Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரீட்சை எழுதிய பிள்ளைகள் செய்த குழப்படி – நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சை எழுதிய பிள்ளைகள் செய்த குழப்படி – நிலாந்தன்.

adminJune 18, 2023
Kulapadi.jpg?fit=751%2C422&ssl=1

அண்மையில் ஓ/எல் பரீட்சை எழுதிய மாணவர்கள் பரீட்சைகள் முடிந்த கடைசி நாளன்று வகுப்பறைகளிலும் வகுப்புக்கு வெளியேயும் அட்டகாசம் செய்ததாக சில ஒளிப்படங்கள் வெளியாகின. இந்த ஒளிப்படங்களை வைத்து மூன்று விதமான கருத்துக்கள் கூறப்பட்டன. முதலாவது, சில மாணவர்கள் செய்த குழப்படிகளுக்காக எல்லா மாணவர்களையும் குற்றங் கூறக்கூடாது என்று. இரண்டாவது,அந்த வயதுக்கு அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.   அவர்கள் அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க விடுங்கள் என்பது. மூன்றாவது, ஆசிரியர்களின் கைகளில் இருந்து பிரம்பு பறிக்கப்பட்டதால் மாணவர்கள் தறிகெட்டுப் போய்விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு.

பரீட்சை முடிந்த கடைசி நாளைக் கொண்டாடுவது என்பது ஒரு பொதுவான மாணவ உளவியல். அதை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதுதான் இங்கு பிரச்சனை. இதை இரண்டு விடயங்கள் தீர்மானிக்கின்றன. ஒன்று பரீட்சை எத்தகையது என்பது. அல்லது கல்விமுறை அல்லது கல்விச் சூழல் எத்தகையது என்பது. இரண்டாவது மாணவர்களுக்கு யார் முன்மாதிரிகள் என்பது.

முதலாவதாக கல்விச் சூழல் பற்றிப் பார்க்கலாம். இலங்கைத் தீவு அதன் இலவச கல்வியைக் குறித்து பெருமைப்பட்டுக் கொண்டாலும், நடைமுறையில் போட்டிப் பரீட்சையானது தனியார் கல்வியை ஊக்குவிக்கிறது. அண்மையில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி “எமது பிள்ளைகள் இலவசக் கல்வியை முழுமையாக அனுபவிக்கின்றனர் என்று அரசாங்கம் கூறினாலும் அது பெரும் பொய்” என்று கூறியிருக்கிறார். ”நாட்டில் மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைவது இலவசக் கல்வியினால் அல்ல, தனியார் பணத்தினால்”என்றுமவர் கூறியுள்ளார்.

போட்டிப் பரீட்சையானது சிறுபிராயமிருந்தே பிள்ளைகளுக்கு இடையே போட்டி உணர்வை; பொறாமை உணர்வை; சுயநலத்தை வளர்க்கின்றது. இதன் விளைவாக இலவசக் கல்வியின் உன்னதங்கள் பிரகாசமிழந்து விடடன. ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எனப்படுவது பிள்ளைகளுக்கானது என்பதை விடவும் நடைமுறையில் பெற்றோர்களுக்கு உரியதாகவே காணப்படுகின்றது. ஐந்தாம் ஆண்டு பிள்ளையைக் கசக்கி பிழியும் அந்த பரீட்சையை அகற்றுமாறு பெரும்பாலான கல்வி உளவியலாளர்களும் மருத்துவர்களும் எப்பொழுதோ சொல்லிவிட்டார்கள். ஆனால் நாடு இன்றுவரை அதைக் கைவிடத் தயாரில்லை. அதற்கு மாற்று ஏற்பாட்டைக் கண்டுபிடிக்கவும் தயாரில்லை.

