Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜூனிலும் சுட்டெரிக்கும் சூரியன் - வெப்பப் பேரிடரை நோக்கிச் செல்கிறதா தமிழ்நாடு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 ஜூன் 2023, 09:59 GMT
புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்
தமிழ்நாட்டை சுட்டெரிக்கும் சூரியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாட்டின் பரவலான இடங்களில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக காணப்பட்டது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை என பல நகரங்களில் வெயிலின் அளவு வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.

 

கத்தரி வெயிலின் தாக்கம் முடிந்த பிறகும் சென்னை போன்ற நகரங்களில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

கோடை வெயிலின் தாக்கம் குறையாத நிலையில், பள்ளிகள் திறப்பை தமிழ்நாடு அரசு ஒத்தி வைத்திருக்கிறது.

 

கடந்த சனிக்கிழமை, ஜூன் 3ஆம் தேதியன்று சென்னை நுங்கம்பாக்கம் வானிலை மையத்தில் பகல் நேரத்தில் 107.8 டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பநிலை பதிவானது. அதே நாளில் மீனம்பாக்கத்தில் 108.7 பாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது.

 

இதேநிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் மனித குலத்திற்கு 'வெப்பம்' ஒரு பேரழிவாக மாறக்கூடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

 

உச்சம் தொட்ட வெப்பம்

சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் வானிலை நிலையத்தில் கடந்த சனிக்கிழமையன்று பதிவான வெப்பநிலை, ஜூன் மாதத்தில் பதிவான வெப்பநிலையில் மிக அதிகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

 

வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் உள்ள தகவலின் அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளில் 2012ஆம் ஜூன் மாதத்தில்தான் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

 

இதற்கு முன்பு அதிகபட்சமாக 1948ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதியன்று நுங்கம்பாக்கத்தில் 43.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளதே சென்னையில் ஜூன் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை என சென்னை வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கூறினார்.

 

அதன்பிறகு தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த சனிக்கிழமையன்று (ஜூன் 3) 42.1 செல்சியஸ் வெப்பம் பதிவானது.

 

அதே நாளில் சென்னையின் பல பகுதிகளிலும் வெப்பநிலை 41க்கும் மேலாக பதிவாகியுள்ளது. சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகம் மூலமாகவும், தனியார் வானிலை ஆர்வலர்கள் மூலமாகவும் பகல் நேரத்தில் பல இடங்களில் பதிவு செய்யப்பட்ட வெப்பநிலை, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்தை விட அதிகமாக இருந்தது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

மதுரவாயலில் 43.3 டிகிரி செல்சியசாகவும், அமைந்தகரையில் 42 ஆகவும், அண்ணா நகர் பகுதியில் 43 ஆகவும், அம்பத்தூரில் 42.8 ஆகவும் பதிவாகியிருந்தது.

 

ஜூன் 3ஆம் தேதி சென்னையில் பதிவான வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.

 

இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரைக்கண்ணன், கடல் காற்று தரைக்கு வந்துசேர ஏற்பட்ட தாமதத்தாலும், வறண்ட மேலைக்காற்றின் தாக்கத்தின் காரணமாகவும் சென்னையின் வெப்பநிலை அதிகரித்துள்ளது என்று கூறினார்.

 

“சென்னையின் இயல்பு வெப்பநிலை ஜூன் 3ஆம் தேதி மட்டுமே 4.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. அதற்கு முந்தையநாள் 4 டிகிரியும், அடுத்தநாள் 2.1 டிகிரியும் அதிகரித்துள்ளது. வழக்கமான வெப்பத்தை விட 4.5 முதல் 6.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு வெப்பம் காணப்பட்டால் மட்டுமே வெப்ப அலை என்று அறிவிக்கவேண்டும். தமிழ்நாட்டில் தற்போது வெப்ப அலை ஏதும் வீசவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.

அதிக வெப்பத்தால் என்ன பாதிப்பு?

காலநிலைமாற்றம், சுற்றுச்சூழல்

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால் பகல் நேரத்தில் வெளியே செல்லும் நபர்கள் ஏராளமான சிக்கல்களை சந்திக்கின்றனர்.

 

குறிப்பாக வெயிலில் வேலை செய்யும் தினக்கூலிகள், துப்புரவு பணியாளர்கள் போன்ற பலரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

 

வெயிலின் தாக்கம் அதிகரிப்பதையொட்டி ‘வெட் பல்ப் வெப்பநிலை’ (Wet bulb temperature) என்ற சொல்லாடல் சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டது.

 

வெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பதம் கொண்டு இந்த வெட் பல்ப் வெப்பநிலை கணக்கிடப்படுகிறது.

