Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்ச் சமூக வரலாறு

Featured Replies

சங்க காலம்

தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய முறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.இதனால் இக்காலத்தை மாறுதல் நிகழும் காலம் என்பர். உணவு தேடி வாழும் இனக்குழு வாழ்க்கை, கால்நடை வளர்ப்பினை மையமாகக் கொண்ட மேய்ச்சல் நில வாழ்க்கை, உணவு உற்பத்தி செய்யும் ஒரு விதமான நிலவுடைமைச் சமுதாய வாழ்க்கை என மூன்று வகையான சமூக அமைப்புகள் வௌ;வேறு நிலப்பகுதிகளில் ஒரே நேரத்தில் நிலவின. இதனடிப்படையில் வௌ;வேறு வகையான பொருளாதார நடவடிக்கைகளும் சமூக அமைப்புகளும் கொண்ட ஓர் அசமத்துவ வளர்ச்சி )சங்ககாலத்தில் நிலவியது.

நிலப் பாகுபாடு

மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி, காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லை, ஆறும் ஆறு பாயும் சமவெளிப் பகுதிகளும் மருதம், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என அழைக்கப்பட்டன. குறிஞ்சியும் முல்லையும் கோடையின் வெம்மையால் தம் நிலையிலிருந்து மாறுபட்டு நிற்கும். இது தற்காலிகமான ஒன்று. இந்நிலப்பகுதி பாலை எனப்பட்டது.

மக்களும் பண்பாடும்

குறிஞ்சி நில மக்கள் சிலம்பன், குறவன், வெற்பன், வேட்டுவர், கானவர், குன்றவர் என அழைக்கப்பட்டனர். தொடக்கத்தில் வில், அம்பு, வேல் ஆகியவற்றின் துணையுடன் வேட்டையாடி வாழ்ந்தனர். மூங்கிலரிசி, திணை, மலை நெல், தேன், கிழங்குகள் ஆகியனவும் உணவாகப் பயன்பட்டன. உணவு தேடி வாழும் வாழ்க்கை இங்கு நிலவியது. பின், புன்புல வேளாண்மை உருவாகியது. சேயோனாகிய முருகன் இவர்களுடைய கடவுளாக இருந்தான். பறை, தொண்டகப்பறை, குறிஞ்சியாழ் ஆகியன இங்கு வழங்கிய இசைக் கருவிகள். வள்ளிக்கூத்து குறிஞ்சி நிலத்துக்குரிய ஆட்டக் கலையாகும்.

ஆடுமாடுகளை மேய்க்கும் மேய்ச்ச்சல் நில வாழ்க்கையை மையமாகக் கொண்டது முல்லை நிலம். வரகு, சாமை, கேழ்வரகு, கடலை, அவரை, துவரை ஆகியன மழையை நம்பி மேற்கொண்ட வேளாண்மையில் கிட்டின. மாயோனாகிய திருமால் முல்லை நிலத்தின் கடவுள். ஏறுகோட்பறை, குழல், முல்லையாழ் ஆகியன இந்நிலத்துக்குரிய இசைக் கருவிகள். உணவு தேடும் வாழ்க்கையைக் கடந்து உணவு உற்பத்தி செய்யும் நிலையும் நிரைகளை சொத்துக்களாக கொள்ளும் நிலையும் இங்கு உருவாகின.

மலையிலும் காட்டிலும் அலைந்து திரிந்த நிலையிலிருந்து வளர்ச்சி பெற்று ஆற்றங்கரையில் நிலையாக வாழத் தொடங்கிய இடம் மருத நிலமாகும். இங்கு உழு தொழிலின் மூலம் உணவு உற்பத்தி நிகழ்ந்தது. ஆற்று நீரை நேரடியாகவும் நீர்நிலைகளில் தேக்கி வைத்தும் பயன்படுத்தினர். செந்நெல், வெண்நெல், கரும்பு, மஞ்சள் (பிற்காலத்தில் வாழை) ஆகியன முக்கிய உற்பத்திப் பொருளாயின. கரும்பிலிருந்து வெல்லம் தயாரிக்கும் கரும்பாலைகளும், உபரி நெல்லை மூலதனமாகக் கொண்டு பண்டமாற்று வாணிபத்தை மேற்கொண்ட வாணிப குழுக்களும் உருவாயின. சிற்×ர்கள் பேரூர்களாக வளர்ச்சி பெறத் தொடங்கின. நெல்லரிப் பறையும், மருதயாழும் இந்நிலத்தின் இசைக் கருவிகளாகயிருந்தன. தச்சர், கொல்லர், குயவர் ஆகிய கைவினைர்களின் தோற்றமும் இங்குதான் உருவாகியது.

நெய்தல் நிலப்பகுதியில் மீன்பிடித்தலும், உப்பு உற்பத்தி, உலர்மீன் உற்பத்தி செய்தலும், இவற்றை பிற நிலப்பகுதிகளுக்குக் கொண்டு சென்று பண்டமாற்று செய்தலும் முக்கிய தொழில்கள். இதன் வளர்ச்சி நிலையாகக் கடல் வாணிபம் உருவாகியது. நெய்தல் குடியிருப்புகள் பட்டினம், பாக்கம் என்றழைக்கப்பட்டன. வருணன் (வண்ணன்) இந்நிலத்தின் தெய்வம். நாவாய்பறையும், நெய்தல் யாழும் இசைக் கருவிகள்.

வளமற்ற நிலப்பகுதியான பாலையில் வழிப்பறியும் கொள்ளையும் மக்களின் துணைத் தொழில்களாயின. இங்கு வாழ்ந்த மறவர்களின் குடியிருப்பு, கொல் குறும்பு எனப்பட்டது. கொற்றவை, இந்நிலத்தின் தெய்வம். நிறைகோட்பறை, சூறைகோட்பறை, வாகையாழ் ஆகியன இந்நிலத்தின் இசைக் கருவிகள்.

சங்ககால அரசியல்

சங்ககாலத் தமிழகம் மன்னராட்சியின் கீழ் செயல்பட்டது. ஆட்சி புரிவோர் குறுநில மன்னர்கள். வேந்தர் என இரண்டு வகையாக அழைக்கப்பட்டனர். குறிஞ்சி முல்லை நெய்தல் பாலை ஆகிய நான்கு நிலப் பகுதிகளிலும் வாழ்ந்த குறவர், ஆயர், பரவர், மறவர் ஆகிய மக்கட் பிரிவினர் தத்தமக்கென சுயேச்சையான ஆளுவோரைக் கொண்டிருந்தனர். இவர்களையே குறுநில மன்னர்கள் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடும். குறுநில மன்னர்களுக்கும் அவர்களால் ஆளப்படும் மக்களுக்குமிடையே ஆழமான வேறுபாடுகள் நிலவவில்லை. மருதநில அல்லது நெய்தல் நில நகர் ஒன்றினை மையமாகக் கொண்டு பரந்த நிலப்பகுதியை ஆட்சிபுரிந்தவர்கள் வேந்தர் எனப்பட்டனர். சேரர், சோழர், பாண்டியர் என மூன்று வேந்தர்கள் மட்டுமே பெருநிலப் பகுதியை ண்டனர். வாய்ப்பு நேரிடும் போது குறுநில மன்னர்களின் நிலப் பகுதியையும் தங்களுடன் இணைத்துக் கொண்டனர்.

