Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராமாயணத்தோடு தொடர்புடைய இடங்கள் பற்றிய புனைகதைகள்

Featured Replies

இராமாயணத்தோடு தொடர்புடைய இடங்கள் பற்றிய புனைகதைகள்

இளவேனில்

இராமாயண நிகழ்ச்சிகள் நடந்த இடங்களாகப் பல இடங்கள் தமிழ் நாட்டில் குறிப்பிடப்படுகின்றன. அல்லது இராமயணக் கதை மாந்தர்களோடு தொடர்பு படுத்தப்படுகின்றன. பல நாட்டு இலக்கிய ஆய்வாளர்களும், அகழ்வாராய்ச்சி அறிஞர் களும் இராமாயணம் குறிப்பிடும் இடங்கள் அனைத் தும் மத்தியப் பிரதேசத்திற்கு வடக்கில்தான் உள்ளன என்று முடிவு கூறியிருக்கிறார்கள்.

இலங்கைதான் இராமாயணம் குறிப்பிடும் இடங்களில் தென்கோடியிலுள்ளதாகச் சொல்லப்படுவது என்பது அனைவரும் அறிந்ததே. அதுகூட மத்தியப் பிரதேசத்தில் ஓர் ஏரியின் நடுவில் இருந்த தாக எச்.டி.சங்காலியா முதலிய ஆய்வாளர்கள் சான்றுகளோடு முடிவு கட்டியுள்ளார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் பல தீர்த்தங்கள், ஆறுகள், மலையுச்சிகள், கடற்கரைப் பட்டினங்கள் முதலியவை அனுமன், சடாயு, சீதை முதலிய கதாமாந்தர்களோடு தொடர்பு படுத்தப்படுகின்றன. இத்தொடர்பின் தன்மைகளைச் சமூக மானிடவியல், பண் பாட்டு மானிடவியல், நாட்டுப் பண்பாட்டியல் ஆய்வுகள் தந்திருக்கும் அடிப்படையில் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளன.

வரலாற்று முற்கால சமுதாயத்தில் வாழ்ந்த மனிதர்கள் தமது சூழ்நிலையின் தன்மைகளை அறிய முயன்றார்கள். இயற்கை, இடங்கள், விலங்குகள், மனிதர்களின் செயல்கள் முதலியவற்றை அறிந்து விளக்குவதற்கு முயன்றனர். ஆனால், அவர்கள் அவற்றைப் பற்றிக் கேள்விகளைக் கேட்க முடிந்ததேயன்றி, கேள்விகளுக்குப் பதில் காணும் அறிவு வளர்ச்சி பெற்றிருக்கவில்லை.

காட்டில் வாழ்ந்த புராதன மனிதர்களின் மனத்தில் பல கேள்விகள் எழுந்தன:

தீ எப்படி உலகிற்கு வந்தது?

செடி கொடிகள் ஏன் காய்கனிகளைத் தருகின்றன?

செங்குரங்கின் முகம் சிவப்பாயிருப்பதேன்?

கரடிக்கு மேலெல்லாம் உரோமம் இருப்பது ஏன்?

காளைக்குக் கொம்பு இருப்பதேன்?

எருமையின் கொம்பு வளைந்திருப்பதேன்?

இந்த மலை ஏன் படுத்திருக்கும் பெண் போலிருக்கிறது?

சந்திரனில் ஏன் முயல் உருவம் இருக்கிறது?

குழந்தை எப்படிப் பிறக்கிறது?

விதையிலிருந்து செடி ஏன் முளைக்கிறது?

இவை யாவும் பண்டைக்கால மனிதர்களால் விடை காணமுடியாத புதிர்களாக இருந்தன. இவற்றிற்குப் பதில்களைக் காண அவன் புனை கதைகளைப் (Myths) புனைந்தான். விஞ்ஞான அறிவு தோன்றுமுன் புனைகதைகளால் அவன் தனது வினாக்களுக்கு விடை கண்டான். விஞ்ஞானத்தின் தாய் புனைகதைகள் என்று மானிட வியலார் கூறுவர். உலக முழுவதும் பண்டை இனக்குழு மக்கள் புனைகதைகளை உருவாக்கித் தங்கள் மனத்தை உறுத்தும் கேள்விகளுக்கு விடையளித்துக் கொண்டார்கள்.

மிக முற்காலப் புனைகதைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். தோற்றப் புனைகதைகள் (Origin myths) ஒரு பொருள், நிகழ்ச்சி, குணம், மாறுதல் முதலியவை எப்படித் தோன்றின என்பதைக் கூறும் கற்பனைக் கதைகள் இவை.

காவிரி தோன்றியது எப்படி?

