Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமா? வாஜ்பாய் உத்தியை பின்பற்றுகிறாரா மோதி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே வருமா?

பட மூலாதாரம்,TWITTER/OMBIRLA

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 23 மே 2023, 03:01 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டட திறப்பும், அதற்காக தேர்வு செய்யப்பட்ட தேதியும் தேசிய அரசியலில் அடுத்த சர்ச்சைக்கு வித்திட்டுள்ளன. பிரதமரே திறந்து வைப்பதா? நாட்டின் முதல் குடிமகன் மற்றும் அரசியலமைப்பின் தலைவரான குடியரசு தலைவரே நாடாளுமன்ற புதிய கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

சாவர்க்கர் பிறந்த நாளன்று திறப்பு விழாவை நடத்துவதா என்றும் அக்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. அதேநேரத்தில், நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின் பின்னணியில் பா.ஜ.க. போடும் புதிய அரசியல் கணக்குகள் ஒளிந்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் நூற்றாண்டை நெருங்கும் நிலையில், புதிய கட்டடம் கட்டுவதற்கு 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி பிரதமர் மோதி அடிக்கல் நாட்டினார். நவீன கலைநயம், எரிசக்தி சேமிப்பு, சமரசத்துக்கு இடமில்லாத பாதுகாப்பு வசதிகளுடன் முக்கோண வடிவில் இந்த கட்டுமானம் அமைந்துள்ளது. இது நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல் விஸ்டா திட்டம் என்ற மறு நிர்மாண கட்டுமான திட்டத்தின்படி நாடாளுமன்றத்துடன், சென்டரல் செக்ரட்டேரியட் எனப்படும் மத்திய அரசு பொது கட்டடங்களும் மறுநிர்மாணம் செய்யப்படவிருக்கின்றன.

தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்தில், மக்களவையில் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவை 250 உறுப்பினர்களும் அமர முடியும். எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவை 300 உறுப்பினர்களும் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

கடந்த ஆண்டு நவம்பரில் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பேரிடர் குறுக்கிட்டதால் பணிகள் சற்று தாமதமாயின.

இந்நிலையில், பிரதமர் மோதியை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சந்தித்தார். பின்னர், "புதிதாகக் கட்டப்படும் நாடாளுமன்றக் கட்டடம் இந்தியாவின் புகழ்பெற்ற ஜனநாயக மரபுகள் மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களை மேலும் வளப்படுத்தும். இந்த கட்டடத்தில், உறுப்பினர்கள் தங்கள் பொறுப்புகளை சிறப்பாகச் செய்ய முடியும். வரும் 28-ஆம் தேதி நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோதி நாட்டுக்கு அர்ப்பணிப்பார்," என்று தெரிவித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

பிரதமர் திறக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற புதிய கட்டடம் திறப்பு குறித்த செய்தி வெளியானதுமே அதனை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடுமையான விமர்சித்தார். "நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசு தலைவர்தான் திறந்து வைக்க வேண்டுமே தவிர, பிரதமர் அல்ல" என்று அவர் ட்வீட் செய்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

காங்கிரசைத் தொடர்ந்து, இடதுசாரிகளும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா தனது ட்விட்டர் பதிவில், புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

"நாட்டின் நிர்வாக பிரிவின் தலைவராக பிரதமர் இருக்கிறார். நாடாளுமன்றமோ, சட்டம் இயற்றும் பிரிவாக உள்ளது. எனவே, நாட்டின் தலைவர் என்ற முறையில், குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அதை திறந்து வைப்பதுதான் உகந்ததாக இருக்கும். மோதியை பொறுத்தவரை, சுய கெளரவம், கேமரா ஆகியவற்றின் மீதான ஆர்வத்தால், நாகரிகத்தையும், விதிமுறைகளையும் புறம் தள்ளுகிறார்" என்று கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 4

"பாஜக ஆட்சியில் பெயரளவுக்கு மட்டுமே செயல்படுபவராக, குடியரசுத் தலைவர் மாற்றப்பட்டுள்ளார்" என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியான சில பதிவுகளை இட்டுள்ளார்.

அதில், "தேர்தல் காரணங்களுக்காக மட்டுமே தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களில் இருந்து இந்தியக் குடியரசுத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை மோதி தலைமையிலான அரசு உறுதி செய்வது போல் தெரிகிறது. புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்புக்கு அழைக்கப்படவில்லை. இந்தியாவின் நாடாளுமன்றம் என்பது இந்திய குடியரசின் உச்சபட்ச சட்ட அமைப்பாகும். குடியரசுத் தலைவர், அதன் உயர்வான அரசியலமைப்பு அதிகாரம் கொண்டவர். அவர் மட்டுமே அரசாங்கம், எதிர்க்கட்சிகள் மற்றும் ஒவ்வொரு குடிமக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவரே இந்தியாவின் முதல்குடிமகர். புதிய நாடாளுமன்ற கட்டடத்தை அவர் திறந்து வைப்பது என்பது ஜனநாயக மதிப்புகள், அரசியலமைப்பு உரிமைகள் ஆகியவற்றைக் காப்பதற்கான அரசின் அடையாளமாகும்." என்று விமர்சித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 5
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 5

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பா.ஜ.க. பதில்

நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு சர்ச்சையாகி இருப்பது குறித்து பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.

"நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் திறப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. அழைப்பிதழ் ஏதும் தயாராகவும் இல்லை. வெறும் யூகங்களின் அடிப்படையில் இப்போதே அதுகுறித்து பேசுவதும், விமர்சிப்பதும் கூடாது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பதும் தவறு. நாடாளுமன்ற கட்டடம் திறப்பு குறித்த முறையான அறிவிப்பு வெளிவரும் வரை காத்திருக்க வேண்டும். அதன் பின்னரே அதுகுறித்த கருத்துகளை முன்வைக்க வேண்டும். அவசரப்படக் கூடாது." என்று அவர் கூறினார்.

