Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கார் மயக்கம் - சுப. சோமசுந்தரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                                   கார் மயக்கம்

                                                                                -சுப.சோமசுந்தரம்
 

களவியலிலும் கற்பியலிலும் பிரிவாற்றாமை எனும் நோய் தரும் வலி அக இலக்கியங்கள் முழுவதும் விரவிக் கிடப்பது. குறிப்பாக இலக்கியங்களில் அந்நோய் பெண்ணையே தாக்குவதாய் உணர்கிறோம். நிதர்சனமும் அவ்வாறே இருக்கலாம். அது ஆணாதிக்க சிந்தனையின் விளைவு என எளிதாய்ப் புறந்தள்ளுவதற்கில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலியல் வேறுபாட்டைப் போல் உளவியல் வேறுபாடும் உண்டே! பொருளாதாரம், பாதுகாப்பு முதலியவை குறித்து ஆணுக்குப் பொறுப்புணர்வு அதிகமாகவும் பெண்ணுக்கு மென்மையான உள்ளுணர்வுகள் அதிகமாகவும் அமைந்தது இயற்கையே. எனவே நாட்டிற்கும் வீட்டிற்கும் தனது பொறுப்புணர்வு காரணமாக அவன் அவளை அவ்வப்போது பிரிந்ததும், அவள் அவனது பிரிவினால் வருந்தி உழன்றதும் உலகோர்க்குப் பேசுபொருளாகவும் பாவலர்க்குப் பாடுபொருளாகவும் அமைந்ததில் யாதொரு வியப்புமில்லை.
 

திணையின்பாற்பட்டு பிரிவாற்றாமை வகைப்படுத்தப்படலாம். இக்கட்டுரையில் நாம் எடுத்தாள எண்ணுவது முல்லைத்திணை நவிலும் பிரிவாற்றாமையாம். முல்லைத் திணையில் முதற் பொருளில் கார்காலமும், உரிப்பொருளாக (ஆற்றி) இருத்தலும் இருத்தல் நிமித்தமும் அமைந்த பின்னணியில் முல்லை நிலத்தின் பிரிவாற்றாமையும் அமையக் காணலாம். கார்காலத்திற்குள் மீண்டு வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் கார்காலத்திலும் திரும்பாததால் தலைவி பெருந்துயருற்று ஆற்றி இருத்தலும் அது தொடர்பானவையும் 'இருத்தலும் இருத்தல் நிமித்தமும்' என்று குறிக்கப்பெற்றன.
 

விலங்கினங்கள் தம் இணைகளைத் தேடும் காலம் குறிப்பாகக் கார்காலம் என்பது சான்றோர் மட்டுமின்றி இயற்கையறிவு பெற்ற பாமரரும் அறிந்ததே. சமூக விலங்கான மனிதன் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன! ஏனைய விலங்கினங்களுக்கு இதனை வெறும் உடலியல் சார்ந்த ஒன்றாகக் கொள்ளுவதும், தனக்கு மட்டும் 'உளவியலும் சார்ந்த ஒன்றாக்கும்!' எனும் மானிடக் கற்பனையும் மனிதனுக்கான உரிமை, பெருமை, இன்பம் அனைத்தும். தமிழ் கூறும் நல்லுலகத்தைப் பொறுத்தமட்டில் இப்பெருமையையும் இன்பத்தையும் இலக்கியங்களில் வலை வீசித் தேட வேண்டியதில்லை. முன்னர் கூறியது போல் அக இலக்கியங்கள் முழுவதும் காணக் கிடைப்பது. தமிழ் இலக்கிய உலகத்தின் ஆழமும் அகலமும் தமிழுக்கான சிறப்பு. எனவே ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தொட்டுச் செல்வதே உலகளவைக் காட்டும் கையளவுக் கட்டுரையாய் அமையும். இக்கட்டுரையின் நோக்கமும் அதுவே.
 

கருதுபொருள் சிறு சிறு தலைப்புகளாய் மனத்திரையில் ஓடுகிறது. சிறுவயதில் கட்டுரைகள் எழுதிப் பழகிய பள்ளி நாட்களின் மலரும் நினைவுகளோ என்னவோ!

