Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மருதநாயகம் என்ற யூசுஃப் கானை வீழ்த்திய நண்பனின் துரோகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மருதநாயகம் என்ற யூசுஃப் கானை வீழ்த்திய நண்பனின் துரோகம்

மருதநாயகம் என்ற யூசுஃப்கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களையும் நவாபையும் ஒரு சேர எதிர்த்து, தூக்கிலிடப்பட்ட யூசுஃப் கானின் நினைவு தினம் இன்று. சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தளபதியாகவும் ஆளுநராகவும் மாறிய யூசுஃப் கான் கொல்லப்பட்டது எப்படி?

அது 1764ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி. மாலை ஐந்து மணி. இருள் நெருங்கிக் கொண்டிருந்தது. மதுரைக் கோட்டையிலிருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் இருந்த ஆற்காடு நவாபின் முகாம் பரபரப்பாக இருந்தது. மதுரை மற்றும் திருநெல்வேலியின் ஆளுநராக இருந்த முகமது யூசுஃப் என்ற கான் பகதூர் தூக்குக் கயிற்றுக்கு முன்பாக நின்றிருந்தார்.

ஆற்காடு நவாப் முகமது அலி கான் வாலஜாவிடம் இருந்து வந்த உத்தரவைத் தொடர்ந்து, அடுத்த சில நிமிடங்களில் யூசுஃப் கான் தூக்கிலிடப்பட்டார்.

ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, ஆளுநர் பதவி வரை உயர்ந்த யூசுஃப் கான் ஏன் தூக்குக் கயிற்றை சந்திக்க நேர்ந்தது? நவாப் முகமது அலிக்கும் அவருக்கும் என்ன பிரச்னை? பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனியின் அதிகாரியான அவரை, அவர்களே கைவிட்டது ஏன்?

யூசுஃப் கானின் கதை என்பது ஒரு மகத்தான வீரன், உடனிருந்தவர்களின் துரோகத்தால் வீழ்ந்த கதை.

 

யூசுஃப் கான் என்ற மருதநாயகம்

மருதநாயகம் என்ற யூசுஃப்கான்

பட மூலாதாரம்,MILITARY REMINISCENCES BY JAMES WELSH

படக்குறிப்பு,

யூசுஃப் கான் காலத்தை ஒட்டி வரையப்பட்ட மதுரை கோட்டையின் படம்

யூசுஃப் கான் பிறந்த தேதி யாருக்கும் சரியாகத் தெரியாது. 1725ஆம் ஆண்டாக இருக்கலாம் என்கிறார்கள் சிலர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பனையூர் என்ற கிராமத்தில் வேளாளர் சமூகத்தில் பிறந்தவர் இவர்.

பெற்றோரால் அவருக்குச் சூட்டப்பட்ட பெயர் மருதநாயகம். சிறுவயதில் பெற்றோருக்கு அடங்காத பிள்ளையாகத் திரிந்தவர், எங்கேயோ ஓடிப்போய் இஸ்லாமியராக மதம் மாறினார். பெயரும் முகமது யூசுஃப் என்று மாறியது என இவரது வாழ்க்கை வரலாற்று நூலான Yusuf Khan: The Rebel Commandant புத்தகத்தில் குறிப்பிடுகிறார் எஸ்.சி. ஹில்.

இந்தப் புத்தகமும் கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ் எழுதிய Military Reminiscences: A Journal of Nearly Forty Years' Active Service East Indies, பிரெஞ்சு தளபதியான மர்ச்சந்த் எழுதிய Precis Historique Des Deux Sieges De La Ville De Madure Dans L'Inde நூல்களும் அக்கால மதுரை குறித்தும் யூசுஃப் கானின் வாழ்க்கை குறித்தும் பல தகவல்களை அளிக்கின்றன.