நாராயணன் திருப்பதி மேலும் பேசுகையில், "நாடாளுமன்ற புதிய கட்டட திறப்புக்கு மே 28-ம் தேதியை அரசு தேர்வு செய்திருப்பது குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "வீர சாவர்க்கர் சுதந்திரப் போராட்ட வீரர். அந்தமான் சிறையில் அவர் அனுபவித்த கொடுமைகளில் ஒரு சிறிய அளவாவது அவர்கள் அனுபவித்திருப்பார்களா? ஆங்கிலேயரிடம் அவர் மன்னிப்புக் கடிதம் எழுதியதாக இன்று விமர்சிக்கப்படுகிறது.

ஆங்கிலேயர் இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்த கால கட்டத்தில் நிலைமையே வேறு. விடுதலைப் போராட்டத்தை அஹிம்சை வழியில் நடத்தவே காந்தி விரும்பினார். காந்திய வழியை பல தலைவர்கள் பின்பற்றினர். பகத்சிங்கிடம் கூட மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தினார்கள். உயிர்ப்புடன் இருந்தால்தான் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்று அறிவுறுத்தினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனர் எஸ்.ஏ.டாங்கே கூட ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் நாங்கள் அதுகுறித்து விமர்சிக்க மாட்டோம். ஏனென்றால் அப்போதைய கால கட்டம் வேறு. அதைப் புரிந்து கொள்ள வேண்டும். சிறையில் இருந்து வெளிவந்த பிறகு ஆங்கிலேயரிடம் இருந்து வீர சாவர்க்கர் ஊதியம் பெற்றதாக கூறுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு" என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தலா?

பட மூலாதாரம்,FACEBOOK/NARAYANAN THIRUPATHY

"நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டம்"

இந்த சர்ச்சை குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாமிடம் பேசினோம். அவர் கூறுகையில், "நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதனை குடியரசுத் தலைவர் திறப்பதே பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவருக்கும் குடியரசுத் தலைவரே பொதுவானவர். பிரதமர் என்பவர், மக்களவையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் தலைவர்தான். அதன்படி, பிரதமர் மோதியை பா.ஜ.க. உறுப்பினர்களின் தலைவராகவே பார்க்க முடியும். நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு என்பது இதுவே முதன் முறை என்பதால் இதில் மரபு என்று ஏதும் இல்லை."என்றார்.

நாடாளுமன்ற கட்டட திறப்பு தேதி தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி குறித்தும் அவர் சில விளக்கங்களை அளித்தார். "புதிய கட்டட திறப்புக்கு தேர்வு செய்த தேதியிலும் சர்ச்சை எழுந்திருக்கிறது. சாவர்க்கர் பிறந்த தேதியன்று நாடாளுமன்ற புதிய கட்டடத்தை திறப்பதை எதிர்க்கட்சிகள் பலவும் விமர்சித்துள்ளன. ஆனால், பாரதிய ஜனதாவைப் பொருத்தவரை சர்ச்சைகளை உருவாக்குவதே வாடிக்கை. சர்ச்சைகளை திட்டமிட்டே பா.ஜ.க. உருவாக்குகிறது. இதுபோன்ற சர்ச்சைகள் மூலமாக பா.ஜ.க. தனது வாக்கு வங்கியை ஸ்திரப்படுத்திக் கொள்கிறது. புதிய வாக்காளர்களையும் ஈர்க்க முயற்சிக்கிறது. பா.ஜ.க. என்பது ஒரு வித்தை மட்டுமே தெரிந்த கட்சி (One trick pony).

அது பெரும்பான்மை இந்து மக்களின் வாக்கு வங்கி. அந்த ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்டு பா.ஜ.க. ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், காங்கிரஸ், திமுக, அதிமுக போன்ற கட்சிகள் பல வித்தை தெரிந்த கட்சிகள் (multi-trick pony). சில நெருக்கடியான நேரங்களில் ஒரு வித்தை தெரிந்தவர் எளிதில் தப்பிவிடுவார்கள்; பல வித்தை தெரிந்தவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள். இதுதான் இன்றைய அரசியல் நிலவரம். ஆகவே, பா.ஜ.க. அதனை செய்வதில் ஆச்சரியம் ஏதும் இல்லை." என்று அவர் கூறினார்.

நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தலா?

பட மூலாதாரம்,FACEBOOK/SHYAM SHANMUGAM

மேலும் தொடர்ந்த தராசு ஷியாம், "நாடாளுமன்ற புதிய கட்டடப் பணிகளை முழுமையாக முடிக்காமலேயே அவசரஅவசரமாகவே திறப்பு விழாவை அறிவித்துள்ளார்கள். இதன் பின்னணியில் பா.ஜ.க. பல அரசியல் தந்திரங்களை செய்கிறது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் கிடைத்த படுதோல்வியை பா.ஜ.க. கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதனால் அக்கட்சி போடும் அரசியல் கணக்குகளும் வேகமாக மாறி வருகின்றன. வரும் ஜனவரிக்குள் 7 மாநில சட்டமன்ற தேர்தல்களை நடத்த வேண்டியுள்ளது. அவற்றின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடியவில்லை. ஆனால், பா.ஜ.க.வின் அதீத நம்பிக்கை சற்று தகர்ந்திருப்பதால் மேலும் ஒரு தோல்விச் செய்தியை அக்கட்சி விரும்பவில்லை.

