Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலை திரைப்பட கதையுடன் தொடர்புடைய தமிழரசன் யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் தேசியம், தமிழரசன், தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம்,MAY17IYAKKAM

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
  • பதவி,பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படம் வெளியான பிறகு, அதில் வந்த சம்பவங்கள், கதையில் இடம்பெற்ற கதாப்பாத்திரங்கள் குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டது.

அப்போது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்ட பெயர்களில் ஒன்று, புலவர் கலியபெருமாள். விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரம் இந்த நபரை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

மற்றொரு பெயர், தமிழரசன். படத்தில் வரும் ரயில் விபத்து உட்பட சில காட்சிகளில் இவர் சார்ந்த குறிப்புகள் படத்தில் ஆங்காங்கே இடம்பெற்று இருந்த நிலையில், ஏப்ரல் 14ஆம் தேதியான இன்று தமிழரசன் பிறந்ததினம்.

தமிழரசனின் அரசியல் பயணம்

தமிழ் தேசியம், தமிழரசன், தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம்,MAY17IYAKKAM

கடலூர் மாவட்டத்தில் உள்ள மதகளிர் மாணிக்கம் என்னும் ஊரில் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறந்தார் தமிழரசன். சொந்த ஊருக்கு அருகில் உள்ள பொன்பரப்பியில் பள்ளிக் கல்வியை படித்தார்.

 

அதன்பிறகு, கல்லூரி படிப்பை கோவை பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார் தமிழரசன்.

பள்ளிக் காலத்தில் இருந்தே இடதுசாரி அரசியல் சார்ந்து பல போராட்டங்களில் தமிழரசன் ஈடுபட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகிய கட்சிகளில் தமிழரசன் இருந்துள்ளார்.

கல்லூரி நாட்களில் இந்திய மாணவர் சங்கத்தின் உறுப்பினராக இருந்த போது தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தமிழரசன் கலந்து கொண்டு போராடினார்.

அந்த காலகட்டத்தில் சிபிஎம் கட்சியுடன் கருத்து ரீதியாக பிளவுபட்டு அதிலிருந்து வெளியேறி, இந்தியாவில் சாரு மஜூம்தாரால் 1969ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) என்ற கட்சியில் சேர்ந்தார் தமிழரசன்.

கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த காலகட்டத்தில் அவர் இருந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இளைஞர்களும், மாணவர்களும் அவர்களின் கல்லூரி,வேலை, குடும்பத்தை துறந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டது.

அதை ஏற்று தமிழ்நாட்டில் உள்ள பல கல்லூரிகளில் படித்து வந்த இளைஞர்கள் கல்வி வளாகங்களை விட்டு வெளியேறி போராட்ட களத்திற்கு சென்றனர். அப்படிச் சென்ற பல மாணவர்களின் தமிழரசனும் ஒருவர்.

கல்லூரியில் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு, தனது சொந்த ஊருக்கு திரும்பிய அவர், அங்கு விவசாயத் தொழிலாளர்களுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்தார்.

வீராணம் பகுதியில் வேலைசெய்த விவசாயக் கூலிகளுக்கு தினக்கூலியை தானியமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடி வெற்றிக் கண்டார்.

கலியபெருமாளுடன் அறிமுகம்

தமிழ் தேசியம், தமிழரசன், தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம்,FACEBOOK/க.இராமச்சந்திரன்

 
படக்குறிப்பு,

தமிழரசன்(இடது), புலவர் கலியபெருமாள்

அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளராக இருந்த கலியபெருமாளுடன் 1970ஆம் ஆண்டு தமிழரசனுக்கு அறிமுகம் கிடைத்தது.

சாரு மஜூம்தார் தலைமையில் தொடங்கப்பட்ட நக்சல்பாரி கட்சியை தமிழ்நாட்டில் தொடங்கிய நபர்களுள் ஒருவரான புலவருடன் தமிழரசன் நெருங்கி பழகத் தொடங்கினார்.

அந்த கட்சியின் தலைமை எடுத்த முடிவின் ஒரு பகுதியாக ’அழித்தொழிப்பு நடவடிக்கை’ செய்ய தமிழ்நாட்டில் திட்டமிடப்பட்டது.

அரசுக்கு ஆதரவாக, அதிகாரமிக்கவர்களாக இருக்கும் நபர்களை கொலை செய்வது தான் இந்த அழித்தொழிப்பு நடவடிக்கை. இதன் மூலம் தமிழரசனும் அவரது கூட்டாளிகளும் கடலூர், அரியலூர், பெரம்பலூர் வட்டாரங்களில் ஒரு சிலரை வெட்டிக் கொலை செய்தனர்.

