Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

2001.09.14 ஆம் நாள் இரவிலிருந்து கப்பல் தொடரணி மீதான இச்சமருக்காக நாம் தயாராகி நின்றோம். எமது சண்டைப் படகுத் தொகுதிகளில் நான்கு தொகுதிகள் தாக்குதலுக்காகவும் ஒரு தொகுதி விநியோகத்திற்காகவும் களமிறக்கப்பட்டிருந்தன.

பங்கெடுத்திருந்த பீரங்கிப் படகுகள்:

1. காமினிப் படகு - கட்டளை அதிகாரி: லெப் கேணல் இரும்பொறை.
2. பிரசாந்தன் படகு - கட்டளை அதிகாரி: லெப் கேணல் பகலவன்.
3. மதன் படகு - கட்டளை அதிகாரி: மேஜர் சிவா.
4. ஆதிமான் படகு (ஒஸ்கார்) - கட்டளை அதிகாரி: செழியன்.
5. பரந்தாமன் படகு - கட்டளை அதிகாரி: புலவர்.
6. வேங்கைப் படகு - கட்டளை அதிகாரி: இனியவன்.
7. போர்க் படகு - கட்டளை அதிகாரி: லெப் கேணல் தியாகன்.
8. பாரதிதாசன் படகு - கட்டளை அதிகாரி: சிறீராம்.
9. மாதவி படகு - கட்டளை அதிகாரி: கதிர் (சின்னக்கதிர்)
10. இசையரசி படகு-கட்டளை அதிகாரி: மணியரசன்
11. மயூரன் படகு - கட்டளை அதிகாரி: லெப் கேணல் அமுதசுரபி
12. ராகினி படகு - கட்டளை அதிகாரி: கலைக்கொடி

இவற்றில் 35mm Cannon , 25mm Cannon, 23mm Cannon, 20mm Cannon, 14.5 Twin Barrel, 50 கலிபர் மற்றும் இலகு இயந்திரத் துப்பாக்கிகள் என மிகச் சக்தி வாய்ந்த கனரக ஆயுதங்கள் பொருத்தப்பட்டு முன்னணிச் சண்டைப் படகுகளாக இச்சமரில் களமிறக்கப்பட்டன. 

இவ்வகைப் சண்டைப் படகுகள் எம்மால் வடிவமைக்கப்பட்டு பல போராளிகளின் கடின உழைப்பால் வன்னிக் காடுகளின் மறைவிடங்களில் தயாரிக்கப்பட்டவைகள். 

இப் சண்டைப் படகுகளில் கடுமையான கடற் பயிற்சிகளைப் பெற்று கடற்போரியலில் அனுபவம் வாய்ந்த குறிப்பாக தலைவரால் தரம் பிரிக்கப்பட்ட கடற்புலிகளின் படையணிப் போராளிகளே விடப்பட்டிருந்தனர். 

கட்டளைக் கண்காணிப்பு நிலையத்தில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்களுடன் தளபதி பிருந்தன் மாஸ்டர், தளபதி மங்களேஸ், தளபதி கலாத்தன் ஆகியோரும் கூடவே நின்று தாக்குதலை வழிநடத்தினர். 

2001.09.15 மாலை 5 மணியளவில் படகுகள் அனைத்தும் கட்டைக்காடு கடற்பகுதியில் தயார் நிலையில் நங்கூரமிடப்பட்டுக் கடல் உருமறைப்பு வலைகளால் வேவு விமானங்களின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டன. 

ஒவ்வொரு சண்டைப்படகுப் போராளிகளையும் சிறிய படகொன்றில் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் வந்து சந்தித்து திட்டங்கள் பற்றி மீண்டும் மீண்டும் விளக்கியதோடு சுவையான உணவுகளும் பரிமாறிச் சென்றார்.

இதேவேளை நாயாற்றுக் கடற்பகுதியில் எமது பயிற்சிப் படகுகள் நான்கு எதிரியின் கண்காணிப்பை திசைதிருப்பும் நடவடிக்கைக்காக கரையோரத்தில் ஓடவிடப்பட்டிருந்தன. 

2001.09.16 அதிகாலை 3:45 மணியளவில் கும்மென்ற இருளில் ஆழ்கடல் நோக்கி கப்பல் தொட ரணியை வழிமறித்துத் தகர்க்க எமது சண்டைப்படகுகள் நீர்கிழித்வாறு சென்றன. இடையில் நாகர்கோவில் கடற்பகுதியில் வழிமறித்த சிறிலங்காவின் கரையோர சுற்றுக்காவல் கலத்துடனும் அதிவேகத் தாக்குதல் திறன்கொண்ட டோராப் பீரங்கிக் கலங்களுடனும் கடும்சமர் மூண்டது . 