அகஸ்தியர் கமண்டலத்தைக் காக்கை கவிழ்த்து விட்டதால் காவிரி தோன்றியது. நெருப்பை மனிதன் எப்படிப் பயன்படுத்தத் தொடங்கினான்? ஜாகர் என்ற தென்னமெரிக்க மிருகத்திடம் நட்புக் கொண்டு அதன் வீட்டிற்குப் போய், அதன் மகனாக வாழ்ந்து, மனிதன் திருடிக் கொண்டு வந்தான். (சிவப்பு இந்தியப் புனைகதை) புரோமிதியூஸ் ஜியூஸ் என்ற கடவுள் ஒளித்து வைத்திருந்த தீயை, அக்கடவுளின் மனைவி தன் மகனிடம் சொல்லி அவன் திருடிக் கொண்டு வந்து கொடுத்தான். (கிரேக்கப் புனைகதை)

இவை போன்றவை தோற்றப் புனைகதைகள். சில இடங்கள், நிகழ்ச்சிகள், சடங்குகள் பற்றி மனிதனது விளக்கம் புனைகதைகளாகக் கூறப்படும். இவை விளக்கப் புனைகதைகள்.

இடி இடிப்பது ஏன்? இந்திரன் வில்லின் நாண் ஒலி அது; மழைத் தெய்வத்தின் மனைவி ஓர் உரலை உருட்டுகிறாள்; ருத்ரனது கோரச் சிரிப்புதான் இடி; புரோடியூஸின் குரல். இவை (Explanatory Myths) என்று அழைக்கப்படும்.

சில புனைகதைகள் மனிதனது சடங்குகளோடு தொடர்பு கொண்டு, தோற்றப் புனைகதைகளாக வும், விளக்கப் புனைகதைகளாகவும் இருக்கும்.

திருக்கலியாணம் ஏன் நடக்கிறது? ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு கதையிருக்கிறது. பெண் பூப்பு எய்தியவுடன் ஏன் சில சடங்குகள் செய்ய வேண்டும்?

பார்வதி ருதுவடைந்ததும் செய்த சடங்குகளை எல்லோருக்கும் செய்ய வேண்டும். இதுபோலப் பல கதைகள் இருக்கலாம்.

ஒளவையார் நோன்பு, வரலட்சுமி நோன்பு, சித்திர புத்திரன் நோன்பு ஏன் கொண்டாட வேண்டும்?

இதில் ஒரு புனைகதை வரலாறும், நோன்பு நோற்றவர் அடைந்த நன்மை பற்றிய விவரங்களும் இருக்கும். அல்லது நோன்பு நோற்காதவர்கள் அடைந்த தீமை பற்றியும் இருக்கும். இவை யாவும் சுதந்திரமான கதைகள்.

இலக்கியமும் புராணங்களும் வளர்ச்சி பெற்ற பின்னர், மனிதன் தனது சூழ்நிலை பற்றி அவற்றோடு தொடர்பு கொண்ட கதைகளைப் படைத்துள்ளான்.

புராணங்களும், காப்பியங்களும் தோன்றிய பின், மனிதன் இடங்களையும், நிகழ்ச்சிகளையும் அவற்றோடு தொடர்புபடுத்திப் பல புனைகதைகளைப் புனைந்தான். அவற்றில் ராமாயணத்தோடு தொடர்புடைய சில புனை கதைகளைக் காண்போம்.

அனேகமாக ஒவ்வொரு ஊரிலும் குன்று, ஆறு, பாறை, ஊற்று முதலிய இடங்களைப் புனைகதை கள் மூலம் இராமாயணத்தோடு தொடர்பு படுத்தியுள்ளார்கள். இராமாயணத்தில் அக்கதை இருக்க வேண்டுமென்பதில்லை. தங்கள் ஊருக்குப் பழம்பெருமை தேடிக் கொள்வதற்காக மக்கள் தங்கள் ஊரை இராமாயண நிகழ்ச்சிகளோடோ, இராமாயணக் கதை மாந்தர்களோடோ தொடர்பு படுத்தியிருக்கிறார்கள். முயன்றால் இத்தகைய புனைகதைகளை ஒவ்வொரு ஊரிலும் சேகரிக்கலாம்.

இவற்றைச் சேகரித்து ஆராய்வதற்கு முன் முயற்சியாகச் சில புனைகதைகளைச் சேகரித்து இக்கட்டுரையில் ஆராய்வோம். இக்கட்டுரை ஒரு சிறிய முயற்சியே. தமிழ்நாடு முழுவதிலும் வழங்கிவரும் இத்தன்மையான புனைகதைகளைச் சேகரிப்பதற்கும் ஆராய்வதற்கும் தூண்டுகோலாக அமைவதற்காகவே இக்கட்டுரையை எழுத எண்ணுகிறேன்.

இராமாயணக் கதையின் தமிழ் வடிவமான கம்பரது காவியம், ஆரணிய காண்டத்தின் நிகழ்ச்சிகளையும், கதை மாந்தர்களையும் தமிழ் நாட்டில் சில இடங்களோடு தொடர்புபடுத்துகிற கதைகள் ஏராளமாக உள்ளன. இவற்றைக் காவியம் தெளிவாகச் சுட்டிக் காட்டாது. சீதையை இராவணன் சிறையெடுத்துச் சென்றபோது அவனைத் தடுக்க முயன்று போரிட்டு மாண்ட ஜடாயு, அவனைத் தேடிச் சென்ற அனுமான் ஆகிய கதை மாந்தர்களோடு, தமிழ் நாட்டிலுள்ள இடங்கள் புனைகதைளால் தொடர்புபடுத்தப் பட்டுள்ளன. நேரடியாக இராமனோடு குறித்த கதைகளே மிகப் பலவாக தமிழ்நாட்டில் வழங்கப்படுகின்றன. அப்புனைகதைகளில் ஒன்பது கதைகளை இக்கட்டுரையில் காண்போம்.

