Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2048ஆம் ஆண்டில் முழுமையான அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றுவதே எமது போராட்டமாகும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ranil-1.jpg


ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2048ஆம் ஆண்டு அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதே தமது போராட்டமாகும் என்றும் தெரிவித்தார்.

“தேசிய நிலைமாற்றத்திற்கான திட்டவரைபடத்தை” நாட்டுக்கு முன்வைத்து விசேட உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக கடந்த 09 மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி இதன் போது விரிவாக விளக்கினார்.

அத்துடன், எதிர்பார்க்கும் இலக்குகளை அடைவதற்கான செயல்பாட்டு முன்மொழிவுகளையும் ஜனாதிபதி நாட்டுக்கு முன்வைத்தார்.

அரச நிதி மறுசீரமைப்பு, முதலீட்டு ஊக்குவிப்பு, சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு, அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு ஆகிய பிரதான 04 தூண்களில் நாட்டின் எதிர்காலம் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக நிலைமாற்றும் செயற்பாட்டுக்கு அவசியமான தொழிநுட்ப மற்றும் நிலையான முயற்சிகளை அமுல்படுத்த தனியார் துறையிடமிருந்து முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ளும் கூட்டாய்வு முறையொன்று அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நவீன உலகுக்கும், நவீன தொழில்நுட்பத்துக்கும் ஏற்றவாறு நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்காவிட்டால் நாடு பின்நோக்கிச் செல்லும் என்றும், அதன் முடிவாக நாடு, பொருளாதார காலனித்துவமாக மாறிவிடும் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எனவே நாம் புதிதாக சிந்தித்து புதிய பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்ததோடு, அதற்கு அவசியமான துரித பொருளாதார மறுசீரமைப்புக்களை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஒழுங்குபடுத்தல், கொள்முதல் மற்றும் அரசியல் ஆகிய அனைத்து அம்சங்களிலும் ஊழலை முற்றிலுமாக நிறுத்துவதற்கும், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பொறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்ட அரசாங்க பொறிமுறையின் மூலம் ஊழலுக்கு எதிரான நடைமுறைகளை செயல்படுத்துவதற்கும் ஒரு விசேட செயலணி நிறுவப்படும் என்றும் குறிப்பிட்டார்.

அடுத்த 05 ஆண்டுகளில் நாம் பொருளாதாரத்தை முழுமையாக ஸ்திரப்படுத்துவதோடு, அடுத்த 25 ஆண்டுகளில் இலங்கையை உயர் வருமானம் ஈட்டும் அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, முதல் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டைக் கட்டியெழுப்பும் பணி அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்கப்படும் எனவும், அதற்காக இளைஞர்களை தயார்படுத்துவதாகவும் தெரிவித்தார். அந்தப் பணியை மேற்கொள்ளும் திறன் எமது இளைஞர்களிடம் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

இந்த மறுசீரமைப்பு வேலைத்திட்டம், இலகுவான பணி இல்லையென்றாலும் நாட்டிற்கு சிறந்த விடயங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாம் எடுக்கும் தீர்மானங்கள் எவ்வளவு கடினமான மற்றும் வேதனையானதாக இருந்தாலும், எதிர்கால சந்ததியினருக்காக அந்தக் கடினமான பாதையில் சரியான கொள்கைகளின்படி முன்னேறுவதன் மூலம் மாத்திரமே நாட்டை மீண்டும் உயர்வடையச் செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஒரு இலக்குடன் சரியான பாதையில் செல்வதன் விளைவுகளை இன்று நாம் அனைவரும் அனுபவிப்பதாகவும், 70% வரை உயர்ந்திருந்த பணவீக்கத்தை தற்போது 25.2% வரை குறைக்க முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதனால் வாழ்க்கைச் சுமை படிப்படியாகக் குறைந்து வருவதோடு, ஒட்டுமொத்த சமூகமும் இந்த பயனை உணர ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கடினமான பயணத்தின் போது அனைத்து துன்பங்களையும் சகித்துக் கொண்ட நாட்டு மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த ஜனாதிபதி, இந்தப் பாதையில் தொடர்ந்து செல்வதன் மூலம் சிரமங்களையும் துன்பங்களையும் குறைத்து நாட்டுக்கு சிறந்த பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய முழுமையான உரை

‘’நமது நாட்டின் பொருளாதாரத்தை கையாளும் பொறுப்பை நான் ஏற்றது முதல், பொருளாதாரம் குறித்த உண்மையான தகவல்களை அவ்வப்போது உங்களுக்கு வெளிப்படுத்தி வருகிறேன். பொருளாதாரத்தின் உண்மையான தோற்றத்தை எப்போதும் வெளிப்படைத்தன்மையுடன் உங்கள் முன் வைக்க விரும்பினேன். நாட்டின் உண்மை நிலை, அந்த சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கான வழி மற்றும் நாட்டுக்காக நாம் அனைவரும் ஆற்ற வேண்டிய பங்கு தொடர்பாக நான் உங்களை தெளிவுபடுத்தினேன்.

நெருக்கடியான பொருளாதாரத்தால் பல இன்னல்களை சந்தித்து வந்த நாம் தற்போது மெதுமெதுவாக சாதகமான நிலையை அடைந்து வருகிறோம். நலிவடைந்து, வீழ்ச்சியடைந்த நமது பொருளாதாரம், ஓரளவுக்கு ஸ்திரமாகி வருகிறது.

