Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பருவநிலை மாற்றம்: உலக அரசாங்கங்களின் ‘இரட்டை வேடத்தை’ எதிர்த்து சாலையில் இறங்கிய 2000 விஞ்ஞானிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
climate change

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,நவீன் சிங் கட்கா
  • பதவி,சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி உலக சேவை
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

விஞ்ஞானிகள் என்றால் அறிவியல் ஆய்வுக் கூடங்களில் அமர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டிருப்பார்கள், தங்களது ஆய்வுகளை அறிவியல் இதழ்களில் எழுதிக் கொண்டிருப்பார்கள் என்ற புரிதல் தான் உலக அளவில் வெகுஜென மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

தங்களை பற்றிய இந்த வரையறைக்கு மாறாக, தற்போது உலகெங்கிலும் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர் அவர்கள். சாலை மறியல், அரசு அலுவலகங்களுக்கு முன் மனிதச் சங்கிலி என விஞ்ஞானிகளின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பருவநிலை மாற்றத்தை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க உலக நாடுகளை வலியுறுத்தி விஞ்ஞானிகள் தங்களது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இனியும் அறிவியல் இதழ்களில் பேசிக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில், இதன் விளைவாக பூமி மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது என்கின்றனர் அவர்கள்.

2000 விஞ்ஞானிகள்

விஞ்ஞானிகளின் சர்வதேச கூட்டமைப்பான ‘சயின்டிஸ்ட் ரிபளியன்’ (Scientist Rebellion) இந்தப் போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள விஞ்ஞானிகளின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியுள்ளதாக கூறுகிறது இந்த அமைப்பு.

போராட்டங்களை மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகளை கைது செய்வது போன்ற நேரடி நடவடிக்கைகளை உலகின் பல்வேறு நாடுகள் கடந்த ஓராண்டாக மேற்கொண்டு வருகின்றன.

இப்படியொரு கைது நடவடிக்கைக்கு ஆளானவர் தான் ஜெர்மனியைச் சேர்ந்த கார்னிலியா ஹுத்.

பருவநிலை மாற்றம் தொடர்பான பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ள இவர், கடந்த ஆண்டு அக்டோபரில் ஜெர்மனியின் முனிச் நகரில் சாலை மறியலில் ஈடுபட்டார். அதையடுத்து பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்குப் பதிந்து அவரை கைது செய்தது போலீஸ்.

இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையி்ல், தனது போராட்டத்தை கைவிடுவதாக இல்லை என்கிறார் ஹுக்.

பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கான தீர்வுகளை விஞ்ஞானிகள் அளித்துள்ளனர். ஆனால், உலக நாடுகளின் அரசாங்கங்கள் இந்த தீர்வுகளை கருத்தில் கொள்வதாக தெரியவில்லை. இதன் விளைவாகவே விஞ்ஞானிகளான தாங்கள் வீதிகளில் இறங்கிப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்கிறார் கார்னிலியா ஹுத்.

“நான் கைது செய்யப்பட்டதற்காக வெட்கப்படவில்லை. ஆனால் பருவநிலை மாற்றம் விஷயத்தில் அநீதி இழைக்கப்படுவதை எண்ணி தான் வருந்துகிறேன்” என்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் அவர்.

விஞ்ஞானிகள் போராட்டம்

பட மூலாதாரம்,SCIENTIST REBELLION

பருவநிலை மாநாடு

பருவநிலை மாற்றம் குறித்த ஐநாவின் 28 ஆவது சர்வதேச மாநாடு (COP28) துபாயில் வரும் நவம்பரில் நடைபெறவுள்ளது. இதில், 2015 இல் பாரிஸ் மாநகரில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் உலக வெப்பமயமாதலை தடுக்க எடுப்பதாக, உலக நாடுகள் ஒப்புக்கொண்ட நடவடிக்கைகள் எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து மதிப்பீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், சராசரி உலக வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்கு குறைவாக வைத்திருப்பதை நோக்கமாக கொண்டு, பாரிஸ் பருவநிலை மாநாட்டில் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. உலகின் சராசரி வெப்பநிலை உயர்வை குறைந்தது 1. 5 டிகிரி செல்சியஸுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

இந்த இலக்கை எட்ட வேண்டும் என்றால், கார்பன் வெளியேற்ற அளவானது 2019 இல் இருந்ததை விட, 2030 க்குள் 43% குறைக்கப்பட வேண்டும்.

ஆனால், இதுதொடர்பாக கடந்த ஆண்டு ஐநா மேற்கொண்ட மதிப்பீட்டின்படி, கார்பன் வெளியேற்றம் குறைவதற்கு பதிலாக, 2010 இல் இருந்து 11 சதவீதம் அதிகரித்து வருகிறது. இது உவகின் தென்பகுதிக்கு (ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகள் உள்ளிட்டவை அடங்கிய பகுதி) மிகப்பெரிய ஆபத்து என்று எச்சரிக்கிறார் விஞ்ஞானி ஹுத்.

