Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'விடியல் இன்னும் வரல' - கல்பனா சாவ்லா விருது பெற்ற வீராங்கனையின் வேதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'விடியல் இன்னும் வரல' - கல்பனா சாவ்லா விருது பெற்ற வீராங்கனையின் வேதனை

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்
தீபா

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை தீபா(40) வறுமையின் பிடியில் சிக்கியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் இந்தியாவை முன்னிறுத்தி சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என பல பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனையான இவர், தற்போது சென்னையில் ஒரு விடுதியில் சமையல் பணியாளராக வேலை செய்கிறார். தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருதைப் பெற்ற முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை, சொக்கத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தீபா ஒன்றரை வயதில் போலியோ காரணமாக இடது கால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளி ஆனார். தீபாவின் பெற்றோர்கள் விவசாய கூலியாக இருந்தாலும் அவரை பள்ளிக்கு அனுப்பினர். 1980களில் பெண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால் ஊற்றிக் கொல்லும் பழக்கம்  மதுரையில் பரவலாக இருந்தது. ஆனால், தீபா மூன்றாவது பெண் குழந்தையாகப் பிறந்தபோதும்,  அவரை வளர்க்கவும், படிக்கவைக்கவும் பெற்றோர் தயங்கவில்லை என்று கூறுகிறார்.

 

 

''அப்பவெல்லாம், பெண் குழந்தைனா கள்ளிப்பால் ஊத்தி கொல்றது சாதாரணம். ஒரு சிலர் உசிரோடவே குழந்தையை மண்ணில புதைச்சிருவாங்க.. ஆனா என்னோட அம்மா அப்பா என்னை வளர்த்து, படிக்கவச்சாங்க.. பள்ளிக்கூடத்துல, விளையாட்டு பிரிட்ல, என்னய தனியா உட்காரவைச்சிட்டு, மற்ற பிள்ளைக விளையாடுவாங்க.. அதனால ஒரு கட்டத்துல...நானும் விளையாடனும்னு தோணுச்சு...பரிசு வாங்கணும்னு உத்வேகம் வந்துச்சு...,''என சமையல் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டே  தனது பள்ளிப்பருவ அனுபவத்தை நம்மிடம் நினைவுகூர்ந்தார்.

கல்பனா சாவ்லா விருது பெற்ற வீராங்கனை தீபா

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் குறித்துத் தெரிந்துகொண்ட தீபா, தடகளம் மற்றும் பூப்பந்து போட்டிகளை தேர்வு செய்தார். முதன்முதலாக, 2002ல் பெங்களூருவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பூப்பந்து போட்டியில் கலந்து கொண்டு, தனிநபர் மற்றும் கலப்பு பிரிவில், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றார். அதே சர்வதேச போட்டியில் வட்டு எறிதலில் தங்கப் பதக்கமும், குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார்.

 2004ல் பெல்ஜியத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தடகளப் போட்டியில் குண்டு எரிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டிகளில் இரண்டு வெண்கல பதக்கங்களைப் பெற்றார். 2005ல் ஜெர்மனியில் நடந்த பாரா ஒலிம்பிக்ஸ் போட்டி, 2006ல் மலேசியாவில் நடைபெற்ற ஏசியன் கேம்ஸ் என பல நாடுகளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு, வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். இதற்கிடையில் தேசிய அளவிலான தடகள போட்டிகளில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். 50க்கும் மேற்பட்ட பதக்கங்களைக் கொண்டுள்ள பெட்டி ஒன்றை நம்மிடம் காட்டினார்.  

கல்பனா சாவ்லா விருது பெற்ற வீராங்கனை தீபா

''2005ல் ஜெர்மனியில் நடக்கும் பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிக்குச் செல்ல பணம் தேவைப்பட்டுச்சு.அப்பா வச்சிருந்த நிலத்த வித்து ரூ.80,000 கொடுத்து அனுப்பிவச்சாரு... அதேபோல ஒவ்வொரு போட்டியில கலந்துகிற சமயத்துல..இருந்த சொத்து நிலம் எல்லாம் வித்து அனுப்பிவச்சாங்க...அனா இப்ப..என்னால அவுங்களுக்கு எதுவும் வாங்கி கொடுக்கமுடியல... என் கணவரும் விளையாட்டுத்துறை பயிற்சியாளரா தனியார் கல்லூரியில வேலை பாக்குறாரு..அவரோட வருமானம் நிரந்தரமா இருக்காது...என்னோட இரண்டு பொண்ணுகளும் விளையாட்டு துறையில ஆர்வமாக இருக்காங்க. ஹாக்கி, தடகள போட்டிகளில் மாநில அளவிலும்,தேசிய அளவிலும் பதக்கங்களை வாங்குறாங்க....ஆனா என்னோட வாழ்க்கை மாதிரி அவர்களும் வறுமையில சிக்கிடுவாங்களோனு பயமா இருக்கு,''என்கிறார் தீபா.

தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு மைதானங்களில் எங்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் கொண்ட மைதானம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் தீபா. ''எந்த ஸ்டேடியத்திலயும் எங்களுக்கு பயிற்சி எடுப்பதுக்கு வசதி இல்ல...ஆனாலும் என்னோட சொந்த முயற்சிலதான் பயிற்சி எடுத்தேன்.. என் அம்மா அப்பாவை பல பேர் திட்டினாங்க...விளையாட்டு பயிற்சி எடுக்கறப்போ சிரிச்சாங்க..எனக்கு நான் வாங்கப்போற மெடல் பத்திதான் கவனம் இருந்துச்சு,'' என வலிமிகுந்த பயணத்தை விவரிக்கிறார்.  

மறைந்த முதல்வர் கருணாநிதி 2010 ஆண்டு சுதந்திர தின விழாவில் வீரமங்கைக்கான கல்பனா சாவ்லா விருதை தீபாவுக்கு அளித்தார். ''தமிழ்நாட்டில் முதல்முதலாக இந்த விருத எனக்கு கொடுத்தாங்க... ரொம்ப பெருமையா இருந்துச்சு...நான் எம்.பில் படிச்சிருந்தேன்...அதனால என்னோட கல்வி தகுதிக்கு ஏற்ற வேலை தருவதா சொன்னாங்க...நான் இதுவரைக்கும் மனு கொடுக்காத இடம் இல்ல..கலைஞர் அய்யா காலத்தில் இருந்து இப்போ  ஸ்டாலின் முதல்வராகின பிறகும் மனு  கொடுத்தாச்சு...மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலத்துறை, விளையாட்டுத்துறை, முதல்வர் தனிப்பிரிவு என நேரடியாவும், ஆன்லைன் வழியாகவும் மனுகொடுத்தாச்சு...எனக்கு  விடிவு வரல,''என்கிறார்.

 

தீபா

தமிழ்நாட்டை முன்னிறுத்தி பல தேசிய போட்டிகளிலும், இந்தியாவை முன்னிறுத்தி சர்வதேச அளவிலான போட்டிகளிலும் ஊக்கத்துடன் பங்குபெற்று பதக்கங்களை வாங்கியபோதும், தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்கிறார். கடும் மனஉளச்சலில் சிக்கிய தீபா, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, பலகட்ட சிகிச்சைகளுக்குப் பின் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்.

வறுமையின் கொடுமையால் சமையல் பணியாளராக உள்ள தீபா தனக்கு அளிக்கப்பட்ட விருதுகளையும், பதக்கங்களையும் திருப்பி அளிக்கவுள்ளதாகக் கூறுகிறார்.  

தீபாவின் வறுமைநிலை குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலர் ஆனந்தகுமாரிடம் பேசினோம். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளை தீபாவிடம் தொடர்புகொள்ளச் சொல்வதாகவும், அவருக்கான உதவியை வழங்க முயற்சிகள்  எடுப்பதாகவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளின் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு பல முன்னெடுப்புகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cl51q5gd17zo

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி தமிழ் செய்தி எதிரொலி: மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு பயிற்சியாளர் வேலை

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
உதயநிதி ஸ்டாலின், திமுக

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை தீபா(40) வறுமையின் பிடியில் சிக்கி இருப்பதை விளக்கி பிபிசி தமிழ் வெளியிட்ட செய்தியை அடுத்து, தமிழ்நாடு அரசு அவருக்கு பகுதிநேர பயிற்சியாளர் பணியை வழங்கியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் இந்தியாவை முன்னிறுத்தி பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் எனப் பல பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனையான தீபா சென்னையில் ஒரு விடுதியில் சமையல் பணியாளராக வேலை செய்து வந்தார்.

அவரது வறுமை நிலை குறித்த செய்தியை ஜனவரி 26அம் தேதியன்று பிபிசி தமிழ் வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தியை அடுத்து, முதல்வர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு அழைப்பு வந்ததாகவும் தற்போது பயிற்சியாளர் வேலை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தீபா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின், திமுக

''மறைந்த முதல்வர் கருணாநிதி 2010ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் வீரமங்கைக்கான கல்பனா சாவ்லா விருதை எனக்கு அளித்தார்.

