Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்ர ராசாவுக்கு

brass-natra.jpg?resize=600%2C400&ssl=1

யன்னலருகே இருந்த மேசையின் மூலையில் சிறு தொட்டியில் வைக்கப்பட்டிருந்த ரோஜா செடிக்கு கிளாசில் இருந்த தண்ணீரை ஊற்றிவிட்டு, அதன் மிருதுவான இலைகளை தடவிக்கொடுத்தார் முருகேசர்.

ஊற்றிய நீரை உறுஞ்சிய தொட்டிமண்ணை விரலினால் கிளறி ஈரப்பதத்தை பரிசோதித்த திருப்தியுடன் வெற்று கிளாசை மேசையில் வைத்தார். அந்த அறையில் உயிர்ப்புடன் இருந்தது அவரும் அந்தச் செடியும்தான்!

அவரது அறை அத்தனை பெரியது அல்ல. ஒரு கட்டில் மூலையில் அவரது உடமைகளையும் உடைகளையும் வைக்க ஒரு கப்போர்ட், சாய்ந்திருக்க ஒரு சாய்மனைக்கதிரை, சுவரில் பதித்திருக்கும் 15″ டி.வி, அதன் கீழ் ஒரு மேசை, மூலையில் உறங்கும் அவர் கைத்தடி, குளியலறையையும் டொயிலெட்டையும் இணைக்கும் ஒரு கதவு. இதுவே அவர் உலகம். ஒரு வயோதிபர் விடுதியில் இவைகளை விட வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

ஒரு மனிதன் மூப்படைய அவன் சஞ்சரிக்கும் பரப்பளவு குறைந்து கொண்டு போவது ஒரு சோகமான உலக நியதி. அந்த குறுகும் உலகைத் கூட கைத்தடி பிடித்து கடக்க வேண்டிய கட்டாயத்தையும் இறைவன் சமைத்துவைத்து விடுகிறான்!

அவரின் அறையில் ஹீட்டர் வசதிகள் இருந்ததால், மெல்பேர்ன் குளிர் அவரை தீண்டவில்லை. ஒன்பது வருடங்களுக்கு முன் பெற்றோர் இணைப்பு விசாவில் வந்து சேர்ந்ததால் அவருக்கு ஆஸ்திரேலிய பிரஜைக்குரிய எல்லா வசதிகளும் உரிமையாகின.
இளைய மகன் சபேசன் குடும்பத்துடன் எட்டு வருடங்கள் வாழ்ந்து, ஒரு வருடத்திற்கு முன்புதான் இந்த ‘றிவ சைட் ஏஜ் கேர்’ வாசியானார். இந்த இடப்பெயர்ச்சிக்கு சபேசன் பல காரணங்களை சொன்னாலும், தனது எண்பத்தி ஏழு வயதும் ஒரு காரணம் என்பதை அவர் அறிவார்.

“அப்பு, இஞ்ச தனிச்சுப்போவியள். நானும் செல்வியும் வேலைக்கு போனாப் பிறகு நீங்க விழுந்து கிழுந்து போட்டியள் எண்டா ஆரு பாக்கிறது? அங்க உங்கள நல்லா பாத்துக்கொள்ளுவினம். உங்கள குளிப்பாட்ட, சாப்பாடு பருக்க செல்வியால ஏலாதுதானே? அங்க உங்களுக்கு எண்டு ஒரு அறை தருவினம். குளிப்பாட்ட கிளிப்பாட்ட அங்க கெயாறஸ் இருப்பினம். சொன்ன வேளைக்கு சாப்பாடு….வருத்தம் வாதை எண்டாலும் உடனே டொக்டர அங்கயே வருவிப்பினம். இஞ்ச நானும் செல்வியும் வேலைக்கு போனாப்புறம் நீங்க தனிச்சு போவியள். மகள் ஆர்த்தியும் யூனிவர்சிற்றியும் படிப்பும் எண்டு ஓடியபடியல்லோ இருக்காள்” என்று மகன் அடுக்கிய காரணங்கள் எல்லாம் அவருக்கு வெற்று வார்த்தைகளாகவே பட்டது.

