Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

விந்தணு எண்ணிக்கையில் கடும் சரிவு - 5 காரணங்களும் மீளும் வழிகளும்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஆண்ட்ரே பீர்நாத்
  • பதவி,பிபிசி செய்தி பிரேசில்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்
ஆண் விந்தணு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆண்களின் விந்தணுக்களின் செறிவு கடந்த 50 ஆண்டுகளில் 51 சதவிகிதம் குறைந்துள்ளதாக சமீபத்திய ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இஸ்ரேலில் உள்ள ஹீப்ரு யூனிவர்ஸ்சிட்டி ஆஃப் ஜெருசலேம் மற்றும் அமெரிக்காவில் உள்ள மவுண்ட் சினாய் ஸ்கூல் ஆஃப் மெடிசின் இணைந்து நடத்திய ஆய்வில் கிடைத்த முக்கிய கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

1970களில் சராசரியாக ஒரு மில்லி லிட்டர் விந்துவில் 101 மில்லியன் உயிரணுக்கள் இருந்த நிலையில், அந்த சராசரி சமீப காலங்களில் 49 மில்லியனாக குறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

அதோடு மட்டுமில்லாமல், விந்தணுக்களின் தரமும் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. பெண்ணின் கருமுட்டைக்குள் நுழையும் திறன் கொண்ட உயிரணுக்களின் சதவிகிதம் சமீபத்திய தசாப்தங்களில் கணிசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

 

"விந்தணு இயக்க இழப்பு பெரும் தாக்கத்தைக் கொண்டுள்ளது. இந்தப் பண்பு இல்லாமல் கருத்தரிக்கும் திறன் குறைகிறது" என்கிறார் சிறுநீரக மருத்துவரும் ஆண்கள் சிறப்பு மருத்துவருமான மோசிர் ரஃபேல் ராடாஎல்லி.

தொடர்ந்து மோசமடையும் இந்தச் சூழல், சுகாதார நிபுணர்களிடையே எச்சரிக்கை சமிக்ஞையை ஏற்படுத்தியுள்ளது.

"இது கவலைக்குரிய ஒன்று. ஏனென்றால் மோசமடைதலின் வேகம் அதிகரித்திருப்பதை நாங்கள் காண்கிறோம். இது எங்கு முடியும் என்று தெரியவில்லை" என்கிறார் பிரேசிலியன் சொசைட்டி ஆஃப் யூரோலஜியின் ஆண்ட்ராலஜி துறையின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் எட்வர்டோ மிராண்டா.

ஆண்களின் விந்தணுக்கள் இழப்பு விகிதம் சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட அதே ஆய்வில் 1970 மற்றும் 1990க்கு இடைப்பட்ட காலத்தில் விந்தணுக்களின் செறிவு ஆண்டுதோறும் 1.16 சதவிகிதம் குறைந்துள்ளது தெரியவருகிறது.

2000களின் தொடக்கம் முதல் இந்த விகிதம் 2.64 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இது உலகளாவிய நிகழ்வாக உள்ளது. ஐரோப்பா, ஆப்ரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் மிக வேகமாக சரிவது உட்பட அனைத்து கண்டங்களிலும் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை சரிவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இதற்கு என்ன காரணம்? நிபுணர்கள் குறைந்தது ஐந்து காரணங்களை சுட்டிக்காட்டுகின்றனர். இதில் நல்ல செய்தி என்னவென்றால், இந்தப் பிரச்னையிலிருந்து மீள்வதற்கு வழிகள் உள்ளன.

உடல் பருமன்

உடல் பருமன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உடல் பருமன் விந்தணுக்களுக்கு தொடர் தீங்கை ஏற்படுத்துகின்றன.

உடலில் கொழுப்பு அதிகரிக்க வழிவகுக்கும் கொழுப்பு திசுக்களின் வளர்ச்சி, டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை நேரடியாக பாதிக்கிறது. டெஸ்டோஸ்டிரோன் ஆண் விந்தணுக்கள் உற்பத்தியில் மிக முக்கியமான ஹார்மோன்களில் ஒன்றாகும்.