வீட்டைவிட்டு வெளியேறிய முகமது யூசுஃப் பாண்டிச்சேரிக்குச் சென்று, அங்கிருந்த ஐரோப்பியர்களிடம் சுமார் மூன்றரை ஆண்டுகள் பணியாற்றினார். திடீரென ஒரு நாள் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதற்குப் பிறகு பாண்டிச்சேரியில் வசிக்க அவருக்குப் பிடிக்கவில்லை. அதற்குப் பிறகு, தஞ்சாவூர் மன்னரிடமும் பிறகு நவாப் முகமது அலியிடமும் படை வீரராகப் பணியாற்றினார்.

இதற்கிடையில், இவர் மீது பிரியம் கொண்ட ஐரோப்பியரான பிரண்டன் என்பவர் இவருக்கு ஆங்கிலமும் பிரெஞ்சும் எழுதப் படிக்க கற்பித்ததாகச் சொல்லப்படுகிறது. கர்நாடகா நவாபின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளில் பேசப்பட்ட பல மொழிகளும் யூசுஃப் கானுக்கு தெரிந்திருந்தது.

சாதாரண வீரனாக நவாபிடம் சேர்ந்தவர் பிறகு தண்டல்காரர், வரி வசூலிப்பவர், நாயக், ஹவில்தார் என உயர்ந்துகொண்டே போனார். பிறகு சுபேதாராக உயர்ந்தார். இந்தக் கட்டத்தில்தான் 1748ஆம் ஆண்டு வாக்கில் இவர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனியின் படையில் இணைந்தார்.

 
மருதநாயகம் என்ற யூசுஃப்கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவரது போர் திறத்தால், 1757இல் மதுரையின் ஆளுநராக யூசுஃப்கான் நியமிக்கப்பட்டார் (ஆற்காடு நவாபால் மதுரையும் திருநெல்வேலியும் சில செலவுகளுக்காக கிழக்கிந்திய கம்பனியிடம் கொடுக்கப்பட்டிருந்தது). மதுரைக்கு வந்த யூசுஃப் நகர நிர்வாகத்தை சீர்படுத்தினார். மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டெடுத்து மீண்டும் கோவில் வசம் ஒப்படைத்தார்.

மெட்ராஸை 1758இல் முற்றுகையிட்ட பிரெஞ்சு படையை ஆங்கிலப் படைகள் வெற்றிகொண்டதில், யூசுஃப் கானுக்கு பெரும் பங்கு இருந்தது. கமாண்டண்ட் ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு மீண்டும் மதுரைக்கு அனுப்பப்பட்ட யூசுஃப் கான், ஆங்கிலேயர்களுக்கு எதிரான பாளையக்காரர்களின் கலகத்தை ஒடுக்கினார்.

மேலும், 1759இல் கிராமப் புறங்களில் இருந்த கொள்ளையர்களை ஒடுக்க, காடுகளை வெட்டி சாலைகள் அமைக்க ஆரம்பித்தார். விரைவிலேயே திருநெல்வேலியின் ஆளுநராகவும் அவர் நியமிக்கப்பட்டார். மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் சேர்த்து வருடத்திற்கு ஐந்து லட்ச ரூபாய் வாடகையாகச் செலுத்த வேண்டும் என்பது ஏற்பாடு.

கொள்ளையர்கள் ஒடுக்கப்பட்டனர். கோவில் குளங்கள் சீரமைக்கப்பட்டன. விளைச்சல் அதிகரித்ததால், பிரிட்டிஷாருக்கும் நவாபிற்கும் வருவாயும் அதிகரித்தது.

இவர் ஒரு போர்ச்சுக்கீசிய பெண்ணை திருமணம் செய்துகொண்டார். மாஸா என அழைக்கப்பட்ட அந்தப் பெண் ஒரு கிறிஸ்தவர். இவருக்கு ஒரு மகனும் பிறந்தார்.

