Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடபகுதியில் தொலைமருத்துவ சேவையை வழங்கும் பன்னாட்டு விசேட மருத்துவ வல்லுநர்கள்: பா. துவாரகன்,

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே நாட்டில் நரம்பியல் அறுவைச் சிகிச்சை விசேட மருத்துவ நிபுணராகவும்  பேகன் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவராகவும்  நரம்பியல் அறுவைச் சிகிச்சைத்துறைப் பேராசிரியராகவும் கடமையாற்றும் ரூபவதனா மகேஷ்பரன் 1966 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி சாவகச்சேரியில் பிறந்தார்.

Prof. Rupavathana(Ruby) Mahesparan MD, PhD

                                  Prof.-RupavathanaRuby-Mahesparan-MD-PhD.

சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்ற ரூபவதனா க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் விசேட திறமைச் சித்தியைப் பெற்றார். உயர்தரப் பரீட்சையில் அதிவிசேட திறமையை வெளிப்படுத்தி யாழ். பல்கலைக்கழக மருத்துவப் பீடத்துக்குத் தெரிவானார்.

தனது 13 ஆவது வயதில் பரதநாட்டிய அரங்கேற்றம் செய்த ரூபவதனா பாடசாலை மாணவியாக இருந்த காலத்தில் சங்கீதம், நாடகம், ஆங்கிலப் பேச்சு மற்றும் விளையாட்டிலும் தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தி சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு புகழைப் பெற்றுக் கொடுத்ததுடன் பாடசாலை வலைப்பந்தாட்ட அணி, மெய்வல்லுநர் அணி மற்றும் இல்ல விளையாட்டு அணித்தலைவியாகவும் திகழ்ந்தார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் 9 ஆவது அணியில் பயின்ற ரூபவதனா 2 ஆவது எம்பிபிஎஸ் பரீட்சையில் முதல் வகுப்பில் சித்தியெய்தி உடற்கூற்றியல் பாடத்தில் தங்கப்பதக்கத்தை பெற்றதுடன் புள்ளி அடிப்படையில் முதல் நிலை மாணவியாகத் தெரிவானார். எதிர்பாராதவிதமாக ரூபவதனா அவர்களால் யாழ்ப்பாணத்தில் மருத்துவக் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நோர்வேக்கு குடிபெயர்ந்து நோர்வேஜிய மொழியில் மருத்துவம் பயின்று மருத்துவமாணிப் பட்டத்தைப் பெற்றார். ரூபி அவர்கள் மருத்துவ மாணவியாக இருக்கும்போதே மூளையில் ஏற்படும் புற்றுநோய்க் கட்டிகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு முனைவர் பட்டத்தைப் (PhD) பெற்றிருந்தார் என்பது விசேடமாகக் குறிப்பிடத்தக்கது.

ரூபவதனா மருத்துவராகி உள்ளகப் பயிற்சியை நிறைவுசெய்த பின்னர் நரம்பியல் அறுவைச் சிகிச்சைத் துறையில் விசேட நிபுணத்துவப் பயிற்சியைப் பெற்று ஹொக்கலாந்து பல்கலைக்கழகப் போதனா மருத்துவமனையில் முதலாவது பெண் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணராக 2005 இல் நியமனம் பெற்றதுடன் நோர்வே நாட்டின் 4 ஆவது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் என்ற சிறப்பையும் பெற்றார்.

இவர் நரம்புகளில் ஏற்படும் புற்றுநோய் தொடர்பிலும் மண்டையோடு, அடி மூளைச் சுரப்பி அறுவைச் சிகிச்சையிலும் மூளையில் ஏற்படும் சிதைவுகளுக்கான (Gamma knife radiosurgery) ஃகாமா கதிர்களைத் துல்லியமாகச் செலுத்தி மேற்கொள்ளும் கதிரியக்கச் சிகிச்சைகளை மேற்கொள்வதிலும் விசேட நிபுணத்துவம் பெற்றவர். மேலும் சிறுவர்களுக்குரிய மூளை-நரம்பியல் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வதிலும் நெடுநாளைய நரம்பியல்  குறைபாடுகளுக்கு மேற்கொள்ளும் அறுவைச் சிகிச்சையிலும் சிறப்புத் தேர்ச்சியும் அனுபவமும் பெற்றவர்.

