Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெள்ளக்காடான தென் மாவட்டங்கள் - கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் நிலைமை என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தென் மாவட்டங்களில் கனமழை
17 டிசம்பர் 2023, 14:43 GMT
புதுப்பிக்கப்பட்டது 33 நிமிடங்களுக்கு முன்னர்

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய தென் மாவட்டங்களில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

மேலும் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம். இந்நிலையில் தென் மாவட்டங்கள் பலவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

சமீபத்தில் தான் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் அருகில் உள்ள மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல அணைகள் நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஓடி கொண்டிருக்கிறது.

 
4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
படக்குறிப்பு,

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலியில் நிரம்பி வழியும் அணைகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதீத மழையால் அங்குள்ள பாபநாசம் அணை, மணிமுத்தாறு அணை உள்ளிட்டவற்றில் நீர் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் இங்கிருந்து உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று காலை முதல் நீடித்து வரும் கனமழையால் பிற்பகல் 2 மணி நிலவரப்படி பாபநாசம் அணைக்கு சுமார் 20,000 கன அடி தண்ணீர் வந்துள்ளது. அதேபோல் மாஞ்சோலை மலைப்பகுதியில் கொட்டி தீர்க்கும் கனமழையால் மணிமுத்தாறு அணைக்கு தண்ணீர் வரத்து 17,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

பாபநாசம் அணை 143 அடி கொள்ளவு மட்டுமே என்பதால் ஏற்கனவே அது 85 சதவீதம் நிரம்பிய நிலையில் விரைவில் அது நிறைய வாய்ப்புள்ளது. எனவே பாபநாசம் அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பாபநாசம் அணையில் இருந்து வெறும் 3000 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில் தற்போது வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

திருநெல்வேலி நகரம்

4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
படக்குறிப்பு,

தென்காசியில் மழைநீரோடு கழிவுநீர் கலந்துள்ளது

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலப்பாளையம், பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகர், பெருமாள்புரம், என் ஜி ஓ காலனி போன்ற பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

மேலும் திருநெல்வேலி டவுன், களக்காடு, திசையன்விளை பகுதியில் உடன்குடி சாலை, நேருஜி கலையரங்கம் மற்றும் செட்டிகுளம் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்த பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மீனவர்கள் வாழ்க்கை ஸ்தம்பித்தது

தூத்துக்குடி சாத்தான்குளம் ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக 2 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 400 விசைப்படகு மீனவர்கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், பைபர் படகு மீனவர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
தென் மாவட்டங்களில் கனமழை

குற்றால அருவிகளுக்கு செல்ல தடை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் காலையிலிருந்து பெய்த தொடரும் கனமழையின் காரணமாக திருவேங்கடம் சாலையில் கழிவு நீருடன் மழை நீர் கலந்து வெள்ளப்பெருக்கு போல் ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றாலம் மெயின் அருவி, பழைய அருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
படக்குறிப்பு,

கூடங்குளம் அதிகாரிகள் குடியிருப்பில் வெள்ளம்

கூடங்குளம் அணுமின் நிலையப் பகுதியில் நிலைமை என்ன?

கூடங்குளம் பகுதியிலும் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், கூடங்குளம் அனு விஜய் நகரியம் வளாகத்திற்குள் வெள்ளம் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்துள்ளனர்.

இந்த பகுதியில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்ற கூடிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

சனிக்கிழமையன்று தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் கொடுத்திருந்த நிலையில், ஞாயிறு(இன்று) அன்று பெய்த கனமழையால் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த பகுதிகளில் மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுத்துள்ள நிலையில் இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு 18ம் தேதியன்று விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள் அடிப்படை தேவைகளுக்கு மட்டும் குறைந்த அளவில் பணியாளர்களை கொண்டு இயங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரலாறு காணாத மழை

சமீபத்தில் சென்னையில் பெய்த மழையே வரலாறு காணாத மழை என்று வானிலை நிபுணர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் தற்போது பாளையங்கோட்டையில் 4.30 மணிநேர நிலவரப்படி 26செமீ மழை பெய்துள்ளது. இதுவே 29ஐ தாண்டினால் கடந்த 150 வருடங்களில் இந்த பகுதியில் பெய்த அதிகமான மழை இதுவே என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் வானிலை நிபுணர் பிரதீப்.

தென்மாவட்டங்களுக்கு விரைந்த மீட்புக்குழு

கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் தூத்துக்குடி மற்றும் தென்காசிக்கு தேசிய பேரிடர் மீட்புகுழு விரைந்துள்ளது. என்டிஆர்ஃஎப் சார்பில் ஒரு அணிக்கு 25 பேர் என்ற கணக்கில் 4 அணிகள் தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடிக்கு சென்றுள்ள அணியே திருநெல்வேலி மாவட்டத்திலும் மீட்பு பணியில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், முதலுதவி மருந்துகள், படகுகள், இயந்திரங்கள் என தயார் நிலையில் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மக்களை தங்க வைக்கும் முகாம்கள், மீட்பு பணிகள் மற்றும் தேவையான அவசர பணிகளை தயார் படுத்தி வருகின்றனர்.

2 நாட்களில் 50 செ.மீ. மழை பெய்ய வாய்ப்பு

தற்போது பெய்யும் மழை கனமழை முதல் அதிகனமழையாக தொடரும் என்று அறிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இதையடுத்து, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அரசு நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இந்த மழை இன்னும் அதி கனமழையாக உருவாகும் என்றும் செவ்வாய்க் கிழமைதான் இதன் வேகம் குறையும் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப். அடுத்த 48 மணி நேரத்திற்கு 30 முதல் 50 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c28y7ygkmk3o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 932 மி.மீ. மழை - தென் மாவட்டங்களின் நிலைமை என்ன?

திற்பரப்பு
17 டிசம்பர் 2023
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய தென் மாவட்டங்களில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

திங்கள்கிழமை (டிசம்பர் 18) நிலவரப்படி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 352 மி.மீ.-க்கு மேல் மழை பதிவாகியுள்ளது என்று மாவட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 118 மி.மீ மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் 206மி.மீ மழை பதிவாகியுள்ளது.

மேலும் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம். இந்நிலையில் தென் மாவட்டங்கள் பலவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

சமீபத்தில் தான் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் அருகில் உள்ள மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல அணைகள் நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஓடி கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நான்கு தென்மாவட்டங்களைப் பார்வையிடச் செல்வதாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை (டிசம்பர் 18) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 
4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், தூத்துக்குடி
படக்குறிப்பு,

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் இடுப்பளவு மழைநீர் சூழ்ந்து இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

என்னென்ன மீட்புப் பணிகள் செய்யப்படுகின்றன?

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, தூத்துக்குடியில் மழைநீரோடு சேர்த்து நிரம்பியிருக்கும் அணைகள் திறந்துவிடப்பட்டுள்ளதால் பக்கிள் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது என்றார்.

வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்க படகுகள் ஒருங்கிணைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்கு வான்வழியே உணவுப்பொருட்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுவதாகத் தெரிவித்தார். இதறகாக கோவை விமானப்படை தளத்துடன் பணிகள் ஒருங்கிணைக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

தற்போதைக்கு தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளும் ரயில்களும் கோவில்பட்டிவரை மட்டுமே இயக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

 
4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
படக்குறிப்பு,

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

காயல்பட்டினத்தில் 932 மி.மீ. மழை

17-ஆம் தேதி காலை ஆறு மணி முதல் 24 மணி நேரத்தில் 361 மி.மீ. மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 932 மி.மீ. மழை பெய்திருக்கிறது.

சாத்தான்குளம், கோவில்பட்டியில் முறையே 466, 495 மி.மி. மழை பெய்திருக்கிறது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 351 மி.மீ. மழை பெய்திருக்கிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

ரயில் சேவைகள் ரத்து

மழை காரணமாக சென்னை- நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் இரயில் இன்று (டிசம்பர் -18 ஆம் தேதி) முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், நெல்லை- ஜாம்நகர் விரைவு ரயில், திருச்செந்தூர்- பாலக்காடு விரைவு ரயில், சென்னை- குருவாயூர் விரைவு ரயில், திருச்சி- திருவனந்தபுரம் விரைவு ரயில், நாகர்கோவில்- கோவை விரைவு ரயில், தாம்பரம்- செங்கோட்டை விரைவு ரயில், வாஞ்சி மணியாச்சி- தூத்துக்குடி முன்பதிவில்லா ரயில்கள், நெல்லை- தூத்துக்குடி பயணிகள் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக மதுரை கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c28y7ygkmk3o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Rain Alert: South மட்டுமில்ல; எங்கே Red Alert? அடுத்த 24 Hours எங்கெல்லாம் கன மழை பெய்யும்?

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதி கனமழை: வானிலை மையம் சரியாக கணிக்க தவறியதா? மேற்குலக மாதிரி துல்லியமாக கணித்தது எப்படி?

வானிலை மாதிரிகள் சரியாக கணிக்கின்றனவா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 9 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள்ளது. காயல்பட்டினம் திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் சிக்கி தவிக்கின்றனர். அரசு இயந்திரம் நிவாரணப் பணிகளில் முறையாக செயல்படுகிறதா என்று கேள்வி எழுப்பப்படும் வேளையில் இந்திய வானிலை மையம் முறையான எச்சரிக்கை சரியான நேரத்தில் கொடுத்திருந்தால் பாதிப்புகள் குறைவாக இருந்திருக்கும் என தமிழக அரசு குற்றம் சாட்டுகிறது.

தென் மாவட்டங்களில் கன மழை குறித்த எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் தாமதமாக கொடுத்தது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

வானிலை எச்சரிக்கை தாமதமாக கிடைத்தது - முதல்வர் குற்றச்சாட்டு

மத்திய அரசிடமிருந்து மழை நிவாரணத் தொகை கேட்டு டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு செய்தியாளர்களை சந்தித்த போது, “டிசம்பர் 17, 18 தேதிகளில் நெல்லை,குமரி, தென்காசி, தூத்துக்குடியில் கடுமையான மழை பெய்தது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.

டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் கடுமையான மழை பெய்யும் என்பதை 17ம் தேதி சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்தது. வானிலை ஆய்வு மையம் கணித்த மழை அளவை விடபல மடங்கு அதிகமாக பெய்தது. காயல்பட்டினத்தில் 94 செ.மீ மழை பெய்தது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை தாமதமாக கிடைத்தாலும், மழை பொழிவு கணித்ததை விட அதிகமாக இருந்தாலும், தமிழக அரசு மீட்பு பணிகளை விரைந்து செயல்படுத்தி வருகிறது. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டும் 141 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.” என்றார்.

வானிலை மாதிரிகள் சரியாக கணிக்கின்றனவா?
 

ரெட் அலர்ட் கடைசி நேரத்தில் கொடுக்கப்பட்டது - அமைச்சர் விமர்சனம்

இதே குற்றச்சாட்டை எழுப்பிய பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நேரத்துக்கும் வெள்ளப்பெருக்கு தொடங்கிய நேரத்துக்கும் இடையிலான காலஅவகாசம் மிகவும் குறைவாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

அவர், “இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகள் துல்லியமாகவும், சரியான நேரத்திலும் கொடுக்கப்பட்டிருந்தால், எதிர்பாராத பாதிப்பு மற்றும் அதன் தீவிரத்தன்மை குறைக்கப்பட்டிருக்கும்.

ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு வெள்ளப்பெருக்கு தொடங்குவதற்கு முன் குறுகிய கால இடைவெளியே இருந்தது. மேற்கு நாடுகளில் இருக்கும் வானிலை கணிப்பு முறைகள் இப்படி இல்லை. நமது வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகளில் ஏற்படும் முக்கியமான தாமதம், நமக்கு இன்னும் துரிதமான துல்லியமான எச்சரிக்கை முறைகள் தேவை என்பதை உணர்த்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேற்கு நாடுகளின் வானிலை மாதிரிகள் மிக துல்லியமாக முன்னெச்சரிக்கை கொடுக்கின்றன என்று தெரிவித்த அமைச்சர் மனோ தங்கராஜ், “இந்திய வானிலை மையத்தின் மழை கணிப்புகளுக்கும் மேற்கத்திய வானிலை கணிப்புகள் படியான மழை எச்சரிக்கைகளுக்கும் வித்தியாசம் உள்ளது என்பது உண்மை. அதி கனமழை மற்றும் உடனடி மழைப்பொழிவு போன்ற நிகழ்வுகள் மேற்கு நாடுகளில் மிக துல்லியமாக கணிக்கப்படுகின்றன. இந்த வேறுபாடு, நமது தயாரிப்பு மற்றும் வெள்ள மீட்பு பணிகளை பாதிக்கிறது” என்றார்.

வானிலை மாதிரிகள் சரியாக கணிக்கின்றனவா?
 

துரிதமான எச்சரிக்கைகளை சரியாக வழங்கும் வகையில், வானிலை ஆய்வு மையம் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். “இத்தகைய சூழல்களில் தமிழ்நாடு அரசு தன்னால் முடிந்த சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எனினும், நிலைமையின் தீவிரத்தன்மை குறித்து, இந்திய வானிலை மையத்தின் தகவல்கள் இருந்திருந்தால் பாதிப்புகள் மற்றும் இழப்புகள் குறைவாக இருந்திருக்கும். சொத்துகள் சேதமடைவதும் குறைந்திருக்கும், வெள்ளத்தில் மக்கள் சிக்கிக் கொண்டு தவிப்பது குறைந்திருக்கும். நமது வானிலை முன்னெச்சரிக்கை முறைகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.” என்று மிக கடுமையாக இந்திய வானிலை மையத்தை சாடியுள்ளார்.