 

நவாபிற்கும் யூசுஃப் கானுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்

மருதநாயகம் என்ற யூசுஃப்கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால், விரைவிலேயே யூசுஃப் கானின் அதீத வளர்ச்சி கம்பெனிக்கும் ஆற்காடு நவாப் முகமது அலிக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது. இனிமேல் யூசுஃப் கானிடம் வரியைச் செலுத்துவதற்குப் பதிலாக தன்னிடமே வரியைச் செலுத்த வேண்டும் என்றார் ஆற்காடு நவாப். இதை கிழக்கிந்தியக் கம்பெனியும் ஏற்றுக்கொண்டது.

வருடத்திற்கு ஏழு லட்சத்திற்கு மதுரையையும் திருநெல்வேலியையும் தன்னிடம் தரும்படி கேட்டார் யூசுஃப் கான். அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இதையடுத்து சொந்தமாகப் படையைத் திரட்ட ஆரம்பித்தார் யூசுஃப் கான். சிவகங்கைப் பகுதியில் பெருமளவு நிதியைத் திரட்டி பிரெஞ்சுக்காரரான மார்ச்சந்த் என்பவருடன் இணைந்து பீரங்கிகளை அவர் செய்து வருவதாகவும் கம்பெனிக்கு தகவல்கள் வந்தன. மதுரைக் கோட்டையில் பிரெஞ்சு கொடி பறக்க ஆரம்பித்தது.

நிலைமை கைமீறிச் செல்வதை உணர்ந்த மெட்ராஸின் கவர்னர் சாண்டர்ஸ், யூசுஃப் கான் தன்னை மெட்ராசிற்கு வந்து பார்க்க வேண்டுமென உத்தரவிட்டார். ஆனால், அதைச் செய்யாத யூசுஃப் கான் தன்னை சுதந்திர ஆட்சியாளராக அறிவித்துக்கொண்டார்.

தில்லியை ஆண்டுவந்த முகலாய சக்கரவர்த்தியான இரண்டாம் ஷா ஆலம், ஹைதராபாதின் நிஜாமான நிஜாம் அலி ஆகியோர் யூசுஃப் கானை அங்கீகரித்தார்கள். இது ஆற்காடு நவாபை இன்னும் கோபப்படுத்தியது.

ஏற்கெனவே அவரோடு பகை உணர்வில் இருந்த பாளையக்காரர்கள் பிரிட்டிஷார், நவாப் ஆகியோருடன் இணைந்துகொண்டனர். இதையடுத்து "யூசுஃப் கானை கைதுசெய்து, கண்ணில் தெரியும் முதல் மரத்தில் தூக்கிலிட" வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

அவரைக் கைதுசெய்ய மதுரைக் கோட்டை முற்றுகையிடப்பட்டது. 1763இல் மேற்கொள்ளப்பட்ட முதல் முற்றுகை தோல்வியில் முடிந்தது. அடுத்த முற்றுகையை திறம்படச் செய்ய வேண்டுமென நவாபின் படைகளும் கம்பெனியும் முடிவு செய்தன.

 

முற்றுகையிடப்பட்ட மதுரைக் கோட்டை; உள்ளே என்ன நிலவரம்?

மருதநாயகம் என்ற யூசுஃப்கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மதுரை இரண்டாவது முறையாக 1764ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் முற்றுகையிடப்பட்டது. உணவுப் பொருட்கள் உள்ளே செல்வது தடுக்கப்பட்டது. வெளியில் இருந்து யூசுஃப் கானுக்கு உதவிகள் வரும் வழிகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே போயின. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மதுரைக் கோட்டை யூசுஃப் கானின் படைகளால் தீவிரமாகப் பாதுகாக்கப்பட்டது.

ஆனால், வெளியிலிருந்து பொருட்கள் வருவது குறைந்துகொண்டே போனது. கோட்டைக்குள் இருந்த படைவீரர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக ஐரோப்பிய படை வீரர்கள் விரைவிலேயே மதுரை வீழ்ந்துவிடும் என்பதைப் புரிந்துகொண்டார்கள். இரண்டு பேர், மூன்று பேராக கோட்டையை விட்டு வெளியேற ஆரம்பித்தார்கள்.

