Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது- கர்நாடகா திட்டவட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது- கர்நாடகா திட்டவட்டம்!

தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது- கர்நாடகா திட்டவட்டம்!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு நிமிடத்திற்கு 5,000  கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு அண்மையில் பரிந்துரை செய்தது.

எனினும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து  ” கர்நாடக மாநிலத்தில் போதுமான மழை பெய்யாத காரணத்தால், தமிழ் நாட்டிற்கு தண்ணீர் திறக்கும் நிலையில் நாங்கள் இல்லை. நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் ஆரம்பிக்கும்  முன்பு, இந்த விவகாரம் தொடர்பாக எங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி திட்டமிட்டு வருகிறோம்” இவ்வாறு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1349510

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் போராட்டம் - பாஜக என்ன சொல்கிறது?

கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்
51 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து பெங்களூர், மாண்டியா உள்ளிட்ட நகரங்களில் விவசாய அமைப்புகள் மற்றும் கன்னட அமைப்புகள் ஒரு நாள் பந்த் நடத்துவதால், கர்நாடகா – தமிழகம் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

 

கர்நாடகா மாநிலம் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு பாசன நீர் திறப்பதில், இருமாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நிலவி வருகிறது. ஆண்டுதோறும் மழையில்லாத நேரங்களில், கர்நாடாகா அரசு தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுப்பதால், பிரச்சினைகள் எழுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. இப்படியான நிலையில், காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி, ஆகஸ்ட் முதல் கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய நீரை வழங்கவில்லை. இதனால், ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்துக்கான நீர் திறப்பு குறித்து, மீண்டும் இருமாநிலத்துக்கும் இடையில் பிரச்சினை வெடித்துள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடகா அரசு நீர் திறக்க வலியுறுத்தி, தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தில் மனு தாக்கல் செய்ததுடன், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவில், ‘‘ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டிய 37.9 டிஎம்சி நீரை உடனடியாக திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். செப்டம்பர் மாதத்தில் திறந்துவிட வேண்டிய 37.76 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடுவதை உறுதி செய்ய வேண்டும்,’’ எனக் கோரியிருந்தது.

 

இருமாநில அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவிரி மேலாண்மை ஆணையம் செப்டம்பர் 18ம் தேதி, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 5,000 கன அடி வீதம், 15 நாட்களுக்கு நீர் வழங்க வேண்டுமென உத்தரவிட்டது.

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பு!

ஆனால், உத்தரவை அமல்படுத்த மறுத்த கர்நாடகா அரசு, ‘போதிய பருவமழை இல்லாததால், எங்களிடம் போதிய நீர் இல்லை, நீர் திறக்க முடியாது,’ எனக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா அரசு அமல்படுத்த வேண்டும், தண்ணீர் திறக்க வேண்டும்,’ என செப்டம்பர் 21ம் தேதி உத்தரவிட்டது.

இதனையடுத்து, கர்நாடகா அரசு, செப்டம்பர் 23ம் தேதி முதல், தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்துவிட்டது. அன்று முதல் கர்நாடகா விவசாயிகள் சங்கம், கன்னட அமைப்புகள் கண்டனத்தை பதிவு செய்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது எனக்கூறி ஆங்காங்கே போராட்டத்தை துவங்கினர்.

போராட்டக்காரர்கள் கைது!

இப்படியான நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து, பெங்களூரில் 26ம் தேதி ஒரு நாள் பந்த் நடத்த, கர்நாடகா ஜல சம்ராக்‌ஷனா சமிதி சார்பில் அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி இன்று பந்த் துவங்கிய நிலையில், பெங்களூரில் மட்டுமே, கர்நாடகா கரும்பு விவசாயிகள் சங்கம், பல விவசாயிகள் சங்கங்கள், கன்னட அமைப்புகள், வணிகர் சங்கம், போக்குவரத்து தொழிலாளர் அமைப்பு என, 195 அமைப்புகள் பங்கேற்றுள்ளன.

பெங்களூரில் காலை, 7:00 மணிக்கே பந்த் துவங்கிய நிலையில், நகரின் பெரும்பாலான பகுதியில் பஸ், ஆட்டோ சேவை ரத்து, கடைகள் அடைப்பு என, நகரமே வெறிச்சோடி காணப்பட்டன. பந்த் நடத்த அரசு அனுமதி மறுத்திருந்த நிலையில் பந்த் நடத்திய ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு, பெங்களூர் ஃப்ரீடம் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளனர். பெங்களூரைப்போல மாண்டியா, மைசூர் மற்றும் ராம்நகரா மாவட்டங்களிலும் விவசாயிகள் சங்கங்கள் பந்த் நடத்தினர்.

கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாடு முதல்வர், கர்நாடக அரசுக்கு எதிராக விவசாயிகள் முழக்கம்

பெங்களூரில் விவசாயிகள் சங்கங்கள், தமிழக அரசு மற்றும் கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

கர்நாடகா செல்லும் தமிழக அரசு மற்றும் தனியார் பஸ்கள், கர்நாடகா – தமிழக மாநில எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள அத்திபள்ளி பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் 430 தமிழக பஸ்கள் எல்லைப் பகுதியிலேயே நிறுத்தப்பட்டன. கர்நாடகா எல்லைக்குள் கர்நாடகா மாநில பஸ்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இதர சரக்கு வாகனங்கள், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பெங்களூர் செல்ல இருமாநில போலீஸாரும் அனுமதியளித்து பாதுகாப்பு வழங்கினர்.

அத்திபள்ளி மற்றும் பெங்களூர் நகரின் சில பகுதிகளில், திறக்கப்பட்டிருக்கும் கடைகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்ற கனடா அமைப்பினர் மிரட்டல் விடுத்ததால், பதற்றமான பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகா ஜல சம்ராக்‌ஷனா சமிதி சார்பில் பந்த் நடந்திருந்தாலும், காவிரி பிரச்சினையில் வழக்கமாக போராட்டம் நடத்தும் கன்னட அமைப்பை சேர்ந்த வட்டாள் நாகராஜ் வரும் செப்டம்பர் 19ம் தேதி பந்த் நடத்த அழைப்பு விடுத்திருந்ததால், அவரது அமைப்பு சார்ந்தவர்கள் யாரும் இன்று பங்கேற்கவில்லை.

 
கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்

பெங்களூரு நிலைமை எப்படி?

பந்த் தொடர்பாக பெங்களூரில் நிலை எப்படியிருக்கிறது என, பெங்களூரில் உள்ள சிலரிடம் பிபிசி தமிழ் விசாரித்தது.

பெங்களூர் எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஐ.டி பொறியாளரான அர்பித், ‘‘எலெக்ட்ரானிக் சிட்டி முழுவதிலும் கடைகள் அடைக்கப்பட்டு, ஆட்டோ மற்றும் இதர போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. மருந்துக்கடைகள் மட்டுமே செயல்படுகிறது. எங்கள் நிறுவனம் நேற்றே அறிக்கை ஒன்றை அனுப்பி, இன்று அலுவலகம் வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது,’’ என்றார்.