மூவேந்தர்களுக்கு துணை புரிய 1. அமைச்சர், 2. புரோகிதர், 3. சேனாதிபதி, 4. தூதர், 5. ஒற்றர் என்போரைக் கொண்ட ஐம்பெருங் குழுவும், 1. கரணத் தலைவர், 2. கருமகாரர், 3. கனகச்சுற்றம், 4. கடைகாப்பாளர், 5. நகரமாந்தர், 6. படைத் தலைவர், 7. யானை வீரர், 8. இவுளிமறவர் என்போரைக் கொண்ட எண்பேராயம் என்ற அமைப்பும் இருந்தன. ஆயினும் இவ்விரு அமைப்புகளும் மன்னனைக் கட்டுப்படுத்தும் தன்மையன அல்ல. குறுநில மன்னர்கள் ஆண்ட பகுதிகளில் பொதியில் மன்றம் என்ற அமைப்புகள் செயல்பட்டன.

சமயம்

ஆவிகளின் மீது நம்பிக்கை கொண்ட ஆவி உலகக் கோட்பாடும் குலக்குறி’ வழிபாடும் மூத்தோர் வீரர்வழிபாடும் சங்ககாலச் சமயத்தில் செல்வாக்கு செலுத்தின. போரில் இறந்துபட்ட வீரர்களுக்கு நடுகல் நட்டி வழிபடும் நடுகல் வழிபாடு பரவலாக இருந்தது. கடிமரம், காவல்மரம் என்ற பெயரில் குறிப்பிட்ட மரங்கள் புனித மரங்களாகக் கருதப்பட்டன. பாம்பு வழிபாடும் வழக்கிலிருந்தது. திருமால், முருகன், கொற்றவை ஆகியன சங்ககாலத்தில் முக்கிய தெய்வங்களாக விளங்கின. இன்று பரவலாக உள்ள பிள்ளையார் வழிபாடு சங்ககாலத்தில் இல்லை. சிவனைப் பற்றிய குறிப்புகள் சங்க நூல்களில் இடம் பெற்றாலும் மேற்கூறிய தெய்வங்களைப் போல் செல்வாக்கு பெற்றிருக்கவில்லை. வாலியோன் என்ற பெயரில் பலராமர் வழிபாடு இருந்துள்ளது. சமணம், பௌத்தம் ஆகிய வடபுல சமயங்கள் இங்கு பரவின. வடமொழித் தாக்கத்தின் விளைவாக வேள்விகள் நிகழ்ந்தன. சங்ககால கவிஆர்கள் சிலர் இவ்விரு சமயங்களையும் தழுவியிருந்தனர். இவ்வுலக வாழ்க்கையை வெறுத்தொதுக்கும் நிலையாமைக் கோட்பாடு செல்வாக்குப் பெறவில்லை. வாழ்க்கை உவப்புக் கொள்கையே மேலோங்கியிருந்தது.

பொருளியல்

நாட்டில் அடிப்படைத் தொழிலாக வேளாண்மை அமைந்தது. மருதநிலப் பகுதியில் நெல்லும், கரும்பும் பயிர் செய்யப்பட்டன. எள், கொள், துவரை ஆகியன குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகளில் பயிர் ஆயின. சாமை, வரகு, திணை ஆகியன முக்கிய புன்செய் நிலப் பயிர்களாகும். தேனெடுத்தல், கிழங்குகளை அகழ்ந்தெடுத்தல், மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் ஆகியன ஏனைய பொருளாதார நடவடிக்கைகளாகும். நெசவு, கொல்வேலை, தச்சு வேலை, கருப்பஞ் சாற்றிலிருந்து வெல்லம் எடுத்தல், சங்கறுத்தல், கூடை முடைதல் ஆகியன முக்கிய கைத்தொழில்களாக அமைந்தன. பண்டமாற்று முறையில் வாணிகம் நிகழ்ந்தது. பெரிய நகரங்களில் அங்காடி என்ற பெயரில் சந்தைகள் இருந்தன. பகற்பொழுதில் செயல்படுபவை நாளங்காடி என்றும், இரவு நேரத்தில் செயல்படுபவை அல்லங்காடி என்றும் அழைக்கப்பட்டன. கடைத்தெரு நியமம் என்று அழைக்கப்பட்டது. பொருட்களைக் கொண்டு செல்ல எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகள் பயன்படடன. வணிகர்கள் சாத்து என்ற பெயரில் குழுக்களாகச் செயல்பட்டனர். மிளகு, அரிசி, இஞ்சி, ஏலம், மஞ்சள், இலவங்கம் ஆகிய உணவுப் பொருட்களும் சந்தனம், அகில் ஆகிய மணப் பொருட்களும் தமிழகத்திலிருந்து அரேபியா, எகிப்து, உரோம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. குரங்கு, மயில், யானைத்தந்தம், முத்து ஆகியனவும் ஏற்றுமதியாயின. கடல் வாணிகத்திற்குப் பாய்கள் கட்டப்பட்ட மரக்கலங்கள் பயன்பட்டன.

இலக்கணம்

தமிழ் மொழி தொன்மையான நூலாக இன்று நம் பார்வைக்குக் கிட்டுவது தொல்காப்பியமாகும். தனக்கு முன்னால் வாழ்ந்த நூலாசிரியர்களின் நூல்களை கற்றுத் தேர்ந்து தொல்காப்பியர் இந்நூலை உருவாக்கியுள்ளார். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பிரிவுகளாக இந்நூல் அமைந்துள்ளது. பொதுவாக மொழிகளின் இலக்கணம் என்பது எழுத்து, சொல் யாப்பு சார்ந்ததாக மட்டுமே இருக்கும். ஆனால் தொல்காப்பியம் இவை மூன்றுடன் மட்டுமின்றி மனித வாழ்க்கையின் இலக்கணத்தை உணர்த்தும் வகையில் பொருளதிகாரம் என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளது.