இக்கடற்சமரானது 25- 30 நிமிடங்கள்வரை மிக உக்கிரமாக நடைபெற்றது. இதில் கரையோர சுற்றுக்காவல் கலம் பாரிய சேதத்துடன் தாக்குதலிலிருந்து பின் வாங்கிச்சென்றது. மிதக்கும் மினி முகாம்கள் என வருணிக்கப்படும் டோராக் கலங்களால் இறுக்கமாகப் போடப்பட்டிருந்த வருண கிரண கடல்வேலியை உடைத்து ஒரு தொகுதி சண்டைப் படகுகளைக் கப்பல் தொடரணியை நோக்கி அனுப்பி வைப்பது எமது தொகுதிக்கு தரப்பட்ட பணியாய் இருந்தது. 6 டோரா கடற்படைக் கலங்களுடன் எமது 3 சண்டைப்படகுகள் மூர்க்கமாக மோதிக்கொண்டிருந்தன. எமது உக்கிரத் தாக்குதலில் நிலைகுலைந்தன டோராக் கலங்கள். அதிகாலை 4:35 மணியளவில் அடிவாங்கி தப்பி ஓட முயன்ற ஒரு டோராக் கலத்தை இடித்து வெடித்தது கரும்புலிப் படகு. 

கடலதிர பெரும் தீப்பிழம்பு சுழன்றெழுந்தது. எமது படகு அண்மித்துச் சென்றவேளை எரிந்தவாறே அக்கலம் நீரில் மூழ்கியது. மற்றைய கடற்படை டோராக்கள் ஓடித்தப்பித்தன. கடற்கரும்புலிகளான லெப்டினன் கேணல் அனோஜன்இ  மேஜர் காந்தி ஆகியோரின் உயிரர்ப்பணிப்புடனும் சண்டைப்படகுகளின் தீரமிகு தாக்குதலாலும் வருண கிரண கடல்வேலி உடைக்கப்பட்டது. 

கப்பல் தொடரணி நோக்கிப் படகுகள் புறப்பட்டன. 

இதற்கிடையில் கட்டைக்காடு சுண்டிக்குளம் கடற்பகுதியில் எமது இன்னொரு தொகுதிப் சண்டைப்படகுகள் டோராப் பீரங்கிக் கலங்களுடன் மோதிக்கொண்டிருந்தன.

பருத்தித்துறைக் கடற்பகுதியில் கரையிலிருந்து 30 கடல் மைல் தொலைவில் கப்பல் தொடரணியை அதிகாலை 5:00 மணியளவில் நெருங்கினோம். ஆழ்கடல் சுற்றுக்காவல் கலங்களான எஸ்.எல்.என்.எஸ் எடித்தார-2 மற்றும் எஸ்.எல்.என்.எஸ் உத்தர துணையுடன் மோதலைத் தொடுத்த டோராப் பீரங்கிக் கலங்களுடன் மீண்டும் உக்கிரச் சமர் வெடித்தது. கப்பல்கள் தமது திசையை உயரக்கடல் நோக்கி மாற்றியமைத்துச் சென்று கொண்டிருந்தது. அரை மணிநேரச் சமரின் பின்னர் ஆழ்கடல் சுற்றுக்காவல் கலங்கள் தமது முழுப்பலத்தையும் பயன்படுத்தி ஓடித்தப்பின. தாக்குப்பிடிக்க முடியாத டோராக் கலங்களும் கப்பல்கள் இரண்டையும் விட்டுவிட்டு தூரவிலகின.

எமது சண்டைப்படகுகள் இரண்டு கப்பலையும் சுற்றிவளைத்து வியூகம் போட்டன.

கரும்புலிப் படகுகள் கப்பலைத் தகர்ப்பதற்காக புறப்படத் தயாராகின. நமது படகுப் போராளிகள் மிகவும் ஆவலுடன் கரும்புலிப் படகுகளையும் கப்பல்களையும் உற்று நோக்கியவாறு படகுத் தளத்தில் நின்று ஆரவாரித்தனர். வெடிமருந்தேற்றிய படகில் சென்ற கரும்புலிகள் “புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்” என்ற நமது கோசத்தை உச்சரித்துவிட்டு கையசைத்தபடி விடைபெற்றனர். 

அவ்வேளையே திடீரென சிறப்புத்தளபதி சூசை அவர்களின் மிக இறுக்கமான கட்டளை அனைத்து படகுக் கட்டளை அதிகாரிகளுக்கும் பிறப்பிக்கப்பட்டது. “கப்பலைத் தகர்க்க வேண்டாம்” கப்பலில் பொதுமக்களும் கொண்டு செல்லப்படுகிறார்கள்....! ஆகவே கட்டளைக்கேற்ப தகர்ப்பதற்கு விரைந்த கரும்புலிப் படகுகளை மீள வரவழைத்தோம். அப்படகுகள் கப்பல்களை ஒருமுறை வட்டமடித்துவிட்டு வந்து சேர்ந்தன. தாக்குதலைக் கைவிட்டு கரை திரும்பும் முடிவிற்கு வந்தவர்களாய் புறப்பட்டோம். 

கப்பல்கள் மீதான எமது தாக்குதல்களை பொதுமக்களுக்காக நாம் கைவிட்டது பற்றி தெரிந்து கொண்ட சிறிலங்கா கடற்படை வழிமறிப்புத் தாக்குதலை தொடுப்பதற்காக எமது படகுகளைப் பின்தொடர்ந்து தாக்குதலை தொடுத்தன. இது எமக்குச் சினத்தை மூட்டியது. 