ஐந்தாம் ஆண்டிலிருந்து பிள்ளையை கசக்கிப் பிழியத் தொடங்கும் ஒரு கல்வி முறையானது ஓ/எல் பரீட்சையின்போது பிள்ளைக்குச் சித்திரவதையாக மாறுகிறது. கல்வி சுமையாக,சித்திரவதையாக மாறும்பொழுது பரீட்சை ஒரு தத்தாக மாறுகின்றது. அந்தப் பரீட்சையை எழுதிக் கடந்த பிள்ளை அந்த மகிழ்ச்சியை கொண்டாடுந்தானே? ஆனால் அது எப்படிக் கொண்டாடுகிறது என்பதுதான் பிரச்சினை.

“பாராளுமன்றத்தினுள் மிளகாய்த் தூள் வீசி சண்டையிடுகின்றனர், கதிரைகளை வீசி எறிந்து சண்டையிடுகின்றனர், இவற்றை முன்னுதாரணமாக கொண்டே மாணவர்களும் செயற்படுவதாக” இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதுதான் உண்மை.  மாணவர்களுக்கு முன்மாதிரிகள் குறைந்துவிட்டன. போட்டிப் பரீட்சையானது பாடசாலையின் பெறுமதியைக் குறைத்துவிட்டது. ஆளுமையை உருவாக்கும் பள்ளிக்கூடம் தனியார் கல்வி நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் சந்தைப் பெறுமதியை இழந்துவிட்டது. அதே சமயம், தனியார் கல்வி நிறுவனங்கள் பிள்ளைகளைப் பரீட்சைக்குத் தயார்படுத்தும் எந்திரங்களாக அல்லது பந்தயத்துக்குக் குதிரைகளைத் தயார்படுத்தும் பயிற்சி நிலையங்கள் ஆகவே காணப்படுகின்றன.

பந்தயக் குதிரைக்கு அல்லது சவாரி மாட்டுக்கு எதைக் கொடுத்தாவது எதைச் செய்தாவது வேகமாக ஓடவைக்க வேண்டும் என்ற மனோநிலையோடு அணுகும் பயிற்சியாளராக ஆசிரியர்கள் மாறுகிறார்கள். ஓ/எல் பரீட்சை முடிந்தபின் அந்த மகிழ்ச்சியை கொண்டாடிய மாணவர்களைக் குறித்து விமர்சிக்கும் பலரும் அந்த பரீட்சை முடிந்த அடுத்தடுத்த நாளில் ஏ/எல். பாடங்களுக்கான தனியார் வகுப்புகள் தொடங்கியதைப்ப்பற்றி விமர்சித்திருக்கிறார்களா?

ஒரு பரீட்சை முடிந்த கையோடு அடுத்த கட்ட பாடங்களை தொடங்க வேண்டிய தேவை என்ன? யார் முந்தித் தொடங்குவது என்ற போட்டிதானே காரணம்? இந்தப் போட்டி காரணமாக பிள்ளை அதன் ஓய்வை இழக்கின்றது. நவீன கல்வியில் ஓய்வும் படிப்பின் ஒரு பகுதி. ஆனால் பரீட்சை முடிந்த கையோடு பிள்ளை அடுத்த பந்தயத்துக்கு தயாராகின்றது. இது பிள்ளையின் உளவியலை எப்படிப் பாதிக்கும் ?

இந்த விடயத்தில் கல்முனை பிரதேச சபை ஒரு நடவடிக்கை எடுத்திருக்கிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டுக்குரிய ஏ.எல் பாடங்களை இம்மாதம் இறுதிவரை ஆரம்பிக்க வேண்டாம் என்று கல்முனை மாநகர சபை ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

அந்த முன்மாதிரியை ஏன் ஏனைய உள்ளூராட்சி சபைகளும் பின்பற்றக் கூடாது? அண்மையில் யாழ் மாவட்டச் செயலர் தனியார் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தார். ஆனால் அதுகூட ஒன்பதாம் ஆண்டுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்குத்தான். அப்படியென்றால் 9 ஆம் ஆண்டுக்கு மேற்பட்ட பிள்ளைகள் பந்தய குதிரைகளாக்கபடுவது மறைமுகமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? ஆம். அதை தடுக்க முடியாத ஒரு சமூகச் சூழலே காணப்படுகின்றது. ஏனென்றால் போட்டிப் பரீட்சையில் வெற்றிபெற வேண்டும் என்ற வெறி பெற்றோருக்கும் அதிகம்.