இதே போன்று தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவதாஸ் மீனாவும் இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகள் சரியாக இல்லை என்று கூறியிருந்தார்.

இது போன்ற குற்றச்சாட்டு எழுப்பப்படுவது முதல் முறை அல்ல. ஒக்கி புயலின் போதும், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கருவிகள், தொழில்நுட்பங்கள் துல்லியமாக கணிப்பதில்லை என்று விமர்சிக்கப்பட்டது. சில தனியார் வானிலை ஆர்வலர்கள் பொது வெளியில் கிடைக்கும் தகவல்களை வைத்தே விரிவான முன்னெச்சரிக்கை, மிக குறுகிய பகுதிகளுக்கும் கொடுக்கும் போது, தொழில்நுட்பங்களை கொண்ட இந்திய வானிலை ஆய்வு மையத்தால் ஏன் அதை செய்ய முடியவில்லை என்பது அவ்வபோது எழுப்பப்படும் கேள்வியாக இருக்கிறது.

வானிலை மாதிரி என்றால் என்ன?

வானிலை முன்னெச்சரிக்கை, வானிலை மாதிரிகளிலிருந்து(weather model ) கிடைக்கும் தகவல்களை கொண்டு அளிக்கப்படுகிறது. வானிலை மாதிரி என்பது ஒரு கணினி தொழில்நுட்பமாகும். பூமியின் வளி மண்டலம் போன்ற மெய்நிகர் சூழலை கணினி உருவாக்கிக் கொள்ளும். தட்பவெட்பம், அழுத்தம், ஈரப்பதம், காற்று என பல்வேறு காரணிகளை அந்த மாதிரியால் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும்.

இந்த கணினி மாதிரியில், வானிலை ஆய்வாளர்கள் தற்போதைய வானிலை தரவுகளை உள்ளீடு செய்வார்கள். அதாவது ஒரு இடத்தில் எவ்வளவு வெப்பம் உள்ளது, எவ்வளவு ஈரப்பதம் உள்ளது, காற்றின் வேகம் உள்ளிட்ட தகவல்களை அந்த கணினி தொழில்நுட்பத்தில் உள்ளீடு செய்தால், அந்த வானிலை மாதிரி, இந்த தகவல்களை வைத்து கொண்டு சிக்கலான கணக்குகள் மேற்கொள்ளும். அதன் மூலம், எதிர்காலத்தில் என்ன மாதிரியான வானிலை நிலவும் என்பது வானிலை ஆய்வாளர்கள் கணிப்பார்கள்.

இது போன்று பல்வேறு கணினி தொழில்நுட்பங்கள் உள்ளன. அவை வெவ்வேறு வானிலை மாதிரிகளாக இருக்கும். ஒவ்வொரு மாதிரியும் கொடுக்கும் முடிவுகள் வெவ்வேறாக இருக்கலாம். இந்திய வானிலை ஆய்வு மையம் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட Global Forecast System (GFS ) என்ற வானிலை மாதிரியின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது.

 
வானிலை மாதிரிகள் சரியாக கணிக்கின்றனவா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

'வானிலை மாதிரி ஒரு வழிகாட்டி மட்டுமே'

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஒய். இ. எ. ராஜ் பிபிசி தமிழிடம் விளக்கமாக பேசினார். அவர் “வானிலை ஆய்வு மையத்துக்கு செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் தகவல்களும் இருக்கின்றன, நேரடியாக கண்காணிப்பு மையங்கள் மூலம் கிடைக்கும் தகவல்களும் இருக்கின்றன. துல்லியமான நேரடியாக தகவல் கிடைக்கும் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

தற்போது பயன்படுத்தப்படும் வானிலை மாதிரிகளின் துல்லியத்தன்மையை அதிகப்படுத்தலாம். அதாவது, வானிலை தரவுகள் கணக்கிடப்படும் விதத்தை மேலும் துல்லியமாக்கலாம்” என்றார்.

மேற்கு நாடுகளின் வானிலை மாதிரிகள் இந்திய மாதிரியை விட துல்லியமாக இருப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, “இந்திய வானிலை ஆய்வு மையம் பயன்படுத்தும் Global Forecast System எனப்படும் மாதிரி மேற்கு நாடுகள் உருவாக்கிய மாதிரி தான். அதை இந்தியாவுக்கு ஏற்ற மாதிரி தகவமைத்து பயன்படுத்துகிறார்கள். வானிலை ஆய்வு மையம் பல்வேறு வானிலை மாதிரிகள் என்ன சொல்கின்றன என்பதையும் கண்காணிக்கும்” என்றார்.

வானிலை என்பது தினம் தினம் மாறக்கூடியது, எப்போது, எங்கே, எவ்வளவு என மிக துல்லியமாக யாராலும் கூற முடியாது என தெரிவித்த ராஜ், “வானிலை மாதிரி என்பது நமக்கு ஒரு வழிகாட்டி மட்டுமே. சில நேரங்களில் வானிலை மாதிரிகள் தவறாகவும் கணிக்கலாம். அது தவறு என்று தெரியாது, அதை நிராகரிக்கவும் தைரியம் வேண்டும்” என்றார்.

வானிலை மாதிரிகள் சரியாக கணிக்கின்றனவா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

மேற்குலக மாதிரியில் துல்லியமாக கணிப்பு

மழை தகவல்களை சேகரித்து வரும் வானிலை ஆர்வலர்கள் பலர் தற்போது இயங்கி வருகின்றனர். அவர்களில் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசும் போது, “தென் மாவட்டங்களில் மழை அதிகமாக இருக்கும் என்பதை பல்வேறு வானிலை கணிப்பு மாதிரிகள் கூறியிருந்தன. ECMWF என்ற வானிலை மாதிரி 100 செ.மீ மழை பெய்யும் என்று கூறியிருந்தது. GFS என்ற அமெரிக்க மாதிரி 40 முதல் 50 செ.மீ மழை பெய்யும் என்று கணித்தது. இந்த மாதிரி 27 கி.மீ பரப்பளவில் என்ன நிகழும் என்பதை பொதுவாக கூறும்.

இந்திய வானிலை ஆய்வு மையம் இதனை 12.5 கி.மீ பரப்பளவுக்கு ஏற்றவாறு மாற்றி கணக்கிடுகிறது. இப்படி பார்த்தால், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்னும் துல்லியமாக 12.5 கி.மீ பரப்பளவில் என்ன நிகழும் என்பதை கூறியிருக்க வேண்டும். மிக துல்லியமாக இவ்வளவு மழை என்று கூற முடியாவிட்டாலும், பெரிய அளவிலான மழை பெய்யும் என்பது வானிலை மாதிரிகளால் கணிக்கப்பட்டிருந்தது” என்றார்.

