Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

14 ஆண்டுகளாக தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை? – நிலாந்தன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

14 ஆண்டுகளாக தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை? – நிலாந்தன்.

14 ஆண்டுகளாக தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை? – நிலாந்தன்.

2009 மேமாதம் தமிழ்மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த மே மாதத்தோடு 14 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 14 ஆண்டுகளில் தமிழ் மக்கள் பெற்றவை எவை? பெறாதவை எவை? அல்லது கற்றவை எவை? கற்றுக்கொள்ளாதவை எவை?

2009 மே மாதம் வரையிலும் தமிழ் மக்களின் பிரதான பேர பலமாகக் கருதப்பட்டது ஆயுதப் போராட்டம்தான்.2009க்குப் பின் தமிழ்மக்களின் பேரபலம் எது?

ஆயுதப் போராட்டம் எனப்படுவது இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார நிலைகளைத் தாக்கியது.உயிர்களை அழித்தது.நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை குழப்பியது. அந்நிய முதலீடுகளுக்கான வாய்ப்புகளைக் குறைத்தது. இவற்றுடன் போர்க்களத்தில் அரசாங்கம் பெருமளவு காசைக் கொட்டி சண்டை போட வேண்டியிருந்தது. இவை எல்லாவற்றினதும் தொகுக்கப்பட்ட விளைவாக ஆயுதப் போராட்டமானது நாட்டின் பொருளாதாரத்தை மீள முடியாத அளவுக்குத் தாக்கியது. இது ஆயுதப் போராட்டத்தின் முதலாவது விளைவு.

இரண்டாவது விளைவு போராட்டத்தின் வெற்றிகள் காரணமாக ஒரு விடுதலைப் பிரதேசம் கிடைத்தது. அந்த விடுதலைப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு கருநிலை அரசை நிர்வகித்தது. அது ஒரு அதிகார மையமாக காணப்பட்டது. இதனால் இலங்கை தீவில் இரண்டு அதிகாரம் மையங்கள் உள்ளன என்று கருதப்பட்டது.நோர்வேயின் அனுசரணையுடனான பேச்சுவார்த்தைகள் அவ்வாறு இலங்கைத் தீவில் இரண்டு அதிகார மையங்கள் இருப்பதனை உறுதிப்படுத்தியது. எனினும், வோஷிங்டன் மாநாடு போன்றன அந்த தகைமையைக் கேள்விக்கு உள்ளாக்கியது என்பது தனியாகப் பார்க்கப்பட வேண்டும்.

இவ்வாறு ஆயுதப் போராட்டத்தின் விளைவாக ஒருபுறம் அரசாங்கத்துக்கு இழப்புகள் ஏற்பட்டன. இன்னொருபுறம் அது ஒரு புதிய அதிகார மையத்தை சிருஷ்டித்தது. இதன் விளைவாக தமிழ் மக்களுக்கு பேரபலம் அதிகமாக இருந்தது. அந்த பேர பலத்தை வைத்துக்கொண்டு தமிழ் மக்கள் பேச்சுவார்த்தைக்கு போனார்கள். இவை யாவும் 2009க்கு முந்திய காட்சிகள்.

ஆனால் 2009க்குப் பின் மேற்சொன்ன எந்த ஒரு பலமும் தமிழ் மக்களிடம் இல்லை. தமிழ்மக்களிடம் கட்டுப்பாட்டு பிரதேசமோ கருநிலை அரசோ கிடையாது.அதுமட்டுமல்ல, தமிழ் மக்கள் குறைந்தபட்சம் ஒரு தரப்பாகத்தானும் ஒன்று திரளவில்லை என்பதே கடந்த 14 ஆண்டு கால யதார்த்தம் ஆகும். தமிழ் மக்கள் இப்பொழுது நாட்டுக்குள் கட்சிகளாகவும், கொள்கைகளாகவும், வடக்கு கிழக்காகவும்,சமயங்களாகவும்,சாதியாகவும்,தியாகிகளாகவும், துரோகிகளாகவும்,ஒட்டுக் குழுக்களாகவும்,கைக்கூலிகளாகவும், ஒத்தோடிகளாகவும், மறுத்தோடிகளாகவும்,இன்ன பிறவாகவும் சிதறிப் போய்க் காணப்படுகிறார்கள்.இவர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரு மையத்துக்கு கொண்டுவர கட்சிகளும் கிடையாது மக்கள் அமைப்புகளும் கிடையாது. இது முதலாவது பலவீனம்.