இது சமூகத்தின் கல்வி பற்றிய கருதுகோள்களினால் தீர்மானிக்கப்படுகிறது. குறிப்பாக விஞ்ஞான,கணிதப் பிரிவுகளுக்குரிய பிள்ளைகளைப் பொறுத்தவரை வாழ்க்கையை வெறுத்து படிக்க வேண்டும் என்று பெற்றோரும் கருதுகிறார்கள்; ஆசிரியர்களும் கருதுகிறார்கள். சிறந்த பெறுபேறுகளுக்காக எதையும் பலியிடலாம் என்ற மனோநிலை ஊக்குவிக்கப்படுகின்றது.

யாழ்பாணத்தில் ஏ/எல் பாடங்களை படிப்பிக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வகுப்பறை வசதிகளைக் கொண்டிருக்கின்றன? சில தனியார் கல்வி நிறுவனங்கள் தங்களைக் கண்டிப்பானவைகளாகக் காட்டிக்கொள்ள ஒழுக்கத்திலும் பெண் பிள்ளைகளின் விடயத்திலும் கிட்டத்தட்ட தாலிபான்களைப் போலவே நடந்து கொள்கின்றன. ஆனால் அங்கே நூற்றுக்கணக்கில் பிள்ளைகள் ஒன்றாக இருந்து படிப்பார்கள். அது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வகுப்பறை ஒழுங்குகளுக்கு எதிரானது. ஒரு வகுப்பறையில் எத்தனை பேர் இருக்கலாம் என்று ஒரு அளவு உண்டு. ஆனால் பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்களில் நூற்றுக்கணக்கான பிள்ளைகள் ஒன்றாக இருந்து கல்வி கற்கின்றார்கள். ஒருவர் மற்றவரோடு முட்டியபடி இருக்க வேண்டும். முதுகை சாய்க்க முடியாது. புத்தகப் பையை வைக்க இடம் கிடையாது… போன்ற முறைப்பாடுகள் உண்டு.

சில தனியார் கல்வி ஆசிரியர்கள் பிள்ளைகளை நூற்றுக்கணக்கான பிள்ளைகளுக்கு முன் பகிரங்கமாகத் தண்டிக்கிறார்கள். இது கல்வி உளவியலுக்கு முரணானது. பிள்ளையின் குறைந்த புள்ளிகளை சுட்டிக்காட்டி அவமதிப்பது; பிள்ளையை வகுப்பை விட்டு துரத்துவது ; போன்ற பகிரங்க தண்டனை முறைகள் உண்டு. இவையனைத்தும் மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள். இதையே பாடசாலை செய்தால் அதற்கு நீதிமன்றம்வரை போகும் சமூகம்,தனியார் கல்வி நிறுவனங்களில் நிகழும் இவ்வாறான பகிரங்கத் தண்டனைகளைக் குறித்து அலட்டிக்கொள்வதில்லை. ஏனென்றால் சிறந்த பெறுபேறுகளுக்காக மனிதஉரிமைகள் பலியிடப்படுவதை ஏற்றுக்கொள்ளும் ஒரு சமூகமாக நாம் எப்பொழுதோ மாறிவிட்டோம். அங்கிருந்தும் தொடங்குகின்றது வன்முறை.

சிறந்த பெறுபேறுகளுக்காக உயர்தரத்தில் ஒரு பாடத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களிடம் செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் பிள்ளைகள் சுயமாகக் கற்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. சுயகற்றலை ஊக்குவிக்காத கல்வி முறை பிள்ளைகளை எங்கே கொண்டு போய் விடும்? சமூகத்தை எங்கே கொண்டு போய் விடும் ?