ஆகவே, 2004-ம் ஆண்டைப் போல சில மாதங்கள் முன்னதாகவே, அதாவது மேற்கூறிய 7 மாநில சட்டமன்றங்களுடன் சேர்த்து, நாடாளுமன்றத்திற்கும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடக்கும் போது நாடாளுமன்ற தேர்தல் மத்தியில் ஆளும் கட்சிக்கு சாதகமாக அமையும் என்று அக்கட்சி நம்புகிறது. எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய கூடுதல் அவகாசம் தந்துவிடக் கூடாது என்பதுடன், பிரதமர் வேட்பாளராக மோதிக்கு எதிராக யார்? என்ற பிரதான கேள்வி தொக்கி நிற்கும் போதே தேர்தலை சந்தித்துவிட பா.ஜ.க. விரும்புவதாக தெரிகிறது." என்று தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cll1e7518gro

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய நாடாளுமன்றத்தில் சோழர் கால தமிழ்நாட்டு செங்கோலை நிறுவுகிறார் பிரதமர் மோதி - எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா

பட மூலாதாரம்,ANI

23 நிமிடங்களுக்கு முன்னர்

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா காண கோலாகலமாக தயாராகி வருகிறது. திறப்பு விழாவின் போது நாடாளுமன்றத்திற்குள் செங்கோலை பிரதமர் மோதி நிறுவுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டுமே தவிர, பிரதமர் அல்ல என்று விமர்சித்து, திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. சாவர்க்கர் பிறந்த நாளன்று திறப்பு விழாவை நடத்துவதா என்பதும் அக்கட்சிகள் முன்வைக்கும் கேள்வி.

பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் நூற்றாண்டை நெருங்கும் நிலையில், புதிய கட்டடம் கட்டுவதற்கு 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி பிரதமர் மோதி அடிக்கல் நாட்டினார். இது நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவை 300 உறுப்பினர்களும் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த கட்டடத்தை பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி திறந்துவைப்பார் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்ததுமே, அதற்கு எதிர்ப்பு கிளம்பிவிட்டது. குறிப்பாக, கர்நாடக தேர்தல் வெற்றியால் புது உத்வேகம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனங்களை முன்வைத்தது. "நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசு தலைவர்தான் திறந்து வைக்க வேண்டுமே தவிர, பிரதமர் அல்ல" என்று ராகுல் காந்தி ட்வீட் செய்தார்.

அவரது கருத்தை ஆமோதித்த, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் திறந்து வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், திறப்பு விழாவுக்கு சாவர்க்கர் பிறந்தநாளான மே 28-ம் தேதியை தேர்வு செய்ததையும் அவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

ஆனால், எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளை மத்திய அரசு நிராகரித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 28-ம் தேதியன்று புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்று முறைப்படி அறிவித்தார்.

அத்துடன், சுதந்திரத்தின் போது ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக பிரிட்டிஷாரிடம் இருந்து நேரு பெற்றுக் கொண்ட செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்படும் என்று அவர் தெரிவித்தார். மக்களவை சபாநாயகரின் இருக்கைக்கு அருகே செங்கோலை பிரதமர் மோடி நிறுவுவார் என்றும் அமைச்சர் அமித்ஷா கூறினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

இதைத் தொடர்ந்து, புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக 19 எதிர்க்கட்சிகள் சேர்ந்து கூட்டாக அறிவித்துள்ளன. இதுதொடர்பாக அக்கட்சிகள் சார்பில் கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

"ஒன்றியத்திற்கு நாடாளுமன்றம் இருக்கும். அந்த நாடாளுமன்றம் குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலங்களவை, மக்களவை என்ற இரு அவைகளைக் கொண்டிருக்கும் என்று இந்திய அரசியல் சாசனத்தில் 79-வது பிரிவு கூறுகிறது. அதன்படி பார்த்தால், குடியரசுத் தலைவர் என்பவர் நாட்டின் தலைவர் மட்டுமல்ல, நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமும் ஆவார். குடியரசுத் தலைவர் இல்லாமல் நாடாளுமன்றம் இயங்க முடியாது. ஆனாலும், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இல்லாமலேயே புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்க பிரதமர் முடிவு செய்துள்ளார். இந்த கண்ணியமற்ற நடத்தை குடியரசுத் தலைவரை இழிவுபடுத்துகிறது. அரசியல் சாசன வரிகளை மீறுகிறது.

ஜனநாயகத்தின் ஆன்மா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்ட போது, புதிய கட்டடத்திற்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை பார்க்கிறோம். ஆகவே, புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கேற்பதில்லை என்ற எங்களது கூட்டு முடிவை இதன் மூலம் அறிவிக்கிறோம்" என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

காங்கிரசுடன் ஓரணியில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ்

கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் டெல்லியில் வேகமாக மாறும் அரசியல் காட்சிகளின் நீட்சி, புதிய நாடாளுமன்ற திறப்பு விழா விவகாரத்திலும் பிரதிபலிக்கிறது. பாரதிய ஜனதாவுக்கு எதிரான தேசிய அரசியலில் காங்கிரசுடன் சேராமல் விலகியே நின்ற ஆம் ஆத்மியும், திரிணாமுல் காங்கிரசும் இம்முறை சத்தமின்றி ஒரே அணியில் இணைந்துள்ளன. திமுக, வி.சி.க., மதிமுக, சிவசேனா, சமாஜ்வாதி, மத சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் என 19 கட்சிகள் ஒன்றாக சேர்ந்து இந்த புறக்கணிப்பு முடிவை எடுத்துள்ளன.

எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள்

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, "இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு. அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல. புறக்கணித்தலும், புதுப்புது பிரச்னைகளை உருவாக்கிக் கொண்டிருப்பதும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. புறக்கணிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்து, இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்று அவர்களை கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

தற்போதைய நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனைகளை மீறி வரும் 28-ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா காண்பது உறுதியாகிவிட்டது.

பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியா விடுதலை பெறும் நிகழ்வில் இடம்பிடித்த சோழர் கால செங்கோல், இந்திய ஜனநாயகத்தின் அடுத்தக்கட்ட வரலாற்று நிகழ்விலும் இடம் பிடிக்கிறது. அத்துடன் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிரந்தரமாக வீற்றிருக்கவும் போகிறது.

