Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜி - 20 உச்சிமாநாடு புது டெல்லியில் நாளை ஆரம்பம் : உலக நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் : இலங்கையின் கடன் விவகாரமும் ஆராயப்படும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
08 SEP, 2023 | 04:47 PM
image
 

(ஆர்.சேதுராமன்)

ஜி20 அமைப்பின் உச்சிமாநாடு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நாளை சனிக்கிழமை (9) ஆரம்பமாகவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (10) வரை நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.  இலங்கை உட்பட பல நாடுகளின் கடன் விவகாரங்களும் ஜி20 உச்சிமாநாட்டில் ஆராயப்படவுள்ளன.

புது டெல்லியின் இந்தியா கேட் நினைவுச்சின்னத்துக்கு அருகிலுள்ள பிரகதி மைதானத்தில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 'பாரத் மண்டபம்' எனும் கண்காட்சி அரங்கில் ஜி20 உச்சிமாநாடு நடைபெறவுள்ளது..

20களின் குழு எனும் (குரூப் ஒவ் 20) என்பதன் சுருக்கமே ஜி20 ஆகும். உலகில் பொருளாதாரத்தில் முன்னிலையிலுள்ள 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இதில் அங்கம் வகிக்கின்றன. 

அமெரிக்கா, சீனா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, ஆர்ஜென்டினா, பிரேஸில், அவுஸ்திரேலியா, ஜப்பான், ரஷ்யா, தென் ஆபிரிக்கா, துருக்கி, தென்கொரியா, இத்தாலி, மெக்ஸிகோ, சவூதி அரேபியா, இந்தோனேஷியா  ஆகியனவே மேற்படி 19 நாடுகளாகும்.

உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 80 சதவீதத்தையும், சர்வதேச வர்த்தகத்தில் 77 சதவீதத்தையும், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும், உலக நிலப்பரப்பில் 60 சதவீதத்தையும் ஜி20 அமைப்பில் அங்கம் விகிக்கும் நாடுகள் கொண்டுள்ளன.  

வர்த்தகம், சுகாதாரம் உட்பட பல விடயங்கள் குறித்த உலகளாவிய ரீதியான கொள்கைகள் ஜி20 மாநாடுகளில் ஆராயப்படுவது வழக்கம்.

20230907066L.jpg

ஜி20 வரலாறு

உலகில் பொருளாதாரத்தில் முன்னிலை வகிக்கும் 7 ஜனநாயக நாடுகளைக் கொண்ட ஜி7 அமைப்பு 1973ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. 1999ஆம் ஆண்டின் ஆசிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் 1999 ஜூன் மாதம் ஜேர்மனியில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில்தான் ஜி20 அமைப்பு ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

1999 செப்டெம்பரில் ஜி7 நிதியமைச்சர்களின் மாநாட்டின்போது ஜி20 அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. 1999 டிசெம்பரில் ஜேர்மனியின் பேர்லின் நகரில் ஜி20 நாடுகளின் முதலாவது நிதியமைச்சர்களின் மாநாடு நடைபெற்றது. கனடாவின் அப்போதைய நிதியமைச்சர் போல் மார்ட்டின் முதலாவது தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.

சில வருடங்களின் பின்னர், நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சிமாநாடாக இதை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

2008ஆம் ஆண்டு அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி நகரில் முதலாவது ஜி20 உச்சிமாநாடு நடைபெற்றது. 2010ஆம் ஆண்டு வரை 2 வருடங்களுக்கு ஒரு தடவை இம்மாநாடு நடத்தப்பட்டது.  2011ஆம் ஆண்டிலிருந்து வருடாந்தம் இது நடைபெறுகிறது.

இம்முறை 18 ஆவது தடவையாக ஜி20 உச்சிமாநாடு நடைபெறுகிறது. இந்தியாவில் இந்த உச்சிமாடு நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.

ஜி20 அமைப்புக்கு தலைமையகம் எதுவும் இல்லை. அதன் தலைமைத்துவம் சுழற்சி முறையில் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் பின், புதிய தலைமைத்துவத்தை இந்தியா பெற்றது.

இந்தியாவுக்கு அடுத்து. எதிர்வரும் டிசெம்பர் 1 முதல் பிரேஸில் தலைமை தாங்கவுள்ளது.

G20kkddd.jpg

2023 உச்சிமாநாடு

2023 ஜ20 உச்சிமாநாட்டுக்கான தொனிப்பொருள் 'ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு ஒரு எதிர்காலம்' என்பதாகும்.

