Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடிநீர் தேக்க தொட்டியில் மலம் - புதுக்கோட்டையில் விஷமச் செயல் - போலீஸ் விசாரணை

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 43 நிமிடங்களுக்கு முன்னர்
புதுக்கோட்டை குடிநீர்த் தேக்க தொட்டியில் மலம்

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் அடையாளம் தெரியாத விஷமிகள் மலம் கலந்துள்ள சம்பவத்தால் அப்பகுதியில் சலசலப்பு காணப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி. இவ்வூராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தின் வேங்கை வயல் தெருவில் 50-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர்.

அந்த பகுதி மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வேங்கை வயலில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.

இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் ஐந்து பேருக்கு கடந்த இரண்டு மூன்று நாட்களாக உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது.

 

இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் குடித்த குடிநீரில் ஏதும் பிரச்னை இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

அந்த நீர்த்தேக்க தொட்டியை திங்கட்கிழமை ஏறி அப்பகுதி மக்கள் பார்த்தபோது குடிநீரில் மலம் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரைக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர்.

அதன்பேரில் எம்எல்ஏ எம்.சின்னதுரை, குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல், அன்னவாசல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

ஊர் பஞ்சாயத்து தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போராடி கிடைத்த நீர்த்தேக்க தொட்டி

புதுக்கோட்டை குடிநீர்த் தேக்க தொட்டியில் மலம்

மேலும், காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் நடந்துள்ள சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை முடிவில் தான் உண்மை நிலை தெரியவரும் என்கின்றனர் அதிகாரிகள்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் பிபிசி  தமிழிடம் பேசுகையில்,  "பல ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி  இருந்தோம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் 2016-17ஆம் ஆண்டில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.

தொட்டியின் மேலே உள்ள மூடியை திறப்பது பெரியவர்களால் மட்டுமே முடியும், விளையாட்டுத் தனமாக சிறுவர்கள் யாரும் செய்திருக்க வாய்ப்பில்லை. எனவே, திட்டமிட்டு யாரோ சிலர் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம்," என்றார்.

சாதி பிரச்னை காரணமா?

புதுக்கோட்டை குடிநீர்த் தேக்க தொட்டியில் மலம்

இறையூர் பஞ்சாயத்து தலைவி பத்மா பிபிசி தமிழிடம் பேசுகையில், "எங்கள் ஊரில் இது போன்ற அருவருப்பான சம்பவம் நடைபெற்றது இதுவே முதல் முறை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

பக்கத்து கிராமத்தில் அருந்ததியர் மக்களுக்கும் பிற சாதி மக்களுக்கும் இடையே அடிக்கடி  பிரச்சனைகள் ஏற்பட்டு பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எங்கள் கிராமத்தில் சாதி பிரச்னை ஏற்பட்டதில்லை," என்கிறார்.

"நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்தது திட்டமிட்டு நடந்ததாக தெரிகிறது. காலையிலிருந்து போலீசார் நடத்திய விசாரணையில் இதுவரைக்கும் யார் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்தது என தகவல் எதுவும் தெரியவில்லை.

போலீசாருடன் இணைந்து ஊர் மக்கள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம். நிச்சயம் போலீஸ் விசாரணையில் தெரிய வரும்.. மலம் கலந்தவர்கள் நிச்சயம் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

இந்த நீர்த்தேக்க தொட்டியில்  பட்டியலின மக்கள் மட்டும்மில்லாமல்  ஊரில் உள்ள  பல தரப்பு மக்களும் தண்ணீர் பயன்படுத்தி வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு நீர்த்தேக்க தொட்டியில் உள்ள தண்ணீரால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது என உறுதியாக கூற முடியாது காரணம் தற்போது இருக்கக்கூடிய காலநிலை காரணமாக குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு இருக்கலாம்," என்றார் பத்மா.

முதல்வருக்கு எம்எல்ஏ கடிதம்

புதுக்கோட்டை குடிநீர்த் தேக்க தொட்டியில் மலம்

இதுகுறித்து எம்எல்ஏ எம்.சின்னதுரையிடம் பேசினோம்.

"நீர்த்தேக்க தொட்டியில் மலம் இருப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்ததையடுத்து உண்மை தன்மை குறித்து ஆராய்வதற்காக நேரில் சென்று பார்த்தபோது அந்த நீர்த்தேக்க தொட்டியில் மலம் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குடிநீர்த் தொட்டியில் இருந்த தண்ணீர் உடனடியாக வெளியேற்றப்பட்டதோடு, அப்பகுதி மக்களுக்கு மாற்று குடிநீர் வழங்கப்பட்டது.

நீர்த்தேக்க தொட்டியில் இருந்த மலம் ஒரே நாளில் போடப்பட்டதாக தெரியவில்லை காரணம் மலம் அதிக அளவு இருப்பதால் பையில் எடுத்து வந்து போட்டு இருக்கலாம் என தெரிய வருகிறது.

கிராம மக்களிடம்  விசாரிக்கும் போது அந்த கிராமத்தில் ஜாதி பிரச்சனை அல்லது குறிப்பிட்டு யாரையும் சந்தேகக்க படும் அளவு இல்லை  என்கின்றனர்.

இருப்பினும் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கழித்தவர் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை செய்ய  திருக்கோரணம் ஆய்வாளர் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது," என்கிறார்.

புதுக்கோட்டை குடிநீர்த் தேக்க தொட்டியில் மலம்

நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்தவர்கள் நாளை விஷம்  கலக்க மாட்டார்களா என்ற அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பாக முதல்வருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார் எம்எல்ஏ சின்னத்துரை.

"கிராம பொதுமக்கள் அந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கேமரா பொருத்த முடியாது என்பதால் மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்படி பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் தொடர்ந்து வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை விசாரணையில் குற்றம் செய்தவர்கள் யார் என்பது உறுதி செய்யப்பட்டால் நிச்சயம் தண்டனை பெற்றுத் தரப்படும். 

தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து இதுபோன்ற இழிவான சம்பவம் தொடராமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்," என்கிறார் எம்.சின்னதுரை.

https://www.bbc.com/tamil/articles/c51pg3zny7zo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதுக்கோட்டையில் தீண்டாமை புகார்: பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்
குடிநீர் தொட்டியில் மலம்

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் மலம் கலந்திருந்த சம்பவம் தொடர்பாக நேரில் விசாரிக்க சென்ற மாவட்ட ஆட்சியரிடம், தங்களை கோவிலுக்கு அனுமதிக்கவில்லை என்று பட்டியலின மக்களில் சிலர் முறையிட்டனர். இதையடுத்து அவர்களை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கோவிலுக்குள் அழைத்து சென்றார்

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி. இவ்வூராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தின் வேங்கை வயல் தெருவில் 50-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். 

 

 

அந்த பகுதி மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வேங்கை வயலில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.

 

இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் ஐந்து பேருக்கு  உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் குடித்த குடிநீரில் ஏதும் பிரச்னை இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

 

அந்த நீர்த்தேக்க தொட்டியை திங்கட்கிழமை ஏறி அப்பகுதி மக்கள் பார்த்தபோது குடிநீரில் மலம் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரைக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர்.

குடிநீர் தொட்டியில் மலம்

அதன்பேரில் எம்எல்ஏ எம்.சின்னதுரை, குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல், அன்னவாசல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு பரிசோதனை செய்தபோது, மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக வெள்ளனூர் போலீசில் புகார் செய்யப்பட்டு ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் நடந்துள்ள சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யார் மீது சந்தேகம்?

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் பிபிசி  தமிழிடம் பேசுகையில்,  "பல ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி  இருந்தோம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் 2016-17ஆம் ஆண்டில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.

 

தொட்டியின் மேலே உள்ள மூடியை திறப்பது பெரியவர்களால் மட்டுமே முடியும், விளையாட்டுத் தனமாக சிறுவர்கள் யாரும் செய்திருக்க வாய்ப்பில்லை. எனவே, திட்டமிட்டு யாரோ சிலர் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம்," என்றார். 

இறையூர் பஞ்சாயத்து தலைவி பத்மா பிபிசி தமிழிடம் பேசுகையில், "எங்கள் ஊரில் இது போன்ற அருவருப்பான சம்பவம் நடைபெற்றது இதுவே முதல் முறை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

 

பக்கத்து கிராமத்தில் அருந்ததியர் மக்களுக்கும் பிற சாதி மக்களுக்கும் இடையே அடிக்கடி  பிரச்னைகள் ஏற்பட்டு பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எங்கள் கிராமத்தில் சாதி பிரச்னை ஏற்பட்டதில்லை," என்கிறார்.

குறிப்பிட்ட நீர்த்தேக்க தொட்டியை  பட்டியலின மக்கள் மட்டும்மில்லாமல்  ஊரில் உள்ள  பல தரப்பு மக்களும்  பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். 

குடிநீர் தொட்டியில் மலம்

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் இன்று, நேரில் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களிடம் குறைகளை  கேட்டறிந்தனர்.

அப்போது, அப்பகுதி மக்கள் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒரு சிலர் அங்குள்ள அய்யனார் கோவிலுக்கு தங்களை அனுமதிக்க வில்லை என்றும், டீ கடையில் இரட்டை குவளை முறை இருப்பதாகவும், குற்றம்சாட்டினர்.

 

பின்னர், மாவட்ட ஆட்சியர் உடனடியாக, பட்டியல் இன மக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபட செய்தார். மேலும், அங்குள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

 

மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டதோடு அப்பகுதியில் உள்ள அடையாளம்  தெரியாத நபர்  மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு வழக்கு பதிவு செய்யவும், போலீசாருக்கு, மாவட்ட ஆட்சியர்  மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டனர்.

https://www.bbc.com/tamil/articles/crg9nlr3r5ro

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதுக்கோட்டை தலித் பகுதி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 27 டிசம்பர் 2022
    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்
குடிநீர் தொட்டியில் மலம்

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் பட்டியலின மக்கள் குடியிருப்பில் உள்ள மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பான வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி ஜனவரி 14ம் தேதி உத்தரவிட்டுள்ளார் தமிழ்நாடு டிஜிபி சி.சைலேந்திரபாபு.

இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் யார் என்பதை போலீசார் அடையாளம் காணவில்லை.

இந்த சம்பவத்துக்குப் பிறகு, இறையூரில் நிலவிய பிற தீண்டாமை முறைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அது தொடர்பாக நடவடிக்கைகளை எடுத்தார்.

இரட்டைக் குவளை முறை நிலவியதாக கண்டறிந்த அவர் அது தொடர்பாக நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, டீக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

 

உள்ளூர் கோயிலில் பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படவில்லை என்று கண்டறிந்த அவர், உடனடியாக பட்டியலின மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். பிறகு அமைதிக் கூட்டங்கள் நடத்தப்பட்டு பட்டியல் சாதியினருடன் பிற சாதியினரும் இணைந்து டிசம்பர் 27 அன்று கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இதில் அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர்  சின்னதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆனால், குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பான வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தாலும், குற்றவாளிகள் யார் என்பதை போலீஸ் கண்டுபிடித்து அறிவிக்காமல் கால தாமதம் ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.

அத்துடன், "குற்றவாளிகளைத் தேடி கைது செய்வதற்காக அமைக்கப்பட்ட காவல்துறையின் தனிப்படை, வன்கொடுமைக்காளான தலித்துகளையே குற்றவாளிகளாக்கும் கொடூரத்தில் ஈடுபட்டுள்ளது" என்று கூறியும், சிபிசிஐடி விசாரணை கோரியும் முதல்வர், அமைச்சர்கள் அந்த ஊருக்கு நேரில் செல்லவேண்டும் என்று வலியுறுத்தியும் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, ஆதவன் தீட்சன்யா, சுகிர்தராணி உள்ளிட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஒப்பமிட்டு முதல்வருக்கு ஒரு விண்ணப்பத்தைத் தயாரித்தனர். அத்துடன் அந்த விண்ணப்பத்தில் மேலும் பலரிடமும் கையெழுத்துத் திரட்டும் பணிகளும் நடந்துவந்தன.

இந்நிலையில்தான், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றும் உத்தரவு வெளியாகியுள்ளது.

