Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறுப்பு : அறிஞர் தொ.பரமசிவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

கறுப்பு : அறிஞர் தொ.பரமசிவன்

 
FB_IMG_1649870277380.jpg

இயற்கை பல்வேறு நிறங்களை உடையது. இயற்கையின் நிறங்களில் மனிதன் சுவை, அழகு, பயன் ஆகியவற்றைக் கண்டான். எனவே அவன் படைத்த செயற்கைப் பொருள்கள் பல நிறங்களில் அமைந்தன. இக்காலத்தில் நிறத்தையும் குறிக்கும் ‘வண்ணம்' என்ற சொல் அக்காலத்தில் அழகு, இசை, ஒழுங்கு ஆகிய பொருள்களை மட்டுமே தந்தது.

எல்லா இயற்கைப் பொருள்களிலும் நிறவேறுபாடு இருப்பது போல, மனித உடம்பிலும் அதாவது, தோலிலும் நிற வேறுபாடுகள் உண்டு. அந்த வேறுபாடுகள் இன்றைய உலகில் வறுமைக்கு அல்லது வளமைக்கு, உயர்வுக்கு அல்லது தாழ்வுக்கு, அதிகாரத்திற்கு அல்லது அடிமைத்தனத்திற்கு, ஒடுக்குமுறைக்கு அல்லது அதற்கு எதிரான போராட்டத்திற்கு உரிய குறியீடுகளாக மாற்றப்பட்டு விட்டன. 

இட ஒதுக்கீட்டுக்கெதிராக ஒரு கருத்தைச் சொல்லும் திரைப் படத்தில் கறுத்த நிறமுடையவன் கல்லூரிக்குச் செல்லுகிறான். சிவந்த நிறமுடையவன் இடங்கிடைக்காமல் வெளியே நிற்கிறான். கருத்தைச் சொல்லுவதற்கு இங்கே தோலின் நிறம் ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. கறுப்பு, சிவப்பு ஆகிய இரண்டு நிறங்கள் கீழ்ச் சாதிக்காரன், மேல்சாதிக்காரன் என்பதைக் குறியீடுகளாகச் சுட்டி நிற்கின்றன. சமூக முரண்பாடுகள் மனிதனின் தோலின் நிறத்தைக் கொண்டு வெளிப் படுகின்ற வழக்கம் எவ்வாறு உருவானது? மனிதத்தோலின் நிறத்தையும், அழகையும் இணைக்கும் கோட்பாடுகள் தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு வளர்ந்துள்ளன என்பதை விளக்க முயலுவோம்.

இன்றைய சமூக நிகழ்வுகளிலும் அசைவுகளிலும் கறுப்பு நிறம் கீழ்ச்சாதிக்காரன், வறுமைப்பட்டவன், கல்வியறிவு இல்லாதவன் அல்லது நாகரிகமறியாதவன், அழகற்றவன் என்ற பொருள்களிலேயே ஆளப்படுகிறது. திருமணச் சந்தையில் பணம் என்பதைப் போலவே, அதற்குக் குறையாத அழுத்தத்துடன் பெண்ணின் நிறமும் தீர்மானிக்கிற சக்தியாக விளங்குகிறது. அதாவது சாதாரண மனிதனின் அழகுணர்ச்சியைப் பொறுத்தமட்டில், கறுப்பு என்பது அழகற்ற நிறம் என்று அனைத்து மனிதர்களும் கருதுகிறார்கள். அழகுணர்ச்சியில் இந்தப் பாகுபாடு புகுந்த முறை ஆய்வுக்குரிய ஒன்றாகும்.

ஒரு சமூகத்தின் வாழ்க்கை நெறிகளை வரலாற்றுப் போக்கில் அளவிட்டு அறிய உதவும் சான்றுகளில் இலக்கியம் முதன்மையானது. தமிழ்ச் சமூகம் மிக நீண்ட இலக்கிய மரபினை உடையதாக இருக்கிறது. எனவே மனிதத் தோலின் நிறமும் அழகுணர்ச்சியும் பற்றிய மதிப்பீடுகளை அறிய இலக்கியச் சான்றுகளைக் காண்போம். 

நிறங்கள் மனித உணர்வுகளைப் புலப்படுத்தும் என்னும் செய்தி தொல்காப்பியத்தில் காணப்படுகிறது. ஆனால் இரண்டு நிறங்களைப் பற்றியே தொல்காப்பியர் பேசுகிறார்.

கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள

நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப.