வானிலை மாதிரிகள் எப்போதுமே சரியாகத் தான் கணிக்குமா, அதை அப்படியே ஏற்றுக் கொள்ளலாமா என்று அவரிடம் கேட்டபோது, “ வானிலை மாதிரிகளில் சிற்சில மாற்றங்கள் இருக்கலாம். உதாரணமாக ஒரு வானிலை மாதிரி டெல்லிக்கு துல்லியமாக கணிக்கலாம், ஆனால் தென் மாநிலங்களுக்கு துல்லியமாக இருக்காது. வானிலை மாதிரிகளை தொடர்ந்து கண்காணிப்பவர்களுக்கு எந்த வானிலை மாதிரியை எந்த சூழலில் நம்பலாம் என்பது தெரிய வரும். வெறும் எண்களோடு வானிலை ஆய்வு மையம் தங்களை சுருக்கிக் கொள்ளக் கூடாது. அதையும் தாண்டி செல்ல வேண்டும்” என்றார்.

தென் மாவட்டங்களில் கனமழை

தென் மாவட்டங்களில் பெய்த கன மழையை வானிலை ஆய்வு மையம் கணிக்க தவறியதா என்று சென்னையில், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் துணைத் தலைவர். எஸ். பாலச்சந்திரன்,“டிசம்பர் 15, 16 தேதிகளில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

டிசம்பர் 17ம் தேதி அதி கன மழைக்கான ரெட் அலர்ட் வழங்கப்பட்டது. ரெட் அலர்ட் என்றால், 20 செ.மீக்கு மேல் பெய்யும் எந்த மழையும் அதி கனமழையாகவே கருதப்பட வேண்டும். 95 செ. மீ மழை பெய்யும் என குறிப்பிட்டு கூற முடியாது” என்று கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cn04grzl5eeo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளம் வர முன் அணை கட்டு இது பெரியோர் வாக்கு....😂

 வெள்ளம் வந்தாப்பிறகு சும்மா ஆத்தையடி கொப்பரடி என அலறக்கூடாது 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் தென் மாவட்ட மழை, வெள்ள மீட்புப் பணியிலும் அரசியலா? என்ன நடக்கிறது?

தென் மாவட்டங்களில் கனமழை

பட மூலாதாரம்,X/UDHAY

22 நிமிடங்களுக்கு முன்னர்

தென் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த அதி கனமழையால், காணுமிடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளித்தது. திங்கட்கிழமை மழை நின்ற நிலையில், கடந்த இரண்டு தினங்களாக மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

மீட்புப் பணிக்காக தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினின் உத்தரவின்பேரில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மற்றும் மூத்த ஐஏஎஸ்அதிகாரிகள் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

இதற்கிடையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீட்புபணிக்காக பாதிக்கப்பட்ட மக்களுடன் இல்லாமல், செவ்வாய்கிழமை டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு சென்றது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

அதி கனமழையால் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பும், வெள்ள நிவாரணப் பணிகளும் திமுகவிற்கு எதிராக அரசியலாக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தென் மாவட்டங்களில் வெள்ளபாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆனால், இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு அழைப்பு விடுத்தும் தமிழ்நாடு அரசின் சார்பில் யாரும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவில்லை என ஆளுநர் மாளிகைத் தரப்பு தெரிவித்தது.

இதனால், மாநில அரசுத் துறைகளும், மத்திய அரசுத் துறைகளும் இணைந்து பணியாற்றுவதில் சிக்கல் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வெள்ள நிவாரணப்பணிகள் அரசியலாக்கப்படுவது எப்படி? இது திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா? மத்திய, மாநில அரசுத்துறைகள் இணைந்து செயல்படுவதில் உண்மையில் சிக்கல் உள்ளதா?

 

மழை வெள்ள நிவாரணப் பணியிலும் அரசியலா?

மழை வெள்ளத்தால் இடிந்து தரைமட்டமான வீடு

அதிகன மழை பெய்த உடனே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி கருணாநிதி, ஞானதிரவியம், அமைச்சர் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ.க்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ஆகியோர் களத்திற்கு அனுப்பப்பட்டனர்.

தமிழ்நாடு முதல்வர் டெல்லி பயணத்திற்கு முன், இவர்களுடன் கூடுதலாக அமைச்சர்கள் ஏ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் மற்றும் பி.மூர்த்தி ஆகியோரை வெள்ள நிவாரணப் பணிகளுக்கு நியமித்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஆய்வுப் பணிக்காக தென் மாவட்டங்களுக்கு அனுப்பியதை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் விமர்சித்துள்ளார்.

“அவர் ஒரு விளையாட்டு அமைச்சர். அவர் விளையாட்டாக வந்துவிட்டு, விளையாட்டாக போய்விட்டார். அவருக்கு இங்கு ஏற்பட்டுள்ள உண்மையான பாதிப்புகள் தெரியாது,” என திருநெல்வேலி மாவட்டத்தில் நிவாரண உதவிகள் வழங்கச் சென்றிருந்தபோது செய்தியார்களிடம் கூறினார்.

இதே கருத்தை பிரதிபலிக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “வெள்ள பாதிப்புகளை கண்டு கொள்ளாமல், கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக டெல்லிக்கு சென்றது, தமிழ்நாடு மக்களிடம் குறிப்பாக தென் மாவட்ட மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவர் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டது போல ஊடகங்களில் செய்தி வெளியிடுகிறார்,” என்று விமர்சித்துள்ளார்.

 

எதிர்க்கட்சிகளின் விமர்சனம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம்,UDHAYANITHI STALIN/ X

மழை பாதிப்புகளுக்கு மக்கள் அரசை குறை சொல்லவில்லை என்று கூறும், அரசியல் ஆய்வாளர் எஸ்.சத்தியமூர்த்தி, மழைக்கு பிந்தைய நிவாரண உதவிகளை சரியாகச் செய்யவில்லை என்றால், அது திமுக.விற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றார்.

“சென்னை வெள்ளமோ, அல்லது தற்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அதி கனமழையோ, இதற்கு அரசால் எதுவும் செய்ய முடியாது என்பதை மக்கள் புரிந்துள்ளனர். ஆனால், மக்கள் எதிர்பார்ப்பது எல்லாம், பாதிப்பிற்கு பிறகு அரசு மக்களுடன் இருக்க வேண்டும் என்பது தான். ஆனால், தென் மாவட்டங்களில் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு, அவர்கள் ஒவ்வொரு வீடாக நிவாரணம் வழங்க வேண்டும்,” என்றார்.

மேலும், இந்த நிவாரணங்களை ஒரு மாதத்திற்குள் வழங்கவில்லை என்றால், இது திமுக,விற்கு வரும் தேர்தலில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் கூறினார்.

