தவிர, கட்சியை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு யாரும் முயற்சிக்கவில்லை. இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் இடமளிக்க வேண்டும். செயற்பாட்டுக்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அதை இயங்க வைக்கும் பொறிமுறையை உருவாக்க வேண்டும். மக்களுடைய பொருளாதாரம் பற்றிச் சிந்திக்க வேண்டும். யுத்தப் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணப் பொறிமுறையைக் குறித்துச் சிந்திக்க வேண்டும். சர்வதேச சமூகத்துடன் மேற்கொள்ளக் கூடிய அரசியல் உறவு எப்படி அமைய வேண்டும்? சிங்களத் தரப்போடு மேற்கொள்ளக் கூடிய அரசியல் எத்தகையதாக இருக்க வேண்டும்? குறிப்பாக யுத்தத்துக்குப் பிந்திய அரசியல் எப்படி அமைய வேண்டும்? அதை எப்படி மேற்கொள்வது? என்பதைக்குறித்து அதற்குள் ஒரு சிறு உரையாடலோ விவாதமோ நடந்ததே இல்லை. 

மட்டுமல்ல, அது இணைந்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டைப்புக்குள்ளும் ஏராளம் குத்து வெட்டுகள். இதனால் தமிழரசுக் கட்சியைப் பலவீனப்படுத்துவதற்கே கூட்டமைப்பிலுள்ள ரெலோவும் புளொட்டும் சிந்திக்கின்றன. இது அவற்றுக்குத் தவிர்க்க முடியாதது. அந்தளவுக்கு ரெலோவையும் புளொட்டையும் தமிழரசுக் கட்சி பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. 

இப்பொழுதே ரெலோ பல விடயங்களிலும் வெட்டியோடுகிறது. இதற்குத் தோதாக பிராந்திய சக்திகளும் சர்வதேச சக்திகளும் உதவுகின்றன. சம்மந்தனுடைய மறைவுக்குப் பிறகு நிச்சயமாக ரெலோவும் புளொட்டும் தமிழரசுக் கட்சிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்கும். அல்லது வேறு லைன் ஒன்றை எடுக்கும். இந்தச் சவாலை அது எதிர்கொண்டே தீர வேண்டும். 

இந்த மாதிரி தமிழரசுக் கட்சிக்குள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்குள்ளும் நடந்து கொண்டிருக்கும் குத்து வெட்டுக்களால் தமிழ்ச்சமூகம் வீழ்ச்சியையே சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால் மக்களுக்குச் சலிப்பும் நம்பிக்கையீனமும் ஏற்பட்டுள்ளது. இதெல்லாம் மக்களிடத்தில் வெறுப்பையும் கோபத்தையும் வளர்த்துள்ளன. 

இது மக்களை, அவர்களுடைய நெருக்கடிகளை, அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்காத பொறுப்பின்மையின் விளைவாகும். அதாவது மக்களை உதாசீனப்படுத்துகின்ற போக்காகும். இதற்கான காரணம், மக்களையோ வெளிப்பரப்பையோ (அரசாங்கத்தையோ சர்வதேச சமூகத்தையோ) பற்றிச் சிந்திக்காமல் தம்மைப்பற்றி, தமது நலனைப்பற்றிக் குறுகலாகச் சிந்திக்கின்றமையே ஆகும்.   

நடந்து கொண்டிருக்கும் கீழ்மையான மோதல்களும் நெருக்கடிகளும் எதிர்த்தரப்புக்கே கதவுகளைத்திறந்து விடுகின்றன. ஒடுக்குமுறையைச் செய்யும் தரப்புகளுக்கு இது வாய்ப்பாகி விடுகிறது. மறுவளமாக உள் –வெளி நெருக்கடிகளால் தமிழரசுக் கட்சி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து அது மீளுமா?என்பது கேள்வியே. 

இன்னொரு கேள்வி, அப்படி மீண்டாலும் அதனால் மக்களுக்குப் பயன் என்ன? என்பதாகும். 