அதிகப்படியான எடை உடலில் உள்ள பல்வேறு செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்தக் கூடிய ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை உருவாக்குவதாக மிராண்டா கூறுகிறார்.

"அதேபோல பருமனான நபரின் பிறப்புறுப்பு பகுதியில் அதிக கொழுப்பு சேரும். இது விந்தணுக்களுக்கு ஆபத்தானது” என்றும் அவர் கூறுகிறார்.

விந்தணுக்கள் உருவாகி, சேகரமாகும் விதைப்பை சிறப்பாக செயல்பட அதன் வெப்பநிலை உடல் வெப்பநிலையிலிருந்து1 முதல் 2 டிகிரி குறைவாக இருக்க வேண்டும். எனவேதான் விதைப்பை உடலுக்கு வெளியே உள்ளது.

கொழுப்பு அதிகரிக்கும் போது இனப்பெருக்க உறுப்புகள் அதிக சுமைக்கு உள்ளாகி, சிறப்பாக செயல்பட முடியாமல் போகிறது.

உலகில் 39 சதவிகித ஆண்கள் அதிக எடையுடன் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

தவறான பழக்கங்கள்

மது, சிகரெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மது, சிகரெட், மின்சிகரெட், கஞ்சா, கொக்கைன் போன்ற பொருட்களின் பயன்பாடு ஆண்களின் விந்தணுக்களை வெகுவாக பாதிக்கும். “இதில் சில பழக்கம் விந்தணுவை உருவாக்கும் கருசெல்களை நேரடியாக பாதிக்கும்" என்கிறார் மிராண்டா. மற்றவை விதைப்பைகளின் செயல்பாட்டை தூண்டும் ஹார்மோன்களின் உற்பத்தியை பாதித்தல் போன்று மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. உடல் தசையை அதிகரிப்பதற்காக மாத்திரைகள், ஜெல் மற்றும் ஊசி மூலம் டெஸ்டோஸ்டிரோன் எடுத்துக்கொள்வது மிகவும் ஆபத்து என நிபுணர்கள் கூறுகின்றனர். "இந்த சந்தை சமீபத்திய ஆண்டுகளில் பைத்தியக்காரத்தனமாகவும் திகிலூட்டும் விதமாகவும் வளர்ந்துள்ளது" என ராடேல்லி எச்சரிக்கிறார். இந்த ஹார்மோனை வெளியே இருந்து எடுத்துக்கொள்ளும் போது, இனி இயற்கையாக உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று உடல் புரிந்துகொள்வதாக அவர் கூறுகிறார். இதன் காரணமாக, விதைப்பைகள் சிறுத்து, விந்தணுக்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாகிறது. இதை மருத்துவ மொழியில் அஸோஸ்பெர்மியா என்பார்கள்.

பால்வினை தொற்று

பாக்டீரியாவால் ஏற்படும் கிளமிடியா மற்றும் கோனோரியா போன்ற நோய்கள் உயிரணுக்கள் முதிர்ச்சியடையும் எபிடிடிமிஸில் வீக்கத்தை ஏற்படுத்தும். எபிடிடிமிஸில் ஏற்படும் இந்த மாற்றம் உயிரணுக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. 2020ஆம் ஆண்டில் மட்டும், கிளமிடியா நோயால் 129 மில்லியன் பேரும், கோனோரியா நோயால் 82 மில்லியன் பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதாரம் மதிப்பிட்டுள்ளது. சமீபத்திய தசாப்தங்களில் இந்த விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மடியில் மடிக்கணிணி