கடந்த காலத்தில் நாம் கையாண்ட சரியான நடைமுறைகளினால் இந்த நிலையை எங்களால் அடைய முடிந்தது.அதே போன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டோம். அந்தச் சவால்களை எதிர்கொள்ளும்போது பல்வேறு சிரமங்களை சந்தித்தோம்.

தாய் நாட்டிற்காக இந்தக் கஷ்டங்களைத் தாங்கிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வழியில் இன்னும் சில காலம் தொடர்ந்து செல்வதன் மூலம் கஷ்டங்களையும் துன்பங்களையும் குறைத்து, சிறந்தவொரு பொருளாதாரத்தை எமக்கு ஏற்படுத்த முடியும். இலங்கை இப்போது முன்னேற்றகரமான மற்றும் வளமான பயணத்தை மேற்கொள்ள தயாராகியுள்ளது.

அந்தப் பயணத்தை நாம் எவ்வாறு தொடர வேண்டும்? அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன? என்பது முக்கியமானது.

எதிர்காலத்தில் நாங்கள் பின்பற்றும் நடவடிக்கைகள் குறித்து இன்று நான் உங்களுக்கு விளக்கப் போகிறேன். எங்கள் எதிர்கால திட்டவரைபடம் இது.

எமது முன்னோக்கிய பயணத்தில் வெற்றியடைவதற்கு இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் முழுமையான மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை நான் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளேன். இந்த பொருளாதார சீர்திருத்தங்கள், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கலை 2023 பட்ஜெட்டில் நான் குறிப்பிட்டேன். சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப இந்த நடவடிக்கையை நாம் இப்போதே எடுக்க வேண்டும்.

இங்கு நாம் எடுக்கும் முடிவுகள் கடினமாகவும் வேதனையாகவும் இருக்கும். பிரபலமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சரியான கொள்கைகளின்படி இந்த கடினமான பாதையில் நாம் தொடர்ந்தால் மட்டுமே நம் நாட்டை மீண்டும் உயர்த்த முடியும். இந்தப் பாதையில் நாம் தொடர்ந்தால்தான் எதிர்கால சந்ததியினர் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய நாட்டை உருவாக்க முடியும்.

பாரம்பரிய அரசியலில் ஈடுபடும் சில குழுக்கள் பொருளாதார மறுமலர்ச்சியைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பொருளாதார மறுசீரமைப்புக் குறித்து மக்களிடம் தவறான அச்சத்தை உருவாக்க முயற்சிக்கின்றன. எப்போதும் கூறும் “நாட்டை விற்கப் போகின்றார்கள்” என்ற கோஷத்துடன் தொடர்ந்தும் மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றன.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் முன்வைக்கும் கோஷம் இதுதான். ஐம்பதுகளிலும் கூட நாடு விற்கப்படுகிறது என்று சொல்லி மக்களை ஏமாற்றினார்கள். அறுபதுகளிலும் நாட்டை விற்பதாகச் சொல்லி மக்களைத் தவறாக வழிநடத்தினார்கள். எழுபதுகளிலும் நாடு விற்கப்படுகிறது என்று மக்கள் மத்தியில் ஒரு அசாத்திய பயத்தை உருவாக்கினார்கள். எண்பதுகளில் கூட நாடு விற்கப்படுகிறது என்று சொல்லி மக்களை அச்சத்தில் ஆழ்த்தினர். அன்று முதல் இன்று வரை இந்தக் குழுக்கள், நாட்டை விற்கப் போகின்றார்கள் என்ற கோசத்தை முன்வைத்து பொருளாதார சீர்திருத்தங்களை சீர்குலைக்க முயன்று வருகின்றன.

இனி, இது போன்ற கோஷங்களுக்கு நீங்கள் ஏமாற மாட்டீர்கள் என்று எங்களுக்கு தெரியும். நாட்டை முன்னேற்ற நாம் அனைவரும் கடுமையாக உழைத்து, நம்மை அர்ப்பணிக்க வேண்டியுள்ளது. 2048 ஆம் ஆண்டுக்குள் உலகில் வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்ற நமது இலக்கை அடைய வேண்டும். நவீன உலகத்துக்கும், நவீன தொழில்நுட்பத்துக்கும் ஏற்றவாறு நமது பொருளாதாரத்தை வடிவமைக்காவிட்டால், பின்னோக்கிச் செல்ல வேண்டி ஏற்படும். இத்தகைய விலகலின் விளைவு, நாடு பொருளாதார காலனித்துவமாக மாறுவதுதான்.

நாம் முன்னோக்கிச் செல்வோம். போட்டி நிறைந்த உலகை எதிர்கொள்ளும் வகையில் நமது பொருளாதாரத்தை உருவாக்குவோம். நாட்டுக்குத் தேவையான பொருளாதார மறுசீரமைப்புகளை முறையாக நிறைவேற்றுவோம்.

தவறான கொள்கைகள், பலவீனமான நிகழ்ச்சிகள், தோல்வியடைந்த வேலைத்திட்டங்கள் ஆகியவற்றை ஒரு ஒழுங்கான பாதையில் முன்னெடுப்பதையே பொருளாதார மறுசீரமைப்புகள் மூலம் நாம் மேற்கொள்கிறோம்.

