Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
இரு விரல் பரிசோதனை நடந்ததா?
 
படக்குறிப்பு,

2022 அக்டோபரில் குழந்தைத் திருமண வழக்கில் தீட்சிதர்கள் கைதுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 7 மே 2023, 10:14 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகளுக்குக் கட்டாய கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் இரு விரல் பரிசோதனை முறை 2013இல் இருந்து தடைசெய்யப்பட்ட ஒன்று என்பதால் அந்தப் பரிசோதனை செய்யப்படவில்லை எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஆனால் தீட்சிதர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆளுநர் ரவி தங்களது பிரச்னைகளுக்காகப் பேசுவது நம்பிக்கை தருவதாகக் கூறுகின்றனர்.

ஆளுநர் ரவி சமீபத்தில் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், சிதம்பரம் கோவில் தீட்சிதர் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளுக்குக் கட்டாய கன்னித்தன்மைக்கான இரு விரல் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அது செய்யப்பட்டதால், சிறுமிகள் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் ஆளுநர் கூறிய இருவிரல் பரிசோதனை முறை என்பது இந்தியா முழுவதும் 2013இல் இருந்து தடை செய்யப்பட்ட பரிசோதனை என்பதால், அதைச் சிறுமிகளுக்கு நடத்தவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

''குழந்தைத் திருமணத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிறுமிகளுக்கு மருத்துவ உதவியும் தேவையான பரிசோதனையும் நடத்தப்பட்டது. ஆனால் இரு விரல் பரிசோதனை செய்யப்பட்டது என்பது முற்றிலும் தவறானது.

பெண்களின் கன்னித்தன்மையை பரிசோதிக்கும் இருவிரல் பரிசோதனை முறை தடை செய்யப்பட்டு நெடுங்காலம் ஆகிவிட்டது,'' என அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

இரு விரல் பரிசோதனை என்பது என்ன?

பாலியல் வன்கொடுமை வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரு விரல் பரிசோதனை செய்யும் முறை 2013 வரை தொடர்ந்தது. இதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கருப்பைவாய் வழியாக மருத்துவர் இரண்டு விரல்களைச் செலுத்தும்போது, அங்குள்ள தசைகள் தளர்ச்சியாக இருப்பதை உணர்த்தினால், கன்னித்திரை கிழிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

இந்தப் பரிசோதனை குறித்து விளக்கிய மகப்பேறு மருத்துவர் ஏ.ஆர். சாந்தி, பெண்களின் கன்னித்தன்மையை உறுதி செய்வதற்கு இந்த இரு விரல் பரிசோதனை பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டது என்கிறார்.

''இந்தச் சோதனை முறையில் பெண்ணின் பிறப்புறுப்பு பகுதியில் காயங்கள் உள்ளதா என்று ஆய்வு செய்யப்படும். மருத்துவரின் இரண்டு விரல்களை பிறப்புறுப்பின் உள்ளே செலுத்தி பரிசோதிக்கப்படும்.

அதன்போது அந்தப் பெண்ணின் ஹைமன் - கன்னித்திரை கிழிந்திருந்தால் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிலாம் என்று கருதப்பட்டது.

ஆனால் விளையாட்டு வீராங்கனைகள், அதிகமாக சைக்கிள் ஓட்டுபவர்கள், அதிகமாக ஏறி இறங்கி, பாரம் தூக்கி வேலை செய்யும் பெண்களுக்கு ஹைமன் ஏற்கெனவே கிழிந்திருக்கும் வாய்ப்பு இருப்பதால், ஹைமன்- கன்னித்திரையைப் பொறுத்து மட்டுமே வன்கொடுமை நடந்தது பற்றிய இறுதி முடிவுக்கு வர இயலாது,'' என்கிறார்.

இரட்டை விரல் பரிசோதனை நடந்ததா?

பட மூலாதாரம்,SHANTI

 
படக்குறிப்பு,

சாந்தி, மருத்துவர்

இரு விரல் பரிசோதனை ஏன் அறிவியல் முறையல்ல என்பதை விளக்கிய அவர், இரு விரல்கள் உட்செல்லும்போது தசைகள் தளர்ச்சியாக இருப்பதை வைத்து பலமுறை அவர் உடலுறவுக்கு ஆட்பட்டவர், வன்கொடுமைக்கு ஆட்பட்டவர் என்று முன்பு சொல்லப்பட்டது என்கிறார்.