கார் வந்தது காதலன் வரவில்லை :
           கார்காலம் வந்தமைக்குக் கட்டியம் கூறுகிறது முல்லைப்பாட்டின் இறுதியில் அமைந்த இரு வெண்பாக்களில் ஒன்று.
"...................துன்னார் முனையுள்
அடல்முகந்த தானை அவர்வாரா முன்னம்
கடல்முகந்து வந்தன்று கார்".
பொருள்: செறுகளத்தில் (துன்னார் - பகைவர்; துன்னார் முனை - போர் முனை) பகைவரின் அழிவினை முகந்த சேனை (அடல் - அழிவு; தானை - சேனை) திரும்பி வரும் முன் கடலினை முகந்து வந்தது கார்மேகம்.
 

தலைவன் பிரிந்து செல்வது போர் மேற்கொண்டு அல்லது பொருள் தேடக் கடல் கடந்தும் வாணிகம் செய்யும் பொருட்டு என அமைவது இயல்பு. நாம் முன்னம் கண்ட முல்லைப்பாட்டு சுட்டும் தலைவி போர்க்களம் சென்ற தலைவனால் பிரிவுத் துயரம் கொண்டாள். இப்போது நாம் காணப்போகும் குறுந்தொகைத் தலைவி இரண்டாவது ரகம். வேனிற்காலத்தில் பிரியும் போது கார்காலத்திற்குள் மீண்டு விடுவதாய் வாக்களித்த தலைவன் திரும்புவதற்குள் கார் சூழ்ந்து கலக்கமுற்றாள் தலைவி. மழைக்காலம் தொடங்கியதும் முல்லைக்கொடியில் மொட்டுகள் அரும்பின. அம்மொட்டுகளை ஒளி பொருந்திய முத்துப் போன்ற பற்களாகக் கொண்டு கார்காலமே தனது துயர நிலை கண்டு நகையாடுமே என்று தோழியிடம் புலம்புகிறாள் தலைவி.
"இளமை பாரார் வளம்நசைஇச் சென்றோர்
இவணும் வாரார் எவண ரோஎனப்
பெயல்புறம் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை இலங்குஎயிறு ஆக
நகுமே தோழி நறுந்தண் காரே"
---------- குறுந்தொகை 126.
பொருள்: இளமைப் பருவம் வீணாவதையும் அவர் கருத்தில் கொள்ளவில்லை. பொருள் வளம் விரும்பிச் (நசைஇ) சென்றவர் இங்கும் (இவணும்) வரவில்லை. எங்கு இருக்கிறாரோ (எவணரோ)? மழை (பெயல்) முல்லை நிலமெங்கும் (புறம்) முல்லைப் பூங்கொடியில் கொத்துக் கொத்தாக (தொகு) அளித்த அரும்புகளை (முகை) ஒளிரும் (இலங்கு) பற்களாகக் (எயிறு) கொண்டு நறுமணமும் குளிர்ச்சியும் பொருந்திய கார்காலம் (நறுந்தண் கார்) நகையாடுமே தோழி! ("எனது நிலை கண்டு நகையாடுமே!" எனக் கொள்க).
 

தலைவன் வாராத காலம் நீண்டு கொண்டிருக்க மேலும் மேலும் துயர் உருகிறாள். "நான் உயிர் பிழைக்க மாட்டேனோ!" என்று தோழியிடம் மறுகுகிறாள்.
"மழைவிளை யாடும் குன்றுசேர் சிறுகுடிக்
கறவை கன்றுவயின் படரப் புறவிற்
பாசிலை முல்லை ஆசுஇல் வான்பூச்
செவ்வான் செவ்வி கொண்டன்று
உய்யேன் போல்வல் தோழி யானே"
------ (குறுந்தொகை 108)
பொருள்: மழை மேகம் விளையாடும் குன்று அமைந்த தலைவியின் சிற்றூரில் (சிறுகுடி) கறவைப் பசு தன் கன்றின் இடத்தை (கன்று வயின்) நோக்கிச் செல்கின்றது (படர). அம்முல்லை நிலத்தில் (புறவில்) பசுமையான இலைகளை (பாசிலை) உடைய முல்லைக்கொடியின் தூய்மையான (ஆசு இல் - குற்றமற்ற) வெண்பூக்கள் (வான் பூ) செவ்வானம் தோன்றிய மாலை வேளையில் (செவ்வான் செவ்வி) பூத்திருக்கின்றன. (கார்ப் பருவத்தின் இக்காட்சிகள் என்னை வாட்டுவதால்) நான் உயிர் வாழ மாட்டேன் (உய்யேன்) போல் தோன்றுகிறது தோழி!
 