இதுவே இங்கு ஒரு நாகரீகமாய் போய்விட்டது. வெள்ளைக்காரனின் சமூக சடங்குகளை பிரதியெடுத்து வாழும் வாழ்வுதான் உயர்ந்தது எனும் ஒரு மனப்பான்மை நம்மவர்களுள் குடிகொண்டு செழித்து வளர்வதை முருகேசர் அறியாதவர் அல்ல.

இன்று மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. அவர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நாள் அது. மெல்பேர்ன் நகரின் வட-மேற்கில் இருக்கும் ‘சன்சைன் முதியோர் தமிழ் மன்றத்தின்’ மாதாந்த சுற்றுலா நாள் இன்று. இந்த ஞாயிறுகளில் ஒரு பேரூந்தில் வீடுகளிலும் முதியோர் இல்லங்களிலும் வாழும் மூத்தபிரஜை அங்கத்தினர்களை வந்து ஏற்றிக்கொண்டு ஒரு நாள் சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்று, பின்னர் மாலையில் வந்து இறக்கி விடுவார்கள். முருகேசர் தவறாமல் கலந்துகொள்ளும் நிகழ்வு இது. முதியவர்களையும் சமுதாயத்தில் ஒரு துடிப்புள்ள பிரஜைகளாக வாழவைக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் முன்னெடுக்கும் சமூகநல முயற்சிகளில் இதுவும் ஒன்று.

பயணத்தின் போது வாய்க்கு ருசியான உணவு வகைகள் பரிமாறப்படுவதும் ஒரு விசேடம். யாழ்ப்பாணத்து கறித்தூளும் தாளித்த கருவேப்பிலையின் நறுமணமும் கட்லட், பற்றீஸ் என்ற பெயரில் பேரூந்தை நிறைக்கும்.

ஏஜ்ட் கெயாரில் பரிமாறப்படும் ‘வெள்ளைக்காரனின்’ உணவு வகைகளை விழுங்கி மரணித்த முருகேசரின் நாவு விழித்துக் கொள்ளும். “காஞ்சி போன ரொட்டி துண்டும் சூப்பும் இவரு டின்னர்” எனும் பாடலை ஞாபகமூட்டும் சாப்பாடு வகைகளை உண்டு அவருக்கு அலுத்துவிட்டது. இடையிடையே செல்வியின் சமையலை சபேசன் கொண்டுவந்து பரிமாறும்போது தான் இழந்தது உறவுகள் மட்டுமல்ல என்பதை எண்ணிக்கொள்வார்.

இன்று கடற்கரை விஜயம். அங்கு போகும் வழியில் ஒரு உள்ளூர் மார்க்கட்டுக்கும் அழைத்துச் செல்வதாய் அழைப்பு சொல்லிற்று.

பேரூந்து கலகலவென்று சம்பாஷணைகளில் நிரம்பி வழிந்தது. தமது வலிகளையும் வாதைகளையும் பகிர்ந்து கொள்பவர்கள், தம் தனிமையையும் புறக்கணிப்புகளையும் மறைக்க கோமாளி முகமூடிகளை அணிந்த சில முகங்கள், ‘இன்னும் எத்தனை நாள் இப்படி’ என்ற ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் உருவங்கள், கடந்த கால இன்ப நினைவுகளை மீட்டெடுக்க தூண்டில் போடும் சில சிந்தனை முகங்கள், வழுக்கிச் செல்லும் நினைவுகளை வலிந்து பற்றி வார்த்தைகளாக்கி பகிரும் கதைசொல்லிகள் என பல வகை மூத்தோர் கூட்டம்.

அவர்கள் மாற்றியமைக்க நினைத்த உலகே அவர்களை சிறைப்படுத்தி வைத்த சோகம் பலர் முகங்களில் கோடிழுத்து நின்றன.