இலக்கியம்

தமிழ் இலக்கியத்தின் பொற்காலமாக சங்ககாலம் அமைந்தது. இக்காலத்தில் தோன்றிய பெரும்பான்மைப் பாடல்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற பெயரில் பிற்காலத்தில் தொகுப்பு நூல்களாகத் தொகுக்கப்பட்டன. 1. நற்றிணை, 2. குறுந்தொகை, 3. ஐங்குறுநூறு, 4. பதிற்றுப்பத்து, 5. பரிபாடல், 6. கலித்தொகை, 7. அகநானூறு, 8. புறநானூறு என்ற எட்டு நூல்களும் எட்டுத்தொகை என்ற தொகுப்பில் அடங்குகின்றன. இந்நூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பல்வேறு கவிஆர்களால் பல்வேறு கால கட்டங்களில் பாடப்பட்டவை. 1. திருமுருகாற்றுப்படை, 2. பொருநராற்றுப்படை, 3. சிறுபாணாற்றுப்படை, 4. பெரும்பாணாற்றுப்படை, 5. முல்லைப்பாட்டு, 6. மதுரைக் காஞ்சி, 7. நெடுநல் வாடை, 8. குறிஞ்சிப் பாட்டு, 9. பட்டினப்பாலை, 10. மலைபடுகடாம் என்ற பத்து நூல்களும் பத்துப்பாட்டு எனப் பெயர் பெற்றன. இவற்றுள் திருமுருகாற்றுப்படையும், நெடுநல்வாடையும் நக்கீரராலும், எஞ்சிய எட்டு நூல்களும் எட்டு கவிஆர்களாலும் இயற்றப்பட்டன. இவ்விலக்கியங்களின் தனிச்சிறப்பு இவை அகம் புறம் என்ற பொருள் பாகுபாடுகளைக் கொண்டிருப்பதாகும். மனிதர்களின் அகம் (மனம்) சார்ந்த காதல் தொடர்பான செய்திகளைக் கூறுவது அகத்திணை ஆகும். இதற்குப் புறத்தேயுள்ள கல்வி, வீரம், கொடை, நீதி அறமல்லன போன்றவற்றைக் குறிப்பது புறத்திணையாகும். அகநூல்களில் இடம்பெறும் காதலர்களை, இயற்பெயர் சுட்டிக் குறிப்பிடக் கூடாது, என்ற தொல்காப்பியர் விதியை சங்ககாலக் கவிஆர்கள் உறுதியாகக் கடைபிடித்தனர்.

சங்ககாலத்தை அடுத்து வரும் காலம் சங்கம் மருவிய காலம் எனப்படும். இக்காலத்தில் உருவான பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு எனப்படுகின்றன. இவற்றுள் திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை ஐம்பது, கார் நாற்பது, கைந்நிலை என்ற ஆறு நூல்களும் சங்ககால அகத்திணைமரபு சார்ந்தவை. எஞ்சிய நூல்களில் திருக்குறள் தவிர்ந்த, நாலடியார், பழமொழி, ஏலாதி, திரிகடுகம், நான்மணிக்கடிகை, ஆசாரக் கோவை, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக் காஞ்சி என்ற பதினொறு நூல்களும் புறத்திணை சார்ந்தவை. குறள் அகமும், புறமும் சார்ந்த நூலாகும்.

பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் தலையான இடத்தைப் பெறுவது திருக்குறள். 1330 குறள் வெண்பாக்களைக் கொண்ட இந்நூல் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. எச்சமயத்தையும் சாராது வாழ்வியல் நெறிகளைக் கூறுவது இதன் தனிச் சிறப்பாகும். சங்க காலத்தில் வாழ்வியலின் பகுதியாகக் கருதப்பட்ட கள்ளுண்டல், பரத்தையற் பிரிவு, புலால் உண்ணுதல்,சூதாடல் ஆகியன வள்ளுவரால் கடிந்தொதுக்கப்படுகின்றன. திருக்குறளுக்கு அடுத்த இடத்தைப் பெறும் நாலடியார் சமண முனிவர்கள் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பாகும். இந்நூல் குறளுக்கு மாறாக உலகியல் வாழ்க்கை மீது வெறுப்பை வெளிப்படுத்தி துறவறத்தை வற்புறுத்துகிறது. இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்ற இரு நூல்களும் வைதீக சமயச் சார்பானவை. ஒழுக்கங்களின் தொகுதி என்ற பொருளைத் தரும் ஆசாரக் கோவை என்ற நூல் வடமொழி நீதிநூல்கள் சிலவற்றின் சாரமாக அமைகின்றது. பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகியன சமணம் சார்ந்து நீதி கூறுகின்றன.

பல்லவர் காலம் (கி.பி. 3 முதல் 9 வரை)

சங்ககாலத்துக்குப் பின் களப்பிரர் என்ற அரச மரபினரின் ஆட்சி நடைபெற்றது. இவர்கள் சமண சமயத்தைச் சார்ந்தவர்கள். இவர்களது காலத்தை இருண்ட காலம் என்று சொல்வது பொதுவான மரபு. ஆனால் திரமிள சங்கம் என்ற பெயரில் சங்கம் ஒன்றை அமைத்து தமிழ் வளர்த்தமையை சதாசிவபண்டாரத்தார் சுட்டிக்காட்டி, தமிழ் மொழிக்கு இது இருண்ட காலமல்ல என்பதைச் சான்றுகளுடன் நிறுவியுள்ளார். களப்பிரர் ஆட்சிக்குப் பின் பல்லவர் ஆட்சி தமிழகத்தில் நிலவியது. கி. பி. 260 தொடங்கி 450 ஆண்டுகள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பல்லவர் ஆட்சி நிலை பெற்றிருந்தது.

சமயம்

சைவமும், வைணவமும் எழுச்சி பெற்ற காலம் பல்லவர் காலம் ஆகும். சைவநாயன்மார்களும், வைணவ ழ்வார்களும் தோற்றுவித்த சமய இயக்கம் பக்தி இயக்கம். இவ்விரு சமயத்தினரும் சமணத்துடனும், பௌத்தத்துடனும் மாறுபட்டு அவற்றின் செல்வாக்கை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தேவார ஆசிரியர்களான திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தமிழ் நாடெங்கும் பயணம் செய்து சைவ சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டினர். இவர்களால் பாடப்பெற்ற சைவக் கோயில்கள் பாடல் பெற்ற தலங்கள் எனப் பெயர் பெற்றன. இவர்களைப் போன்றே ஆழ்வார்களும் வைணவக் கோயில்களுக்குச் சென்று பக்திப் பாசுரங்கள் பாடினர். இவர்களால் பாடப்பெற்ற வைணவக் கோயில்கள் மங்களா சாசனம் செய்த திருப்பதிகள் எனப்பட்டன.

பௌத்த சமணத் துறவிகள் வாழும் சமய மடங்களில் சமய நூல்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன. காஞ்சிபுரம் பௌத்த மடத்தில் பயின்ற போதிதருமர், போதிருசி என்ற இரு துறவிகளும் சீனா, ஜப்பான் நாடுகளுக்குச் சென்று சென் புத்தமதப் பிரிவை பரப்பினர். பீகாரில் இருந்த உலகப் புகழ் பெற்ற நாலந்தா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும், துணை வேந்தராகவும் இருந்த தருமபாலர் காஞ்சியில் பிறந்து பயின்றவர்தாம். வெளிநாட்டுப் புத்ததுறவிகள் இங்கு வந்து சமய நூல்களைக் கற்றுச் சென்றனர்.

