Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண அரசுகால வரலாறு கூறும் சங்கிலியன் தோரண வாசல் - பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17 JUL, 2023 | 04:55 PM
image
 

வட இலங்கையில் நல்லூரைத் தலைநகராகக் கொண்ட யாழ்ப்பாண  அரசு ஏறத்தாள 350 ஆண்டுகளாக  ஆட்சியில் இருந்துள்ளது. பாளி, சிங்கள, தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், ஐரோப்பியர் கால ஆவணங்கள் இவ்வரசு பற்றியும்,  அதன் நான்கு பக்க அரண்கொண்ட அரசமாளிகை, அதிலிருந்த பெரிய ஆலயம், அரச அதிகாரிகள் மற்றும்  படைவீரர்களின் இருப்பிடங்கள், பூங்காவனம், புனித ஜமுனா ஏரி, நீதி மன்றம், நாற்றிசைக் கோவில்கள், காவலரண்கள், கோட்டைகள் முதலியன பற்றியும் கூறுகின்றன. அவ்வரலாற்றை  மீள் நினைவுபடுத்துவதாகவே இன்றும் நல்லூரின் சிறிய வட்டாரத்திற்குள் எஞ்சியிருக்கும் ஜமுனா ஏரி, மந்திரிமனை, சங்கிலியன் அரண்மனை, சங்கிலியன் தோரணவாசல் முதலான  மரபுரிமைக் கட்டிடங்களும், நினைவுச் சின்னங்களும் காணப்படுகின்றன.

 

yamuna_eeri.jpg

நல்லூரில் அரசமைத்த பாண்டியப்படைத் தளபதிகளான ஆரியச் சக்கரவர்த்திகளின் வழிவந்தவர்கள் சிங்கையாரியன், கங்கைநாடான், சேதுகாவலன் என்ற சிறப்புப் பெயர்களையும், செகராசசேகரன், பரராசசேகரன் என்னும் சிங்காசனப் பெயர்களையும் பெற்றிருந்தனர். இவர்களின் ஆட்சி 1567இல் முடிவுற்றதன் பின்னர் இங்கு முதலாம் சங்கிலி, காசிநயினார், பெரியபிள்ளை, புவிராஜபண்டாரம், எதிர்மன்னசிங்க குமாரன், இரண்டாம் சங்கிலி முதலான சுதேசமன்னர்களின் ஆட்சி நிலைபெற்றது. இவ்வரசமைந்த பிரதேசத்தை 14 ஆம் நூற்றாண்டுக்குரிய நம்பொத்த என்ற சிங்கள நூல் தெமளபட்டன (தமிழ்ப்பட்டினம்) எனவும், பாளி இலக்கியங்கள் ஆரியச்சக்கரவர்த்திகள் அரசு எனவும் தமிழ் இலக்கியங்கள் நல்லூர் இராசதானி, யாழ்ப்பாண இராச்சியம் எனவும், தமிழகக் கல்வெட்டுகள் யாழ்பாணயன்பட்டினம், யாழ்ப்பாண தேசம்  எனவும், போத்துக்கேயர் ஆவணங்களில் யவ்னா எனவும்; கூறுகின்றன. 1658 இல் ஒல்லாந்து தேசாதிபதியாக இருந்த பான்கூன்ஸ் என்பவர், இவ்வரசின் ஆதிக்கம்  திருகோணமலையிலிருந்து கற்பிட்டிவரையான ஒரு நேர்கோட்டின் மூலம் இலங்கையின் ஏனைய பகுதியிலிருந்து பிரிக்கப்பட்டிருந்ததாகக் கூறுகின்றார்.