 

இந்த வெட் பல்ப் வெப்பநிலை 30 டிகிரிக்கு மேல் சென்றால் அது மனிதர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தரராஜன்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

“ஜூன் 3ஆம் தேதி சென்னையின் வெட் பல்ப் வெப்பம் 31.3 டிகிரி செல்சியஸை எட்டியது. 32 டிகிரிக்கு மேல் சென்றால் அது மனிதர்களுக்கு மிகவும் சிக்கலானது. 35 டிகிரிக்கு மேல் இந்த வெப்பநிலை செல்லும்போது மனிதர்களின் உடல் தன்னை குளிர்விக்கும் தன்மையை இழந்துவிடும். வறண்ட காற்றின் காரணமாக வியர்வை ஏதும் வராது. குளிர்சாதன வசதி இல்லாமல் மனிதர்களால் வாழவே முடியாத நிலை உருவாகும். 2050ஆம் ஆண்டு இந்த நிலையை தமிழ்நாடு எட்டும் என நினைத்திருந்தோம். ஆனால் அதை விரைவாக நெருங்குவது போல இது அமைந்திருக்கிறது,” என்று தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தின் வெளிப்பாடா?

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இயல்பைவிட அதிகமாக காணப்பட்ட வெப்பத்திற்கு காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என்ற வாதத்தை சூழலியல் ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.

 

வெப்ப அலை போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப நமது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்கிறார் சென்னை காலநிலை செயல்பாட்டு குழுவைச் சேர்ந்த கார்த்திக்.

 

தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு அதிக வெப்பம் இருந்தாலும், சென்னை, மதுரை போன்ற நகரங்களில் வாழும் மக்கள்தான் வெயிலால் அதிகம் பாதிப்படுகின்றனர். குறிப்பாக வெளிசூழலில் தினமும் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள தினக்கூலிகள், டெலிவரி தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள் என பலரும் வெயிலின் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். காலநிலை மாற்றத்தின் வெளிப்பாடாகவே இதை நாம் பார்க்கவேண்டும் என்று அவர் கூறினார்.

 

காலநிலை குறித்த தகவமைப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகளை (Adaptation & Mitigation) உடனடியாக அரசும், அதைச் சார்ந்துள்ள துணை அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டும் என்று கார்த்திக் வலியுறுத்துகிறார்.

 

கிராமப்புற பகுதிகளை விட நகர்ப்புறங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. நகரங்களில் இருக்கும் குறைந்த அளவிலான பசுமை நிலப்பரப்பே இதற்கு காரணம். அதனால் வெப்ப அலையை சமாளிக்க நகரங்களில் அதிக மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்று சூழலியல் ஆர்வலர்கள் பரிந்துரைக்கின்றனர்.

காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நகரங்களில் வெப்ப அலையை சமாளிக்க நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை பட்டியலிடுகிறார் இளம் சூழலியல் ஆர்வலரான கார்த்திக்.

 

1.பேரிடர் காலங்களை எப்படி சமாளிக்கலாம் என்று நகரங்களில் வாழும் மக்களுக்கு பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

 

2.பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

 

3.வெயிலை சமாளிக்க நகர்ப்புற பகுதிகளில் உள்ள பொது இடங்களில் நிழற்குடைகள் அதிகமாக அமைக்க வேண்டும்.

 

4.வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நாட்களில் நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை பொதுமுடக்கம் அறிவிக்கவேண்டும்.

 

5.பொது இடங்களில் இலவச குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்.

 

வெப்பத்தால் பேரிடர் ஏற்படுமா?

காலநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்து வரும் பலரும் புவியின் வெப்பம் வெகு விரைவில் 1.5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று கூறிவருகின்றனர்.

 

தமிழ்நாட்டிலும் வெயிலின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகமாகி வரும் நிலையில், மனிதர்கள் உயிர்வாழ முடியாத அளவுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கிறார் இந்திய வனப்பணி அதிகாரியும், தமிழ்நாடு மாநில திட்டக்குழு உறுப்பினருமான சுதா ராமன்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

“வட இந்திய மாநிலங்களை போல அல்லாமல், வெப்ப அலை என்பது தமிழ்நாட்டிற்கு புதிய ஒன்று. இதனால் நகரப்பகுதிகளில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும். இதே நிலை நீடித்தால் சைபீரியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளை போல நமது ஊரிலும் வெப்ப அலையினால் பேரிடர்கள் உருவாகும்” என்று பிபிசி தமிழிடம் பேசியபோது அவர் தெரிவித்தார்.

 

தமிழ்நாட்டில் உள்ள நகரங்களில் பசுமை நிலப்பரப்பை விட கான்கிரீட் கட்டிடங்களின் பரப்பளவு அதிகமாகிக்கொண்டே போவதால் சென்னை போன்ற நகரங்கள், நகர்ப்புற பகுதிகள் ர வெப்ப தீவுகளாக(Urban heat islands) மாறுகின்றன என்று சுதா ராமன் கூறினார்.