ரூபவதனா  மகேஷ்பரன் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் நரம்பியல் அறுவைச் சிகிச்சைகளை அறிமுகம் செய்து பயிற்சி வழங்கும் பல்வேறு செயற்றிட்டங்களின் தலைமைப் பொறுப்பிலும் பதவிவகிக்கின்றார்.

சில வருடங்களுக்கு (2019 இல்) முன்னர் எதியோப்பியாவில் இரட்டைத்தலையுடன் (Encephalocele) பிறந்த பெண்குழந்தை இரட்டைத்தலை காரணமாக நித்திரை கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியிருந்தது.  ரூபவதனா நோர்வேயிலிருந்து எதியோப்பியாவிற்குச் சென்று 16 மாதங்களேயான இப் பெண்குழந்தைக்கு அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு பாலகியின் உயிர் காத்தார். ரூபவதனா அவர்கள் தொண்டாகச் செய்த அரும்பெரும் பணிகளில் இதுவும் ஒன்று.

Head.png?resize=800%2C697

பேராசிரியர் ரூபவதனாவின் மருத்துவ ஆராய்ச்சிகள் நரம்புடன்  தொடர்புடைய புற்றுநோயியல் மற்றும் சிறுவர்களுக்கான நரம்பியல் அறுவைச் சிகிச்சை ஆகியவற்றினைக் கருப்பொருளாகக் கொண்டவை.  உள்ளூர் மற்றும் பன்னாட்டு மருத்துவ ஆய்வேடுகளில் இவரது  37 ஆராய்ச்சிக் கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. ரூபி அவர்கள் நோர்வேஜிய அறுவைச் சிகிச்சைக் கழகத்தினால் வெளியிடப்படும் சஞ்சிகையின் கருப்பொருள் ஆசிரியராக 2013, 2017 ஆகிய ஆண்டுகளில் பதவி வகித்துள்ளார்.

சிறுவர்களது மூளைக் கலங்களில் ஏற்படும் கட்டிகள் தொடர்பில் நோர்வே நாட்டிற்குரிய வழிகாட்டல் குறிப்புக்கள் தொகுப்பின் இணை ஆசிரியர்களில் ரூபவதனாவும் ஒருவர். இவர் நோர்வேயிலுள்ள பல்வேறு நரம்பியல் அறுவைச் சிகிச்சைச் சங்கங்களின் இயக்குநர் சபைகளில் அங்கத்தவராகவும் சிலவற்றில் பணிப்பாளராகவும் விளங்குகின்றார். குறிப்பாக நோர்வேஜிய நரம்பியல் அறுவைச் சிகிச்சை சங்கத்தின் தலைவராகவும், European Society for Stereotactic and Functional Neurosurgery (ESSFN) அமைப்பின் நோர்வே நாட்டின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பதவியை அலங்கரிக்கின்றார்.

பேராசிரியர் ரூபவதனா நோர்வேயிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகவும் மருத்துவ முனைவர் பட்டப்படிப்பு (PhD) மாணவர்களது பரீட்சகராகவும் கடமையாற்றி வருகின்றார். 2005 முதல் வருடந்தோறும் இரு மாதங்கள் எதியோப்பியாவுக்குச் சென்று அடிஸ் அபாபா பல்கலைக்கழகத்தில் நரம்பியல் அறுவைச் சிகிச்சைத் துறையில் சிறப்புப் பயிற்சிபெறும் மாணவர்களுக்கு விரிவுரையும் செயல்முறைப் பயிற்சியும் அளித்து வருகின்றார்.

vathana.png?resize=535%2C671

துறைசார் விசேட மருத்துவ வல்லுநர்கள் பங்குபற்றும் கதிரியக்கவியல் பூகோள தொலைமருத்துவக் கருத்தரங்கு (Global Multi-Disciplinary-Team Teleradiology Forum)

  1. நரம்பியல் அறுவைச் சிகிச்சைப் பேராசிரியர் ரூபவதனா மகேஷ்பரன் (நோர்வே), ஓய்வுநிலை நரம்பியல் அறுவைச் சிகிச்சைப் பேராசிரியர் கதிர் நடனச்சந்திரன் (அவுஸ்.) மற்றும் கதிரியக்கவியல் விசேட மருத்துவ நிபுணர் பொன். கேதீஸ்வரன்(அவுஸ்.) ஆகியோர் வியாழக்கிழமைகளிலும்
  2. தசை-வன்கூட்டு கதிரியக்கவியல் துறையில் விசேட பயிற்சிபெற்ற கதிரியக்கவியல் விசேட மருத்துவ நிபுணர் நிரூசினி சத்தியகுமார்(நியூசிலாந்து) மற்றும் கதிரியக்கவியல் விசேட மருத்துவ நிபுணர் பொன். கேதீஸ்வரன்(அவுஸ்.) ஆகியோர் திங்கட்கிழமைகளிலும்
  3. பேராசிரியர் குமரேசன் சந்திரசேகரன் (அமெரிக்கா), மற்றும் பேராசிரியர் சிவி எஸ். சிவா (அமெரிக்கா)  ஆகியோர் வெள்ளிக்கிழமைகளிலும்

