Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆணாதிக்கத்தின் தோற்றுவாய்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆணாதிக்கத்தின் தோற்றுவாய்

ப. தியாகராசன்

அன்று தொட்டு இன்றுவரை நம் சமுதாய அமைப்பானது ஆணாதிக்க சமுதாயமாக அமைந்து காணப்படுகிறது என்பது உலகறிந்த உண்மை. அறிவியலில் வியக்கத்தக்க வளர்ச்சி கண்டுள்ள இந்நிலையிலும், பெண்ணினத்தைக் குறைத்து மதிப்பிடுகின்ற மனப்போக்குதான் ஆண்வர்க்கத்திடம் மிகுந்துள்ளது என்பது வேதனைக்குறிய செய்தியாகும். ஆணின் உடலமைப்பும் வலிமையும் இயல்புகளும் குமுகாயக் கடமைகளும் உயர்வானவை என்று கூறுவதே, இஃது ஓர் ஆணாதிக்ககுமுகாய அமைப்பு என்பதற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும். ஆணினத்திற்கு மட்டும் இச்சமுதாய அமைப்பில் சிறப்புரிமைக் கொடுக்கப்பட்டுள்ளதே, இஃது ஓர் ஆணாதிக்கக் கட்டமைப்புள்ள குமுகாயம் என்பதையே மேலும் உறுதி செய்கிறது.

இந்நிலைக்கு நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னனி உள்ளதாகத் தெரிகின்றது. “கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு”? என்ற உலக வழக்கு இருந்தாலும், சான்று காட்டி விளக்குவதே சாலச்சிறந்தது. நம் இலக்கியங்கள் அனைத்தும் ஆணாதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளன. இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி, அஃது ஓர் வரலாற்றுப் பெட்டகம். அஃதே இக்குமுகாய அமைப்பினை நன்கு வெளிக்காட்ட முடியும்.

சங்க காலத்து இலக்கியமான தொல்காப்பியம் தனது பொருளதிகாரத்தில் பண்டைத் தமிழர்களின் வாழ்க்கை நிலையினைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. “பெருமையும் உரனும் ஆணுக்கு” என்றும் “அச்சமும் நாணமும் மடனும் பெண்ணுக்கு” என்றும் பாகுபடுத்திக் கூறியுள்ளது என்பதே பழங்காலத்தொட்டே ஆணாதிக்கக் சமுதாயம் அமைய வழி ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிய ஏதுவாக உள்ளது. அவ்விலக்கியம், கணவனுக்கும் மனைவிக்குமிடையே இருக்க வேண்டிய ஒத்த பத்து குணங்களை வலியுறுத்தினாலும் “மிக்கோனாயினும் கடிவரை இன்றே” என ஆண் மகனின் முதன்மையை மட்டும் ஏற்க வலியுறுத்தி, ஆணாதிக்கம் வளர்ந்தோங்க வழி வகுத்துள்ளது.

ஆம், பெண் என்பவள் ஆணிற்கு விஞ்சியிருக்கலாகாது எனப் பெண்ணை அழுத்தி ஆணை உயர்த்துவதே ஆணாதிக்கத்தின் வளர்ச்சிக்காகதான். அந்நூல் “இல்வரைதான் பெண்ணறிவின் எல்லை” என பெண்களின் அறிவுக்கே ஓர் எல்லைக்கோடு வரையறுத்துள்ளது, கொடுமையிலும் கொடுமை. உண்பதற்கு எல்லை வகுக்கலாம், உடுப்பதற்கு எல்லை வகுக்கலாம், உறங்குவதற்கு எல்லை வகுக்கலாம், உறவுகள் மேம்படுவதற்கான அறிவை - பெண்ணறிவை வளர்ப்பதற்கு எல்லை வகுத்துள்ளதே! இது நியதியா? இதுதான் ஆணாதிக்கத்தின் உச்சநிலை எனக் கூறலாம். கால்கள் மட்டுமல்ல, பெண்களின் கருத்துகளும் வாயிற்படித்தாண்ட அனுமதியில்லை என்பதே வெட்கித் தலைகுணிய வேண்டியச் செய்தியாகும். ‘கற்பு’ மகளிர்க்கு மட்டுமே எனச் சங்க இலக்கியங்களில் வலியுறுத்திப் பேசப்பட்டதும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே.