இப்படி வெளியேறுபவர்கள் பிடிபட்டால் மரண தண்டனை வழங்கப்பட்டது. இருந்தாலும் படை வீரர்கள் தப்பிச் செல்வது நிற்கவில்லை. குதிரைகள் பட்டினியாக இருப்பதாக வீரர்கள் புகார் சொல்ல ஆரம்பித்தார்கள். கோட்டைக்குள் எல்லோருக்கும் அளிக்கப்பட்டு வந்த உணவு குறைய ஆரம்பித்தது.

சில நாட்களிலேயே குதிரைகளை உணவாக உண்ண ஆரம்பித்தார்கள். யூசுஃப் கான் மனமுடைந்து போக ஆரம்பித்தார். அவர் உதவிக்கு வரும் என எதிர்பார்த்த படையினர் யாரும் வரவில்லை. கோட்டைக்குள் கெட்டுப் போன உணவை உண்டு பலர் மரணமடைய ஆரம்பித்தார்கள்.

இறந்தவர்களின் சடலங்கள் மதுரை நகரில் ஆங்காங்கே கிடந்தன. வீடுகள் இடிந்து கிடந்தன. நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.

 
மருதநாயகம் என்ற யூசுஃப்கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நிலைமை மிகவும் மோசமடைந்த நிலையில், செப்டம்பர் 14ஆம் தேதி யூசுஃப் கான் சார்பில் ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டது. தனது குடும்பத்தினர், நெருக்கமான படையினர், சில துப்பாக்கிகளுடன் திண்டுக்கல்லுக்கு செல்ல அனுமதித்தால் அவர் சரணடைவார் என்று கூறப்பட்டது. முற்றுகைக்குத் தலைமை வகித்த தளபதியான டேவிட் கேம்பல் அதை ஏற்கவில்லை. எந்த நிபந்தனையும் இல்லாமல் சரணடைய வேண்டுமெனச் சொன்னார்.

யூசுஃப் கானால் இதுவரை ஒரு கோடி ரூபாய் வரை செலவழிந்திருப்பதாகச் சொன்ன ஆற்காடு நவாபான முகமது அலி கான் வாலஜா, அவரை பாதுகாப்பாகச் செல்ல அனுமதிக்கக்கூடாது என்றார். இதையடுத்து யூசுஃப் கானின் நிபந்தனைகள் செப்டம்பர் 24ஆம் தேதி முழுமையாக மறுக்கப்பட்டன. இந்தப் பேச்சுவார்த்தைகளை கேம்பலுடன் நடத்தியது யூசுஃப் கானுக்கு நெருக்கமான பிரெஞ்சுக்காரரான மார்ச்சந்த்.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், யூசுஃப் கான் கோட்டையிலிருந்து தப்பிச் செல்லலாம் என்பதால், சுற்றுப்புறங்களில் ரோந்துப் பணிகள் தீவிரமடைந்தன. கோட்டைக்குள் நிலைமை மோசமாகிக்கொண்டே வந்தது. கோட்டைக்குள் இருந்த நூற்றுக்கணக்கான ஏழைகளையும் நெசவாளர்களையும் வெளியில் அனுப்பினார் யூசுஃப் கான்.

அவரது மனநிலையும் மோசமடைந்தது. திடீர் திடீரென கோபமடைந்தார். மார்ச்சந்திற்கும் அவருக்கும் வாக்குவாதம் நடந்துகொண்டே இருந்தது. இப்படியான ஒரு வாக்குவாதத்தின்போது கையில் இருந்த சவுக்கால் மார்ச்சந்தை அடித்துவிட்டார் யூசுஃப் கான்.