யாழ். போதனா மருத்துவமனையால் 2019 இல் ஆரம்பிக்கப்பட்ட பூகோள தொலைமருத்துவக் கதிரியக்கவியல் கருத்தரங்குகளில் காணொலி வழியாகப் பங்குபற்றி யாழ். போதனா மருத்துவமனைக்கும் இப்பிராந்திய மக்களுக்கும் தொடர்ச்சியாக வழங்கிவரும் தன்னார்வ மருத்துவ சேவையானது விலைமதிப்பற்றது.

நரம்பியல் அறுவைச் சிகிச்சை கதிரியக்கவியல் பூகோள தொலைமருத்துவக் கருத்தரங்கு (Global MDT Neurosurgery Teleradiology  Forum):

forum.png?resize=800%2C593

இலங்கையின் வடபகுதியில் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணரையும் அறுவைச் சிகிச்சைக் கூடத்தையும் கொண்ட ஒரேயொரு அரச மருத்துவமனையாக யாழ். போதனா மருத்துவமனையே விளங்குகின்றது. யாழ். போதனா மருத்துவமனையில் கடமையாற்றுபவரும் இலங்கையின் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க முன்னணி நரம்பியல் அறுவைச் சிகிச்சை விசேட மருத்துவ வல்லுநர்களில் ஒருவருமான பொன்னம்பலம் ஆதித்தன் அவர்களது தலைமையிலான மருத்துவ நிபுணர் குழுவினர் தெரிவு செய்யும் சிக்கலான நரம்பியல் சத்திரசிகிச்சையுடன் தொடர்புடைய கதிரியக்கவியல் படங்களை பன்னாட்டு துறைசார் விசேட மருத்துவ நிபுணர்கள் வாராந்தம் வியாழக் கிழமைகளில் நடைபெறும் கருத்தரங்குகளில் ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொள்கின்றனர்.

இலங்கைக்கும் நோர்வே நாட்டுக்குமிடையில் குளிர், கோடை காலங்களுக்கு ஏற்ப 3.30 அல்லது 4.30 மணி நேர வேறுபாடு காணப்படுகிறது. வாரந்தோறும் வியாழக் கிழமைகளில் ரூபவதனா பல்கலைக்கழகக் கடமைக்குப் புறப்படு முன்னர் காலை 6.30 மணிக்கு எம்மோடு காணொலி வழியாக இணைந்திருப்பார். எமது மருத்துவ நிபுணர்கள் தெரிவு செய்யும் நரம்பியல் சத்திரசிகிச்சையுடன் தொடர்புடைய சிக்கலான கதிரியக்கவியல் படங்களை ரூபவதனாவும்  ஏனைய மருத்துவ வல்லுநர்களும் ஆய்வு செய்து தீர்மானங்களை மேற்கொள்வார்கள்.

பேராசிரியர் ரூபவதனா மகேஷ்பரன்  அவர்களை நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் பொன்னம்பலம் ஆதித்தன் (Consultant Neurological Surgeon) பின்வருமாறு மதிப்பிடுகிறார்:

Vathana1.png?resize=800%2C598

பேராசிரியர் ரூபவதனா யாழ். போதனா மருத்துவமனையால் ஒழுங்குபடுத்தப்பட்ட 81 இணையவழிக் கருத்தரங்கில் (2020.02.27 முதல் 2023.04.12வரை)  கலந்து கொண்டு மிகவும் ஆபத்து நிறைந்த நரம்பியல் சத்திர சிகிச்சைகளை மேற்கோள்ளும் போது பின்பற்ற வேண்டிய மாற்று வழிகளைப் பற்றியும் தனது அனுபவங்களையும் எம்மோடு பகிர்ந்து கொண்டமை இத்துறையில் எமக்குப் புதிய அறிவைத் தந்துள்ளது. கடந்த 3 வருடங்களில் பேராசிரியர் ரூபவதனாவும் ஏனைய பன்னாட்டு விசேட மருத்துவ நிபுணர்களும் நாம் தெரிவு செய்த மூளை-முள்ளந்தண்டு-நரம்பியல் தொடர்பான சிக்கலான சத்திர சிகிச்சைக்குரிய 500 நபர்களது கதிரியக்கவியல் படங்களை எம்முடன் இணைந்து பார்வையிட்டு சத்திர சிகிச்சைக்கு முன்னரும் சத்திர சிகிச்சை மேற்கொண்ட பின்னரும் நாம் முன்வைக்கும் வினாக்களுக்கு தரும் விளக்கங்கள் மிகவும் பெறுமதியானவை.

அண்மையில் ரூபவதனா அவர்கள் யாழ். போதனா மருத்துவமனைக்கு வருகை தந்து இங்குள்ள நரம்பியல் சத்திர சிகிச்சை அலகை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளதுடன் சத்திர சிகிச்சை உபகரணங்களையும் உதிரிப்பாகங்களை நன்கொடையாக  வழங்கியமையானது யாழ். போதனா மருத்துவமனையில் நரம்பியல் சத்திரசிகிச்சைகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்  பேருதவியாக அமைந்துள்ளது.

நரம்பியல் அறுவைச் சிகிச்சைப் பேராசிரியர் ரூபவதனா சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆசிரியர் மகேஷ்பரன் அவர்களின் மகளாவார்.  (தொடரும்)

வடபகுதியில் தொலைமருத்துவ சேவை வழங்கும் விசேட மருத்துவ வல்லுர்கள்: பகுதி -1

வடபகுதியில் தொலைமருத்துவ சேவையை வழங்கும் பன்னாட்டு விசேட மருத்துவ வல்லுநர்கள்:

 பா. துவாரகன்,

அபிவிருத்தி உத்தியோகத்தர்  (பொறுப்பு)

மருத்துவ அருங்காட்சியகம் மற்றும் தொலைமருத்துவப் பிரிவு

போதனா மருத்துவமனை,

யாழ்ப்பாணம்.

http://globaltamilnews.net/2023/189690/

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடபகுதியில் தொலைமருத்துவ சேவை வழங்கும் விசேட மருத்துவ வல்லுர்கள்: பகுதி -1

written by Admin April 2, 2023
IMG_20221118_083808.jpg?fit=969%2C726&ss

IMG_20221118_083808.jpg?resize=800%2C599

கதிரியக்கவியல் பேராசிரியர்
மருத்துவர் குமரேசன் சந்திரசேகரன்
Kumaresan Sandrasegaran, MD, FRCR, FSAR, FESGAR, is a Senior Associate Consultant at Mayo Clinic, AZ, with special interest in Abdominal Imaging

1963 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி கொழும்பில் பிறந்த குமரேசன் சந்திரசேகரன் தனது பாடசாலைக் கல்வியை கொழும்பு ரோயல் கல்லூரியில் நிறைவு செய்து சிம்பாபேயிலுள்ள கொட்பிரி ஹக்கின்ஸ் மருத்துவக் கல்லூரியில் (Godfrey Huggins Medical School, Zimbabwe) பயின்று 1985 ஆண்டு மருத்துவப் பட்டத்தைப் பெற்றார்.

அமெரிக்காவில் வசிக்கும் குமரேசன் சந்திரசேகரன் அமெரிக்காவில் முதல்நிலை மருத்துவமனையாக விளங்கும் மையோ கிளினிக்கில் விசேட கதிரியக்கவியல் மருத்துவ நிபுணராகக் கடமையாற்றுகின்றார். 2016 ஆம் ஆண்டு முதல் கதிரியக்கவியல் பேராசிரியராக (Professor of Radiology) பதவி உயர்வு பெற்றுள்ள குமரேசன் அமெரிக்காவிலுள்ள பல்வேறு கதிரியக்கவியல் சங்கங்களின் பணிப்பாளர் சபைகளிலும் தலைமைப் பொறுப்பிலும் பதவி வகிக்கின்றார்.

