Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

”புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும்” - அலி சப்ரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

”புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும்” - அலி சப்ரி

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில், சர்வதேச அளவுகோல்களின்படி தயாரிக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

இந்நாட்டு மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் சமநிலையான சட்டமொன்றைக் கொண்டுவரும் நோக்கில் தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் திருத்தப்பட்டதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி,

“சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அளவுகோல்களின்படியும், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலும், நாட்டு மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் சமநிலையான சட்டத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன் தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடர்பில் நீதியமைச்சரின் தலைமையில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, இந்த புதிய சட்டம் சாதகமான மட்டத்தில் திருத்தப்பட்டுள்ளது. நமது நாட்டில் சட்டங்களைத் திருத்தவும், புதிய சட்டங்களை உருவாக்கவும் ஒரு பொறிமுறை உள்ளது. எனவே அந்த முறைகளுக்கு ஏற்ப இந்த புதிய சட்டம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பிறகு, இந்த சட்டம் குறித்த புரிதலை நாட்டு மக்கள் அனைவரும் பெற முடியும்.

இதன்படி, பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற இந்த புதிய சட்டத்தை, இந்த வாரத்திலோ அல்லது அடுத்த வாரத்திலோ விரைவாக வர்த்தமானியில் வெளியிட எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன்படி, இந்நாட்டு மக்களுக்கு இந்த சட்டம் தொடர்பில் கருத்துவேறுபாடுகள் இருப்பின், ஒரு வாரத்திற்குள் அதை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்திற்கு செல்லும் வாய்ப்பும் உள்ளது.

உயர் நீதிமன்றத்திற்கு தனியான, விசாரணை நீதிமன்ற அதிகாரம் உள்ளது. அதன் பிரகாரம் உயர் நீதிமன்றம் வழங்கக்கூடிய அறிவுறுத்தல்களின்படி, மேலும் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது. இந்த புதிய சட்டம் ஏற்கனவே உள்ள சட்டத்துடன் ஒப்பிடும்போது மிகவும் முற்போக்கான புதிய விடயங்களுடனேயே திருத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முதன்முதலில் 1979ஆம் ஆண்டு ஆறு மாத காலத்திற்காக கொண்டு வரப்பட்டது. ஆனால் தொடர்ந்தும் இந்நாட்டில் பயங்கரவாதச் செயற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்றதன் காரணமாக, இன்றுவரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்பது தொடர்ந்தும் அமுலில் உள்ள ஒரு சட்டமாக இருக்கின்றது. ஆனாலும் 2009 இல் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் இந்த சட்டம் தேவையா? என பல்வேறு விமர்சனங்கள் இது தொடர்பில் முன்வைக்கப்பட்டு வந்ததன் காரணமாக, 2017 மற்றும் 2018 இல், இந்த சட்டத்திற்கு திருத்தங்கள கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஆனால் துரதிஷ்டவசமாக 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் காரணமாக அந்த முயற்சிகள் தடைப்பட்டதுடன், மீண்டும் இந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை வலுவாக அமுல்படுத்த வேண்டும் என்று கருத்துகள் மேலோங்கின.

பின்னர், கடந்த கடந்த காலங்களில் இந்த விடயம் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல்கள் நடைபெற்ற பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தளர்த்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2021 செப்டெம்பர் மாதத்தில், பொலிஸ் மா அதிபர், பயங்கரவாத செயல்களில் நேரடியாக ஈடுபட்டவர்களைத் தவிர வேறு யாரையும் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யக் கூடாது என்று பொலிஸ் நிலையங்களுக்கு ஒரு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தினார்.

இதன்படி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை விகிதாசார அடிப்படையில் குறைந்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், தடுப்புக் காவலில் வைத்திருக்கும் காலத்திற்கு எந்த எல்லையும் இருக்கவும் இல்லை.