வளர்ந்து விட்ட குழந்தைகளுக்கு வரையறை விதிக்கலாம், பாவம் பச்சிளம் குழந்தைகள் என் செய்யும்? அதிலும் கூட ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகள் எனப் பாகுபடுத்திக் காட்டுகின்றன நமது சங்க இலக்கியங்கள். “வீறுசால் புதல்வன் பெற்றனை” எனப் பதிற்றுப்பத்தும், “பாலார்துவர்வாய்ப் பைம்பூட்புதல்வன்” என நற்றிணையும், “தன் முதல்வன் பெரும் பெயர் முறையுளிப் பெற்ற புதல்வன்” “மேதக்க எந்தை பெயரன்” எனக் கலித்தொகையும் ஆண் மக்களைப் போற்றிப் பெண் குழந்தைகளைப் புறந்தள்ளி கருவிலேயே ஆணாதிக்க வித்தினை விதைத்துள்ளது.

அம்மட்டோ, கணிகையர் குலப் பெண்களிடம் சென்று வரும் கணவன்மார்களை முகமலர்ச்சியுடன் மனைவி வரவேற்க வேண்டும் என நம் இலக்கியங்கள் காட்டுகின்றன. அப்படிச் செய்யாவிட்டால் அவன் வெறுப்புற்று நிரந்தரமாகவே அவளைவிட்டு விலகிவிட, பின்னர் தானும் தன் பிள்ளைகளும் வறுமையில் வாட நேரலாம் என அச்சுறுத்துகிறது புறநானூற்றுப் பாடல்கள். இதன் காரணமாகவே பெண்களுக்கு மட்டும் கற்பு நிலை வற்புறுத்தி பேசப்பட்டுள்ளது, பன்னெடுங்காலமாக. அக்காலத்து நீதி நூல்களும் ஆண் பெண் இருபாலரையும் சமன்செய்து சீர் தூக்கிப் பார்க்கும் நீதி நூல்களாக அமையவில்லை. வாழப்பிறந்தவன் ஆண், அவனுக்கு வழித்துணையாக வேண்டியவள் பெண், ஆளப்பிறந்தவன் ஆண், அதற்கு அடங்கி நடக்க வேண்டியவள் பெண் என்றும், ஆண்களுக்குத் தலைமையிடம் கொடுத்துப் பெண்களை அடிமைநிலைக்குத் தள்ளுகின்றது.

முற்காலந்தொட்டே கணவனை இழந்த பெண்கள் பணி செய்து பிழைக்க நேர்ந்தது. சங்க இலக்கியங்கள் அவர்களைப் ‘பருத்திப் பெண்டிர்’ என அடையாளங் காட்டுகின்றது. உழைத்து உண்ண அனுமதித்த அக்சமுதாயம் அவர்களின் இயல்புகளைச் சிறுமைப்படுத்திக் கொடுமைப்படுத்தியுள்ளது. தலை மழிக்க வேண்டும் என கட்டளையிட்டுள்ளது; கற்கள் உறுத்தும் தரையில்தான் அவர்கள் படுக்கவேண்டும் என இடம் காட்டியுள்ளது; உப்பு இல்லா உணவுதான் உண்ண வேண்டுமெனவும் உணர்த்தியுள்ள அக்சமுதாய அமைப்பு, மனைவியை இழந்த கணவனுக்கு ஏதேனும் கட்டளையிட்டுள்ளதா? இல்லையே! இதுதான் ஆணாதிக்கத்தின் அடையாளமாகும்.

துணையை இழந்த துயரம் இருபாலருக்கும் பொது என்றாலும், மறுமண உரிமையை அக்குமுகாய அமைப்பு ஆண்களுக்கே சிறப்பாக வழங்கியுள்ளதே, இது ஆணாதிக்கத்தின் ஆழமான கூறுதானே. திருமணமே வாழ்வின் குறிக்கோள் என்று வலியுறுத்தி வருகின்ற அக்சமுதாய அமைப்பானது, மணவாழ்வை அடையும் உரிமையைப் பெண்களுக்கு ஒருமுறைதான் அளிக்கின்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில இடங்களில் சில பெண்களுக்கு மறுமணம் நடைபெற்றாலும் ஒட்டுமொத்தக்சமுதாய அமைப்பு அதனை முழுமையாக அங்கீகாரம் செய்யவில்லை.