கறுப்பு, சிவப்பு என்பன சினத்தை உணர்த்தும் சொற்களாகவும் வரும் என்பது தொல்காப்பிய இலக்கணமாகும். இந்த இலக்கணம் பிற்கால இலக்கியங்களில் பின்பற்றப்பட்டிருக்கிறது.

கறுத்தின்னா செய்த அக்கண்ணும் மறுத்தின்னா

செய்யாமை மாசற்றார் கோள்

என்ற திருக்குறளில் 'கறுத்து' என்ற சொல் ‘சினந்து' என்ற பொருளைத் தருகிறது.

செருநரை நோக்கிய கண்தன்

சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவேன்

என்ற ஔவையாரின் புறப்பாடலில் சிவப்பு என்ற சொல் வெகுளி என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. ஆயினும் இந்தச் சொற்கள் தோலின் நிறம் பற்றிப் பேச வரவில்லை.

சங்க இலக்கியங்களிலும் அதற்குப்பின் வந்த நீதி இலக்கியங்களிலும் சிலம்பு, மேகலை போன்ற காப்பியங்களிலும் ஆண், பெண் இருவரின் உடல் சார்ந்த வருணனைகள் ஏராளமாக இடம் பெறுகின்றன. ஆனால் அவையனைத்தும் மனித உறுப்புகளின் அளவும், வடிவும் சார்ந்தாகவே அமைந்துள்ளன. இந்த வருணனைகளும் அளவு மட்டுமன்றி உறுப்புக்களின் பயன் கருதியதாகவும் அமைந்துள்ளன. பெருத்த முலை என்பது வளமை அல்லது தாய்மையின் குறியீடாகவும் வீரரின் பெருத்த தோள் என்பது வலிமையின் சின்னமாகவும், பாதுகாப்பின் சின்னமாகவும் அமைந்துள்ளன. உயர்வு, தாழ்வு என்ற கருத்தோட்டங்கள் இந்த வருணனைகளில் காணப்படவில்லை. மாறாக, அழகு என்பது உடல் நலம் சார்ந்ததாகவே பேசப்பட்டிருக்கிறது. இவ்வருணனைகளில் ஓரிடம் தவிர ஏனைய இடங்களில் மனிதத் தோலின் நிறம் பேசப்படவே இல்லை. காதலன் அல்லது கணவனைப் பிரிந்த பெண்ணின் உடலில் பொன் நிறத்தில் பசலை பூக்கும், என்னும் ஓரிடத்தில் மட்டுமே "மனிதத் தோலின் நிறம்" பேசப்படுகிறது.

இவை ஒருபுறமாக, மற்றொரு புறத்தில் தெய்வங்களைப் பேசும் இடத்தில் அவற்றின் நிறங்கள் பேசப்படுகின்றன. மாயோன் மலை போன்று நீலநிறத்தில் இருக்கிறான்; பலராமன் (வாலியோன்) அருவி போல வெள்ளை நிறத்தில் இருக்கிறான் என்று ஒரு சங்கப் பாடல் கூறும். திருமாலுக்கும், பலராமனுக்கும் நிறம் சொல்லப் பட்டாலும், முருகன், கொற்றவை போன்ற தெய்வங்களுக்கு நிறம் சொல்லப்படவில்லை. சிவபெருமானின் கழுத்து நஞ்சுண்ட காரணத்தால் கருமையும், நீலமும் கலந்த வண்ணத்தில் அமைந்திருப்பதாக மற்றொரு பாட்டு கூறும்.

பக்தி இலக்கியக் காலந்தொட்டுத் தெய்வங்களுக்கும், மனிதர்களுக்கும் பல்வேறு நிறங்கள் பேசப்படுகின்றன. கடவுள் எல்லாமாக இருக்கிறான் என்று குறிக்க வந்த மாணிக்கவாசகர், “நிறங்களோர் அய்ந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான்” என்கிறார். எனவே நிறங்கள் மொத்தம் அய்ந்து என்பது பழந்தமிழர் கருத்து என்று தெரிகிறது. வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, புகை நிறம் என அவற்றை உரையாசிரியர் விளக்குகின்றனர். தேவாரம் சிவபெருமானைப் 'பவள வண் ணத்தினர்' என்றும், உமையவளை ‘மரகதக் கொடி' எனப் பச்சை நிறமுடையவளாகவும் குறிக்கின்றது. இருளின் வண்ணமும் அந்தியின் வண்ணமும்கூடச் சிவபெருமானின் வண்ணமெனக் குறிக்கும் மற்றொரு தேவாரப் பாடல். வண்ணம் என்ற சொல் அழகு என்ற பொருளிலும் வழங்கப்பட்டிருப்பதனை ‘வண்ண மார்பில் தாரும் கொன்றை' என்ற சங்கப் பாடலாலும் அறிகின்றோம்.