1. ஜடாயு தீர்த்தம்

பாளையங்கோட்டைக்கு வடக்கே 2 மைல் தூரத்தில், தாமிரவருணி நதியோரத்தில் வெள்ளைக் கோவில் என்ற மயானம் உள்ளது. இதனருகில் உள்ள நதியின் தீர்த்தக் கட்டத்திற்கு ஜடாயு தீர்த்தம் என்பது பெயர். இக்கட்டத்தில் தகனம் செய்யப்பட்ட சடலத்தின் எலும்புகளைப் பானையில் வைத்துப் புதைக்கிறார்கள்.

இவ்வாறு செய்வதால் இறந்தவர் புண்ணியம் பெறுவார், சுவர்க்கம் புகுவார் என்ற நம்பிக்கையுள்ளது.

இவ்விடம் புனிதமானது என்று காட்ட ஒரு புனைகதை வழங்குகிறது. இவ்விடத்தில் சீதையைத் தூக்கிச் சென்ற இராவணனைத் தடுத்துச் சீதையை மீட்க ஜடாயு போர் புரிந்தான். இராவணன் தனது வாளால் அவன் இறகுகளை வெட்டியெறிந்தான். ஜடாயு மரண வேதனையில் கிடந்தான். சீதையைத் தேடி வந்த இராமன் மனம் வருந்தி அவனிடம் நிகழ்ந்ததைக் கேட்டு, சீதை இருக்குமிடத்தை அறிந்தான். ஜடாயு உயிர் விட்டான். இராமன் அவனுக்கு மகன் முறையாக ஈமக்கடன்கள் செய்தான். ஜடாயுவைத் தகனம் செய்த இடம்தான் ஜடாயு தீர்த்தம் என்று புனித தீர்த்தமாகியது.

இவ்விடத்திற்குச் சிறிது தூரத்தில் ஒரு கிணற்றில் ஒரு குழுச்சிலை இருப்பதாக டாக்டர் அங்குசாமி கூறுகிறார். அதில் இராமன், இலக்குவன், ஜடாயு மூவரின் உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்புனை கதையை வலுப்படுத்துவதற்காக இச்சிலை உருவாக்கப்பட்டிருக்கலாம். உண்மையில் ஜடாயு தீர்த்தம் என்பது, மயானத்திற்கு அருகில் உள்ள நீரோட்டமேயாகும். அக்கரையிலுள்ள கிணற்றுப் பகுதியல்ல. இங்கு சிலையெதுவும் இல்லை.

2. அனுமான் வால்

இதே மயானத்தின் அருகில் ஒரு வளைந்த புடைப்புக்கோடு செதுக்கிய நீண்ட கல் ஒன்று கிடக்கிறது. இதனருகில் ஒரு மாந்தோப்பு இருந்தது. பாடை தூக்கிச் செல்லுபவர்கள் அதைத் தாண்டாமல், சுற்றிச் செல்லுவார்கள்.

இக் கல்லுக்கும், இந்நிகழ்ச்சிக்கும் ஒரு தொடர்புமில்லை. ஆனால், இக்கல் அனுமார் வால் என்று கருதப்பட்டு, ஒரு புனைகதையும் இதை விளக்கப் புனையப்பட்டுள்ளது. பாரதத்தில் பாரிஜாத மலரைப் பறிப்பதற்காக ஒரு வனத்திற்குச் சென்று, அவ்வனத்தைக் காவல் புரிந்த அனுமானது வாலை நிமிர்த்த முடியாமல் தோற்றுப்போனதாகவும் ஒரு கிளைக் கதையுள்ளது. அந்த வால் இதுதான் என்று தொடர்புப் புனைகதையொன்று உருவாக்கப்பட்டு வழங்கி வருகிறது.

மாந்தோப்பில் மாங்காய் களவு செய்ய ஆட்கள் நுழையாதபடி தடுக்க இக்கல் பயன்பட்டிருக்க வேண்டும். இதுபோலப் பல சின்னங்கள் பயத்தை உண்டாக்கப் பயன்படுகிறது. நாகம், சிங்கம், பூதம், யாளி முதலியன கோவில் பொக்கிஷங்களுக்குக் காவலாக இருப்பதாகப் புனைகதைகள் உண்டு. சில சிவன் கோவில்களைப் பூதம் காப்பதாகப் பூதக்கல் உருவங்கள் கோவில் வாசலில் அல்லது பொக்கிஷ அறை வாசலில் செதுக்கப்பட்டிருக்கும். நாயோடு சேர்ந்த பைரவர் சிலைகள், சிவன் கோவிலைப் பாதுகாப்பதாக நம்பிக்கை உள்ளது. எல்லாச் சிவன் கோவில்களிலும், மழுவணிந்த சண்டேசுவர் சிலைகள் உண்டு. யாரும் கோவில் சாமான்களைத் திருடிச் செல்லவில்லை என்று காட்ட இச்சிலை முன் கைதட்டிச் செல்ல வேண்டும்.