எனவே திடீர்த் திட்டம் ஒன்று எம்மால் மேற்கொள்ளப்பட்டது. அதாவது வருண கிரண நடவடிக்கையில் ஈடுபடுகின்ற டோராப் பீரங்கிக்கலங்கள் மீதான தாக்குதலை மேற்கொண்டு அடித்து மூழ்கடிப்பதென. 

இவ்வாறு தாக்குதலுக்கேற்ப போர்வியூகத்தை வகுத்துக்கொண்டு அதற்கேற்ப படகுகளைச் செலுத்தியவாறு எமது கட்டுப்பாட்டுப் பிரதேசமான கட்டைக்காடு கடற்பகுதியை நோக்கி வந்துகொண்டிருந்தோம். சிறிலங்கா கடற்படையும் வலிந்தே எமது வியூகத்துள் வந்து வீழ்ந்தது. நாம் எதிர்பார்த்த மாதிரி 20க்கு மேற்பட்ட டோராக் கலங்கள் எம்மைப் பின் தொடர்ந்தன. அவைகள் தூரத்திலிருந்து எம்மீது தாக்குதலை மேற்கொண்டவாறு வந்து கொண்டிருந்தன.

நாகர்கோவில் கடற்பகுதிக்கு மேலே நாம் வந்துகொண்டிருந்ததால் எமது தாக்குதலை கட்டைக்காடு அல்லது சுண்டிக்குளம் கடற்பகுதிகளுக்குள் வைத்து நடத்துவது எமக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் தாக்குதலைத் தவிர்த்தவாறே வந்து கொண்டிருந்தோம். காலை 8 மணியளவில் எம்ஐ - 24 தாக்குதல் உலங்குவானூர்திகள் துணையுடன் வருண கிரண டோராக் கலங்கள் எம்மைப் பின் தொடர்ந்து நெருங்கி பீரங்கி வேட்டுக்களைப் பொழிந்தன.

இதனால் நாகர்கோவில் கடற்பகுதியில் உயரே 15 கடல்மைல் தொலைவில் பெரும் கடற்சமர் மூண்டது. 15- 20 நிமிடங்கள் நடைபெற்ற உக்கிரச் சமரில் நிலைகுலைந்தது, சிறிலங்கா கடற்படை. சேதத்திற்குள்ளான டோராக்கலங்கள் தடுமாறியபடி அகன்றன. ஒரு டோரா பீரங்கிக்கலம் முற்றாகச் செயலிழந்து எமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு மேலும் பாவிக்கமுடியாதவாறு பீரங்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டு அப்படியே கைவிடப்பட்டது.

இச்சமரில் எமது சண்டைப்படகான பரந்தாமன் இயந்திரப் பகுதியில் வெடிபட்டு தீப்பிடித்து எமது துணிகரச் செயற்பாடுகள் மூலம் தீ அணைக்கப்பட்டது.

இதன்போது எமது படகின் தொலைத் தொடர்பாளராக பணியாற்றிய லெப்டினன் கேணல் புனிதா உட்பட இரு போராளிகள் காயங்களுக்கு உள்ளாகினர். (லெப்டினன் கேணல் புனிதா மட்டக்களப்பில் நடைபெற்ற கடற்சமரில் 06.10.2006 இல் வீரமரணமடைந்தவர்).

இதேபோன்று சண்டைப்படகு மாதவியும் தாக்குதலுக்கு உள்ளாகி போராளிகளின் தீரமிகு செயற்பாட்டால் மீட்டெடுக்கப்பட்டது.

இப்படியாக தொடர்ந்தும் தாக்குதல் வியூகத்துடன் வந்து கொண்டிருந்தாலும் சிறிலங்கா கடற்படை பின்தொடர்ந்து தாக்குவதால் பதிலுக்கு நாமும் படகுகளை அடிக்கடி திருப்பி தாக்குதல் நடத்தியவாறே வரவேண்டியேற்பட்டது.

சுமாராக 14 அல்லது 15 தடவைகளுக்கு மேல் டோராக்கள் பின்தொடர்ந்து தாக்குவதும் நாம் திருப்பிக் கலைத்து தாக்கிவிட்டு வருவதுமாக சமர்கள் நீண்டன. சேதமடைந்த சிறிலங்காக் கடற்படைக் கலங்களுக்குப் பதிலாக மேலதிக கலங்கள் திருகோணமலையிலிருந்தும் மற்றும் காங்கேசன்துறை & காரைநகர் கடற்படைத் தளத்திலிருந்தும் வந்து சேர்ந்திருந்தன. அவைகளும் இணைந்துகொண்டு தாக்குதலை தீவிரப்படுத்தின.

மீண்டும் ஒரு திடீர் வளைப்புத்தாக்குதலை டோராக்கள் மீது நடத்துவதற்கு படகுகள் தயாராக்கப்பட்டது. பிறைவடிவ வியூகத்தில் திடீரென படகுகளின் வேகத்தை அதிகரித்து பின்தொடர்ந்த அனைத்து டோராக் கலங்கள் மீதும் உக்கிரத் தாக்குதலைத் தொடங்கினோம்.

