Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

1998 ம் ஆண்டு கடற்புலிகளின் புதிய திருப்புமுனையாக தமிழீழம் கிழக்கு மாகாணம் நோக்கிய கடற்புலிகளின் பாய்ச்சலை விரிவுபடுத்தும் நோக்கில் தேசியத் தலைவரின் சிறப்புச் சந்திப்பொன்று நடைபெற்றது. வன்னிப்பெரு நிலப் பரப்பை விழுங்கும் நோக்குடனும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அச்சாணியாகத் திகழும் தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நோக்குடனும் சிறிலங்கா பேரினவாத அரசு பெருமெடுப்பில் ‘வெற்றி நிச்சயம்’ எனத் தமிழில் பொருள்படும் "ஜெயசிக்குறு" எனப் பெயர் சூட்டப்பட்ட பாரிய படைநகர்வை மேற்கொண்டது.

யாழ் குடாநாட்டிற்கான தரைவழிப் பாதையினை ஆனையிறவு ஊடாக ஏற்படுத்துவதற்காக ஏற்கனவே கிளிநொச்சியை கைப்பற்றியிருந்த சிங்களப்படை இப்போது ஓமந்தை யிலிருந்து A 9 கண்டிவீதி ஊடாக கிளிநொச்சியை நோக்கி படை நகர்வை மேற்கொண்டிருப்பதாக சர்வதேசத்தை ஏமாற்ற முனைந்தது. 1997 மே மாதம் நடுப்பகுதியில் நாள்குறித்து ஜெயசிக்குறு நடவடிக்கையை தொடங்கியிருந்த சிங்களம் ஆமைவேகத்தில் நகர்ந்து புளியங்குளத்தில் நகரமுடியாது தடுக்கப்பட்டு, பாதைமாறி நைனாமடு நெடுங்கேணி நோக்கி திசைதிரும்பியிருந்தது. முறியடிப்புத் தாக்குதல்களில் தீரமுடன் களமாடிக் கொண்டிருந்தது எமது படையணிகள். சிங்களம் எதிர்பார்த்தது போல் அல்லாமல் பெரும் இழப்புகளை அவை சந்தித்தன.

எனவே அப்பாரிய படை நடவடிக்கையை தொடர்வதற்கான மேலதிக சிங்களப்படையினரை கிழக்கு மாகாணத்திலுள்ள படை முகாம்களிலிருந்து திரட்டியெடுத்து அனுப்பியது சிறிலங்காவின் இராணுவத் தலைமை.

எமது இயக்கமும் இப்பாரிய படைநகர்வை முறியடிப்பதற்கான எதிர்ச்சமரிற்கு மேலதிக போராளி களை கிழக்கு மாகாணத்திலிருந்து வன்னியை நோக்கி நகர்த்தியதையும் சிறிலங்காவின் இராணுவத் தலை மையகம் அறிந்தே வைத்திருந்தது. எனவே கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் இடம்பெறவோ அல்லது தமது படைமுகாம்கள் தாக்கப்படவோ சாத்தியம் இல்லை என கணிப் பிட்டிருந்தது படைத்தரப்பு.

இவ்வேளைதான் தேசியத்தலைவரின் இராணுவ மதிநுட்பத்தை சிங்களம் புரிந்துகொள்ளத் தொடங்கியது.

1997 மார்கழி நடுப்பகுதியில் முல்லை/தேவிபுரம் காட்டுப்பகுதியில் அமைந்திருந்த எமது இயக்கத்தின் இரகசிய முகாமொன்றிற்கு கடற்புலிகளின் தெரிவுசெய்யப்பட்ட தளபதிகளையும், கட்டளை அதி காரிகளையும் வரவழைத்த தேசியத் தலைவர் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய எதிரியை திணறவைக்கும் திசை திருப்பல் தாக்குதல்கள் பற்றிய திட்டங்களை தெளிவுபடுத்தியிருந்தார்.