மடிக்கணிணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

விதைப்பை வெப்பநிலை உடலின் மற்ற பகுதிகளை விட 1 முதல் 2 டிகிரி குறைவாக இருக்க வேண்டும் என்று மேலே கூறியது நினைவிருக்கிறதா? கடந்த தசாப்தத்தில் வெளியிடப்பட்ட ஆய்வுகள், மடியில் வைத்து மடிக்கணினியை பயன்படுத்தும் பழக்கம் விந்தணு உற்பத்திக்கு கூடுதல் ஆபத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றன. ஏனென்றால், மடிக்கணிணியின் மின்கலன் வெப்பமடைவது விதைப்பையை வெப்பமடையைச் செய்யும். அதிக வெப்பநிலையுடன் தொடர்புடைய மற்ற பழக்கங்களும் அபாயங்களை ஏற்படுத்துவதாக மிராண்டா சுட்டிக்காட்டுகிறார். உதாரணமாக, சூடான நீரில் நீண்ட நேரக் குளியல். தொழில்நுட்பத் துறையில் மின்காந்த அலைகள், தொலைபேசி சமிக்ஞைகள் மற்றும் வயர்லெஸ் இணையம் ஆகியவையும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். "ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை ஆய்வுகளில், வைஃபை மற்றும் மின்காந்த அலைகள் போன்றவை விந்தணுக்களுக்கு பாதைப்பை ஏற்படுத்தின" என்று அவர் கூறுகிறார். “ஆனால், இந்த தொழில்நுட்பங்கள் உயிரணுக்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன என்பதை உறுதிப்படுத்துவது இன்னும் சாத்தியமில்லை" என்றும் மிராண்டா கூறுகிறார்.

நாளமில்லா அமைப்பு சீர்குலைப்பான்கள்

எண்டோகிரைன் சீர்குலைப்பான்கள் என்று அறியப்படும் பல நச்சு கலவைகள் குறித்தும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தப் பட்டியலில் வளிமண்டலத்தில் கண்டறியப்பட்ட மாசுக்கள், பிளாஸ்டிக் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவை அடங்கும். ஏனென்றால் இந்த மூலக்கூறுகள் நம் உடலில் உள்ள ஹார்மோன்களுக்கு மிகவும் ஒத்த அமைப்பைக் கொண்டுள்ளன. ஒரு சாவி ஒரு பூட்டுக்குள் நுழைவதைப் போல, இந்தப் பொருட்கள் செல் ஏற்பிகளில் பொருந்தி சில தேவையற்ற செயல்முறைகளைத் தூண்டுகின்றன. "இந்தப் பிரச்னையின் அளவு எங்களுக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. அதைத் தீர்மானிக்க பல ஆய்வுகள் நடந்து வருகின்றன" என்கிறார் ராடாஎல்லி.

மலட்டு உலகமாகிறதா?

விந்தணு

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுற்றுச்சூழல் மற்றும் தனிமனித நடத்தையைத் தாண்டி உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவதன் பின்னணியில் கூடுதலாக இரண்டு உள்ளார்ந்த சிக்கல்களும் உள்ளன. அதில், முதலாவது மரபியல். குழந்தை பெற்றுக் கொள்வதில் ஏற்படும் சிரமத்தில் 10 முதல் 30 சதவிகிதம் ஆண் மரபணுவுடன் தொடர்புடையது என மதிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது, வயது முதிர்வு. 50 ஆண்டுகளில் விந்தணுக்களின் எண்ணிக்கை 51 சதவிகிதம் குறைந்தது மற்றும் கடந்த இரண்டு தசாப்தங்களில் இந்த வேகம் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டால், இந்த எண்ணிக்கை பூஜ்ஜியத்தை நெருங்குமா? இந்த வீழ்ச்சி விகிதம் தற்போதைய நிலைகளில் தொடர்ந்தால், 2050ஆம் ஆண்டு ஆண் விந்துவில் உள்ள உயிரணுக்களின் செறிவு கிட்டதட்ட பூஜ்ஜியமாக இருக்கும். ஆனால் இந்த நிலை வரும் என்று மிராண்டா நம்பவில்லை. "நிலைமை மோசமடைவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒரு கட்டத்தில் அது நின்றுவிடும். அநேகமாக புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் அந்த நிலையை நாம் அடைவோம்” என்று அவர் கூறுகிறார்.