இஃது எதன் வெளிப்பாடு? ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றால் அது மிகையாகாது.

உலகம் முழுவதுமே ஆணினத்திற்கு முதன்மை கொடுத்துப் பெண்ணினத்திற்கு இரண்டாம் நிலைதான் வழங்கியுள்ளது. மனித இனம் பற்றிய பொதுவான வழக்குகளில் கூட ஆண்பாற் சொற்களே அதிகம் காணப்படுகின்றன. “சான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை” பெண் வாட்டஞ் சாட்டமாக இருந்தால் கூட சாதனை புரியமாட்டாள் என்பதாக மேற்கண்ட தொடர் எடுத்தாளப்படுகின்றது. பெண்பார் புலவரான ஒளவையார் கூட “தையல் சொல்கேளேல்” என ஆத்திச்சூடியில் பெண்மைக்கு எதிராகக் கூறிப் பெண்ணினத்தின் தன்மையைக் குறைத்துள்ளார். பெண்கள் கூட பெண்ணினத்தை குறைத்து மதிப்பிடுவதைத்தான் இது காட்டுகிறது.

“பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்” என ஒளவையார் தன் கொன்றை வேந்தன் மூலமாக ஒரு கருத்தைத் திணித்துப் பெண்களைப் பேதையாக இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறார். இத்தகைய கருத்துகள் ஆண்களின் ஆதிக்க உணர்வுகளுக்கு வழிகோலாது என் செய்யும்? கண்ணுக்கு இனிமையாகவும், கணவன் விரும்பும் வகையில் தன்னை அணிசெய்து கொள்பவளாகவும், அச்சமும் நாணமும் உடையவளாகவும், ஊடலுடன் கூடலையும் சேர்த்துத்தன் கணவனை மகிழ்விப்பவளாகவும் இருப்பவளே பெண் என்கிறது நாலடியார். ஆனால், ஆண்கள் காட்சிக்கு எளியவராகக் கடுஞ்சொல் அற்றவராக நடந்து கொள்ளமாட்டார்கள். இது தான் நியதியா?

தொன்று தொட்டுப் பெண் கல்வியும் மறுக்கப்பட்டு வந்துள்ளது. ஆடவர்க்கு மட்டும் ‘ஓதற்பிரிவு’ என்ற ஒரு தனிப்பிரிவு தொல்காப்பியரால் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆண்களும் பெண்களும் இரு கண்கள் போன்றவர்கள் எனக் கூறும் இக்சமுதாயம், ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்துப் பெண்களைப் புண்படுத்தியுள்ளது அநீதியான செய்தியாகும். கல்வியோடு தொடர்புப்படுத்திப் பெண் எங்குமே பேசப்படவில்லை. பெண்களுக்குப் பொருளாதார உரிமைகளும் மறுக்கப்பட்டே வந்துள்ளன. கணவனின் வருவாயைப் பொறுத்தே குடும்பச் செல்வ நிலை அமைந்திருக்க வேண்டும் என்ற வரையரையும் உள்ளது.

