Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்காக ஏன் உண்மை ஆணைக்குழு இல்லை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்காக ஏன் உண்மை ஆணைக்குழு இல்லை?

 
srilankabombingap_19112545435857-1bdcbac

Photo, Gemunu Amarasinghe/AP, NPR.ORG

மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின்போது கூட கண்டிராத வகையிலான அதிர்ச்சியிலும் பயங்கரத்திலும் முழு நாட்டையும் ஆழ்த்திய 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு மூன்று ஈஸ்டர் ஞாயிறுகள் கடந்துவிட்டன. மூன்று தேவாலயங்களிலும் மூன்று ஆடம்பர  ஹோட்டல்களிலும் பத்து தற்கொலைக் குண்டுதாரிகளினால் ஏககாலத்தில் ஒருங்கிசைவான முறையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 272 பேர் கொல்லப்பட்டதுடன் 500 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இவர்களில் முழு குடும்பங்களும் பெற்றோருடன் பிள்ளைகளும் இலங்கையின் அன்பையும் நட்பிணக்கத்தையும் அனுபவிக்க வந்த  வெளிநாட்டவர்களும் அடங்குவர்.

இரு மாதங்களாக நாடு முடங்கிப்போய்க் கிடந்தது. அப்போது பரவிய வதந்திகளினால் பீதியடைந்த மக்கள் சந்தடிமிக்க பகுதிகளுக்கு வரத் தயங்கினர். உள்நாட்டில் முன்னைய முரண்நிலை வரலாற்றைக் கொண்டிராத ஒரு சிறுபான்மை மதக்குழு இன்னொரு சிறுபான்மை மதக்குழுவுக்கு எதிராக மேற்கொண்ட அந்த குண்டுத் தாக்குதல்களுக்கு எந்தவிதமான தர்க்க நியாயமும் கிடையாது. இந்தத் தாக்குதல்கள் ஒரு தசாப்தத்துக்கு முன்னர் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த பிறகு முன்னெடுக்கப்பட்ட நல்லிணக்கப் பணிகள் சகலதையும் கெடுத்துவிட்டன.

குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு நிலவிய குழப்பநிலை மற்றும் ஊகங்களுக்கு மத்தியில் முழு நாடும் அச்சத்தில் உறைந்திருந்தது. ஆனால், சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அத்தகைய அச்சவுணர்வை வெளிக்காட்டவில்லை. தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு அவலம் நிறைந்ததாக காட்சி தந்த இடங்களுக்கு முதலில் வந்தவர்களில் ஒருவர் அப்போது எதிர்க்கட்சியில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. அப்போது ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் விருப்பத்தைக் கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ எதிர்க்கட்சியில் இருந்து அந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மிகவும் பொருத்தமான வேட்பாளர் என்று உடனடியாகவே தன்னை அறிவித்ததை காணக்கூடியதாக இருந்தது.

ஒரு தசாப்தத்துக்கு முன்னதாக விடுதலைப் புலிகளை போரில் தோற்கடித்ததைப் போன்று தேசிய பாதுகாப்பை மீண்டும் நிலைநாட்டுவதாக அவர் உறுதியளித்தார். பீதியில் வாழ்ந்துகொண்டிருந்த நாட்டு மக்கள் மத்தியில் அவரது உறுதிமொழி எடுபட்டது. 2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் அவரை ஒரு மிகப்பெரிய பெரும்பான்மை வாக்குகளால் தெரிவுசெய்தனர்.

ஆனால், அடுத்தடுத்து பதவிக்கு வந்த மூன்று ஜனாதிபதிகளின் கீழான அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்ற உண்மையை வெளிப்படுத்தவில்லை. இதுவரையில் அது விடயத்தில் உயர்நீதிமன்றம் மாத்திரமே சிறந்த பணியை செய்திருக்கிறது எனலாம். சட்டரீதியான நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் உகந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படாத நிலையில் கத்தோலிக்க திருச்சபையும் வேறு குடிமக்களும் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மீறல் வழக்கொன்றை அடுத்தே அது நடந்தது.

விசாரணை அறிக்கைகளை பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நான்கு சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளும் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு  தகவல் தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் மூலம் பொறுப்பை அலட்சியம் செய்ததாக அவர்களை குற்றவாளிகளாகக் கண்டது. அவர்களுக்கு எதிராக கோடிக்கணக்கான ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இருந்திருக்கக்கூடிய சூத்திரதாரிகளை உயர்நீதிமன்றம் அடையாளம் காணவில்லை. அதனால், உண்மையைக் கண்டறிவதற்கு தேடுதல் தொடருகிறது.