பல்லவர் அரசு

சங்ககாலத்தைப் போன்றே பல்லவர் காலத்திலும் ஆட்சிமுறை பிறப்பு வழி உரிமையாய் இருந்து வந்தது. மன்னருக்குத் துணைபுரிய அமைச்சர்கள் இருந்தனர். ஆட்சிப் பகுதியானது கோட்டம், நாடு, ஊர் என்று மூன்று பிரிவுகளாக பகுக்கப்பட்டது. நாட்டின் நிர்வாகத்தைக் கவனித்து வந்தவர் நாட்டார் என்றும், ஊரின் ஆட்சிக்குப் பொறுப்பான வேளாளர்கள் ஊரார் என்றும் அழைக்கப்பட்டனர். இவை தவிர பிரம்மதேயம் என்ற பெயரில் பிராமணருக்கு தானமாக வழங்கப்பட்ட ஊர்களைப் பிராமணர்களே நிர்வகித்து வந்தனர். இம்மூன்று வகையான நிர்வாகிகளும் கோவில் மான்யங்கள், நீர்ப்பாசனம், நீதி விசாரணை, நிலவுரிமை போன்றவற்றை கவனித்து வந்தனர். இதன் பொருட்டு வாரியங்கள் பல உருவாக்கப்பட்டன. இவ்வாரியங்கள் அதற்கென்று விதிக்கப்பட்ட பணியினைச் செய்து வந்தன. சான்றாக வேளாண்மைக்கு ஆதரவான ஏரிகளைப் பராமரிக்கும் வாரியம் ஏரி வாரியம் என்றும் தோட்டங்களைப் பராமரிக்கும் வாரியம் தோட்ட வாரியம் என்று அழைக்கப்பட்டதைக் குறிப்பிடலாம்.

கலை

பல்லவர் காலத்தில் கட்டிடக் கலையும் சிற்பக் கலையும் வளர்ச்சியடைந்தது. கருங்கற்களினால் கட்டிடங்களை கட்டும் பணி பல்லவர் காலத்தில்தான் உருவாகியது. குகைகளை உருவாக்கி அமைக்கப்பட்ட குடைவரைக் கோவில்கள் பல்லவர் காலத்தில் செல்வாக்கு பெற்றன (பல்லவர்களுக்கு முன்னர் பாண்டியர்கள் குடைவரைக் கோவில்களை உருவாக்கி உள்ளனர் என்பது தொல்லியல் வல்லுநர் நாகசாமியின் கருத்து). கல்லிலே கலை வண்ணம் கண்ட பல்லவர் கால சிற்பக்கலைக்கு காஞ்சியிலும், மாமல்லபுரத்திலும் உள்ள கோவில் சிற்பங்கள் சான்று பகர்கின்றன. இவை தவிர இசையும், நடனமும் பல்லவர் காலத்தில் தழைத்தமைக்கு, குடுமியான்மலை, திருமெய்யம் ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்களும் சித்தன்ன வாசலில் தீட்டப் பெற்றுள்ள நடன மங்கையரின் ஓவியங்களும் சான்று.

பல்லவர் காலத்தில் வடமொழி செழித்து வளர்ந்தது. பல்லவர்கள் வடமொழி ஆர்வலர்களாக இருந்தமையே இதற்குக் காரணமாகும். பல்லவ மன்னர்கள் அவையில் நடிப்பதற்காக பாஷகவி என்பவர் வடமொழி நாடகங்கள் சிலவற்றை எழுதியுள்ளார். பௌத்த துறவிகளைப் பகடி செய்யும் வகையில் மத்த விலாச பிரகசனம் என்ற எள்ளல் நாடகத்தை மகேந்திர வர்மன் வடமொழியில் எழுதியுள்ளான். அணி இலக்கண அறிஞரான தண்டி என்னும் கவிஞர் எழுதிய காவிய தரிஸனம் என்ற வடமொழி அணி இலக்கண நூல் தண்டியலங்காரம் என்ற பெயரில் தமிழில் வெளியாயிற்று. பாரதக் கதையைக் கூறும் பாரத வெண்பாவும் நந்திக் கலம்பகம் என்ற சிற்றிலக்கியமும், பெருங்கதை என்ற காப்பியமும் பல்லவர் காலத்தில் உருவான குறிப்பிடத்தக்க தமிழ் இலக்கியங்கள் ஆகும்.

சோழர் காலம் (கி.பி. 10 கி.பி. 13)

பல்லவர் காலத்துக்குப் பின் தமிழ்நாட்டில் உருவான ஒரு வலிமையான அரசு சோழப் பேரரசு கும். சோழர் ஆட்சியிலும் மன்னனே ஆட்சி மையமாக அமைந்தான். சோழநாடு மண்டலங்கள் என்ற பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மண்டலத்துள்ளும் வளநாடுகள் பல இருந்தன. பல கிராமங்களின் தொகுப்பாக கூற்றம் என்ற அமைப்பு இருந்தது. இதை கோட்டம் அல்லது நாடு என்றும் குறிப்பிட்டனர். பல கூற்றங்களை உள்ளடக்கியதாக வளநாடு அமைந்தது. சுப்பாராயலுவின் கருத்துப்படி 10 முதல் 300 சதுரம் வரை பரப்பைக் கொண்ட நிருவாகப் பிரிவாக நாடு இருந்தது. நாடுகளின் பொருப்பாளர்களாக நாட்டார், நாடுகண்காணி என்போர் இருந்தனர். வேளாண்மை காவல் வரிவசூல் ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொண்டனர். மன்னனுக்கு உதவி புரிய இருக்கும் அரசு அலுவலர்கள் உடன் கூட்டம் என்று அழைக்கப்பட்டனர். வாய்மொழியாக மன்னன் பிறப்பிக்கும் ஆணைகளைக் கேட்டு அவற்றை எழுத்தில் பதிவு செய்து உரியவர்களிடத்தில் அனுப்பி வைக்கும் பணியைச் செய்பவன் திருவாய்க்கேள்வி திருமந்திர ஓலை எனப்பட்டான்.

கலை இலக்கியம்

சோழர் காலத்தில் கட்டிடக் கலையும் சிற்பக்கலையும் செழித்து வளர்ந்தன. தன் நிழலைத் தனக்குள்ளே தருக்குடனே தாங்கி நிற்கும் தஞ்சைப் பெருங்கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம், தராசுரம் ஆகிய ஊர்களிலுள்ள கோவில்களும் அங்குள்ள சிற்பங்களும் சோழர்காலக் கட்டிடக் கலைக்குச் சான்றுகளாய் உள்ளன.

சோழர் கால இலக்கியங்களில் சைவ சமயச் சார்புடைய இலக்கியங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உருவாயின. உமாபதி சிவாச்சாரியார் என்பவர் எட்டு சைவ சித்தாந்த நூல்களை இயற்றியுள்ளார். சைவ சமயத்தின் 63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் திருத்தொண்டர் புராணம் சேக்கிழாரால் இயற்றப்பட்டது. சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைக் கூறும் திருவிளையாடற் புராணம் என்ற நூலைப் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் எழுதியுள்ளார்.

ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவால நடையில் ஈடு எனப்படும் விரிவுரை இக்காலத்தில் உருவாகியது.

சமண சமயத்தைச் சார்ந்த திருத்தக்கத்தேவர் எழுதிய சீவகசிந்தாமணி, கொங்குவேளிர் எழுதிய பெருங்கதை ஆகிய காவியங்களும் வளையாபதி, நீலகேசி என்ற சமணக் காப்பியங்களும் குண்டலகேசி என்ற பௌத்த காப்பியமும் தோன்றின. திவாகரம், பிங்கலந்தை என்ற நிகண்டுகளும், நன்னூல், யாப்பருங்கலக்காரிகை, புறப்பொருள் வெண்பா மாலை, வீரசோழியம், வெண்பாப் பாட்டியல் ஆகிய இலக்கண நூல்களும் உருவாயின.

செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி ஒட்டக்கூத்தரின் மூவருலா, கம்பரின் இராமாயணம், புகழேந்தியின் நளவெண்பா ஆகியன சோழர் காலத்தில் தோன்றிய பிற இலக்கியங்கள் ஆகும். இளம்பூரணர், சேணாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார் ஆகியோர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதினர். சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும், பரிபாடலுக்கும், திருக்குறளுக்கும் உரை எழுதிய பரிமேலழகரும் சோழர் காலத்தவரேயாவர்.

சோழர் காலத்தில் வடமொழிப் பயிற்சியளிக்கும் கல்வி நிறுவனங்கள் (கடிகா) பல நிறுவப்பட்டன. நூல்களைச் சேகரித்து வைக்கும் நூலகம் போன்ற அமைப்பு சோழர் காலத்தில் இருந்தது. இதை சரஸ்வதி பண்டாரம் என்றழைத்தனர்.

கிராமசபை

சோழர் ஆட்சியின் சிறப்பியல்பாக கிராம சுய ஆட்சி முறை நிலவியது. பிராமணர்களுக்கு உரிய நிலங்களுக்கு வரி வாங்கப்படவில்லை. இவை இறையிலி எனப்பட்டன. இறையிலி நிலங்களைக் கொண்ட பிராமணர் குடியிருப்புக்கள் கிராமங்கள் எனப்பட்டன. குடும்பு என்ற சிறு பிரிவுகளாக கிராமம் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடும்புக்கும் ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடும்புக்குரிய வேட்பாளர்களின் பெயர்களைப் பனை ஓலைத் துண்டில் தனித்தனியாக எழுதி அவ்வக் குடும்புக்குரிய குடத்தில் இடுவர். பின்னர் குடத்தை நன்றாக குலுக்கி அறியாச் சிறுவன் ஒருவனைக் கொண்டு ஓலைத்துண்டு ஒன்றை எடுக்கும்படி செய்வர். அவனால் எடுக்கப்படும் ஓலையில் காணப்படும் பெயருக்குரியவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். குடும்பில் உறுப்பினராவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டிருந்தன. சொந்த மனையில் வீடு கட்டியிருத்தல், குறைந்தது கால்வேலி நிலமுடையவராய் இருத்தல், 35 வயதிற்குக் குறையாதிருத்தல், 70 வயதிற்கு மேற்படாதிருத்தல், நான்கு வேதத்தில் ஒரு வேதத்தையோ, ஒரு பாஷியத்தையோ ஓதும் ஆற்றல் பெற்றிருத்தல் என உத்திரமேரூர் சாசனம் குறிப்பிடுகிறது. அடித்தள மக்கள் கிராம சபைகளில் நுழைய விடாமல் தடுப்பதில் இத்தகுதிகள் முக்கியப் பங்காற்றின. மேலும் ஒரு குழுவிலோ, வாரியத்திலோ உறுப்பினராக இருந்து பணியாற்றிய போது ஒழுங்காகக் கணக்கு காட்டத் தவறியவர்கள், அவருடைய உறவினர்கள், ஒழுக்கமற்றவர்கள், வேட்பாளராகத் தகுதியற்றவர்கள் என்றும் இச்சாசனம் தெரிவிக்கின்றது.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு வாரியங்கள் அமைக்கப்படும். ஏரி வாரியம், தோட்ட வாரியம், பஞ்சவார வாரியம், பொன் வாரியம், கலிங்கு வாரியம் கழனி வாரியம் ஆகியன முக்கிய வாரியங்களாகும். இவ்வாரியங்களின் உறுப்பினர்கள் வாரியப் பெருமக்கள் என்றழைக்கப்பட்டனர். ஒவ்வொரு வாரியங்களும் தமக்குரிய பணிகளைச் செய்து வந்தன.

பிராமணர் அல்லாதோர் வாழ்ந்த குடியிருப்புக்கள் ஊர்கள் எனப்பட்டன. இவற்றை ஊரவை நிறுவகித்தது. அவையின் நிர்வாகக்குழு, ஆளும் கணம் என்றழைக்கப்பட்டது. வணிகர்கள் மிகுதியாக வாழ்ந்த நகரங்களின் சபை நகரத்தோம் எனப்பட்டன.

சமூகம்

சோழர் காலச் சமுதாயத்தில் சாதி வேறுபாடுகள் ஆழமாக இருந்தன. பிராமணர்கள் ஏற்றம் பெற்றிருந்த சாதியினராக விளங்கினர். அகரங்கள், அக்கிரகாரங்கள், சதிர்வேதி மங்கலங்கள் என்ற பெயர்களில் பிராமணர்களுக்குத் தனிக்கிராமங்கள் உருவாக்கப்பட்டன. கோவில்கள், மடங்கள் ஆகியன இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. இலவச உணவும் உறையுளும் நல்கி வேதக்கல்வி புகட்டும் வேதபாட சாலைகளும் இவர்களுக்கென்றே மன்னர்களால் நிறுவப்பட்டன.

பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் நிலக்கிழார்களாக விளங்கிய வேளாளர்கள் இருந்தனர். கோவில் நிலங்களின் மீது பிராமணர்களுடன் இணைந்து இவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இவ்விரு சமூகத்தினரையும் தவிர பல்வேறு கைவினைத் தொழில் செய்து வந்தவர்களும், உழுகுடிகளான, பள்ளர், பறையர் ஆகியோரும் தனித்தனி சாதிகளாக அழைத்திருந்தனர். சோழர் காலச் சாதிகள் வலங்கையர், இடங்கையர் என்ற இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இவ்விரு பிரிவுகளின் உருவாக்கம் குறித்து வினோதமான புராணக் கதைகள் உருவாகியுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 98 குலங்கள் இடம் பெற்றிருந்தன. வலங்கையர் இடங்கையரிடையே சில நேரங்களில் பூசல்களும் மோதல்களும் நிகழ்ந்தன. பெரும்பாலும் இடங்கையினர் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்தனர். சில நேரங்களில் வலங்கையினர் இடங்கையினர் ஆகிய இரு வகுப்பினரும் வேறுபாடுகளைத் துறந்துவிட்டு பிராமணர்களையும், வேளாளர்களையும் எதிர்த்துப் போராடியுள்ளனர். பெரும்பாலும் இப்போராட்டம் வரி எதிர்ப்பை மையமாகக் கொண்டேயிருந்தது.

தீண்டாமை சோழர் காலத்தில் வேர்விட்டு வளர்ந்திருந்தது. பறையர்களுக்கென்று தனிக்குடியிருப்புகள் இருந்தன. தீண்டாச்சேரி என்று இக்குடியிருப்புகள் அழைக்கப்பட்டன. ஆயினும் இவர்களில் சிலர் சொத்துரிமை உடையவர்களாகவும் இருந்தனர்.