பழைய பாரம்பரிய முறைகள் மூலம் வங்குரோத்து நிலையை அடைந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. நாம் புதிதாக சிந்தித்து புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.

– பொருளாதார சீர்திருத்தங்களின் மூலம் கிடைக்கும் பிரதிபலன்கள் என்ன?

– உங்களின் வாழ்க்கைச் சுமை குறையும். வாழ்க்கைத் தரம் உயரும். அது தவறா? அது நாட்டை விற்பதாக அமையுமா?

– மிகச் சிறிய அளவில் இருந்து வலுவான பாரிய வளர்ச்சி வணிகங்களை ஏற்படுத்த புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. அது தவறா? இது நாட்டை விற்பதாக அமையுமா?

– நாட்டின் ஏழ்மையான மற்றும் ஆதரவற்ற பிரிவினரைப் பாதுகாப்பதன் மூலம், அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிவாரணம் மற்றும் வசதிகள் வழங்கப்படுகின்றன. இது தவறா? இது நாட்டை விற்பதாக அமையுமா?

– அரச நிறுவனங்களால் ஏற்படும் கோடிக்கணக்கான ரூபா நட்டத்தை ஈடுகட்ட மக்கள் மீது சுமையை ஏற்றும் மரபு முடிவுக்கு வருகிறது. இது தவறா? இது நாட்டை விற்பதாக அமையுமா?

– வெளிப்படையான முறையில் பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்புடன் செயற்படுவதற்கான ஒரு நடைமுறை உருவாக்கப்படுகின்றது. இது தவறா? இது நாட்டை விற்பதாக அமையுமா?

– உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறி வருகிறது. இது தவறா? இது நாட்டை விற்பதாக அமையுமா?

நமது நாட்டின் நிலையான வளர்ச்சி மற்றும் வெற்றியை அடைய இந்த பொருளாதார மறுசீரமைப்புகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இந்த மறுசீரமைப்புக்கள் ஊடாக, இலங்கையின் நவீனமயமாக்கலை துரிதப்படுத்தி, அர்த்தமுள்ளதாக்கவும், எமது சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், அபிவிருத்தி முயற்சிகளுக்கு சர்வதேச சமூகத்தை அதிகளவில் பங்களிக்கச் செய்யவும் சந்தர்ப்பங்கள் வழங்கப்படும்.

இந்தப் பயணம் எளிதானதல்ல என்பதை நாம் அறிவோம். மேலும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் நாம் அறிவோம். ஆனால், அந்தச் சவால்கள் அனைத்தையும் வெற்றிகொள்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். நாட்டுக்கு நல்லதைச் செய்வதில் நமது அரசாங்கம் எப்போதும் உறுதியுடன் உள்ளது.

இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு எங்கள் தாய்நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்க மாட்டோம். அன்று மக்கள் எதிர்கொண்ட நிலையை இன்று பலர் மறந்து விட்டனர். நாட்டின் பொருளாதாரம் 7.8 சதவீதத்தினால் சுருங்கியது. அந்நியச் செலாவணிக் கையிருப்பு அதல பாதாளத்துக்குச் சரிந்தது. உலகில் அதிக பணவீக்கம் உள்ள நாடுகளில் நாமும் இணைந்தோம். வெளிநாட்டுக் கடனை திருப்பிச்செலுத்த முடியவில்லை. நாடு வங்குரோத்து நிலைக்குச் சென்றது. உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. எரிபொருள் மற்றும் எரிவாயு பெற பல நாட்கள் வரிசையில் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது. உரம் இல்லாததால் விவசாயம் பாழடைந்தது. விளைச்சல் இல்லாமல்போனது. விவசாயிகள் ஆதரவற்றவர்களாக இருந்தனர். வர்த்தகம் சரிந்தது. தொழில், வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டன. மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டது. பாடசாலைகள் மூடப்பட்டன. 10-12 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. மக்கள் வாழ்வதற்கு இருந்த வழிகள் அனைத்தும் இல்லாமல்போனது. நாடு தலைகீழாக மாறியது. மக்கள் வீதிகளுக்கு வந்தனர்.

மக்கள் துன்பங்களைத் தாங்க முடியாமல் திணறினர். போராட ஆரம்பித்தார். இப்படிப்பட்ட இக்கட்டான பின்னணியில் இந்த நாட்டின் பொருளாதாரத்தை, பிரதமராக நான் பொறுப்பேற்றேன். எனக்கு ஒரே ஒரு சக்தி மாத்திரமே இருந்தது. அதுதான், எனது தாய்நாட்டை இந்தக் கடினமான தொங்கு பாலத்தைக் கடந்து முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியும் என்று என்னுள் இருந்த நம்பிக்கையும் உறுதியும்.

நாட்டை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கையை நாம் முதலில் ஆரம்பித்தோம். நாடு கடுமையான நிதிக் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டது. இந்த நெருக்கடியிலிருந்து மீள ஒரே வழி சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது மட்டுமே என்பதை நாங்கள் முன்கூட்டியே அறிந்தோம். எனவே நாம் அவர்களுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தோம். பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சர்வதேச நாணய நிதியம் எங்களுக்கு நீடிக்கப்பட்ட கடன் வசதியை வழங்க ஒப்புக்கொண்டது. உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பிற நிதி நிறுவனங்களுடன் இணைந்து, நாட்டிற்கு கடன் உதவி பெறும் திட்டங்கள் தொடங்கப்பட்டன.