முருகேசர் தன் சக பயணி நண்பரான துரைராஜாவுடன் அமர்ந்துகொண்டார். இருவருக்கும் உலக அரசியலில் ஈர்ப்பு இருந்தமையினால் அதுவே அவர்கள் உறவிற்கு பசையானது.

அரைமணி நேரத்திலேயே பேரூந்து அந்த ‘சண்டே மார்க்கட்’ எனும் சந்தைக்கு வந்து சேர்ந்தது. “கெதியா இறங்கி பார்த்திட்டு வந்துருங்கோ…..வெய்யில் ஏற முன்னம் போகவேணும் கண்டியளோ” என்ற கட்டளைக்கமைய எல்லோரும் பஸ்ஸை விட்டு இறங்கினர்.

இந்த மார்க்கட்டில் உணவு வகைகள், தோட்டத்து காய்கறிகள், பழைய உடைகள், புத்தகங்கள், தோட்டவேலை செய்வதற்கான பாவித்த உபகரணங்கள், பூச்செடிகள், மற்றும் ‘தட்டு முட்டு’ சாமான்கள் என பலவகை பண்டங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அனேகமானவை பாவித்த பொருட்களும் ‘கராஜ் சேல்’ என்ற வீட்டு வாசல் விற்பனையில் மலிவு விலையில் வாங்கி விற்பனைக்கு வைக்கப்பட்டவை.

முருகேசரும் துரைராசாவும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களில் ஆர்வமின்றி நடைபயின்றனர்.

“அங்க பாத்தியளோ?….நம்மட ஊர் நடராசர் சிலை போல கிடக்குது. உது எங்க இஞ்ச வந்தது?” என்ற துரைராசாவின் கேள்வி முருகேசரின் கவனத்தை அந்த மேசையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த ‘தட்டு முட்டு’ சாமான்களுடன் கிடத்தி வைக்கப்பட்டிருந்த அந்த நடராசர் சிலை மேல் திருப்பியது.

ஆம், அது உண்மையே. வெங்கலத்தால் செய்யப்பட்ட வட்டமான சிலை. நடராசர் நர்த்தனம் புரியும் சிலை வடிவம்.

அதைத் தூக்கி அதன் பின்புறம் ஒட்டியிருந்த வெள்ளை காகிதத்தில் எழுதியிருந்த விலையை பார்த்தார். $10 என்று எழுதியிருந்தது.

“நல்ல வடிவான சிலை…. தனி வெங்கலத்தில செய்திருக்கினம்….. உதப்போல ஒரு சிலைய தேடித்திரியிறன்…. விலைய கேட்டுப்பாப்பம். $5 இற்குத் தருவானோ தெரியாது.”

“ஓம், நல்லாத்தான் இருக்குது ….விருப்பம் எண்டால் கேட்டுப்பாரும்” என்ற துரைராசாவின் அங்கீகாரத்தால் உந்தப்பட்ட முருகேசர், மேசையின் மறுபுறம் நின்றவனிடம் தன் பேரத்தை வார்த்தைகளாக்கி “கான் ஐ ஹாவ் இட் ஃபோர் $5.”

“நோ சேர்…. வட் எபவுட் $8 ? “

இது எட்டு வெள்ளிக்கு லாபமே என்பதை அவர் மனக்கணிப்பு சொல்லிற்று.
பணம் கைமாற நடராசர் முருகேசரின் உடமையானார்.

x x x x x

மாலை ஆறு மணிக்கு சுற்றுலா முடிந்து ஏஜ் கேருக்கு வந்து சேர்ந்த முருகேசருக்கு இரவு உணவு அவரது அறை மேசையில் தயாராக காத்திருந்தது.
அவருக்கோ ஊர் சுற்றிய களைப்பு. ஒரு ‘காக்காய் குளியலுடன்’ தலையை துவட்டிவிட்டு கட்டிலில் அமர்ந்து தான் அன்று சந்தையில் வாங்கிய நடராசர் சிலையை கையிலேந்தி பழைய நினைவுகளில் மூழ்கினார். நினைவுகள், அவரும் மனைவி பாக்கியமும் இன்பமாய் கழித்த நாட்களுக்கு அவரை இழுத்துச் சென்றன.