“ஒரு அசம்பாவிதத்தை அரசியலாக்க முயன்றால், அது மக்களிடம் செல்லாது. ஆனால், அதற்குப் பிறகு விரைவாக செயல்பட வேண்டும். ஆனால், நாடாளுமன்ற தேர்தலுக்கு மிகக் குறுகிய காலமே உள்ளதால், திமுக அரசு விரைவாக செயல்பட்டால் மட்டுமே பாதிப்புகளை தவிர்க்க முடியும். இல்லை என்றால், தேர்தலில் பாதிப்பு ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாது,” என்றார்.

 

"ஸ்டாலினுக்கு கூட்டணி முக்கியம்"

எதிர்க்கட்சி கூட்டணிக் கூட்டம்

பட மூலாதாரம்,AITCOFFICIAL/X

படக்குறிப்பு,

டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்றார்.

ஆனால், ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளது விமர்சனத்திற்குள்ளாகி இருப்பது தொடர்பாக பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, ஸ்டாலினுக்கு அனைத்தையும்விட கூட்டணி மிகவும் முக்கியம் என்றார்.

“வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணியும், ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் ஸ்டாலிணுக்கு முக்கியம். அதேவேளையில், ஸ்டாலினை விமர்சிப்பதன் மூலம், அதிருப்தி ஒட்டுகளை அறுவடை செய்யும் ஆசையில், அதனை அதிமுகவிற்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது என அண்ணாமலையும், அன்புமணி ராமதாஸூம், சீமானும் விமர்சனம் செய்து வருகின்றனர்,” என்றார் ரவீந்திரன் துரைசாமி.

வெள்ளம் வந்தது வேண்டுமானால் இயற்கையாக இருக்கலாம், ஆனால், அதற்கு பின் நடப்பவை அனைத்திலும் அரசியல் இருப்பதால், அது அரசியலாக்கப்படுகிறது, என்றும் கூறினார் ரவீந்திரன் துரைசாமி.

 

"மாரிசெல்வராஜை அழைத்துச் சென்றதும் ஓர் அரசியல் தான்"

உதயநிதி ஸ்டாலினும், மாரி செல்வராஜூம்
படக்குறிப்பு,

நேற்று முன்தினம் மழை பாதிப்புகளை பார்வையிட சென்றிருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன், இயக்குநர் மாரி செல்வராஜூம், அமைச்சர் தங்கம் தென்னரசும் சென்றிருந்தனர்.

திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ், திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளத்தைச் சேர்ந்தவர் என்பதால், வெள்ளத்தில் சிக்கியிருந்த தன் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினரை மீட்க நேற்று முன் தினம் அவர் திருநெல்வேலியில் இருந்தார்.

அப்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டபோது, மாரிசெல்வராஜூம் உடன் இருந்தார். இதனை பலரும் சமூக ஊடகங்களில் விமர்சித்திருந்தனர்.

நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “நிதியமைச்சரைப் பின்னுக்குத் தள்ளி, தனது படத்தை இயக்கிய மாரி செல்வராஜூடன் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தன்னுடைய ஆய்வுப் பணிகளுக்கு எல்லாம் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆக்ஷன் சொல்ல வேண்டும் என உதயநிதி நினைக்கிறார்,” எனக் கூறினார்.

சமூக ஊடகங்களில் வெளியான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், இன்று காலை ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, “என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல …நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது,” என எழுதியிருந்தார் மாரி செல்வராஜ்.

ஆனால், உதயநிதி தன்னுடன் மாரிசெல்வராஜை அழைத்துச் சென்றதும் ஒரு அரசியல் தான் என்கிறார் ரவீந்திரன் துரைசாமி.

“தென் தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினரை மத்தியில் பாஜக.,வும், நாம் தமிழர் கட்சியினரும் கணிசமான ஆதரவு பெற்றுள்ளனர். அதனால், திமுக.விற்கு அவர்கள் மத்தியில் அவ்வளவு ஆதரவு இல்லை. தற்போது, மாரிசெல்வராஜை தன்னுடன் அழைத்துச் சென்றதன் மூலம், அந்த மக்கள் மத்தியில் திமுக.விற்கான ஆதரவு அதிகரிக்கும். இதுவும் ஒரு அரசியல் தான்,”என்கிறார் ரவீந்திரன் துரைசாமி.

மாரி செல்வராஜ் ட்வீட்

பட மூலாதாரம்,X/MARI SELVARAJ

படக்குறிப்பு,

இயக்குநர் மாரிசெல்வராஜ் தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்த படம்

 

ஆளுநர் - அரசு இடையே நடந்தது என்ன?

தேசிய பேரிடர் மீட்புப்டையினர்

பட மூலாதாரம்,NDRF

படக்குறிப்பு,

தேசிய பேரிடர் மீட்புப்படையினரை கனிமொழி எம்.பி., சந்தித்தார்.

இதற்கிடையில், தமிழ்நாடு ஆளுநர் ரவி அழைத்திருந்த ஆய்வுக் கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அதிகாரிகள் செல்லாததும் விமர்சனத்திற்குள்ளனது. இதனால், மாநில மற்றும் மத்திய அரசுத் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை எனப் பேசப்பட்டது.

இதுகுறித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “ திருவனந்தபுரம் மற்றும் ஊட்டியில் இருந்து வரவழைக்கப்பட்ட 105 ராணுவ வீரர்கள், அரக்கோணம் மற்றும் ஆவடியில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட தேசிய பேரீடர் மீட்புப்படையினர், மற்றும் கடலோர காவல்படையினர் இணைந்து, வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் மத்திய அரசுத் துறையினர்தான். இவர்கள் மாநில அரசு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்துதான் மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மத்திய, மாநில அரசு துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை,” என்றார் அவர்.

https://www.bbc.com/tamil/articles/cnerm3n8r2yo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளத்தால் சிதைந்த தூத்துக்குடி - பிபிசி செய்தியாளர்கள் கண்ட கோரக் காட்சிகள்

தமிழ்நாடு, கனமழை, வெள்ளம், இயற்கை, சுற்றுச்சூழல்
படக்குறிப்பு,

தூத்துக்குடி அரசு மருத்துவமனை

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 45 நிமிடங்களுக்கு முன்னர்

மழை பெய்து நான்கு நாட்களுக்குப் பிறகும் தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மிதக்கின்றன. உதவிகளைக் கோரி பல பகுதிகளில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடியை இணைக்கிறது தேசிய நெடுஞ்சாலை 138. இந்த இரு நகரங்களுக்கு இடையிலான சுமார் 50 கி.மீ. தூரத்தை இந்த நான்கு வழிச் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்தில் கடந்துவிட முடியும். ஆனால், புதன்கிழமையன்று பகலில் இந்த சாலையைக் கடக்க கிட்டத்தட்ட ஆறு மணி நேரங்களுக்கு மேல் ஆனது.

காரணம், இந்தச் சாலையின் இரு புறங்களிலும் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லையெனக் கூறி, ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் ஒரு இடத்தில் பொது மக்களை சமாதானம் செய்து, போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினால், வேறொரு இடத்தில் சாலை மறியல் நடக்க ஆரம்பித்தது.