கடந்த ஆண்டு ஓ/எல் பரீட்சை முடிவுகள் வெளிவந்த பொழுது பிள்ளைகள் அதிகம் சுயமாகக் கற்றிருக்கிறார்கள் என்று சுட்டிக் காட்டப்பட்டது. பெருந்தொற்றுநோய் காரணமாக பிள்ளைகள் வீடுகளில் முடங்க வேண்டி இருந்தபடியால் அவர்கள் சுயமாக கற்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது என்றும் சுட்டிக் காட்டப்பட்டது. அதே சமயம் மாணவர்கள் மத்தியில் ஒரு கூட்டுஅபிப்பிராயம் உண்டு. பாடசாலைக்குப் போகும் நேரத்தை குறைத்தால் வீட்டிலிருந்து அதிகமாகப் படிக்கலாம் என்பதே அது. அதாவது தனியார் கல்வி நிறுவனங்களுக்கு போகும் நேரத்தை குறைக்க அவர்கள் தயாரில்லை. மாறாக பள்ளிக்கூடத்துக்குப் போகும் நேரத்தைக் குறைத்தால் கூடுதலாகப் படிக்கலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

போட்டிப் பரீட்சையானது பாடசாலையின் சந்தைப் பெறுமதியைக் குறைத்து விட்டது. ஆசிரியர் மாணவ உறவின் மகிமையைக் குறைத்துவிட்டது. பிள்ளைகளைத் தறுக்கணிக்க வைக்கின்றது. பிள்ளைகளுக்கு இடையே போட்டி பொறாமை போன்றவற்றை ஊக்குவிக்கின்றது. பொதுநலத்தை விடவும் சுயநலத்தை ஊக்குவிக்கிறது. அதன் விளைவாக யாருக்கும் பயப்படாத; யாரையும் மதிக்காத; எதையும் புனிதமாகக் கருதாத ஒரு போக்கு பிள்ளைகள் மத்தியில் வளர்ந்து வருகிறது.

எனவே மாணவர்கள் தறிகெட்டு போகின்றார்கள் என்று சொன்னால் அதற்கு அந்தச் சின்னப் பிள்ளைகள் மட்டும் பொறுப்பில்லை. முழுச்சமூகமும் பொறுப்பேற்க வேண்டும். முழுநாடும் பொறுப்பேற்க வேண்டும். முதலாவதாக கல்வி முறைமைதான் குற்றவாளி. அந்த கல்விமுறையின் கைதிகளாக அல்லது கருவிகளாக காணப்படும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் பெரிய புரட்சிகரமான மாற்றம் எதையும் செய்துவிட முடியாது. தன் சொந்த பிள்ளையின் விடயத்தில் வேண்டுமென்றால் பெற்றோர் ரிஸ்க் எடுக்கலாம். ஒரு முறைமைக்கு எதிராக பிள்ளையைச் செதுக்குவதில் சவால்கள் உண்டு. ஆனால் அதைவிட வேறு வழியில்லை. ஏனென்றால் இந்தக் கேடு கெட்ட நாடு போட்டிக் கல்விமூலம் உருவாக்கிய படிப்பாளிகள் பலர் ஒரு பொருளாதார நெருக்கடியின் போது நாட்டை விட்டு எப்படித் தப்பிச் செல்வது என்றுதான் சிந்தித்தார்கள்.

ஏன் அதிகம் போவான்? பொருளாதார நெருக்கடியே ஒரு விதத்தில் நாட்டின் கல்விமுறையின் தோல்விதான். முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ஒரு சிந்தனைக் குழாமை உருவாக்கியிருந்தார். ‘வியத்மக’ என்று அழைக்கப்பட்ட அச்சிந்தனைக் குழாம் நாட்டின் பெரிய படிப்பாளிகளை வைத்து உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த அரசாங்கம்தான் முடிவில் மக்களால் துரத்தப்பட்டது. நாட்டை பெற்றோல் கியூவில் நிறுத்திய படிப்பாளிகள் செய்த குற்றத்தை விடப் பெரிய குற்றத்தையா அந்தப் பதினாறு வயதுப் பிள்ளைகள் செய்துவிட்டார்கள்?
 

https://globaltamilnews.net/2023/192005/

  • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2023 at 00:26, கிருபன் said:

சுயகற்றலை ஊக்குவிக்காத கல்வி முறை பிள்ளைகளை எங்கே கொண்டு போய் விடும்? சமூகத்தை எங்கே

நல்ல கட்டுரை.