பக்தி இலக்கியங்களில் நாம் காணும் மற்றொரு செய்தி கறுப்பு அழகுக்குரிய நிறம், அது ஒளி வீசும் என்பது. திருமாலை ஆண்டாள் 'கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேன்' என்கிறார். ஆழ்வார்கள் பலரும் திருமாலைக் 'கரிய மாணிக்கம்' என்று பாடியுள்ளனர். இராமனது கரிய உடம்பிலிருந்து ஒளி கிளர்ந்தது என்ற செய்தியை 'வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியின் மறைய' என்று கம்பர் பாடுகிறார். கண்ணப்பர் பிறந்தபோது அவரது கறுத்தமேனி ஒளியுடையதாக இருந்தது என்பதனைக் 'கருங்கதிர் விரிக்கும் மேனி காமருகுழவி' என்று பாடுகிறார் சேக்கிழார். தன் மீதுபட்ட ஒளியைப் பளபளப்புடைய கருப்புநிற மனிதத்தோல் 'எதிரொளி' செய்துகாட்டும் என்பது கம்பரும் சேக்கிழாரும் காட்டும் அழகுக் காட்சியாகும்.

நன்னூல் 301ஆம் சூத்திரத்துக்கான விருத்தியுரையில் அவ்வுரைகாரர் 'கண்' என்னும் வேற்றுமை உருபினை விளக்குகிறார். எடுத்துக்காட்டாகத் தரப்படும் சொற்றொடர் 'கறுப்பின் கண் மிக்குள்ளது அழகு' என்பதாகும். நெருப்பின் உள்ளார்ந்த தன்மை தெறல் (சுடுதல்) என்பது போலக் கறுப்பின் உள்ளார்ந்த தன்மையே அழகுதான் என்பது அக்காலத்தில் நிலவிய கருத்து எனத் தெரிகிறது. அக்காலம் வரை அழகோடு சேர்த்து எண்ணப்பட்ட கறுப்பு நிறம் பின்னர் ஏன் தனது மதிப்பை இழந்தது? அழகின்மை என்பதற்கு எடுத்துக்காட்டாக அது எப்படி மாறிப் போனது?

தாழ்வுக்கும் இழிவுக்கும் உரியதாகக் கறுப்பு நிறம் கருதப்பட்டதன் சமூக வரலாற்றுக் காரணிகள் யாவை?

இக்கேள்விக்கான விடையை சமூக அமைப்பில் காண இயலாது. மாறாக அதிகாரம் சார்ந்த அரசியல் அமைப்புக்குள்ளே தேடவேண்டும். அதுவும் தமிழ் அரசுகள் வீழ்ச்சியடைந்த 13ம் நூற்றாண்டின் இறுதிக்குப் பின்னரே தேட வேண்டும்.

கி.பி. 1310 முதல் 1323 வரை தமிழ்நாடு இசுலாமியர் படையெடுப்பால் அலைக்கழிந்தது. மீண்டும் 1383ல் விஜய நகரப் பேரரசின் தளபதிகளின் படையெடுப்பால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. விஜய நகரப் பேரரசு இசுலாமியருக்கு எதிராக வைதிக நெறியை உயர்ந்த இலட்சியமாகக் கொண்டு தோன்றிய அரசமரபாகும். ஆட்சியதிகாரம் விஜய நகரப் பேரரசின் தள்பதிகளின் கைக்கு மாறியவுடன் தமிழ்நாடு ஒரு பண்பாட்டு நெருக்கடியை எதிர்கொண்டது.

அதாவது வரலாற்றில் முதல்முறையாகத் தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரம் பிறமொழி பேசும் ஆட்சியாளர்களிடம் மாறியது. இந்த ஆட்சியாளரைத் தொடர்ந்து தெலுங்கு மொழி பேசும் மக்கள் பெருமளவு குடியேறத் தொடங்கினர். பிராமணர் தொடங்கிச் சக்கிலியர் ஈறாக இந்தக் குடியேற்றம் அமைந்தது. பிராமணர், பிராமணரை அடுத்த 'மேல் சாதியினரான' புலால் உண்ணாத ரெட்டியார், ராஜுக்கள் இவர்களுக்கு அடுத்த படிநிலைகளில் அமைந்த நாயுடு (வெலமா, கம்மவார், கவர, காப்பு, பலிஜா), இவர்களுக்கும் அடுத்த நிலையில் உள்ள ஆசாரிகள், பெரும்பாலும் புன்செய் நிலத்து விவசாயிகளான நாயக்கர், மிகத் தாழ்நிலையில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியர், தோட்டி வேலை செய்யும் சக்கிலியர் என இவர்களை வகைப்படுத்துக் காணலாம்.