கிழக்கு மாகாணத்தில் நீங்கள் மேற்கொள்ளப்போகும் தாக்குதல்கள் எதிரியின் ஜெயசிக்குறு நடவடிக்கை மீதே அதீத தாக்கத்தை ஏற்படுத்தவல்லது என்பதனை அறிவுறுத்தி அனுப்பினார.

கிழக்கு மாகாணத்திற்கான புதிய கடற்புலிகள் ஆளணியொன்று அவசர அவசரமாக உருவாக்கப்பட்டது. அதற்கான சண்டைப்படகுகள் உள்ளடங்கலாக தேவையான அனைத்தும் தயார்படுத்தப்பட்டது.

கடற்புலிகளின் கிழக்குப் பிராந்திய தளபதியாக தலைவரால் நியமிக்கப்பட்ட கடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் அவர்களின் தலைமையில் கடற்புலிகளின் முக்கிய துறைகளான

  • சண்டைப்படகுத் தொகுதி (புலவர், நாவலன், குமுதன், வீமன் உட்பட 23 போராளிகள்)
  • தரைத்தாக்குதல் அணி (தர்மராஜ், அகிலன் உட்பட 45 போராளிகள்)
  • கடற்கரும்புலிகள் அணி (கடற்சிறுத்தைகளான கப்டன் கோபி, கப்டன் இசையாளன்)
  • சுலோஜன் நீரடி நீச்சல் பிரிவு (காந்தன், கருணா உட்பட ஐவர்)
  • கடல்வேவுப் பிரிவு (மேஜர் ஜோன்சன்)
  • படகு கட்டுமானப்பகுதி (முரளி உட்பட மூவர்)
  • வெடிமருந்துப்பகுதி (பாண்டியன்)
  • தொலைத்தொடர்புப் பிரிவு (அமுதன், ஆனந்தன், சோலை)
  • புகைப்படப்பிரிவு (சிறிராம்)
  • மருத்துவப்பிரிவு

ஆகியவை உள்ளடங்கலாக கடற்புலிகளின் ஒரு தொகுதிப் போராளிகள் 1998 தைமாதம் 17ம் திகதி மட்டக்களப்பு நோக்கி வேகப்படகுகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு கதிரவெளியில் முகாம் அமைத்த எமது அணிகள் தாக்குதலுக்கான திட்டங்களுடன் எதிரியின் படைமுகாம்கள் நோக்கி முதற்கட்ட வேவு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருந்தன.

இதில் முக்கியமான விடயம் என்னவெனில் திருகோணமலை துறைமுக காவலில் ஈடுபட்டுவரும் கடற்கலங்களை அழிப்பதற்காக கரும்புலிப்படகுடன் சென்று அவைகளை உருமறைப்பு செய்து மறைத்தபடி இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் வேவுபார்த்தலில் ஈடுபட்டதாகும்.

அத்தாக்குதலுக்காக கடற்கரும்புலி லெப் கேணல் வள்ளுவன் அவர்கள் தானும் எம்முடன் நேரடியாகவே வந்து வழிநடத்தியிருந்தார்.

தெரிவுசெய்யப்பட்ட எமது அணியில் கடற்கரும்புலிகளான மேஜர் கோபி, கப்டன் இசையாளன் உட்பட குறிப்பிட்ட சில போராளிகள் மூதூர் கடல்வழியாகச் சென்று திருகோணமலை உப்பாறு/ இறால்குழி பகுதியில் எதிரியின் முற்றுகைக்குள்ளே கரும்புலி படகுடன் பதுங்கியிருந்து கடல்வேவு நடவடிக்கையில் ஈடுபட்டோம்.