சோழர் கால செங்கோலின் சிறப்பு

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா

பட மூலாதாரம்,ANI

  • செங்கோல் என்ற சொல் தமிழில் செம்மை என்ற சொல்லில் இருந்து தருவிக்கப்பட்டது. இதற்கு நேர்மை என்று பொருள்.
  • இந்த செங்கோலின் உச்சியில் கம்பீரமான பார்வையைக் கொண்ட புனிதமாக நந்தி இருக்கும்.
  • இந்திய துணைக்கண்டத்தில் பல நூற்றாண்டுகளாக நீடித்த பேரரசுகளில் முதன்மையாக திகழ்ந்த, தமிழ் மண்ணை மையமாகக் கொண்ட சோழப் பேரரசில் ஆட்சியாளர் அதாவது வழிவழியாக மன்னர்கள் மாறும் போது ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக கடைபிடிக்கப்பட்ட பாரம்பரிய வழிமுறை இது.
  • ஆட்சி பீடம் ஏறும் போது பாரம்பரிய குருவோ அல்லது முன்பு ஆட்சியில் இருந்த மன்னனோ புதிய ஆட்சியாளரிடம் செங்கோலை ஒப்படைப்பார்.
  • செங்கோலைப் பெறுபவர் நியாயமாகவும், நடுநிலையுடனும் ஆட்சி புரிவதற்கான ஆணையைப் பெறுகிறார்.
  • கடைசியாக சொல்லப்பட்டதுதான் முக்கிய விஷயம். மக்களுக்கு சேவை புரிவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் இதனை மறக்கவே கூடாது.

1947-ல் நேருவிடம் செங்கோல் ஒப்படைப்பு

  • இந்தியா விடுதலை பெற்ற போது, பிரிட்டிஷாரிடம் இருந்து ஆட்சி கைமாறியதைக் குறிக்கும் வகையில், இந்த சோழர் கால நடைமுறை பின்பற்றப்பட்டது.
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவாவடுதுறை மடாதிபதி செங்கோலை மவுண்ட் பேட்டனிடம் கொடுத்து பின் அவரே வாங்கிக் கொண்டார்.
  • அந்த செங்கோல் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
  • 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி இரவில் ஜவஹர்லால் நேருவிடம் கொடுப்பதற்காக அவரது இல்லத்தை நோக்கி செங்கோல் ஊர்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டது.
  • சோழர் கால பாரம்பரிய முறைப்படி, ஓதுவார் தேவாரத் தொகுப்பில் இருந்து கோளறு பதிகத்தின் 11-வது வரியான "அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே" என்று பாடி திருவாவடுதுறை ஆதீனத்தின் தம்பிரான் ஸ்வாமிகள் தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை நேருவிடம் ஒப்படைத்தார்.

https://www.bbc.com/tamil/articles/cv2wylnjq54o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் சென்னையில் செய்யப்பட்ட செங்கோல் ஒன்று வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த செங்கோலை செய்தளித்த உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸின் உரிமையாளர் அமரேந்திர உம்மிடியுடன் பிபிசி செய்தியாளர் முரளிதரண் காசிவிஸ்வநாதன் நடத்திய உரையாடல் இது.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக செங்கோல்: ஆட்சி மாற்ற அடையாளமாக நேருவிடம் மவுன்ட்பேட்டன் அளித்ததாக சொல்வது உண்மையா?

திருநீறும் பட்டுப் பீதாம்பரமும் அணிந்து செங்கோலைப் பெற்றுக்கொண்ட இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு.
 
படக்குறிப்பு,

திருநீறும் பட்டுப் பீதாம்பரமும் அணிந்து செங்கோலைப் பெற்றுக்கொண்ட இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 25 மே 2023

இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தால் நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோல் இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரம் கைமாறுவதன் அடையாளமாக, மவுன்ட்பேட்டனிடம் இருந்து அதைப் பெற்று அளித்ததாகச் சொல்லப்படும் தகவல் உண்மையா?

இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடம் 2023ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்தப் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், செங்கோல் ஒன்று பிரதானமான இடத்தில் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த செங்கோலின் பின்னணி குறித்து, செய்தியாளர்களுக்கு அளிக்கப்பட்ட விளக்கத்தில் ஒரு சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, "இந்தியா சுதந்திரமடையும் நாள் நெருங்கியபோது, மவுன்ட்பேட்டன் பிரபு பண்டித ஜவஹர்லால் நேருவிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியர்களுக்கு ஆட்சியைக் கை மாற்றியளிப்பதைக் குறிக்க எந்த நிகழ்வை மேற்கொள்ளலாம்.

இதையடுத்து நேரு, ராஜாஜியின் உதவியை நாடினார். ராஜாஜி, சோழ மன்னர்கள் தங்கள் ஆட்சியை உயர் குருமார்களின் ஆசியுடன் ஒரு மன்னனிடமிருந்து மற்றோர் மன்னனுக்கு மாற்றிய வழிமுறையை அடையாளம் கண்டார். ஒரு மன்னனிடமிருந்து மற்றோர் மன்னனுக்கு ஆட்சி ஒப்படைக்கப்பட்டதற்கு செங்கோல் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது.

ராஜாஜி தஞ்சாவூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தை அணுகினார். ஆதீனகர்த்தர் உடனடியாக ஐந்தடி நீளத்தில் செங்கோல் தயாரிக்க உத்தரவிட்டார். சென்னையின் உம்மிடி பங்காரு செட்டி ஜுவல்லர்ஸ் செங்கோலை வடிவமைத்தார்கள்.

ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று மூன்று பேர் செங்கோலை எடுத்துக்கொண்டு பிரத்யேகமான விமானத்தில் வந்தார்கள். ஆதீனத்தின் துணைத் தலைவர், நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை, ஓதுவார் ஆகியோர்தான் அந்த மூவர்.