பிரிவுத் துயரம் வாட்ட தலைவியின் உடலில் பசலை படர்வதும், உடல் மெலிந்து கைவளைகள் பிறர் அறிய நிலத்தில் கழன்று விழுவதும் சங்க காலத்திலும் சங்கமருவிய காலத்திலும் இலக்கிய உலகில் பரவலாய்க் காணக் கிடைப்பவை. பிரிவுத் துயரினால் அவள் உயிர்வாழாள் என்னும் எச்சரிக்கை மணி அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கேட்கலாம். மேற்கூறிய குறுந்தொகைப் பாடல் ஒரு சான்று.
"செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை"
------------------------ (குறள் 1151)
என்று தலைவி கூற்றாக வரும் பிரிவாற்றாமை குறளும்,
"வருவை யாகிய சின்னாள்
வாழா ளாதல்நற் கறிந்தனை சென்மே"
-----------(நற்றிணை 19; ஈற்றடிகள்)
என்று தோழி கூற்றாக வரும் நற்றிணைப் பாடலும் இவ்வகை வருவன.

இல்லை இல்லை கார் வரவில்லை :
             அல்லலுற்ற மனம் ஆறுதல் தேடும். தன் மனமே தனக்கு ஆறுதல் சொல்வதும், தன்னைச் சார்ந்தோர் தேற்ற ஆறுதல் கொள்வதும் உளவியல் மற்றும் உலகியல் நடைமுறை. பொய்யான தேறுதல் கூட மெய்யான ஆறுதல் தரும். அவ்வாறே குறுந்தொகைத் தலைவியொருத்தி, "கொன்றை மரம் சூழ்ந்த காடு புதிதாய்ப் பூத்துக் குலுங்கி கார்காலத்தை அறிவித்தாலும் நான் நம்பப் போவதில்லை. கார்காலத்திற்குள் திரும்பி வருவேன் என்று சொல்லிச் சென்ற என் தலைவன் பொய் சொல்வதில்லை" என்று அரற்றுகிறாள். பிரிவாற்றாமையின் வலி அவளுக்குதானே தெரியும்!
"..............புதுப்பூங் கொன்றைக்
கானம் கார்எனக் கூறினும்
யானோ தேறேன்அவர் பொய்வழங்கலரே"
------------------------ குறுந்தொகை 21
தன்னைத்தானே தேற்ற முயன்றும் தேறாத மனதுக்குத் தேர்ந்து தெளிந்த நட்புதானே மருந்து! ஆங்கே இடுக்கண் களைய தோழி முற்படுகிறாள்.
"மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
கல்பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை நெரிதரக்
கொம்புசேர் கொடிஇணர் ஊழ்த்த
வம்ப மாரியைக் கார்என மதித்தே"
-------------------- குறுந்தொகை 66
பொருள்: பரந்த அடியினையுடைய (தடவுநிலை) கொன்றையானது, ஏதும் விளையாத கற்கள் நிறைந்த பாலை நிலம் (கல்பிறங்கு அத்தம்) சென்ற தலைவன் திரும்பி வருவதாகக் கூறிய கார்ப்பருவம் வரும் முன்பே (சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை), உறுதியாகப் (மன்ற) பேதலித்தது (மடவ). கொம்புகளில் சேர்ந்த கொடி போல் நெருக்கமாய், சரம்சரமாகப் (நெரிதர) பூத்துக் குலுங்கியது (இணர் ஊழ்த்த). காலமல்லாத காலத்தில் பெய்த மழையினை (வம்பமாரி) கார் என மதித்ததால் இப்பேதைமை கொன்றைக்கு ஏற்பட்டது.
 

தலைவியைத் தேற்றுவதில் ஐங்குறுநூறில் வரும் முல்லை நிலத் தோழியும் சளைத்தவளா என்ன!
"ஏதில பெய்ம்மழை காரென மயங்கிய
பேதையம் கொன்றைக் கோதைநிலை நோக்கி
எவன்இனி மடந்தைநின் கலிழ்வே நின்வயின்
தகையெழில் வாட்டுநர் அல்லர்"
------------------ ஐங்குறுநூறு 462
பொருள்: காரணமின்றிப் பெய்யும் மழை (ஏதில பெய்ம்மழை) கண்டு கார்காலம் என மயங்கிய பேதையான கொன்றை பூத்த நிலை (கொன்றைக் கோதை நிலை) நோக்கி நீ வருந்துவதால் (நின் கலிழ்வே) என்ன பயன் (எவன் இனி), மடந்தையே? உன்னிடம் அமைந்த (நின் வயின்) மேதகு அழகினை (தகை எழில்) அவர் வருத்துபவர் அல்லர்.