இதன்போது, அண்டை நாடான இந்தியா எங்களுக்கு நிறைய உதவிகளைச் செய்தது. பங்களாதேஷ் ஆதரவளித்தது. ஜப்பான் மனிதாபிமான உதவிகளை வழங்கியது. சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற எங்களின் முக்கிய கடன் வழங்குநர்கள் மற்றும் பெரிஸ் கிளப் ஆகியவை எமது கடன் மறுசீரமைப்புக்கு ஒப்புக்கொண்டன. இந்த அனைத்து நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் இலங்கை மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரச செலவினங்களைக் குறைத்ததன் மூலம் எங்களால் அதிக நிதியை சேமிக்க முடிந்தது. நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எமது வெளிநாட்டில் உள்ள இலங்கைப் பணியாளர்கள் பாரியளவில் பங்களிப்புச் செய்கின்றனர். 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வெளிநாட்டில் உள்ள இலங்கைப் பணியாளர்கள் அனுப்பிய பணம் 80.6 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. புதிய வரிக் கொள்கைகள் காரணமாக 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 210 பில்லியன் ரூபா மேலதிக வருமானம் கிடைத்துள்ளது.

கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஒரு இலக்குடன் சரியான பாதையில் செல்வதன் விளைவுகளை இன்று நாம் அனைவரும் அனுபவிக்கிறோம். 70 சதவீதமாக உயர்ந்திருந்த பணவீக்கம் தற்போது 25.2 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் வாழ்க்கைச் சுமை படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஒட்டுமொத்த சமூகமும் இந்த ஆறுதலை உணர ஆரம்பித்துள்ளது.

அடுத்து, நாங்கள் எப்படி முன்னோக்கிச் செல்லப்போகின்றோம் என்று நான் உங்களுக்கு விளக்க விரும்புகிறேன். எமது அடுத்த நடவடிக்கை அல்லது திட்ட வரைபடத்தில் நான்கு முக்கிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் நமது எதிர்காலத்தை நான்கு முக்கிய தூண்களில் கட்டியெழுப்புகின்றோம்.

முதலாவது தூண் – அரச நிதி மற்றும் மறுசீரமைப்பு

அரச நிதி மற்றும் நிதி மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டோம். அந்த ஒப்பந்தத்துக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றோம்.

வரிக் கொள்கை, வருமான நிர்வாகம் மற்றும் செலவு முகாமைத்துவம் ஆகிய துறைகளில் நாம் மறுசீரமைப்புக்களைத் தொடங்கியுள்ளோம். அந்த மறுசீரமைப்புகளை நாம் முன்னெடுத்துச் செல்கிறோம். அரச கடனை நீண்ட காலத்திற்கு நிலையான அளவில் பேணுவதற்கு அவசியமான மறுசீரமைப்புப் பணிகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். இலங்கையின் பொருளாதாரம் குறித்து நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் புதிய பொருளாதார கொள்கைகளை அறிமுகப்படுத்துகின்றோம்.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில், 2022 மே மாதம் முதல் பல்வேறு செலவுக் கட்டுப்பாடுகளுக்கான சுற்றறிக்கைகளை அமுல்படுத்தியுள்ளோம்.

தேவையற்ற செலவுகளை மேலும் குறைக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரச செலவினங்களை முடிந்தவரை மட்டுப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்.

1) தேவையற்ற செலவுகளை நிறுத்துதல்.
2) செலவினங்களைக் குறைத்து, அரசாங்க செயல்பாடுகளை எளிமையாக்குதல்.
3) செலவினங்களைக் குறைத்து அரசாங்க செயற்பாடுகளை திட்டமிடுதல்.
4) செலவுகளைக் குறைப்பதற்கும் தரமான சேவைகளை வழங்குவதற்கும் தானியங்கு மற்றும் டிஜிட்டல் முறைகளைப் பின்பற்றுவது குறித்து எமது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது தூண் – முதலீட்டு ஊக்குவிப்பு

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதலீட்டை ஊக்குவிப்பது மிக முக்கியமான காரணியாகும். அரச துறை மற்றும் தனியார் துறையின் பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் பொருளாதார வளர்ச்சியை நோக்கிய நமது பயணத்தை வலுப்படுத்த முடியும்.

தென் கொரியா, சிங்கப்பூர் போன்று, நமது நாட்டையும் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக உருவாக்குவதே எமது அபிலாஷையாகும்.

அதேபோன்று, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, பசுமை ஹைட்ரஜன் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற நவீன மற்றும் நிலையான முயற்சிகளில் கவனம் செலுத்தவும் நாம் எதிர்பார்க்கின்றோம். இதற்கான சிறந்த உதாரணங்களை இந்தியாவின் ஆந்திரா பிரதேசத்தில் நாம் கண்டுகொள்ளலாம். இத்தகைய நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் நிலையான முயற்சிகள் இலங்கையின் பொருளாதாரத்தை முழுமையாக மாற்றும் செயல்பாட்டில் முக்கியமான விடயங்களாகும்.