ஆனால், இந்த புதிய சட்டத்தின் மூலம் 60 நாட்கள் மாத்திரமே தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடியும். மேலும், அவர்களை சட்ட பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் மாத்திரமே தடுத்து வைக்கவும் முடியும். இந்தப் புதிய சட்டத்திற்கு ஏற்ப ஒருவரைக் கைது செய்த பிறகு, 48 மணி நேரத்திற்குள் நீதிபதியின் முன்னிலையில் ஆஜர்படுத்தி இது தொடர்பில் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், ஒப்புதல் வாக்குமூலத்தின் (confession) அடிப்படையில் யாருக்கும் வழக்குத் தொடர முடியாது. அவ்வாறு வழக்குத் தொடர வேண்டுமெனில், அது பொதுவான சட்டத்தின்படி நீதிபதியின் முன் செய்யப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் படியே அமைய வேண்டும்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டதன் பின்னர், சட்டத்தரணிகள், சட்டத்தரணிகள் சங்கம், சர்வதேச சமூகம், சிவில் அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் என பல்வேறுபட்டவர்கள் முன்வைத்த கருத்துகள் குறித்தும் நாம் அவதானம் செலுத்தினோம்.

அதன்படி, புதிய பரிந்துரைகளுடன் திருத்தப்பட்ட சட்டம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளது.” என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

 


http://www.samakalam.com/புதிய-பயங்கரவாத-எதிர்ப்/

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் -இணையவெளி பாதுகாப்பு சட்ட மூலமும் ஜனநாயகத்திற்கு ஆபத்தானவை – சட்டத்தரணிகள் அமைப்பு கருத்து

Published By: RAJEEBAN

23 SEP, 2023 | 12:19 PM
image
 

இலங்கை அரசாங்கம் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தையும் இணையவெளி பாதுகாப்பு சட்டங்களையும் விலக்கிக்கொள்ளவேண்டும் என சட்டத்தரணிகளின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் ஆகியவற்றை சட்டத்தரணிகள் அமைப்பு கண்டித்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து வெளியிடப்பட்ட பாரதூரமான அடிப்படை கரிசனைகள் குறித்து அரசாங்கம் பதிலளிக்கவில்லை என தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் அமைப்பு இந்த சட்டமூலங்களை தெளிவுபடுத்துவதற்கு நியாயப்படுத்துவதற்கான வெளிப்படையான பொறுப்புக்கூறும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை வலுவான மக்கள் கலந்தாய்வை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இரண்டு சட்டமூலங்களிலும் பயங்கரவாதம் -தவறான அறிக்கை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள  வரைவிலக்கணங்கள் - குற்றங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் மிகவும் பரந்துபட்டவையாகவும் தெளிவற்றவையாகவும் காணப்படுகின்றன என தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கருத்து வேறுபாடுகளை நசுக்குவதற்கும் சிவில் உரிமைகளை கட்டுப்படுத்துவதற்குமான ஆற்றலை கொண்ட இந்த ஆபத்தான சட்டங்களை இயற்றுவதற்கான முயற்சிகள் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு நாட்டின் ஜனநாயகம் குறைந்தமட்டத்தில் உள்ளவேளை அச்சத்தை ஏற்படுத்தலாம் எனவும் சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆழமான பொருளாதார நெருக்கடி அதன் காரணமாக தங்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் காரணமாக இந்த நாட்டின் மக்கள் தங்களது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் அரசாங்க அதிகாரிகளிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் பொதுமக்களின் துயரங்களை செவிமடுப்பதற்கு பொதுமக்கள் அவர்களின் குழுக்கள் நலிந்துபட்டவர்களுடன் ஈடுபாட்டை பேணுவதற்கு பரந்துபட்ட தளமொன்று உருவாக்கப்படவேண்டும் என ஜனநாயகம் இந்த தருணத்தில் வேண்டுகோள் விடுத்து நிற்கின்றது எனவும் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நியாயபூர்வான உடன்பட மறுத்தல் விமர்சனம் -எதிர்ப்பு மற்றும் இலங்கையில் ஆட்சி முறை தொடர்பான பல்வேறு எண்ணங்கள் குறித்து அணிதிரளுதல்  ஆகியவற்றிற்கு எதிரான சகிப்புதன்மையை இரு சட்டமூலங்களும் வெளிப்படுத்தியுள்ளன இது ஜனநாயகம் -சிவில் சுதந்திரம் -நிறைவேற்று அதிகாரம் கைப்பற்றுவதிலிருந்து பொதுமக்களின் இறைமையை பாதுகாப்பதில் நீதித்துறையின் பங்களிப்பு ஆகியவற்றிற்கு விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தல் எனவும் சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