அவன் வருவான் தோழி!
            தலைவியை மேலும் தேற்றுகிறாள் தோழி.
"இனையல் வாழி தோழி எனையதூஉம்
நின்துறந்து அமைகுவர் அல்லர்"
------------------ ஐங்குறுநூறு 461.
பொருள்: அழாதே! (இனையல்). நீ நீடூழி வாழ்க, தோழி! என்ன நடந்தாலும் (எனையதூஉம்) உன்னை மறந்து (நின் துறந்து) வாழ மாட்டார் (அமைகுவர் அல்லர்).
 

கார் வந்த பின்பும் தலைவன் வாராது சிறிது காலம் தாழ்த்தியமைக்குக் காரணமும் ஊகித்து இயம்பலானாள் ஐங்குறுநூறு காட்டும் தோழி.
"புதல்மிசை நறுமலர் கவின்பெறத் தொடரிநின்
நலமிகு கூந்தல் தகைகொளப் புனைய
வாராது அமையலோ இலரே நேரார்
நாடுபடு நன்னலம் தரீஇயர்
நீடினர் தோழிநம் காத லோரே"
------------------ ஐங்குறுநூறு 463.
பொருள்: புதர்களில் பூத்திருக்கும் நறுமணம் பொருந்திய மலர்களை (புதல்மிசை நறுமலர்) அழகுறத் தொடுத்து (கவின் பெறத் தொடரி) உன் நலம் மிக்க கூந்தலில் மேலும் அழகு பெறச் சூட (தகைகொளப் புனைய) வாராது இருக்க மாட்டார் (வாராது அமையலோ இலரே). தோழி! பகைவர் நாட்டின்கண் உள்ள (நேரார் நாடுபடு) நற்செல்வங்களைக் கொணரும் பொருட்டே (நன்னலம் தரீஇயர்) காலம் நீட்டித்தார் காதலர்.

கார் வந்தது காதலனும் வருகிறான்:
            மெல்லியலார் தலைவியும் தோழியும்தான் வருந்துவர் என்றில்லை. தலைவியின் துயர் இத்தன்மையது என உணர்ந்த தலைவனும் தலைவிக்காகப் பெரிதும் வருந்துகிறான்.
"எவன்கொல் மற்றுஅவர் நிலைஎன மயங்கி
இகுபனி உறைக்கும் கண்ணொடு இனைபுஆங்கு
இன்னாது உறைவி தொல்நலம் பெறூஉம்
இதுநற் காலம் .................."
------------- அகநானூறு 164; 8-10.
பொருள்: அவர் நிலை என்னவாயிற்றோ (எவன்கொல்) எனக் கலக்கமுற்று நீர் வழியும் (இகுபனி உறைக்கும்) கண்ணோடு அங்கு அழுது (இனைபு ஆங்கு) துன்பத்துடன் வாழ்பவள் (இன்னாது உறைவி) தனது முந்தைய பொலிவினைப் (தொல்நலம்) பெறும் நற்காலம் இது (அஃதாவது அவன் கார்காலத்தில் திரும்பி விடுவதாய் முன்பு வாக்குரைத்தமையால் அது அவளுக்கு நற்காலம்தானே!).
 

போர் முடிந்து அல்லது கார்காலத்திற்காகப் போர் நிறுத்தம் ஏற்பட்டு தலைவன் தனது முல்லை நிலம் நோக்கித் தேரில் புறப்படுகிறான். அப்போது தேரினை விரைவாய்ச் செலுத்துமாறு தேரோட்டியைப் பணிக்கிறான். அவன் அவசரம் அவனுக்கு!
"அரும்படர் அவலம் அவளும் தீரப்
பெருந்தோள் நலம்வர யாமும் முயங்க
ஏமதி வலவ தேரே
மாமருண்டு உகளும் மலரணிப் புறவே"
------------------ ஐங்குறுநூறு 485.
பொருள்: பிரிவினால் பெரிதும் துயருற்ற அவளது அவலம் (அரும்படர் அவலம்) தீரவும், தொய்வுற்ற அவளது பெருந்தோள் நலம் பெறுமாறு யான் அவளை அணைக்கவும் (முயங்க) விலங்கினங்கள் மருண்டு திரியும் (உகளும்), மலர்களால் பொலிவு பெற்ற முல்லை நிலத்தின் (புறவு) வழியே தேரினை ஏவுவாயாக (ஏமதி), தேரோட்டியே (வலவ)!
 