இத்தகைய நவீன தொழில்நுட்ப மற்றும் நிலையான முயற்சிகளை செயல்படுத்த, தமது வர்த்தக முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு தனியார் துறையினரைக் கேட்டுக்கொள்கிறோம். முன்மொழிவுகளுக்கான இந்த அழைப்பு, வெகுசன ஊடகங்கள் மூலம் பகிரங்கப்படுத்தப்பட்டு வெளிப்படைத் தன்மை மற்றும் முறையான முறையில் முன்னெடுக்கப்படும்.

முதலீட்டுத் திறன், வேலைவாய்ப்பு உருவாக்கம், ஏற்றுமதிப் பங்களிப்பு மற்றும் பொருளாதாரப் பங்களிப்பு ஆகிய நான்கு அளவுகோல்களின் அடிப்படையில் இந்த முன்மொழிவுகள் தேர்ந்தெடுக்கப்படும்.

இந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான கொள்கையை வகுக்க, நாம் புதிய பொறிமுறையொன்றை செயல்படுத்துவோம். அந்தப் பொறிமுறையை நாம் கூட்டாய்வு நடைமுறை என அடையாளப்படுத்துவோம்.

அரச துறை மற்றும் தனியார் துறையினருக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு, அந்தந்த துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள், அரச அதிகாரிகள், முன்மொழிவு அல்லது திட்டம் தொடர்பான துறைசார் அமைச்சுகளின் அதிகாரிகள் மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் இணைத்துக்கொள்ளப்படுவர்.

அவர்கள் இந்த முன்மொழிவுகள் மற்றும் திட்டங்களை 06 வார காலத்திற்கு ஆழமாக கலந்துரையாடுகின்றனர். தனியார் துறைப் பிரதிநிதிகளின் கருத்திற்கும் இடம்கொடுத்து, அவர்களின் முதலீடுகளுக்கு உள்ள அனைத்துத் தடைகளையும் நீக்க, குழுக்களாக ஒன்றிணைந்து செயல்படுவதற்கான திட்டங்கள் இதன்போது தயாரிக்கப்படுகின்றன. செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் திட்டம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடி, தங்கள் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஒழுங்கமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டாய்வு நடைமுறை செயல்பாட்டில் இணையும் அரச தரப்பினர் இந்த ஆறு வாரங்களுக்குள் திட்டங்களைச் செயல்படுத்துவதில் முழுமையாகக் கவனம் செலுத்துவர்.

கூட்டாய்வு நடைமுறை செயற்பாடுகளை வெற்றியடையச் செய்வதற்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் நானும் அமைச்சரவை அமைச்சர்களும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்க எதிர்பார்க்கின்றோம்.

கூட்டாய்வு நடைமுறை செயல்முறை மூலம் மூன்று முக்கிய நோக்கங்களை அடைய நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
1) அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக முன்மொழிவுகள் மற்றும் திட்டங்கள் மூலம் நமது பொருளாதாரத்தின் மீட்சியை துரிதப்படுத்தல்.
2) புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்.
3) வேலைத்திட்டங்களுக்கு உள்ள தடைகளை நீக்கும் வகையில் சுதந்திர பொறிமுறைகள் மூலம் எதிர்கால திட்டங்களை செயல்படுத்தி, அரச பொறிமுறையை மேலும் செயற்றிறன் மிக்கதாக மாற்றுதல்.
4) இலங்கையின் வர்த்தக நடைமுறைகள் கடுமையான பாதுகாப்பு தடைகள் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த அனைத்தையும் விடுவிப்பதற்கான காலம் வந்துவிட்டது. முதலீட்டாளர்களை உதாசீனப்படுத்தும் வகையிலும் பலவீனப்படுத்தும் வகையிலுமே பல நடைமுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையை நாம் மாற்றுவோம். அதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான ஒரு நாட்டை உருவாக்குவோம்.

மூன்றாவது தூண் – சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு

சமூகப் பாதுகாப்பிற்காக நாங்கள் கூட்டாய்வு செயல்முறையை பின்பற்றுகிறோம். அரசாங்க அமைச்சுகள், திணைக்களங்கள், முகவர் நிலையங்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் துறைசார் நிபுணர்களை இந்த சமூகப் பாதுகாப்பு கூட்டாய்வு செயல்பாட்டில் ஈடுபடுத்தவும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

பல வருடங்களாக இந்த நாட்டு மக்கள் எங்களிடம் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

அவை,
1) சமூகத்தின் ஏழை மற்றும் ஆதரவற்ற பிரிவினரைப் பாதுகாப்பது.
2) ஊழலைக் கட்டுப்படுத்துவது.
3)அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்து தொடர்ந்தும் பொதுமக்கள் கருத்துக்களை கேட்டறிவது. ஆகிய மூன்று விடயங்கள் ஆகும். இந்த மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நாம் நடவடிக்கை எடுக்கின்றோம்.

இங்கு, சமூகத்தில் மிகவும் ஆதரவற்ற மற்றும் ஏழ்மையான பிரிவினருக்கு முறையான சமூகப் பாதுகாப்பு உள்ளதா என்பதைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான ஆதரவையும் நிவாரணத்தையும் வழங்க நடவடிக்கை எடுப்போம்.

ஒழுங்குபடுத்தல், கொள்முதல் மற்றும் அரசியல் ஆகிய அனைத்து அம்சங்களிலும் ஊழலை முற்றிலுமாக நிறுத்துவதற்கும், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பொறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்ட அரசாங்க பொறிமுறையின் மூலம் ஊழலுக்கு எதிரான நடைமுறைகளை செயல்படுத்துவதற்கும் ஒரு விசேட செயலணி நிறுவப்படும்.