பெங்களூர் மடிவாலா பகுதியில் வணிக நிறுவனத்தில் பணியாற்றும் விக்னேஷ், ‘‘நகரில் பெரும்பாலான பகுதிகளில் பந்த் காரணமாக அனைத்துமே முடங்கியுள்ளது. எங்கள் அலுவலக உத்தரவுப்படி இன்று வீட்டில் இருந்து பணி செய்கிறோம். பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், பதற்றமான சூழல் நிலவுவதால் தமிழக பதிவெண் கொண்ட பைக் மற்றும் கார்களை வெளியில் எடுத்துச் செல்லவே அச்சமாக உள்ளது,’’ என்றார்.

இப்படியான நிலையில் பந்த் தொடர்பாக கர்நாடகா எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

காங்கிரஸ் தி.மு.கவின் ‘பி டீம்’!

பெங்களூர் பந்த் தொடர்பாக, மதச்சார்பற்ற ஜனதா தளம் (JDS) தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பக்கத்தில், ‘‘தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்ததை கண்டித்து இன்று பெங்களூரில் நடக்கும் பந்த்-க்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் முழு ஆதரவு தெரிவிக்கிறது. நமது கட்சியினர் இந்த போராட்டத்தில் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். நீதிக்கான போராட்டம் அமைதியாக இருக்கட்டும்,’’ எனத்தெரிவித்துள்ளது.

நிருபர்களிடம் பேசிய மத சார்பற்ற ஜனதா தளம் முன்னாள் முதல்வர் குமாரசாமி, ‘‘கர்நாடகா காங்கிரஸ் கட்சி, இன்று உரிமைக்காக போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்துள்ளது. போராட்டக்காரர்களை இரவோடு இரவாகவே கைது செய்துள்ளது, காங்கிரஸின் உச்சபட்ச தீங்கான ஆட்சியை வெளிப்படுத்துகிறது. காங்கிரஸ் அரசு கன்னட மக்களுக்காக செயல்படாமல், தி.மு.கவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. கர்நாடகா காங்கிரஸ் தமிழக தி.மு.கவின் ‘பி டீம்’ ஆகத்தான் செயல்படுகிறது,’’ என, காட்டமாக தெரிவித்திருந்தார்.

’தொடர் போராட்டம் நடத்துவோம்!’

பிபிசி தமிழிடம் பேசிய கர்நாடகா பா.ஜ.க மாநில செய்தித்தொடர்பாளர் மோகன் விஸ்வா, ‘‘கர்நாடகா நீர் வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், தமிழக முதல்வர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பராகத்தான் செயல்பட்டு வருகிறார். இங்கு நீர் பற்றாக்குறையால் விவசாயிகள் போராட்டம் நடத்தும் நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை அவர் காது கொடுத்துக்கூட கேட்பதில்லை. மாறாக டி.கே.சிவக்குமார் எம்.எல்.ஏக்களை கவருவதிலும், அரசியல் செய்வதிலும் தான் கவனம் செலுத்துகிறார்.

அவர் நீர் வளத்துறையின் ஒரு பணியையும் செய்வதில், அவரின் இந்த ‘பெய்லியர்’ காரணமாகத்தான் இன்று விவசாயிகள் ரோட்டுக்கு வந்து போராடுகின்றனர். விவசாயிகளுடன் கர்நாடகா பா.ஜ.க துணை நிற்கிறது. இன்று நடந்த பந்த்–யில் கூட பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பங்கேற்று கைாதாகியுள்ளனர். நாங்கள் எங்கள் உரிமையை பெற, அரசுக்கு தொடர் அழுத்தம் கொடுப்போம், தொடர் போராட்டம் நடத்துவோம்,’’ என்றார்

கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம்,X/CA MOHAN VISHWA

‘காவிரி நீர் கர்நாடகத்துக்கு மட்டுமானதல்ல’

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கர்நாடகாவில் நடக்கும் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். நிருபர்களிடம் பேசிய அவர், ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நீரை வைத்துக் கொண்டு குறுவை பயிரைக் காப்பற்றலாம் என நம்புகிறோம். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு கர்நாடக அரசு ஆளாக நேரிடும். ஒரு கூட்டாட்சி தத்துவத்தில் உயர்ந்து நிற்பது உச்ச நீதிமன்றம், அதன் உத்தரவை ஓர் அரசாங்கத்தை நடத்துபவர்கள் புறக்கணிக்க முடியாது.

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு, 5000 கன அடி தண்ணீரை 15 நாட்களுக்கு திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், கர்நாடக விவசாயிகள் அவர்களுக்குரிய தண்ணீரை நாம் கேட்பதாக தவறாக நினைக்கிறார்கள். காவிரி ஆற்று நீர் கர்நாடகத்துக்கு மட்டுமானதல்ல, காவிரி கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகி அந்த மாநிலத்தைவிட தமிழகத்தில் தான் அதிக இடங்களில் ஓடுகிறது. ஆற்றின் கடைமடை பகுதிக்குத்தான் அதிக உரிமை உண்டு. ஆகவே, கர்நாடகத்தில் உள்ள விவசாயிகளுக்கும் தண்ணீர் வேண்டும் என்பதை நான் மறுக்கவில்லை,’’ என்றார் அமைச்சர் துரைமுருகன்.

 
கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம்,TWITTER

மேலும், தொடர்ந்த அவர், ‘‘தண்ணீர் மிகையாக இருக்கும் காலத்தில் இந்தப் பிரச்சினை இல்லை. ஆனால், சிக்கலான நேரத்தில் காவிரியில் எவ்வளவு நீர் இருக்கிறதோ அதில் தமிழகத்துக்கான பங்கை கர்நாடகம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. மொத்த நீரையும் திறந்து விட கேட்கவில்லை, எங்களுக்குரிய தண்ணீரை திறந்து விட கேட்கிறோம். எனவே உத்தரவின்படி தண்ணீர் திறந்துவிட வேண்டிய கட்டாயத்தில் தற்போது கர்நாடக அரசு உள்ளது. காவிரி நீர்ப்பங்கீடு விகாரம் சட்ட ரீதியாக சென்றுகொண்டிருக்கும் போது, பேச்சுவார்த்தையால் பயனில்லை. மறுபடியும் பேச்சுவார்த்தைக்கு அவசியமுமில்லை,’’ எனப்பேசியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c25w150grx7o

  • கருத்துக்கள உறவுகள்

மு.க.ஸ்டாலினுக்கு அவமதிப்பு, சித்தார்த்தின் நிகழ்ச்சி நிறுத்தம்; பிரகாஷ் ராஜ் மன்னிப்பு - என்ன நடக்கிறது கர்நாடகாவில்?

பாதியில் நிறுத்தப்பட்ட நடிகரின் செய்தியாளர் சந்திப்பு; மன்னிப்பு கேட்ட பிரகாஷ் ராஜ்

பட மூலாதாரம்,INSTAGRAM

படக்குறிப்பு,

நடிகர் சித்தார்த்தின் செய்தியாளர் சந்திப்பு பெங்களூருவில் கன்னட அமைப்புகளால் நிறுத்தப்பட்டன.