மடாதிபதி மவுன்ட்பேட்டன் பிரபுவிடம் கொடுத்து பின்பு அவரே வாங்கிக்கொண்டார். பிறகு நேருவிடம் கொடுப்பதற்காக அந்தச் செங்கோல் அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. உயர் குருமார்களால் குறிப்பிடப்பட்ட தேவாரப் பாடல் பாடப்பட்டது. நேரு இதைப் பெற்றுக் கொண்டார்," என்று அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

ஜவாஹர் லால் நேருவுக்கு செங்கோல் அளித்த ஆதீனம்

ஆதீனத்தால் நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோலின் தமிழ் எழுத்துகளில் செங்கோல் பற்றிய விவரம் இடம்பெற்றுள்ளது.
 
படக்குறிப்பு,

ஆதீனத்தால் நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோலில், தமிழ் எழுத்துகளில் செங்கோல் பற்றிய விவரம் இடம்பெற்றுள்ளது

இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் திருவாவடுதுறை மடம் ஒரு செங்கோலை நேருவுக்கு வழங்கியது. இதுதொடர்பான பத்திரிகைச் செய்தி ஆதாரங்களும் புகைப்பட ஆதாரங்களும் உள்ளன. இந்தப் புகைப்படத்தில் நெற்றியில் திருநீற்றுடன் செங்கோலைப் பிடித்தபடி நேரு நிற்கிறார்(முதல் படம்).

ஆனால், இந்திய நிர்வாகத்தின் அதிகாரம் பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியர்களுக்கு கைமாறுவதன் அடையாளமாக செங்கோல் மவுன்ட்பேட்டனிடம் கொடுக்கப்பட்டு, அது நேருவிடம் கொடுக்கப்பட்டதா என்பதற்குச் சரியான ஆதாரங்கள் இல்லை. இது போன்றதோர் ஆலோசனையை ராஜாஜி வழங்கினார் என்பதற்கும் தெளிவான ஆதாரங்கள் கிடையாது.

இந்த செங்கோல் நேருவுக்கு வழக்கப்பட்டது குறித்து அமெரிக்காவிலிருந்து வெளியாகும் Time பத்திரிகையின் 1947 ஆகஸ்ட் 25ஆம் தேதியிட்ட இதழ் பின்வருமாறு விவரிக்கிறது:

"கடவுள் நம்பிக்கை குறித்து உறுதியான நிலைப்பாடில்லாத ஜவாஹர்லால் நேரு, இந்தியாவின் பிரதமராவதற்கு முந்தைய நாள் மாலையில், ஆன்மிக உணர்வில் வீழ்ந்தார்.

தென்னிந்தியாவின் தஞ்சாவூரிலிருந்த ஒரு மடத்தின் தலைவரான ஸ்ரீ அம்பலவான தேசிகரின் இரண்டு தூதர்கள் வந்திருந்தார்கள். இந்தியர்களின் உண்மையான அரசின் முதல் தலைவரான ஜவாஹர்லால் நேரு, பழங்கால இந்திய அரசர்களைப் போல இந்து புனிதத் துறவிகளிடமிருந்து அதிகாரத்தின் சின்னத்தைப் பெற வேண்டுமென அம்பலவான தேசிகர் கருதினார்.

அந்தத் தூதர்களுடன் நாதஸ்வர வித்வான் ஒருவரும் வந்திருந்தார். ஒரு பழைய ஃபோர்டு காரில் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை நேருவின் வீட்டை நோக்கி அவர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டனர். அப்படிச் செல்லும்போது ஒவ்வொரு நூறடிக்கும் இடையில் நின்று சுமார் 15 நிமிடங்கள் நாதஸ்வரத்தை வாசித்தார். மற்றொருவர் ஒரு பெரிய வெள்ளித்தட்டைத் தாங்கி வந்தார். அந்த வெள்ளித்தட்டில் ஜரிகையுடன்கூடிய பீதாம்பரம் இருந்தது.

நேருவின் வீட்டை இறுதியில் அடைந்தவுடன் நாதஸ்வர வித்வான் தனது நாதஸ்வரத்தை வாசிக்க ஆரம்பித்தார். மற்றவர்கள் நேருவின் அழைப்பிற்காகக் காத்திருந்தார்கள்.

பிறகு அவர்கள் அந்த வீட்டினுள் நுழைந்தார்கள். அப்போது அவர்களுக்கு மானின் ரோமத்தால் செய்யப்பட்ட விசிறியைக் கொண்டு இருவர் விசிறினார்கள்.

ஒரு சன்னியாசியிடம் ஐந்தடி உயரமுள்ள தங்க முலாம் பூசப்பட்ட 2 அங்குலம் கனமான செங்கோல் இருந்தது. தஞ்சாவூரிலிருந்து எடுத்து வந்த புனித நீரை நேருவின் தலையில் ஒருவர் தெளித்தார்.

நேருவின் நேற்றியில் விபூதி பூசப்பட்டது. நேருவுக்கு பீதாம்பரத்தைப் போர்த்தி, செங்கோலை அவர்கள் வழங்கினார்கள். அன்று காலையில் நடராஜருக்குப் படைக்கப்பட்டு, விமானத்தில் கொண்டுவரப்பட்ட பிரசாதமும் அவருக்கு வழங்கப்பட்டது," என விவரிக்கிறது Time இதழ்.

இந்தியா சுதந்திரமடைந்த தருணம் குறித்து Time இதழில் வெளியான கட்டுரை.
 
படக்குறிப்பு,

இந்தியா சுதந்திரமடைந்த தருணம் குறித்து Time இதழில் வெளியான கட்டுரை

Time இதழின் விவரிப்பின்படி, அதிகாரம் கை மாறியதன் அடையாளமாக துறவிகளிடமிருந்து செங்கோலை நேரு பெற்றுக்கொள்ள வேண்டுமென ஸ்ரீ அம்பலவான தேசிகர்தான் கருதியிருக்கிறார். அதேபோல, நேரடியாக அம்பலவான தேசிகரிடமிருந்து செங்கோல் நேருவிடம்தான் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தியா சுதந்திரம் பெற்ற தருணத்தை மிக நுணுக்கமாக விவரிக்கும் நூல் டொமினிக் லாப்பியரும் லாரி காலின்சும் சேர்ந்து எழுதிய The Freedom at Midnight.