ஜி20 அமைப்பில் அங்கம் வகிக்கும் 20 நாடுகளுடன் விசேட விருந்தினர்களாக பங்களாதேஷ், எகிப்து, மொரிஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமான், சிங்கப்பூர், ஸ்பெயின், ஐக்கிய அரபு இராச்சியம், ஐ.நா. சர்வதேச நாணய நிதியம், உலக சுகாதார ஸ்தாபனம், உலக வர்த்தக நிறுவனம், உலக தொழிலாளர் ஸ்தாபனம், உலக வங்கி, ஆபிரிக்க ஒன்றியம், உலக பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கான ஸ்தாபனம், ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட பல ஸ்தாபனங்களுக்கும்  இம்மாநாட்டில் பங்குபற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் திரளும் உலகத் தலைவர்கள்

ஜி20 உச்சிமாநாட்டுக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று வெள்ளிக்கிழமை இந்தியா சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனாக், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன், ஜேர்மன் சான்ஸ்லர் ஒலாவ் ஷோல்ஸ், துருக்கிய ஜனாதிபதி தையீப் அர்துவான், அவுஸ்திரேலிய பிரதமர் அந்தனி அல்பானிஸ், ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிதா, சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் சல்மான்,  இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல், தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா, ஆர்ஜென்டீன ஜனாதிபதி அல்பேர்ட்டோ பெர்னாண்டஸ், நைஜீரிய ஜனாதிபதி போலா டினுபு, இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ. பிரேஸில் ஜனாதிபதி லூலா டா சில்வா, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.

ஐநா  செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரெஸும் இம்மாநாட்டில் அவதானிப்பாளராக கலந்துகொள்வார்.

20230827027L.jpg

புட்டின், ஜின்பிங் இல்லை

இந்த உச்சிமாநாமட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் பட்டின், பிரதமர் மோடிக்கு அறிவித்துள்ளார்.  ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்கெய் லவ்ரோவ் இந்த உச்சிமாநாட்டில் பங்குபற்றவுள்ளார்.

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும்  இம்மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக சீனப் பிரதமர் லீ கியாங் கலந்துகொள்கிறார். சீன ஜனாதிபதி ஒருவர் ஜி20 உச்சிமாநாட்டில் பங்குபற்றாதமை இதுவே முதல் தடவையாகும்.

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் பங்குபற்றாதிருப்பது, ஜி20 அமைப்பை உலக பொருளாதார ஒத்துழைப்புக்கான பிரதான அரங்காகப் பேணுவதற்கும், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு நிதிகளை அளிப்பதற்கான முயற்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் இந்த உச்சிமாநாட்டில் பங்குபற்றாதாமை குறித்து தான் ஏமாற்றமடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

மெக்ஸிக்கோ ஜனாதிபதி அன்ட்ரெஸ்  மனுவெல் லோபஸ் ஒப்ரதோரும் இதில் பங்குபற்றமாட்டார் என செய்தி வெளியாகியுள்ளது.

பசுமை எரிசக்தி பரிமாற்றம், பருவநிலை மாற்றம், பெண்கள் தலைமையிலான அபிவிருத்தி, உக்ரைன் யுத்தம் காரணமான பொருளாதார, சமூக தாக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு  விடயங்கள் குறித்து இம்மாநாட்டில் தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர்.

ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் தலைர்கள், இரு தரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடுவர்.

G20-leaders.jpg

ஜி21 ஆக மாறுகிறது

55 நாடுகள் அங்கம் வகிக்கும் ஆபிரிக்க ஒன்றியத்துக்கும் ஜி20 குழுவில் அங்கத்துவம் வழங்கும் முயற்சிக்கு இந்த உச்சிமாநாட்டில் நரேந்திர மோடி உந்துதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி ஜோ பைடனும் இம்முயற்சிக்கு ஆதரவு அளிக்கிறார். இம்முயற்சி வெற்றியடைந்தால் ஜி20 ஆனது விரைவில் ஜி21 ஆக மாறிவிடும்.

நிகழ்ச்சிநிரல் முன்னுரிமை

2023 ஜி20 உச்சி மாநாட்டில் முன்னுரிமைகளின் பட்டியலை இந்தியா தயாரித்துள்ளது.

காலநிலை நிதி மற்றும் பசுமை மேம்பாடு, அனைத்து நாடுகளுக்கும் பயனளிக்கும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, உலகளாவிய வர்த்தகத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஆதரித்தல், நிலையான அபிவிருத்தி இலக்குகளில் முன்னேற்றத்தை துரிதப்படுத்துதல், தொழில்நுட்ப மாற்றம் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு தொழில்நுட்பத்தை துரிதப்படுத்துதல்,

21ஆம் நூற்றாண்டுக்கான திறன் கொண்ட மிகவும் பொறுப்பான, உள்ளடக்கிய மற்றும் பிரதிநிதித்துவ சர்வதேச அமைப்பை உருவாக்குதல்,

பெண்கள் தலைமையிலான வளர்ச்சி பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் முதலியவற்றுக்கு இம்முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

ஜி20 உச்சிமாநாட்டில் இலங்கையின் கடன் விவகாரம்

இலங்கை உட்பட பல நாடுகளின் கடன் விவகாரங்களும் ஜி20 உச்சிமாநாட்டில் ஆராயப்படவுள்ள முக்கிய விடயங்களாக உள்ளன.