கட்டைக்காடு கடற்பகுதி பீரங்கி வேட்டொலிகளால் அதிர்ந்து கொண்டிருந்தது. எதிரியின் படைக்கலங்கள் பல கடுமையான சேதத்திற்கு உள்ளாக்கப்பட பல டோராக்கள் உயரக்கடல் நோக்கி ஓடித் தப்பியன. இரண்டு டோராக்கள் முற்றாக அடித்து நிறுத்தப்பட்டது. அதனைக் கட்டியிழுக்க வந்த இன்னொரு டோராவும் தாக்குதலில் சிக்குண்டு- தடுமாறியது. எம்.ஐ. 24 தாக்குதல் உலங்குவானூர்திகளும் உந்துகணைத் தாக்குதலை ஏவிய போதும் அவைகளும் நமது பீரங்கித் தாக்குதலில் சேதத்திற்குள்ளாகி களமுனையிலிருந்து கலைக்கப்பட்டன.

இவ்வாறாக நீடித்த இக்கடற்சமர் 2001.09.16 மாலை 2 மணிவரை நடைபெற்று, 13 மணி நேரச் சமர், பின் முடிவுக்கு வந்தது.

சிறிலங்கா கடற்படை தனது வரலாற்றில் முதன் முதலில் சந்தித்த பெரும் ஆபத்தான கடற்சமராக இச்சமர் இடம் பெற்றிருந்தது. ஏனெனில் கடற்படையின் அதிவேகத் தாக்குதற் கலங்கள், ஆழ்கடல் சுற்றுக்காவல் கலங்கள், தாக்குதல் உலங்குவானூர்திகள் என்பன பெருமளவாக ஈடுபடுத்தப்பட்ட போதும் அதிகமான கலங்கள் கடும் சேதத்திற்குள்ளான சமராக இச்சமர் அன்றைய பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

இக்கடற்சமரில் மிதக்கும் மினி முகாம்கள் எனச்சொல்லப்படும் இரண்டு அதிவேக டோராக்கள் முற்றாகத் தகர்க்கப்பட்டதோடு 15 இற்கும் மேற்பட்ட டோராக்கள் மற்றும் எம்.ஐ.-24 உலங்கு வானூர்தியொன்றும் சேதமாக்கப்பட்டது.

40 இற்கு மேற்பட்ட கடற்படையினர் கொல்லப்பட்டதோடு 60 இற்கு மேற்பட்டோர் காயத்திற்கு உள்ளாகியதையும் சிறிலங்கா அரச தரப்பு அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும் கப்பல் தொடரணி மீதான எமது தாக்குதல் கைவிடப்பட்டதுடன் எமது கடற்சமர் புலிகளான லெப்டினன் கேணல் இரும்பொறை (கடற்புலிகளின் துணைத்தளபதி), லெப்டினன் கேணல் குமுதன் (படகுக் கட்டளை அதிகாரி), கப்டன் எழிலரசன் (20மிமீ பிரதான சூட்டாளர்), லெப்டினன் திருவாணன் (25மிமீ சூட்டாளர்), மேஜர் நளன் (23மிமீ பிரதான சூட்டாளர்), மேஜர் சிவகாந்தன் (பிரதான இயந்திரப் பொறியியலாளர் ) மற்றும் கடற்கரும்புலிகளான லெப்டினன் கேணல் அனோஜன், மேஜர் காந்தி, மேஜர் நித்தியா, மேஜர் அருணா உட்பட10 கடல்வேங்கைகளை அன்றைய சமரில் இழந்திருந்தோம்.

இக்கப்பல் தொடரணி மீதான தாக்குதலுக்கு புறப்படுவதற்கு முன் அதனைத் தெரிவு செய்ததற்கான முக்கியத்துவத்தை சிறப்புத்தளபதி சூசை அவர்கள் படகுக்கட்டளை அதிகாரிகளுக்கான சந்திப்பில் கூறியபோது - 27.04.2001 அன்று நடந்து முடிந்த முகமாலைச் சமரில் சிங்களத்தின் பாரிய படை முன்னகர்வு தீச்சுவாலையாக பற்றியெரிந்து முறியடிப்புப் படையணிகளாலும் பீரங்கிப் படையணிகளாலும் தடுத்து நிறுத்தப்பட்டு ஆயிரக்கணக்கான சிறிலங்காப்படையினர் கொல்லப்பட்டதும், 24.07.2001 அன்று முழு உலகையே வியப்பில் ஆழ்த்திய கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீதான கரும்புலிகளின் தீரமிகு தாக்குதலும் சிறிலங்கா அரசை பலவகையிலும் ஆட்டங்காண வைத்ததுபோல், கடலிலும் எதிரிக்கு விழப்போகின்ற இந்த அடி முழு உலகையே வியப்பில் ஆழ்த்திய கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீதான கரும்புலிகளின் தீரமிகு தாக்குதலும் சிறிலங்கா அரசை பலவகையிலும் ஆட்டங்காண வைத்ததுபோல், கடலிலும் எதிரிக்கு விழப்போகின்ற இந்த அடி போரியலில் நிச்சயம் ஒருபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என தளபதி சூசை விளக்கியிருந்தார். 