நாம் தங்கியிருப்பதற்காக காட்டுப் பகுதியை தெரிவு செய்திருந்தோம் அது ஒரு சிறு தீவாகவும் சுற்றியுள்ள நீரேரி கடலுடன் தொடர்புபட்டதுமாக இருந்ததால் எமது படகுகளை மறைத்து வைத்ததோடு மட்டுமல்லாது தாக்குதலுக்காக நேரே கடலுக்குள் கொண்டுசெல்வதற்கும் ஏதுவாக அமைந்திருந்தது. அத்தீவுக்கு நாம் "நுளம்பான் தீவு" எனப் பெயரிட்டோம். அந்தளவுக்கு அதிகமான நுளம்புகள் அங்கே எமது போராளிகளின் முகம் கைகால்கள் வீக்கமுற இரத்தத்தை உறிஞ்சிக்குடித்தன. இதேவேளை படுத்துறங்குவதற்கான இடத்தினை தெரிவு செய்ய முடியாதவாறு அனைத்துப் பகுதியுமே ஈரலிப்பானதாகவே காணப்பட்டது. இருந்தவாறு உறங்கியே நாட்கள் நகர்ந்தது. உணவு சமைப்பதற்கும் பகலில் புகை மேலெழும், இரவென்றால் வெளிச்சம் தெரியும் என்பதால் உலர் உணவுகளே கடைசிவரை கைகொடுத்தது.

தாக்குதல் இலக்காக துறைமுக காவலில் ஈடுப்பட்டுவரும் அதிவேக கடற்படைக்கலமான டோறா (Dvora) வே இலக்குவைக்கப்பட்டது.

கரையோர கடற்படையின்காவலில் மண்ணைத் தூவி ரேடாருடன் கடற்கரை சென்று அதன் ஒளிக் கற்றைகள் வெளித் தெரியாவண்ணம் அவைகளை துணிகளால் மறைப்புச் செய்து துறைமுக காவலில்ஈடுபட்டு வரும் கடற்படையின் நடமாட் டங்களை ஒவ்வொரு நாளும் அவதானித்தோம். எமக்கும் துறை முகத்துக்குமான இடைவெளி வெறும் 8 கிலோ மீற்றர் தூரமே. இதேவேளை ஜோன்சன்,காந்தன் குமுதன் ஆகியோரின் கடல்வேவும் ஒவ்வொரு இரவும் நடைபெற்றவாறே இருந்தது.

திருகோணமலை துறைமுக வாயிலில் காணப்படும் வட்டத்தீவு என தமிழர் அழைத்துவரும் சோபர்தீவில் நீந்திக் கரையேறி கடற்படைக் கலங்களை எவ்வாறு தாக்கியழிக்கலாம் என்று வேவுத்திட்டங்களில் ஈடு பட்டது அவ்வணி. எதிரியின் ரேடார் கருவிகளில் சிக்குப்படாது கரும்புலிப் படகினை வட்டத்தீவு (சோபர்தீவு)வரை கொண்டு சென்று படகுடன் பதுங்கியிருந்து ரோந்தில் ஈடுபடும் கடற்படைக்கலத்தை துறைமுக வாசலில்வைத்தே தாக்கியழிப்பதற்கான இடத்தினை கண்டறிய கோபியும் இசையாளனும் தாங்களும் நீந்திச்சென்று பார்வை யிட்டு இடத்தினை உறுதி செய்து கரை திரும்பினார்கள்.

09/03/1998 அன்று இரவு எதிரிக் கலத்தின் ரோந்து நடமாட்டத்தை ரேடார் மூலம் உறுதிசெய்த பிற்பாடு ஸ்ரெல்த் எனும் அந்தக் கிபிர் வேக கரும்புலிப் படகில் கோபியும், இசையாளனும் தயாராகினர்.

அவர்களின் படகினை முகத்து வாரம் வரை இயந்திரத்தை இயங்கு நிலைக்கு கொண்டுவராது சத்த மின்றி துடுப்பால் வலித்தபடி கொண்டுவந்தோம்.

முகத்துவாரப்பகுதியில் அலைகள் எழும்பி படகிற்குள் நீரள்ளிப்போட இயந்திரம் இயங்கமறுத்துவிட்டது. ஒருவாறு படகினை மீட்டெடுத்து மீண்டும் எமது நுளம்பான் தீவுக்கு கொண்டுசென்றோம்.