ஜி20 கட்டமைப்பானது, இலங்கையின் முக்கிய இருதரப்புக் கடன்வழங்குனர்களான சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகியவற்றுடன், பல்தரப்புக் கடன்வழங்கல் கட்டமைப்புக்களில் அங்கம் வகிக்கும் ஆதிக்கம் மிகுந்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய  நாடுகளையும் உள்ளடக்கியுள்ளது.

'சீனா, இந்தியா முதலான இலங்கையின் பிரதான கடன் வழங்குனர்கள் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர், உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு செயற்பாடுகள் பூர்த்தியடைவதற்கு காத்திருக்கின்றன' என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்திருந்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்தர மோடி இது தொடர்பாக அண்மையில் அளித்த செவ்வியொன்றில், “கடன் நெருக்கடியில்ல் சிக்கியுள்ள குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உதவுவதற்கான உறுதியான கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தியா முன்னின்று செயல்படும்.  ஜி 20  உச்சிமாநாட்டில் இதற்கான ஒருமித்த கருத்தை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான், எகிப்து, எல்சல்வடோர்,கென்யா, உக்ரேன், ஸாம்பியா, கானா முதலான நாடுகளின் கடன்விவகாரங்களும் இம்மாநாட்டில் முக்கியத்துவம் பெறவுள்ளன.

புதுடெல்லி புதுப்பொலிவு

ஜி20 உச்சமாநாட்டுக்காக கடந்த ஜனவரி முதல் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் வீதியோரங்களிலுள்ள சிறிய கடைகள் ஆகியன அகற்றப்பட்டன என செய்தி வெளியாகியள்ளது.

சுமார் 3 கோடி மக்கள் வசிக்கும் டெல்லி பெருநகரப் பகுதியில் தற்போது, வீதிகள் கட்டிடங்கள், மதில்கள், புதுப்பிக்கப்பட்டு, அழகுபடுத்தப்பட்டுள்ளன. கட்டடங்களில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

வீதிகளில் வசித்த சுமார் 4,000 பேர் வேறு தங்கும் இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

28 அடி உயரமான நடராஜர் சிலை உட்பட பல சிலைகள் ஜி20 அரங்கின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லியன் முக்கிய பகுதிகளில் சுமார் 70,000 மலர்ச்செடிகள்  வைக்கப்பட்டுள்ளன.  கட்டடங்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

பாதுகாப்புக்கு 1.3 இலட்சம் படையினர்

இந்த உச்சிமாநாட்டையொட்டி, புதுடெல்லி முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் பாடசாலைகள், நீதிமன்றங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளன.

டெல்லியில் ரயில் விமான போக்குவரத்துகளில் பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.. 3 தினங்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் 70 இற்கு மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டு உள்ளன. டெல்லி முழுவதும் ட்ரோன் பறக்கத் தடை, ஒன்லைன் பொருட்கள் விநியோக தடை, ரயில்வே பொதிகள் சேவை நிறுத்தம் ஆகியனவும் இவற்றில் அடங்கும்.

டெல்லி பொலிஸார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள், கொமாண்டோக்கள் உட்பட 130,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகளில் இந்திய விமானப்படையின் ஏவுகணை தடுப்பு கருவிகள், ட்ரோன் எதிர்ப்பு தளவாடங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

தலைவர்களை அழைத்து செல்வதற்காக 18 கோடி இந்திய ரூபா செலவில் குண்டு துளைக்காத 20 கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பாதுகாப்புக்காக 20 இற்கும் அதிகமான போர் விமானங்களையும், வீரர்களையும் அமெரிக்கா அனுப்பிவைத்துள்ளது.

குரங்குகளின் கட்அவுட்

ஜி20 உச்சிமாநாடு நடைபெறவுள்ள பகுதிகளிலும் சிறிய குரங்குகளின் நடமாட்டம் காணப்படுகிறது. இந்நிலையில், குரங்குகளால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் நகரின் வனத்துறை இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறிய குரங்குகளுக்கு அச்சம் ஏற்படுத்தும் லங்கூர் இனக் குரங்குகளின் பதாகைகளை (கட்அவுட்) நகரின் பல பகுதிகளிலும் அதிகாரிகள் வைத்துள்ளனர். அத்துடன், லங்கூர் குரங்குகளை போல சத்தமிடக்கூடிய சுமார் 40 நபர்களை முக்கிய இடங்களில் நிறுத்தப்படவுள்ளனர்.

வட இந்தியாவில் பாரிய போர்ப் பயிற்சி

புது டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு நடைபெறும் நிலையில், இந்தியாவின் வட பகுதியில் இந்திய விமானப்படையும் இராணுவுமும் பாரிய வருடாந்த போர்ப் பயிற்சியை கடந்த திங்கட்கிழமை (4) ஆரம்பித்தன. சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் நடைபெறும் இப்பயிற்சிகள் எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'திரிசூல்' என இப்பயிற்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது.