என்ன செய்ய வேண்டும்?

குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் ஆண்கள் விந்தணுக்களில் ஏற்படும் பாதிப்புகளை மாற்ற நடைமுறை வாழ்க்கையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். உதாரணமாக, சீரான உணவுப்பழக்கம் மற்றும் உடல் செயல்பாடுகள் மூலம் உடல் எடையை குறைக்கலாம். மேலும் மது, சிகரெட் மற்றும் பிற போதைப்பொருட்களை முற்றிலும் தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம். கர்ப்பம் தரிப்பதை நோக்கமாக கொண்டிராத உடலுறவின் போது கிளமிடியா மற்றும் கோனோரியா போன்ற தொற்றுநோய்களைத் தவிர்க்க எப்போதும் ஆணுறையைப் பயன்படுத்துவது நல்லது. இளமைப் பருவத்தில் HPV தடுப்பூசியை எடுத்துக்கொள்பவர்கள இந்த வைரஸிலிருந்தும், அது உடலில் ஏற்படுத்தும் விளைவுகளிலிருந்தும் அதிகம் பாதுகாக்கப்படுகிறார்கள்.

வாழ்க்கை முறையில் அனைத்து மாற்றங்களைச் செய்த பிறகும் குழந்தை பெறுவதில் சிக்கல் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. தேசிய மற்றும் சர்வதேச வழிகாட்டுதல்களின்படி, மருத்துவரைச் சந்திப்பதற்கான காலம் பெண்ணின் வயதைப் பொறுத்தது.

 

"பெண் 35 வயதிற்குட்பட்டவராக இருந்தால், தம்பதிகள் ஒரு வருடம் வரை குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். கருமுட்டை உருவாகும் காலத்தை கவனத்தில் எடுத்து வாரத்திற்கு மூன்று முறை வழக்கமான உடலுறவில் ஈடுபட வேண்டும்" என்கிறார் மிராண்டா. 35 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், ஆறு மாதங்களுக்கும் மேலாக கருத்தரிப்பதில் சிரமம் இருக்கும்பட்சத்தில் ஏற்கனவே உங்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுவிட்டது. ஏனென்றால், கருமுட்டைகளின் இருப்பு அந்த வயதிலிருந்து விரைவாக குறையத் தொடங்குகிறது. எனவே காரணம் கண்டறிய 12 மாதங்கள் தாமதிப்பது முக்கியமான நேரத்தை வீணடிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். சாத்தியமான காரணங்களைக் கண்டறியவும் சிறந்த சிகிச்சைகளை பரிந்துரைக்கவும் ஆண், பெண் இருவரையுமே பரிசோதிக்க வேண்டும் என்று ராடாஎல்லி கூறுகிறார். பிரச்னை ஆண்களுக்கு இருந்தால், நிபுணர்கள் பொதுவாக விதைப்பையைப் பாதுகாக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த வைட்டமின் சேர்க்கையை (supplements) பரிந்துரைக்கின்றனர். ஹார்மோன்களை ஒழுங்குப்படுத்த கூடுதல் சேர்க்கைகள் தேவைப்படலாம். சில பிரச்னைகளை மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய முடியும் என்கிறார் மிராண்டா. பாக்டீரியா தொற்றுகளுக்கு ஆண்டிபாடிக்ஸ் மூலம் சிகிச்சையளிப்பது மற்றும் இனப்பெருக்க அமைப்பில் உள்ள உடற்கூறியல் குறைபாடுகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிப்பதை அவர் உதாரணமாகக் கூறுகிறார். கடைசி முயற்சியாக செயற்கை கருத்தரித்தல் முறையை தம்பதிகள் பின்பற்றலாம்.

https://www.bbc.com/tamil/articles/cxrq242wexpo



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.