8 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழகம் கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீட்டு விவகாரம் கடந்த சில நாட்களாக சர்ச்சையாகி வரும் நிலையில், கர்நாடகாவில் நடைபெற்ற நடிகர் சித்தார்த்தின் செய்தியாளர் சந்திப்பு கன்னட அமைப்பினரால் பாதியில் நிறுத்தப்பட்டது. இதற்கு கன்னட மக்கள் சார்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் சித்தார்த் தனது திரைப்படம் ‘சிக்கு’ குறித்த செய்தியாளர் சந்திப்பை பெங்களூருவில் உள்ள எஸ் ஆர் வி திரையரங்கில் வியாழக்கிழமை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் அரங்கில் திடீரென சிலர் உள்ளே நுழைந்தனர்.

கன்னட அமைப்பை சேர்ந்த அவர்கள் செய்தியாளர் சந்திப்பை நிறுத்தும் படி கூச்சலிட்டனர். கழுத்தில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற துண்டு அணிந்திருந்தவர்கள், “காவிரி விவகாரத்துக்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு சென்றுக் கொண்டிருக்கிறது. இவர் தன் படத்தைப் பிரபலப்படுத்த வந்துள்ளார். இது உங்களுக்கு தேவையா?” என கூச்சலிட்டனர்.

இது திரைப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு என நடிகர் சித்தார்த் அளித்த விளக்கத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பி, கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் நடிகர் சித்தார்த் செய்தியாளர் சந்திப்பிலிருந்து பாதியில் எழுந்து “அனைவருக்கும் நன்றி” என கூறி விட்டு அரங்கை விட்டு வெளியேறினார்.

இரு மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் சர்ச்சையாகி வரும் வேளையில், நடிகரின் செய்தியாளர் சந்திப்பை தமிழர் என்பதற்காக கன்னட அமைப்பினர் பாதியில் நிறுத்தியுள்ளனர்.

சில நாள்களுக்கு முன் பெங்களூருவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து சிலர் போராட்டடம் நடத்தினர்.

பாதியில் நிறுத்தப்பட்ட நடிகரின் செய்தியாளர் சந்திப்பு; மன்னிப்பு கேட்ட பிரகாஷ் ராஜ்
படக்குறிப்பு,

கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அரங்கை விட்டு வெளியேறினார் நடிகர் சித்தார்த்.

 

மன்னிப்பு கேட்ட சிவராஜ்குமார்

கன்னட அமைப்பினரால் நடிகர் சித்தார்த் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற நேர்ந்த சூழலில் அதற்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அதுகுறித்த பேச்சின்போது, "இப்படியொரு சம்பவம் நடந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. சித்தார்த், உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கன்னட மக்கள் அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்கள். கன்னட மக்களைப் பொருத்தவரையில் அனைத்து மொழிப் படங்களையும் பார்த்து ரசிப்பவர்கள்," என்று நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலினுக்கு அவமதிப்பு, சித்தார்த்தின் நிகழ்ச்சி நிறுத்தம்; பிரகாஷ் ராஜ் மன்னிப்பு - என்ன நடக்கிறது கர்நாடகாவில்?

பட மூலாதாரம்,SUN PICTURES/TWITTER

மன்னிப்பு கேட்ட பிரகாஷ் ராஜ்

இதற்காக நடிகர் பிரகாஷ் ராஜ் கன்னட மக்கள் சார்பாக மன்னிப்பு கேட்பதாக X எனப்படும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,“ பல ஆண்டுகளாக நிலவி வரும் பிரச்னையை தீர்க்க தோல்வியடைந்திருக்கும் அரசியல் கட்சிகளை கேள்வி கேட்பதற்கு பதிலாக.. மத்திய அரசு தலையீடு செய்ய அழுத்தம் தராத பயனற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை கேள்வி கேட்பதற்கு பதிலாக..சாதாரண மனிதர்களையும் கலைஞர்களையும் இப்படி துன்புறுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது...ஒரு கன்னடனாக..கன்னட மக்கள் சார்பாக மன்னிப்பு கேட்கிறேன் சித்தார்த்”என பதிவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே கர்நாடக பாஜகவினரும் கன்னட அமைப்புகளும் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக கர்நாடக எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போராட்டம் நடத்தியிருந்த வாட்டாள் நாகராஜ், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இந்த விவகாரத்தில் யார் பக்கம் நிற்கிறார்கள் என கூற வேண்டும் என்றார்.

இந்த விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இது தேவையற்றது என்றார். “ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தை அண்டி வாழும் நிலை தான் உள்ளது. கர்நாடக எங்கோ இல்லை. ஒரு தெருவில் ஒரு பகுதி தமிழ்நாடு எனவும், மற்றொரு பகுதி கர்நாடகா எனவும் இருக்கிறது. என்னுடைய தொகுதியிலும் கூட அப்படி தெருக்கள் உள்ளன. இவை தேவையற்ற செயல்கள்” என்று அவர் தெரிவித்தார்.

பாதியில் நிறுத்தப்பட்ட நடிகரின் செய்தியாளர் சந்திப்பு; மன்னிப்பு கேட்ட பிரகாஷ் ராஜ்

பட மூலாதாரம்,X/@PRAKASHRAAJ

படக்குறிப்பு,

நடிகக்ர் சித்தார்த்தின் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதற்கு கன்னட மக்கள் சார்பாக மன்னிப்பு கேட்பதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

 
பாதியில் நிறுத்தப்பட்ட நடிகரின் செய்தியாளர் சந்திப்பு; மன்னிப்பு கேட்ட பிரகாஷ் ராஜ்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என கூறி கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகாவில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவில் முழு கடையடைப்பு

இந்நிலையில் காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு தரக் கூடாது என கூறி கன்னட அமைப்பினரும் பாஜகவினரும் கர்நாடகாவில் இன்று மாநிலம் தழுவிய முழு கடையடைப்பு நடத்தி வருகின்றனர். பொது போக்குவரத்து சங்கங்கள், தனியார் போக்குவரத்து சங்கங்கள், திரையுலகம், தனியார் பள்ளி நிர்வாகங்கள், ஹோட்டல்கள் என பல்வேறு தரப்பினரும் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடையடைப்பின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன . கர்நாடகாவிலிருந்து வரும் சரக்கு பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் அரசு விரைவுப் பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு பதிவெண் கொண்ட வாகனங்களை காவல்துறையினர் கர்நாடகா எல்லைக்கு செல்ல அனுமதிக்கவில்லை.

பெங்களூரூ நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக காவிரி நீர் விளங்குகிறது. மாண்டியா பகுதியில் விவசாயத்துக்கும் காவிரி நீர் தான் பயன்படுகிறது.