இறையூரில் நடந்தது என்ன?

புதுக்கோட்டை அருகே முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணைக்காக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேற்று  இறையூர் பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து, பட்டியல் சாதி மக்களிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது  ஊரில் உள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை நிலவுவதாகவும், இப்பகுதி அய்யனார் கோவிலில் பல தலைமுறைகளாக பட்டியல் சாதியினருக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்று மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தியதில் இரட்டை குவளை முறை நிலவுவது உறுதியானது. தொடர்ந்து அங்குள்ள அய்யனார் கோயிலைத் திறந்து பட்டியலின மக்களை அங்கு வழிபட அழைத்துச் சென்றார் மாவட்ட ஆட்சியர்.

இதனைத் தொடர்ந்து டீக்கடை உரிமையாளர்கள் மற்றும் கோயிலுக்குள் நுழைய எதிர்ப்புத் தெரிவித்த இருவர் உட்பட நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

கோவிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்ட  குற்றச்சாட்டு, இரட்டைக் குவளை முறை குற்றச்சாட்டு ஆகிய இரண்டு விவகாரங்களுக்கு தீர்வு காணும் வகையில், பட்டியல் சாதியினர் உள்ளிட்ட 3 சாதியினர் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது.

மூன்று சாதிகளைச் சேர்ந்த  26 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில்,  இறையூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் பட்டியல் சமூக மக்களையும் பாகுபாடு இன்றி வழிபாடு செய்ய அனுமதிப்பது, குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை போலீசார் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது, தேநீர் கடையில் இரட்டை குவளை முறையைக் களைந்து அனைத்து சமூக மக்களும் சமமாக வாழ்வது என்ற மூன்று முடிவுகள் எட்டப்பட்டன.

ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்

புதுக்கோட்டை இறையூர்

முன்னதாக, வெள்ளனூர் அருகே பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் மலம் கலந்திருந்த சம்பவம் தொடர்பாக நேரில் விசாரிக்க சென்ற மாவட்ட ஆட்சியரிடம், தங்களை கோவிலுக்கு அனுமதிக்கவில்லை என்று பட்டியலின மக்களில் சிலர் முறையிட்டனர்.

இதையடுத்து அவர்களை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கோவிலுக்குள் அழைத்து சென்றார்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி. இவ்வூராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தின் வேங்கை வயல் தெருவில் 50-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். 

அந்த பகுதி மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வேங்கை வயலில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.

இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் ஐந்து பேருக்கு  உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் குடித்த குடிநீரில் ஏதும் பிரச்னை இருக்கலாம் எனத் தெரிவித்தனர்

அந்த நீர்த்தேக்க தொட்டியை திங்கட்கிழமை ஏறி அப்பகுதி மக்கள் பார்த்தபோது குடிநீரில் மலம் கலந்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரைக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர்.

குடிநீர் தொட்டியில் மலம்

அதன்பேரில் எம்எல்ஏ எம்.சின்னதுரை, குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல், அன்னவாசல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு பரிசோதனை செய்தபோது, மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக வெள்ளனூர் போலீசில் புகார் செய்யப்பட்டு ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும், காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் நடந்துள்ள சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யார் மீது சந்தேகம்?

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் பிபிசி  தமிழிடம் பேசுகையில்,  "பல ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி  இருந்தோம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் 2016-17ஆம் ஆண்டில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.

தொட்டியின் மேலே உள்ள மூடியை திறப்பது பெரியவர்களால் மட்டுமே முடியும், விளையாட்டுத் தனமாக சிறுவர்கள் யாரும் செய்திருக்க வாய்ப்பில்லை. எனவே, திட்டமிட்டு யாரோ சிலர் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம்," என்றார். 

இறையூர் பஞ்சாயத்து தலைவி பத்மா பிபிசி தமிழிடம் பேசுகையில், "எங்கள் ஊரில் இது போன்ற அருவருப்பான சம்பவம் நடைபெற்றது இதுவே முதல் முறை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

பக்கத்து கிராமத்தில் அருந்ததியர் மக்களுக்கும் பிற சாதி மக்களுக்கும் இடையே அடிக்கடி  பிரச்னைகள் ஏற்பட்டு பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எங்கள் கிராமத்தில் சாதி பிரச்னை ஏற்பட்டதில்லை," என்கிறார்.

குறிப்பிட்ட நீர்த்தேக்க தொட்டியை  பட்டியலின மக்கள் மட்டுமில்லாமல்  ஊரில் உள்ள  பல தரப்பு மக்களும்  பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். 

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் நேரில் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களிடம் குறைகளை  கேட்டறிந்தனர்.

அப்போது, அப்பகுதி மக்கள் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒரு சிலர் அங்குள்ள அய்யனார் கோவிலுக்கு தங்களை அனுமதிக்க வில்லை என்றும், டீ கடையில் இரட்டை குவளை முறை இருப்பதாகவும், குற்றம்சாட்டினர்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் உடனடியாக, பட்டியல் இன மக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபட செய்தார். மேலும், அங்குள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டதோடு அப்பகுதியில் உள்ள அடையாளம்  தெரியாத நபர்  மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு வழக்கு பதிவு செய்யவும், போலீசாருக்கு, மாவட்ட ஆட்சியர்  மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டனர்.

3 வழக்குகள் பதிவு - அரசு தகவல்

குடிநீர் தொட்டியில் மலம்

புதுக்கோட்டை, கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இந்த விவகாரம் தொடர்பாக மனு தாக்கல் செய்தார்.

அதில், "புதுக்கோட்டை இடையூரில், அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கழிவுநீர் கலக்கப்பட்டது. இந்த தண்ணீரை குடித்ததால் பல குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. 

இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் ஆய்வு செய்த போது அப்பகுதியில் இரட்டைக்குவளை முறை வழக்கத்தில்  இருந்தது தெரியவந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை பல கிராமங்களிலும் இது போன்ற தீண்டாமை கொடுமைகள்  நடைபெற்று வருகின்றன. 

ஆகவே, புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் நடந்து வரும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து, அவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், புதுக்கோட்டை இடையூரில் கழிவுநீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், விஜயகுமார் அமர்வு  முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினார்.