கலியபெருமாளின் தோட்டத்தில் நடந்த வெடிகுண்டு விபத்து தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளித்து உதவி செய்ததாக கூறி அய்யம்பெருமாள் என்பவர் அழித்தொழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளியாக தமிழரசன் மாறினார். காவல்துறையினரிடம் இருந்து தப்பித்து, முந்திரி காடுகளில் வாழ்ந்து, கட்சி நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தார் தமிழரசன்.

1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், கலியபெருமாளும், தமிழரசனும் சந்தித்து பேசும் போது இருவரும் காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டனர். அப்போது தமிழரசன் மட்டும் தப்பி விட, காவல்துறையால் புலவர் கலியபெருமாள் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கலியபெருமாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல் சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக கூறி நக்சல்பாரி கட்சி சார்பாக பல போராட்டம் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, நெய்வேலியைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரி ஒருவரை கொலை செய்ய தமிழரசன் முயன்றார். ஆனால் அந்த அதிகாரி தப்பி விட்டதாகவும், அதைத் தொடர்ந்து 1971ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி புலவர் கலியபெருமாள் கைது செய்யப்பட்டதாக கூறி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், என்று பிபிசி தமிழிடம் கூறினார் தமிழக மக்கள் முன்னணியைச் சேர்ந்த பொழிலன்.

கைதான தமிழரசன்

தமிழ் தேசியம், தமிழரசன், தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

(மாதிரி படம்)

கலியபெருமாள் கைது செய்யப்படும் போது தப்பிய தமிழரசனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்தபடியே பல அரசியல் நடவடிக்கைகளில் தமிழரசன் ஈடுபட்டு வந்தார்.

1972ஆம் ஆண்டு சாரு மஜூம்தார் இறந்த பிறகு, நக்சல்பாரி கட்சிக்குள் பல முரண்பட்ட கருத்துகள் எழுந்தன.

தமிழ்நாட்டில் அழித்தொழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் நடந்த கொலைகளால், இறந்தவர்களின் சொந்த சாதியை சேர்ந்த விவசாயக் கூலிகள் உட்பட அனைவரும் ஒரே அணியில் திரளத் தொடங்கினர். அதனால் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த அளவு மக்களிடையே இந்த நடவடிக்கைக்கு பலன் கிடைக்கவில்லை, என்று பொழிலன் கூறினார்.

அப்போது மக்கள் திரள் போராட்டங்களையும் சேர்த்து போராட்ட வடிவமாக கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு கூட்டுக்குழுவை உருவாக்கி அதற்கு செயலாளராக ஆனார், தமிழரசன்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலையையடுத்து, சில மாதங்களுக்கு பிறகு காவல்துறையால் தீவிரமாக தேடப்பட்டு வந்த தமிழரசன் கைது செய்யப்பட்டார். அரியலூர் பேருந்து நிலையத்தில் வைத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சிறையில் இருந்து தப்ப முயற்சி

தமிழ் தேசியம், தமிழரசன், தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம்,MAY17IYAKKAM

திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழரசன், அங்கு இருந்த புலவர் கலியபெருமாள், முனிராஜ், ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் ஒரே சிறையில் இருந்ததார். பின்னர் அனைவரும் ஆலோசனை செய்து சிறையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தனர்.

ஆனால் சிறையில் இருந்து தப்பித்துச் செல்லும் போது காவல்துறையிடம் தமிழரசனும், புலவர் கலியபெருமாளும் பிடிபட்டனர். அடுத்த சில நாட்களிலேயே சிறையில் இருந்து தப்பிய மற்ற நபர்களையும் காவல்துறை கைது செய்தது.

"சிறை மதில் சுவரின் மின்சார வேலியை தனது கைலியை பயன்படுத்தி தாண்டிக் குதிக்கும் போது புலவர் கலியபெருமாளுக்கு காயம் ஏற்படுகிறது. அவரை காப்பாற்ற திரும்பி வந்த தமிழரசனை, புலவரோடு சேர்ந்து காவல் துறை பிடித்து விட்டது. சிறையில் இருந்து தப்ப முயன்றதற்காக இருவரும் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலினால் தமிழரசன் நினைவிழந்து 2 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்," என்று பிபிசி தமிழிடம் பேசிய போது நினைவுகூர்ந்தார் வழக்கறிஞர் புகழேந்தி.