“உலகின் தென்பகுதியில் வாழும் மக்கள், பருவநிலை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கீரின்ஹவுஸ் வாயு (greenhouse gas emissions ) வெளியேற்றத்தை தடுப்பதற்கு மிகவும் குறைவான பங்களிப்பையே தருகின்றனர்” என்று வேதனை தெரிவிக்கிறார் விஞ்ஞானி ஹுத்.

போராட்டத்துக்கு எதிர்ப்பு

அரசு கட்டடங்களில் போஸ்டர்களை ஒட்டி தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் விஞ்ஞானிகள்

பட மூலாதாரம்,JORDAN ANDREZ CRUZ

 
படக்குறிப்பு,

அரசு கட்டடங்களில் போஸ்டர்களை ஒட்டி தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் விஞ்ஞானிகள்

பருவநிலை மாற்ற பிரச்னை குறித்து உலக மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள் எனக் கூறும் சில விஞ்ஞானிகள், இதனை முன்வைத்து போராட்டங்கள் நடத்துவது தேவையற்றது எனவும், இதற்கு பதிலாக இந்த பிரச்னையின் தீவிரத்தை விஞ்ஞானிகள் உணர வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துவது விஞ்ஞானிகளின் நம்பகத்தன்மையை குலைத்து விடக்கூடும் என்று அச்சம் தெரிவித்தார் சால்மர்ஸ் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியையான ஜெசிகா ஜுவல்.

பருவநிலை மாற்ற பாதிப்புகள் குறித்து சுதந்திரமான மதிப்பீட்டை மேற்கொள்வதும், இதனை தடுப்பதற்கான வாய்ப்புகளை உலக நாடுகளுக்கு தருவதும் தான் விஞ்ஞானிகளின் பணியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் அவர்.

உலகளாவிய இந்த பிரச்னைக்கு அறிவியல்ரீதியான தீர்வை வழங்குவதற்கு விஞ்ஞானிகள் இன்னும் கூடுதல் பங்களிப்பை வழங்க வேண்டும் என்கிறார் ஜுவல்.

பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கைகளை இந்த சமுதாயம் திறம்பட மேற்கொள்ளாததற்காக, விஞ்ஞானிகளை குற்றம்சாட்டும் வகையில் நான் முட்டாளாகவும், தவறாகவும் வழிநடத்தப்பட்டேன் என்று ஜிகி ஹாஸ்ஃபாதர் எனும் விஞ்ஞானி, கடந்த ஆண்டு வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

அதேநேரம், பருவநிலை பிரச்னைக்கு தீர்வு காண, விஞ்ஞானிகளை போராடவும், மேற்கொண்டு ஆய்வுகள் நடத்துவதை நிறுத்தும்படியும் பரிந்துரைப்பதும் சரியல்ல என்கிறார் அவர்.

பிபிசி கருத்துக்கணிப்பு

பருவநிலை மாற்றம் தொடர்பாக, 31 நாடுகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் 2021 இல் பிபிசி கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது.

அதில் பங்கேற்றவர்களில் 56 சதவீதம் பேர், பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கான அதிரடி நடவடிக்கைகளை தங்களது அரசு கூடிய விரைவில் எடுக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர்.

ஆனால், இந்த விஷயத்தில் அரசு அதிரடியாக செயல்படாமல், மிதமான அணுகுமுறையை கையாள வேண்டும் என்று 36 சதவீதம் மக்கள் தெரிவித்திருந்தனர்.

இனி ஆராய ஒன்றுமில்லை

விஞ்ஞானி போராட்டம்

பட மூலாதாரம்,JORDAN ANDRES CRUZ

பருவநிலை மாற்றம் தொடர்பாக கடந்த 40 ஆண்டுகளாக போதுமான பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில், பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கான விரிவான தீர்வுகள் IPCC (Intergovernmental Panel On Climate Change) அறிக்கைகளில் இடம்பெற்றுள்ளன.

ஆனால், இந்த தீர்வுகளை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் முனைந்து எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர் போராட்டத்தில் இறங்கியுள்ள விஞ்ஞானிகள்.

பருவநிலை மாற்றம் குறித்த IPCC அறிக்கைகள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை ஒன்றின் தயாரிப்பில் முக்கிய பங்காற்றியவர் பேராசிரியர் ஜூலியா ஸ்டெய்ன்பெர்கர்.

பருவநிலை மாற்றம் குறித்த அறிக்கையை சமர்பித்த சில நாட்களில் இவர் ஊடகங்களை சந்தித்து அதுதொடர்பாக விளக்கினார்.