sangiliyanpalace.jpg

இந்நிலையில் கி.பி.  14ம் நூற்றாண்டு இலங்கை அரசியல் நிலை தொடர்பாக ராஜாவலிய என்ற சிங்கள நூல் தென்னிலங்கையில் இருந்த கம்பளை, றயிகம அரசைக் காட்டிலும் யாழ்ப்பாண அரசு படைப்பலத்திலும், பொருளாதார வளத்திலும் மேலோங்கியிருநததாகவும், யாழ்ப்பாண மன்னன்  மலைநாட்டிலுலிருந்தும், கீழ்நாட்டிலிருந்தும், ஒன்பது துறைமுகங்களில் இருந்தும் திறைபெற்றான் எனவும் கூறுகின்றது. மேலும். சமகால வரலாறு கூறும் நிகாய சங்கிரகய மற்றும் ராஜாவலிய முதலான சிங்கள நூல்கள் கம்பளை அரசனுக்கு எதிராக யாழ்ப்பாண மன்னன் அனுப்பிய படை தரைவழியாகவும், கடல்வழியாகவும் நீர்கொழும்பு, சிலாபம், வத்தளை, கொழும்பு, தெமட்டக்கொடை, கோற்கான ஆகிய இடங்களைக் கைப்பற்றியதாகக் கூறுகின்றன. இதை தென்னிலங்கையில் கேகாலை மாவட்டத்தில் கொட்டகம என்ற இடத்தில் கிடைத்த யாழ்ப்பாண அரசுகாலக் கல்வெட்டும் உறுதிசெய்கின்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தின் மீது போத்துக்கேயர்  படையெடுத்த காலத்தில் சங்கிலி மன்னன் தலைநகரைப் பாதுகாக்க 12000 மேலான போர் வீரர்களை நிறுத்தியிருந்தான் என குவேறோஸ் சுவாமியார்  கூறுகின்றார்.

 

DSC_1382.jpg

கி.பி. 14 ஆம் நூற்றாண்டு இலங்கை வந்த மொறோக்கோ நாட்டுப் பயணியான இவுன் பற்றுற்றா தான் ஆரியச்சக்கரவர்த்தி மன்னர்களில் ஒருவனை பத்தள என்ற இடத்தில் (புத்தளம்?) சந்தித்து உரையாடியது பற்றியும், அம்மன்னனின் பண்பு, பரோபகாரம், கடற்படைக் கப்பல்கள், மிகப்பெரிய அளவில் நடைபெற்ற வெளிநாட்டு வர்த்தகம், அம்மன்னன் தங்கியிருந்த துறைமுகத்திற்கு அருகே மலைபோலக் குவிக்கப்பட்டிருந்த கறுவாவினை மலையாளம், தமிழகத்திலிருந்து வந்த வணிகர்கள் புடவைகளைக் கொடுத்து அதற்குப் பதிலாக கறுவாவைப் பெற்று கப்பல்களில் ஏற்றிச் சென்றமை என்பன பற்றி தனது நூலில் விரிவாகக் கூறுகின்றார்.  மேலும் அவர் ஆரியச்சக்கரவர்த்தி மன்னனுடைய நூற்றுக்கணக்கான கப்பல்கள் ஒரு சமயத்திலே யெமென் தேசத்தை நோக்கி சென்றுகொண்டிருந்ததைத தான் பார்த்ததாகவும் குறிப்பிடுகிறார்.  

இவ்வரலாற்று ஆதாரங்கள் போத்துக்கேயர் இலங்கை வந்த காலத்தில் கோட்டை, கண்டி அரசுகளைப் போல் யாழ்ப்பாண அரசும் பலமான நிலையில் இருந்துள்ளதைக் காட்டுகின்றன. ஆயினும் தென்னிலங்கை இராசதானிகளின் மரபுரிமைச் சின்னங்கள் பெருமளவுக்குப் பாதுகாக்கப்பட்டிருப்பதைப் போல் யாழ்ப்பாண அரசு கால மரபுரிமைச் சின்னங்கள் பாதுகாக்கப்படவில்லை. இதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றுள் வடஇலங்கையில் ஆட்சிபுரிந்த போத்துக்கேயரும், பின் வந்த ஒல்லாந்தரும் சுதேச மக்களின் கலைமரபிற்குரிய கட்டிடங்களை அழித்துவிட்டு அவ்விடங்களில் தமது கலைமரபிற்குரிய கட்டிடங்களை அமைத்தமை முக்கிய காரணங்களில் ஒன்றாகும். 