"இரட்டைக்குவளை முறை, கோவிலில் அனுமதிக்காதது, மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் மலத்துடன் சாக்கடை நீர் கலந்தது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இரட்டைக்குவளைமுறை, கோவிலில் அனுமதிக்காதது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல்நிலை நீர்த் தொட்டியில் மலத்துடன் கழிவு நீர் கலந்தது தொடர்பாக சந்தேக நபர்களின் பட்டியல் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது," என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், புதுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் புதுக்கோட்டை மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிப் பிரிவு துணை ஆணையர் ஆகியோர் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

https://www.bbc.com/tamil/articles/crg9nlr3r5ro

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேங்கைவயல்: மலம் மாதிரியை டி.என்.ஏ. பரிசோதனை செய்வது குற்றவாளியை அடையாளம் காட்டுமா?

வன்கொடுமை, வேங்கைவயல், தமிழ்நாடு
 
படக்குறிப்பு,

வேங்கைவயல் நீர்தேக்கத் தொட்டி

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,திவ்யா ஜெயராஜ்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 29 ஏப்ரல் 2023, 02:12 GMT

புதுகோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் குடிநீர் தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்டிருந்த சம்பவம் தேசியளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது நிச்சயமாக திட்டமிட்டு செய்யப்பட்ட சம்பவம்தான் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர். இது தொடர்பான வழக்கை முதலில் தனிப்படை காவலர்கள் விசாரித்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பையே காவல்துறையினர் குற்றவாளிகளாக நடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கடந்த ஜனவரி 14ஆம் தேதி, இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார் டிஜிபி சைலேந்திரபாபு.

இந்த நிலையில் குடிநீர் தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட மலம் மாதிரியை அடிப்படையாக வைத்து, வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்ட 11பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனவும், இதனால் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண முடியும் எனவும் கூறி நீதிமன்றத்தை நாடியது சிபிசிஐடி. இதற்கு நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், தற்போது டிஎன்ஏ பரிசோதனையை நோக்கி வழக்கு நகர்ந்திருக்கிறது.

ஆனால் மலத்தை கொண்டு டிஎன்ஏ பரிசோதனை நடத்துவது சரியான தீர்வாக இருக்காது என்றும், இந்த விசாரணை கண் துடைப்பாக மட்டுமே நடைபெற்று வருகிறது என்றும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் இது தொடர்பாக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறார்.

 

உண்மையில் மலம் மாதிரிகளை கொண்டு டிஎன்ஏ பரிசோதனை நடத்துவது பலன் அளிக்குமா? வேங்கைவயல் தொடர்பான வழக்கு விசாரணையில், சமூக ஆர்வலர்கள் குறிப்பிடும் சிக்கல் என்ன? இதுவரை இந்த வழக்கில் என்ன நடந்தது?

வேங்கைவயலில் என்ன நடந்தது?

வன்கொடுமை, வேங்கைவயல், தமிழ்நாடு
 
படக்குறிப்பு,

மலம் கலக்கப்பட்ட தண்ணீர்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி. இவ்வூராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தின் வேங்கை வயல் தெருவில் 50-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர்.

அந்த பகுதி மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வேங்கை வயலில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் ஐந்து பேருக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் அடுத்தடுத்து உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் குடித்த குடிநீரில் ஏதும் பிரச்னை இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அந்த நீர்த்தேக்க தொட்டியை அப்பகுதி மக்கள் ஏறி பார்த்தபோது குடிநீரில் மலம் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரைக்கும் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் எம்எல்ஏ எம்.சின்னதுரை, குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல், அன்னவாசல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

ஊர் பஞ்சாயத்து தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

பின் சிபிசிஐடிக்கு கைமாறிய வழக்கு தற்போது டிஎன்ஏ பரிசோதனையை நோக்கி நகர்ந்திருக்கிறது. முதலில் 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்ட நிலையில், தற்போது வேங்கைவயலைச் சேர்ந்த மேலும் 119 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் எழும் குற்றச்சாட்டுகள் என்ன?

வேங்கைவயல் சம்பவத்தில், ஆரம்பம் முதலே விசாரணை சரியான வழிகளில் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உள்ளூர் மக்களின் ஆதங்கமாக இருக்கிறது. இது தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

இது குறித்து அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில்,

“கடந்த 26 டிசம்பர் 2022 அன்று குடிநீர் தொட்டியில் எடுக்கப்பட்ட பாலிதீன் கவரில் இருந்த மலத்தை தூய்மை பணியாளர் ஒருவர் காவேரி நகர் செல்லும் வழியில் ஒத்தக்கடை என்கிற இடத்தில் சாலை ஓரம் உள்ள குப்பைமேட்டில் வீசிவிட்டு சென்று இருக்கிறார்.இதனை தொடர்ந்து 30 டிசம்பர் 2022 அன்று இரவு 8.45 மணி அளவில் தலித் குடியிருப்புக்கு வந்த போலீசார் அந்த மலத்தை ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது என்று விசாரித்து அதன் அடிப்படையில் அந்த குப்பை கிடங்கில் தேடி மலத்தை எடுத்து சென்றிருக்கின்றனர்.

இதைத்தான் ஆய்வு செய்ததாக சொல்லப்படுகிறது.மலத்தை யார் கொட்டி வைத்தார்கள் என்பது பிரச்சனையா? யாருடைய மலம் என்பது பிரச்சனையா? சரி மலத்தை டி.என்.ஏ. பரிசோதனை மூலம் யாருடையது என்று கண்டு பிடிக்க முடியுமா? அது துல்லியமானதா? பல்வேறு நிபுணர்கள் இது சாத்தியம் அல்லாத ஒன்று என்கின்றனர்” என்று பதிவு செய்துள்ளார்.