 

ஒரு நகரத்தின் மொத்த பரப்பளவில் அமைந்துள்ள பசுமை நிலப்பரப்பை விட கான்கிரீட் கட்டிடங்கள் போன்ற வெப்பத்தை தாங்கி நிற்கும் அமைப்புகள் அதிகமாகும் போது, அதனால் வெப்பத்தின் தாக்கம் பல மடங்கு அதிகரிக்கும். உதாரணமாக காற்றோட்ட வசதி இல்லாத கான்கிரீட் கட்டிடத்தின் உட்பகுதியில், வெளியில் இருக்கும் வெப்பத்தை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாகும். இது ’Urban heat islands’ என்று அழைக்கப்படுகிறது.

 

இதை சமாளிக்க தனிமனித பங்களிப்பை காட்டிலும் அரசின் முனைப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்கிறார் சூழலியல் ஆர்வலரான கார்த்திக்.

 

“தமிழ்நாடு அரசு காலநிலை மாற்றம் தொடர்பாக இரட்டை நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. ஒருபக்கம் கிரின் தமிழ்நாடு, மீண்டும் மஞ்சப்பை போன்ற முன்னெடுப்பை அரசு எடுத்து வருகிறது. ஆனால் மறுபுறம் சூழலை மாசுபடுத்தும் ஆலைகளுக்கு அனுமதி, நீர்நிலைகளை அழித்து வளர்ச்சிப் பணிகள், கடற்கரை பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டங்கள் என சூழலுக்கு விரோதமான திட்டங்களை கொண்டு வருகிறது” என கார்த்திக் கூறுகிறார்.

சுற்றுச்சூழல், இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

வருங்காலத்தில் வெப்பத்தை குறைக்க என்ன வழி?

காலநிலை மாற்றம் என்பது நமது கண்முன்னே நடந்து வருவதை ஏற்றுக்கொண்டு காலநிலை தகவமைப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

 

“நகரங்களில் உள்ள கான்கிரிட் கட்டிடங்களின் மொட்டை மாடியில் வெப்பத்தை குறைக்கும் பெயிண்ட், வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது, குளிர்சாதன வசதியை உகந்த அளவில் பயன்படுத்துவது, பொது போக்குவரத்தில் பயணிப்பது, பசுமை எரிசக்திக்கு மாறுவது என தனிமனிதர்கள் வாழ்வில் பல மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் இந்த பிரச்னையை சமாளிக்க முடியும் என நான் நம்புகிறேன்,” என்று வனத்துறை அதிகாரி சுதா ராமன் கூறினார்.

 

சென்னை நகர விரிவாக்க பணிகளை கண்காணிக்கும் சி.எம்.டி.ஏ (CMDA) குழுமத்தின் உறுப்பினர் செயலாளரான அன்ஷுல் மிஷ்ரா பிபிசியிடம் பேசும் போது,சென்னை நகர எல்லைக்குள் வெயிலின் பாதிப்புகளை குறைக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

 

சென்னை போன்ற பெருநகரத்தில் மிக அதிகமாக கட்டப்படும் கட்டிடங்களின் அளவை கட்டுப்படுத்த, பெரிய கட்டிடங்களை எழுப்பும்போது மொத்த பரப்பளவில் 10% அளவுக்கு திறந்தவெளி இடங்கள் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்று விதிகள் உள்ளன. இந்த இடங்களை பயன்படுத்தி சென்னையின் பசுமை நிலப்பரப்பு குறையாமல் பார்த்து கொள்ள முடியும் என்று அன்ஷுல் மிஷ்ரா கூறினார்.

 

விரைவில் நடைமுறைப்படுத்தபட இருக்கும் சென்னை நகரத்தின் மூன்றாவது மாஸ்டர் பிளானில் பின்வரும் சில கொள்கைகளை மாற்றியமைக்க உள்ளதாக அவர் கூறினார்.

 

1. ஆற்றல் திறன் மிக்க கட்டிடங்களை எழுப்புவது

 

2.புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்துவது

 

3.தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆற்றல் பயன்பாட்டை குறைப்பது

 

4.நகர பசுமை நிலப்பரப்பை அதிகரிப்பது

 

5.காற்றோட்டத்திற்கு வழிவிட்டு கட்டிடங்களை ஒரே நேர்கோட்டில் சீராக கட்டுவது

 

இதுபோன்ற நடைமுறைகளை அமலுக்கு கொண்டுவருவதன் மூலம் சென்னை போன்ற பெருநகரங்களில் கான்கிரீட் கட்டிடத்தினால் அதிகரிக்கும் வெப்பத்தை குறைத்து, ஒட்டுமொத்தமாக வெயிலின் தாக்கத்தை எதிர்காலத்தில் சமாளிக்க முடியும் என்று அன்ஷுல் மிஷ்ரா கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/crgz65mer24o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.