அதன்பின் “ஆறு மாதங்களுக்கு பிறகு, பருவநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை செயல்படுத்த வலியுறுத்தி, சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்றேன். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற அந்த போராட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணையையும் சந்தித்து வருகிறேன்.

மறுபுறம், அந்தப் போராட்டத்தில் நான் பங்கேற்றது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது அந்த 20 நிமிட போராட்டம், பல ஆண்டுகள் உழைத்து தயாரித்த IPCC அறிக்கை ஏற்படுத்திய தாக்கத்தை விட பல மடங்கு அதிகமாக இருந்தது” என்கிறார் ஸ்டெய்ன்பெர்கர்.

தொடரும் போராட்டங்கள்

IPCC இல் அங்கம் வகிக்கும் விஞ்ஞானிகள், பருவநிலை மாற்றம் தொடர்பான தங்களது மதிப்பீடுகளை விரிவான அறிக்கையாக தருவதற்கு முன், பல்வேறு நாடுகளின் அரசாங்க பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்டோருடன் ரகசிய ஆலோசனை மேற்கொள்ள தான் செய்துள்ளனர்.

ஆனாலும் நிலக்கரி, கச்சா எண்ணெய் உள்ளிட்டவை தொடர்பான வணிகங்களில் ஈடுபட்டுவரும் இடைதரகர்களின் தலையீடு, பருவநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் திறம்பட செயல்படுத்தாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார் புவி விஞ்ஞானியான ரோஸ் அப்ரம்ஆஃப்.

பருவநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டதற்காக கடந்த ஓராண்டில் மட்டும் ஆறு முறை கைது செய்யப்பட்டுள்ளார் இவர்.

நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற கார்பனை உமிழும் எரிபொருட்கள் தொடர்பான திட்டங்களில் அரசாங்கங்கள் முதலீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், அமெரி்க்காவின் மாசசூசெட்டிசில் அண்மையில் நடந்த போராட்டத்தில் சக விஞ்ஞானிகள், ஆர்வலர்களுடன் இணைந்து ரோஸ் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மாகாண சட்டமன்றத்துக்குள் சில மணிநேரம் இவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

அமெரிக்க புவிஇயற்பியல் அமைப்பு, கடந்த டிசம்பரில் நடத்திய மாநாட்டில், நாசா விஞ்ஞானியான பீட்டர் கால்மஸ் உடன் இணைந்து, பருவநிலை மாற்றம் குறித்து பேசியதற்காக, அந்த மாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக பெருமையுடன் கூறுகிறார் ரோஸ்.

கார்பன் வெளியேற்றம், ஒலி மாசு உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு, தனியார் ஜெட் விமானங்களின் சேவையை ரத்து செய்ய வலியுறுத்தி, நெதர்லாந்தில் உள்ள ஷிபோல் விமான நிலைய முனையம் உள்பட 13 நாடுகளில் விமான நிலையங்களில் ரோஸ் அப்ரம்ஆஃப் உள்ளிட்ட விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு நவம்பரில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

 

விஞ்ஞானிகள் சொன்னால் மக்கள் கேட்பார்கள்

உலகின் அதி முக்கியமான இந்த பிரச்னைக்காக விஞ்ஞானிகள் வீதியில் இறங்கி போராடும்போது, அது வெகுஜன மக்கள் மத்தியில் கவனம் பெறுகிறது என்கிறார் அப்ரம்ஆஃப்.

அவரது இந்த கூற்றை ஒப்புக்கொள்கிறார் ஈக்வடாரை சேர்ந்த விஞ்ஞானி ஜோர்டன் ஆன்ட்ரஸ் குரூஸ்.

பருவநிலை மாற்றத்தை முன்னிறுத்தி அரசாங்கங்களுக்கு அழுத்தம் தருவது மட்டும் தங்களின் நோக்கம் அல்ல என்று கூறும் குரூஸ், இதனால் உலகம் எதிர்கொள்ளும் ஆபத்து குறித்து சாமானிய மக்களுக்கு புரிய வைப்பதும் தான் என்கிறார்.

ஒருபுறம் சுற்றுசூழலுக்கு ஆதரவாக பேசிவிட்டு, மறுபுறம் அதற்கு எதிரான நிலக்கரி, கச்சா எண்ணெய் தொடர்பான திட்டங்களில் முதலீடு செய்யும் அரசாங்கங்களின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துவதும் தங்களது போராட்டத்தின் நோக்கம் என்கிறார் குரூஸ்.

பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை நன்கு அறிந்தவர்கள் என்ற முறையில், பொதுமக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு இயந்திரங்களுக்கு அழுத்தம் தரவும் தாங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக கூறும் குரூஸ், விஞ்ஞானிகள் இதனை செய்யாவிட்டால் வேறு செய்வார்கள்? என்ற கேள்வியையும் முன்வைக்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/cjkz7086ml8o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.