நான் இலங்கையில் Al படிக்கும்போதே வவுனியா யாழ்ப்பாணம் நூலககளுக்கு சென்று எப்படிப் படிப்பது என்று யாராவது புத்தகம் எழுதி இருக்கிறார்களா என்று தேடாத நாள் இல்லை. சிறு வயதில் இருந்தே இன்னொருவர் சொல்லித் தந்தே பாடங்களை படிக்கின்றோம் ( கற்கின்றோம் என்ற சொல்லை பயன் படுத்த முடியாது ).பரீட்சைக்கு தயாராகும் பொழுது பழைய வினாத் தாள்களை படித்து பரீட்சைக்கு முகம் கொடுக்கின்றோம். வினாத் தாளும் இப்படி படித்தவர்களால்த் தான் தயாரிக்கப் படுவதால் இப்படிப் படித்த எங்களால் அந்தப் பரீட்சையில் நல்ல மார்க்கஸ் வாங்க முடிந்தது.

இப்பொழுது அதே மாணவன் ஐரோப்பீய கல்வி அமைப்புக்குள் வரும்போது அவனின் உண்மையான கற்றல் தகமை கேள்விக்கு உடபடுத்தப் படுகின்றது. இங்கே பழைய பாஸ் பேப்பர் வைத்து படிக்கும் வழக்கம் இல்லை, கூட இருந்து சோறு ஊட்டும் தாய் போல் பாடத்தை சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் இல்லை, இருந்தாலும் அவர்களால் எமக்கு ஏற்றது போல் ஊட்டி விடுவது போல சொல்லித் தரத் தெரிவதும் இல்லை. இந்த நிலையில் இலங்கையில் கல்வியாளன் என்று பெயர் எடுத்த ஒருவர் இங்கே நல்ல வேலையாள் என்று கூட பெயர் எடுக்க முடிவதில்லை.

எல்லாவற்றுக்கும் காரணம் நாம் எப்படி நாமகவே கற்பது என்று தெரியாதது தான். கற்பது என்பது ஒரு கலை. இதன் காரணமாகத்தான் இன்றைய எம் தலைமுறை நுணுக்கமாகக் கற்க முடியாமல் இருக்கிறது, புதிய கேள்விகள் வரும்பொழுது தடுமாறுகின்றது. நன்றாகப் படித்தும் 75  அல்லது 80 மார்க்ஸ் க்கு மேல் எடுக்க  முடிவதில்லை.

சில வருடங்களுக்கு முன் ஒரு course ஒன்று செய்தேன் ( இலவசம் ) learning how to learn ( கற்றுக்கொள்வதைக் எப்படிக் கற்பது ) California university தயாரித்த course என்று நினைக்கிறன். உங்களுக்கு பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் இருந்தால் அதனை சிபாரிசு செய்யுங்கள்.

எப்படி தாமாகவே கற்பது என்று தெரியாத பிள்ளை எப்படி நிஜமான கல்வியாளனாக வர முடியும்?

இந்த நேரத்தில் ஒரு முக்கிய விஷயம் சொல்ல வேண்டும்

எங்களின் மூளை வளர்ச்சி ( கிட்டத்தட்ட 90 %) ஏழு அல்லது எட்டு வயதுக்குள் நின்று விடுகின்றது. அந்தக் காலப்பகுதிக்குள் பிள்ளைகளை படைப்பாற்றல் உள்ளவர்களாக, சிந்திக்கும் திறன் மற்றும் சிந்திக்கும் முறையை வலுவூட்ட, பிரச்சினைகளை தாமே சரிக்கட்ட தெரிந்தவர்களாக மாற்ற  பெற்றோர் என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்தப் பிள்ளைகள் வாழ்வில் வெற்றி தோல்வியை அடைக்கிறார்கள். அந்த நேரத்தில் விட்டு விட்டு 16 வயதில் படி படி என்றால் பெரிதாக ஒன்றும் மாறாது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பகிடி said:

நல்ல கட்டுரை.