லடாக், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப், அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் பிராந்தியங்களில் இப்பயிற்சிகள் நடைபெறுகின்றன.

ரபேல், மிராஜ் 2000, மிக்29, சுகோய்30 எம்.கே.ஐ., சி130, சி17 உட்பட பல வகை போர் விமானங்கள் இப்பயிற்சியில் பங்குபற்றுவதாக செய்தி வெளியாகியுள்ளது.

https://www.virakesari.lk/article/164127

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜி20 மாநாடு: 'இந்தியா' என்பதற்கு பதிலாக 'பாரத்' - என்ன நடக்கிறது? நேரலை

ஜி20 மாநாடு நேரலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பிரதமர் மோதிக்கு முன்பாக நாட்டின் பெயரைக் குறிக்கும் பெயர்ப் பலகையில் 'இந்தியா' என்பதற்குப் பதிலாக 'பாரத்'

9 செப்டெம்பர் 2023, 04:53 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஜி20 நாடுகளின் கூட்டுத் தீர்மானத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி அறிவித்துள்ளார். இதுவரை அவர் முழு விவரங்களைத் தெரிவிக்கவில்லை.

ஆனால், யுக்ரேன் போர் தொடர்பாக ஜி20 நாடுகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக கூட்டுப் பிரகடனம் சாத்தியமாகுமா என்ற சந்தேகம் இருந்தது.

யுக்ரேனில் நடந்த போர் டெல்லி உச்சி மாநாட்டில் கூட்டுத் தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தடம் புரளும் என எதிர்பார்க்கப்பட்டது. நேற்று வரை இந்தச் சந்தேகம் நிலவி வந்தது.

ஆனால், இந்திய தூதர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்துகொண்டதாகக் கூறினர்.

பிபிசிக்கு கிடைத்த தீர்மானத்தின் முந்தைய வரைவில் இதற்கான வலுவான அறிகுறி இருந்தது. ஆனால், யுக்ரேன் பற்றிய பத்தி காலியாக விடப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு பாலியில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டில், யுக்ரேனில் நடந்த போர் குறித்தும் தீர்மானத்தில் விவரிக்கப்பட்டது. அதில் ரஷ்யா, சீனாவின் ஆட்சேபனைகளைக் குறிப்பிட்டு பாலி கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.

எவ்வாறாயினும், அனைத்து உறுப்பினர்களும் ஒப்புக்கொண்ட ஓர் கூட்டுத் தீர்மானத்தை உருவாக்க இந்தியா முயன்றது.

அதன் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே அதில் என்ன உள்ளது என்பது தெரியவில்லை.

 

கூட்டுத் தீர்மானம்: ரஷ்யாவும் மேற்கு நாடுகளும் ஒப்புக்கொண்டனவா?

இந்தியா சார்பாகப் பேச்சுவார்த்தை நடத்திய தலைமை அதிகாரி அமிதாப் காந்த், இந்த அறிவிப்பு வளர்ச்சி மற்றும் புவிசார் அரசியல் விவகாரங்களில் 100% ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாகக் கூறினார். அவர் இந்தச் செய்தியை “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது” என்றும் “முன்னோடியானது” என்றும் குறிப்பிட்டார்.

பிபிசி தரப்பில் இன்னும் கூட்டுத் தீர்மானத்தைப் பார்க்கவில்லை. ஆனால், புவிசார் அரசியல் பிரச்னைகளில் 100% ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாக அமிதாப் கான்ட் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இன்னும் பிரகடனத்தைப் பார்க்கவில்லை, ஆனால் புவி-அரசியல் பிரச்சினைகளில் 100% ஒருமித்த கருத்தை கான்ட் குறிப்பிட்டுள்ளார் என்று கூறுகிறது.

தீர்மானத்தில் போரை விவரிக்கும் மொழிப் பயன்பாட்டை ரஷ்யாவும் மேற்கு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக இதன்மூலம் புரிந்துகொள்ளலாம்.

ஆனால் என்ன சமரசம் செய்துகொள்ளப்பட்டது, யார் விட்டுக்கொடுத்தார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.

இப்போதைக்கு இந்தியாவின் ஜி20 தலைமையில் இது ஒரு வெற்றி.

ஜி20 மாநாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜி20 கூட்டுத் தீர்மானத்தில் என்ன உள்ளது?

கூட்டுத் தீர்மானத்தில் உள்ள மிகவும் சர்ச்சைக்குரிய பகுதிக்கு முதலில் வருவோம்.

யுக்ரேன் போர் குறித்த பத்தியில் ஜி20 நாடுகளுக்கு இடையிலான ஒருமித்த கருத்து எப்படி எட்டப்பட்டது என்பது குறித்த விவரங்கள் உள்ளன.