இதில் உள்ள நம்பிக்கை, இரவில் இச்சிலைகள் உயிர் பெற்றுக் காவல் காக்கின்றன என்பதேயாகும். இந்த நம்பிக்கையில்தான் காளி அல்லது மாரியம்மன் கோயில்களுக்கு வாசல் தேவதைகள் தோன்றியிருக்க வேண்டும்.

3. அனுமன் தீர்த்தம்

தர்மபுரி மாவட்டத்தில் ஊத்தங்கரை என்ற சிறு நகரின் அருகே ஒரு வற்றா ஊற்றிலிருந்து நீர் வெளிப்படுகிறது. அதை ஆற்றுப்படுகை மட்டத்திற்கு மேல் 4 அடி உயரம் தொட்டி போலக் கட்டி நீர் வடிய ஒரு தூம்பும் வைத்திருக்கிறார்கள். இத்தொட்டி பிற்காலத்தில் கட்டப்பட்டது. ஊற்று நெடுங்காலமாக இருந்து வருகிறது. இதற்கு அனுமன் தீர்த்தம் என்று பெயர்.

இதைப் பற்றி ஒரு புனைகதை உள்ளது. சீதையைத் தேடி வரும் பொழுது இராமன், இலக்குவன், அனுமான் மூவரும் ஆற்றின் அருகிலுள்ள ஒரு மலையில் தங்கினார்கள். இராமன் சந்தியாவந்தனம் செய்ய நீர் கொண்டு வர அனுமானை அனுப்பினான்.

அனுமான் தண்ணீர் தேடச் சென்றவன் நெடுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இராமன் ஓர் அம்பில் ஒரு செம்பை வைத்து எய்து, தரையிலிருந்து நீர் தோன்றச் செய்து செம்பில் நிரப்பிக் கொணரச் செய்து சந்தியா வந்தனம் செய்து முடித்தான். தன்னை நம்பவில்லையே என்று அனுமன் கோபித்துக் கொண்டான். இராமன் அவனைச் சமாதானப்படுத்துவதற்காக அம்பால் தோண்டிய ஊற்றுக்கு அனுமன் தீர்த்தம் என்று பெயர் வைத்தான்.

இந்தப் புனைகதை, ஊற்றின் தோற்றம் பற்றிய விளக்கமாக இன்றும் அப்பகுதி மக்களிடையே வழங்கி வருகிறது. அம்பின் மந்திர சக்தி பற்றிய கதைகள் (Legends) இந்தியக் காப்பியங்கள் பலவற்றில் உள்ளன. இது போலவே திருமாலின் சக்கரம், முருகனின் வேல், பீமனின் கதை, இந்திரனின் வஜ்ராயுதம், டைனாவின் திரிசூலம், மர்டாக்கியின் வேல், இராவணனின் வாள், இவற்றிற்குச் சாதாரணப் போர்க் கருவிக்கு மேற்பட்ட மந்திர சக்தியுண்டு என்ற நம்பிக்கை புராணங்களிலும், தனியான புனை கதைகளிலும் உள்ளன.

இதற்கு ஒரு மானிடவியல் காரணம், உலோக காலத் துவக்கத்தில், உலோக ஆயுதங்கள், கல் ஆயுதங்களைவிட வலிமையுடையவையாக இருந்தது குறித்துப் பண்டைய மனிதனது அதிசய உணர்வே. உடல் வலிமையின் பிரதிநிதியான அனுமன், செய்ய முடியாத காரியத்தை, வில் அம்பு தரித்த இராமனால் செய்ய முடிந்தது. வளர்ச்சியடைந்த உற்பத்தி சக்திகளின் விளைவாக உருவாக்கப்பட்ட கருவிகளின் மேன்மையை இது குறிப்பிடுகிறது. உடல் வலிமை, உலோக ஆயுத வலிமைக்குத் தாழ்ந்து விடுகிறது.

4. அனுமகுண்டம்

திருக்குறுங்குடி மலையில் மகேந்திரகிரி என்று பெயரிடப்பட்ட சிகரம் ஒன்றுள்ளது. இதன் மேல் பெரிய கால் சுவடு ஒன்று 4 அடி ஆழத்தில் வெட்டப்பட்டுள்ளது. இங்கு மழை காலத்தில் நீர் தேங்கி நிற்கும்.

இது குறித்து அனுமனோடு தொடர்புடைய புனைகதை ஒன்றுள்ளது. இம்மலைமீது ஏறித் தான் அனுமன் இலங்கைக்குத் தாவினான். தாவும் பொழுது விசுவரூபம் கொண்டான். சிற்றுருவில் இருந்த அனுமன் பேருருவம் கொண்டபோது மலையில் கால் பதிந்து ஒரு சுவடு ஏற்பட்டது. ஓர் ஊற்றுத் தோன்றி அவனது பாதங்களை நனைத்தது.

