Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டாம் உலக போர்: மெய்சிலிர்ப்பூட்டும் கனடிய வீரர்கள் 'உயிர் பிழைத்த கதை'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இரண்டாம் உலகப் போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,அலெக்ஸ் மூரே
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஜெர்மனி தலைமையிலான நாஜிப் படைகளுக்கும், பிரிட்டன் தலைமையிலான நேச நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் வரலாற்றில் என்றும் நினைவுகூரத்தக்கது.

உலக போரில் பிரிட்டன் மற்றும் அதன் நேச நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களின் பங்கு, அவர்களது வீரம், தியாகம் ஆகியவற்றை இன்றைய இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் நோக்கில், “We Were There” எனும் தலைப்பில் பிபிசி, அனுபவ கட்டுரைகளை தொகுத்து வழங்கி வருகிறது.

இரண்டாம் உலகப் போரில் பங்கேற்று ,தற்போது உயிருடன் உள்ள நேச நாடுகளின் ராணுவ வீரர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அருங்காட்சிகளில் உள்ள ஆவண ஆதாரங்களை கொண்டு அந்த நினைவலைகளை இன்றைய தலைமுறையினருக்கு அளித்து வருகிறது பிபிசி.

உலக போரின்போது நிகழ்ந்த அப்படியொரு மெய்சிலிர்க்க வைக்கும் தரமான சம்பவம்தான் இந்த உண்மைக் கதை!.

இளம்படை

Handley Page Halifax - இதுதான் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனின் ராயல் ஏர்ஃபோர்ஸ் ( RAF), நாஜிப் படைகளுக்கு எதிராக பயன்படுத்திய மிக முக்கியமான விமானம்.

இந்த போர் விமானம் தான் கனடாவின் ராயல் ஏர்ஃபோர்ஸை (RCAF) சேர்ந்த இளம் வீரர்களான ஆண்டி ஹார்டி, மெக்கலம், ரெய்லி ஆகியோரை சுமந்து கொண்டு போர் மேகங்கள் சூழ்ந்த ஐரோப்பாவின் வானில் 1942 ஜூலையில் பறந்தது.

சில மாதங்களுக்கு பின், 1943 இன் நடுப்பகுதியில் ரெட் ஓ நெயில், நார்ம் வெய்லர் ஆகிய வீரர்களும், விமானப் பொறியாளர் கென் கொலோபியும் இந்த இளம்படையில் இணைந்தனர்.

இவர்களுடன் ராயல் கனடிய விமானப் படையின் சிறந்த விமானியாக பெயர் பெற்ற லெப்டினட், ஹெர்பர்ட் பிலிப்சன் அட்கின்சனும் இருந்தார்.

இரண்டாம் உலகப் போர்

பட மூலாதாரம்,JANET REILLEY

 
படக்குறிப்பு,

மேக் ரெய்லி (இடது), மெக்கலம் மற்றும் அவரது மனைவி ரோஸ் மெக்கலம், 1985 ஆம் ஆண்டு கல்கரியில் நடந்த போர்க் கைதிகளின் 40வது ஆண்டு சந்திப்பின்போது.

அந்த கொடிய இரவு

1943, ஏப்ரல் 30, மதியம் 2 மணி… ஜெர்மனியின் முக்கிய நகரமான ரூரில் உள்ள அந்நாட்டு ராணுவத்தின் ஆயுத தளவாடங்கள் உற்பத்தி செய்யும் கிடங்கை குண்டுவீசி தகர்த்துவது தொடர்பாக மிக முக்கியமான திட்டம் குறித்து, மெக்கலம், ரிலோ உள்ளிட்ட கனடிய இளம் வீரர்கள் அடங்கிய குழுவுக்கு, ராயல் ஏர்ஃபோர்சின் அதிகாரியான எசன் விரிவாக விளக்கினார்.