உண்மையில் 40 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகப் போன ஒன்றே தமிழரசுக் கட்சியாகும். 1970 ன் நடுப்பகுதியில் “தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று அதனுடைய அன்றைய தலைவரான எஸ்.ஜே.வி. செல்வநாயகம் சொன்னார். அப்போதே அதனுடைய இயலாமை வெளிப்பட்டது. இதைச் செல்வநாயகம் நேர்மையாக ஒத்துக் கொண்டு, உண்மையை வெளிப்படுத்தினார். அவரிடம் அந்தக் கண்ணியம் இருந்தது. ஆனால், அதைச் சமாளித்துக் கொள்வதற்காகவே அதுவரையிலும் எதிர்முகாமாக இருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (தற்போதைய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) கட்சியோடு தமிழரசுக்கட்சி இணக்கத்துக்கு வந்தது. அதன் விளைவே தமிழர் விடுதலைக்கூட்டணியாகும். தமிழர் விடுதலைக்கூட்டணியினாலும் சரியாகச் செயற்பட முடியவில்லை. புதிதாகச் சிந்திக்க முடியவில்லை. அதனால் அதுவும் தோற்றுப்போன கட்சியாகி விட்டது. ஏனென்றால் பெயர் மாற்றப்பட்டதே தவிர, கொள்கையும் நடைமுறையும் மாறவில்லை. சிந்தனையும் செயலும் தேறவில்லை. 

உண்மையில் இவையெல்லாம் காலம் கடந்துபோனவையாகும். கழித்து Dust pinக்குள் போடப்பட்டவை. அதை எடுத்து மேசையில் வைத்து எப்படித்தான் அலங்காரம் செய்தாலும் அவற்றினால் எந்த உபயோகமும் இல்லை. 

இலங்கையில் மூத்த –பாரம்பரியக் கட்சிகள் எல்லாம் ஏறக்குறையக் காலாவதியாகி விட்டன. ஐ.தே.க உடைந்து உக்கி விட்டது. சு.கவின் நிலையும் ஏறக்குறைய அதுதான். தமிழ்க்காங்கிரஸ், இதொக, தமிழரசுக் கட்சி அனைத்தும் இவ்வாறாகி விட்டவையே. இவை எதுவும் கால வளர்ச்சியை – கால மாற்றத்தைக் கருத்திற் கொள்ளவில்லை. புதியன குறித்துச் சிந்திக்கவில்லை. புதிய தலைமுறைக்கு இடமளிக்கவில்லை. மக்களைக் குறித்துச் சிந்திக்கவில்லை. என்பதால்தான் தமிழரசுக் கட்சிக்கு எதிர்காலமே இல்லை என்று கூறப்படுகிறது. 

40 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியாகப் போன தமிழரசுக் கட்சியை விடுதலைப்புலிகளே புத்துயிரூட்டினர். தங்களுடைய அரசியல் தேக்கத்தை உணர்ந்த புலிகள், அதைத் தற்காலிகமாக ஈடு செய்வதற்காக தமிழரசுக் கட்சியின் சின்னத்தைத் தேர்வு செய்தனர். அபது கூட இயல்பாக – அவர்களுடைய விருப்பத்தின்படி நடந்ததல்ல. அன்றைய சூழலில் அவர்களுடைய விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி என்ற கட்சியின் சின்னத்தையோ பதிவையோ அவர்களால் பயன்படுத்த முடியவில்லை. அதற்குச் சட்டச் சிக்கல் இருந்தது. அதனுடைய தலைவராக மாத்தயா என்று அழைக்கப்படும் கோபாலபிள்ளை மகேந்திரராசா புலிகளால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதால் மக்கள் முன்னணியின் சின்னத்தைப் பயன்படுத்த முடியவில்லை. இதனால் வேறு சின்னமொன்றைத் தேடினர் புலிகள். இதன்போது முதலில் தேர்வு செய்யப்பட்ட சின்னம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியனாகும். ஆனந்தசங்கரிக்கும் புலிகளுக்கும் ஏற்பட்ட முரண்பாட்டினால் அது தடைப்பட, தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தை தெரிவு செய்ய வேண்டிய நிலை புலிகளுக்கு ஏற்பட்டது. புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை தனக்கு வாய்ப்பாக  தமிழரசுக் கட்சி பயன்படுத்திக் கொண்டது. 

புலிகளின் ஆதரவாளர்களும் தமது மிஞ்சிய அடையாளமாக தமிழரசுக் கட்சியையும் அதனோடிணைந்த கூட்டமைப்பையும் கருதினர். ஆனால், அதை தமிழரசுக் கட்சியோ கூட்டமைப்போ காப்பாற்றிக் கொள்ளவும் இல்லை. தொடரவும் இல்லை. இதனால் இன்று அது முடிவுப் புள்ளிக்கு வந்துள்ளது. 

வரலாறு கண்டிப்பான கிழவி என்பர். அது தன்னுடைய இயல்பை வெளிப்படுத்தியே தீரும். வெல்லக் கடினமான இயக்கம் என்று கருதப்பட்ட புலிகள் இயக்கம் எப்படி வீழ்ச்சியைச் சந்தித்ததோ அதைப்போல தமிழரசுக் கட்சியும் அது குடிகொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தோற்கும். இதுவே வரலாற்றின் விதியாகும். 

 

https://arangamnews.com/?p=8190

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.