மறுநாள் இயந்திரம் பழுதுபார்க்கப்பட்டது. ஆனால் அதனை இயக்கும்போது சத்தத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் எதிரிக்கு எமது நடமாட்டங்கள் அறியப்படும் அபாயமும் இருந்தது.

இவற்றைக் கருத்திற் கொண்டு தாக்குதலை ஓரிருநாட்களுக்குள் நடத்தவேண்டிய கட்டாய நிலையும் உருவானது. கடற்கரையில் ரேடார் கருவியை இயக்குவதற்கான பற்றரி செயல் இழக்கும் நிலைக்குச்சென்று விட்டது. ரேடாரின் திரையை சாரத்தால் போர்த்தி மறைத்தபடி கடற்படையின் நடமாட்டத்தை அவதானித்து குறிப்பெடுத்துக்கொண்டிருந்தான், அமுதன். அவனது கடைசி முயற்சியும் அதுவாகத்தானிருந்தது.

ஆனையிறவுச் சமரின்போது காலில் படுகாயமுற்ற வள்ளுவன் மாஸ்ரர் தனது காயத்தையும் பொருட்படுத்தாது அந்தச் சேற்றிலும் சகதியிலும் நடந்தும் நீந்தியும் திரிந்து அவர் அனுபவித்த வலிகள் ஏராளம். தலைவர் சொல்லியனுப்பிய வார்த்தைகளை அடிக்கடி ஞாபகப்படுத்தும் அவருக்கு அதன் செயல்வீச்சை உருவாக்கப்போகும் தாக்குதல் அது. கோபியையும் இசையாளனையும் அழைத்து ரேடாரில் இலக்கினைக் காட்டி தெளிவுபடுத்திவிட்டு, செல்லவேண்டிய திசையையும் சொல்லியனுப்பினார்.

11/03/1998 நடுச்சாம வேளை.

மீண்டும் இறால்குழி முகத்துவாரம் நோக்கி கரும்புலிப் படகினை நகர்த்திச் சென்றோம். இன்றைக்கு கவனமாக இறக்கிவிடுங்கோ இனி மேல் தொந்தரவு தரமாட்டேன்- இசையாளன் வழமை போன்று குறும்புத்தனமாக பேசினான். வள்ளுவண்ணையிடம் அதிகம் தண்டனைபெறும் போராளியாகவும் அவனே இருந்தான். நுளம்பான் தீவில் நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்களின் கதாநாயகன் அவன் தான். இருபது வயதுகளைத் தொட்டிருந்த அவனுக்கும் கோபிக்குமான நட்புறவு சாவிலும் இணைந்தே இருந்தது.

படகின் ஓட்டியாக இசையாளன், அதில் பூட்டப்பட்டிருந்த LMG ஆயுதத்தின் சூட்டாளனாக ஒரு கையால் அதனைப் பிடித்தபடி கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த வோக்கியுடன் கோபி. கோபி ஒரு கட்டளை அதிகாரிக்குரிய கல்வியை கற்றிருந்தவன்.

கேணல் ராஜூ அண்ணையிடம் தொலைத்தொடர்பு இலத்திரனியல் அறிவை அனுபவத்தினூடு பெற்று வளர்ந்தவன். க டற்சிறு த்தை படையணி கடற்புலிகளோடு இணைக்கப்பட்ட போது அணித் தலைவனாக ஆளுமைமிக்க போராளியாக சிறப்புத்தளபதி சூசையண்ணைக்கு அறிமுகமானவன். துருதுருவென அவன் கண்கள் எப்போதும் பிரகாசமய் இருக்கும். நித்திரை முழித்த அந்த நாட்களில் அவன் கண்கள் இரத்தச் சிவப்பாக காணப்பட்டிருந்தது. இசையாளன் அவனைச் சீண்டுவான். அண்ணை இவனுக்கு பயத்தில கண்சிவந்திட்டுது என்று இருவரும் அந்தக் காட்டு மரங்களை சுற்றி கலைபட்டு திரிவார்கள். இப்போது இருவருமே கையசைத்து போகிறார்கள், வெற்றியுடன், ஆனால் திரும்பி வரப்போவதில்லை எனும் விடைபெறுதலுடன்! எதிரிக்கலம் உட்துறைமுக ரோந்தில் வட்டத்தீவு வரை வருவதும் போவதுமாக கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண் டிருக்க கோபியும், இசையாளனும் வட்டத்தீவை நோக்கி வேகத்தை குறைத்தே தமது கரும்புலிப்படகை ஓட்டிச் செல்கின்றனர்.