 

தமிழ்நாட்டை முன்னிறுத்தி பல தேசிய போட்டிகளிலும், இந்தியாவை முன்னிறுத்தி சர்வதேச அளவிலான போட்டிகளிலும் ஊக்கத்துடன் பங்கு பெற்று பதக்கங்களை வாங்கியபோதும், எனக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.

நிலத்தை விற்று வெளிநாடுகளுக்கு அனுப்பிய என் பெற்றோரும் வறுமையில் வாடினர். அவர்களுக்கும் என்னால் உதவ முடியவில்லை. என் இரண்டு பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு சமையல் பணியாளராக வேலைக்குச் சேர்ந்தேன்.

பிபிசி தமிழில் என்னுடைய வறுமை நிலை பற்றிய செய்தி வெளியானதை அடுத்து, எனக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது.

என் தகுதிக்கு ஏற்ப வேலை தரப்படும் என உத்தரவாதம் தந்தார்கள். தற்போது, பகுதி நேர தடகள பயிற்சியாளராகப் பணி ஆணை வழங்கியுள்ளனர். ஆறு மாதங்களில் நிரந்தர பணி அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். பிபிசி தமிழுக்கு நன்றி,'' என்றார் தீபா.

போலியோவால் இடது கால் பாதிப்புக்கு ஆளான நிலையிலும், பள்ளி பருவத்திலிருந்து விளையாட்டுப் போட்டிகளில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தவர் தீபா. மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தடகள போட்டிகளில் பங்குபெற்று 50க்கும் மேற்பட்ட பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

முதன்முதலாக, 2002இல் பெங்களூருவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பூப்பந்து போட்டியில் கலந்து கொண்டு, தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவில், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றார். அதே சர்வதேச போட்டியில் வட்டு எறிதலில் தங்கப் பதக்கமும் குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார்.

உதயநிதி ஸ்டாலின், திமுக

2004இல் பெல்ஜியத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தடகளப் போட்டியில் குண்டு எரிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டிகளில் இரண்டு வெண்கல பதக்கங்களைப் பெற்றார்.

2005இல் ஜெர்மனியில் நடந்த பாரா ஒலிம்பிக்ஸ் போட்டி, 2006இல் மலேசியாவில் நடைபெற்ற ஏசியன் கேம்ஸ் எனப் பல நாடுகளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு, வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். இதற்கிடையில் தேசிய அளவிலான தடகள போட்டிகளில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.

தொடர்ந்து விளையாட்டுகளில் பங்குபெற்று வந்த தீபா, தனது இரண்டு மகள்களும் விளையாட்டுப் போட்டியில் ஆர்வம் இருந்ததால், அவர்களையும் ஊக்கப்படுத்தினார். அவரது கணவர் மரிய ஜான்பால் ஹாக்கி விளையாட்டு பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார்.

''இரண்டு பெண் குழந்தைகளுக்கும் இருக்கும் ஆர்வத்தைப் பார்த்தபோது, அவர்களுக்காகப் பொருள் ஈட்டவேண்டும் என்பதால், கிடைக்கும் வேலைகளைச் செய்தேன். சமையல் பணியாளராகவும் ஆறு மாதங்கள் வேலை செய்தேன். பிபிசி தமிழில் வெளியான செய்தியைப் பார்த்த பலரும், எனக்கு ஆறுதல் சொன்னார்கள்.

முதல்வர் அலுவலகத்தில் இருந்து என்னிடம் பேசினார்கள். விளையாட்டுத்துறை அதிகாரிகள், சமூக நலத்துறை அதிகாரிகள் என்னுடைய சாதனைகளைப் பற்றிக் கேட்டனர். வீட்டுக்கும் வந்து என்னைப் பார்த்தனர். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பணி ஆணையை எனக்குக் கொடுத்தார்,'' என்று பூரிப்புடன் பேசினார் தீபா.

உதயநிதி ஸ்டாலின், திமுக

மதுரையில், எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கத்தில் பகுதி நேர பாரா தடகள பயிற்சியாளராக இன்று (மார்ச் 7) பணிக்குச் சேர்ந்த தீபா மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது பணியைத் தொடங்கியுள்ளார்.

''விளையாட்டுத் துறையில் சாதிப்பதற்கு பெண்களுக்குப் பல வாய்ப்புகள் உள்ளன. பெண் போட்டியாளர்கள், மாற்றுத்திறனாளி போட்டியாளர்களை நான் ஊக்குவித்து தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்ப்பேன்,'' என்றார் தீபா.

https://www.bbc.com/tamil/articles/c51kn5ljp08o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.