முழு கடையடைப்பு அறிவிக்கப்பட்டிருப்பதால், பெங்களூரு ,மைசூர், மாண்டியா பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. எனினும் தடையை மீறி கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மாண்டியா பகுதியில் சாலையில் படுத்து உருண்டு போராடிய கன்னட அமைப்பினர் தங்களுக்கே குடிப்பதற்கு நீர் இல்லாத போது தமிழகத்துக்கு எப்படி தருவது என முழக்கங்கள் எழுப்பினர். தமிழகத்துக்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரூவில் போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் குண்டு கட்டாக வேனில் ஏற்றினர்.

 
பாதியில் நிறுத்தப்பட்ட நடிகரின் செய்தியாளர் சந்திப்பு; மன்னிப்பு கேட்ட பிரகாஷ் ராஜ்
படக்குறிப்பு,

கர்நாடக அணைகளில் தமிழகத்துக்கு கொடுக்கும் அளவு தண்ணீர் இருக்கிறது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவிக்கிறார்.

‘தண்ணீர் வைத்துக் கொண்டே தர மறுக்கிறது கர்நாடகா’

கர்நாடகத்தில் தமிழகத்துக்கு தரும் அளவு நீர் இருந்தும் கர்நாடகம் தர மறுக்கிறது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். “கர்நாடகாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி, கே ஆர் எஸ் அணையில் 97.08% நீர் இருந்தது, இந்த ஆண்டு 42.38% நீர் உள்ளது, கபிணி அணையில் கடந்த ஆண்டு 95.74% இருந்தது, இந்த ஆண்டு 68.55% உள்ளது. அதே போல, ஹேமாவதி அணையில் 99% இருந்தது, தற்போது 98% உள்ளது. ஆனால், மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு 95.66% இருந்தது, இந்த ஆண்டு 11.79% நீர் தான் உள்ளது. எனவே தண்ணீர் தர மாட்டேன் என கூறுவது நியாயமல்ல.

பயிர்கள் காய்ந்துக் கொண்டிருக்கின்றன என தமிழக முதல்வர் கடிதம் எழுதியும் போதிய நீர் தரவில்லை. உச்சநீதிமன்றம் சென்றும் தண்ணீர் தரவில்லை. உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்துக்காக அமைத்த காவிரி நீர் மேலாண்மை வாரியம், மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றின் உத்தரவுகளை கேட்கவில்லை. இதற்கு மேல் என்ன செய்ய முடியும்? படையா எடுக்க முடியும்? இல்லை நாங்கள் சென்று தண்ணீரை திறக்க முடியுமா? இரு மாநிலங்களும் நட்புடன் பாசத்துடன் இருந்தால் தான் இரு மாநிலத்திலும் இருக்கும் மக்கள் அச்சமில்லாமல் வாழ்வார்கள்” என்று அவர் கூறினார்.

பாதியில் நிறுத்தப்பட்ட நடிகரின் செய்தியாளர் சந்திப்பு; மன்னிப்பு கேட்ட பிரகாஷ் ராஜ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தமிழ்நாட்டில் சுமார் ஐந்து லட்சம் ஏக்கர் குறுவை பயிர்கள் காவிரி நீரை நம்பியுள்ளன.

கருகும் குறுவை பயிர்கள்

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் ஐந்து லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் காவிரி நீரை நம்பியுள்ளன. காவிரி டெல்டா பகுதி என்பது காவிரி நீர் கடலில் கலக்கும் முன் விரிந்து பல கிளைகளாகச் செல்லும் பகுதி. இப்பகுதி விவசாயத்துக்கு மிகவும் உகந்தது. தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை ஆகியன காவிரி டெல்டா மாவட்டங்கள். இந்த மாவட்டங்கள் மேட்டூர் அணையில் கிடைக்கும் காவிரி நீரையும் அவ்வப்போது பெய்யும் மழையையும் நம்பி உள்ளன.

காவிரி மேலாண்மை ஆணையம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என கூறியது. ஆனால் கர்நாடக அணைகளில் 53% குறைந்துள்ளதால் பல பகுதிகளில் வறட்சி நிலவுகிறது எனவும் தண்ணீர் தர இயலாது எனவும் கர்நாடகா கூறியது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி, தமிழகத்துக்கு விநாடிக்கு 5,000 கனஅடி நீரை கர்நாடகா முறையாக திறக்கவில்லை.

இதனால், தமிழகத்தில் நெற்பயிர்கள் கருகியுள்ளன என தமிழகம் கூறியது. எனவே நிலுவையில் உள்ள 50 டி எம் சி நீரையும், அக்டோபர் மாதம் தர வேண்டிய 20.22 டி எம் சி நீரையும் தர வேண்டும் என தமிழகம் கோரியது. காவிரி ஒழுங்காற்றுக்குழுக் கூட்டத்தில் அடுத்த 15 நாட்களுக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அந்த நீர் தமிழகத்துக்கு தற்போது கிடைத்துக் கொண்டிருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/c807p1jw0vvo

  • கருத்துக்கள உறவுகள்

டெல்டாவில் கருகும் பயிர்கள்: காவிரி நீர் தமிழகத்திற்கு வரவே வராதா? வேறு வழிகள் என்ன?

காவிரி நீர் தமிழகத்துக்கு வரவே வராதா? தமிழ்நாட்டின் முன் இருக்கும் வாய்ப்புகள்  என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

குறுவை பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகியுள்ளதால் தமிழ்நாடு அரசு ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு அறிவித்துள்ளது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 7 அக்டோபர் 2023, 02:31 GMT
    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

காவிரி பிரச்னை தொடரும் நிலையில், கருகும் குறுவைப் பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

காவிரி டெல்டாவில் நெற்பயிர்கள் கருகும் அபாயம் இருப்பதாக கடந்த இரண்டு மாதங்களாகவே அச்சம் நிலவியது. தமிழ்நாட்டின் கோரிக்கை பல்வேறு நிலைகளில் முன்வைக்கப்பட்ட போதிலும் கர்நாடகாவிடமிருந்து போதுமான தண்ணீரை பெற முடியவில்லை.

இதனால் பயந்தபடியே பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. இது, கர்நாடகா வழங்க வேண்டிய காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்கவே கிடைக்காதா என்ற கேள்வியை விவசாயிகள் மத்தியில் எழுப்பியுள்ளது.

காவிரி நீரை பெறுவதற்கு, தமிழகத்தின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன? விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?

இந்த ஆண்டு நடந்தது என்ன?

கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி நீரை நம்பி சுமார் ஆறு லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் பயிரிடப்பட்டன.

ஆனால் மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாகக் குறைந்தது. தேவையான நீர் வந்து சேரவில்லை.