ஆடலிலும், பாடலிலும் வல்ல பெண்டிரை விலைக்கு வாங்கியும், வன்முறையில் கைப்பற்றிக் கொண்டும் கோவில் பணிகளில் ஈடுபடுத்தினர். கோவிலைப் பெருக்கி மெழுகுதல், மாலை தொடுத்தல் தேவாரம் ஓதுதல், நடனமாடுதல், நாடகங்களில் நடித்தல் ஆகியன இவர்களின் முக்கியப் பணிகளாக அமைந்தன. தலைக்கோலிகள், தளிச்சேரிப் பெண்டுகள், பதியிலார், தேவரடியார் என்று இவர்களுக்குப் பெயர்கள் வழங்கின.

அடிமைமுறை சோழர் காலத்தில் நிலை பெற்றிருந்தது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கினர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் எனப் பெயர் பெற்றது. வறுமையின் காரணமாகத் தம் குடும்ப உறுப்பினர்களை விற்பதும் தம்மைத்தாமே விற்றுக் கொள்வதும் நிகழ்ந்துள்ளன. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டது. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசூலச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன. நெற்குற்றுதல், வேளாண் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கிய பணிகளாகும். தங்களை மட்டுமின்றி தங்கள் பரம்பரையினரையும் அடிமைகளாக விற்றுக் கொண்டதை இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் பரம்பரை பரம்பரையாக, வழியடிமை, யானும் எம் வம்சத்தாரும் என்று கல்வெட்டுக்களில் காணப்படும் தொடர்கள் உணர்த்துகின்றன.

சமயம்

சோழர் காலத்தில் அரசு சமயமாக சைவம் விளங்கியது. சிவனுக்கு முக்கியத்துவம் இருந்தது. பல்லவர் காலத்தில் வளரத் தொடங்கிய சைவம் சோழர் காலத்தில் வளர்ச்சியின் உச்சத்தை எட்டியது. சைவ சமயத்தின் தத்துவமாக சைவ சித்தாந்தம் உருப்பெற்று செல்வாக்குற்றது. பதி (இறைவன்), பசு (உயிர்), பாசம் (இருள் + தளை) என்ற மூன்றும் சைவசித்தாந்தத்தின் அடிப்படைத் தத்துவமாகும். இதன்படி உலக உயிர்கள் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றையும் உள்ளடக்கிய பாசத்தை நீக்கி பதியாகிய இறைவனை அடைய வேண்டும். சைவசமய இலக்கியங்களாகப் பன்னிரு திருமுறைகள் அமைகின்றன. மறைந்து கிடந்த தேவாரப் பாடல்கள் ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்டு கோவில்களில் ஓதப்பட்டன. இதைக் கண்காணிக்க தேவார நாயகம் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். கோவில்களில் நாள்தோறும் விளக்கேற்றவும், தேவாரம் பாடவும், திருவிழாக்கள் நிகழ்த்தவும் மன்னர்களும் பொதுமக்களும் மானியம் வழங்கினர். சைவ வைணவ கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலமானியங்கள் தேவதானம் எனப் பெயர் பெற்றன.

தமிழ் வைணவர்களின் புனித நூலான நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற தொகுப்பு சோழர் காலத்தில்தான் உருப்பெற்றது.

பாண்டியர் காலம் (கி. பி. 13ம் நூற்றாண்டு)

சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருவான பாண்டியப் பேரரசு சோழப் பேரரசைப் போன்றே மண்டலம், நாடு, கூற்றம் ஆகிய ஆட்சிப் பிரிவுகளைக் கொண்டிருந்தது. பல்லவர் காலத்தைப் போன்றே சோழர் காலமும் வேளாண்மையை மையமாகக் கொண்ட பெருமளவிலான கிராமங்களை அடிப்படை அலகாகக் கொண்டிருந்தது. வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. நெசவு, எண்ணெய் எடுத்தல், வெல்லம் தயாரித்தல், உப்பு விளைவித்தல் கிய தொழில்கள் நிகழ்ந்தன. பாண்டியர் ஆட்சியில் சிறப்புமிக்க தொழிலாக முத்து குளித்தல் விளங்கியது. உரோம் நாட்டிற்கு இம்முத்துக்கள் ஏற்றுமதியாகி தங்கத்தைக் கொண்டு வந்தன. மார்கோபோலோ என்ற இத்தாலி நாட்டு சுற்றுப் பயணி மாரவர்மன் குலசேகரன் என்ற பாண்டிய மன்னன் 1200 கோடி பொன்னைச் சேமித்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொலைத் தண்டனை பெற்ற கைதிகள் முத்து குளித்தலில் ஈடுபடுத்தப்பட்டனர். வாணிபத்தின் பொருட்டு இங்கு வந்த அரேபியர்கள் இங்கே தங்கள் சமயத்தை பரப்பினர். பாண்டிய மன்னனின் அரசவையில் இஸ்லாமியர் சமயத்தைச் சார்ந்த அமைச்சர் ஒருவர் இடம் பெற்றிருந்தார். பாண்டியர்களின் கொற்கை துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பெருமளவில் நிகழ்ந்தது. மணிக்கிராமம், அஞ்சு வண்ணத்தார் என்ற வணிகச் சங்கங்களும் நானாதேசிகன் என்ற பெயரில் அயல்நாட்டு வாணிபம் மேற்கொண்ட குழுவும் இருந்தன. அரேபிய நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி பெருமளவில் நிகழ்ந்தது. இது குறித்து வசப் என்ற அரேபியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

"அந்தக் குதிரைகள் வந்து இறங்கியதும், அவற்றிற்குப் பச்சை வாற்கோதுமையைத் தருவதற்கு மாறாக, வறுத்த வாற்கோதுமையையும் வெண்ணெய் சேர்த்துச் சமைத்த தானியத்தையும் தீனியாகப் போட்டுக் காய்ச்சிய ஆவின் பாலைக் குடிப்பதற்குக் கொடுக்கிறார்கள். இது மிகவும் விசித்திரமான செயல். லாயத்தில் முளைகளை அடித்து, குதிரைகளை அவற்றோடு கயிற்றால் பிணைத்து, அங்கேயே அவற்றை 40 நாள் விட்டு விடுகிறார்கள். அதனால் குதிரைகள் கொழுத்துப் பருத்துப் போகின்றன. பின்னர், அவற்றிற்குப் பயிற்சியளிக்காமலும் அங்கவடி முதலிய குதிரைச் சாமான்களைப் பூட்டாமலும், அவற்றின் மீது ஏறியுட்கார்ந்து இந்திய வீரர்கள் அவற்றைப் பிசாசைப் போல் ஓட்டுகிறார்கள். அவற்றின் வேகம் புரக்கின் வேகத்திற்குச் சமமாயிருக்கிறது. மிகுந்த வலிமையும் வேகமும் சுறுசுறுப்பும் உடைய புதிய குதிரைகளும் வெகு விரைவில் வலிமையற்ற, வேகமற்ற, பயனற்ற, மதியற்ற குதிரைகளாய் மாறிவிடுகின்றன. அதாவது, அவை எதற்கும் உதவாத இழி நிலையை எய்தி விடுகின்றன. சாட்டையடி வாங்காமலே மிக வேகமாக ஓடக்கூடிய வலிமைமிக்க அந்தக் குதிரைகள் இந்நாட்டுத் தட்பவெப்ப நிலையைத் தாங்க மாட்டாமல் வலியிழந்து வாடிப் போகின்றன. எனவே, அவை சவாரி செய்வதற்குப் பயனில்லாமல் போகின்றன. அதனால் ஆண்டு தோறும் புதிய குதிரைகளை வாங்குவது இன்றியமையாததாகி விடுகின்றது. எனவே ஆண்டுதோறும் முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் மா.பாருக்குக் குதிரைகளைக் கொண்டு வருகிறார்கள் (நீலகண்ட சாஸ்திரி, தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள் 276). குதிரைக்கு லாடம் கட்டுபவர்களும் இங்கே இல்லை. குதிரை வணிகர்கள் இலாடக்காரர்களை அழைத்துக் கொண்டு வருவதில்லை. லாடக்காரர் யாதேனும் வர முயன்றாலும் அவர்களை வணிகர்கள் தடுத்து விடுகிறார்கள். அப்படிச் செய்யாவிட்டால் குதிரை வாணிகம் குறைந்து போகுமென்று அவர்கள் அஞ்சினார்கள். அந்த வாணிகத்தில் அவர்களுக்கு ஆண்டுதோறும் பெரும் பொருள் கிடைத்தது. அந்த லாபத்தை இழப்பதற்கு அவர்கள் விரும்பவில்லை. குதிரைகளை அவர்கள் கப்பலில் ஏற்றிக் கொண்டு வந்தார்கள்.

