Jump to content

ராஜபக்ஷவினரது அரசியலின் விளைவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ஷவினரது அரசியலின் விளைவு

By DIGITAL DESK 2

13 NOV, 2022 | 03:15 PM
image

(சத்ரியன்)

“வெளிநாட்டில் பணியாற்றுவதற்காக செல்லும் மருத்துவர்கள் மீளத்திரும்பமாட்டார்கள். அவர்கள் சிறிது காலத்துக்கு, டொலரை அனுப்பினாலும், குடும்பத்துடன் புலம்பெயர்ந்து விடுவார்கள். அவர்களால் அரசாங்கத்துக்கு எந்த வருமானமும் கிடைக்காது”

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வரவேண்டாம் அல்லது குறைந்தபட்சம் அவர் அவ்வாறு வரப்போகிறேன் என்று கூறாமல் இருந்தால் கூடப் போதும் என, அண்மையில் கொழும்பில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது கூறியிருந்தார் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க.

அதற்கு அவர் குறிப்பிட்டிருக்கின்ற காரணம் அரசியல் நோக்கிலானது அல்ல. பொருளாதார மற்றும் சமூக நோக்கிலானது.

“ஏற்கனவே பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.  பல வருட கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட ஒரு சமூக மூலதனம் எங்களிடம் உள்ளது. எங்களிடம் எஞ்சியிருக்கும் சொத்துக்களில் அதுவும் ஒன்று. இப்போது அந்த சமூக மூலதனம் வடிகட்டப்படுகிறது. 

ஒவ்வொரு முறையும் ராஜபக்ஷக்கள் மீண்டு வர முயற்சிப்பதை பார்க்கும் போது, மக்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

ராஜபக்ஷக்கள் அரசியலில் இருந்து விலகி இருக்கும் வரை மக்களுக்கும் இந்த நாட்டுக்கும் நல்லது. 

k2_-LAFET_03.jpg

ஒரு ராஜபக்ஷ பொதுவெளியில் தோன்றி மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று கூறுகின்ற போதெல்லாம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். 

இளைய தலைமுறையினர், மீண்டும் ராஜபக்ஷவின் கீழ் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை இனியும் சகித்துக் கொள்ளமாட்டார்கள்.  அவர்கள் நிச்சயமாக நாட்டை விட்டு வெளியேறுவார்கள்.” என்று அவர் கூறியிருக்கிறார்.

டொலர் வருமானத்துக்காக அரசாங்கம் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதில் குறியாக இருந்தாலும், நாட்டை விட்டு இளம் சமூகம், கடும் உழைப்பாளிகள், அறிவார்ந்த சமூகம் என்பன வெளியேறிச் செல்வது பெரும் இழப்பாகும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்பது, சாதாரண தொழிலாளர்கள் மட்டத்தில், டொலர் சம்பாத்தியத்துக்கான வழியாக இருந்தாலும், இளம் சமூகமும், அறிவார்ந்த சமூகமும் வெளியேறுவது அவ்வாறானதல்ல.

அண்மையில்,  தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ்  ஆங்கில ஊடகம் ஒன்றின் ஊடகவியலளர், எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்திருந்த, இலங்கை மருத்துவச் சங்கத்தின் (Sri Lanka Medical Council) பதிவாளர் மருத்துவர் ஆனந்த ஹபுகொட, இந்த ஆண்டில் ஜனவரி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் வரை மாத்திரம், 2206 மருத்துவர்கள், வெளிநாட்டில் உயர் கல்வி பெறுவதற்கு அல்லது, பணியாற்றுவதற்காக வழங்கப்படும், நற்சான்றுப் பத்திரத்தைப் பெற்றிருப்பதாக கூறியிருந்தார். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், 433 மருத்துவர்கள் இந்தச் சான்றைப் பெற்றிருந்தனர்.

கடந்த 2019, 2020, 2021ஆம் ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு நன்சான்று பத்திரம் பெற்றுக் கொண்ட மருத்துவர்களின் எண்ணிக்கையை விட, இந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதம் இந்த சான்றை பெற்ற மருத்துவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காகும்.

k2_-LAFET_02.jpg

2019 முதல் 2022 ஆகஸ்ட் வரை 4,143 மருத்துவர்கள் இலங்கை மருத்துவச் சங்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில், 5,855 மருத்துவர்கள் வெளிநாடு செல்வதற்கான ‘நற்சான்று பத்திரங்களை’ பெற்றுள்ளனர்.

இது, இலங்கையில் புதிதாக கல்வி கற்று உருவாகும் மருத்துவர்களின் எண்ணிக்கையை விட, வெளியேறும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதைக் காட்டுகிறது.

வெளிநாட்டில் பணியாற்றுவதற்காக செல்லும் மருத்துவர்கள் மீளத்திரும்பமாட்டார்கள். அவர்கள் சிறிது காலத்துக்கு, டொலரை அனுப்பினாலும், குடும்பத்துடன் புலம்பெயர்ந்து விடுவார்கள். அவர்களால் அரசாங்கத்துக்கு எந்த வருமானமும் கிடைக்காது.

அதேவேளை கல்விக்காகச் செல்லுகின்றவர்களும் முழுமையாக அல்லாவிட்டாலும், கணிசமானோர் அங்கேயே தங்கி விடுகிறார்கள்.

கடந்த சில வருடங்களில் சட்டரீதியாக சென்று, வெளிநாடுகளில் தங்கி விட்ட சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை 150 என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மருத்துவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கவுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரியான மருத்துவர் பிரியந்த அத்தபத்து கூறியுள்ளார்.