இரண்டாவது பலவீனம்,கடந்த 14 ஆண்டுகளாக தமிழ்மக்கள் நடத்திவரும் அறவழிப் போராட்டங்கள் எதனாலேயும் இலங்கை அரசாங்கத்துக்கு தாக்கமான விதங்களில் இழப்புகளை ஏற்படுத்த முடியவில்லை. அதாவது அரசாங்கத்துக்கு நோகக்கூடிய விதத்தில் தமிழ் மக்கள் போராடவில்லை.சில எழுக தமிழ்களிலும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணி போன்ற போராட்டங்களின் மூலமும் தமிழ் மக்கள் வெளி உலகின் கவனத்தை ஈர்க்கிறார்கள். ஆனால் அதைக் கூட தொடர்ச்சியாகச் செய்ய முடியவில்லை. எனவே இந்த அடிப்படையில் கூறின் தமிழ் மக்கள் கடந்த 14 ஆண்டுகளாக பேரபலம் குறைந்த ஒரு மக்கள் கூட்டமாகவே காணப்படுகிறார்கள்.

இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம்.2009க்கு முன்பு வரை ஆயுதப் போராட்டம் தமிழ் மக்களின் பிரதான பேர பலமாகக் காணப்பட்ட காலகட்டத்திலும் தமிழ் மக்கள் தாம் கனவு கண்ட தீர்வைப் பெறமுடியவில்லை. 13-வது திருத்தம் போராட்டத்தின் விளைவுதான். ஆனால் அது தமிழ் மக்கள் கேட்ட தீர்வு அல்ல. எனவே 2009க்கு முந்திய பேர பலத்தின்மூலம் தமிழ் மக்கள் தமது கனவுகளை அடைய முடியவில்லை.ஒரு கட்டுப்பாட்டு பிரதேசத்தையும் படையணிகளையும் கருநிலை அரசையும் கொண்டிருந்த தமிழ்மக்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் 2009க்குப் பின்னரான கடந்த 14 ஆண்டுகளிலும், மேற்சொன்ன எந்த ஒரு பலமும் இல்லாத தமிழ் மக்கள், எப்படித் தமது இலக்குகளை வென்றெடுக்க போகிறார்கள்? தமிழ்த் தேசிய அரசியலை நடத்துவதாக கூறிக் கொள்ளும் கட்சிகளிடம் இது பற்றிய தெளிவான அரசியல் தரிசனம் ஏதும் உண்டா? அவ்வாறான தரிசனம் எதுவும் இல்லாத காரணத்தால்தான் தமிழரசியல் கடந்த 14 ஆண்டுகளாக தேங்கி நிற்கின்றதா?

ஆம்.அதுதான் உண்மை. கடந்த 14 ஆண்டுகளாக தமிழ் மக்களின் பேரபலம் சில சந்தர்ப்பங்களில் அதிகரித்து. அது தமிழ் மக்களின் போராட்டத்தால் கிடைத்த பலம் அல்ல.மாறாக புவிசார் அரசியலில் பேரரசுகளுக்கு ஏற்பட்ட தேவை காரணமாக தமிழ் மக்களின் பேரபலம் அதிகரித்தது என்பதே சரி. அவ்வாறு 2015 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் பேரபலம் அதிகரித்தது. 2018 ஆம் ஆண்டும் ஓரளவுக்கு அதிகரித்தது. 2022 ஆம் ஆண்டும் அதிகரித்தது. ஆனால் அப்பேர வாய்ப்புகளை பயன்படுத்தத் தமிழ்க் கட்சிகள் தவறிவிட்டன.