இப் புனைகதையின் மூலம் (Source) கம்பனது கடல் தாவு படலமே. இப்புனை கதைக்குச் சான்று களை உண்டாக்க ஒரு பாதத்தை மலையுச்சியில் தோண்டியுள்ளார்கள்.

5. மருத்துவாமலை

இது ஆரல்வாய் மொழியருகிலுள்ள மலையை யும், கன்னியாகுமரி அருகிலுள்ள மலையையும் குறிக்கும்.

இம்மலை, அனுமன் சஞ்சீவிமலையை இலங்கைக்குத் தூக்கிச் சென்றபோது உதிர்ந்த பாறைகள் என்று சொல்லப்படுகிறது. இதுதான் இம்மலைகளின் தோற்றம் பற்றிய புனை கதைகள்.

6. தாடகை மலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தரிசனங்கோப்பு என்ற ஊரின் அருகில் ஒரு நீண்ட பாறையொன் றுள்ளது. அது கற்பனைக் கண்ணோடு பார்த்தால் ஒரு பேருருவம் கொண்ட பெண்ணுருவம் படுத்துக் கிடப்பது போலக் காணப்படும். பூதாகாரமான தலையும், மார்பும், வயிறும், கால்களும் இருப்பது போலத் தோன்றும். இது இயற்கையின் விசித்திரமான படைப்புதான்.

7. வில்லுக்கீறி

இதற்கோர் தோற்றப் புனை கதையுள்ளது. தாடகையை இராமன் கொன்றபோது இங்குதான் விழுந்தாள். விழுந்த பின் கல்லாகி விட்டாள்.

இதற்குச் சில மைல்களுக்கப்பால் ஓரிடம் வில்லுக்கீறி என்றழைக்கப்படுகிறது. அங்கு ஒரு ஊரும் உண்டு. இது தக்கலைக்கு நான்கு மைல் தெற்கேயுள்ளது.

அவ்வூர் மக்கள் வில்லுக்கீறி என்ற பெயர்த் தோற்றத்திற்குக் காரணமாக ஒரு புனை கதையை நம்புகிறார்கள்.

இராமன் இவ்விடத்தில் இருந்துதான் தாடகை மீது அம்பெய்தான். முதலில் அவளைக் கண்டதும் அவள் பெண்ணென்று தயங்கி நின்றான். பின் அவள் பாறைகளை வீசினாள். ஒரு சூலத்தைக் குறி பார்த்து இராமன் மீது எறிந்தாள். அது கடுகி விடுவது கண்டும் இராமன் வில்லை எடுக்கவில்லை. விசுவாமித்திரன், அவனைப் பார்த்து தீமை புரிபவர், பெண் ஆண் என்ற வேறுபாடில்லாமல் கொல்லப்பட வேண்டும் என்று கூறி வில்லையெடுத்து நாணேற்றக் கூறினான். இராமன் வில்லைத் தரையில் ஊன்றித் தயங்கி நின்றவன் அம்பை நாணில் ஏற்றினான். தரையில் வில் கீறிய இடம் வில்லுக்கீறி என்ற பெயர் பெற்றது.

8. திருப்புல்லாணி

இராமன் அணைகட்டிய கதையோடு பல ஊர்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. திருப்புல் லாணி என்று அழைக்கப்படும் ஊர் திருப்புல் லணை என்றும், அது இராமன் புல்லினால் கட்டிய அணை என்றும் ஒரு புனைகதை அவ்வூரில் வழங்கி வருகிறது.

9. இராமேஸ்வரம்

இராமேஸ்வரம் என்ற ஊரில் உள்ள லிங்க வடிவமான சிவபெருமான், இராமன் வெற்றி பெற்றுத் திரும்பும் பொழுது பூசித்து வழிபட்ட லிங்கமென்ற ஒரு புனைகதை வழக்கில் உள்ளது இராமாயணக் கதாபாத்திரங்களோடு தொடர்புடைய இடங்கள்

மேற்குறிப்பிட்ட ஒன்பது புனைகதைகளில் இராமனோடு தொடர்புடையவை மூன்று. இவற்றுள் ஒன்று இராமனோடும் அனுமனோடும் தொடர்புடையது. இது மூன்றாவது கதை. இக்கதையில் இராமனது வில்லாற்றலும், அனுமனது அலைந்து தேடும் உடல் வலிமையும் இணைக்கப்பட்டுள்ளது.

இராமனது சந்தியாவந்தன சமய நிகழ்ச்சிக்குப் புனிதநீர் தேவைப்படுகிறது. தேடி வருவதற்கான உடல் ஆற்றல், விரைவு இவற்றைப் பயன்படுத்து வதற்காக இராமன், அனுமனை ஏவுகிறான். இது இராமாயணத்தில் அனுமனுக்கும், இராமனுக்கும் உள்ள தொடர்புதான். இத்தொடர்பே புனைகதையில் பயன்படுத்தப்ட்டுள்ளது. இராமனது மேன்மை, சந்தியாவந்தனம் ஆகிய மத நிகழ்ச்சியிலும், அவனது வில்லாற்றலிலும் சுட்டிக் காட்டப்படுகிறது. அவை அனுமனது உடல் வலிமைக்குமேல், நீரைப் பெறுவதில் வெற்றி கொணர்கிறது.