நான் இலங்கையில் Al படிக்கும்போதே வவுனியா யாழ்ப்பாணம் நூலககளுக்கு சென்று எப்படிப் படிப்பது என்று யாராவது புத்தகம் எழுதி இருக்கிறார்களா என்று தேடாத நாள் இல்லை. சிறு வயதில் இருந்தே இன்னொருவர் சொல்லித் தந்தே பாடங்களை படிக்கின்றோம் ( கற்கின்றோம் என்ற சொல்லை பயன் படுத்த முடியாது ).பரீட்சைக்கு தயாராகும் பொழுது பழைய வினாத் தாள்களை படித்து பரீட்சைக்கு முகம் கொடுக்கின்றோம். வினாத் தாளும் இப்படி படித்தவர்களால்த் தான் தயாரிக்கப் படுவதால் இப்படிப் படித்த எங்களால் அந்தப் பரீட்சையில் நல்ல மார்க்கஸ் வாங்க முடிந்தது.

இப்பொழுது அதே மாணவன் ஐரோப்பீய கல்வி அமைப்புக்குள் வரும்போது அவனின் உண்மையான கற்றல் தகமை கேள்விக்கு உடபடுத்தப் படுகின்றது. இங்கே பழைய பாஸ் பேப்பர் வைத்து படிக்கும் வழக்கம் இல்லை, கூட இருந்து சோறு ஊட்டும் தாய் போல் பாடத்தை சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் இல்லை, இருந்தாலும் அவர்களால் எமக்கு ஏற்றது போல் ஊட்டி விடுவது போல சொல்லித் தரத் தெரிவதும் இல்லை. இந்த நிலையில் இலங்கையில் கல்வியாளன் என்று பெயர் எடுத்த ஒருவர் இங்கே நல்ல வேலையாள் என்று கூட பெயர் எடுக்க முடிவதில்லை.

எல்லாவற்றுக்கும் காரணம் நாம் எப்படி நாமகவே கற்பது என்று தெரியாதது தான். கற்பது என்பது ஒரு கலை. இதன் காரணமாகத்தான் இன்றைய எம் தலைமுறை நுணுக்கமாகக் கற்க முடியாமல் இருக்கிறது, புதிய கேள்விகள் வரும்பொழுது தடுமாறுகின்றது. நன்றாகப் படித்தும் 75  அல்லது 80 மார்க்ஸ் க்கு மேல் எடுக்க  முடிவதில்லை.

சில வருடங்களுக்கு முன் ஒரு course ஒன்று செய்தேன் ( இலவசம் ) learning how to learn ( கற்றுக்கொள்வதைக் எப்படிக் கற்பது ) California university தயாரித்த course என்று நினைக்கிறன். உங்களுக்கு பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் இருந்தால் அதனை சிபாரிசு செய்யுங்கள்.

எப்படி தாமாகவே கற்பது என்று தெரியாத பிள்ளை எப்படி நிஜமான கல்வியாளனாக வர முடியும்?

இந்த நேரத்தில் ஒரு முக்கிய விஷயம் சொல்ல வேண்டும்

எங்களின் மூளை வளர்ச்சி ( கிட்டத்தட்ட 90 %) ஏழு அல்லது எட்டு வயதுக்குள் நின்று விடுகின்றது. அந்தக் காலப்பகுதிக்குள் பிள்ளைகளை படைப்பாற்றல் உள்ளவர்களாக, சிந்திக்கும் திறன் மற்றும் சிந்திக்கும் முறையை வலுவூட்ட, பிரச்சினைகளை தாமே சரிக்கட்ட தெரிந்தவர்களாக மாற்ற  பெற்றோர் என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்தப் பிள்ளைகள் வாழ்வில் வெற்றி தோல்வியை அடைக்கிறார்கள். அந்த நேரத்தில் விட்டு விட்டு 16 வயதில் படி படி என்றால் பெரிதாக ஒன்றும் மாறாது. 

 

தங்களின் மருத்துவம் சார்ந்த ஆக்கங்களையும்: நேரம் கிடைக்கும் சமயங்களில் பதிந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்..🖐

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.