இவர்களோடு செளராட்டிரப் பகுதியிலிருந்து ஏற்கனவே வெளியேறி ஆந்திரத்தில் இருந்த நெசவுத் தொழில் செய்யும் சாதியான செளராட்டிரர்களும் தமிழகத்தில் வந்து குடியேறினர். இக்கால கட்டத்தில் தமிழ்நாட்டில் தனித்து வளர்ந்திருந்த சைவ, வைணவ மதங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. வைதிக நெறியே முன்னிறுத்தப்பட்டது. 'இந்து மதம்' அதிகாரத்தில் அமர்ந்தது. தமிழ் அக்காலத்தில் ஆட்சி மொழியாக இல்லை. ஆட்சியாளர்களின் மொழியாகிய தெலுங்கு பேணப்பட்டது. அரசியல் அதிகாரத்தில், வைதிக நெறியின் காவலர்களான பிராமணர்க்கும் சம்சுகிருதத்திற்கும் முன்னுரிமை தரப்பட்டது.

இவர்களின் ஆட்சி முடியும் தறுவாயில் கி.பி. 1700க்குப் பிறகு உருது பேசும் வடநாட்டு முசுலீம்கள் அங்காங்கே சில பகுதிகளில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினர். மிகச்சில பகுதிகளில் பிரஞ்சுக்காரரும் ஏனைய பகுதிகளில் பிரிட்டிஷ்காரர்களும் ஆட்சியைக் கைப்பற்றினர்.

கி.பி. 14ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதலாகத் தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தைக் கையிலே வைத்திருந்த அனைத்து ஆட்சியாளர்களும், தமிழர்களின் சாரசரி நிறத்திலிருந்து வேறுபட்ட சிவந்த நிறமுடையவர்கள். அவர்களால் ஆதரிக்கப்பட்ட வடநாட்டில் இருந்து வந்த இசுலாமிய ஞானிகள், ஐரோப்பியத் பாதிரிமார்கள், பிராமணர்கள் ஆகிய அனைவரும் தமிழர்களைவிடச் சிவந்த நிறமுடையவர்கள். எனவே ஐந்து நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழ்நாட்டில் அரசியல் அதிகாரமும், அரசியல் சித்தாந்தங்களையும் நடைமுறைகளையும் உயர்த்திப் பிடிக்கின்ற ஆன்மீக அதிகாரமும் சிவந்த நிறமுடையவர்களின் கையிலேயே இருந்தது. எனவே இந்த நிறம் அதிகாரத்தின் நிறமாக, உயர்ந்த ஆன்மீகத்தின் நிறமாக, உயர்ந்த ஆன்மீகத்தின் நிறமாக, மேட்டிமையின் சின்னமாக, அழகு நிறைந்ததாகக் காட்டப்பட்டது. சுருக்கமாகச் சொல்வதானல், தமிழ் பேசும் பெருவாரியான மக்கள் கூட்டத்தாரின் மரபுவழி அழகுணர்ச்சி மனிதத் தோலின் நிறத்தைப் பொறுத்த மட்டில் திசைமாற்றம் பெற்றது.

எதிர்நிலையில் சொல்வதனால். கருப்பு நிறமுடைய மக்கள் அழகற்றவர்களாகவும், ஆளப்படுவர்களாகவும், அதிகாரத்திற்குத் தகுதியற்றவர்களாகவும், இழிவின் சின்னமாகவும் கருதப்பட்டனர். இன்றளவும் இதுவே தொடர் கதையாகி வருகிறது.

எனவே தான் 'கறுப்பு - சிவப்பு' என்பது வெறும் அழகுணர்ச்சி சார்ந்த பிரச்சனையன்று. அது மரபுவழி அழகுணர்ச்சியிலிருந்து திசை மாற்றப்பட்டவர்களின் அதிகார வேட்கைக்கும் மரபுவழிச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட எளிய மக்களுக்கும் இடையிலே நிலவிவரும் ஒரு முரண்பாடு ஆகும்.

அறிஞர் தொ.பரமசிவன் அவர்கள் எழுதிய பண்பாட்டு அசைவுகள் நூலில் இருந்து...

https://aerithazh.blogspot.com/2022/04/blog-post.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.