தனது துணைவனுக்குக் கோபம் வராமலிருக்க இராமன் ஊற்றிற்கு அனுமனது பெயரை இடுகிறான். கருடன், அனுமன் முதலிய கதாபாத்திரங்கள், மனித இயல்பு கொண்ட விலங்குகள். இவை போன்றவை தனியாகவே தெய்வங்களாக வணங்கப்பட்டவையாக இருத்தல் வேண்டும். இவை மந்திரத்தோடும், சூன்யத் தோடும் தொடர்பு கொண்டவை. கருடனும், அனுமனும், நாகத்தை அடக்கவும், பேய்களை விரட்டவும், உயர்ந்த தெய்வங்களாகக் கருதப்பட்டன. அதாவது அவை பாமரர் தெய்வங்கள் (Folk Gods above the level of ghosts and spirits) இவை உடல் வலிமையாலும் மந்திர வலிமையாலும் செயல்படுபவை.

இராமன் ஒரு தெய்வ வணக்கத்தைப் பின்பற்றுபவன். வில்-அம்பு என்ற ஆயுதங்களையுடையவன். அவனுடைய சக்தி விலங்குகளுடைய சக்திக்கு மேலாக இராமாயணத்தைப் பின்பற்றியே மதிக்கப்படுகிறது. இங்கே பாமரர் தெய்வங்களும் விஷ்ணு அவதாரமான இராமனும் கீழ்நிலை, மேல் நிலைகளில் முரண் படும்போது சமாதானப் படுத்தப்படுகின்றன. அப்பகுதி மக்களின் ஸ்தல தெய்வமான அனுமனுக்கு இராமனே முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறி, புனைகதை இருவரது உறவையும் சீராக்குகிறது.

இதுபோலவேதான் ஜடாயுவின் இராமாயண பாத்திர நிகழ்ச்சி இராமன் சீதையைத் தேடும் நிகழ்ச்சியோடு தொடர்புபடுத்தப் பட்டுள்ளது. இதில் வேறோர் (Mytheme) அல்லது புனைகதைப் பகுதி உள்ளது.

உலகப் புனைகதைகளில் ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு விலங்கு மனிதனுக்கு உதவும். வேறோர் விலங்கு மனிதனுக்கு இடையூறு செய்யும். கதையில் இவற்றுள் ஒன்று தலைவனுடைய முன்னேற்றத்திற்குத் துணை செய்வதாகவும், மற்றொன்று இடையூறு செய்வதாகவும் இருக்கும்.

தென்னமெரிக்க இந்தியப் புனைகதைகளில் விலங்குகளில் ஜாகர் மனிதனுக்குத் துணை செய்வதாகவும் பூனை அல்லது காகம் தீமை செய்வதாகவும் வருவதைப் பேராய்வாளர் லெவிஸ்ட்ராஸ் எடுத்துக் காட்டியுள்ளார்.

இவற்றை டோடம் (Totem) விலங்கெனக் கொள்வதற்கில்லை. இதன் தோற்றம் டோடம் நம்பிக்கையிலிருந்து பிறந்திருக்குமாயினும், புனைகதையில் இதற்கு மனித வாழ்க்கையில் ஒரு பங்கு (Function) இருக்கிறது. குலக்குறி விலங்கு மந்திர சக்தியுடையது. புனைகதையில் விலங்கு மனித இயல்புகளான நன்மை, தீமைகள் புரியும் சக்திகள் உள்ளன.

இராமாயணத்தில் வரும் விலங்குகள் புனை கதை விலங்குகளின் தன்மையுடையனவே. தமிழ் நாட்டில் டோடம் நம்பிக்கையுண்டு என்பதை ஒரு ஞானப்பிரகாசர் காட்டியுள்ளனர். இவை தமிழ்ப் புனைகதைகளிலும் இடம் பெற்றுள்ளன. இந் நம்பிக்கையின் அடிப்படையில் தம்மிடையே பரவிய இராமாயணக் கதையின் ஜடாயுவும், ஜாம்பவான் என்ற கரடியும், மனிதனுக்கு உதவும் விலங்குகளாகக் கொள்ளப்பட்டன. இராமனுக்கு உதவும் ஜடாயுவின் தன்மையோடு, தமிழ்க் குலக்குறி விலங்குகளிலிருந்து தோன்றிய புறக்கதை விலங்கையும் இணைத்து அவற்றைப் புனித மானதாகக் கருதி அவை தகனம் செய்யப்பட்ட இடம் தீர்த்தக் கட்டமாக்கப்பட்டிருக்க வேண்டும்.

கழுகு, கரடி ஆகிய விலங்குகளின் வழிபாடு இன்று பல பகுதிகளில் உள்ளன. திருக்கழுக் குன்றத்துக் கழுகுகள் பெருமாள் கோவில்களிலும், தனியாகவும் கருட வணக்கம் கோவில் இல்லாத ஊர்களில் கூட வெள்ளிக்கிழமை கருட தரிசனம் முதலிய வணக்கங்கள், குலக்குறி விலங்கு வழி பாட்டின் வளர்ச்சியைக் காட்டுகின்றன. களக் காட்டுப் பகுதியில் கரடிமாடன் புலிமாடன் உருவங்கள் உள்ளன. இவை மனிதத் தன்மை யேற்றப்பட்ட, வளர்ச்சி பெற்ற குலக்குறி விலங்கு களாகத் தோன்றுகின்றன.