நான்காவது தூண் – அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு

தற்போது, பொருளாதாரத்தின் 33 துறைகளில், 430 அரச நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 06 வீதமான இலங்கையர்கள் பணிபுரிகின்றனர்.

அரச துறைக்கு சந்தையின் ஏகபோக உரிமை வழங்குவதன் விளைவு, தனியார் முதலீடுகள் வீழ்ச்சியடைவதுதான். விலை நிர்ணயம், திறமையற்ற முகாமைத்துவம் மற்றும் மோசமான நிதிச் செயல்பாடுகள் காரணமாக, இந்த தொழில்முயற்சியாளர்கள் தொடர்ந்து நட்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிறுவனங்கள் அரசாங்கத்தின் வரிப்பணத்தை நம்பி பிச்சை எடுக்கும் நிறுவனங்களாக மாறிவிட்டன.

2021 ஆம் ஆண்டில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை மற்றும் ஸ்ரீலங்கன் எயார் லைன் ஆகியவற்றின் செயற்பாட்டு இயக்கத்தினால் ஏற்பட்ட இழப்பு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.6 சதவீதமாகும். இந்தக் கடன் சுமையை இருபத்தி இரண்டு மில்லியன் மக்கள் மீது சுமத்துவது நியாயமற்றது.

இந்தத் தோல்வியடைந்த நிறுவனங்களை நிர்வகிக்க பெருமளவிலான மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிறுவனங்கள் அரசாங்கத்துக்கும் சுமையாக உள்ளன. நாட்டுக்கு சுமை. மக்களுக்கு சுமை. எனவே, இவற்றை வெற்றியடையச் செய்வதற்குத் தேவையான சீர்திருத்தங்களையும் மறுசீரமைப்புகளையும் நாம் செய்ய வேண்டும்.

அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் திட்டத்தை நாம் ஏற்கனவே தயாரிக்கத் தொடங்கியுள்ளோம். இந்தத் திட்டத்தின் மூலம் இந்த நிறுவனங்கள் வெற்றிபெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மேலும், அரச நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் தங்கள் செயல்திறனை மேம்படுத்த தங்களை அர்ப்பணிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அவர்களுக்கு வழங்கப்பட்ட வருடாந்த இலக்குகளை அவர்கள் பூர்த்தி செய்யத் தவறினால், அவர்களுக்குப் பதிலாக பொருத்தமானவர்களிடம் அந்தப் பொறுப்புகளை ஒப்படைப்பதற்கும் நாங்கள் தயங்குவதில்லை.

பொதுமக்கள் பங்களிப்பு

கூட்டாய்வு நடவடிக்கைகளுக்கு மக்களின் பங்களிப்பைப் பெறவும் நாங்கள் செயற்பட்டு வருகிறோம். 06 வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்கள், பகுப்பாய்வு மற்றும் முடிவுகளின் அடிப்படையில், பல்வேறு வேலைத்திட்டங்கள் குறித்து தயாரிக்கப்பட்ட திட்டங்கள், பொதுமக்கள் சந்திப்பு தினத்தில் அறிவிக்கப்படும். அந்த திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் முன்வைக்கப்படும். அதன் மூலம் மக்கள் தங்கள் கருத்துக்களையும் பதில்களையும் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படும். கூட்டாய்வு செயல்முறை மூலம் தயாரிக்கப்பட்ட திட்டங்கள் மக்களின் ஆலோசனைகளினால் மேலும் செம்மைப்படுத்திய பின்னர் அமுல்படுத்தப்படும்.

அதேபோன்று, நமது சீர்திருத்தம் மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் குறித்த அனைத்து தகவல்களையும் மக்களுக்கு வழங்க நான் நடவடிக்கை எடுப்பேன். ஜனாதிபதியின் வருடாந்த அறிக்கையாக இந்தப் பணியைச் செய்ய வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.

நமது கொள்கைத் திட்டத்தை செயல்படுத்தும்போது, சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்வது முக்கியம் என்பதே எமது நிலைப்பாடாகும். கூட்டாய்வு செயல்முறையிலும், பொதுமக்கள் தினத்திலும் இதே செயல்முறையையே நாங்கள் முன்னெடுக்கின்றோம்.

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவதற்குள் கூட்டாய்வு செயல்முறையை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். மூன்றாவது காலாண்டில், இணைப்புச் செயல்முறை மற்றும் தற்போது பொருளாதாரம் தொடர்பான விசேட செயலணிகளின் செயற்பாடுகள் திறந்த மற்றும் வெளிப்படையாக பொதுமக்களுக்கு முன்வைக்கப்படும்

இவை அனைத்துக்கும் பிறகு, இந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் தேசிய மறுசீரமைப்புத் திட்டத்தை வெளியிட நாம் எதிர்பார்த்துள்ளோம்.

செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நடைமுறைகளின் முன்னேற்றத்தை டிஜிட்டல் ஊடகம் மூலம் காண்பதற்கான வாய்ப்புகள் மக்களுக்கு வழங்கப்படும். நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் சிக்கல்கள் மற்றும் தடைகளை எடுத்துக்காட்டும் வழிமுறையும் இதில் அடங்கும். அதன்படி, தடைகள் மற்றும் சிக்கல்களைக் கண்டறிவதற்கும் அவற்றை துரிதமாக தீர்க்கும் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.