இதுவரையான அரசாங்க விசாரணைகள் திருப்தியானவையாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியவையாகவும் அமையவில்லை என்று கார்டினல் மல்கம் ரஞ்சித் அண்மையில் ஊடக நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார். “உத்தியோகபூர்வ நீதி வழிமுறைகள் எம்மைப் பொறுத்தவரை நேர்மையாக நடந்துகொள்ளவில்லை. ஈஸ்டர் தாக்குதல்கள், அவற்றுக்கான காரணிகள், அதில் பங்கேற்றவர்கள், சூத்திரதாரிகள் மற்றும் ஏனைய சக்திகள் தொடர்பில் அக்கறையும் அர்ப்பணிப்பும் கொண்ட விசாரணை ஒருபோதும் மேற்கொள்ளப்படவில்லை” என்று அவர் சொன்னார்.

தற்போதைய ஜனாதிபதிக்கு சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு இருப்பதால் அவர் பதவியில் இருந்து விலகியதும் எதிர்காலத்தில் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்படும் என்று எச்சரிக்கை செய்த கார்டினல் ஜனாதிபதி எல்லாக் காலத்திலும் அந்தப் பதவியில் இருக்கப்போவதில்லை. ஆனால், கத்தோலிக்க திருச்சபை தொடர்ந்து  இருக்கும். அவருக்குப் பிறகு வருபவர்களும் நடவடிக்கைகளை தொடரவேண்டியிருக்கும்  என்று சுட்டிக்காட்டினார்.

உண்மை ஆணைக்குழு 

உண்மை வெளிப்படாத பட்சத்தில் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான சர்ச்சைக்கு முடிவு கிடைக்காது. சந்தேகங்கள் மாத்திரமே ஆழமாக தொடரும். கார்டினல் மல்கம் ரஞ்சித் தனது மிகவும் அண்மைய அறிக்கைகளிலும் உரைகளிலும் முன்னரை விடவும் கூடுதலான அளவுக்கு வெளிப்படையாக கருத்துக்களைத் தெரிவித்திருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. “ஈஸ்டர் தாக்குதல்கள் இடம்பெற்று இப்போது எத்தனை வருடங்கள் கடந்துவிட்டன. நான்கு வருடங்கள். இன்னமும் நீதி கிடைக்கவில்லை. உண்மையில் என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியவில்லை. பல விடயங்களை ஆட்கள் பேசுகிறார்கள். நாம் நீதிக்காகவும் உண்மைக்காகவும் போராடவேண்டியது முக்கியமானதாகும். அது தான் கிறிஸ்தவம்” என்று அவர் கொழும்பில்  ஈஸ்டர் நள்ளிரவு ஆராதனையில் கூறினார்.

நீதியைப் பெறுவதில் திருச்சபைக்கு இருக்கும் ஊசலாட்டமில்லாத உறுதிப்பாட்டை வெளிக்காட்டுவதற்கு அப்பால் இது 1979ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்துவரும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மிகவும் பெருமளவு துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுத்த கொடூரமான ஏற்பாடுகளைக் கொண்டிருந்தபோதிலும் கூட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களை எவ்வாறு தடுக்கத் தவறியது என்பதற்கு தெளிவான ஒரு உதாரணமாகவும் விளங்குகிறது. இந்த படிப்பினையை மறந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விடவும் மிகவும் மோசமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஒன்றை முன்வைத்திருப்பது வேதனைக்குரியதாகும்.

மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரின்போது நடந்தவற்றை ஆராய்ந்து தேசிய நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கு உண்மை ஆணைக்குழுவொன்றை அமைக்கப்போவதாக அரசாங்கம் செய்திருக்கும் அறிவிப்பு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களை கையாளப்போவதில்லை. பதிலாக 1983 ஜூலை 24 தொடக்கம் 2009 மே 18 வரையான காலப்பகுதியையே உத்தேச ஆணைக்குழு ஆராயவிருக்கிறது. விளக்கமாக கூறப்படாவிட்டாலும், இது கெரில்லா போரில் தங்களது போராட்டத்தைத் தொடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஏனைய தமிழ் ஆயுதக்குழுக்களினால் முன்னெடுக்கப்பட்ட  பிரிவினைவாத கிளர்ச்சிக் காலப்பகுதியேயாகும்.