அவ்வாறு செல்லும்போது சோலைப் பூக்களில் கலவயின்பம் கொள்ளும் வண்டினங்கள் தேரின் மணியொலியில் கலக்கமுறும் என அஞ்சி அந்த மணியில் உள்ள நாவினைக் கட்டி வைத்துத் தேரினைச் செலுத்துகிறான். இதுவயின் தலைவியைக் கண்டடையச் செல்லும் தலைவனின் மனநிலையைப் படம் பிடிக்கிறான் புலவன். பிறிதின் நோய் தந்நோயென உணரும் சூழலும் அது.
"பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுஉண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்"
----------------- அகநானூறு 4; 10-12.
பொருள்: பூத்துக் குலுங்கும் சோலையின்கண் (பூத்த பொங்கர்) தன் துணையோடு இணைந்த (வதிந்த), மலரின் மகரந்தத்தை உண்ணும் பறவையாகிய (தாது உண் பறவை) வண்டு கலக்கமுறும் (பேதுறல்) என அஞ்சி தேரின் மணியிலுள்ள நாவினைக் கட்டி வைத்த (மணிநா ஆர்த்த) மாட்சிமை பொருந்திய வினை செயல்வகை கொண்ட தலைவன் (மாண்வினைத் தேரன்).
 

மேற்கூறிய பாடலில், "இத்தகைய கருணையுள்ளம் கொண்டவன், நீ பிரிவாற்றாமையால் வாட எங்ஙனம் பொறுப்பான்? அவன் உறுதியாய் விரைவில் வருவான்" என்று தோழி தலைவியைத் தேற்றுவதாகத்தான் இருக்கிறது. எனவே இதற்கு முந்திய தலைப்பிலேயே இப்பாடல் பொருந்தி அமையும். எனினும் கடந்த காலத்தில் அவனது மேன்மையான செயல்பாடு தற்போது அவனது மாண்பினை முன்னிறுத்துவதால் ஈண்டு இறந்தகாலம் நிகழ்காலமாய் ஆக்கப்பட்டது எனலாம். தோழி கூறுவதாய் உள்ளது மறைக்கப்பட்டு அவளது கூற்றில் உள்ள நிகழ்வே முன்னிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வு இக்கட்டுரைக்கு நிறைவுரையாய் அமைவது ஏற்புடைத்தே.
 

கண் களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகத்தினும் பெரிதென வள்ளுவப் பெருந்தகை கூறி அனைவரும் அறிந்ததே. முல்லைத் திணையில் காமத்தில் கார் கொள்ளும் சிறுபாகமும் உணர்ந்து நோக்கற்பாலதே.

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

அழகான செய்யுள்களும், அவற்றுக்கான விளக்க உரைகளும் வெகு சிறப்பாக இருக்கின்றன ......தமிழ் வாத்தியாரிடம் இலக்கணம் படித்தது எல்லாம் நினைவில் வந்து போகின்றன........!  🌹

   நன்றி ஐயா .......!  🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, suvy said:

அழகான செய்யுள்களும், அவற்றுக்கான விளக்க உரைகளும் வெகு சிறப்பாக இருக்கின்றன ......தமிழ் வாத்தியாரிடம் இலக்கணம் படித்தது எல்லாம் நினைவில் வந்து போகின்றன........!  🌹

   நன்றி ஐயா .......!  🙏

உங்கள் வாசிப்புக்கும் பாராட்டுக்கும் நன்றி. உங்கள் தகவலுக்கு: நான் ஒரு பணி ஓய்வு பெற்ற கணித ஆசிரியன்.

எண்ணுக்கும் எழுத்துக்கும் வெகுதூரம் இல்லையே. இரண்டு கண்களுக்கு இடையே உள்ள தூரம்தானே !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.