அந்த திட்டம் குறித்த இரண்டு மணி நேரம் ஆலோசனைக்கு பிறகு, ஐந்து சக விமானப்படை குழுவினருடன் இணைந்து, ரூர் நகரில் இருந்த ஜெர்மன் ராணுவ ஆயுத உற்பத்தி கிடங்கை தகர்க்க தயாரானது கனடிய இளம் வீரர்கள் படை.

ஆனால் அன்றைய பொழுது பிரிட்டனில் கடும் பனிமூட்டம் நிலவியதால் தாக்குதல் திட்டம் நள்ளிரவுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பிரிட்டன் விமானப் படையின் போர் விமானமான ஹேண்டலி பேஜ் ஹாலிஃபாக்ஸ், கனடிய வீரர்கள் குழுவினர்களை சுமந்து நள்ளிரவில் ரூர் நகரை அடைந்தது.

ஜெர்மனியின் ராணுவ ஆயுத தளவாடங்கள் உற்பத்தி ஆலையை குண்டு வீசி அழியுங்கள் என்று, அதிகாலை 3 மணியளவில், விமானத்தின் லெப்டினட் அட்கின்சனிடம் இருந்து உத்தரவு பறந்தது.

அந்த அதிரடி உத்தரவையடுத்து, ஆயுத உற்பத்தி கிடங்கின் மீது பிரிட்டன் போர் விமானம் குண்டு மழைப் பொழிய தொடங்கியது.

அப்போது திடீரென, விமானத்தில் நேவிகேட்டராக பணியில் இருந்த ஹார்டியின் அழுக்குரல் கேட்டது. “நான் தாக்கப்பட்டேன்” என்று அவர் கதறியதை கேட்டு அதிர்ந்த சக வீரர்கள் ஹார்டியை பார்த்தபோது, குண்டு துளைக்கப்பட்ட அவரது வலதுகால் கடுமையாக காயம்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கால்களில் ரத்தம் வழிய உயிருக்கு போராடி கொண்டிருந்த ஹார்டியை எப்படியாவது காப்பாற்றிட வேண்டும் என்று துடித்தார் மெக்கலம். அவரது உடல்சூடு தணியாதிருக்க, பிரத்யேக உடையை கொண்டு (Bomber Jacket) ஹார்டியின் உடலை இருக போர்த்தினார். வலி நிவாரண மாத்திரையை அவருக்கு கொடுத்தார். ஆனாலும் ஹார்டியை அவர்களால் காப்பாற்ற முடியவல்லை.

விபத்தில் சிக்கிய விமானம்

இதனையடுத்து, இலக்கை நோக்கி குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து விமானத்தில் விரைந்து வெளியேறும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ரெய்லிக்கு அட்கின்சன் உத்தரவிட்டார். இலக்கில் இருந்து விமானத்தை விடுவிக்கவும் அவர் உதவினார். ஆனால் ஹார்டியின் பயண அட்டவணை விவரம் ரத்தத்தில் நனைந்து படிக்க முடியாதபடி இருந்தது.

ரூர் நகரில் பறந்துக் கொண்டிருந்த பிரிட்டன் போர் விமானத்தை நாஜிப் படைகளின் பீரங்கி குண்டுகள் சரமாரியாக தாக்க, விமானத்தில் தீப்பற்றியது. தீப்பிழம்புடன் வானில் கட்டுப்பாடற்று பறந்து கொண்டிருந்த விமானத்தில் பற்றிய தீ, தங்களது உடம்பிலும் பரவாமல் இருக்க, அட்கின்சன் அறிவுறுத்தல்படி விமானத்தின் இறக்கையை பிடித்து தொங்கியவாறும், பின்னர் விமானத்துக்குள் வருவதுமாக கனடிய இளம் வீரர்கள் அந்தரத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் விமானத்தின் இறக்கைகளிலும் தீ பரவ தொடங்கியதும் அது மேலும் கீழுமாக கட்டுப்பாட்டை இழந்து நெதர்லாந்தில் விபத்தை சந்தித்தது.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்திலிருந்து தப்பிய ரெய்லி, மெக்கலம் கோலோபி உள்ளிட்ட வீரர்கள் நெதர்லாந்தின் எல்லைக்குட்பட்ட எல்ஸ்ட்டை பகுதியி்ல் வயல்களும், மரங்களும் நிறைந்த இடங்களில் தரையிறங்கினர். ஆனால் விழுந்து நொறுங்கிய விமானத்துடன் அட்கின்சனும் மாய்ந்தார்.