மேலும், “டி.என்.ஏ.டெஸ்ட் எடுக்க வேண்டிய பட்டியலில் 11 பேரில் 9 பேர் தலித்துகள். உங்கள் விசாரணை பரிசோதனை எல்லாம் எங்கள் பக்கமே இருக்கிறதே? நாங்கள் யார் குற்றவாளி என்று கூறி விட்டோம் ஏன் அங்கு விசாரணை செய்யப்படவில்லை என்று தலித்துகள் கேட்டதற்கு உரிய பதில் இல்லை. யாருடைய மலம் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்றால் எல்லோரையும் தானே விசாரிக்க வேண்டும், அதைவிட்டு விட்டு எங்களை மட்டும் ஏன் குறி வைக்கவேண்டும்? இதன் உள்நோக்கம் என்ன?

ஏற்கனவே விசாரிக்கப்பட்ட போலீசார் பாதிக்கப்பட்டவர்களைத்தான் குற்றவாளிகள் என்று சித்ரவதை செய்தனர். அதற்கு ஆதரவாக இருப்பது போல தற்போது இந்த டி.என்.ஏ. பரிசோதனையும் உள்ளது.

இதனை சுட்டி காட்டி கடந்த 24 ஏப்ரல் 2023 அன்று உயர் நீதி மன்றத்தில் தலித்துகள் வழக்கினை தாக்கல் செய்துள்ளனர். எங்கே தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று அஞ்சி தந்திரமாக நேற்று மேலும் 120 பேரினை டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்போகிறோம் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது.இதை ஏன் முதலில் செய்யவில்லை.” என்றும் அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

வன்கொடுமை, வேங்கைவயல், தமிழ்நாடு

பட மூலாதாரம்,FACEBOOK/EVIDENCE KATHIR

 
படக்குறிப்பு,

எவிடென்ஸ் கதிர்

அவரின் குற்றச்சாட்டுகள் குறித்து மேலும் தெரிந்து கொள்வதற்காக எவிடென்ஸ் கதிரை தொடர்புகொண்டது பிபிசி தமிழ்.

அப்போது பேசிய அவர், “இந்த வழக்கு ஆரம்பத்தில் இருந்தே தவறான வழியில் கையாளப்பட்டு வருகிறது. எடுக்கப்பட்ட மலத்தை அன்றே குப்பையில் போட்டுவிட்டதாக சொல்கிறார்கள். நான்கு நாட்களுக்கு பின்னர் குப்பையில் போடப்பட்ட மலத்தை தேடி எடுத்து தற்போது டிஎன்ஏ பரிசோதனை என்கிறார்கள். இதில் மலத்தின் மூலம் செய்யப்படும் டிஎன்ஏ பரிசோதனை பெரிதாக பயனளிக்காது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.

அதேபோல் முன்னதாக ஓய்வு பெற்ற நீதிபதி இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அடுத்த மாதம் 6ஆம் தேதிதான் அந்த விசாரணையே துவங்கவிருக்கிறது. கிட்டதட்ட 37நாட்கள் தாமதமாக விசாரணை துவங்குகிறது.

இதுவரை சிபிசிஐடி மேற்கொள்ளும் விசாரணை சரியாக நடத்தப்படவில்லை. இப்போது நீதிபதியிடம் நாங்கள் சரியான முறையில் விசாரணை செய்திருக்கிறோம் என்று காட்டிக் கொள்வதற்காகவே இவர்கள் தற்போது டிஎன்ஏ பரிசோதனையில் இறங்கியிருக்கிறார்கள். அதுவும் பாதிக்கப்பட்ட மக்களிடமே இவர்கள் மீண்டும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது முழுக்கமுழுக்க அதிகாரிகளுக்குள் நடைபெறும் ’ஈகோ’ பிரச்னை” என்று அவர் விவரிக்கிறார் .

“இந்த வழக்கு இதுவரை ஒரு சாதாரண கிரைம் சம்பவமாகவே கையாளப்பட்டு வருகிறது. ஆனால் இதில் இருக்கும் சாதிய பிரச்னைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும். வழக்கின் பின்னனி என்ன என்பதை தெளிவாக விசாரிக்காமல், இதை தலித்துக்கள்தான் செய்திருப்பார்கள் என்ற கண்ணோட்டத்திலேயே விசாரணை நடைபெற்று வருகிறது” என்றும் அவர் குறிப்பிடுகிறார் .

மலம் மாதிரிகளில் நடத்தப்படும் டிஎன்ஏ பரிசோதனை பலனளிக்குமா?

”மலம் மாதிரிகளை கொண்டு நடத்தப்படும் டிஎன்ஏ பரிசோதனைகள் முற்றிலும் பலனளிக்காது என்றும் சொல்ல முடியாது, முழுமையான பலன் அளிக்கும் என்றும் சொல்ல முடியாது. இது மிகவும் சிக்கலான ஒன்று” என கூறுகிறார் ஆராய்ச்சியாளர் நமச்சிவாயம் கணேஷ் பாண்டியன்.

இவர் ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகத்தில் முதன்மை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ” நம்முடைய டிஎன்ஏ மற்றும் டிஎன்ஏ பரிசோதனை குறித்தும் அடிப்படையான சில விஷயங்களை நாம் தெரிந்துகொண்டால், இதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து நமக்கு விளங்கும்.

டிஎன்ஏ அல்லது deoxyribonucleic acid என்பது உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் இருக்கிறது. ஒவ்வொரு உயிரினத்திற்கும் தனித்துவமான டிஎன்ஏ அமைப்பு இருக்கிறது. அதேசமயம் உலகில் உள்ள மனிதர்கள் அனைவரின் டிஎன்ஏ-வும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

இதில் டிஎன்ஏ- வின் Code letters ஆக கருதப்படும் ATGC என்ற எழுத்துக்கள்தான் அடிப்படையானவை(Base pair). இது போல மற்ற எழுத்துக்களும் காணப்படும். இதனை sequencing என்று கூறுவோம். இந்த sequence-ல் காணப்படும் நுண்ணிய மாறுபாடுகளே ஒருவரில் இருந்து மற்றொருவரை வேறுபடுத்தி காட்டுகிறது. ஒவ்வொருவரின் உடலிலும் கிட்டதட்ட 3 பில்லியன் டிஎன்ஏ-கள் உள்ளன.

வன்கொடுமை, வேங்கைவயல், தமிழ்நாடு

பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY

இப்போது அறிவியல் ரீதியாக பார்க்கும்போது மலத்தை வைத்து டிஎன்ஏ பரிசோதனை மேற்கொண்டு, அதன்மூலம் குறிப்பிட்ட நபர்களை அடையாளம் காண முயன்றால், அதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகமிக குறைவு என்பதுதான் உண்மை” என்கிறார் ஆராய்ச்சியாளர் நமச்சிவாயம் கணேஷ் பாண்டியன்.