இந்தப் புத்தகத்திலும் நேருவுக்கு செங்கோல் வழங்கப்பட்ட தகவல் இடம்பெற்றுள்ளது. "14 ஆகஸ்ட் 1947" என்ற தலைப்பிலான அத்தியாயத்தில், Time இதழில் கூறப்பட்டது போன்றே இந்தச் சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதிலும் ராஜாஜியின் ஆலோசனை குறித்தோ, மவுன்ட்பேட்டனிடம் செங்கோலை அளித்து, திரும்பவும் நேருவிடம் கொடுத்ததாகவோ தகவல் இல்லை.

ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான The Hindu நாளிதழ், ஆகஸ்ட் 14ஆம் தேதி என்னவெல்லாம் நடந்தது என்பதை வெளியிட்டிருந்தது. அதன்படி, ஆகஸ்ட் 14ஆம் தேதி, வியாழக்கிழமை நள்ளிரவு இந்திய அரசமைப்பு அவையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டம் கூடியது.

அதில் அரசமைப்பு அவையின் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத் உரையாற்றினார். இதற்குப் பிறகு, அவையின் உறுப்பினர்கள் தங்களது சேவையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் தீர்மானத்தைக் கொண்டுவந்து உரையாற்றினார். அந்தத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பிறகு இந்திய பெண்களின் சார்பாக திருமதி ஹன்சா மேத்தா, தேசியக் கொடியைக் கையளித்தார்.

இதையடுத்து அவை, வெள்ளிக்கிழமை காலைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதில் மவுன்ட்பேட்டனிடமிருந்து நேரு செங்கோல் பெற்ற நிகழ்வு ஏதும் இடம்பெறவில்லை.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய சில தினங்களில், இந்தியாவின் முக்கியத் தலைவர்களின் மனதில் பிரிவினையால் ஏற்படும் கலவரம் குறித்த கவலைகளே பெரும்பாலும் இருந்தன.

தேசப் பிரிவினையை எப்படி எதிர்கொள்வது, அதனால் புலம்பெயர்ந்து வரும் மக்களுக்கு என்ன வசதிகளைச் செய்வது, இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற கவலைகளே மவுன்ட்பேட்டன், நேரு, வல்லபாய் படேல், ராஜாஜி ஆகியோருக்கு இருந்தது.

சுதந்திர தினத்தன்று வெளியான தி இந்து நாளிதழின் புகைப்பட மறு அச்சுப் பிரதி.

ராஜாஜியின் சரிதையை ராஜ்மோகன் காந்தி எழுதியிருக்கிறார். அதில் சுதந்திரத்திற்கு முந்தைய சில தினங்களைப் பற்றிப் பின்வருமாறு சொல்லப்படுகிறது: சுந்திரத்திற்குச் சில நாட்கள் முன்பாக வங்கம் பெரும் கொந்தளிப்பாக இருந்தது. அப்போதைய ஆளுநரான பரோஸ் இங்கிலாந்து திரும்ப முடிவுசெய்து விட்டார்.

புதிய ஆளுநராக யாரை நியமிப்பது என்ற விவாதம் தீவிரமாக இருந்தது. ராஜாஜி கோபாலசாமி ஐய்யங்கார் பெயரைச் சொன்னார்.

ஆனால், அவர் சொந்தப் பிரச்னைகள் காரணமாக அந்தப் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து வல்லபபாய் படேல், ராஜாஜிதான் வங்கத்தின் புதிய ஆளுநராக இருக்க வேண்டும் என்றார். இதற்கு நேருவும் மகாத்மாவும் ஒப்புக்கொண்டனர்.

ஆனால், அதிகாரமற்ற பதவி என்பதால் இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியுமென யோசித்தார் ராஜாஜி. இதற்கிடையில் மறுபடியும் வங்கத்தில் வெடித்த கலவரத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

நேருவை அணுகிய ராஜாஜி, நிர்வாக அதிகாரமின்றி கலவரங்களை தன்னால் எப்படி கட்டுப்படுத்த முடியும் என மீண்டும் கேட்டார். "என்ன இப்படிப் பேசுகிறீர்கள்? இந்த நாட்டில் எந்தக் காரியமானாலும் ஏற்று வெற்றிபெறக் கூடியவர் நீங்கள்" என்று பதிலளித்தார்.

இதையடுத்து வங்கத்தின் ஆளுநராகப் பதவியேற்க ஆகஸ்ட் 14ஆம் தேதியே புறப்பட்டுச் சென்றுவிட்டார் ராஜாஜி.

சுதந்திர தினத்தன்று அவர் கல்கத்தாவில் இருந்த ஆளுநர் மாளிகையில்தான் இருந்தார். இதில் எங்கேயுமே, அதிகாரத்தை எப்படி கைமாற்றுவது என்பது குறித்த விவாதங்கள் நடந்ததாகக் குறிப்பிடவில்லை.

வி.பி. மேனனின் The Transfer Of Power In India நூல். அந்தப் புத்தகத்தைப் பொறுத்தவரை, தேசப் பிரிவினையின் சிக்கலான தருணங்களையும் இடைக்கால அரசையும் பற்றி மட்டுமே பேசுகிறது. அதில் எந்த இடத்திலும் அதிகாரத்தைக் கைமாற்ற செங்கோல் தருவது குறித்த குறிப்புகள் இல்லை.