உலகெங்கும் உள்ள மகத்தான மனித இனம், துன்பங்கள், போர்கள், மோதல்களின் எதிர்மறையான தாக்கத்தை எதிர்கொள்வதை நாங்கள் ஆழ்ந்த கவலையுடன் கவனிக்கிறோம்.” என்று முதல் வரி கூறுகிறது.

போருக்கு ரஷ்யாவை குறை கூறவில்லை. அதற்கு மாறாக, போரால் ஏற்பட்ட மனித துன்பங்களை மட்டும் ஜி20 கூட்டுத் தீர்மானம் குறிப்பிடுகிறது. இந்த அணுகுமுறை, ரஷ்யாவும் மேற்கு நாடுகளும் என இரண்டு தரப்புமே ஏற்றுக்கொள்ளக்கூடிய மொழிப் பயன்பாடு. ஆனால், அந்தந்த நிலைப்பாடுகளுக்கு ஏற்றவாறு இதற்கு விளக்கத்தை அளித்துக்கொள்ள முடியும்.

மாநாட்டின் கூட்டுத் தீர்மானம் குறித்துப் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “இன்றைய மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள கூட்டுத் தீர்மான, வலுவான, சமநிலையான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துவதாக” கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “உலகளாவிய தீர்வுகளைக் கண்டறிவதில் யாரும் பின்தங்கியிருக்கக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் உலகளாவிய தெற்கைச் சேர்ந்தவர்கள் முடிவெடுக்கும் செயல்முறையின் ஒருங்கிணைந்த அங்கமாக இருப்பதாகவும்” கூறினார்.

அவர் மேலும், “ஒவ்வோர் உறுப்பு நாட்டிற்கும் எதிரொலிக்கும் வகையிலான தீர்வுகளை இந்திய தலைமை வடிவமைத்துள்ளது. அனைவருக்கும் பகிரப்பட்ட முன்னோக்கிய பாதையை இந்திய தலைமை வழங்குகிறது,” என்றும் தெரிவித்தார்.

ஜி20-இல் இந்தியாவின் கூட்டுத் தீர்மானம் வலிமையாக இல்லையா?

ஜி20 மாநாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவின் கூட்டுத் தீர்மானத்தை உன்னிப்பாகப் படித்தால், யுக்ரேன் போர் பற்றிய அணுகுமுறை கடந்த ஆண்டு பாலியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இருந்ததைப் போல் ரஷ்யாவை கண்டிப்பதில் வலுவானதாக இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

பாலியில் ஜி20 உறுப்பினர்கள், “யுக்ரேனுக்கு எதிராக ரஷ்ய கூட்டமைப்பு நடத்திய ஆக்கிரமிப்புக்கு கடுமையான கண்டனங்களை” தங்கள் நிலைப்பாடுகளை வலியுறுத்தினர். ஆனால், அதேவேளையில், இதுகுறித்து வேறு கருத்துகளும் வேறுபட்ட மதிப்பீடுகளும் இருப்பதாகவும் அது குறிப்பிட்டது.

ஆனால், டெல்லியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை ரஷ்யாவை யுக்ரேன் போர் குறித்து நேரடியாக விமர்சிக்கவில்லை. மாறாக, “உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பாக யுக்ரேனில் போரால் ஏற்பட்டுள்ள துன்பங்கள் மற்றும் எதிர்மறையான தாக்கங்களைப் பற்றி” மட்டும் பேசுகிறது. அதோடு, “அந்தச் சூழலைப் பற்றிய பல்வேறு கருத்துகளும் மதிப்பீடுகளும் இருந்தன,” என்றும் குறிப்பிடுகிறது.

இந்த ஆண்டு கூட்டறிக்கை, நாடுகளுக்கு “அச்சுறுத்தல் அல்லது பிராந்திய கையகப்படுத்துதலை கோருவதற்கு பலத்தைப் பிரயோகிப்பதைத் தவிர்க்க” அழைப்பு விடுக்கிறது. இது ரஷ்யாவை நோக்கியதாகக் கருதப்படுகிறது. ஆனால், நேரடியாக இல்லை.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கூட்டுத் தீர்மானத்தில் யுக்ரேன் போர் பற்றிய பகுதி இன்றைய கவலைகளுக்குப் பதிலளிக்கிறது என்று கூறினார்.

ரஷ்யாவை கையொப்பமிட வைப்பதற்காகக் கடந்த ஆண்டு பாலி பிரகடனத்துடன் ஒப்பிடும்போது யுக்ரேன் பற்றிய அணுகுமுறை நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளதா என்று பிபிசியின் சமிரா ஹுசைன் கேள்வியெழுப்பியபோது அவர் பதிலளித்தார்.