இவ்வாறான பெரும் எதிர்பார்ப்புடன் கூடிய கப்பல் தொடரணி மீதான தாக்குதலை பல சாதகமான வாய்ப்பிருந்தும் கைவிட்டது, கப்பல்களில் சிறிலங்கா கடற்படை ”பொதுமக்களை பணயக்கைதிகளாகக் கொண்டு சென்றதால்” மட்டுமே. 

தமிழீழ விடுதலைப் புலிகள் மக்களை பணயம் வைத்துப் போர் செய்ததாகக் கூறிவரும் சிறிலங்கா அரசும், அதற்குத் துணைபோகும் சில நாடுகளும் இதனை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். 

இதேவேளை இன்னொன்றையும் இங்கே குறிப்பிடுவது சாலப் பொருத்தமாய் இருக்கும் என நம்புகிறேன். 

1915 ஆம் ஆண்டு மே மாதம் பிரித்தானியாவுக்குச் சொந்தமான ஆர்.எம்.எஸ். லுசிரேனியா என்ற பயணிகள் மற்றும் பொருட்கள் ஏற்றும் கப்பல், அமெரிக்காவின் நியுயோர்க் துறைமுகத்திலிருந்து 2000 இற்கு மேற்பட்ட பயணிகளுடன் பிரித்தானியாவின் லிவெர்பூல் துறைமுகத்தை நோக்கி வந்துகொண்டிருந்த போது, அயர்லாந்திலிருந்து 16 கடல் மைல் தொலைவில், ஜெர்மானிய யூ-போட் எனப்படும் நீர்மூழ்கிக் கலத்தால், நீருக்கு அடியால் சென்று தாக்கவல்ல ஏவுகணைத் தாக்குதலுக்கு (TORPEDO) உள்ளாகியது. இப் படுகொலைத் தாக்குதலில் அதில் பயணம் செய்த 128 அமெரிக்கர்கள் உட்பட1200 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலானது தெரிந்து கொண்டே மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் கூறியது. இக்கூற்றை மறுத்த அன்றைய ஜெர்மானிய அரசு கப்பலில் ஆயுதங்களும், வெடிபொருட்களும் கொண்டு செல்லப்பட்டதாலேயே தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவித்தது.

 இவ்வாறு பொதுமக்களின் உயிரிழப்பை பொருட்படுத்தாது மேற்கொள்ளப்பட்ட அப்போதைய ஜெர்மனியக் கடற்படையின் தாக்குதலுக்கும், படையினருடன் மக்களை பணயக் கைதிகளாக ஏற்றிவந்த சிறிலங்காவின் கப்பல்கள் மீதான தாக்குதலை பொதுமக்களுக்காக கைவிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்குமான வேறுபாட்டையும், போரியல் தர்மத்தையும் பன்னாட்டு அரசுகள் உணர்ந்துகொள்ள வேண்டும். 

புலவர்,
கடற்புலிகள்.

 

Edited by நன்னிச் சோழன்
  • நன்னிச் சோழன் changed the title to சிங்களவரின் மனிதக் கேடயங்களால் தப்பித்த எம்வி பிரைட் ஒஃவ் சௌத்
  • நன்னிச் சோழன் changed the title to தமிழரை மனிதக் கேடயங்களாகப் பாவித்துத் தப்பித்த எம்வி பிரைட் ஒஃவ் த சௌத்
  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

16.09.2001 அன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில்  இலங்கைக் கடற்படையின் இரு டோறாப்படகு மூழ்கடிப்புச் சமர் பற்றிய விபரம்

 

 

http://irruppu.com/2021/09/16/16-09-2001-அன்று-யாழ்ப்பாணம்-பருத-2/

 

இலங்கை அரசபடைகளின் தொலைத்தொடர்பாளரை இடைமறித்து  ஒட்டுக்கேட்கும் கடற்புலிகளின்  மகளீரணியினரால் பல மாதங்களாகச் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு தாக்குதற்திட்டம் தலைவர் அவர்களிடம் சிறப்புத்தளபதி சூசை அவர்களால் கொடுக்கப்பட்டது.

அத்திட்டத்தின்படி திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்க்கு படையினரை ஏற்றிச்செல்லும் கடற்படைக் கப்பலை தாக்கி அழிப்பதுவாகும். இதில் இன்னுமொரு பாரிய சிக்கலுமிருந்தது. அது என்னவெனில் சில வேளைகளில் கடற்படையினர்  படையினரை ஏற்றிச்செல்லும் கப்பல்களில் பொதுமக்களையும் தங்களது பாதுகாப்பிற்காக அதாவது மனிதக்கேடயமாக பயன்படுத்துவார்கள். இதனை முதலாவதாக முக்கியமாகாக் கவனத்தில் எடுக்கவேண்டும். படையினர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் ஒரு பொதுமகனுக்கும் எந்தவித சேதமும் ஏற்படக்கூடாது என்பதில் தலைவர் அவர்கள் உறுதியாக இருப்பார். பொதுமக்களுக்கு சேதமேற்படும் என்பதற்காக எத்தனையோ வெற்றிச்சமர்களையே நிறுத்தியவர் எங்கள் தலைவர் அவர்கள். அப்படியிருக்கையில் இச்சமருக்கு அனுமதி கொடுப்பாரா?