பின்பு அனைவரையும் வெவ்வேறு சிறைக்கு மாற்றினர் சிறைத்துறை அதிகாரிகள். 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த தமிழரசன், 1983ஆம் சிறையில் இருந்து விடுதலையானார்.

புதிய கட்சி தொடக்கம்

சிறையில் இருந்த காலகட்டத்தில் அகில இந்திய அளவில் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையுடன் முரண்பாடு ஏற்பட்டு, பல விவாதங்களை தமிழரசனும், புலவர் கலியபெருமாளும் மேற்கொண்டனர்.

”தமிழ்நாட்டில் உள்ள சாதிய கூறுகள் காரணமாகவும், இந்தியாவில் நிலவும் பல்வேறு மொழி, கலாசாரம் காரணமாகவும் தேசிய இன விடுதலை என்ற கருத்தை முன்வைத்தார் தமிழரசன்,” என்று பொழிலன் குறிப்பிட்டார்.

தமிழரசனும், புலவர் கலியபெருமாளும் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, தமிழ்நாட்டில் தேசிய இன விடுதலையை ஆதரித்து 1984ஆம் மே மாதம் கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடத்தில் மாநாடு ஒன்று நடந்தது.

இந்த மாநாட்டில் ’தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி’ என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டு, தமிழ்நாடு, நாகா, மிசோ, காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவில் வாழும் பல தேசிய இனங்கள் இந்தியாவில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. மேலும் ஈழத்தில் நடைபெற்று வந்த விடுதலை போராட்டத்திற்கு ஆதரவும் வழங்கப்பட்டது, என்று பிபிசியிடம் பேசிய பொழிலன் கூறினார்.

அரசியல் இயக்கமாக தமிழ்நாடு பொதுவுடமை கட்சி செயல்பட்ட நிலையில், அதன் ஆயுதப்பிரிவாக தமிழ்நாடு விடுதலைப் படை உருவாக்கப்பட்டது. இந்த படைக்கு தமிழரசன் தலைமை தாங்கினார்.

ராஜிவ் காந்தி வருகையின் போது குண்டு வெடிப்பு

தமிழ் தேசியம், தமிழரசன், தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

(மாதிரி படம்)

1985 காலகட்டங்களில் இலங்கை ராணுவத்துடன் இணைந்து விடுதலைப் புலிகளை எதிர்த்து சண்டையிட இந்திய அமைதிப் படையை அனுப்ப முடிவு செய்யப்பட்டு இருந்தது.

மேலும் காவிரி ஆற்றுக்கு குறுக்கே கர்நாடகாவில் பல அணைகளை கட்ட கர்நாடகா அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.

இதை எதிர்த்து தமிழரசன் உள்ளிட்ட பலர் தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தினர். அப்போது இந்திய பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் நடைபெறும் தியாகராஜர் ஆராதனையில் கலந்து கொள்ள வரும் வழியில் இருந்த பாலம் ஒன்று குண்டு வைத்து தகர்ப்பட்டது.

ராஜிவ் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து குடமுருட்டியில் இருந்த அந்த பாலத்தை 1986ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தகர்த்த தமிழ்நாடு விடுதலைப் படையினர் அங்கு ஒட்டிச் சென்ற சுவரொட்டிகளில் இடம் பெற்று இருந்த வாசகங்களை இவை.

இதைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய தமிழ்நாடு விடுதலைப் படையை சேர்ந்த தமிழரசனையும், அவரது கூட்டாளிகளையும் கைது செய்ய காவல்துறை அவர்களைத் தேடியது. தலைமறைவாக இருந்தவர்கள் குறித்து துப்பு அளிக்குமாறு காவல்துறை சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

மருதையாற்று ரயில் பாலம் தகர்ப்பு

தமிழ் தேசியம், தமிழரசன், தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

(மாதிரி படம்)

இந்திய அமைதிப் படை, இலங்கைக்கு செல்வதை தடுக்க வலியுறுத்தி தமிழ்நாட்டில் ஒரு முக்கியமான ரயில் பாலத்தைத் தகர்ப்பதன் மூலம், மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்க இந்தக் குழு முடிவு செய்தது.

அரியலூர் ரயில் நிலையத்தில் இருந்து சில்லக்குடி செல்லும் வழியில் உள்ளது மருதையாற்றுப் பாலம். இந்தப் பாலம்தான் சென்னையையும் திருச்சியையும் இணைக்கும் முக்கியமான ரயில் பாலம்.