இரண்டாம் உலகப் போர்

பட மூலாதாரம்,MICHAEL ATKINSON

 
படக்குறிப்பு,

மனைவி ஸ்டெல்லாவுடன் அட்கின்சன்

போர் கைதிகள்

நாஜி படையினரிடம் போர் கைதிகளாக சிக்கிய ஆறு வீரர்களில் கொலோபி, ஓ நெல் ஆகியோர் வடக்கு ஜெர்மனியில் இருந்த முகாமுக்கும், மெக்கலம் ஆக்கிரமிக்கப்பட்ட விதுவேனியாவுக்கும் அனுப்பப்பட்டார். இவர்களை போன்றே ரெய்லி, நர்ஸ் மற்றும் வெய்லர் ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில் இருந்த முகாம் சிறைக்கும் அனுப்பப்பட்டனர்.

நேச படைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த முக்கிய முகாமான ஸ்டாலாக் லுஃப்ட் - 3 க்கு, ஓர் அதிகாரியாக ரெய்லி பின்னர் சென்றார். நாஜி படைகளின் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் நிறைந்த ஸ்டாலாக் லுஃப்ட் முகாம் ஜெர்மனியின் சாகன் நகருக்கு அருகே நிறுவப்பட்டிருந்தது.

ரகசிய சுரங்கப் பாதை

அந்த முகாமில் சிறை வைக்கப்பட்டிருந்த பிரிட்டனின் ராயல் ஏர் ஃபோர்ஸை சேர்ந்த அதிகாரிகளில் 200 பேரை அங்கிருந்து தப்பிக்க வைக்க சிறைக்குள்ளேயே ரகசிய திட்டம் தீட்டப்பட்டது.

அவர்கள் சாதாரண குடிமக்களின் உடையில் போலி ஆவணங்களுடன் ஜெர்மனி வழியாக தப்பித்துச் செல்வதுதான் அந்த திட்டம்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக, ஸ்டாலாக் லுஃப்ட் சிறைச்சுவருக்கு அருகில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவுக்கு ரகசிய சுரங்கப்பாதை தோண்டப்பட்டது.

அதன் வழியாக நேசப் படையைச் சேர்ந்த 50 அதிகாரிகள் சிறையில் இருந்து தப்பிச் சென்றனர். ஆனால் அவர்களில் மேலும் 50 பேர் ஜெர்மனியின் ரகசிய போலீசிடம் (கெஸ்டபோ) சிக்கினர். அவர்கள் அனைவரையும் கெஸ்டபோ தூக்கிலிட்டது.

இரண்டாம் உலகப் போர்

பட மூலாதாரம்,LINCOLN JOURNAL STAR

 
படக்குறிப்பு,

22 மே 1945ல் வெய்லர் விடுவிக்கப்பட்டு இங்கிலாந்துக்குத் திரும்பியது தொடர்பாக லிங்கன் ஜர்னல் ஸ்டாரில் வெளிவந்த செய்தி

நான்கு மாத கால நெடும் பயணம்

ஸ்டாலாக் லுஃப்ட் சிறை முகாமில் இருந்து சுரங்கப் பாதை வழியாக தப்பிப்போரின் வரிசையில் 86 ஆவது இடம்பெற்றிருந்தது ரெய்லி பெயர். ஆனால் அவர் தாமும் இந்த ரகசிய திட்டத்தில் ஒரு நபராக இடம்பெற்றிருந்ததை அறிந்திருக்கவில்லை.

இந்தத் திட்டத்தில் கையெழுத்திட்டபோது அதனை அவர் சிறையில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிக்கானது என்றே கருதி இருந்தார். அத்துடன் சுரங்கப்பாதை அமைப்பதற்கு தன்னாலான உதவியை செய்வதுதான் தனது வேலை என்றும் அவர் எண்ணி இருந்தார்.