 

மார்ச்சந்தும் திவானும் சேர்ந்து செய்த துரோகம்

மருதநாயகம் என்ற யூசுஃப்கான்

பட மூலாதாரம்,YUSUF KHAN: THE REBEL COMMANDANT' BY S C HILL

படக்குறிப்பு,

யூசுஃப் கானை பிடிக்க இரண்டாவது முறையாக நடந்த முற்றுகையின் வரைபடம்.

இது மார்ச்சந்தை ஆத்திரப்படுத்தியது. பழிவாங்க தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார். விரைவிலேயே யூசுஃப் கானை பிடித்து நவாபிடம் கொடுக்க திவான் ஸ்ரீநிவாச ராவ், யூசுஃப் கானின் மருத்துவர் பால சாஹிப் ஆகியோருடன் சேர்ந்து ஒரு திட்டத்தையும் தீட்டினார் அவர்.

அக்டோபர் 13ஆம் தேதி காலை 10 மணிக்கு திட்டத்தைச் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அன்று காலையில் யூசுஃப் கான் வெளியில் வரவேயில்லை. இதனால், மாலை ஐந்து மணியளவில் யூசுஃப் கானின் தனியறைக்குள் சதிகாரர்கள் புகுந்தனர். அங்கே தொழுது கொண்டிருந்த யூசுஃப் கான் பிடிக்கப்பட்டார். அவரது தலைப்பாகையை வைத்தே அவரது கைகளைக் கட்டினர்.

முழுமையாகப் பிடிபட்ட நிலையில், தன்னை நவாபிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக அங்கேயே கொன்றுவிடும்படி கேட்டார் யூசுஃப் கான். ஆனால், அவர்கள் அவரை மார்சந்தின் வீட்டிற்கு தூக்கிச் சென்றனர். மழை வருவது போல இருந்ததால் இருட்டிக்கொண்டு வந்தது. இதனால், வீதிகளில் மக்கள் நடமாட்டமே இல்லை.

யூசுஃப் கானின் நிலையை அறிந்த முதலி என்ற ஒரே ஒரு பணியாளர் மட்டும் விவரங்களை அவரது மனைவிக்குத் தெரிவித்தார். காவலுக்கு இருந்த சில வீரர்களைத் திரட்டிக்கொண்டு மார்ச்சந்தின் வீட்டிற்குப் போனார் முதலி. ஆனால், அங்கு சென்றதும் அந்த வீரர்களும் மார்ச்சந்தின் பக்கம் சேர்ந்துகொண்டனர். முதலி வெட்டிக்கொல்லப்பட்டார்.

கடைசியாக, யூசுஃப் கானின் மனைவி ஒரு கடிதத்தை மார்ச்சந்திற்கு அனுப்பினார். கோட்டையையும் அதில் உள்ள செல்வங்களையும் எடுத்துக்கொள்ளும்படியும் தன் கணவரை விட்டுவிடும்படியும் அதில் கோரியிருந்தார். ஆனால், உள்ளூர் தளபதிகள்தான் யூசுஃப் கானை பிடித்து வைத்திருப்பதாகக் கூறிய மார்ச்சந்த் தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிவிட்டார்.

இரவு எட்டு மணியளவில் கேம்பல்லுக்கு தகவல் தெரிவிக்க ஆள் அனுப்பப்பட்டது. அதிகாலை ஐந்து மணியளவில் கேப்டன் மேயர்ஸ் மதுரைக் கோட்டைக்குள் நுழைந்தார். பிறகே கேம்பல்லும் கோட்டைக்குள் வந்தார். விரைவிலேயே யூசுஃப் கான், நவாபின் ஆட்கள் வசம் ஒப்படைக்கப்பட்டார்.

அவர் தப்பிவிடக்கூடும் எனப் பயந்த நவாபின் ஆட்கள் அவரை ஒரு பல்லாக்கில் கட்டி தூக்கிச் சென்றனர். அவரது மனைவியும் குடும்பத்தினரும் திருச்சிராப்பள்ளிக்கு அனுப்பப்பட்டனர்.