மேற்சொன்ன பேர வாய்ப்புகள் யாவும் பேரரசுகளின் புவிசார் அரசியல் தேவைகளால் ஏற்பட்டவை.இதிலிருந்து தமிழ்மக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு விடயம் உண்டு.அது என்னவென்றால் தமிழ் மக்களின் பேரபலம் என்பது இப்பொழுது அவர்களுடைய புவிசார் அமைவிடம்தான். இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் தமிழ் மக்களின் பிரதான பேரபலம் அதுதான். எனவே தமிழ் மக்கள் தமது பேரத்தை உறுதிப்படுத்த வேண்டிய இடமும் அதுதான். இதை இன்னும் ஆழமாகச் சொன்னால், தமிழ் மக்களின் நூற்றாண்டு கால துயரத்துக்கு காரணம் எதுவோ,அதுதான் தமிழ்மக்களுக்கு ஒரு காலம் விடிவையும் பெற்றுத் தரக்கூடியது. தமிழ் மக்களின் இதுவரையிலுமான துயரம் அனைத்துக்கும் காரணம் அவர்களுடைய புவிசார் அமைவிடம்தான். அப்புவி சார் அமைவிடத்தை தீர்க்கதரிசனமாகக் கையாண்டால், தமிழ் மக்களுக்கு மீட்சிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். பேரபலம் அதிகரிக்கும்

இந்தப் பேர வாய்ப்புகளை பயன்படுத்தி கடந்த 14 ஆண்டுகளாக தமிழ் மக்கள் அரசியல் செய்திருக்கிறார்களா என்று பார்த்தால், விரக்தியூட்டும் விடையே கிடைக்கும். ஏனெனில் வெளியரசுகளைக் கையாளத் தேவையான பலத்தோடும் வெளியுறவுத் தரிசனங்களோடும் தமிழ் மக்கள் இல்லை,

வெளியுறவுக் கட்டமைப்பு எனப்படுவது ஒரு அதிகார மையமாக இருக்கும் போதுதான் தேவை. தமிழ்மக்கள் ஒரு அதிகார மையமாக இல்லாதவரை, வெளியுறவுக் கட்டமைப்புக்குத் தேவையில்லை.ஒரு அதிகார மையம் வெளியில் உள்ள ஏனைய அதிகார மையங்களோடு உறவாடும் போதுதான் அதற்கென்று ஒரு வெளியுறவுத் தரிசனம் தேவைப்படுகிறது.

இந்த அடிப்படையில் பார்த்தால், தாயகத்தில் தமிழ் மக்கள் ஒரு மையமாக இல்லை.எனவே நடைமுறையில் தமிழ் மக்களிடம் ஒரு வெளியுறவுக் கொள்கையும் இல்லை.இதனால் தமிழ்மக்கள் வெளியரசுகளைக் கையாள்வதற்கு பதிலாக வெளி அரசுகள்தான் தமிழ் மக்களைக் கையாண்டு வருகின்றன.

அதாவது வெளியரசுகளை கையாளத் தேவையான ஒரு பலமையமாகத் தமிழ் மக்கள் தங்களைத் திரட்டிக் கொள்ளத் தவறிவிட்டார்கள்.அதனால் தங்களுக்கென்று ஒரு வெளியுறவுத் தரிசனத்தையோ,கொள்கையையோ கொண்டிராத மக்களாகவும் காணப்படுகிறார்கள். எனவே அதற்கு வேண்டிய கட்டமைப்புகளும் அவர்களிடம் இல்லை.

இந்த வெற்றிடத்தில் கடந்த 14 ஆண்டுகளாக தமிழ்மக்களால் மேற்கு நாடுகளையும் வெற்றிகரமாகக் கையாள முடியவில்லை.இந்தியாவையும் வெற்றிகரமாகக் கையாள முடியவில்லை.