ஆனால் இந்த முறையில், ஏற்கெனவே பாலியல் உறவில் இருக்கும் பெண், திருமணமான பெண்களுக்கு இருவிரல் பரிசோதனை செய்தால் அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனரா என்பதைக் கண்டறிய முடியாது என்றும் சொல்கிறார்.

மேலும், "ஒரு பெண் பாலியல் வன்கொடுமை தனக்கு நேர்ந்தது என்று கூறும்போது அவர் அந்தக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாரா என்று மட்டும்தான் பார்க்க வேண்டும். மாறாக அந்தப் பெண், ஏற்கெனவே திருமணமானவரா, பாலியல் உறவு வைத்துக் கொண்டவரா, பாலியல் தொழிலாளியா போன்ற கேள்விகள் வன்கொடுமை குற்றச்சாட்டு நடந்ததா இல்லையா என்ற வழக்கிற்கு அவசியப்படாத ஒன்று," என்கிறார்.

''பாலியல் வன்கொடுமை என்பதற்கான புதிய சட்டரீதியான வரையறையில் Non Penetrative sex-ஐ உள்ளடக்கி திருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இருவிரல் பரிசோதனை முறையின் பொருத்தப்பாடு இதில் இல்லை.

இந்தச் சோதனை செய்யப்படும்போது, ஏற்கெனவே பாலியல் வன்கொடுமையால் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்ட பெண்கள், இருவிரல் பரிசோதனை செய்வதால் மீண்டும் மற்றொரு முறை அந்தப் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதுபோன்ற காரணங்களால் இம்முறை பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தடை செய்யப்பட்டது,'' என்கிறார் மருத்துவர் சாந்தி.

சிதம்பரம் நடராஜர் கோவில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தடை செய்யப்பட்டது எப்படி?

"இரு விரல் பரிசோதனை முறை அறிவியல் ஆதாரமற்றது, பிற்போக்குத்தனமானது" என்று 2013இல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்ததை அடுத்து இந்த முறை தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2013இல் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நபர், ஒரு சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில், நீதிபதிகள் சந்திரசூட், ஹிமா கோலி அடங்கிய அமர்வ தீர்ப்பளித்தபோது, இரட்டை விரல் பரிசோதனை முறை என்பது அறிவியலுக்குப் புறம்பான பரிசோதனை முறை என்றும் இந்தச் சோதனை முறையைப் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தனர்.

இதைத் தொடர்ந்து இந்தியாவில் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை தடை செய்யப்பட்டது.

இரட்டை விரல் பரிசோதனை நடந்ததா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

தீட்சிதர் குழந்தைகளுக்கு என்ன பரிசோதனை நடத்தப்பட்டது?

தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை நடத்தப்படவில்லை எனில் என்ன விதமான மருத்துவப் பரிசோதனை தீட்சிதர் குழந்தைகளுக்கு நடத்தப்பட்டது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் செந்தில்குமாரிடம் கேட்டோம்.

''இரட்டை விரல் பரிசோதனை என்பது மிகவும் பழைய முறை. அதைச் செய்யக்கூடாது என விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அதனால், இந்த முறை சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தைத் திருமணம் செய்து வைத்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சிறுமியருக்குச் செய்யப்படவில்லை.

தற்போது விசாரணை நடைபெற்று வருவதால், பரிசோதனை முறைகள் குறித்து விவரிக்க முடியாது. ஆனால் தடை செய்யப்பட்ட பரிசோதனை செய்யப்படவில்லை என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்.

அதோடு, தீட்சிதர் குடும்பத்தினர் புகார் தெரிவித்தபோது, என்ன சொல்லியிருக்கிறார்களோ, அதை அடிப்படையாகக் கொண்டுதான் தேவையான மருத்துவப் பரிசோதனையைச் செய்திருப்பார்கள்,'' என்று தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் என்பதால், விசாரணை குறித்து பிற தகவல்களைச் சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.