"மேட்டூர் அணையில் இருந்து போதுமான தண்ணீர் விநியோகம் செய்ய முடியாமல் போனதால், டெல்டா மாவட்டங்களில் சுமார் 40,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளதாக" தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பாதி நீர் கூட வரவில்லை

காவிரி நீர் தமிழகத்துக்கு வரவே வராதா? தமிழ்நாட்டின் முன் இருக்கும் வாய்ப்புகள்  என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தமிழ்நாட்டில் சுமார் 6 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 93.47 டி.எம்.சி. திங்கட்கிழமை நிலவரப்படி 9.025 டி.எம்.சி நீர் இருப்பு இருந்தது. அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 1,004 கன அடியாகவும், வெளியேற்றம் விநாடிக்கு 5,252 கன அடியாகவும் உள்ளது.

தமிழ்நாட்டிற்கு 2023, ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கர்நாடகாவில் இருந்து 45 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவுப்படி நிர்ணயிக்கப்பட்ட அளவு 123 டி.எம்.சி. எனவே நிர்ணயிக்கப்பட்ட நீரில் பாதிகூட கிடைக்காததுதான் இப்போதைய நெருக்கடிக்கு அடிப்படையான காரணம்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் (CWMA) காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவும் (CWRC) இந்தப் பிரச்னையில் தலையீடு செய்தன. அதன் பின்னர் கடந்த செப்டம்பர் மாதத்தில் 13.58 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 15ஆம் தேதி வரையில் தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு நாளும் 3,000 கன அடி நீர் திறக்கப்பட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்குமுறை குழு உத்தரவிட்டது. ஆனால் அதை கர்நாடக அரசு ஏற்கவில்லை. செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் தண்ணீர் திறக்க வேண்டியதை உறுதி செய்தது. காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின் அடுத்த கூட்டம் அக்டோபர் 12 ஆம் தேதி நடக்கவுள்ளது.

தமிழ்நாடும், கர்நாடகமும் இந்தப் பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டபோது, எவர் சார்பாகவும் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. காவிரி நீர் ஒழுங்குமுறை குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகளைக் கொண்டு, இரு அண்டை மாநிலங்களுக்கும் இடையே நீர் பகிர்வைக் கையாள வேண்டுமென்றே உச்சநீதிமன்றம் வழிகாட்டியது. இருப்பினும் இப்போது குறுவை சாகுபடி கருகியுள்ள நிலையில் நம் முன் வேறு வாய்ப்புகள் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 
காவிரி நீர் தமிழகத்துக்கு வரவே வராதா? தமிழ்நாட்டின் முன் இருக்கும் வாய்ப்புகள்  என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மேட்டூர் அணையில் ஜூன் 12ஆம் தேதி திறந்து விடப்பட்ட காவிரி நீர் குறுவை பயிர்களைக் காப்பாற்ற போதிய அளவு கிடைக்கவில்லை.

உச்சநீதிமன்றம்தான் ஒரே வழியா?

கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்னை, ஏற்கெனவே பல்வேறு நீதிமன்ற வழக்குகளுக்கு உட்பட்டுள்ளது. இரு மாநிலங்களும் காவிரி நதிநீரை பாசனத்திற்கும் குடிநீருக்கும் சார்ந்துள்ளன.

காவிரி ஆற்றின் மேல் பகுதியில் உள்ள மாநிலமான கர்நாடகா, ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டிற்கு தண்ணீரைத் திறந்துவிட வேண்டிய அட்டவணை நடைமுறையில் உள்ளது. அந்த அட்டவணையின்படி, கர்நாடகா தமிழ்நாட்டுக்கு பிலிகுண்டுலுவில் ஒரு "சராசரி" நீர் ஆண்டில் (ஜூன் முதல் மே வரை) மொத்தம் 177.25 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும்.

இதில் 123.14 டிஎம்சி தண்ணீர் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் திறக்கப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட மாதங்கள் தென் மேற்குப் பருவமழை காலமாகும். இந்த காலகட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டதைவிடக் குறைவாக மழைப்பொழிவு இருந்தால், இரண்டு மாநிலங்களுக்கும் இடையில் பிரச்னை வெடிக்கிறது. எனவே இந்தப் பிரச்னையில் இயற்கை‌ சூழலுக்கும்‌ பங்கு உள்ளது.

உச்சநீதிமன்றத்தை நாடுவதைத் தவிர இந்த விவகாரத்துக்கு வேறு தீர்வுகள் கிடையாது என ஒய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் கூறுகிறார்.

“கடந்த 1924இல் இப்போதைய கர்நாடகா மைசூர் மாகாணாமாக மகாராஜா கீழும், தமிழ்நாடு சென்னை மாகாணமாக பிரிட்டிஷ் ஆட்சியின் கீழும் இருந்தது. காவிரியின் குறுக்கே கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டப்படத் தொடங்கியதால், அப்போது போடப்பட்ட 50 ஆண்டு கால ஒப்பந்தத்தின்படி, தமிழ்நாட்டுக்கு கர்நாடகா காவிரியிலிருந்து சுமார் 450 டி.எம்.சி நீர் தர வேண்டும்.

இந்த ஒப்பந்தம் 1974 ஆம் ஆண்டு காலாவதியானது. அதன் பின்னரே பிரச்னை தொடங்கியது. பிரிட்டிஷ் அரசும் மன்னரும் அமர்ந்து பேசி முடிவெடுக்க முடிந்த விவகாரத்தில் சுதந்திரத்துக்குப் பிறகு இரு மாநிலங்களால் தீர்வு காண முடியவில்லை.

ஏனென்றால், பிரச்னை இரு மாநிலங்களிலும் அரசியல் பிரச்னையாக உருவெடுத்துவிட்டது. தண்ணீரை குறைத்துக் கேட்டால் தமிழ்நாட்டிலும், அதிகமாகக் கொடுத்தால் கர்நாடகாவிலும் எதிர்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இதில் காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக என எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. எனவே உச்சநீதிமன்றத்தை நாடுவதே இதற்கு தீர்வாகும்,” என்கிறார்.

 
காவிரி நீர் தமிழகத்துக்கு வரவே வராதா? தமிழ்நாட்டின் முன் இருக்கும் வாய்ப்புகள்  என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு கர்நாடகா இடையே நிலவும் பிரச்னையை உச்சநீதிமன்றமே தீர்த்து வைக்க முடியும் என ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் கூறுகிறார்.

கடந்த 1983ஆம் ஆண்டு, காவிரி நீர் தாவாவை தீர்ப்பதற்காக தீர்ப்பாயம் அமைக்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றம் 1990ஆம் ஆண்டு காவிரி நீர் தாவா தீர்ப்பாயத்தை அமைத்தது. 2007ஆம் ஆண்டு தீர்ப்பாயம் இறுதி உத்தரவைப் பிறப்பித்தது.

இந்த உத்தரவு காவிரி நதி நீரில் 41.92% தமிழ்நாட்டிற்கும், 33.24% கர்நாடகத்திற்கும், 7.12% கேரளாவிற்கும், 4.72% புதுச்சேரிக்கும் ஒதுக்கியது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களும் தீர்ப்பாயத்தின் உத்தரவை உச்சநீதிமன்றத்தில் எதிர்த்தன. 2018ஆம் ஆண்டு, உச்சநீதிமன்றம் தீர்ப்பாயத்தின் உத்தரவை சற்று மாற்றியமைத்தது, ஆனால் நான்கு மாநிலங்களுக்கும் இடையே நீர் ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியது.