ஆதீனத்தைச் சேர்ந்தவர்கள் விமானத்தில் சென்று, செங்கோலை நேருவிடம் அளித்ததாகத் தெரிய வருகிறது. கோவில் பிரசாதத்தையும் அவர்கள் நேருவுக்கு அளித்துள்ளனர். ஆகவே, அவர்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதிதான் விமானத்தில் தில்லி வந்திருக்க வேண்டும்.

அன்றைய தினம், இந்தியாவின் வைசிராயின் நிகழ்ச்சி நிரலின்படி அவர் பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்தார். அன்று பாகிஸ்தானுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டதால், அவர் அந்த விழாவில் பங்கேற்கச் சென்றிருந்தார்.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சுதந்திரம் வழங்கப்படவுள்ள ஆகஸ்ட் 14, 15 தேதிகளில் வைசிராயின் நிகழ்ச்சி நிரல் என்ன என்பது ஜூலை 10ஆம் தேதியே முடிவு செய்யப்பட்டது.

சதாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள இது தொடர்பான மவுன்ட்பேட்டன் பிரபு ஆவணங்களின்படி, காலை எட்டு மணிக்குப் புறப்பட்டு, 11.30 மணிக்கு கராச்சியை வந்தடைந்தார் வைசிராய்.

சுதந்திர தின நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, மூன்றரை மணிக்கு கராச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மாலை ஏழு மணிக்குத்தான் தில்லி வந்தடைந்தார் மவுன்ட்பேட்டன்.

அதிகாரம் கைமாறும் நிகழ்வுகளைப் பொறுத்தவரை, யூனியன் ஜாக் கொடியை இறக்குவது, இந்தியாவின் புதிய தேசியக் கொடியை ஏற்றுவது குறித்தே பல ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

அதன்படியே, இந்தியா சுதந்திரம் பெற்று, டொமினியன் அந்தஸ்து பெற்ற நாடாக மாறியதைக் குறிக்கும் விதமாக யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு, தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

புகைப்பட ஆதாரங்களைப் பார்த்தாலும், ஆதீனத்தைச் சேர்ந்தவர்கள் நேருவிடம் செங்கோல் அளிக்கும் புகைப்படங்கள் உள்ளனவே தவிர, மவுன்ட்பேட்டனிடம் செங்கோலை அளித்து, திரும்பப் பெறுவது போன்ற புகைப்படங்கள் இல்லை.

அதற்குப் பிறகு இந்தச் செங்கோல் என்ன ஆனது?

செங்கோலைச் செய்த உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னர் அமரேந்திரன் உம்மிடி
 
படக்குறிப்பு,

செங்கோலைச் செய்த உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னர் அமரேந்திரன் உம்மிடி

பொதுவாக பிரதமர்களுக்கு அளிக்கப்படும் செங்கோல், அரசிடம் அளிக்கப்பட்டுவிடும். ஆனால், இந்தச் செங்கோல் என்ன ஆனது என்பது குறித்து நீண்ட நாட்களாகத் தெரியாமல் இருந்தது. 2018இல் திருவாவடுதுறை ஆதீனத்தில், நேருவிடம் செங்கோல் வழங்கும் புகைப்படத்தைப் பார்த்த சிலர், அதை வெளிப்படுத்த வார இதழ் ஒன்றில் அதுதொடர்பான கட்டுரை ஒன்று வெளியானது. அந்தக் கட்டுரையில், இந்தச் செங்கோல் சென்னையில் உள்ள உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் கடையில் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைப் பார்த்த உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸை சேர்ந்தவர்கள், இந்த செங்கோல் எங்கே உள்ளது எனத் தேட ஆரம்பித்தனர்.

இது தொடர்பாக இந்தியாவில் உள்ள பல அருங்காட்சியகங்களுக்கும் கடிதங்களை அனுப்பினர். பல மாதங்கள் கழித்து, அலகாபாத்தில் உள்ள அருங்காட்சியகம் அதுபோன்ற செங்கோல் ஒன்று தங்களிடம் இருப்பதாகக் கடிதம் ஒன்றை அனுப்பினர். பிறகு, மூன்று மாதம் கழித்து அதன் புகைப்படத்தையும் அனுப்பினர்.

இதைப் பார்த்த உம்மிடி பங்காரு ஜுவல்லர்சை சேர்ந்தவர்கள், அந்த அருங்காட்சியகத்திற்குச் சென்றனர். அங்கே இந்தச் செங்கோல் நேருவின் கைத்தடி என்று குறிப்பிடப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

அந்தச் செங்கோலின் பின்னணியை அருங்காட்சிகத்திற்கு விளக்கிய நகைக்கடை நிறுவனத்தார், சென்னை திரும்பிய பிறகு அது தொடர்பான வீடியோ ஒன்றை உருவாக்கி வாட்ஸ்அப்பில் பகிர்ந்தனர்.

"இந்த வீடியோ வைரலானது. அதை முக்கியமான சிலர் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் பிரதமரின் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்றுள்ளனர். பிரதமர் அலுவலகம் இதன் உண்மைத் தன்மையை விசாரித்துவிட்டு, தற்போது இதை நாடாளுமன்றத்தில் வைக்க முடிவு செய்துள்ளது," என்கிறார் உம்மிடி பங்காரு ஜுவல்லர்சின் மேனேஜிங் பார்ட்னரான அமரேந்திரன் உம்மிடி.

இந்தச் செங்கோலை உருவாக்க எவ்வளவு செலவானது, எவ்வளது தங்கம் தேவைப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸிடம் தற்போது இல்லை. தற்போது, அதேபாணியில் ஒரு செங்கோலை செய்திருக்கிறது உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

உம்மிடி பங்காருவைச் சேர்ந்த அமரேந்திரன் உம்மிடி சொல்லும் கட்டுரை, ஒரு வார இதழின் இணையத்தில், கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. அந்தக் கட்டுரையில், இந்தியாவின் கடைசி ஆளுநராக இருந்த மவுன்ட்பேட்டன், நேருவை அழைத்து, “இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கப்போகிறோம். அதை எப்படி அடையாளப்படுத்துவது?” என்று கேட்க, குழப்பம் அடைந்த நேரு, உடனடியாகப் பதில் கூறவில்லை.