ஆணாதிக்க சமுதாயத்தின் அநீதிகளில் மற்றொன்று, மகளிர் தலையில் சூட்டப்படும் பொறுப்பானது அளவற்றது. கணவன் ஏறு போல் பீடு நடைபோட வேண்டுமானால் மனைவி புகழுடன் கூடியவளாக இருக்க வேண்டுமாம். இவர்கள் தரங்கெட்டவர்களாக இருந்தால் மனைவி எங்ஙனம் தலைகாட்ட இயலும் என்ற பொது நியதியை மறந்து விட்டனர். இல்லப் பொறுப்புகளில் தவறுகின்ற ஆணைக் கண்டித்துப் பேசுவதில்லை இக்குமுகாயம் அவனது கூடா ஒழுக்கமும் பொறுக்கப்படுகின்றது. அதைப் பொறாதப் பெண்மை மட்டும் வெறுக்கப்படுகின்றது. ஆடி அடங்கிய ஆண் இக்சமுதாயத்தால் அரவணைக்கப்படுகிறான். அப்படி ஒரு பெண் மனந்திருந்தி வந்தால் அல்லல் படுத்தப்படுகிறாள். ஏன் இந்த முரண்பாடு? ஆனால், ஆண் எப்படி இருந்தாலும் அனுசரித்தே போக வேண்டும் என்ற நியதிதான் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உரிமைகளும் சலுகைகளும் மதிப்புகளும் ஆணுக்கு; பொறுப்புகளும், கடமைகளும் இழிவுகளும் பெண்களுக்கு. இதுதான் ஆணாதிக்கத்தின் கொடு முடிபு.

வீட்டிலும் வெளியிலும் தலைமையிடம் ஆணுக்குதான் ஆண்டாண்டு காலங்களாக உள்ளது. அடுத்த இடந்தான் பெண்ணுக்கு அளித்துள்ளதையே இக்சமுதாய நியதி ஏற்கிறது. அப்படி ஏதேனும் சூழலின் காரணமாகப் பெண்ணுக்கு முதலிடம் கிட்டுமாயின் இக்சமுதாயம் அதனை பொறுத்துக் கொள்ளும்; ஆனால் போற்றுவதில்லை. இதுதான் இக்குமுகாயத்தின் மனப்பாங்கு. ஓய்வெடுக்க பிந்தியும், உழைக்க முந்தியும், பின்தூங்கி முன் எழ வேண்டியவள் பெண். ஆம் வாழ்க்கை என்னும் பாட்டுமேடையில் சுருதி சேர்க்கும் பின்பாட்டுக்காரிதான் பெண். அங்கும் அவள் அடக்கித்தான் வாசிக்கவேண்டும். ஆணோடு இணைந்து பாடினாலும் இழைந்தே பாட வேண்டும் என்கிறது இந்த ஆணாதிக்க சமுதாயம்.

தன்னுடையத் தனிப்பட்ட ஆர்வத்திற்கு ஆசைப்படக் கூடாது என்றும், பின்னின்று தான் பெருமை சேர்க்க வேண்டும், முன்னின்று பெருமையடையக் கூடாது என்றும் கட்டளையிட்டுள்ளது இக்சமுதாய அமைப்பு. இணைந்து பணியாற்றும் சூழலிலும் ஆண்கள் உண்டாக்கிய பூசலுக்கு பெண்களைத்தான் குறைகூறுகின்றது நம் சமுதாயம்.

உயர் பதவிவகிக்கின்ற அதிகாரி ஆண் என்றால் அவர் தலைமைதாங்க மனைவி பரிசு வழங்குவார். அவரேப் பெண்னென்றால் அவர் தலைமையேற்க கணவர் பரிசு வழங்கிய வரலாறு ஏதேனும் உள்ளதா?

இக்சமுதாயம் முன்னேற்றமடைய வேண்டுமெனில் இந்த ஆணாதிக்க சமுதாய அமைப்பு மாறிப் பெண்கள் போற்றப்பட்டு மதிக்கப்படவேண்டும். அதற்கு நற்சிந்தனைகள் தேவை. குறிப்பாகப் பெண்கள் சிந்தித்துச் செயல்படும் பொழுது ஏதும் சிதறிப் போவதில்லை. தம் மனத்தில் தேக்கி வைக்கும் எண்ணங்களை எப்போது மற்றவர்களுக்குக் கொடுக்கலா மென்ற நல் எண்ணத்திலேயே தன் காலத்தைக் கழிப்பவள் அவள். வாய்ப்பு கிடைக்கும்போது அழுத்தமாக மற்றவர்களுக்கு அவள் தருகிறாள். சொல்லும் தன்மையறிந்து சொல்கிறாள். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இப்பெண்மையை இந்த ஆணாதிக்கக் குமுகாயம் அழுத்தி வைத்துள்ளது. அம்மாயை விலகும் காலம் வெகுத் தொலைவிலில்லை.

http://keetru.com



Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.