இந்தப் பாலத்தை ரயில் வராத நேரமாகப் பார்த்து தகர்த்துவிட்டு, பொறுப்பேற்பது என்று தமிழ்நாடு விடுதலைப் படை சார்பாக முடிவு செய்யப்பட்டது. எதற்காகச் செய்தோம் என்பதை சுவரொட்டிகள் மூலம் பொதுமக்களுக்குச் சொல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக மூன்று குழுக்கள் உருவாக்கப்பட்டன. பாலத்தைத் தகர்க்க ஒரு குழு, சுவரொட்டிகள் மூலம் இந்தச் செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு குழு, குண்டு வெடித்ததும் ரயில் நிலையங்களுக்கு இந்தச் செய்தியைச் சொல்ல ஒரு குழு என வேலைகள் பிரிக்கப்பட்டன.

அதிகாலை 3.10க்கு ஒரு பெரிய வெடிச் சத்தம் கேட்டது. அரியலூர் இருப்புப் பாதை உதவி அலுவலர் டேனியலுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில், மருதையாற்றுப் பாலம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அரியலூர் இருப்பாதை அதிகாரி அதை நம்பவில்லை. சிறிது நேரத்தில் சில்லக்குடி இருப்புப் பாதை அலுவலரும் தொலைபேசி மூலம் இந்தத் தகவலை அவரிடம் சொன்னார். அப்போதும் டேனியல் நம்பவில்லை.

பிறகு மீண்டும் தொலைபேசி மூலம் அழைத்த இருப்புப் பாதை அலுவலர், திருச்சிராப்பள்ளிக்கு வரும் ரயிலை இடையிலேயே நிறுத்த வேண்டுமெனச் சொன்னார். அதை டேனியல் ஏற்கவில்லை.

சென்னையிலிருந்து திருச்சிக்கு வரும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் அதிகாலை 4.35க்கு அரியலூர் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. 4.37க்கு புறப்பட்டது. எட்டு நிமிடத்தில் சில்லக்குடி நிலையத்தை ரயில் அடைய வேண்டும்.

ஆனால், 15 நிமிடமாகியும் ரயில் சில்லக்குடிக்கு வரவில்லை. இதையடுத்து ரயிலைத் தேடி புறப்பட்டார் சில்லக்குடி இருப்புப் பாதை அலுவலர். அவர் மருதையாற்றுப் பாலத்திற்குச் சென்று பார்த்தபோது, பாலம் இடிந்து போயிருந்ததால், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளாயிருந்தது. இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்தார்கள். 90 பேர் காயமடைந்தனர்.

”தமிழரசன் மற்றும் அவரது கூட்டாளிகளின் நோக்கம் ரயில் பாலத்தை தகர்த்து மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பது மட்டும் தான். ரயிலைக் கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த குண்டு வெடிப்பு நடக்கவில்லை. இந்த சம்பவத்திற்கு பிறகு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடத்தக்கூடாது என தமிழ்நாடு விடுதலைப் படை முடிவு செய்தது,” என பிபிசியிடம் பேசிய பொழிலன் தெரிவித்தார்.

கொல்லப்பட்ட தமிழரசன்

தமிழரசன்

பட மூலாதாரம்,THIRUMAOFFICIAL

காவிரி பிரச்னையில் மத்திய அரசுக்கு எதிராக செயல்பட திட்டமிட்ட தமிழ்நாடு விடுதலைப் படை, கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணையை தகர்க்க முடிவுச் செய்தது.

அணையில் குண்டு வைக்க பணம் தேவைப்பட்ட நிலையில், பொன்பரப்பியில் உள்ள ஒரு வங்கியை கொள்ளையடிக்க தமிழரசனும் அவரது கூட்டாளிகளும் திட்டமிட்டனர்.

இதற்காக 1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வங்கிக்கு சென்று கொள்ளையடிக்க முயற்சி செய்த போது, அங்கிருந்த நபர்களால் கல்லால் அடித்து தமிழரசன் கொல்லப்பட்டார்.

”நாங்கள் தமிழ்நாடு விடுதலைப் படையை சேர்ந்தவர்கள், தமிழர் நலனுக்காக பணம் எடுக்க வந்தோம்,” என கல் எறிந்த நபர்களை நோக்கி தமிழரசனும் உடன் இருந்தவர்களும் அப்போது கூறி இருக்கின்றனர்.

தமிழரசனுடன் சேர்த்து உடன் சென்று இருந்த தர்மலிங்கம், செகநாதன், அன்பழகன், பழனிவேலு உள்ளிட்ட 5 பேரும் வங்கிக் கொள்ளையின் போது கொல்லப்பட்டனர்.

https://www.bbc.com/tamil/articles/cjmzx134x40o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.