எனவே ஏற்கெனவே பழக்கமான `நன்மை புரியும் விலங்குகள்' என்ற நம்பிக்கையிலிருந்து ஜடாயுவையும் கருடனையும் தேர்ந்தெடுத்து இடங்களைப் புனிதமாக்குவது மிகவும் எளிய அறிவூக்க முயற்சியே. ஏற்கெனவே இருந்த நாட்டு நம்பிக்கைகளோடும், இராமாயணக் கதையின் ஜடாயு பாத்திரம் பொருந்துவதால், ஜடாயு கௌரவிக்கப்பட்டு இராமனுக்கு உறவாக்கப் பட்டு, அவனைத் தகனம் செய்த இடமாகக் கூறி, இந்த இடம் புனிதமாக்கப்பட்டது. இது நாட்டு நம்பிக்கையோடு, இராமாயணக் கதையின் நம்பிக்கைகளின் இணைப்புத்தான்.

முன்னரே இராமனை உயர்வாகவும், அனுமனைத் தாழ்வாகவும் இருநிலைகளில் இணைத்த புனைகதையை அனுமகுண்டம் பற்றிய கதையில் கண்டோம். அனுமனைப் பற்றியே மிகப் பல புனைகதைகள் உள்ளன. அவற்றுள் சில இடங்களோடு தொடர்புபடுத்தப் பட்டுள்ளன. குரங்கு குலக்குறி விலங்காகப் பல காலமாக இருந்து வந்துள்ளது. மிகப் பண்டைக் காலத்தில் மனிதனோடுள்ள உருவ ஒற்றுமையால் அவனைக் கவர்ந்துள்ளது.

மந்திரங்கள், வசியங்கள் முதலியவற்றோடு தொடர்புடையதாக இருந்தது. தற்காலத்தில், இராமனோடு தொடர்பற்ற தனி அனுமான் சிலைகள், மிகப்பெரிய சிலைகள் உள்ளன. பிற்காலத்தில் இராமர் கோயில்களை அவற்றின் முன் கட்டியிருக்கிறார்கள். உதாரணமாக நாமக்கல் அனுமார், சுசீந்திரம் அனுமார் சிலை களைக் கூறலாம். சில பகுதிகளில் இராமனை அனுமான் வணங்கும் வழக்கம் இருக்கிறது. சூன்யம், வசியம், மந்திரம், பேயோட்டம் முதலிய வற்றில் அனுமானுக்குப் பங்குண்டு. எனவே, நாட்டார் நம்பிக்கைகளில் அனுமானைப் போன்ற தோர் மனித விலங்கிற்கு மனிதனைவிட அதிக சக்தியிருப்பதாகக் கருதப்படுகிறது.

இராமனைப் பற்றிய புனைகதைகளில் அவனுடைய குணம், செயல்கள் பற்றி ஆராயும்போது இராமனைவிட, காப்பியத்தின் சிறு கதாபாத்திரங்கள் நாட்டு மக்களின் கற்பனையை ஏன் கவருகின்றன என்று காண்போம். இங்கு அனுமனோடு தொடர்புடைய புனைகதைகளை ஆராய்வோம்.

அவை நெல்லை மேற்கு மலையோரங்களிலும், குமரியின் மேற்கு மலையோரங்களிலும் வழங்கி வருகின்றன. இவை யாவும் இராமனுக்கு உதவி செய்கிற செயல்களோடும், விலங்கின் உடல் வலிமையோடும் தொடர்புடையவை. புனைகதை 2 மட்டும் இராமாயணத்தோடும் தொடர்புடையது.

3, 4, 5-வது கதைகள் அனுமனைப் பற்றியவை. 3-வது கதையை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், 4-வது கதை திருக்குறுங்குடி மலையோடும், 5-வது கதை குமரி மாவட்ட மலைகளோடும் தொடர்புடையவை.

அனுமகுண்டம் என்ற மலையுச்சியிலுள்ள குழி மனிதனால் தோண்டப்பட்டதே. இம்மலையுச் சிக்கும் மலைக்கும் புனிதத் தன்மை ஏற்படுத்தவே அனுமான், இக்குழியோடு தொடர்புபடுத்தப்படுகிறான். அனுமன் விசுவரூபம் எடுத்தபோது, அவனுடைய பேருருவத்தின் பாரம் தாங்காமல் மலைச் சிகரத்தில் குழி விழுந்தது. அக்குழிதான் இதுவென்று, ஒரு தோற்றப் புனைகதை காப்பியத்தில் சொல்லப்படும் அனுமனது பெருஞ்செயல் ஒன்றின் விளைவானதாகப் புனையப்பட்டுள்ளது.

மருத்துவாமலை பற்றிய புனைகதையிலும் அனுமனது உடல் வலிமையும், இராமனுக்கு உதவுகிற தன்மையும் அடிப்படைகளாக உள்ளன.