அப்படியிருந்தும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுத்தார். அதாவது கப்பல் மீது பிரதான கட்டளைமையத்திலிருந்து அனுமதி வரும்வரை தாக்குதல் மேற்கொள்ளக்கூடாது.

சமரிற்காக மேஜர் சிவா, லெப். கேணல் சுடர்ணன், லெப். கேணல் அமுதசுரபி, லெப். கேணல் பகலவன், ஆகியோர் தலைமையிலான சண்டைப்படகுகள் காங்கேசன்துறையிலிருந்து வரும் கடற்படைப் படகுகளை வழிமறிப்பதற்காகவும் அதேசமயம் திருகோணமலையிலிருந்து வரும் கடற்படைப் படகுகளை வழிமறிப்பதற்காக லெப். கேணல் சிறிராம், லெப். கேணல் தியாகன், லெப். கேணல் கண்ணியத்தம்பி, மற்றும் குமுதினி ஆகியோர் தலைமையிலான சண்டைப் படகுகளும் அதேசமயம் கடற்புலிகளின் துணைத்தளபதி லெப். கேணல் இரும்பொறை மாஸ்ரர் தலைமையிலான லெப். கேணல் குமுதன், தளபதி விடுதலை, லெப். கேணல் ஜெரோமினி, லெப். கேணல் திருவருள், லெப். கேணல் வைகுந்தன், மேஐர் அப்பாஸ் தலைமையிலான அணிகள் மற்றும் இவர்களுடன் கடற்கரும்புலிப் படகணிகள் - இவர்கள் படையினரை ஏற்றிவரும் கப்பலை வழிமறித்து கப்பலை தாக்கி மூழ்கடிப்பார்கள் - இதுவே திட்டமாகும்.

திட்டத்தின் படி, 15.06.2001 அன்றிரவு 11.00 மணியளவில் படகணிகள் தத்தமக்குரிய இடங்களுக்கு நகர்ந்து 16.09.2001 அதிகாலை குடாரப்பிற்கு உயர 45 கடல்மைல் தூரத்தில் திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு படையினரை ஏற்றிக்கொண்டு சென்ற கப்பலை இரும்பொறை மாஸ்ரரின் அணிகள் கப்பலுக்குப் பாதுகாப்புக்கு வந்த டோறாப் படகுகள் மீது தாக்குதல் நடாத்தி கப்பலை வழிமறித்து அக்கப்பலை கடற்கரும்புலிகளின் கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டுவந்தார்கள்.

அதேசமயம் திருகோணமலையிலிருந்து கப்பலைப் பாதுகாக்க வந்த டோறாப் படகுகளை லெப்.கேணல் தியாகன் தலைமையிலான அணிகள் வழிமறித்துத் தாக்குதல் நடாத்திக்கொண்டிருந்த சமயம் கடற்கரும்புலி லெப்.கேணல் அனோஐன் தலைமையிலான கரும்புலிப்படகு ஒரு டோறாப் படகை மோதி மூழ்கடித்தார்கள்.

அன்றைய நாள் இரண்டு கப்பல்கள் வந்ததால் எது படையினரை ஏற்றிவந்த கப்பல் எது பொதுமக்களை ஏற்றிவந்த கப்பல் எனபதை இனங்காண்பது கடினமாக இருந்தது. எனெனில் வழமையாக திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை போகும் கப்பல்கள் தங்கள் கப்பலது பெயர், தாங்கள் எதுக்கு நேரே போகிறம் என்பதை அறிவிப்பார்கள். ஆனால் அன்றைய தினம் கப்பலது பெயரைச் சொல்லாமல் அறிவித்தால் இப்பிரச்சனை ஏற்பட்டது. தலைவர் அவர்களிடம் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. தலைவர் அவர்கள் கப்பல்மீது தாக்குதல் நடாத்தவேண்டாமென அறிவிக்கப்பட்டதால் கடற்கரும்புலிகளினதும் கடற்புலிகளது கட்டுப்பாடிலிருந்த கப்பல்கள் விடப்பட்டது.

(தலைவர் அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தலைவர் அவர்களிடமிருந்து பதில் வரும்வரை கப்பல்கள் பருத்தித்துறைக்கரையிலிருந்து 18 கடல்மைல் உயர கடற்புலிகளின் பூரண கட்டுப்பாட்டுக்குள் நின்றது குறிப்பிடத்தக்கது.)