“சுரங்கப்பாதைக்காக பூமியை தோண்டியபோது உண்டான மணல் குவியலை அள்ளி வெளியே கொட்டுவதுதான் எனது பணியாக இருந்தது. ஹெலிஃபாக்ஸ் விமானத்தில் இருந்து கீழே குதித்து தப்பியபோது எனது முழங்கால் மற்றும் கணுக்காலில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் மேலும் தீவிரமடைந்திருந்தன. இதனால் சுரங்கப்பாதை கட்டமைக்கும் பணியில் என்னை கவனமாக ஈடுபடுத்திக் கொண்டேன்” என்று அந்த திகில் அனுபவத்தை பிற்காலத்தில் நினைவுகூர்ந்தார் ரெய்லி.

ரெய்லியின் முழங்கால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தபோதும், நேசப்படையைச் சேர்ந்த பிற சிறைக் கைதிகளுடன் அணிவகுத்து செல்ல அவர் வற்புறுத்தப்பட்டார்.

வெறும் கால்களுடன் காடு, மலை என நூற்றுக்கணக்கான மைல்கள் இலக்கற்ற பயணத்தை அவர்கள் மேற்கொண்டனர். தங்களது நான்கு மாத பயணத்தில் பசி, பட்டினி, சோர்வு என எப்போதும் மரணம் ஏற்படும் அபாயத்தையும் அவர்கள் அனுபவித்தனர்.

“எலும்பை உறைய செய்யும் இதுபோன்றதொரு குளிரை தமது வாழ்நாளில் இதற்கு முன்னர் அனுபவித்ததில்லை” என்று, ஸ்டாலாக் லுஃப்ட் சிறையில் இருந்து தாங்கள் தப்பிய கசப்பான அனுபவத்தை நினைவுகூர்ந்தார் மெக்கலம்.

மனித கேடயம்

ஒருகட்டத்தில் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் முக்கிய நகரங்கள் மீது நேசப் படைகள் தாக்குதல் நடத்தாமல் இருக்க, தங்கள் வசம் சிக்கிய பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்களை நாஜிப் படையினர் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தவும் செய்தன. இதனால் தங்களது நேச நாட்டைச் சேர்ந்த போர் விமானங்களே, தங்களை ஜெர்மனி படையினர் என தவறுதலாக கருதி, தாக்குதல் நடத்த முயன்ற கசப்பான அனுபவங்களும் நேசப் படைகளின் வீரர்களுக்கு நேர்ந்தது.

25 கிலோ எடை குறைவு

கனடிய வீரர்கள் பயணித்த பிரிட்டன் போர் விமானம் நெதர்லாந்தில் விபத்துக்குள்ளான சம்பவம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகள் மற்றும் ஒரு நாளுக்கு பிறகு, வடக்கு ஜெர்மனியின் லூபெக் அருகே, செஷயர் ரெஜிமென்ட மூலம் ரெய்லி விடுவிக்கப்பட்டார்.

அந்த இரண்டு ஆண்டுகளில் சிறைவாசம், நெடும் பயணம், பசி, பட்டினி போன்று பல்வேறு இன்னல்களை சந்தித்திருந்ததால், அவர் விடுக்கப்பட்டபோது உடல் எடையில் 25 கிலோ குறைந்திருந்தார்.

அவரை போன்றே மெக்கலம் எல்பே நதிக் கரையிலும், வெய்லர் ஜெர்மனியின் முனிச் நகருக்கு அருகேயும் விடுவிக்கப்பட்டனர்.