1924இல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் தமிழ்நாட்டுக்கு 450 டி.எம்.சி நீர் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தாலும், 2007இல் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி192 டி.எம்.சி வழங்க வேண்டும் என்றே உத்தரவிடப்பட்டுள்ளது. பின்னர் 2018இல் உச்சநீதிமன்றம் சென்றபோது இந்த நீரின் அளவு 177.25 டி.எம்.சி ஆக மேலும் குறைந்தது.

 

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆகியவை இருந்தாலும் தற்போது காவிரி விவகாரத்தில் புதிய கோணத்தில் பிரச்னை தலை தூக்குவதாகக் கூறுகிறார் ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன்.

“நடைமுறையில் காவிரியில் ஓடும் உபரிநீரை வழங்கும் வடிகாலாகவே தமிழ்நாட்டை கர்நாடகா பார்க்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும் கூட தமிழ்நாட்டிற்கு தண்ணீரை திறக்க மறுப்பதுடன், காவிரி நீர் பற்றாக்குறையாக உள்ளது என்ற வாதத்தை கர்நாடகம் வைத்து வருகிறது.

எனவே, காவிரி விவகாரத்தில் அடுத்ததாக தற்போது எவ்வளவு நீர் இருந்தால் பற்றாக்குறை எனப்படும் என்ற வரையறை உருவாக்க வேண்டியுள்ளது. அதற்காக மீண்டும் நீதிமன்றத்தை நாடினாலும் தீர்வு கிடைக்குமா என்பதற்குப் பதில் இல்லை.

வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நதி நீரை சுமூகமாக பங்கீடு செய்துகொள்ள இந்தியாவால் முடிகிறது. அதில் விதிகள் மீறப்பட்டால் அது சர்வதேச பிரச்னையாகும், ஐக்கிய நாடுகள் வரை செல்ல முடியும். ஆனால், இந்தியாவின் அங்கங்களாக அமைந்த இரு மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பிரச்னை வரும்போது. அதற்கு நீதிமன்றம் செல்வதுதான் ஒரே வழி,” என்கிறார் அரி பரந்தாமன்.

இழப்பீட்டை அதிகரிக்க வேண்டும்

காவிரி நீர் தமிழகத்துக்கு வரவே வராதா? தமிழ்நாட்டின் முன் இருக்கும் வாய்ப்புகள்  என்ன?

பட மூலாதாரம்,PR PANDIAN

படக்குறிப்பு,

குறுவை பயிர்களைக் காப்பீடு செய்யாமல் தமிழக அரசு தவறி விட்டது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் பி ஆர் பாண்டியன் கூறுகிறார்.

குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இழப்பீட்டை உயர்த்தி வழங்குவது அவசியம் என வலியுறுத்துகிறார் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி ஆர் பாண்டியன்.

“இப்போது தமிழ்நாடு அரசு தருவதாகச் சொல்வது மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை துறை வழங்கும் இடுபொருள் இழப்பீடு தொகை. மத்திய அரசு கொடுக்கக்கூடிய 13,500 ரூபாயுடன் சேர்த்து மாநில அரசு 6500 ரூபாயென மொத்தம் 20 ஆயிரம் ரூபாயை முந்தைய அதிமுக அரசு வழங்கியது. அதையே திமுக அரசும் செய்ய வேண்டும்,” என்கிறார்.

மேலும் இந்த பிரச்னையில் காப்பீட்டுக்கும் முக்கியமான பங்கு உள்ளது. தமிழ்நாடு அரசாங்கம் காப்பீடு செய்ய மறுத்ததன் காரணமாக விவசாயிகளுக்கு இழப்பீடு குறைந்துள்ளது என்கிறார் பி ஆர் பாண்டியன்.

“குறுவை பயிர்களைக் காப்பீடு செய்ய மத்திய அரசு கேட்டபோது, அதைக் கைவிட்டுவிட்டதாக தமிழ்நாடு அரசு கூறிவிட்டது. காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்தினால் ஒரு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வரை இழப்பீடு பெற முடியும்.

பாதிக்கப்பட்ட பயிர்களும் குறைவாகக் கணக்கிடப்படுகின்றன. உதாரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 610 ஏக்கர் பாதிப்புக்குள்ளானதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், இங்கு 1.75 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு சுமார் 60 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன,” என்றார்.

ஒவ்வோர் ஆண்டும் காவிரியிலிருந்து நீர் கிடைப்பது சவாலான காரியமாகவே உள்ள நிலையில், இழப்பீட்டை உயர்த்துவது மிக முக்கியமான பிரச்னையே. கடந்த 2017ஆம் ஆண்டு மேட்டூர் அணையிலும் நீர் இல்லை, பருவமழையும் பொய்த்து விட்டது என்ற நெருக்கடி உருவானபோது 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். காலநிலை மாற்றத்தால் பருவமழை கொட்டித் தீர்ப்பதும், பொய்த்துப் போவதும் அடிக்கடி நிகழ ஆரம்பித்துள்ளன.

காவிரி நீர் தமிழகத்துக்கு வரவே வராதா? தமிழ்நாட்டின் முன் இருக்கும் வாய்ப்புகள்  என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சாகுபடி செய்தவற்றில் டெல்டா மாவட்டங்களில் 40% பயிர்கள் மட்டுமே அறுவடை செய்யப்பட்டுள்ளன.

மாற்றுப் பயிர்களுக்கு மாறுவதா?

விவசாயிகள் மாற்றுப் பயிர்களை நோக்கி நகர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் அது எளிதானதல்ல எனவும் சொல்கிறார் திருவாரூரை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியரும் விவசாயியுமான தங்க ஜெயராமன்.

“தானிய வகைகளைவிட நெற்பயிர்களுக்கு அதிக நீர் தேவை. எனினும் மாற்றுப் பயிர்களை விளைவிக்க தண்ணீர் மட்டுமே போதுமானது இல்லை. டெல்டா மாவட்டங்களில் உள்ள மண் நெல் பயிர்கள் வளர்க்கவே உகந்ததாக இருக்கின்றன.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எனப்படும் தஞ்சாவூரில் களிமண் போன்ற மண் மற்றும் சில இடங்களில் வண்டல் மண் இருக்கும். இவற்றில் நெற்பயிர்களையே விளைவிக்க முடியும்.

உளுந்து, பாசி பயிறு போன்ற தானியங்களும், பருத்தியும் 60-70 நாட்களில் விளையும் மாற்றுப் பயிர்களாக கோடைக் காலத்தில் மட்டும் பயிரிடப்படுகின்றன. இவை பெரும்பாலும் மேற்கு தஞ்சாவூர் பகுதிகளிலேயே பயிரிடப்படுகின்றன. ஜனவரி மாத பனிக்காலத்தின் போது பயிரிடப்படும் இந்தப் பயிர்களுக்கு தண்ணீர் எதிரி.