 
மருதநாயகம் என்ற யூசுஃப்கான்

பட மூலாதாரம்,YUSUF KHAN: THE REBEL COMMANDANT BY S C HILL

படக்குறிப்பு,

மதுரை சம்மட்டிபுரத்தில் உள்ள யூசுஃப் கானின் நினைவிடத்தில் இருக்கும் பள்ளிவாசலின் ஆரம்பக்கால புகைப்படம்.

இரவில் ஒரு கோவிலில் தங்க வைக்கப்பட்ட யூசுஃப் கான், அடுத்த நாள் காலையில் மதுரையின் மேற்கே திண்டுக்கல் சாலையில் இருந்த நவாபின் படை முகாமிற்குக் கொண்டுவரப்பட்டார்.

முகாமில் வைத்து, யூசுஃப் கான் சேர்த்த செல்வம் குறித்தும் அவை இப்போது எங்கே இருக்கின்றன என்பது குறித்தும் கேட்கப்பட்டது.

அதெல்லாம் தனது செயலருக்குத்தான் தெரியும் என யூசுஃப்கான் பதிலளித்தார். பிறகு மதுரைக் கோட்டைக்குள் நடந்த தேடுதலில் நான்கு லட்சம் பகோடாக்கள் கண்டெடுக்கப்பட்டன.

மூன்று முறை தூக்கிலிடப்பட்டும், உயிர் போகவில்லையா?

ஆங்கிலேயரைப் பொறுத்தவரை, அவர்கள் யூசுஃப் கானை கைதியாக வைத்திருக்கவே விரும்பினார்கள். ஆனால், கேம்பல்லுக்கு பெரும் தொகையை லஞ்சமாக அளித்த நவாப், யூசுஃப் கானை தூக்கிலிட தடையில்லாமல் பார்த்துக்கொண்டார். அக்டோபர் 15ஆம் தேதி மாலையில் முகாமிற்கு வெளியே இருந்த மாமரத்தில் மதுரை நகரைப் பார்த்தபடி நிற்க வைக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார் யூசுஃப் கான்.

பிறகு அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டது. தலை திருச்சிராப்பள்ளிக்கும் கை, கால்கள், தஞ்சாவூர், பாளையம்கோட்டை, திருவிதாங்கூர் பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டன. அதற்கு முன்பாக சில நாட்கள் மதுரைக் கோட்டையின் வாசலில் இவை பார்வைக்கு வைக்கப்பட்டன.

மதுரையின் ஆளுநராக இருந்தபோது கான்சாஹிப் மதுரை சம்மட்டி புரத்தில்தான் வசித்ததாகக் கூறப்பட்டது. ஆகவே அவரது உடல் சம்மட்டி புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அதன் மீது எழுப்பப்பட்ட தர்கா இப்போது கான் சாஹிப் பள்ளிவாசல் என அழைக்கப்படுகிறது. ஆனால், இந்தப் பள்ளிவாசல் உடனடியாகக் கட்டப்படவில்லை. அவர் இறந்து 44 ஆண்டுகளுக்குப் பிறகு 1808இல் கட்டப்பட்டது.

யூசுஃப் கானை தூக்கிலிடும்போது நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவங்கள் குறித்த மர்மக் கதைகள் இப்போதும் வலம் வருகின்றன. அதாவது, "நவாபின் வீரர்கள் அவரைத் தூக்கிலிட்டபோது கயிறு அறுந்துவிட்டது. மூன்று முறை முயன்றும் கயிறு அறுந்துவிட்டது.

தனது உயிரைக் காப்பாற்றக்கூடிய தாயத்து ஒன்றை மந்திரவாதி ஒருவர் அளித்ததாகவும் தன் தொடையில் கட்டியிருந்ததாகவும் அதை அறுத்தால் மட்டுமே, தன்னைக் கொல்ல முடியும் என யூசுஃப் கான் கூறினார். அவர் கூறியபடியே தாயத்தை அறுத்த பிறகு, யூசுஃப் கானின் உயிர் பிரிந்தது," என்று சொல்லப்படுகிறது.