அடுத்து மூதறிஞர் ராஜாஜியை அணுகி, “இதற்கு நீங்கள்தான் தீர்வு சொல்ல வேண்டும்” என்று கேட்டுக்கொண்டாராம். உடனே ராஜாஜி, ‘‘கவலை வேண்டாம். தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சிமாற்றம் செய்யும்போது, ராஜகுருவாக இருப்பவர் செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து ஆசீர்வதிப்பார். அதுபோல நாமும் மகான் ஒருவர் மூலம் செங்கோல் பெற்று ஆட்சிமாற்றம் அடையலாம்” என்று கூறியிருக்கிறார்.

அப்போது இந்தியாவின் சைவ மடங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீன மடத்தின் 20-வது குருமகா சந்நிதானமாக இருந்தவர் அம்பலவாண தேசிகர் (1937 - 1951). அவரைத் தொடர்புகொண்ட ராஜாஜி, ஆட்சி மாற்றத்துக்கான சடங்குகளைச் செய்துதரச் சொல்லிக் கேட்டிருக்கிறார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அம்பலவாண தேசிகரிடம் மாசிலாமணி பிள்ளை என்பவரின் கருத்தும் அந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது. “ஆதீனம் அந்த நேரத்தில் கடும் காய்ச்சலில் இருந்தார். ஆனாலும், சென்னையில் பிரபலமாக இருந்த உம்மிடி பங்காரு செட்டியார் நகைக் கடையில் சைவச் சின்னம் பொறித்த தங்கத்திலான செங்கோல் ஒன்றைத் தயாரித்துத் தரும்படிக் கேட்டுக்கொண்டார். அதன் எடையும் விலையும் தற்போது எனக்கு நினைவில் இல்லை. ராஜாஜி ஏற்பாடு செய்த தனி விமானத்தில், திருவாவடுதுறை ஆதீன மடத்தின் கட்டளை சாமியாக இருந்த சடைச்சாமி என்றழைக்கப்படும் திருவதிகை குமாரசாமி தம்பிரானையும், மடத்தின் ஓதுவார்களையும் டெல்லிக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் கூடவே மங்கள இசை முழங்க மடத்து வித்வான் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை குழுவினரும் சென்றிருந்தனர்.

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு 11.45 மணிக்கு, தேவாரத்தில் கோளறு பதிகத்திலுள்ள 11 பாடல்களைப் பாடுமாறு குருமகா சந்நிதானம் அருளியிருந்தார். அதன்படி ‘வேயுறு தோளிபங்கன்’ எனத் தொடங்கும் தேவாரத் திருப்பதிகத்தின் 11-வது பாடலில் கடைசி அடியான ‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே’ என்று பாடி முடிக்கும்போதே மவுண்ட்பேட்டனிடமிருந்து செங்கோலை சடைச்சாமி பெற்று, அதன்மீது புனிதநீர் தெளித்து, இறைநாமம் உச்சரித்து, நேருவிடம் கொடுத்தார். இது தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த விஷயமாகும். நேரு கையில், செங்கோலை சடைச்சாமி தரும் அரிய புகைப்படம் திருவாவடுதுறை ஆதீன மடத்தில் உள்ளதை இன்றும் காணலாம்” என்று அவர் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

இதற்கிடையில், இந்த விவகாரம் இந்திய அரசின் கலாச்சாரத் துறையை எப்படி சென்றடைந்தது என்பது குறித்து, தி இந்து நாளிதழின் கட்டுரை ஒன்று விவரிக்கிறது.

2021ஆம் ஆண்டு மே மாதம் வெளியான துக்ளக் இதழின் இதேபோன்ற கட்டுரை வெளியானதைப் பார்த்த, நடனக் கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமணியம், இந்திய அரசின் கலாசார அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அந்தக் கடிதத்தில் துக்ளக் இதழின் கட்டுரையை மேற்கோள்காட்டி, அந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது இந்த விஷயத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்தும்படி கூறியிருந்தார்.

இதற்குப் பிறகு கலாசார அமைச்சகத்தின் வேண்டுகோளின்படி, இந்திரா காந்தி நேஷனல் சென்டர் ஃபார் ஆர்ட்ஸ் இது தொடர்பான ஆய்வுகளை நடத்தியது. அதன்படி 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவில் தேசிய கொடியை ஏற்றுவதற்கு முன்பாக இந்த நிகழ்வு நடந்ததாக முடிவுசெய்யப்பட்டது.

அதற்குப் பிறகு இந்தச் செங்கோல், அலகாபாதில் (பிரயாக்ராஜ்) நேருவின் வீடாக இருந்து தற்போது அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ள இடத்தில் வைக்கப்பட்டிருந்ததாக தி இந்து நாளிதழின் கட்டுரை கூறுகிறது.

மேலும், “தேசம் பிரிவினையாலும் வன்முறையாலும் பாதிக்கப்பட்டிருந்ததால், இந்த நிகழ்வு வேகவேகமாக ஏற்பாடு செய்யப்பட்டது. சட்டபூர்வமான நிகழ்வாக இல்லை என்பதால் பதிவு செய்யப்படவில்லை. இதன் காரணமாக, இந்திய அரசின் நினைவிலிருந்தே இந்தச் செங்கோலும் இந்தச் சம்பவமும் மறைந்துவிட்டது” என இந்திரா காந்தி நேஷனல் சென்டர் ஃபார் ஆர்ட்ஸின் உறுப்பினர் செயலர் சச்சிதானந்த் ஜோஷி கூறியதாகவும் தி ஹிந்து நாளிதழ் கட்டுரை கூறுகிறது.

https://www.bbc.com/tamil/articles/cpedk38vlgvo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.