இரும்பொறை மாஸ்ரர் தலைமையிலான சண்டைப்படகுகள் கப்பலை மீட்கவந்த டோறாப் படகுகள் மீது தாக்குதல் நடாத்த அதில் ஒரு டோறாப் படகு செயலிழந்து நின்றது. அவ்டோறாப் படகு மீது கடற்கரும்புலிப் படகு மோத கடற்கரும்புலிப் படகின் வெடிமருந்துப் பொறியமைப்பு வெடிக்கவில்லை. இருந்தாலும் கரும்புலிப் படகையும் அதிலுள்ளவர்களையும் லெப். கேணல் இரும்பொறைமாஸ்ரர் தலைமையிலான படகிலுள்ளவர்கள் டோறாப் படகிற்கு மிக அருகில் சென்று கடற்கரும்புலிப் படகையும் அதிலுள்ளவர்களையும் மீட்டனர். உண்மையில் போராளிகள் ஒரு இக்கட்டான நிலையில் இருக்கையில் தளபதி இரும்பொறை மாஸ்ரர் தனது படகை டோறாப் படகிற்கு மிக அண்மையாகச் சென்று அதுவும் டோறாப் படகுகளின் தாக்குதலுக்கும் அத்தாக்குதல்களுக்கு எதிராக தாக்குதல் நடாத்தியும் அவர்களை மீட்டெடுத்து தலைவர் அவர்களின் சொல்லுக்கு செயல்வடிவம் கொடுத்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. இதுதான் தலைவர் அவர்களின் வளர்ப்பு எனபதை பெருமையோடு கூறலாம்.

அன்று அக்கப்பலில் ஆயிரத்தியிருநூறு படையினர் இருந்தனர். பொதுமக்களும் இருந்ததால் தலைவர் அவர்களின் கண்டிப்பான உத்தரவினால் அன்றைய படையினரின் பேரழிவு தடுக்கப்பட்டது.

இதேசமயம் மேஜர் சிவா தலைமையிலான படகுத்தொகுதியினர் மற்றுமொரு டோறாவை தங்களது கனர ஆயுதங்களால் தாக்கி மூழ்கடித்தார்கள்.

இப்படியான பல்வேறு அர்ப்பணிப்புக்கள் நிறைந்த இக்கடற்சமரில் பன்னிரன்டு கடற்புலிகளின் சண்டைப்படகுகளும் எட்டுக் கடற்கரும்புலிப் படகுகளும் இருபத்திநான்கு கடற்கரும்புலிகளும் நூற்றியெழுபது கடற்புலிகளும் பங்கேற்ற இவ்வெற்றிகரத் தாக்குதலை கடலில் கடற்புலிகளின் துணைத் தளபதி இரும்பொறை மாஸ்ரர் செவ்வனவே வழிநடாத்தியிருந்தார்.

அனைத்து கடல்நடவடிக்கைகளையும் குடாரப்பிலிருந்து சிறப்புத்தளபதி சூசை அவர்கள் வழிநடாத்தியிருந்தார்.

இக்கடற்சமருக்குத் தேவையான எரிபொருட்களையும் தாக்குதலுக்குத் தேவையான வெடிபொருட்களையும் இச்சமரில் பங்கேற்ற பெரும்பாலான ஆண் பெண் போராளிகள்  கடும் தென்மேற்க்குப் பருவக்காற்றின் மத்தியிலும் கடற்படையின் கடும்கண்காணிப்புக்களுக்கு மத்தியிலும் விமானப்படையின் அச்சுறுத்தலுக்கும் மத்தியிலும் முல்லைத்தீவுக்கு உயர நூற்றியிருபது கடல்மைல் தூரம்சென்று அங்கு நின்ற கப்பலிலிருந்து பொருட்களைச் சிறுசிறுகச்  மிகுந்த அர்பணிப்புடன் கொண்டுவந்து சேர்த்தார்கள். அவர்களிடம் இருந்த ஒரேநம்பிக்கை ஒரு பாரிய வெற்றித்தாக்குதலைக் கொடுப்பதேயாகும்.

பெற்ற பாரிய வெற்றியை, அதுவும் ஆயிரத்திருநூறு படையினரை ஏற்றிக் கொண்டுவந்த கப்பலை கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலயமாக கடற்புலிகளின் சண்டைப்படகுகளின் துணையுடன் பூரண கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த கடற்கரும்புலிகள் ஒருபொதுமக்களுக்கும் எந்தச்சேதமும் வரக்கூடாது என்ற தலைவர் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக பெரும் சங்கடத்துடன் கப்பலை தொடர்ந்து பயணிக்க அனுமதித்து விட்டுதளம் திரும்பினார்கள்.

மக்களைக் மனித்கேடயமாக பாவித்து பயணித்த இலங்கை அரசபடைகளையும் பொதுமக்களுக்கு எந்தச் சேதமும் வரக்கூடாது என்பதற்காக கைக்கெட்டிய பாரியவெற்றியையும் மக்களுக்காக விட்டுவிட்டு வந்த விடுதலைப்புலிகளையும் நினைத்துப் பார்க்கின்றோம்.