Prof.-Kumaresan.jpg?resize=689%2C800
ஒருவருக்கு ஏற்பட்ட நோயைக் கண்டறிவதில் உடல் உள்ளுறுப்புக்களை ஆய்வு செய்யும் கதிரியக்கவியல் பரிசோதனை (Radiology Imaging) என்பது பிரதானமானதாக விளங்குகின்றது. பேராசிரியர் குமரேசன் அவர்கள் வயிற்றுடன் தொடர்புடைய கதிரியக்கவியல் (Abdominal Imaging) பிரிவில் விசேட நிபுணத்துவம் பெற்றவர். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் ஏற்படும் புற்றுநோயைக் கண்டறிவதிலும் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் சிக்கலான புற்றுநோய்க்கட்டிகளை சத்திரசிகிச்சை செய்து அகற்றிய பின்னர் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் பற்றிய தீர்மானம் மேற்கொள்வதிலும் விசேட நிபுணத்துவமும் அனுபவமும் பெற்றவர் (He has expertise in: Imaging of postoperative imaging after complex surgery, to sort out what is expected after surgery and what is a complication). மேலும் கதிரியக்கவியல் வழிகாட்டலில் மரபணு மூலக்கூறுகளின் அடிப்படையில் புற்றுநோய்களை இனங்காண்பதற்காக மேற்கொள்ளப்படும் இழைய மாதிரிகளைப் பெற்றுக்கொள்ளும் செயல்முறையிலும் உடலில் தேங்கியிருக்கும் வேண்டாத திரவங்களை வெளியேற்றும் செயல்முறையிலும் விசேட நிபுணத்துவம் பெற்றவர்(He has expertise in: Image-guided biopsy and drainages, especially guided biopsy of focal masses for molecular genetics). பேராசிரியர் குமரேசன் சந்திரசேகரன் அவர்கள் இன்று உலகில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய முன்னணி கதிரியக்கவியல் பேராசிரியர்களில் ஒருவர்.

பேராசிரியர் குமரேசன் அவர்கள் வயிற்றுப் பகுதி கதிரியக்கவியல் படங்களை ஒப்பிட்டு மதிப்பீடு செய்து இதுவரை 170 இற்கும் மேற்பட்ட மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகளை பிரசுரித்துள்ளதுடன் 14 நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் 70 இற்கும் மேற்பட்ட விரிவுரைகளையும் நிகழ்த்தியுள்ளார். கதிரியக்கவியல் துறைசார்ந்த 3 நூல்களை எழுதியுள்ளதுடன் 20 நூல்களில் அத்தியாயங்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்கள் அமெரிக்கப் பல்கலைக்கழங்களில் பாடநூல்களாக இடம்பெற்றுள்ளன.

வட அமெரிக்க கதிரியக்கவியல் சங்கம் 2013, 2014, 2016, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் சிறந்த ஆசிரியர்களாகத் தெரிவு செய்தவர்களில் பேராசிரியர் குமரேசனும் ஒருவர். குமரேசன் சந்திரசேகரன் கற்பித்தலில் காண்பித்த சிறந்த மேதகைமைக்காக 2012 இல் இன்டியான மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் சபை விருதையும் பெற்றுள்ளார்.

இலங்கையின் மருத்துவ வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்திய யாழ். போதனா மருத்துவமனை .யாழ். போதனா மருத்துவமனையில் அமைந்துள்ள மருத்துவ அருங்காட்சியகம் மற்றும் தொலைமருத்துவப் பிரிவானது (Jaffna Medical Museum & Telemedicine Unit) யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்களது தூரநோக்கு சிந்தனையில் 2018 ஆம் ஆண்டு உருவானது. அருங்காட்சியக அலகில் மருத்துவக் கற்கைநெறிசார்ந்த பன்னாட்டு நிபுணர்கள் கலந்துகொள்ளும் தொலை மருத்துவப் பயிலரங்குகள், மருத்துவ நிபுணர்களுக்கான நேரலை – நிகழ்நிலை பன்னாட்டுத் தேர்வுகள் முதலான பல்வேறு கல்விச் செயற்பாடுகள் நடைபெறுகின்றன.

IMG_3640.jpg?resize=800%2C600

யாழ். போதனா மருத்துவமனையில் இயங்கும் மருத்துவ அருங்காட்சியக தொலைமருத்துவப் பிரிவானது இலங்கையில் வேறு எந்த மருத்துவமனையிலும் இல்லாத தனித்துவமான சேவையை 5 ஆண்டுகளாக வழங்கி வருகிறது. சுகாதார அமைச்சினால் தொலைமருத்துவ சேவையின் முன்னோடி மருத்துவமனையாக யாழ். போதனா மருத்துவமனை அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி அவர்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களால் பாராட்டுப் பெற்றுள்ளார்.