அவர் தொடர்ந்து பேசுகையில், “நம் உடலில் இருக்கும் தலைமுடி, நகம், எச்சில், ரத்தம் போன்ற பாகங்களில் இருந்து டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கும், மலத்தில் இருந்து பரிசோதனை மேற்கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

மலம் என்பது நம் உடலினுடைய பாகம் அல்ல, அது நம் உடலில் இருந்து வெளியேறும் கழிவு. அதில் 75சதவீதம் நீரும், 25 சதவீதம் திடக்கழிவாகவும் இருக்கும். இந்த கழிவில் 30 சதவீதம் பாக்டீரியாக்களும் இருக்கும். இந்த பாக்டீரியாக்கள் என்பது நாம் சாப்பிட்ட ஏதாவது ஒரு உணவுகளிலிருந்து கூட வெளியேறியிருக்கலாம். மற்றும் மலத்தில் இறந்து போன செல்களும் காணப்படும்.

எனவே இதனை அடிப்படையாக வைத்து, டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளும்போது அதில் தெளிவான முடிவுகள் கிடைக்காது. உதாரணமாக ஒருவரின் தலைமுடியை கொண்டு நாம் பரிசோதனை நடத்தும்போது அதில் குறிப்பிட்ட நபருடைய டிஎன்ஏ-தான் இது என்பதை நாம் மிக தெளிவாக சொல்ல முடியும். ஆனால் மலத்தில் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. 25 - 50 சதவீதம் வரை இது இவராக இருக்கலாம் என்று மட்டுமே நம்மால் யூகிக்க முடியும். இது நிச்சயமாக இவர்தான் என்ற முடிவுக்கு நம்மால் வர முடியாது.

இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு திருடனை நேரில் பார்த்து நாம் அடையாளம் காண்பதற்கும், அங்க அடையாளங்களை கொண்டு ஒரு உருவத்தை வரைந்து இப்படிதான் இவர் இருப்பார் என்று கூறுவதற்கும் உள்ள வித்தியாசத்தை போன்றதுதான் இது” என்று விவரிக்கிறார் ஆராய்ச்சியாளர்.

”அதேபோல் எடுக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து எத்தனை நாட்களுக்குள் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்கிறோம் என்பதும் முக்கியம். சில வழக்குகளில் டிஎன்ஏ பரிசோதனைகள் நீண்ட நாட்களுக்கு பின் மேற்கொள்ளப்படும். அத்தகைய சந்தர்ப்பங்களில் அந்த குறிப்பிட்ட மாதிரிகளில் இருக்கும் டிஎன்ஏ எந்தளவு திறன் வாய்ந்ததாக இருக்கும் என்று கூற முடியாது.

ஆனால் வேங்கைவயல் போன்ற விவகாரங்களில், வேறு வழியே இல்லாதச் சூழலில் இத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள் என்றால் இதனை நாம் குறை கூறவும் முடியாது” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/czkxl55582jo

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேங்கைவயல்: 2 ஆண்டுகளாக தீராத மர்மமும் எழுப்பப்படும் சந்தேகங்களும் - பிபிசி கள ஆய்வு

வேங்கைவயல், பட்டியலினத்தோர், குடிநீர் தொட்டியில் மலம்
படக்குறிப்பு, வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் பிரிவினர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த நிகழ்வு நடந்து இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்தது. கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் பிரிவினர் பயன்படுத்திய குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட நிகழ்வு நடந்து இரண்டாண்டுகள் கடந்துவிட்டன. குற்றவாளிகள் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. வேங்கைவயல் கிராமம் இப்போது எப்படியிருக்கிறது?

திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில், இடதுபுறம் உள்ளடங்கியிருக்கிறது முத்துக்காடு ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் கிராமம். 2022ஆம் ஆண்டின் இறுதியில் இந்தக் கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்வு, தமிழ்நாட்டையே உலுக்கியது.

வேங்கைவயலில் உள்ள பட்டியல் பிரிவினர் பயன்படுத்திய மேல்நிலை குடிநீர் தொட்டியில், மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் வெளியில் வந்தபோது ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதிர்ந்துபோனது.

இந்தச் சம்பவம் நடந்து இரண்டாண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும் இதனைச் செய்த குற்றவாளிகள் இன்னும் கைதுசெய்யப்படவில்லை.

அந்த ஊரை வந்தடையும் பாதைகள் அனைத்தும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், வெளியூர் ஆட்கள் விசாரணைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். பத்திரிகையாளர்கள் உள்ளே சென்று செய்திகளை சேகரிக்க முழுமையான தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

"இப்படி ஒரு மோசமான நிகழ்வு நடந்தது ஒருபுறமிருக்க, அதைத் தொடர்ந்து நீடிக்கும் காவல்துறையின் கண்காணிப்பு எங்கள் ஊரைத் தனிமைப்படுத்திவிட்டது. இங்கே பெண் கொடுக்கக் கூட யாரும் தயங்குகிறார்கள்" என்கிறார் இந்த ஊரைச் சேர்ந்த முருகன்.

வேங்கைவயல் சம்பவம் நடந்த இரண்டாம் ஆண்டு தினமான டிசம்பர் 26ஆம் தேதி, வேங்கைவயலுக்குச் செல்லும் பாதைகள் அனைத்தும் கடுமையான பாதுகாப்பிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தன. இந்த சம்பவம் நடந்து சில வாரங்களிலிருந்தே இந்தக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்றாலும், இப்போது பல கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பே வெளியாட்கள் நிறுத்தி திருப்பி அனுப்பட்டனர்.