பல வாகனங்கள், சில கிலோமீட்டர் தூரத்தில் நடக்கும் இரு வேறு சாலை மறியல்களுக்குள் சிக்கிக் கொண்டு எங்கேயும் செல்ல முடியாமல் தவித்தனர் அல்லது ஒரு சாலை மறியலைக் கடந்து சென்றால் இன்னொரு சாலை மறியலில் சிக்கிக்கொண்டனர்.

 
தமிழ்நாடு, கனமழை, வெள்ளம், இயற்கை, சுற்றுச்சூழல்

பாதிப்பிலிருந்து மீளாத தூத்துக்குடி மாவட்டம்

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று பெய்த மழையில் உருவான காட்டாற்று வெள்ளம் அந்தோணியார் புரம் அருகில், இந்த நான்கு வழிச் சாலையை உடைத்துக்கொண்டு சென்றது. செவ்வாய்க்கிழமைதான் ஒரு ஓரமாக தற்காலிகச் சாலை அமைக்கப்பட்டிருந்தது.

பல மணி நேரக் காத்திருப்பிற்குப் பிறகு, தூத்துக்குடி நகரைச் சென்றடைந்தால், நகரின் பல இடங்களிலும் இதேபோல சாலை மறியல்கள் நடந்துகொண்டிருந்தன.

சனி - ஞாயிற்றுக்கிழமைகளில் பெய்த பெரு மழையில் இருந்து தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் நகர்ப்புறப் பகுதிகள் மீண்டுவிட்டாலும், தூத்துக்குடி நகரம் இன்னும் மீளவில்லை.

புதன்கிழமையன்றும்கூட, நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், அம்பேத்கர் நகர், ஸ்டேட் பாங்க் காலனி, தபால் தந்தி காலனி உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் நிற்கிறது.

பல பிரதான சாலைகளில் முழங்கால் அளவுக்கு மேல் புதன்கிழமையன்றும் தண்ணீர் தேங்கியிருந்ததால், ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வது இன்னமும் சிக்கலானதாகவே இருக்கிறது.

 
தமிழ்நாடு, கனமழை, வெள்ளம், இயற்கை, சுற்றுச்சூழல்

பட மூலாதாரம்,வள்ளிநாயகம் சுட்கி/FACEBOOK

படக்குறிப்பு,

தூத்துக்குடி மாவட்டத்தின் கருங்குளம் கிராமம்

வெள்ளத்தில் மூழ்கியுள்ள பல கிராமங்கள்

மழை நீர் தேங்கியிருப்பது ஒரு பிரச்சனை என்றால், இதன் காரணமாக பல இடங்களில் இன்னும் மின்சாரம் தரப்படாதது இதைவிட பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

இதனால், குடிநீர், புழங்குவதற்கான நீர், மொபைல் இணைப்பு போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்டிக்கின்றன. மின்சாரம் தரக் கோரியும் உணவு, குடிநீர் போன்றவற்றைக் கோரியும் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் தங்களை வந்து பார்க்க வேண்டும் எனக் கோரியும் பொது மக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் உருவான வழி மண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த சனிக்கிழமையன்று காலையில் பெய்ய ஆரம்பித்த மழை திங்கட்கிழமை காலை வரை பெய்தது. இதனால், தூத்துக்குடி நகரமும் அதனை ஒட்டியுள்ள கிராமங்களும் வெள்ள நீரில் மூழ்க ஆரம்பித்தன.

தூத்துக்குடி - திருநெல்வேலி, தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலைகள் துண்டிக்கப்பட்டன. கோரம்பள்ளத்திற்கு அருகில் சாலையை உடைத்துக்கொண்டு சென்ற வெள்ளம் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்ததில் சுமார் ஐயாயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டன.

இங்கிருந்த மக்கள் மீட்கப்பட்டு, திருமண மண்டபங்களில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் தற்போது தங்கள் வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

தமிழ்நாடு, கனமழை, வெள்ளம், இயற்கை, சுற்றுச்சூழல்
படக்குறிப்பு,

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

வீணான 1500 யூனிட் இரத்தம்

கிராமங்களில் தான் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்தது என்றால், தூத்துக்குடி நகருக்குள் நிலவரம் அதைவிட மோசமாக இருந்தது. நகரின் முக்கியப் பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கின. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய கட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்பளவுக்கு தண்ணீர் புகுந்தது. இதனால், மருத்துவ சேவைகளை அளிப்பதில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. தரைத் தளத்திற்குள் தண்ணீர் புகுந்ததில் இருதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய 'கேத் லேப்' பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதிலிருந்த கருவிகளும் தண்ணீரில் மூழ்கின.

அதேபோல இரத்த வங்கியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1,500 யூனிட் ரத்தம் வீணாகப் போனது. மழை நீர் உள்ளே புகுந்தவுடன், கீழ்த் தளத்தில் இருந்த நோயாளிகள் மேல் தளத்திற்கு மாற்றப்பட்டனர். ஆனால், இந்தப் பிரச்சனையைத் தாண்டியும் இங்குள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையும் உணவும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு, கனமழை, வெள்ளம், இயற்கை, சுற்றுச்சூழல்
படக்குறிப்பு,

'கேத் லேப்' பகுதி

குறிப்பாக, மழை நீர் சூழ்ந்திருந்த நிலையிலும் ஞாயிற்றுக் கிழமையும் திங்கட்கிழமையும் சில பிரசவங்களும் நடந்திருக்கின்றன. புதன்கிழமையன்று மழை நீர் சற்று வடிந்திருந்தாலும் வளாகத்தின் பல பகுதிகளில் மழை நீர் முழங்கால் அளவுக்கு இன்னமும் தேங்கியிருக்கிறது. அவசர நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணி, தற்போது தரைத் தளத்தில் துவங்கியிருக்கிறது.

தூத்துக்குடியிலிருந்து காயல்பட்டனத்திற்குச் செல்லும் சாலையில் ஆத்தூர் அருகே வெள்ள நீர் சூழ்ந்திருப்பதால், தூத்துக்குடியிலிருந்து அந்தப் பகுதியை அணுக முடியாத நிலையே நீடிக்கிறது. கடந்த சனி - ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழ்நாட்டிலேயே அதிக மழை பெய்த பகுதியான காயல்பட்டனத்தில் பல பகுதிகள் இன்னமும் மழை நீரில் மூழ்கியிருக்கின்றன.