பாலியை பாலி என்றும், புது டெல்லியை புது டெல்லி என்றும் நான் கூறுவேன். பாலியில் ஓராண்டுக்கு முன்பு நடந்தது. அப்போது நிலைமை வேறு. அதன் பிறகு பல விஷயங்கள் நடந்துள்ளன,” என்று அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டுத் தீர்மானத்தின் புவிசார் அரசியல் பிரிவில் எட்டு பத்திகள் உள்ளன. அதில் ஏழு யுக்ரேன் பிரச்னையை மையமாகக் கொண்டது என்று ஜெய்சங்கர் கூறினார்.

அவற்றில் பல சமகால முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை முன்னிலைப்படுத்துகின்றன. தானியங்கள், உணவுப் பொருட்கள், உரங்களின் தடையற்ற விநியோகம், உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களின் சிக்கல்கள் உட்படப் பல முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் முன்னிப்படுத்தப்படுகின்றன,” என்று அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

'இந்தியா' என்பதற்குப் பதிலாக 'பாரத்'

ஜி20 மாநாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜி20 மாநாட்டிற்கான குடியரசுத் தலைவரின் அழைப்பிதழில் பாரத் என்று பயன்படுத்தியதன் மூலம் நாட்டின் பெயரை மாற்ற திட்டமா என்று பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், மாநாட்டிற்கு உள்ளேயும் 'பாரத்' நுழைந்துள்ளது. மாநாட்டின் தொடக்கத்தில் மொராக்கா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோதி பேசினார்.

அப்போது, அவருக்கு முன்னே இருந்த நாட்டின் பெயர் பெயர்ப்பலகையில் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்றிருந்தது. இதனால், சமூக வலைதளங்களில் பாரத் பெயர் சர்ச்சை மீண்டும் சூடு பிடித்துள்ளது.

ஜி20 மாநாட்டில் பிரதமர் உரை

பின்னர், ஜி20 அமைப்பில் நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ள ஆப்ரிக்க ஒன்றியத்தின் சார்பில் அதன் தலைவர் அஸாலி அஸ்ஸமனியை பிரதமர் மோதி வரவேற்றார். அவரை கட்டியணைத்து வாழ்த்தி அவரது இருக்கையில் அமர வைத்தார்.

பின்னர் தொடர்ந்து பேசிய பிரதமர் மோதி, "ஜி20 அமைப்பின் தலைமை தாங்குவதன் அடிப்படையில், உலகம் நம்பிக்கையின்மையை கைவிட்ட பரஸ்பரம் நம்பிக்கை மற்றும் புரிதலுடன் ஒருங்கிணைய இந்தியா அழைபபு விடுக்கிறது. அனைவரும் ஒருங்கிணைவதற்கான தருணம் இது. அனைவரின் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற தாரக மந்திரமே நம்மை வழிநடத்தக் கூடியது. வடக்கு - தெற்கு பிளவு, கிழக்கு - மேற்கு தொலைவு, உணவு, எரிபொருள் மேலாண்மை, பயங்கரவாதம், இணைய பாதுகாப்பு, சுகாதாரம், ஆற்ற மற்றும் நீர் பாதுகாப்பு ஆகியவற்றில் எதிர்கால சந்ததியினருக்கு சரியான தீர்வை நாம் காண வேண்டும்" என்று கூறினார்.

ஜி20 மாநாடு நேரலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐக்கிய ராஜ்யம் பிரதமர் ரிஷி சுனக்

டெல்லியில் ஜி20 மாநாடு

சர்வதேச அளவில் மிக முக்கிய பொருளாதார அமைப்பான ஜி20 கூட்டமைப்பின் மாநாடு டெல்லியில் நடக்கிறது. இந்தியா தலைமை தாங்கியுள்ள இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா, பிரிட்டன், பிரேசில் உள்பட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

ஜி20 மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்திற்கு பிரதமர் மோதி பலத்த பாதுகாப்புடன் வந்திறங்கினார். அவரைத் தொடர்ந்து மாநாட்டில் பங்கேற்கும் மற்ற நாடுகளின் தலைவர்கள் வருகை தர தொடங்கினர்.

பின்னர் மாநாட்டிற்கு வருகை தந்த மற்ற நாட்டு தலைவர்கள் அவரை வரவேற்றார். ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குடேரஸ், உலக வங்கி தலைவர் அஜய் பாங்கா, உலக வர்த்தக கூட்டமைப்பு தலைமை இயக்குநர் நிகோஸி ஓகான்ஜோ, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ஐக்கிய அரபு அமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நாயான் உள்ளிட்டோர் வருகை தந்தனர். அவர்களை பிரதமர் மோதி நேரில் வரவேற்றார்.

ஜி20 மாநாடு நேரலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பாரத் மண்டபத்தில் ஐக்கிய அரபு அமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நயானை வரவேற்ற பிரதமர் மோதி

ஜி20 மாநாட்டிற்காக குடிசைப் பகுதிகள் திரைச்சீலைகளால் மறைக்கப்பட்டனவா?

டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், குடிசைகள் அகற்றப்படுவது, மறைக்கப்படுவது போன்றவை நடப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய அரசு நமது நாட்டின் ஏழைகளையும் வாய்பேச முடியாத விலங்குகளையும் மறைப்பதில் மும்முரமாக உள்ளது. இந்தியாவின் உண்மையான தோற்றத்தை நமது விருந்தினர்களிடம் மறைக்க வேண்டிய அவசியமில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

ஜி20 மாநாடு

பட மூலாதாரம்,TWITTER@INCINDIA

இந்த இரண்டு நாள் மாநாட்டைக் கருத்தில் கொண்டு குடிசைப் பகுதிகளை பச்சை நிற துணிகளால் மூடப்பட்டிருக்கும் வீடியோவை காங்கிரஸ் அதன் எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

சனிக்கிழமை தொடங்கிய இந்த உச்சி மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இது தவிர, ஜி-20 உச்சி மாநாட்டிற்கு முன், தவறான விலங்குகளை மோசமாக நடத்துவதாகக் கூறப்படும் சில வீடியோக்களையும் காங்கிரஸ் பகிர்ந்துள்ளது.

ஜி20 மாநாட்டுக்கு முன்பு, மோதி அரசு தனது தோல்வியை மறைக்க அவர்களின் வீடுகளை திரைச்சீலைகளால் மூடியுள்ளது. ஏனெனில், அரசர் ஏழைகளை வெறுக்கிறார்,” என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஜி20 மாநாடு நேரலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பாரத் மண்டபத்தில் ஐ.நா.பொதுச் செயலாளர் ஆன்டனியோ குடேரஸ் உடன் இந்திய பிரதமர் மோதி

ஜி20 மாநாடு நேரலை

பட மூலாதாரம்,ANI

பாரத் மண்டபத்தில் நடராஜர் சிலை

புதுடெல்லியில் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டுக்கு வரும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதில் தமிழ்நாட்டின் பங்கும் உள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமி மலையைச் சேர்ந்த ராதாகிருஷ்ண ஸ்தபதி, ஸ்ரீகந்த ஸ்தபதி மற்றும் சுவாமிநாத ஸ்தபதி ஆகிய மூன்று சகோதரர்கள் வடித்த 27 அடி உயர நடராஜர் சிலை ஜி20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளது.

அஷ்ட தாது எனப்படும் எட்டு உலோகங்களால், காவிரி ஆற்றின் வண்டல் மண் கொண்டு செதுக்கப்பட்டிருப்பது இந்தச் சிலையின் சிறப்பு.

கடந்த ஓராண்டாக இத்தகைய விளம்பரங்களுக்கு பதிலாக நாடு முழுவதும் ஜி-20 மாநாடு தொடர்பான விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன. மின் கம்பங்கள் முதல் இ-ரிக்‌ஷாக்கள் வரை எதிலும் ஜி-20 தொடர்பான விளம்பரங்கள் காணப்படுகின்றன. பெரிய எல்.இ.டி. திரைகளிலும் ஜி-20 விளம்பரங்கள் காட்டப்படுகின்றன.

இந்த சுவரொட்டிகளில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஜி-20 லோகோ பிரதானமாக தெரிகிறது. அதனுடன், பூமிப் பந்து, மலர்ந்த தாமரையும் அதில் இடம் பெற்றுள்ளன. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா தேர்தல் சின்னமாகவும் தாமரை உள்ளது. இந்த விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

ரஷ்ய, சீன அதிபர்கள் இல்லாதது இந்தியாவுக்கு எப்படி சிக்கலாகும்?

ரஷ்ய, சீன அதிபர்கள் இல்லாததால், ஜி20 தலைவர்கள் ஒருமித்த கருத்தை எட்டுவது மிகவும் கடினமாக இருக்கும் என்று வில்சன் சென்டர் சிந்தனைக் குழுவின் ஆய்வாளர் மைக்கேல் குகல்மேன் கூறுகிறார்.

அதற்குக் காரணம், ரஷ்யாவும் சீனாவும் அரசியல் மூலதனத்தையும் சலுகைகளுக்கான ராஜ்ஜீய வாய்ப்பையும் கொண்டிருக்கும். ஆனால், அந்த நாடுகளின் தலைவர்கள் சார்பாக அனுப்பப்படும் அதிகாரிகளுக்கு சமரசம் செய்யும் திறனோ அதிகாரமோ இருக்காது,” என்று அவர் கூறுகிறார்.

ஆகவே, இது ஒரு முடிவை எட்டுவதை இந்தியாவுக்குக் கடினமாக்கும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

ரஷ்ய, சீன அதிபர்கள் இல்லாதது இந்தியாவுக்கு எப்படி சிக்கலாகும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

யுக்ரேன் விவகாரம் டெல்லியில் எதிரொலிக்குமா?