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்கு இப்போதும் ஒரு நெருக்கடியாக இருக்கும் இந்த விவகாரத்தில் இதுவரை என்ன நடந்திருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

வேங்கைவயல், பட்டியலினத்தோர், குடிநீர் தொட்டியில் மலம்
படக்குறிப்பு, வேங்கை வயலை அடையும் பாதைகள் அனைத்தும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது

குடிநீர் தொட்டியில் மலம்

முத்துக்காடு ஊராட்சியில் வேங்கைவயல் என்பது பட்டியல் பிரிவினர் மட்டும் வசிக்கும் ஒரு மிகச் சிறிய பகுதி. 2022ஆம் ஆண்டின் டிசம்பர் மாத இறுதியில்தான் இந்த விபரீதம் நடந்தது. டிசம்பர் 21ஆம் தேதிவாக்கில் இந்த ஊரில் வசிக்கும் சதாசிவம் என்பவரின் பேரன் கோமித்திரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

"உடல்நிலை சரியில்லாமல் போனவுடன் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கிருந்த மருத்துவர்கள் குடிநீரில்தான் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று சொன்னார்கள். வீட்டில் பிடித்து வைத்திருந்த தண்ணீரில் ஏதாவது பிரச்னையாக இருக்கும் என நினைத்தோம். இதற்குப் பிறகு எங்கள் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அடுத்தடுத்து உடல்நலக் குறைவு ஏற்பட்டது."

"இதற்குப் பிறகு டிசம்பர் 23, 24, 25ஆம் தேதிகளில் தண்ணீர் வரவில்லை. தண்ணீரை மேல்நிலைத் தொட்டியில் ஏற்றுவதற்கு மின்சாரம் இல்லை என்றார்கள். டிசம்பர் 26ஆம் தேதி மீண்டும் தண்ணீர் வந்தது. அந்தத் தண்ணீர் துர்நாற்றத்துடன் வந்தது. இதையடுத்து தொட்டியின் மீது ஏறிப் பார்த்தபோது, அதில் மனிதக் கழிவு இருந்தது. இதற்குப் பிறகு கவுன்சிலருக்குச் சொன்னோம். ஊர்த் தலைவரின் கணவர் முத்தையா வெகுதாமதமாக அங்கு வந்து சேர்ந்தார். பிறகு வெள்ளனூர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தோம். அங்கிருந்து கார்த்தி என்ற காவலர் ஏறிப் பார்த்தார்."

"தண்ணீரைத் திறந்துவிடக் கூடிய காசி விஸ்வநாதன் என்ற நபரும் முத்தையாவும் எங்களை அழைக்காமல் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதற்குப் பிறகு அரசு மற்றும் காவல்துறையைச் சேர்ந்த அனைவரும் அங்கே வந்துவிட்டார்கள். தொட்டியிலிருந்து மலத்தை எடுத்த பிறகு, அதிலிருந்த தண்ணீரைத் திறந்துவிட முடிவுசெய்தார்கள். நான், சதாசிவம் போன்றவர்கள் 'அதுதான் ஆதாரம், திறந்து வெளியேற்றிவிட வேண்டாம்' என்று சொன்னோம். ஆனால், முத்தையா பேச்சைக் கேட்டு அவர்கள் தண்ணீரை திறந்துவிட்டார்கள். இதற்குப் பிறகு பல முறை டேங்க் சுத்தப்படுத்தப்பட்டது. பழைய குழாய்களை மாற்றிவிட்டு புதிய குழாய்கள் போடப்பட்டன.

இதற்கு அடுத்த நாள் அதாவது டிசம்பர் 27ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு, எஸ்.பி. வந்திதா பாண்டே, டிஎஸ்பி ராகவி ஆகியோர் வந்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் எங்களிடம் விசாரணை நடத்தினார்" என நினைவுகூர்கிறார் வேங்கைவயலைச் சேர்ந்த முருகன்.

வேங்கைவயல், பட்டியலினத்தோர், குடிநீர் தொட்டியில் மலம்
படக்குறிப்பு, வேங்கைவயலைச் சேர்ந்த முருகன்

இறையூர் - வேங்கைவயல் பகுதியில் இரண்டு மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் இருந்தன. ஒன்று 30,000 லிட்டர் கொள்ளளவுள்ள பெரிய தொட்டி. அதில் இருந்தே அனைவருக்கும் குடிநீர் வழங்கப்பட்டுவந்தது.

சர்ச்சைக்குள்ளான மற்றொரு தொட்டி, காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் வெள்ளோட்டத்திற்காகக் கட்டப்பட்டது. வெள்ளோட்டம் முடிந்த பிறகு அந்தத் தொட்டி பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. சில நாட்களில் வேங்கைவயல் பகுதிக்கென தனியாக ஆழ்துளைக் கிணறு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டதால், சம்பவம் நடப்பதற்கு 9 மாதங்களுக்கு முன்பாக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, சிறிய தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டது. அதிலிருந்து வேங்கைவயல் பகுதிக்கு மட்டும் குடிநீர் வழங்கப்பட்டுவந்தது. அந்தக் குடிநீர் தொட்டியில்தான் மலம் கலக்கப்பட்டது.

"எல்லோருக்கும் தண்ணீர் விநியோகிக்கப் பயன்படும் பெரிய தொட்டியிலிருந்தே எங்கள் பகுதிக்கும் தண்ணீர் வழங்கப்படுவது தொடர்ந்திருந்தால், இதுபோல யாராவது செய்திருப்பார்களா?" எனக் கேள்வியெழுப்புகிறார் வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த சதாசிவம்.

"2 ஆண்டுகளாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை"

விவகாரம் பெரிதான நிலையில், டி.எஸ்.பி. ரமேஷ் கண்ணா தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை துவங்கப்பட்டது. தொட்டியில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டன.

2023ஆம் ஆண்டு ஜனவரியில் வழக்கு குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.பி.சி.ஐ.டி) மாற்றப்பட்டது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையிலான 35 பேர் கொண்ட குழு விசாரிக்க ஆரம்பித்தது. இந்தக் குழு பலரிடம் டிஎன்ஏ பரிசோதனைகளை மேற்கொண்டது.

இதற்கு நடுவில் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது. 2023 செப்டம்பர் மாதத்தில் அந்த ஆணையம் தனது இடைக்கால அறிக்கையை அளித்தது.

இந்த நிலையில், வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த பால்பாண்டி மாற்றப்பட்டு, புதிய விசாரணை அதிகாரியாக தஞ்சாவூர் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி. கல்பனா தத் நியமிக்கப்பட்டார்.