என்று மார்கோபோலாவும் குறிப்பிட்டுள்ளார் (நீலகண்ட சாஸ்திரி, தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள் 273 274).

விஜயநகரப் பேரரசு (கி.பி. 14 16)

பாண்டியர் ஆட்சியின் இறுதிக் காலத்தில் அடுத்தடுத்து வடஇந்திய இஸ்லாமியர்களின் படையெடுப்புக்கு ஆளானது. கி.பி. 1311இல் மாலிகாபூரும், 1318இல் குஷ்ருகானும், 1323இல் முகமது பின் துக்ளக்கும் படையெடுத்தனர். துக்ளக் பரம்பரையினரின் ஆட்சி டெல்லியில் நிலவியபோது அதன் 23வது மாநிலமாக தமிழகம் (தென்னிந்தியா) ஆனது. 1378 வரை இந்நிலை நீடித்தது. கி.பி. 1378இல் விஜயநகரப் பேரரசை நிறுவிய இரு சகோதரர்களில் ஒருவராகிய புக்கன் என்பவனின் மகன் குமாரகம்பனன் என்பவன் மதுரையின் மீது படையெடுத்து விஜயநகரப் பேரரசின் ஆட்சியை நிறுவினான். இதன்பின் தமிழகம் விஜயநகரப் பேரரசின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டில் மறைந்து போன சோழப் பேரரசின் ஆட்சிமுறையே பெரும்பாலும் பாண்டியர் ஆட்சியில் தொடர்ந்தது. ஆனால் விஜயநகரப் பேரரசு புதிய ஆட்சியமைப்பையும், நிறுவனங்களையும் தோற்றுவித்தது. மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர் என நான்கு மண்டலங்கள் உருவாயின. இவற்றை நிறுவகிக்க மண்டலாபதி என்ற அதிகாரி நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நிலவிய கிராம ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டது. சாதி வேற்றுமையும், தீண்டாமையும் இறுக்கமாயின. அடிமைமுறை பரவலாகியது. சைவமும், வைணவமும் செல்வாக்குப் பெற்றன. அதே நேரத்தில் சைவர்களுக்கும், வைணவர்களுக்குமிடையே சமயப் பூசல்கள் உருவாயின.

நில அளவுகோலை மாற்றி நிலத்தை அளந்ததன் விளைவாக நிலத்தின் பரப்பு அதிகரித்து வரியளவு உயர்ந்தது. நிலக்குத்தகைத் தொகையை உயர்த்தின ர். விஜயநகர ஆட்சிக் காலத்தில் வரிப்பளு அதிகரித்தது. பரம்பரை நிலக்கிழார்களான பிராமணர்களும், வெள்ளாளர்களும் விஜயநகரப் பேரரசின் அதிகாரிகளும் உழுகுடிகளைக் கொண்டு நிலங்களைப் பயிரிட்டனர். ஆனால் உழுகுடிகளுக்கும், கைவினைஆர்களுக்கும் உரிய பங்கைக் கொடுக்கத் தவறினர். இதன் காரணமாக மக்கள் வலங்கை. இடங்கை என்ற பிரிவுகளைக் கடந்து நின்று காணியாளர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் எதிராக கிளர்ந்து எழுந்தனர். தஞ்சை மாவட்டத்தில் கொருக்கை என்ற ஊரில் கிடைத்துள்ள கி.பி. 1429ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் நாம் மண்டலம் சேர இனம் ஒத்து இராதபடி ஆலே அல்லோ இப்படி நம்மை அநியாயம் செய்கிறார்கள் என்று இடம் பெற்றுள்ள செய்தி மக்கள் ஒன்றுபட்டுப் போராடியதைக் குறிப்பிடுகின்றது.

நாயக்கர் காலம்

கி.பி. 1529இல் தொடங்கி 1736 வரை மதுரை நாயக்கர் ஆட்சி நிலவியது. நாயக்கர் ஆட்சியில் பாளையப்பட்டுமுறை என்ற ஆட்சி முறை கி.பி. 1535இல் உருவானது. இதன்படி 72 பாளையங்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு பாளையமும் பாளையக்காரன் ஒருவனால் நிறுவகிக்கப்பட்டது. ஏற்கனவே குறுநல மன்னர்களாக இருந்த தமிழர்கள் மட்டுமின்றி கன்னட, தெலுங்கர் பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு பாளையங்காரரும் தன் ஆளுகைக்குட்பட்ட பாளையங்களில் வரிவசூல் செய்யவும் வழக்குகளை விசாரித்து நீதி வழங்கவும் உரிமையுடையவர்களாயிருந்தனர். நாயக்கர் மன்னர்கள் நிகழ்த்தும் படையெடுப்பின் போது தங்கள் சொந்தப் படையை பாளையக்காரர் அனுப்புவது கட்டாயமாக இருந்தது. பாளையத்திலிருந்து கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பங்கு நாயக்க மன்னருக்கும், மற்றொரு பங்கு பாளையக்காரரின் படைவீரர்களின் செலவுக்கும் எஞ்சிய ஒரு பகுதி பாளையக்காரரையும் சென்றடைந்தது.

நாட்டின் மைய ஆட்சி அதிகாரம் நாயக்க மன்னர்களிடம் இருந்தது. அரசனை அடுத்திருந்த உயர் அதிகாரி தளவாய் என்றழைக்கப்பட்டார். இவரை அடுத்திருந்தவர் பிரதானி, இவர் நீதி வழங்கும் பணியையும் மேற்கொண்டிருந்தார். இவரை அடுத்த பதவி ராயசம் என்பதாகும். இம்மூன்று பதவிகளும் முக்கியமான பதவிகளாக இருந்தன.