நாட்டாரது தெய்வ நம்பிக்கை, மதிப்புகளின் அடிப்படையிலேய இப்புனைகதைகள் தோன்றியுள்ளன.

இராமனது இயல்புகள் சாதாரண மக்கள் தம்மிடையே மதிக்கும் இயல்புகளாக இல்லாமல் அசாதாரணமான காப்பியத் தலைவர்களிடம் இக்கதை காணும் மதிப்புகளாக உள்ளன.

புதிய கருவிகள், உலோகம் இவற்றின் மந்திர சக்தியில் மக்கள் பண்டைக் காலத்தில் கொண்டி ருந்த நம்பிக்கையின் எச்சம் இராமனது இயல்பு களில் காணப்படுகிறது. இராமன் வில்லினாலும், அம்பினாலும் செய்வித்த அதிசய நிகழ்ச்சிகள் பல புனைகதைகளில் காணப்படுகின்றன. புல்லால் அணை கட்டியதும், புல்லை அம்பாக்கியதும், இவ்விரண்டின் தொடர்பைக் காட்டுகின்றன. `வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' என்ற பழமொழி, வில், வேல்களின் மீது மக்கள் கொண்ட அதிசய உணர்வின் வெளியீடே. உழவுத் தொழிலில் ஈடுபட்ட மக்கள், இவ்வாயுதங் களைப் பயன்படுத்திய காப்பியத் தலைவனை தம்மிலும் வேறுபட்ட உயர்ந்த மனிதாதீத சக்தியுடைய புராண பாத்திரமாகவே கருதினர்.

காப்பியத் தலைவனது அதிசயத்தக்க சக்திக்கு அவனது கருவிகளும், மனித குணங்களும் காரணங்களாகக் காட்டப்படுகிறது.

அனுமனது சக்திகு, உடல் வலிமையை மிகைப் படுத்தியும், இராமபக்தியை அடிப்படையாகக் கொண்டும் விளக்கம் காணப்படுகிறது.

இராமேசுவரம் பற்றிய புனைகதை இவ்விரு வகைகளினின்றும் வேறுபட்டது. இது சைவ வைணவ சமய உயர்வுப் போட்டியில் தோனறிய தாகும். இராமன் சிவனை வழிபட்டதாகவும், சிவன் விஷ்ணுவை வழிபட்டதாகவும் கூறும் கதைகள் சிவன் உயர்ந்தவரா விஷ்ணு உயர்ந்தவரா என்று விவாதிப்பதற்காகவே புனையப்பட்டன.

ஸ்தல புராணங்களிலும், ஐயப்பன் கதைகளிலும், விஷ்ணு - மோகினிக் கதைகளிலும் இதைக் காணலாம். இந்தப் போராட்டங்களின் எதிரொலியாக விஷ்ணு வணங்கிய சிவன் கோயில்கள், சிவன் வணங்கிய விஷ்ணு கோயில்கள் பற்றிய கதைகள், தோற்றப் புனைகளாகச் சில கோவில்களோடு தொடர்பு கொண்டு உருவாயின.

இராமாயணக் கதை சங்க காலத்துப் புலவர்களுக்குத் தெரிந்திருந்தது. சிலப்பதிகார காலத்தில் அதன் சம்பவங்களை விரிவாகச் சொல்லாமல் உவமையாக இளங்கோவடிகள் கூற்றினால் தெரிந்து கொள்ளுமளவிற்குப் பரவியிருந்தது. ஜைனர்களுக்கும் பௌத்தர்களுக்கும், வால்மீகி இராமாயணத்தினின்றும் வேறுபட்ட இராமாயணங்கள் தெரிந்திருந்தன.

ஆனால், கம்பனது இராமாயணமே மிகப் பரவலாக நாட்டு மக்களிடையே பரவிவிட்டது என்பதற்குக் கம்பனைப் பற்றிய கதைகளும் கம்பனது வாழ்க்கை பற்றிய நாட்டார் கதைகளும் சான்று கூறுகின்றன. எனவே கம்பனது காலத் திற்குப்பின் இது கற்றவர்களது காப்பியமாக இல் லாமல் நாட்டாரிடமே பரவிய கதையாகிவிட்டது. இக்கதைகளின் பல நிகழ்ச்சிகள், அவர்களுடைய புனை கதைகளை (Legends) ஒத்திருந்தன. இராமாயணத்தின் நாட்டுக் கூறுகள் (Folk elements) தங்களுடைய நம்பிக்கைகள், வாழ்க்கை மதிப்புக்களை ஒத்திருந்தன. தங்கள் படைப்புகளை ஒத்த பாத்திரங்களையும், தங்களது வாழ்க்கை மதிப்புகள் போன்ற மதிப்புக்களையும் அவர்கள் இராமாயணப் பாத்திரங்களிலும், இராமாயண காவிய மாந்தர்களின் மதிப்புகளிலும் (Values) கண்டார்கள்.

இதில் முக்கியமான சிறு பாத்திரங்கள் அனுமன், சபரி, குகன், ஜாம்பவான்.

http://www.keetru.com/anaruna/aug07/ilavenil_1.php

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.