 
மருதநாயகம் என்ற யூசுஃப்கான்

ஆனால், வரலாற்றாசிரியர்களைப் பொறுத்தவரை ஒன்றிரண்டு முறை கயிறு அறுந்தது உண்மையாக இருக்கலாம். ஆனால், அதற்குக் காரணம் தாயத்து அல்ல என்கிறார்கள். அவருடைய செயல்பாட்டைப் பாராட்டி கவுன்சில் 1755இல் ஒரு தாயத்தை வழங்கியது. அதைத் தொடர்ந்து அணிந்திருப்பார். தூக்கிலிடும் முன்பாக நவாபின் வீரர்கள் அந்த மெடலை பறித்தெடுத்தனர். அதுவே, இப்படிக் கதையாக மாறியிருக்கலாம் என்கிறார்கள் அவர்கள்.

யூசுஃப் கானின் மகனைப் பொறுத்தவரை, அவர் ஹைதர் அலியின் படையில் இணைந்திருந்தார். 1780வாக்கில், 10,000 பேர் கொண்ட படையுடன் திண்டுக்கல்லில் அவர் முகாமிட்டிருந்ததாக ஒரு கடிதப் போக்குவரத்து கூறுகிறது.

ஆங்கிலேயர்களைப் பொறுத்தவரை, மதுரை முற்றுகையால் பெரிய லாபம் ஏதும் கிடைக்கவில்லை. அவர்களுடைய தளபதியிடமே மோசமாக நடந்துகொள்வார்கள் என்ற கெட்ட பெயர்தான் எஞ்சியது. யூசுஃப் கானுக்கு பிறகு, மதுரைக்குப் பொறுப்பாக வந்தவர்கள் அவரைவிட சிறப்பான ஆட்சியையோ வரி வசூலையோ தரவில்லை.

மதுரைக் கோட்டை முற்றுகையிடப்பட்டிருந்தபோது, மெயின் கார்ட் ஸ்கொயர் என அழைக்கப்பட்ட இடத்தில் யூசுஃப் கான் தங்கியிருந்தார். அந்த இடம் தற்போது ஜான்சி ராணி பூங்கா என்று அழைக்கப்படுகிறது. அந்தப் பூங்காவில் இருந்து மேலவாசலை நோக்கிச் செல்லும் சாலை, கான் சாஹிப் மேட்டுத் தெரு என்றும் பேச்சுவாக்கில் கான்சா மேட்டுத் தெரு என்றும் அழைக்கப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/c51vplgz8xyo

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி!

கமல்ஹாசன் "மருதநாயகம்" திரைப்படத்தைத் தயாரிக்க ஆரம்பித்து இடையில் கைவிட்டதாக நினைவு. யாருக்காவது காரணம் தெரியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

இணைப்பிற்கு நன்றி!

கமல்ஹாசன் "மருதநாயகம்" திரைப்படத்தைத் தயாரிக்க ஆரம்பித்து இடையில் கைவிட்டதாக நினைவு. யாருக்காவது காரணம் தெரியுமா?

ஓமண்ணை பெரும் பொருட்செலவால் முதலிட யாரும் முன்வரவில்லை என வாசித்த நினைவு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இணைப்பிற்கு நன்றி!

கமல்ஹாசன் "மருதநாயகம்" திரைப்படத்தைத் தயாரிக்க ஆரம்பித்து இடையில் கைவிட்டதாக நினைவு. யாருக்காவது காரணம் தெரியுமா?

ஓம் படப் பூஜையை எலிசெபத் மகாராணி வந்து ஆரம்பித்து வைத்தார்.

பிறகு ஒரு டிரெய்லர் வந்தது அவ்வளவுதான்.

இரெண்டு வருடம் முதல் மீளவும் தூசு தட்டினார்கள். பிறகு அப்படியே அடங்கி விட்டது.


 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.