பிபிசி தமிழிடம் பேசிய சமூக நலத்துறை செயலர் சுஞ்சோங்கம் ஜாதக் சிரு, தீட்சிதர் குடும்பத்தினரிடம் குழந்தைத் திருமணம் நடத்தக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் கூறுகிறார்.

ஆளுநர் ஆர்.என். ரவி

பட மூலாதாரம்,TNDIPR

ஆளுநர் நடந்துகொள்ளும் விதம் சரியா?

இதற்கிடையில், தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை நடைபெற்றதாக ஆளுநர் தற்போது கூறியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாகச் சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலரான ஹென்றி திபேன் பேசுகையில், ''ஆளுநர் ரவி காவல்துறையில் பணியற்றியவர், கூடுதலாக ஆளுநர் என்ற பொறுப்பில் அவர் தற்போது இருப்பதால் தடை செய்யப்பட்ட பரிசோதனை நடைபெற்றுள்ளதை அறிந்திருந்தும் பல நாட்கள் மௌனம் காத்தது வியப்பளிக்கிறது,'' என்கிறார்.

குழந்தைகள் மீதான உரிமை மீறல் ஏற்பட்டிருந்தால், அதை உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்றும் விதிமீறல்கள் நடைபெற்ற தகவல்கள் தெரிய வந்த பிறகு, ஆளுநரின் தலையீடு இருந்திருந்தால், அதுகுறித்து அவர் விளக்குவதுதான் சரியாக இருக்கும் என்றும் கூறுகிறார் ஹென்றி.

''ஆளுநர் ரவி பல குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். இதேபோல, இரு விரல் பரிசோதனை நடத்தப்பட்ட விவகாரத்தில் என்ன நடந்தது, இதை இவர் எப்படிக் கையாண்டார், யார் மூலமாகக் குழந்தைகளுக்கு நீதி கிடைக்க முயன்றார் என்ற தகவலைத் தருவதுதான் சிறந்தது,'' என்கிறார் அவர்.

இரட்டை விரல் பரிசோதனை நடந்ததா?

பட மூலாதாரம்,HENRY TIPHANGE

 
படக்குறிப்பு,

ஹென்றி திபேன், சமூக ஆர்வலர்

''ஆளுநர் எங்களுக்காகப் பேசுகிறார்''

பெயர் சொல்ல விரும்பாத இரண்டு தீட்சிதர்கள் பிபிசி தமிழிடம் தங்களது பிரச்னைகளை ஆளுநர் பேசியது மிகவும் நம்பிகை தருவதாகத் தெரிவித்தனர்.

தங்களது அடையாளங்களை வெளியிட வேண்டாம் என்று கூறிய அவர்கள், ஏற்கெனவே வழக்கு நடந்து வருவதால், மீண்டும் சர்ச்சை உருவாவதை விரும்பவில்லை என்கிறார்கள்.

''நங்கள் சிறுபான்மை மக்கள். எங்கள் குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று அரசாங்கம் அக்கறைப்படுவதைவிட நாங்கள் அக்கறை செலுத்துவோம்.

ஆளுநர் ரவி எங்களுக்காகப் பேசுகிறார் என்பது எங்களுக்கு நம்பிக்கை தருகிறது. இந்த வழக்கு பதிவானதில் இருந்து நாங்கள் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்,'' என்றார்.

குழந்தைத் திருமணம் நடைபெற்றது உண்மையா என்றும் குழந்தைகளுக்கு இரு விரல் பரிசோதனை நடைபெற்றதா என்றும் கேட்டபோது, ''எங்கள் சமூகம் மோசமாக நடத்தப்படுகிறது,'' என்றார்கள்.

பரிசோதனை குறித்து மீண்டும் கேட்டபோது, ''நாங்கள் பிறகு பேசுகிறோம். இந்த வழக்கு பற்றி நாங்கள் வழக்கறிஞர்களோடு பேசிக்கொண்டு இருக்கிறோம்,'' என்று தெரிவித்தனர்.

https://www.bbc.com/tamil/articles/c6pewv8ye1vo



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.