ரஷ்யா- யுக்ரேன் இடையேயான விவகாரம் டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து முன்னாள் இந்திய தூதர் ஜிதேந்திர நாத் மிஸ்ரா கூறுகையில், “வெளிநாட்டு விவகாரங்களுக்கும் உள்நாட்டு அரசியலுக்கும் இடையிலான எல்லையை மங்கலாக்க இந்தியா முயற்சிக்கிறது” என்றார். இதை அடைய ஜி-20 மிக முக்கியமான மன்றமாகும். இது இந்திய அரசுக்கு நன்றாக தெரியும்.

கடந்த ஆண்டு இந்தோனீசியாவின் பாலியில் நடந்த ஜி-20 உச்சிமாநாட்டின் போது நடந்தது போல, திருவிழா போன்ற சூழ்நிலையில் கூட, யுக்ரைன் போர் போன்ற பிரச்சினைகள் மாநாட்டின் லட்சியங்களை சிதைக்காமல் இருப்பதை உறுதிசெய்யும் நுட்பமான பணி இந்தியாவுக்கு இருக்கும்.

யுக்ரைன் போன்ற பிளவுபடுத்தும் பிரச்சினைகளை விவாதிப்பதை விட ஒருமித்த பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்தியா நினைக்கிறது. ஆனால், இதுவரை இதைச் செய்ய முடியவில்லை, தற்போது இந்தியா இதனை சிறப்பாக கையாளும் என நினைக்கிறேன்” என்று ஜிதேந்திர நாத் மிஸ்ரா கூறுகிறார்.

ஜி-20 என்றால் என்ன, அது ஏன் உருவாக்கப்பட்டது?

‘ஜி-20’ என்ற பெயரிலிருந்தே தெளிவாகத் தெரிவதுபோல, இது 20 நாடுகளின் குழுவாகும்.

கடந்த 1999ஆம் ஆண்டு ஆசியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அனைத்து நாடுகளின் நிதி அமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும் ஒன்றிணைந்து உலகப் பொருளாதாரம் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து விவாதிக்கக்கூடிய ஒரு மன்றத்தை உருவாக்க நினைத்தனர்.

அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு, 2007-இல், பொருளாதார மந்தநிலையின் நிழல் உலகம் முழுவதும் பரவியது. அத்தகைய சூழ்நிலையில், நிதியமைச்சர்கள் மட்டத்தில் இருந்த ஜி-20 குழு மேம்படுத்தப்பட்டு, அது நாடுகளின் தலைவர்களை உள்ளடக்கியக் குழுவாக மாற்றப்பட்டது.

அனைத்து நாடுகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள்.

இந்த வகையில், ஜி-20 அமைப்பின் முதல் கூட்டம், 2008ல், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்தது. இதுவரை மொத்தம் 17 கூட்டங்கள் நடந்துள்ளன. இதன் 18வது கூட்டத்தைதான் இந்தியா நடத்த உள்ளது.

இந்தக் குழுவின் கவனம் பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகளை விவாதிப்பதாக இருந்தாலும், காலப்போக்கில் அதன் நோக்கம் விரிவடைந்து, நிலையான வளர்ச்சி, சுகாதாரம், விவசாயம், எரிசக்தி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் ஊழல் எதிர்ப்பு போன்ற விஷயங்களும் இதில் சேர்க்கப்பட்டன.

ஜி20 நேரலை

ஜி-20 எவ்வாறு செயல்படுகிறது?

எந்த நாடு ஜி-20யின் தலைவர் பதவியில் இருக்கிறதோ, அந்த ஆண்டில் அந்நாடு ஜி-20 கூட்டங்களை ஏற்பாடு செய்கிறது.

ஜி-20 இரண்டு தடங்களில் செயல்படுகிறது.

ஒன்று அனைத்து நாடுகளின் நிதி அமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும் இணைந்து செயல்படும் நிதித் தடம் – Finance Track.

இரண்டாவது ஷெர்பா டிராக் – Sherpa Track. இதில் உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் இடம்பெறுவர். இதில் விவசாயம், ஊழல் எதிர்ப்பு, காலநிலை, டிஜிட்டல் வர்த்தகம், கல்வி, வேலைவாய்ப்பு, ஆற்றல், சுற்றுச்சூழல், ஆரோக்கியம், சுற்றுலா, வர்த்தகம், மற்றும் முதலீடு ஆகியவை பற்றி விவாதிக்கப்படும்.

ஜி20 தலைவர் பதவியை ஒரு நாடு எப்படிப் பெறும்?

இது Troika எனப்படும் குழுவால் தீர்மானிக்கப்படுகிறது. இது உறுப்பினர் நாடுகளின் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்கால ஜனாதிபதிகளை உள்ளடக்கியது.

https://www.bbc.com/tamil/articles/cpv27p33dg5o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.