நிலவரியே அரசின் முக்கிய வருவாயாக இருந்தது. நிலங்கள் தரவாரியாகப் பிரிக்கப்பட்டு வரி விதிக்கப்பட்டது. வீடு, குடியிருப்பு மனை, தோட்டம், கால்நடைகள் ஆகியனவற்றிற்கு சொத்துவரி விதிக்கப்பட்டது. கருமார் (கொல்லர்), தச்சர், குயவர், நெசவாளர் போன்ற கைவினைஆர்களிடமிருந்து தொழில்வரி வாங்கப்பட்டது. பரத்தையரும் தொழில்வரி செலுத்தியுள்ளார்கள். படைவீரர் பராமரிப்பிற்கென்று அவ்வப்போது வரிவாங்கப்பட்டது. நன்செய் நிலவரி நெல்லாயம் என்ற பெயரில் நெல்லாகவே வாங்கப்பட்டது. புன்செய் நில வரிகளும் ஏனைய வரிகளும் பொன்னாக வாங்கப்பட்டது.

நாயக்க மன்னர்கள் வைணவர்கள், என்றாலும் பிற சமயங்களை மதித்தனர். சைவ, வைணவ வேறுபாடின்றி கோவில்களுக்குத் திருப்பணி செய்தனர். இவர்கள் ஆட்சியில்தான் கத்தோலிக்க கிறித்துவம் தமிழ்நாட்டில் கால் கொண்டது. தத்துவ போதகர் என்றழைக்கப்படும் ராபர்டிநொபிலி என்பவர் தம் சமயத்தை பரப்ப வேறுபாடான ஒரு முறையை மேற்கொண்டார்.

சோழர் காலத்தைப் போன்றே நாயக்கர் காலத்திலும் வடமொழிக் கல்வியே முக்கியத்துவம் பெற்றது. வெற்றி வேற்கை என்னும் நறுந்தொகை, நைடதம், என்ற இலக்கியங்கள் அதிவீரராம பாண்டியன் என்பவரால் எழுதப்பட்டன. வரதுங்கராம பாண்டியன் திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி திருக்கருவைக் கலித்துறை அந்தாதி என்ற நூல்களையும், மாரனலங்காரம் என்ற நூலை திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரும், சுப்பிரதீபக் கவிராயர் கூளப்பநாயக்கன் காதல், கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது என்றும் நூல்களையும் இயற்றியுள்ளனர். 1. அழகர் அந்தாதி, 2. திருவரங்கக் கலம்பகம், 3. திருவரங்கத்தந்தாதி, 4. திருவரங்கத்துமாலை, 5. திருவரங்கத்து ஊசல், 6. திருவேங்கடத்தந்தாதி, 7. திருவேங்கடமாலை, 8. நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி என்ற எட்டு நூல்களும் அஷ்டப் பிரபந்தம் எனத் தலைவர்களால் போற்றப்படுகின்றன. இவற்றை எழுதிய பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் திருமலைநாயக்கர் காலத்தவர். மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் எழுதிய குமரகுருபரர், சீறாப்புராணம் பாடிய உமருப் புலவர், குற்றாலக் குறவஞ்சி பாடிய திருகூடராசப்பக் கவிராயர் ஆகியோர் நாயக்கர் காலத்தில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க கவிஆர்களாவர்.

ஐரோப்பியர் காலம் (1533 1947)

கி.பி. 1533இல் முத்துக்குழித்துறை கடற்கரைப் பகுதியில் உள்ள தூத்துக்குடி நகரில் வாணிபத்திற்காக வந்து தங்கியிருந்த அரேபிய மூர்களுக்கும் நெய்தல் நிலத் தொல்குடியினரான பரதவர்களுக்குமிடையே மோதல் நிகழ்ந்தது. இம்மோதலில் பரதவர்கள் மிகக் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்டார்கள். இதிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் வழிமுறையாக கொச்சி நகரிலிருந்த போர்ச்சுக்கீசியரின் உதவியைப் பரதவர்கள் நாடினர். பரதவர்களுக்குத் தங்கள் கடற்படை துணையுடன் உதவ முன் வந்த போர்ச்சுக்கீசியர்கள் தங்கள் உதவிக்குக் கைமாறாக கத்தோலிக்கர்களாக மதம் மாறும்படி அவர்களை வேண்டினர். அதற்கு உடன்பட்ட பரதவர்கள் மதம் மாறியதுடன் போர்ச்சுக்கீசிய மன்னனின் குடிகளாகவும் தங்களை மாற்றிக் கொண்டனர். இதன் விளைவாக வடக்கே வேதாளை தொடங்கி தெற்கே கன்னியாகுமரி வரையிலான கடற்கரைச் சிற்×ர்கள் போர்ச்சுக்கீசியரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன.

வெகு திரளான மதமாற்றம் சில புதிய வரவுகளை தமிழ்மொழிக்கு வழங்கியது. அண்டிரீக் என்ற போர்ச்சுக்கீசிய சேசுசபைத் துறவி பரதவர்களின் நிதி உதவி பெற்று கி.பி. 1567இல் தம்பிரான் வணக்கம் என்ற நூலையும், 1568இல் கிறிஸ்டியாவின் வணக்கம் என்ற நூலையும் முறையே அம்பலக்காட்டிலும் கொல்லத்திலும் அச்சிட்டு வெளியிட்டார். இந்திய மொழிகளிலேயே முதன்முதலாக அச்சு வடிவம் பெற்ற மொழி என்ற பெருமையை இந்நூல்களின் வாயிலாகத் தமிழ்மொழி பெற்றது. தூத்துக்குடி அருகில் உள்ள புன்னக்காயல் என்ற கடற்கரைச் சிற்×ரில் அடியார் வரலாறு என்ற நூலை 1586இல் இவர் அச்சிட்டு வெளியிட்டார். போர்ச்சுக்கீசிய மொழியில் தமிழ் இலக்கண நூல் ஒன்றையும் இவர் வெளியிட்டுள்ளார். தற்கால மருத்துவமனை ஒன்றையும் புன்னக்காயலில் இவர் நிறுவினார்.

கி.பி. 1658இல் டச்சுக்காரர்கள் போர்ச்சுக்கீசியர்களிடமிருந

நன்றி அண்ணே.

இந்த காலகட்டங்களிலே நாங்கள் என்ன செய்துகொண்டிருந்தோம்?

ஒட்டுகுழுக்கள்............ கெல்ப் பிளீஸ்................

  • 2 weeks later...

ஒரு நல்ல விரிவான ஆய்வு க்ட்டுரை தரப்பட்டுள்ளது.

நாம் கலாச்சாரத்துடன் ஒன்றாக வாழ்ந்த சகோதர மக்களிடம் பிரிவுகள் வளர்ந்ததை

மறந்து ஒன்றாக வாழ முயற்சி செய்ய வேண்டும்.

தேவப்பிரியா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ கட்டுரைகளைப் பார்க்க நேரில் பார்த்து வந்து எழுதுகின்ற மாதிரி எழுதுறாங்கள். இவங்களை யாரும் கண்டு கொள்ள மாட்டினமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.