காவிரி நீர் தமிழகத்துக்கு வரவே வராதா? தமிழ்நாட்டின் முன் இருக்கும் வாய்ப்புகள்  என்ன?

பட மூலாதாரம்,JAYARAMAN

படக்குறிப்பு,

மாற்றுப் பயிர்களுக்கு மாறுவது விவசாயிகளுக்கு எளிதல்ல என்கிறார் பேராசிரியர் தங்க ஜெயராமன்.

ஆனால் இப்போது இவை குறைந்து வருகிறது. நெற்பயிர்கள் அறுவடை செய்வதற்கு, சில நாட்கள் முன்பாக மார்கழி மாதத்தில், இந்த பயிர்கள் தெளிக்கப்படும்.

அதோடு, நெற்பயிர்களை அறுவடை செய்ய, தற்போது பெரிய இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே அதில் மாற்றுப் பயிர்கள் நாசமாகிவிடுகின்றன. மேலும் இவை இரண்டு மணிநேரம் தொடர்ந்து மழை பெய்தால்கூட தாங்காது, அழுகி விடும்.

திருவாரூர், தஞ்சாவூரில் நிலத்தடி நீர் அதிகமுள்ள பகுதிகளில் கோடைக் காலத்தில் பருத்தி பயிரிடப்படுகிறது. புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் வேர்கடலை பயிர் செய்யப்படுகிறது,” என்கிறார்.

காவிரி பிரச்னை பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வரும் நிலையில் மேற்சொன்ன அனைத்து தீர்வுகளையுமே சரியான விகிதத்தில் பரிசீலிக்க வேண்டும் என்றே நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c84kedryn00o

  • கருத்துக்கள உறவுகள்

காவிரி தீர்மானம்: கூட்டணியில் இருப்பதால் காங்கிரசை வற்புறுத்த திமுக தயங்குகிறதா?

காவிரி தொடர்பான தீர்மானம்: தேசிய அளவிலான கூட்டணிகளில் இருப்பது மாநிலக் கட்சிகளுக்கு பாதிப்பா?
படக்குறிப்பு,

தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

காவிரி நதி நீர் தொடர்பான தீர்மானம் மீதான விவாதம், கடுமையான வாதங்களுக்கு நடுவில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது தொடர்பான விவாதத்தின்போது காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருப்பது குறித்து பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் கேள்வி எழுப்பின.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவிரி நதி நீர் தொடர்பான தனித் தீர்மானம் ஒன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் கொண்டுவரப்பட்டு எதிர்க்கட்சிகளின் வாதப் பிரதிவாதங்களுக்கு நடுவில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் இன்று துவங்கியது. முதலில் முக்கியப் பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்குப் பிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தனித் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார். அந்தத் தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு முன்பாக, காவிரி நீர் விவகாரத்தின் பின்னணி, அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார்.

இதற்குப் பிறகு முதலமைச்சர் தனித் தீர்மானத்தை வாசித்தார். "தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்துகிறோம்" என அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

 
காவிரி தொடர்பான தீர்மானம்: தேசிய அளவிலான கூட்டணிகளில் இருப்பது மாநிலக் கட்சிகளுக்கு பாதிப்பா?

பட மூலாதாரம்,FACEBOOK

இந்தத் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க அழைக்கப்பட்டனர். அப்போது குறுக்கிட்டுப் பேசிய அவை முன்னவரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், காவிரி விவகாரத்தைப் பொறுத்தவரை கர்நாடக மாநிலத்தில் அரசியல் கட்சிகள் ஒற்றுமையுடன் இருப்பதைப் போல, தமிழ்நாட்டிலும் இந்த விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பிறகு, ஒவ்வொரு உறுப்பினராகப் பேசிவந்தனர். இந்த விவகாரத்தில் பேசிய பா.ஜ.க. உறுப்பினர் வானதி ஸ்ரீநிவாசன், பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் கர்நாடகத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சியைப் பற்றி தீர்மானத்தில் ஏதும் சொல்லாமல் மத்திய அரசை மட்டும் இந்தத் தீர்மானம் வலியுறுத்துவதாக குற்றம்சாட்டினார். மேலும் விவசாயிகளுக்கு சரியான இழப்பீடு வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதற்குப் பிறகு வானதி ஸ்ரீநிவாசன் பேசிய வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார். வானதி ஸ்ரீநிவாசன் பேசிய சில விஷயங்களுக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாங்கள் இருவர் பேசியதையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பிறகும் வானதி ஸ்ரீநிவாசன் நதிகளை தேசியமயமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பேச முயன்றார். ஆனால், இந்த தீர்மானத்தை அவர் ஆதரிக்கிறாரா, இல்லையா என்று திரும்பத்திரும்பக் கேட்டார் சபாநாயகர் அப்பாவு. அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், நதிகளைத் தேசியமயமாக்குவதை தாங்கள் ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வானதி, இந்தத் தீர்மானம் முழுமையாக இல்லை என்றார். இதையடுத்து "வானதி ஸ்ரீநிவாசன் காவிரி நீர் பெறுவதை விரும்பவில்லை" என்று கூறினார் சபாநாயகர். இதையடுத்து பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

காவிரி தொடர்பான தீர்மானம்: தேசிய அளவிலான கூட்டணிகளில் இருப்பது மாநிலக் கட்சிகளுக்கு பாதிப்பா?

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,

காவிரி நீர் தொடர்பான தீர்மானத்தின் போது பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

தீர்மானத்தை திருத்த எடப்பாடி கே. பழனிச்சாமி கோரிக்கை

தொடர்ந்து பா.ம.க., காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்கள் பேசிய பிறகு எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி பேசினார். காவிரி நீர் தொடர்பாக அ.தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கைகளைப் பட்டியலிட்ட எடப்பாடி கே. பழனிச்சாமி, "காவிரி நீர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவரியில் தண்ணீரைத் திறக்க வேண்டும் அதை வலியுறுத்த வேண்டும்" என்பதையும் தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என்று சொன்னார். இதற்குப் பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, "அதுதானே தீர்மானமே" என்று கேட்டார்.

இதற்குப் பதிலளித்த எடப்பாடி கே. பழனிசாமி, "தண்ணீரைத் திறக்க வேண்டும் என கர்நாடக அரசையும் வலியுறுத்த வேண்டும் என்ற வரிகளைச் சேர்க்க வேண்டும்" என்றார். இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தீர்மானத்தை மீண்டும் வாசித்து, தான் தெளிவாகவே தீர்மானத்தை வாசித்திருப்பதாகச் சொன்னார்.

 

இதற்குப் பிறகு பேசிய எடப்பாடி கே. பழனிசாமி, இந்த ஆண்டு அணையில் நீர் குறைவாக இருப்பது குறித்து தான் முன்கூட்டியே எச்சரித்ததாகவும் அதையும் மீறி நீர் திறக்கப்பட்டதால், விவசாயிகள் அதனை நம்பி பயிரிட்டு பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். மேலும் கர்நாடக முதல்வருடன் பேசியிருக்கலாம் என்றும் தெரிவித்தார் எடப்பாடி கே. பழனிச்சாமி.