இவ்வெற்றிகரத் தாக்குதலில் கடற்புலிகளின் பல்வேறு வெற்றிகரத்தாக்குதல்களை கடலில் செவ்வனவே வழிநடாத்தியவரும் கடற்புலிகளின் கனரக ஆயுதப் பயிற்சி பிரதான ஆசிரியரும் கடற்புலிகளின் துணைத் தளபதியுமான

  1. லெப்.கேணல் இரும்பொறை மாஸ்ரர்
  2. லெப்.கேணல் குமுதன்
  3. கடற்கரும்புலி  லெப்.கேணல் அனோஐன்
  4. கடற்கரும்புலி மேஐர் அருணா
  5. கடற்கரும்புலி மேஐர் நித்தியா
  6. கடற்கரும்புலி மேஐர் காந்தி
  7. மேஐர் சிவகாந்தன்/ காந்
  8. மேஐர் நளன்.
  9. கப்டன் எழிலரசன்
  10. லெப். திருவாணன்

ஆகிய போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

 

Edited by நன்னிச் சோழன்
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

லெப். கேணல் இரும்பொறை மாஸ்டரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து இக்கடற்சமர் தொடர்பான சில தகவல்கள்:

 

நினைவுப்பகிர்வு – ச.புரட்சிமாறன் |  விடுதலைப்புலிகள் இதழ், ஆடி – ஆவணி

"...........................

ஆனால் தளபதியால் உடன் அனுமதி வழங்க முடியாத நிலை. பொது மக்கள் அந்த கப்பலில் இருப்பதாகத் தகவல். தலைவன் எப்போதும் மக்களுக்குச் சேதம் வரக்கூடாதெனச் சொல்லியது அவர் முன் சிந்தனைக் கணைகளாக வந்து மோதின. நேரம் கடந்துகொண்டிருந்தது. சிங்களக் கடற்படை தங்கள் உயிர்களைக் கையில் பிடித்தபடியிருக்க, இரும்பொறை கரும்புலிப்படகுகளை தடுத்தபடியிருக்க, கடலில் அப்போது நிலவியது ஒரு சமருடன் கூடிய அமைதி.

நேரம் கடந்ததால் எதிரியின் பலம் கடலில் இப்போது கூடியிருந்தது. எதிரியின் டோறாக் கலங்களுடன் கடற்புலிப்படகுகள் கடுஞ்சமரிட்டன. கடற்புலிகளின் ஒரு தொகுதிப்படகுகளின் தாக்குதலில் ஒரு டோறா கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டது. இரும்பொறை கனரக ஆயுதம் பொருந்தியிருந்த தன் கட்டளைப் படகில் நின்றபடி சண்டையை வழிநடத்திக் கொண்டிருந்தான்.

சற்றுப் பின்நகர்ந்த இரும்பொறையின் கட்டளைப்படகு ஆவேசத்துடன் எதிரியின் டோறாக் கலமொன்றை இனங்கண்டு தாக்குகின்றது. இப்போது டோறாப்படகு கடலில் நின்று சுழன்று கொண்டிருந்தது. இரும்பொறை கரும்புலிப்படகொன்றை அந்த டோறாவைச் சிதைக்க விடைகொடத்தனுப்பினான். அது கடலின் அலைகளினூடே புகுந்து டோறாவுடன் மோதியபோதும் வெடிக்கவில்லை. நிலமையைப்புரிந்த இரும்பொறை ஆவேசத்துடன் மூன்று கிலோமீற்றர் தூரத்தில் நிற்க வேண்டிய தன் கனரக ஆயுதம் பொருந்திய கட்டளைப்படகை எதிரியின் டோறா நோக்கி வேகத்துடன் முன் நகர்த்தினான்.

எப்போதும் போல, கடலில் ஏதாவது பிசகு நடந்துவிட்டால் அடுத்த கணம் இரும்பொறையின் படகு அங்கே நிற்கும். இலக்கு விலகிவிட்டதோ, வெடிமருந்து வெடிக்கவில்லையோ, என்ன பிசகோ…. எங்கோ நிற்க வேண்டியவன் கரும்புலிப்படகு தாக்கிய எதிரிக்கலத்தின் அருகில் நின்றான். ஏன் இதற்குள் என அருகிலிருந்த படகில் நின்ற போராளிகள் அங்கலாய்த்தார்கள். இரும்பொறையை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்திவிட அவர்கள் துடித்துக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் நிதானித்து அவனைப் பின்நகர்த்துவதற்கிடையில் ஆவேசமாய் தொலைத்தொடர்புக் கருவியில் ஒலித்துக்கொண்டிருந்த அவன் குரல் ஓய்ந்திருந்தது. அந்த வீரன் தன் கட்டளைப்படகிற்குள் இரத்தவெள்ளத்தில் மௌனமாய் கிடந்தான். ஓருறவாய் தங்களுடன் உண்டு படுத்து ஊட்டி வளர்த்த தளபதியைக் கடலில் பறிகொடுத்த சோகத்துடன் அவனையும் இன்னும் சில தோழர்களையும் வித்துடலாய்ச் சுமந்தபடி படகுகள் கரைதிரும்பின.

..................................."



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.