 
தமிழ்நாடு, கனமழை, வெள்ளம், இயற்கை, சுற்றுச்சூழல்

இயல்பு நிலை திரும்ப பல நாட்களாகும்

திருநெல்வேலி, தூத்துக்குடியை சுற்றியுள்ள கிராமங்கள் பலவும் இதேபோல மழை நீரால் சூழப்பட்டிருப்பதால், இந்தக் கிராமங்களுக்கு புதன்கிழமையன்றும் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை தேசிய பேரிடா் மேலாண்மைக் குழுவின் ஆலோசகா் கா்னல் கே.பி.சிங் தலைமையிலான மத்திய குழுவினா் ஆறு பேர் புதன்கிழமையன்று பார்வையிட்டனர்.

தூத்துக்குடி நகரில் மழையின் பாதிப்பு நீடிப்பதால், டிசம்பர் 21ஆம் தேதியும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

திருநெல்வேலி நகருக்கு ரயில் சேவையும் தூத்துக்குடிக்கு விமான சேவையும் துவங்கப்பட்டுவிட்டன என்றாலும்கூட, இந்தப் பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப இன்னும் பல நாட்கள் தேவைப்படும்.

https://www.bbc.com/tamil/articles/c4nyzregld5o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20 உடல்கள் மீட்பு 40 இடங்களில் மீட்புப் பணி சிரமம் மக்கள் மறியல் - தூத்துக்குடி வெள்ள பாதிப்பு நிலவரம்

21 DEC, 2023 | 11:20 AM
image
 

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 20 பேர் இறந்துள்ளனர். மழை வெள்ளத்துக்கு 9 பேர் இறந்திருப்பதாக தமிழக அரசின் வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் கோ.பிரகாஷ்  கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 20 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

மழை வெள்ளத்தில் மூழ்கி 16 பேரும் சுவர் இடிந்து விழுந்து 2 பேரும் மின்சாரம் தாக்கி 2 பேரும் உயிரிழந்துள்ளனர். 20 பேரின் உடல்களும் முதலில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் முழுவதும் மழைநீரால் சூழப்பட்டுள்ளதால் மின்சாரம் இல்லை. ஜெனரேட்டர் மூலம் அத்தியாவசிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மின்சாரம் இல்லாததால் பிணவறையில் உடல்களை பாதுகாப்பாக வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவேஇ உடல்களை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட இலவச அமரர் ஊர்திகள் மூலம் உடல்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தூத்துக்குடியில் வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் கோ.பிரகாஷ் கூறியது: “மத்திய ஆய்வு குழுவினர் தூத்துக்குடிஇ ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர் காயல்பட்டினம் பகுதிகளை ஆய்வு செய்கின்றனர். ஆய்வின்படி இழப்பீடுகள் வழங்கப்படும். தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களில் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு சேதாரம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. காலை வரை 9 பேர் இறந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. முழு சேதாரம் உயிரிழப்பு குறித்து தொடர்ந்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

https://www.virakesari.lk/article/172195

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கை இறந்தது தெரியாமல் சடலத்தை ஏந்திக்கொண்டு தத்தளித்த பெண் - தூத்துக்குடியில் நடந்த துயரம்

இயற்கை, வெள்ளம், கனமழை, தமிழ்நாட்டு, சுற்றுச்சூழல்
படக்குறிப்பு,

ஆன்சி

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

"அம்மாவை பாதுகாப்பாக முன்னே அனுப்பிவிட்டு, நான், தங்கை, அப்பா மழையில் நடந்து சென்று கொண்டிருந்தோம். திடீரென அதிகளவு வெள்ளம் பாயத் தொடங்கியது. எங்களை காப்பாற்ற முயன்ற அப்பாவை தண்ணீர் ஒரு பக்கம் இழுத்துச் சென்றது.

"நீரில் விழுந்த என் தங்கையை தூக்கி, தோள்களில் ஏந்திக் கொண்டு இரண்டரை மணிநேரம் மரக்கிளையை பிடித்தவாறு வெள்ளத்தில் நின்றிருந்தேன். அப்போது எனக்கு தெரியாது, நீரில் விழுந்த சில நிமிடங்களில் அவள் இறந்து விட்டாள் என்று," மேற்கொண்டு பேச முடியாமல் தவிக்கிறார் ஆன்சி.

ஞாயிற்றுக் கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தனது அப்பா அமலன், மற்றும் தங்கை அக்ஷிதாவை ஒரே சமயத்தில் இழந்துள்ளார் ஆன்சி.

தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் பல இடங்கள் இடுப்பளவு நீரில் மூழ்கியுள்ளன. இதுவரை எத்தனை உயிர்கள் இந்த வெள்ளத்திற்கு பலியாகியுள்ளன என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வரும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. வெள்ள பாதிப்புகள் மற்றும் கள நிலவரங்களைத் தெரிந்துகொள்ள பிபிசி செய்திக் குழு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பயணித்து வருகிறது. அமலன் மற்றும் அவரது மகள் அக்ஷிதாவுக்கு என்ன நடந்தது என தெரிந்துகொள்ள அவர்களின் வீட்டிற்கு சென்றோம்.

 
இயற்கை, வெள்ளம், கனமழை, தமிழ்நாட்டு, சுற்றுச்சூழல்
படக்குறிப்பு,

தூத்துக்குடியில் உள்ள ஆன்சியின் வீடு

'சில நொடிகளில் எல்லாம் முடிந்துவிட்டது'

தூத்துக்குடி மாவட்டம் முத்தம்மாள் காலனியைச் சேர்ந்தவர் அமலன், எலெக்ட்ரிஷியனாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஆன்சி, அக்ஷிதா என இரு மகள்கள். ஞாயிற்றுக் கிழமை இரவு தன் குடும்பத்தோடு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அவர் முயற்சித்த போது தான் இந்த துயரச் சம்பவம் நடந்திருக்கிறது.

நடந்தது என்னவென்று நம்மிடம் விவரித்தார் அமலனின் மூத்த மகள் ஆன்சி, "ஞாயிற்றுக் கிழமை இரவு, என்னிடம் டியூஷன் படிக்கும் மாணவர்கள் தொலைபேசியில் அழைத்து, கனமழை பெய்யப் போகிறது, வெள்ளம் அதிகமாக வரும், உங்கள் வீடு இருக்கும் பகுதி தாழ்வான பகுதி, எனவே எங்கள் வீட்டிற்கு வந்து விடுங்கள் அக்கா என்று கூறினார்கள்," என்றார்.

"எனது மாணவர்களின் வீடு சற்று மேடான பகுதியில் உள்ளது. நான், தங்கை அக்ஷிதா, அப்பா மற்றும் அம்மா அனைவரும் பயத்தில் வீட்டைப் பூட்டாமல், எதுவும் எடுக்காமல் வேகமாக நடக்கத் தொடங்கினோம். அப்போது தெருக்களில் வெள்ளம் இல்லை," எனக் கூறுகிறார் ஆன்சி.

தொடர்ந்து பேசிய அவர், "அம்மா சற்று முன்னே நடந்து சென்றுக் கொண்டிருந்தார். திடீரென வெள்ளம் பாயத் தொடங்கியது. என்ன நடக்கிறது என புரிவதற்குள் எங்களை வெள்ளம் இழுத்துச் சென்றது. அம்மா முன்னே சென்றதால் பாதுகாப்பான ஒரு இடத்தில் ஏறி நின்றுக் கொண்டார்," என்றார்.