இந்த ஆண்டு மாத்திரம், 30 சிறப்பு மருத்துவர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதன் மூலம், கல்விக்காக வெளிநாடு செல்லும் மருத்துவர்களில் குறிப்பிட்டளவானோர் சட்டவிரோதமாக அங்கேயே தங்கி விடுகின்றனர் என்பது உறுதியாகிறது.

இதுபோன்ற நிலை எல்லா துறைகளிலும் காணப்படுகிறது. இலவசக் கல்வி, இலவச மருத்துவம் போன்றவற்றின் ஊடாகவே, இலங்கையின் சமூக மூலதனம் கட்டியெழுப்பப்பட்டது என்கிறார் சம்பிக்க ரணவக்க.

அவ்வாறு கட்டியெழுப்பப்பட்ட சமூக மூலதனத்தின் வெளியேற்றம், ஒட்டுமொத்த நாட்டுக்கும் பேரிழப்பாக அமைகிறது.

ஏனைய நாடுகளில் கல்விக்காகவோ, சுகாதாரத்துக்காகவோ, ஏதோ ஒரு வகையில் கொடுப்பனவைச் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. ஆனால், இலங்கையில் அவ்வாறான நிலை இல்லை.

முற்றிலும் இலவச சுகாதார மற்றும் கல்வி வசதிகளைப் பெற்றுக் கொண்டு, மூளைசாலிகள், திறமைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

இதன் மூலம் இவர்களைக் கட்டியெழுப்ப செலவிடப்பட்ட நிதி, உழைப்பு எல்லாமே வீணாகிறது.  போர்க்காலத்தில் இந்த நிலை காணப்பட்டது. போருக்குப் பின்னர், நாட்டை விட்டு புலம்பெயரும் நிலை குறைந்து போயிருந்தது.

 

ஆனால் 2019இல் ராஜபக்ஷவினர் நாட்டை மீண்டும் தங்களின் பிடிக்குள் கொண்டு வந்த பின்னர், இந்த வெளியேற்றம் அதிகரித்திருக்கிறது.

நாட்டில் வாழ முடியாதளவுக்கு பொருளாதார நெருக்கடி வெளிநாடுகளை நோக்கி இளம் சமூகத்தை படையெடுக்கச் செய்திருக்கிறது.

கடவுச்சீட்டுக்காக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் வாயிலில் காத்திருக்கும் வரிசையே, எந்தளவுக்கு நம்பிக்கையீனம் அவர்களை பீடித்திருக்கிறது என்பதற்கு சாட்சியாகிறது.

உள்நாட்டில் பொருளாதார ரீதியாக தலையெடுக்க முடியாது என்ற நம்பிக்கையீனம் தான், அவர்களை வெளிநாடு நோக்கிச் செல்லத் தூண்டுகிறது.

திறமையற்றவர்களோ, அனுபவம் அற்றவர்களோ இவ்வாறு வெளியில் செல்லவில்லை.

அவர்களுக்காக, வெளிநாடுகள் காத்திருக்கவும் இல்லை.

பயிற்சிபெற்ற,திறமையும், அனுபவமும் கொண்டவர்களுக்குத் தான் வெளிநாட்டு தொழிற்சந்தை திறந்து கிடக்கிறது.

அவ்வாறானவர்கள் வெளியேறுகின்ற போது, நாட்டின் பொருளாதாரம் பலவீனமடையும்.  தற்போதே நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியுற்றிருக்கும் நிலையில், பொருளாதாரத்துக்கு வலுச்சேர்க்க முடியாத - பலவீனமான சமூகத்தை பராமரிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.

இந்தநிலையை மாற்ற வேண்டும் என்றால், ராஜபக்ஷவினர் மீண்டும் அதிகாரத்துக்கு வரக் கூடாது என்பது மட்டுமல்ல அவர்கள் அதிகாரத்துக்கு வரப் போவதாக கூறுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான், சம்பிக்க ரணவக்கவின் கருத்து.

ஆனால் ராஜபக்ஷவினர் எவரும் நாட்டுக்காக தங்களின் அரசியலை தியாகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. நாட்டைச் சீரழித்ததில் அவர்களின் பங்கு மிகப் பெரியளவிலானது. 

k2_-LAFET_01.jpg

சிங்கள மக்கள் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி போரை முன்னெடுத்ததில் இருந்து, பொருளாதாரத்தை சாய்த்து வீழ்த்தியது வரை அவர்களின் அரசியலின் விளைவு தான் என்பதில் சந்தேகமில்லை.

https://www.virakesari.lk/article/139894

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2022 at 18:04, ஏராளன் said:

ராஜபக்ஷவினர் எவரும் நாட்டுக்காக தங்களின் அரசியலை தியாகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. நாட்டைச் சீரழித்ததில் அவர்களின் பங்கு மிகப் பெரியளவிலானது. 

சனாதிபதி மாளிகைக்குள் என்று மக்கள் புகுந்தார்களோ, அன்றே ராயபக்ச அன்ட் கோ வின் சிங்களக் கதாநாயகப் பிம்பம் சுக்குநூறாக நொருங்கிவிட்டது. இவர் ஒருகாலத்தில் அவர்களோடு உலாவந்ததை வசதியாக மறந்துவிட்டுச் செத்தமாட்டுக்கு லாடன் கட்டமுனைகிறார். தங்கள் அரசியலுக்காக எதையும், எப்படியும் பேசும் கூட்டம் தமிழினத்தில் மட்டுமல்லச் சிங்களத்திலும் வளர்ந்துவருகிறது. 

நன்றி

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.