இத்திட்டங்களை அமுல்படுத்துவதை ஒருங்கிணைக்கும் வகையில் அரச மற்றும் தனியார் துறை உயர் அதிகாரிகளைக் கொண்ட ஜனாதிபதி விசாரணைப் பணியகம் ஒன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. துறைசார் அமைச்சுகளுடனான ஒருங்கிணைப்புப் பணிகள் அவர்களினால் முன்னெடுக்கப்படும்.

எதிர்காலத்தை உருவாக்குதல்

இந்தச் சீர்திருத்தங்கள் ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு சேர பயன் தரும் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் உட்பட முழு நாடும் முன்னேற்றம் அடையும். உங்களினதும் முழு நாட்டு மக்களினதும் வாழ்க்கைத் தரம் இதன் மூலம் உயர்வடையும்.
இது சமூகத்தின் ஒரு பிரிவினரை மட்டும் இலக்காகக் கொண்ட திட்டம் அல்ல. இது நாடு தழுவிய திட்டம் ஆகும்.

அப்போதுதான், இளைஞர்களின் வளப் பயன்பாட்டின் மூலம், இலங்கையின் ஏற்றுமதிக்காக சர்வதேச போட்டித்தன்மையை அதிகரிக்கவும், மனித மூலதன வளர்ச்சியின் அடித்தளத்தை விரிவுபடுத்தவும் வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாம் பொருளாதாரத்தை முழுமையாக ஸ்திரப்படுத்துவோம். அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் உயர் வருமானம் ஈட்டும் அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும். அதுவே எங்களின் நோக்கமாகும். முதல் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டைக் கட்டியெழுப்பும் பணி அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்கப்பட வேண்டும். அதற்காக நாம் இளைஞர்களை தயார்படுத்தி வருகிறோம். சீரமைக்கிறோம். அதாவது, சவால்களை எதிர்கொண்டு, 2048 ஆம் ஆண்டளவில் எமது தாய்நாட்டை முழுமையான அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு இளைஞர்கள் தோள் கொடுப்பார்கள் என்றும், நாட்டிற்கான இந்தப் பொறுப்பையேற்று அந்த இலக்கை அடைவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இது, எங்கள் அனைவரின் எதிர்காலத்தையும் கட்டியெழுப்பும் ஒரு வேலைத்திட்டம் ஆகும். நமது எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்தை மேம்படுத்தும் திட்டமாகும்.

எனவே, இந்தப் பணிகளின் வெற்றிக்கு நீங்கள் அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

2048 அபிவிருத்தி அடைந்த ஒரு நாடு. அதுவே எங்களின் இலக்கு. இந்த இலக்கை அடைவதே எங்கள் போராட்டம்.

நாம் ஒன்றாக நமது எதிர்காலத்தை உருவாக்குவோம். சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்குவோம். இப்பணியில் இணையும் உங்கள் அனைவருக்கும் நன்றி.’’ என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/256567

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முப்படையினரை பலப்படுத்த ஜனாதிபதிதிட்டம் - கூட்டுப்படைக்களின் தளபதிக்கு மேலும் அதிகாரங்கள்

Published By: RAJEEBAN

04 JUN, 2023 | 10:39 AM
image
 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முப்படையினரையும்  பலப்படுத்த விரும்புவதுடன் கூட்டுப்படைகளின் தளபதிக்கு  மேலும் அதிகாரங்களை வழங்க விரும்புகின்றார்.

வியாழக்கிழமை நாட்டு மக்களிற்கு ஆற்றிய உரையில் அறிவிக்கப்பட்ட இலட்சியமான தேசிய மாற்றம் திட்டத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி இராணுவத்தை பலப்படுத்தவும் கூட்டுப்படைகளின் தளபதிக்கு அதிக அதிகாரங்களை வழங்கவும்  விரும்புகின்றார்.

அமைச்சரவை பத்திரவடிவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இராணுவதிட்டத்தினை அமைச்சரவை ஏற்கனவே ஏற்று கொண்டுள்ளது. சட்டவரைவை உருவாக்குவதற்கு அமைச்சர்கள் அனுமதியளித்துள்ளனர்.

புதிய சட்டமூலம் தொடர்பில் சட்டமா அதிபரின் பரிந்துரையை  பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஜனாதிபதியின்  பரிந்துரையையும் அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

ஜனாதிபதியின் புதிய திட்டத்தின் கீழ் பிரதி கூட்டுப்படை தளபதி  என்ற பதவியும் உருவாக்கப்படும், எனினும் இந்த பதவி எவ்வாறு உருவாக்கப்படும் என்ற விடயம் அமைச்சரவை பத்திரத்தில் இல்லை.

கூட்டுப்படை தளபதி  பாதுகாப்பு செயலாளருடன்  இணைந்து பணியாற்றி பாதுகாப்பு படையினருக்கு மூலோபாய அறிவுறுத்தல்களை வழங்குவார்.

பாதுகாப்பு அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ் பாதுகாப்பு செயலாளருடன் இணைந்து கூட்டுப்படை தளபதி இலங்கையின் பாதுகாப்பு படைகளின் எதிர்கால முன்னேற்றம் உட்பட பாதுகாப்பு மூலோபாயத்தை  ஏற்படுத்துவார்.