இலங்கையின் மருத்துவ வரலாற்றில் யாழ். போதனா மருத்துவமனையில் அமைந்துள்ள அருங்காட்சியக அலகானது மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் ஏனைய மருத்துவமனைகளில் காணப்படாத வரலாற்று ஆவணங்களையும் பழமை வாய்ந்த உபகரணங்களையும் கொண்டிருப்பதுடன் நவீன தொழிநுட்பம் வாயிலாக மருத்துவத்தை மருத்துவக் கல்வியை இன்னோர் நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது.

பேராசிரியர் குமரேசனது அர்ப்பணிப்பு மிக்க நிபுணத்துவ ஆலோசனை

பேராசிரியர்  குமரேசன் சந்திரசேகரன் கடந்த 2019 செப்ரெம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் யாழ். போதனா மருத்துவமனையில் கடமையாற்றும் விசேட மருத்துவ நிபுணர்களுடனும் இலங்கையின் பிறபகுதிகளிலுள்ள மருத்துவமனைகளில் கடமையாற்றும் விசேட மருத்துவ நிபுணர்களுடனும் மற்றும் மருத்துவர்களுடனும் இணையவழி ஊடாக நடைபெறும் தொலைமருத்துவக் கலந்துரையாடல்களில் வளவாளராகப் பங்குபற்றி மருத்துவ நிபுணத்துவ ஆலோசனையைத் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றார்.

பேராசிரியர் குமரேசன் இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் சிகிச்சை பெற்ற 1000 இற்கும் மேற்பட்டவர்களுக்கு வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட சிக்கலான நோய்நிலைகள் தொடர்பாக யாழ். போதனா மருத்துவமனை மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து கதிரியக்கவியல் தொடர் படங்களை ஆய்வு செய்து நோய்களை நிருணயிப்பதிலும் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் பற்றியும் வழங்கிய மேலதிக நிபுணத்துவ ஆலோசனைகள் விலைமதிப்பிட முடியாத அளவிற்கு பெறுமதி வாய்ந்தவையாகும்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதலாக யாழ். போதனா மருத்துவமனையால் ஒழுங்குபடுத்தப்பட்டுத் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பல்துறைசார் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொள்ளும் 334 (27.03.2023 வரை) இணையவழி தொலைமருத்துவ (Multi-Disciplinary-Team-Teleradiology-Meetings) கலந்துரையாடல்களில் பேராசிரியர் குமரேசன் அவர்கள் 136 கருத்தமர்வுகளில் (Abdominal MDT Teleradiology Meetings) கலந்துகொண்டு தனது நிபுணத்துவ ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கியுள்ளார். பேராசிரியரது அர்ப்பணிப்பான தன்னார்வ மருத்துவ ஆலோசனையானது குறிப்பாக யாழ். போதனா மருத்துவமனையிலும் மற்றும் தெல்லிப்பழை பாதை புற்றுநோய் மருத்துவமனை (Trail Cancer Hospital, Tellippalalai), வவுனியா பொது மருத்துமனை முதலான மருத்துவமனைகளில் சிசிச்சை பெற்று வருகின்ற பலருக்கும் பயனுள்ளதாக அமைந்து வருகிறது.

யாழ். போதனாவில் கடமையாற்றும் கதிரியக்கவியல் விசேட மருத்துவ நிபுணர் (Consultant Radiologist) ஒருவர் பேராசிரியர் குமரேசன் அவர்களைப் பின்வருமாறு மதிப்பிடுகிறார்:

IMG_6376.jpg?resize=800%2C600
“நாம் ஒரு மருத்துவப் பேராசிரியரிடம் படித்திருக்கிறோம், படிக்கலாம்; ஆனால் கதிரியக்கவியல் பேராசிரியரிடம் (Professor of Radiology) படிப்பதென்பது எமக்குப் பெரிய ஒரு கொடை. அதுவும் உலகின் சிறந்த ஒரு கதிரியக்கவியல் பேராசிரியராகவும் மருத்துவ நிபுணராகவும் விளங்கும் ஒருவரிடம் படிப்பதும் அவரது ஆலோசனையைப் பெறுவதென்பதும் மிகப் பெரிய ஒரு விடயம். அவரிடம் ஒரு நாளைக்கு ஒருமணிநேரம் படிக்க இலட்சம் ரூபா கொடுத்தாலும் நேரத்தைப் பெறுவதரிது. அவர் கடந்த 4 வருடங்களாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் 1 – 2 மணிநேரம் எம்முடன் நிகழ்நிலை காணொலி வழியாக இணைந்திருப்பார். அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் 12 மணிநேர வேறுபாடு. எமக்கு வெள்ளி காலை நேரம் 7.45 என்றால் பேராசிரியருக்கு வியாழன் இரவு 7.15. அவர் தனது கடமையை முடித்து, களைத்திருக்கும் இரவு வேளையில் நாம் தெரிவுசெய்யும் மிகவும் சிக்கலான சிரி, எம்.ஆர்.ஐ தொடர் படங்களை எம்மோடு இணைந்து பொறுமையாகப் பார்வையிடுவார். அவரது ஆலோசனையை, கருத்தைப் பெறுவது மிகவும் பெறுமதி வாய்ந்ததும் அரிதானதுமாகும். சில நாள்களில் பேராசிரியர் 15 முதல் 20 வரையான நபர்களது சிக்கலான சிரி, எம்.ஆர்.ஐ தொடர் படங்களைப் பார்வையிட்டு உறுதியான தீர்மானங்களை வழங்கியுள்ளார்.”

பேராசிரியர் குமரேசனைப் பற்றி யாழ். போதனா மருத்துமனையில் கடமையாற்றும் இரப்பை – குடலியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் விநாயகமூர்த்தி துஸ்யந்தன் (Consultant Gastroenterological Surgeon) பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“வயிற்றுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன் சிக்கலான நோய் நிலையுள்ள ஒருவரது நோய் தொடர்பில் பேராசிரியரிடம் கருத்தை வினவும் போது பேராசிரியர் சிரி, எம்.ஆர்.ஐ. படங்களைப் பார்த்து குறிப்பிடும் விடயங்கள், நான் அறுவைச் சிகிச்சைக் கூடத்தில் வயிற்றைக் கீறிப் பார்க்கும் போது அவர் கூறியது போன்றே இருக்கும். பேராசிரியது கருத்தினை “Multi-Disciplinary-Team-Teleradiology Meeting” இல் கேட்டபின்னர் நான் மிகுந்த நம்பிக்கையுடன் சத்திரசிகிச்சைக் கூடத்துக்குச் செல்வேன் (After receiving professor’s opinion, I will go to the theatre with confident)”.

பேராசிரியர் குமரேசன் சந்திரசேகரன் அவர்கள் மருத்துவத்துறையில் இப்பிராந்தியத்தில் சிகிச்சை பெறும் மக்களுக்கு ஆற்றிவரும் அர்ப்பணிப்பு மிக்க தனித்துவமான சேவையானது ஈடிணையற்றது.

பன்னாட்டு நரம்பியல் அறுவைச் சிகிச்சை பேராசிரியர்கள் கதிரியக்கவியல் நிபுணர்கள் வழங்கும் ஆலோசனை

யாழ். போதனா மருத்துவமனையில் நடைபெறும் மேற்குறிப்பிட்ட பன்னாட்டு நிபுணர்கள் பங்குபெறும் தொலை மருத்துவக் கலந்துரையாடல்களில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, நோர்வே, அமெரிக்கா முதலான நாடுகளில் வசிக்கும் பேராசிரியர்களும் துறைசார் விசேட மருத்துவ நிபுணர்களும் யாழ். போதனா மருத்துவமனை மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து 1250 இற்கும் மேற்பட்டவர்களுக்கு தீர்மானங்களை மேற்கொண்டுள்ளனர்.

யாழ். போதனா மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளில் மொத்தமாக 2250 இற்கும் மேற்பட்டவர்களது கதிரியக்கவியல் படங்கள் துறைசார் நிபுணர்கள் கலந்து கொண்ட பூகோள கருத்தமர்வில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

பா. துவாரகன் , அபிவிருத்தி உத்தியோகத்தர் (பொறுப்பு)
மருத்துவ அருங்காட்சியகம் மற்றும் தொலைமருத்துவப் பிரிவு
போதனா மருத்துவமனை, யாழ்ப்பாணம்
(தொடரும்)

https://globaltamilnews.net/2023/189278/

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பு.

இணைப்புக்கு நன்றி. 

எமக்கென ஒரு அரசு இருந்தால்..?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.