இரண்டாம் உலகப் போர்

பட மூலாதாரம்,THE MACCALLUM FAMILY

 
படக்குறிப்பு,

ரோஸ்மேரி மற்றும் ஜார்ஜ் மெக்கல்லம் அவர்களின் திருமண நாளில், 14 ஜூலை 1945

போருக்கு பிந்தைய வாழ்க்கை

போரில் உயிர்தப்பிய மெக்கலம், “போர் முடிந்து உயிருடன் திரும்பினால் நிச்சயம் உன்னை திருமணம் செய்து கொள்வேன்” என்று தமது காதலியான ரோஸ்மேரிக்கு வாக்குறுதி அளித்திருந்தார். தான் சொன்னபடியே 1945 ஜூலை 14 ஆம் நாள் ரோஸ்மேரியை மணமுடித்தார் மெக்கலம்.

மெக்கலமுக்கும், ரோஸ்மேரிக்கும் இடையேயான காதல், கடித பரிமாற்றங்களில் உயிர்ப்புடன் இருந்து வந்தது. அவர்களின் அந்த அன்புக்கு போர் ஒரு தடையாக இருக்கவில்லை.

“இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற நாட்களிலும் ஆஸ்திரேலியாவின் கிராஃப்டனுக்கும், போலந்து அல்லது லிதுவேனியாவுக்கும் இடையே கடிதப் போக்குவரத்து இருந்திருக்கிறது என்பதை இப்போது எண்ணிப் பார்த்தால் வியப்பாக உள்ளது” என்றார் மெக்கலம் -ரோஸ்மேரி தம்பதியின் மூத்த மகன் வெய்ன்.

பட்டப்படிப்பு முடித்து ஒரு வேலை தேடிக்கொண்டு, ரோஸ்மேரியை மெக்கலம் கரம்பிடிப்பார் என்று அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர் யாரும் எதிர்பாராதவிதமாக, பள்ளிப் படிப்பை முடித்தபின், தமது 18 வயதில் உலகப் போரில் பங்கேற்க சென்றார்.

போர் முடிந்து நாடு திரும்பிய மெக்கலம், எலக்ட்ரீசியனாக பயிற்சி பெற்று, தமது மாமனாரின் உதவியுடன் பணிக்கு சேர்ந்தார். மெக்கலம், தமது குடும்பத்தினருக்காக ஒரு வீட்டையும் கட்டினார். அவரது மனைவி ரோசின் சொந்த ஊரான கிராஃப்டனில் இந்த தம்பதியின் சந்ததியினர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

வயல் வேலைக்கு திரும்பிய கோலோபி

இரண்டாம் உலகப் போரில் நாஜிப் படைகளிடம் இருந்து உயிர் தப்பிய, நேச நாடுகளின் படையைச் சேர்ந்த கோலோபி, போருக்கு பின் கனடாவின் சஸ்காட்சுவான் நகருக்குட்பட்ட, 150 பேர் மட்டும் வசித்துவந்த ஃப்ரோபிசர் கிராமத்துக்கு திரும்பினார். அங்கு அவர் தனது குடும்பத்துக்குச் சொந்தமான வயலில் கோதுமை பயிரிடும் பணியை மேற்கொண்டார்.

ராயல் கனடியன் ஏர்ஃபோர்சில் (RCAF) தன்னார்வத்துடன் இணைந்து உலகப் போரில் பங்கேற்ற 17 ஆயிரம் பேர்களில், போர் முடித்து சொந்த ஊர் திரும்பும் பாக்கியம் கோலோபி போன்ற சிலருக்கு மட்டுமே கிடைத்தது. அதனை அவரது குடும்பத்தினரும், கிராம மக்களுக்கும் நன்கு உணர்ந்திருந்ததால், கோலோபியை அவர்கள் அவ்வளவு கொண்டாடி மகிழ்ந்தனர்.

நேச படைகளின் சார்பில் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற கனடிய ராயல் ஏர்ஃபோர்ஸை (RCAF) சேர்ந்த இளம் வீரர் ரெய்லியின் மகள் ஜேனட் ரெய்லி, "மே 1 ஆம் தேதி, தனக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் என்றும் மறக்க முடியாத நாளாக இருந்திருக்கிறது," என்று '1943 மே 1' சம்பவத்தை உணர்ச்சிப் பொங்க நினைவுகூர்கிறார்.