குறிப்பாக 2009க்கு முன்னிருந்தே தமிழரசியல் அதிகம் மேற்கு நோக்கியதாகக் காணப்பட்டது.அதன் அடுத்த கட்டத் தொடர்ச்சியாக 2009க்குப்பின் அது ஜெனிவா மைய அரசியலாக மாற்றம் கண்டது.ஆனால் அங்கேயும்கூட ஜெனிவாமைய அரசியலில் தமிழ் மக்களின் விவகாரம் மனித உரிமைகள் பேரவைக்குள்தான் பெட்டி கட்டப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவைக்கு வரையறைகள் உண்டு. அது ஐ.நா.பொதுச்சபையைப் போலவோ பாதுகாப்புச் சபையை போலவோ ஒரு நாட்டின் மீது அழுத்தத்தை பிரயோகிக்கும் கட்டமைப்பு அல்ல.

அதனால்தான் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்று தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஐநாவுக்கு ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்பின.கடிதத்தில் பொறுப்புக் கூறலை மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்றும் கேட்டிருந்தன. ஆனால் கடிதத்திற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான அலுவலகமானது, தமிழ் மக்கள் எதிர்பார்த்த ஒரு பலமான கட்டமைப்பாக அமையவில்லை மட்டுமல்ல, அதுவும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்திற்கு உட்பட்ட ஒன்றாகவே உருவாக்கப்பட்டது.

கடந்த 14 ஆண்டு கால ஐநா மைய அரசியலைத் தொகுத்துப் பார்த்தால், தமிழ் மக்கள் அங்கேயும் பலமாக இல்லை. அதாவது மேற்கை மையமாகக் கொண்ட தமிழ் அரசியலிலும் தமிழ்மக்கள் திருப்பகரமான வெற்றிகளைப் பெற்றிருக்கவில்லை.

அமெரிக்க கண்டத்தில் அமெரிக்காவும் கனடாவும் இலங்கை அரச பிரதானிகளுக்கு எதிராகவும் தளபதிகளுக்கு எதிராகவும் தடைகளை விதித்திருக்கின்றன. கனடாவில் மாநில அரசாங்கத்திலும் மத்திய அரசாங்கத்திலும் இனப்படுகொலைத் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.இவை ஈழத் தமிழர்களுக்கு உற்சாகமூட்டக்கூடிய தொடக்கங்கள். ஆனால் இவையனைத்தும் கனேடிய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை சார் முடிவுகள் அல்ல என்று கனேடிய அமைச்சர் ஒருவர் உத்தியோகபூர்வமாகக் கூறியிருக்கிறார்.அதாவது அந்த நகர்வுகளின் விளைவாக,கனேடிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தைப் பகைக்கத் தயாரில்லை.அதாவது கூர்மையான வார்த்தைகளிற் சொன்னால், தமிழர்களுக்காக கொழும்பைப் பகைக்கும் ஒரு வளர்ச்சி அங்கு ஏற்படவில்லை.

இதுதான் உலகம் முழுவதிலும் உள்ள நிலை. எனவே தொகுத்துப் பார்த்தால் தெளிவாக கிடைக்கும் சித்திரம் என்னவென்றால்,மேற்கை மையமாகக் கொண்ட தமிழ் அரசியலானது 2009 க்கு முன்னரும் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெறவில்லை. இரண்டாயிரத்தி ஒன்பதுக்கு பின்னரும் எதிர்பார்த்த பருமனில், எதிர்பார்த்த வேகத்தில், வெற்றிகளைப் பெற முடியவில்லை.இது தொடர்பாக தமிழ் அரசியல்வாதிகள்,செயல்பாட்டாளர்கள் மத்தியில் தொகுக்கப்பட்ட ஆய்வுகள் அவசியம்.மே 18ஐ அனுஷ்டிப்பது என்பது அதன் அறிவியல் மற்றும் அரசியல் அர்த்தத்தில்,அந்த ஆய்வுமுடிவுகளில் இருந்து கற்றுக் கொள்வதுதான்.

https://athavannews.com/2023/1332382நிலாந்தனநிலாந்தநிலாந்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.