உண்மையில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும்  இணையவெளி பாதுகாப்பு  சட்டமூலங்கள் இலங்கையின் குடிமக்களின் பரந்த அளவிலான சாதாரண நடவடிக்கைகளின் மீது அதிகப்படியான நிறைவேற்று அதிகாரத்தை நிறுவனமயமாக்கும் முயற்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன”எனவும் சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/165261

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடுப்புச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் ; மீண்டும் தமிழ்த் தலைவர்கள் கூட்டாக அறிவிப்பு

Published By: DIGITAL DESK 3

23 SEP, 2023 | 07:40 PM
image
 

(ஆர்.ராம்)

அமுலில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதோடு சர்வதேச பயங்கரவாதத்தினை காரணம் காண்பித்து கொண்டுவரப்படும் எந்தவொரு மாற்றுச் சட்டங்களையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தமிழ்த் தலைவர்கள் மீண்டும் கூட்டாக அறிவித்துள்ளனர்.

அத்துடன், இறுதியாக வெளியிடப்பட்ட உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் நிறைவேற்று அதிகாரத்தினை பலப்படுத்தும் வகையிலும் கடுமையான அடக்குமுறைகளை பிரயோகப்படுத்தும் வகையிலும் உள்ளடக்கம் காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைவாக, கடந்த 15 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வெளியிடப்பட்டுள்ள நிலையிலேயே தமிழ்த் தலைவர்களான, இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தருமலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப்.தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,

சுமந்திரன் 

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில், உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் இரண்டாவது தடவையாக வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் பெரிய மாற்றங்கள் எவற்றையும் காணவில்லை. குறிப்பாக, தடுத்துவைப்பதற்கான அனுமதியை வழங்கும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சரிடமிருந்து பாதுகாப்புச் செயலாளருக்கு சென்றுள்ளது. பொலிஸ் நிலையத்தில் மூன்று மாதங்கள் தடுத்து வைக்கும் நிலைமையானது இரண்டாக்கப்பட்டுள்ளது. நீதிபதியின் அனுமதியுடன் 18 மாதங்கள் தடுத்து வைக்கப்படும் நிலைமையானது 12ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

ஆனால், அதன் உள்ளடக்கத்தில் மாற்றங்கள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை. குறிப்பாக, பயங்கரவாதம் என்பது தொடர்பான வரைவிலக்கணம் பரந்து பட்டதாகவே நீடிக்கின்றது. நிறைவேற்று அதிகாரம் நீக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் காணப்படுகையில் உத்தேச சட்டமூலத்தில் நிறைவேற்று அதிகாரத்துறைக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்மூலம், ஜனாதிபதி, தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் செயற்பாடுகளை நேரடியாக கட்டுப்படுத்த முடியும். அத்துடன் தடை செய்வதற்கும் முடியும். 

அத்தோடு, பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்பட்ட மீளாய்வுக்குழு என்ற விடயம் நீக்கப்பட்டுள்ளமையும் பின்னடைவாகும். நீதிவான் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவரில்லை என விடுவித்தாலும் விளக்கமறியலில் வைக்கும் நிலைமைகள் காணப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தின் அடிப்படைத் தத்துவமும் மீறப்படுவதாகவே உத்தேச சட்டமூலம் உள்ளது.

எது, எவ்வாறாக இருந்தாலும் எம்மைப்பொறுத்தவரையில் புதிதாக ஒரு சட்டம் தேவையில்லை என்பதோடு, பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் எமது முடிவில் மாற்றமில்லை என்றார்.

சித்தார்த்தன் 

பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கூறுகையில், உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அல்ல பயங்கரவாத தடை சம்பந்தமாக எந்தவொரு சட்டமும் தற்போதைய சூழலில் நாட்டுக்குத் தேவையில்லை. 

கடந்த காலத்தில் தற்போது அமுல்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தினால் தமிழ் மக்கள் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவத்தினர் பகிரங்கமானதொரு விடயமாகும் என்பதோடு, அது ஒரு இனத்தினை மையப்படுத்தி பிரயோக ரீதியாக நடைமுறைப்படுத்தப்படுத்தப்பட்டதும் முக்கியமான விடயமாகின்றது. 