ஈழத்து வரலாறும் தொல்லியலும் 

அவற்றுள் இரண்டாம் சங்கிலி மன்னனை வெற்றி கொண்ட போத்துக்கேயர் சிறிது காலம் நல்லூர் இரசதானியைத் தமது நிர்வாக மையமாகப் பயன்படுத்திவிட்டு பின்னர் அங்கிருந்த கட்டிடங்களை அழித்து அவ்விடங்களில் தமது கலைமரபில் கத்தோலிக்க தேவாலயம், நிர்வாக மையங்களை அமைத்தனர். பின்வந்த ஒல்லாந்தர் நல்லூர் இராசதானியிலும், பிற இடங்களிலும் இருந்த போத்துக்கேயரது கட்டிடங்களை தமது கலைமரபிற்குரிய கட்டிடங்களாக மாற்றியமைத்தனர். அவற்றை வடஇலங்கையின் பல இடங்களிலும் இன்றும் காணமுடிகின்றது. மேலும் மதம் மாறி முதலியார், கங்காணி முதலான பதவிகளைப் பெற்ற சுதேசிகளும்  தமது வாசல்த்தலத்தை, அதன் முகப்பை ஒல்லாந்தர் கலைமரபில் அமைத்துக் கொண்டனர். ஒல்லாந்தர் ஆட்சியின் பிற்பகுதியில் மத சுதந்திரம் பெற்ற சுதேச மக்கள் யாழ்ப்பாண இராசதானி கால இந்து ஆலயங்கள் இருந்த இடங்களில் அல்லது அதற்கு அருகில் பழைய பெயரில் புதிய ஆலயங்களை கட்டிய போது ஒரு சில ஆலயக் கட்டமைப்பிலும்  ஒல்லாந்தர்காலக் கலைமரபின் செல்வாக்கு ஏற்பட்டது. இவை தமிழரின் பாரம்பரிய கட்டிடக் கலைமரபில் புதிய கலைமரபின் செல்வாக்கும் இணைந்து கொண்டதைக் காட்டுகின்றது. இதற்கு யாழ்ப்பாண இராசதானி கால மரபுரிமைச் சின்னங்களும் விதிவிலக்காக இருக்கவில்லை.

ஐரோப்பியரது 327 ஆண்டுகால ஆட்சியில் யாழ்ப்பாணம் அதன் நிர்வாகத் தலைமைப்பீடமாக இருந்த போதும் நல்லூர் இரசதானி இருந்த இடம் அவர்களது நிர்வாக, சமய, பண்பாட்டு நடவடிக்கைகளின் முக்கிய மையங்களில் ஒன்றாக இருந்துள்ளது. இதன் மூலம் நல்லூர் இராசதானிகால வரலாற்று நினைவுகள் தொடரவும், அதன் மரபுரிமைச் சின்னங்கள் புதிய கலைமரபுடன் இணைந்து வளர்வதற்கும்  வாய்ப்பாக இருந்தது. அதன் ஒரு அடையாளமாகவே தற்போது மீளுருவாக்கப்பட்ட சங்கிலியன் தோரணவாசல் பார்க்கப்படுகின்றது. இந்நினைவுச் சின்னம்  வேறு சில பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டிருந்தாலும் தமிழ் மக்களின் நீண்டகால வரலாற்றில் சங்கிலியன் தோரண வாசல் என்ற பெயரே நிலைத்திருக்கின்றது.

1970 க்குப் பின்னர் இந்நினைவுச் சின்னத்தைப் பாதுகாக்க யாழ்ப்பாணத்து அரச நிர்வாகம், பொது அமைப்பு, தனி நபர்கள் சில முயற்சிகளை எடுத்துள்ளனர். 

2007 இல் இலங்கைத் தொல்லியற் திணைக்களம் இதை யாழ்ப்பாண அரசுகால மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. 2021 இல் உருவான  யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் நிதிப்பங்களிப்போடு தொல்லியல்த் திணைக்கள அனுமதியும், அனுசரணையும் பெற்று இந்நினைவுச் சின்னம் இன்று மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நல்லூர் இராசதானி காலத்தை நினைவுபடுத்தும் மரபுரிமைச் சின்னங்களில் ஆரியகுளத்தை தொடர்ந்து மீளுருவாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படும் இரண்டாவது மரபுரிமைச் சின்னம் என்ற பெருமை இச்சங்கிலியன் தோரண வாசலுக்கு உண்டு.

பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்
தலைவர்
யாழ்ப்பாண மரபுரிமை மையம்

https://www.virakesari.lk/article/160191

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.