மோதலின்போது ஆட்களுக்கு அல்லது சொத்துக்களுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் சேதம் அல்லது தீங்கு தொடர்பில் உண்மையான,  துல்லியமான, பக்கச்சார்பற்ற, முழுமைவாய்ந்த பதிவுகளை நிறுவுவதன் மூலம் இலங்கை மக்கள் மத்தியில் தேசிய ஐக்கியம், சமாதானம்,  சட்டத்தின் ஆட்சி, சகவாழ்வு, சமத்துவத்துடனான சகிப்புத்தன்மை, பல்வகைமையை மதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதே ஆணைக்குழுவின் ஆணையாக இருக்கும்.

விசாரணைக்கான காலப்பகுதியை 1983  ஜூலை 24 இற்கும் 2009 மே 18 இற்கும் இடைப்பட்டதாக மட்டுப்படுத்துவது ஆணைக்குழுவின் ஆணை மட்டுப்படுத்தப்படுவதன் ஒரு அறிகுறியாகும். விடுதலைப் புலிகள் ஆதிக்கம் கொண்ட தமிழ் தீவிரவாத இயக்கமாக இருந்த காலப்பகுதியை மாத்திரமே ஆணைக்குழு கவனத்தில் எடுக்கும். ஆனால், போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட பெருமளவு மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து இடம்பெற்றன. போரின் முடிவக்குப் பின்னரான நாட்களில் பல பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களும் அவர்களது குடும்பத்தவர்களும் காணாமல் போயினர்.

கம்பி வேலிகளினால் சூழப்பட்ட முகாம்களில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான குடிமக்கள் ஆறு மாதங்களுக்கும் கூடுதலான காலமாக அடைத்துவைக்கப்பட்டனர். அவர்களில் பலர் காணாமல் போயினர். சிலர் அதிகாரிகளுக்குப் பணத்தைக் கொடுத்து வெளியே சென்றனர். மற்றவர்கள் பாதுகாப்புப் படைகளினால் அழைத்துச் செல்லப்பட்டனர். உண்மை  ஆணைக்குழுவின் ஆணையின் தொடக்க திகதிக்கு முன்னதாகவே நீண்டகாலமாக இனப்பிரச்சினை இருந்துவந்தது. முடிவுத் திகதிக்குப் பின்னரும் அந்தப் பிரச்சினை தொடருகிறது. அதனால், ஆணை போதுமான ஒன்று அல்ல.

குறிப்பிட்ட திகதிகள் விசேடப்படுத்தப்படுவது இனப்போர் மாத்திரம் தான் உண்மை ஆணைக்குழுவினால் ஆராயப்படுமா அல்லது 1987 – 1989 காலப்பகுதியில் இடம்பெற்ற ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கிளர்ச்சியும் விசாரணை செய்யப்படுமா என்ற கேள்வியை எழுப்புகிறது. இனப்பிரச்சினையில் இருந்து வேறுபட்டதான அந்தக் கிளர்ச்சியின்போது பெரும் எண்ணிக்கையான மக்கள் உயிரிழந்தார்கள்.

உண்மை ஆணைக்குழுவின் நிபந்தனைகளும் வரைமுறைகளும் வகுக்கப்படுகின்ற செயன்முறை பகிரங்கமான ஒன்றாக இல்லாமல் பெருமளவுக்கு  இரகசியமானதாக இருப்பது சந்தேகங்களை கிளப்புகிறது. ஆனால், உதவியைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் நாடுகின்ற தென்னாபிரிக்காவில் நடந்தது முற்றிலும் வேறுபட்டதாகும். தனது நோக்கங்கள் எவை என்பதை வரும் நாட்களில் அரசாங்கம் தெரியப்படுத்தக்கூடும். ஆனால், தற்போதைக்கு அது இந்த செயன்முறையை தொடருவதற்குத் தீர்மானித்திருக்கிறது போன்று தெரிகிறது.

ஜனாதிபதியின் உறுதிமொழி 

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களும் அவற்றின் விளைவுகளும் உத்தேச உண்மை ஆணைக்குழுவின் ஆணையின் அங்கமாக இருக்கப்போவதில்லை என்பது தெளிவானது. அந்த ஆணை போரின் கடைசித் திகதியான 2009 மே 18 வரை மாத்திரமே நீட்டிக்கப்படும். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் போர் முடிவுக்கு வந்து ஒரு தசாப்த காலத்துக்குப் பிறகு இடம்பெற்றதை காரணம் காட்டி அவற்றை ஆணைக்குழுவின் ஆணைக்குள் உள்ளடக்காதமைக்கு நியாயம் கற்பிக்கப்படலாம்.  ஈஸ்டர் தாக்குதல்கள், மிகவும் நீண்டகாலமாக தொடர்ந்த போரைப் போலன்றி, தனியொரு சம்பவம் மாத்திரமே.