நாட்டில் காணப்படுகின்ற குற்றவியல் சட்டங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் ஊடாக பயங்கரவாதத்தினை கட்டுப்படுத்துவதற்கான இயலுமைகள் காணப்படுகையில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

அவ்வாறிருக்கையில் தற்போது சர்வதேசத்தினை திருப்திப்படுத்துவது போன்று ஒப்பனைக்காக திருத்தங்களை மேற்கொள்வது போன்றதொரு செயற்பாடு காண்பிக்கப்பட்டு உத்தேச சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார். 

செல்வம் அடைக்கலநாதன்

செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.கூறுகையில், பயங்கரவாதத் சட்டத்தினால் எமது இளைஞர், யுவதிகள் உட்பட பலதரப்பட்டவர்களும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். 

இந்நிலையில், போர் நிறைவுக்கு வந்து 14 ஆண்டுகளாகின்ற நிலையில் பயங்கரவாத தடைச்சட்டம் அவசியமற்றதொன்றாக காணப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபை உட்பட, சர்வதேச நாடுகள் அனைத்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவது குறித்து தொடர்ச்சியான வலியுறுத்தல்களைச் செய்து வருகின்றபோதும் இலங்கை அரசாங்கம் அதனை முன்னெடுக்கவில்லை.

தொடர்ச்சியாக புதிய பெயர்களுடன் புதிய வடிவில் பழைய உள்ளடக்கங்களைக் கொண்ட சட்டமூலத்தினையே தயாரித்துக்கொண்டு காலத்தினைக் கடத்தும் செயற்பாட்டையே முன்னெடுத்து வருகின்றது. ஆகவே, தொடர்ந்தும் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதைத் தவிர்த்து முழுமையாக பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் 

சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகையில்,

தற்காலிக ஏற்பாடுகளாக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் தற்போது மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீடித்து வருகின்றது. ஆயுதம் தாங்கிய போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வினை அடைவதற்கு தமிழ்த் தரப்புக்கள் அனைத்தும் தயார் என்ற அறிவிப்பு விடுக்கப்பட்டதன் பின்னரும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருப்பதும், அதனைப் பிரயோகித்து சாதாரண மக்களுக்கு காணப்படுகின்ற அடிப்படை உரிமைகளை மீறுவதும் துர்ப்பாக்கிய நிலையாகும். 

எம்மைப்பொறுத்தவரையில் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் பயங்கரவாத தடைச்சட்டமும் முழுமையாக நீக்கப்பட வேண்டும். மாறாக அந்தச் சட்டத்தினை அமுலில் வைத்துக்கொண்டு ஆயுதப்போராட்டத்திற்கு அடிப்படையான காரணங்களை மீண்டும் ஏற்படுத்துவதற்கு முனைவது பொருத்தமற்ற செயற்பாடாகும். 

இந்நிலையில் தான் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக மூன்றாவது தடவையாக புதியதொரு மாற்றுச்சட்டத்தினை கொண்டுவருவதாக அரசாங்கம் கூறுகின்றது. அதற்காக இரண்டாவது தடவையாக உத்தேச சட்டமொன்று வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அறிவித்தலின் பிரகாரம், பல்வேறு விடயங்கள் அடிப்படை உரிமைகளையும், சுதந்திரங்களையும் பறிப்பவையாகவே உள்ளன. விசேடமாக, உரிமைகளுக்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்கள், தொழிற்சங்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான இலக்கு வைக்கப்பட்ட ஏற்பாடுகள் உள்ளன.

இதனைவிடவும், நிறைவேற்று அதிகாரத்தினைக் கொண்டுள்ள ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்களை வழங்குவதோடு, அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரித்துக்களுக்கான ஏற்பாடுகளை மீறிச் செயற்படுவதற்கான அதிகாரங்களை வழங்கும் விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆகவே, இவ்விதமான சட்டத்தினை மீண்டும் ஒருவாக்கி நடைமுறைப்படுத்துவதன் ஊடாக, இனவிடுதலைச் செயற்பாடுகளை முடக்கி அடக்குமுறையை அரசாங்கம் பிரயோகிப்பதற்கு முனைகின்றதா என்ற கேள்வி எமக்கு உள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/165272

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.