இதுவரை மொத்தமாக 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைகளும் ஐந்து பேரிடம் குரல் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. இருந்த போதும் இந்த வழக்கில் யாரும் கைதுசெய்யப்படவில்லை.

"இரண்டாண்டுகளாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆரம்பத்திலிருந்தே இந்த விவகாரத்தில் எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களையே குற்றவாளியாக்க முயற்சிக்கிறார்கள். ஆரம்பத்தில் எங்கள் பகுதியைச் சேர்ந்த பிரபாகர் என்பவரை குற்றவாளியாக்க முடிவுசெய்தார்கள். அதற்குப் பிறகு காவலராக இருக்கும் முரளி என்பவரை குற்றவாளியாக்க முயற்சிக்கிறார்கள். இதுபோலச் செய்துவிட்டு, அதே தண்ணீரைக் குடிக்க யாராவது முன்வருவார்களா?" எனக் கேள்வியெழுப்புகிறார் முருகன்.

வேங்கைவயல், பட்டியலினத்தோர், குடிநீர் தொட்டியில் மலம்
படக்குறிப்பு, வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த சதாசிவம்

சம்பவம் நடந்து இரண்டாண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும் வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் விசாரணைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் தற்போதுவரை உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை.

"வெளியிலிருந்து வருபவர்கள் உள்ளே சென்று புதிதாக பிரச்னைகள் எதையும் ஏற்படுத்திவிடாமல் இருப்பதற்காகத்தான் வெளியாட்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை" என்கிறது காவல்துறை.

குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது ஒருபுறமிருக்க காவல்துறையின் கெடுபிடி காரணமாக, தங்கள் நிம்மதியே போய்விட்டது என்கிறார்கள் வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

"இரண்டு ஆண்டுகளாக நிம்மதியே இல்லை. எங்கள் பசங்களுக்கு யாரும் பெண் தருவதில்லை. வேங்கைவயல் என்றாலே தயங்குகிறார்கள். சொந்த பந்தங்கள் நிம்மதியாக வர முடியவில்லை. யார் மரணத்திற்காவது வாகனத்தில் சென்றால் மறிக்கிறார்கள். மலத்தைப் போட்டவன் மருந்தைப் போட்டிருந்தால் நிம்மதியாக செத்துப் போயிருக்கலாம் என்ற மனநிலை வந்துவிட்டது. எத்தனை ஆண்டுகள் போனாலும் டிசம்பர் 26ஆம் தேதி வந்தால், இனி இந்தச் சம்பவம்தானே நினைவுக்கு வரும்?" என்கிறார் முருகன்.

'இதற்கு ஒரு முற்றுப்புள்ளியை அரசு வைக்க வேண்டும்'

மாவட்ட நிர்வாகத்திடம் இது குறித்துக் கேட்ட போது, "இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டிய பணிகள் முற்றிலும் முடிவடைந்துவிட்டன. தற்போது விவகாரம் காவல்துறையின் வசம் இருக்கிறது. வேறு ஏதும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே, கிராமத்தோடு சம்பந்தப்படாத நபர்கள் அங்கே அனுமதிக்கப்படுவதில்லை" என்று தெரிவித்தனர்.

"இதைவிட மோசமான சம்பவம் என்ன நடந்துவிடப் போகிறது? இப்போது இவ்வளவு காவல்துறையை குவிக்கிறார்களே. இன்றுதான் குற்றவாளியை பிடிக்கப் போகிறார்களா? இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்கக்கூடாது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளியை அரசு வைக்க வேண்டும்" என்கிறார் சதாசிவம்.

இந்த விவகாரத்தை விசாரித்து வரும் தஞ்சாவூரில் உள்ள சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா தத்தின் அலுவலகம், விசாரணை தொடர்பான எந்தத் தகவலையும் தர விரும்பவில்லை. "இது ரொம்பவும் சென்சிடிவான விவகாரம். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது" என்பதோடு முடித்துக்கொண்டனர்.

வேங்கை வயல் மக்களைப் பொருத்தவரை இந்த ஊரில் உள்ள மற்றொரு சாதியினரே இந்தச் செயலைச் செய்திருக்க வேண்டும் எனக் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், அந்தத் தரப்பிலிருந்து இது பற்றிப் பேசுவதற்கு யாரும் முன்வரவில்லை. ஊர்த்தலைவரின் கணவர் முத்தையாவிடம் கேட்டபோது, "காவல்துறை விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இது குறித்து எதுவும் பேச நாங்கள் விரும்பவில்லை" என்று மட்டும் சொன்னார்.

வேங்கைவயல், பட்டியலினத்தோர், குடிநீர் தொட்டியில் மலம்
படக்குறிப்பு, கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் பிரிவைச் சேர்ந்த விடுதலைக் குமரன்

இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதல் போராட்டங்களை நடத்தியதோடு, தொடர்ந்து கவனித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் பிரிவைச் சேர்ந்த விடுதலைக் குமரன், இது ஒரு நாளில் நடந்திருக்கக் கூடிய சம்பவமல்ல என்கிறார்.

"இது ஒரே ஒரு நபர் செய்த காரியமாகத் தெரியவில்லை. ஒரு நாளில் இது நடக்கவில்லை. பல நாட்கள் நடந்திருகிறது. நீண்ட விசாரணைகள் நடந்த பிறகும் வழக்கில் முன்னேற்றமில்லை. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல்தான் காலதாமதமாகிறதா என்ற கேள்வி இருக்கிறது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, வெளியில் சொல்லப்படவில்லையோ என்ற சந்தேகமும் இருக்கிறது" என்கிறார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குடிநீர் தொட்டியில் மலம்... 2 Years-க்குப் பின் வேங்கைவயல் நிலை என்ன? | Vengaivayal Situation

Vengaivayal Issue: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயலில் பட்டியலினத்தோர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த நிகழ்வு நடந்து இரண்டாண்டுகள் கடந்துவிட்டன. குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், எப்படியிருக்கிறது வேங்கை வயல்?

 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேங்கைவயல்… ஒரு வழியாய் அவிழ்ந்த முடிச்சு! அந்த மூவரில் ஒருவர் போலீஸ்: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.