தமது தந்தை ரெய்லி, அவரது சக போர் வீரரும், நண்பருமான மெக்கலம்மை தொலைபேசியில் அவ்வப்போது தொடர்பு கொள்வார் என்று பூரிப்புடன் கூறுகிறார் ஜெனட்.

இரண்டாம் உலகப் போர்

பட மூலாதாரம்,JANET REILLEY

 
படக்குறிப்பு,

ரெட் ஓ நெய்ல் ( இடது ) - மேக் (வலது)

அந்த உரையாடல்களின்போது, 1943 மே 1 அன்று போர்க்களத்தில் தங்களுக்கு நேர்ந்த மறக்க முடியாத அனுபவம் தங்களது இளமைக் காலத்தையும், எதிர்காலத்தையும் எவ்வாறு வடிவமைத்தது என்பது குறித்து ரெய்லி, மெக்கலனிடம் சிலாகித்து பேசுவார் என்கிறார் ஜேனட்.

தனக்கு மூன்று வயதாக இருந்தபோது தனது தந்தை ரெய்லி மது பழக்கத்தை கைவிட்டார் என்று குழந்தைப் பருவ நிகழ்வை அசைப்போடும் ஜேனட், 1943 போர் விமான விபத்தில் ஏற்பட்ட காயம், சிறைவாசம், அதிலிருந்து மீண்டது போன்ற போர்க்கள நிகழ்வுகள் அவரது மனதில் ஆழமாக பாதிப்பை ஏற்படுத்தி இருந்தன. அந்த பாதிப்பை மறைப்பதற்காக மீண்டும் அவர் குடிப்பழக்கத்துக்கு ஆளானார் என்கிறார்.

போர்க்கள நிகழ்வு ஏற்படுத்திய பாதிப்பின் விளைவாக அவர் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாக 1950 களில் இரண்டு முறை அவர் மனநல சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறுகிறார் ஜேனட்.

சில நேரங்களில் நள்ளிரவில் தூக்கம் இல்லாமல் அவர் தவித்துக் கொண்டிருப்பார். அப்போது, “தெளிவான நினைவுகள் அனைத்தும் மதிப்புக்குரியவையா என தெரியாது. ஆனால், எல்லாவற்றையும் மீறி, போரில் நான் தன்னார்வத்துடன் பங்கு கொண்டதில் மகிழ்கிறேன்” என்று ரெய்லி பெருமையுடன் கூறுவார் என்று தனது தந்தையுடனான பழைய நினைவுகளை பசுமை மாறாமல் எடுத்துரைக்கிறார் ஜேனட்.

இரண்டாம் உலகப்போர் நிகழ்வை மையமாக கொண்டு வெய்ன் மெக்கலம் குடும்பத்தினருக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இடையே உருவான பிணைப்பை இன்றும் உயிருடன் வைத்திருக்க முடியும் என்று ஜேனட் நம்புகிறார்.

இரண்டாம் உலகப் போரின்போது வாழ்ந்த “மிகப்பெரிய தலைமுறை” தங்களது நாட்டின் அமைதிக்காக எதையெல்லாம் விலையாக கொடுத்து எதனையெல்லாம் இழந்தார்கள் என்பதை அவர்களை பற்றி, அவரது சந்ததியினரின் மலரும் நினைவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

அந்த வகையில், இரண்டாம் உலகப் போரின்போது 1943 மே 1 ஆம் நாளில், கனடிய இளம் வீரர்களை சுமந்து சென்ற பிரிட்டன் போர் விமானம் விபத்தில் சிக்கிய சம்பவமும், அதற்கு பின்னர் அந்த வீரர்கள் உயிர் பிழைத்து நாடு திரும்பிய மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வும் 80 ஆண்டுகள் கடந்தும் இன்றைக்கும் அவர்களின் சந்ததியினரால் நினைவுகூரப்பட்டு வருகின்றது.

https://www.bbc.com/tamil/articles/c51lkyjpl2xo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.