ஆயுதப்படைகளின் திறன் எதிரிகளின் திறனுடன் ஒப்பிடுகையில் எவ்வாறு உள்ளது என்பது குறித்து முப்படைகளின் பிரதானி மதிப்பீடுகளை  மேற்கொள்வார்.

ஆயுதப்படையினர் தொடர்பான அவசரநிலை திட்டங்களை தயாரித்து முப்படைகளின் பிரதானி அவற்றை மதிப்பிடுவார்.

ஆயுதப்படைகளின் ஒருங்கிணைந்த  - கூட்டுப்பயிற்சிக்கான கொள்கைகளை உருவாக்குவதல் முக்கியமான குறைப்பாடுகள் பற்றிய ஆலோசனைகளை வழங்குதல் மற்றும் பலம் பலவீனங்களை மதிப்பிடுதல் போன்றவற்றில் கூட்டுப்படைகளின் தளபதி ஈடுபடுவார்.

https://www.virakesari.lk/article/156877

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் மாத்தையா பேசுவது என்னவோ கேக்கிறதுக்கு நல்லாய்த்தானிருக்குது ஆனால் ஒன்றை மறைத்து வேறொன்றை செருகப்பாக்கிறார், நாடு முழுவதும் புரையேறி புழுத்து நாற்றமெடுக்கும் இனப்பிரச்சினையை ஏற்றுக்கொள்ள எதிர்கொள்ள மறுத்து ஏதேதோ பேசுகிறார். நீங்கள் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், எத்தனை நாடுகள் வேண்டுமானாலும் உங்களுக்கு உதவட்டும், இனப்பிரச்சனை தீராமல் பொருளாதாரப்பிரச்சனை இம்மியளவும் நகராது. ஆனால் ஒரு சர்வாதிகார ஆட்சி நடத்தி ஜனநாயகத்தின் குரல் வளை இறுக்கப்படப்போகிறது என்பது மட்டும் தெளிவாகிறது. உதைவிட பலமடங்கு ஆசைப்பேச்சுகள் பேசி அடங்கியோருமுண்டு, சட்டங்களை இயற்றி நீதிமன்றங்களை அடக்கியாண்டவர்களுமுண்டு, தலைதெறிக்க ஓடியோருமுண்டு. எதற்கும் பின்னுக்கு திரும்பிப்பாத்து அறிக்கை விடுங்கள். நீங்கள் வைத்த பொறி உங்களுக்கு எதிராக மாற வாய்ப்புண்டு. அதிலும் மக்கள் ஆணையில்லாமல் சந்தர்ப்ப வசத்தால் ஆட்சிக்கு வந்தவர் நீங்கள், ரொம்ப கனவு காணக்கூடாது.

On 2/6/2023 at 16:12, ஏராளன் said:

சர்வதேச நாணய நிதியம் எங்களுக்கு நீடிக்கப்பட்ட கடன் வசதியை வழங்க ஒப்புக்கொண்டது. உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பிற நிதி நிறுவனங்களுடன் இணைந்து, நாட்டிற்கு கடன் உதவி பெறும் திட்டங்கள் தொடங்கப்பட்டன.

இது ஒன்றும் உங்கள் அபிவிருத்தி என்று சொல்லி பெருமைப்படாதீர்கள்.

On 2/6/2023 at 16:12, ஏராளன் said:

அடுத்த 25 ஆண்டுகளில் இலங்கையை உயர் வருமானம் ஈட்டும் அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி,

அப்போது இவரே உயிரோடு இருக்கமாட்டார் இப்போதைக்கு சொல்லி ஏமாற்றுவது!

On 2/6/2023 at 16:12, ஏராளன் said:

தென் கொரியா, சிங்கப்பூர் போன்று, நமது நாட்டையும் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக உருவாக்குவதே எமது அபிலாஷையாகும்.

அவர்களின் ஆட்சிமுறையை பின்பற்றுங்கள், பொருளாதாரம்  தானாகவே முன்னேறும் அல்லது நீங்கள் நீங்களாகவே இருங்கள். அவையைப்போல இவையைப்போல என்று சொல்லி கனவு காணாதீர்கள். 

On 2/6/2023 at 16:12, ஏராளன் said:

அன்று முதல் இன்று வரை இந்தக் குழுக்கள், நாட்டை விற்கப் போகின்றார்கள் என்ற கோசத்தை முன்வைத்து பொருளாதார சீர்திருத்தங்களை சீர்குலைக்க முயன்று வருகின்றன

அந்தக்குழுக்களில் இவரும் இருந்தார் என்பதை மறைத்துவிட்டார்.

On 2/6/2023 at 16:12, ஏராளன் said:

அபிவிருத்தி முயற்சிகளுக்கு சர்வதேச சமூகத்தை அதிகளவில் பங்களிக்கச் செய்யவும் சந்தர்ப்பங்கள் வழங்கப்படும்.

இந்த நாட்டின் குடிமக்களை தள்ளிவைத்துவிட்டு சர்வதேச அமைப்புகளின் பங்களிப்பினால் மட்டும் நாடு முன்னேற்றமடையாது, அதை உணரும் திறன் இலங்கையில் யாருக்குமில்லை.   

  • கருத்துக்கள உறவுகள்

May be pop art of skydiving and text

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration of motorcycle, scooter and text

 

 

May be an illustration

 

May be a doodle of one or more people and text

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.