"அப்பா எங்களை வெள்ளத்திலிருந்து காப்பாற்ற முயன்றார், ஆனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர் வேறு பக்கமாக இழுத்துச் செல்லப்பட்டார்," என்றார்.

"எனது தங்கை நீரில் மூழ்கி விட்டாள். நான் அவளை ஒரு கையில் இழுத்து பிடித்துக் கொண்டு மறுகையால் ஒரு மரக்கிளையை பற்றிக்கொண்டேன்," என்று கூறிய ஆன்சி, தொடர்ந்து பேசினார்.

 

'இரண்டரை மணிநேரம் வெள்ளத்தில் நின்றிருந்தேன்'

இயற்கை, வெள்ளம், கனமழை, தமிழ்நாட்டு, சுற்றுச்சூழல்
படக்குறிப்பு,

ஆன்சியின் தங்கை அக்ஷிதா மற்றும் தந்தை அமலன்

"வீடுகளுக்கு மேலிருந்தவர்கள் தங்கையை மேலே தூக்கு எனக் கத்தினார்கள், மரக்கிளையை பற்றிக்கொண்டு கஷ்டப்பட்டு அவளைத் தூக்கி என் தோளின் மேல் போட்டுக்கொண்டேன். அதற்குள்ளாகவே அதிகளவு தண்ணீர் அவள் மூக்கில் ஏறிவிட்டது. மூன்று முறை அப்பாவின் அலறல் மட்டும் எனக்கு கேட்டது, ஆனால் அவரைக் காணவில்லை," நடந்ததை தொடர்ந்து கூற முடியாமல் தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார் ஆன்சி.

"இரண்டரை மணி நேரம் மரக்கிளையை பிடித்தவாறும், பேச்சு மூச்சின்றி கிடந்த என் தங்கையை தோள்களில் ஏந்திக்கொண்டும் வெள்ளத்தில் நின்றிருந்தேன். அம்மா ஒன்றும் செய்ய இயலாத நிலையில் கதறிக் கொண்டிருந்தார். வீடுகளுக்கு மேல் இருந்தவர்கள் சேலைகளை கயிறு போல கட்டி தூக்கிப் போட்டார்கள், அதைப் பற்றிக்கொண்டேன்."

"நீரில் இருந்து என்னையும் தங்கையையும் மேலே தூக்கினார்கள். அப்போது கூட எங்களுக்கு தெரியாது என் தங்கை இறந்து விட்டாள் என. யாருக்கும் தொடர்பு கொள்ள முடியவில்லை, எந்த அவசர எண்களும் வேலை செய்யவில்லை. போலீஸ், ஆம்புலன்ஸ் என எந்த உதவியும் கிடைக்கவில்லை" என்கிறார் ஆன்சி.

"மூன்று நேரம் கழித்து ஒரு போட் வந்தது, அதில் ஏறி பிரதான சாலைக்கு சென்று, அங்கு வந்த ஒரு பால் வண்டியை மறித்து, தங்கையை ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவள் ஏற்கனவே இறந்துவிட்டாள் எனக் கூறினார்கள். அவள் நீரில் விழுந்து நான்கு மணிநேரம் ஆகியிருந்தது," என்று கண்ணீருடன் கூறினார் ஆன்சி.

இரண்டு நாட்களுக்கு பிறகு கிடைத்த தந்தையின் உடல்

இயற்கை, வெள்ளம், கனமழை, தமிழ்நாட்டு, சுற்றுச்சூழல்
படக்குறிப்பு,

சோகத்தில் ஆன்சியின் குடும்பத்தினர்

அப்பாவின் உடல் இரண்டு நாட்களாக கிடைக்கவில்லை என்றும் பின்னர் அருகில் உள்ள இடத்தில் கண்டெக்கப்பட்டதாகவும் கூறுகிறார் ஆன்சி. ஆனால் வெள்ள நீர் சூழ்ந்து இருந்ததால், உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அமலனின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

"அப்பாவின் உடல் அங்கே கிடக்கிறது எனத் தெரிந்தும், இரண்டு நாட்களாக எந்த உதவியும் அரசிடமிருந்து வராமல் தவித்து போய்க் கிடந்தோம். பின்னர் இங்கிருந்தவர்களே அப்பாவின் உடலை மீட்டார்கள். எப்.ஐ.ஆர் பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது.

"இன்று நான்காவது நாள், இன்னும் எனது அப்பா மற்றும் தங்கையின் உடலைத் தரவில்லை. ஒரேநாளில் குடும்பத்தில் இருவரை இழந்துவிட்டு நானும் அம்மாவும் நொறுங்கிப் போய் கிடக்கிறோம். தயவு செய்து அவர்களின் உடல்களை சீக்கிரமாக கொடுங்கள்," என கண்ணீருடன் கோரிக்கை வைக்கிறார் ஆன்சி.

பிபிசி செய்திக் குழு முத்தம்மாள் காலனிக்கு சென்ற போது, அங்கிருந்த பல பகுதிகள் இடுப்பளவு நீரில் மூழ்கி இருந்ததைப் பார்க்க முடிந்தது.

 

இயல்பு நிலை திரும்ப பல நாட்களாகும்

இயற்கை, வெள்ளம், கனமழை, தமிழ்நாட்டு, சுற்றுச்சூழல்

திருநெல்வேலி, தூத்துக்குடியை சுற்றியுள்ள கிராமங்கள் பலவும் இதேபோல மழை நீரால் சூழப்பட்டிருப்பதால், இந்தக் கிராமங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை தேசிய பேரிடா் மேலாண்மைக் குழுவின் ஆலோசகா் கா்னல் கே.பி.சிங் தலைமையிலான மத்திய குழுவினா் ஆறு பேர் புதன்கிழமையன்று பார்வையிட்டனர்.

தூத்துக்குடி நகரில் மழையின் பாதிப்பு நீடிப்பதால், இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

திருநெல்வேலி நகருக்கு ரயில் சேவையும் தூத்துக்குடிக்கு விமான சேவையும் துவங்கப்பட்டுவிட்டன என்றாலும் கூட, இந்தப் பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப இன்னும் பல நாட்கள் தேவைப்படும்.

https://www.bbc.com/tamil/articles/ckm7yn01ye7o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"December பேரழிவு - இதைவிட பெரிய ஆபத்து காத்திருக்கு..." Ramanan Detailed Interview

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வட தமிழகத்தை விட தென் தமிழகத்தில் உயிர்ரிழப்பு அதிகமாக உள்ளது.

வைகையில் ஒரு தொகை கால்நடைகள் அடித்து செல்லப்படும் வீடியோ திகிலூட்டுவதாக அமைந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.