ஆனால், ஈஸ்டர் தாக்குதல்களை உண்மை ஆணைக்குழு விசாரணை செய்யவேண்டிய தேவையை அலட்சியம் செய்ய முடியாது. ஏனென்றால், என்ன நடந்தது என்ற உண்மை தொடர்ந்து மூடி மறைக்கப்படுகிறது. அந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கான நோக்கமும் அதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதும் இன்று வரை புதிராகவே இருந்துவருகிறது.

வழமைக்கு மாறான அரசியல் நிகழ்ச்சித் திட்டத்துக்காக கிறிஸ்தவ பக்தர்கள் பலிக்கடாவாக்கப்படடார்கள் என்ற நம்பிக்கையின் காரணமாகத்தான் உண்மையை கண்டறிந்து உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் கார்டினல் மல்கம் ரஞ்சித் மிகவும் உறுதியாக இருக்கிறார் என்று தோன்றுகிறது. இறந்து போனவர்களினால் நீதி கோரி குரலெழுப்பமுடியாது. அதனால் உண்மையைக் கண்டறியவேண்டியது உயிருடன் இருப்பவர்களின் கடமை. கடந்த காலத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய நிகழ்வுகளை விசாரணை செய்வதற்கு உண்மை ஆணைக்குழுக்களுக்கு உலகளாவிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கான காரணங்களில் இது ஒன்று.

பொறுப்புக்கூறலுக்கும் நீதிக்குமாக ஒன்றிணைந்து பணியாற்றுவதற்குப் பதிலாக அரசாங்கத் தலைவர்கள் இதுவரை ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறுவதை உறுதிசெய்வதில் கொஞ்சமேனும் அக்கறை காட்டவில்லை. துரதிர்ஷ்டவசமாக இது தற்போதைய பொருளாதார நெருக்கடியைப் பொறுத்தவரையிலும் கூட வேறுபட்டதாக இல்லை. பொருளாதார நெருக்கடி எவ்வாறு உருவானது என்பதை ஆராய்ந்து அந்த நெருக்கடியை கையாளத் தவறிய அரசாங்கத்தின் தவறுகளுக்கு பொறுப்புக்கூற வைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. பொருளாதாரத்தை சீர்குலைத்தவர்கள் தொடர்ந்தும் அதிகாரப் பதவிகளில் இருக்கிறார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட ஈஸ்டர் செய்தியை நோக்கும்போது கார்டினல் மல்கம் ரஞ்சித்தின் உணர்வுகளை அவர் நன்கு புரிந்துகொண்டு சாந்தப்படுத்த முயற்சித்திருக்கிறார் என்று தெளிவாக தெரிகிறது. “ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் விளைவாக ஏற்பட்ட கடுமையான வேதனையை நான் நன்கு அறிவேன். அந்த வேதனையை நான் பகர்ந்துகொள்கிறேன். அந்த கொடுமையான சம்பவத்துடன் தொடர்புபட்ட சட்ட செயன்முறைகள் எந்த விதமான செல்வாக்கிற்கும் உட்படாத முறையில் சுதந்திரமாகவும் பக்கச்சார்பு இல்லாமலும் முன்னெடுக்கப்படும் என்று நான் உறுதிகூறுகிறேன். பாதிக்கப்பட்ட சகலருக்கும் நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அடிப்படை வேலைகள் மற்றும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஈஸ்டர் தாக்குதல்களைப் போன்ற நீசத்தனமான செயல்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பதன் மூலம் எமது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் எந்தவிதமான தடுமாற்றமும் இல்லாத பற்றுறுதியை நான் கொண்டிருக்கிறேன்” என்று ஜனாதிபதி செய்தியில் கூறினார்.

தனது இந்த பற்றுறுதியை மீளவும் உறுதிப்படுத்தியதற்கு மேலதிகமாக ஜனாதிபதி கடந்த காலத்தில் கிறிமினல் குற்றங்களாக இருந்தாலென்ன பொருளாதாரக் குற்றங்களாக இருந்தாலென்ன அவற்றை செய்தவர்களை உயர் பதவிகளில் இருந்து விலக்குவதன் மூலம் தனது நம்பகத்தன்மையை வலுப்படுத்திக்கொள்ளமுடியும்.

jehan-e1660716495972.jpg?resize=83%2C116கலாநிதி ஜெகான் பெரேரா
 

https://maatram.org/?p=10816

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.