இதற்குப் பதிலளித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், "இதைத்தான் கர்நாடக அரசு எதிர்பார்க்கிறது. பேசினால் என்ன ஆகும் என்பதும் உங்களுக்குத் தெரியும். பல ஆண்டுகாலம் பேசிப் பார்த்து முடியாத காரணத்தால் நீதிமன்றம் சென்றோம். அவர்களோடு பேசுவது தற்கொலை செய்வதற்குச் சமம். நம் உரிமையை அடகு வைப்பதற்குச் சமம்" என்றார். கர்நாடக அரசோடு பேசவது தற்கொலைக்குச் சமம் என்றால், அங்கு ஆளும் அரசோடு கூட்டணி வைத்திருப்பது ஏன் எனக் கேள்வியெழுப்பினார் எடப்பாடி கே. பழனிசாமி.

காவிரி தொடர்பான தீர்மானம்: தேசிய அளவிலான கூட்டணிகளில் இருப்பது மாநிலக் கட்சிகளுக்கு பாதிப்பா?

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,

காவிரி நீர் தொடர்பான தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது.

 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் VS எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி

பா.ஜ.கவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டுமென்பது மட்டுமே அந்தக் கூட்டணியின் நோக்கம் என்றும் கூட்டணியில் இதுபோன்ற விஷயங்களையெல்லாம் பேச முடியாது என்றும் குறிப்பிட்டார் அமைச்சர் துரைமுருகன். தொடர்ந்து பேசிய எடப்பாடி கே. பழனிசாமி, "காவிரி நீர் விவகாரம் தொடர்பாக 22 நாட்கள் நாடாளுமன்றம் எங்களால் முடக்கப்பட்டது. நாங்கள் போராடினோம். நீங்கள் ஒரு நாள்கூட போராடவில்லையே" என்று கேள்வியெழுப்பினார். அப்போது குறுக்கிட்ட சட்ட அமைச்சர் ரகுபதி, "அது பா.ஜ.கவை காப்பாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை" என்றார். "நீங்கள் போராடியதை நாங்கள் மறுக்கவில்லை" என்றார் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்.

அந்தத் தருணத்தில் குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "காவிரி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசவில்லை என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். நாங்கள் பேசியதை நிரூபிக்கவா? இல்லாததையெல்லாம் பேசக்கூடாது. ஆதாரமில்லாதவற்றைப் பேசக்கூடாது. இதுதான் மரபா?" என்று கேள்வியெழுப்பினார்.

தொடர்ந்து பேசிய துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவருக்கு இந்தத் தகவல்கள் எல்லாம் தெரியும் என்றாலும் குழப்பத்தில் மறந்துபோயிருப்பார் என்று குறிப்பிட்டார். இதையடுத்துப் பேசிய எடப்பாடி கே. பழனிசாமி, "பேசினால் போதுமா? போராட வேண்டாமா? நாங்கள் மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தோம். அந்தத் துணிச்சல் உங்களிடத்தில் இல்லையே?" என்றார்.

அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "துணிச்சலைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. துணிச்சல் என்றால் என்ன என்பது எங்களுக்குத் தெரியும். அதைப் பற்றிச் சொல்லி அவையின் மரபை மீற வேண்டியதில்லை. பல முறை நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறோம். நாடாளுமன்றத்தை முடக்கியிருக்கிறோம். இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அமைதியாக இருக்கிறோம்" என்றார்.

 

இதற்குப் பிறகு, காவிரி நீர் வராததால் ஏற்படவிருக்கும் பல்வேறு பிரச்சனைகளைக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி, தீர்மானத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு பேசிய துரைமுருகன், "கா்நாடக அணைகளில் ஒரு கையளவு தண்ணீர் இருந்தாலும் அதிலும் தமிழகத்திற்குப் பங்குண்டு. உச்ச நீதிமன்றத்தை மதிக்காத போக்கு நிலவுமானால் ஒன்றிய அரசு அதைப் பார்த்துக்கொண்டிருந்தால், இது எங்கே போய் நிற்கும்?" என்று கேள்வியெழுப்பினார். மேலும், எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் இந்த விவகாரத்தில் எதுவும் நடப்பதில்லை என்றும் கூறினார்.

இதற்குப் பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் இன்றைய பேரவை நிகழ்வுகள் முடிவுக்கு வந்தன.

'இந்தியா' கூட்டணியில் தி.மு.க. பங்குவகிப்பதை வைத்து எடப்பாடி கே. பழனிச்சாமி கேள்வியெழுப்பிய விவகாரம், தேசியக் கூட்டணியில் மாநிலக் கட்சிகள் பங்கேற்பதால் ஏற்படக்கூடிய சிக்கல்களைச் சுட்டிக்காட்டுகிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம்.

 

"தேசிய கூட்டணிகளில் மாநிலக் கட்சிகள் பங்கேற்பது குறித்து மாநிலக் கட்சிகள் முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்திருக்கிறது. காங்கிரஸை தி.மு.க.வால் வற்புறுத்த முடியவில்லை. ஜெயலலிதாவாக இருந்திருந்தால் வேறு முடிவு எடுத்திருப்பார். இம்மாதிரியான தேசியக் கூட்டணிகளில் வலுவான மாநிலக் கட்சிகள் பங்கேற்பது அந்தக் கட்சிகளுக்கும் மாநிலத்திற்கும் இழப்பாகத்தான் முடிகிறது. அந்த வகையில் பார்க்கும்போது ஒதிஷாவில் பிஜு ஜனதா தளமும் தெலங்கானாவில் பிஆர்எஸ்சும் எடுத்த முடிவுகள் சரிதான் எனத் தோன்றுகிறது" என்கிறார் ஷ்யாம்.

ஆனால், இன்றைய விவாதத்தில் பா.ஜ.க. வைத்த கருத்துகள் சரியானவையல்ல என்கிறார் அவர். "பா.ஜ.கவும் தமிழ்நாட்டில் ஒரு நிலைப்பாடும் கர்நாடகத்தில் ஒரு நிலைப்பாடும்தான் எடுக்கிறார்கள். காங்கிரசை மட்டும் எப்படி அப்படிச் சொல்ல முடியும்?" என்கிறார் ஷ்யாம்.

காவிரி தொடர்பான இந்தத் தீர்மானம் மக்களின் உணர்வுகளை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக் காட்டியிருக்கிறதே தவிர, இதனால் எதுவும் நடக்கப்போவதில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்தக் கூட்டத் தொடர் புதன் கிழமையுடன் நிறைவுக்கு வரும் என்று அவையின் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கூட்டத் தொடர் இன்னும் இரு நாட்கள் இருக்கும் நிலையில், இஸ்லாமியக் கைதிகள் விடுதலை உட்பல பல விவகாரங்களை எதிர்க்கட்சியான அ.தி.மு.க. எழுப்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/cn48m792dp6o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.