உட்துறைமுக கண்காணிப்புக்காக இரண்டு நீருந்து விசைப் படகுகள் அருகருகே ஆடியசைந்தபடி தமது காவலில் விழித்திருக்க இவர்களின் இலக்காக அவைகளே தெரிவுசெய்யப்பட்டது.

ஒரேயொரு அழைப்பு மட்டுமே.

இலக்கை கண்டுவிட்டோம், போய்க் கொண்டிருக்கிறோம். புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.

அந்த இருட்டை ஊடறுத்து அவர்கள் சென்ற அந்த திசையை நோக்கி எமது கண்கள்.

அடுத்த சில நிமிடத்தில் கோபியின் LMG எதிரிக்கலத்தை நோக்கி வேட்டுகளைத் தீர்க்க இசையாளன் படகினை வேகமாக செலுத்தினான்.

எதிரிகலங்களில் காவலிலிருந்த சிங்களக் கடற்படையினர் தாக்குதலை தொடுக்க தயாராகிய வேளை அதற்கு அவகாசம் கொடுக்காது மின்னலென மோதி வெடித்தது கரும்புலிப்படகு. பெரும் தீச்சுவாலை எழுந்து அணைந்தது. ஒரு நீருந்து விசைப்படகு சிதறிப்போனது. கையசைத்துச் சென்ற கடற்கரும்புலி வீரர்கள் வட்டத்தீவில் வரலாறெழுதிச் சென்றனர். சிங்கத்தின் குகை வாயிலில் புகுந்த புலிகளின் வீரத்தையெண்ணி தமிழினம் பெருமை கொண்டது.

திருகோணமலை துறைமுகத்தின் அதியுச்ச பாதுகாப்பு கேள்விக் குறியானது. நவீன இராணுவத் தொழில்நுட்ப சாதனங்களின் கண்காணிப்புகளையும் மீறி கடற் கரும்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சாதனையின் நுண்ணறிவுத்திறனை உலகம் கண்டு வியந்தது. சிறிலங்கா கடற்படை தலைமையகமோ செய்வதறியாது திணறியது. காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை நோக்கி வந்துகொண்டிருந்த கப்பல்களை அது கொழும்புத்துறைமுகம் நோக்கி செல்லுமாறு உத்தரவிட்டது.

கோபியும், இசையாளனும் கடலோடும் காற்றோடும் கலந்துவிட்டிருந்தனர். சில மணித்தியாலங்களுக்கு முன் வெற்றியுடன் ஆனால் திரும்பி வரமாட்டோம் எனக்கூறிச் சென்றவர்களின் முகங்கள் மனத்திரைகளில் வந்து போனது.

கடல் இரைச்சலில் ஏதோ அவர்களின் குரல்கள் எதிரொலிப் பதாய் ஒரு உணர்வு. விடுத லைக்கு வித்திட்ட வீரர்களின் உயிர்மூச்சு எமக்குள்ளே நின்று எம்மை வழிநடத்தும் எனும் நம்பிக்கையோடு நுளம்பான் தீவை விட்டு அன்றிரவே எமது படகு மட்டக்களப்பு நோக்கி அடுத்த தாக்குதலுக்காக விரைந்தது.

 

நினைவுப் பகிர்வு:
புலவர்,
கடற்புலிகள்

 

Edited by நன்னிச் சோழன்
  • நன்னிச் சோழன் changed the title to திருமலைத் துறைமுக வாசலில் வோட்டர் ஜெட்டை மூழ்கடித்த கடற்சிறுத்தைக் கரும்புலிகள்


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.