திருமணமாகி ஒன்பது மாதங்கள் கடந்திருக்கும். இருவரும் தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசிக்கும் எண்ணத்தில் திருச்சி வந்திறங்கி, பின்னர் சில திருத்தலங்களை தரிசித்துவிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலை வந்தடைந்தனர். ஆகம விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டிருந்த ராஜகோபுரங்களின் கம்பீரமும் அழகும் அவர்களை பிரமிக்கவைத்தது. கிழக்கே அமைந்திருந்த ராஜகோபுரத்தில் இருந்த நாட்டியத்தின் 108 கரணங்களை பிரதிபலிக்கும் சிற்பங்களை பாக்கியம் வியப்புடன் பார்த்து “உதுகளையெல்லாம் எப்படித்தான் கட்டியிருப்பினமோ?” என்று கூறி வியந்தாள். எல்லா சன்னதிகளையும் கோயிலின் தீர்த்தக்குளமான ஆனந்த தீர்த்தத்தையும் பார்த்தபின்பு, பிரகாரத்தை சுற்றி வந்து பூஜை செய்துவிட்டு கோயிலிலிருந்து வெளியே வந்தனர்.

கோயிலின் முன்னால் இருந்த கடைவீதியில் பல விதமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

தெய்வீக உணர்வில் திழைத்திருக்கும் பயணிகள் மென்மனதில் ‘வாழைப்பழத்தில் ஊசியாக’ வணிகம் சொருகப்படும் தலங்கள் இவை.

அவர்களை கவர்ந்தது அழகான வெண்கல மற்றும் பித்தளை விக்கிரகங்கள் விற்கும் அந்தச் சிறிய கடை.
“ஐயா….நல்ல டிசைன் சிலைகளுங்க. நாங்க வாங்கி விக்கிறதில்லீங்க…எல்லாம் எங்கட தயாரிப்புங்க… இங்க சிலைய வாங்குநாக்கா நாங்களே பிஃரீயா எழுத்த பொறித்துத் தருவமுங்க….வேற இடத்தில வாங்கினீங்க….. அதுக்கு வேறா சார்ஜு பண்ணுவானுங்க” என்ற கடைப்பையனின் விற்பனை மந்திரம் எந்த கஸ்டமரையும் கட்டிப் போட்டுவிடும்.

பாக்கியம்தான் சிலை வாங்குவதில் மும்முரமாய் இருந்தாள்.
“சும்மா காசப்பாக்கம ஒண்ட வாங்குவம். சாமி அறைக்கும் ஒண்டு வேணும். இஞ்ச வாங்கின ஞாபகமும் இருக்குமல்லோ….இல்லாட்டி பேந்து துக்கப்படுவம்”
மனைவியின் கெஞ்சலுக்கு இளகிய முருகேசர், பாக்கியம் தெரிவு செய்த ஒரு நடராஜர் சிலையை வாங்கி அவள் கைகளில் திணித்து “சரி…சிலையில என்ன எழுதப்போறீர்?” என கேள்வியை தொடுத்தார். பிரபஞ்சத்தின் வட்டத்தினுள் நடராஜர் வலது கையில் அபய முத்திரையையும் இடது காலை உயர தூக்கியும் ஆனந்த தாண்டவம் ஆடும் உருவச்சிலை அது.

முருகேசரின் கேள்விக்கு பாக்கியம் பதில் அளிக்கும் முன்பே இடையில் குறுக்கிட்ட கடைப்பையன் “என்ன பொறிச்சுத் தரணுமினு இந்த பேப்பர் துண்டில எழுதிக் தாங்க அம்மா….மிஸ்டேக் இல்லாம தமிழில எழுதித் தரணுமுங்க”.
பேப்பரை வாங்கி பாக்கியம் ஒரு கண யோசனையில் பின் பேனாவால் “என்ர ராசாவுக்கு” என எழுதி பையனிடம் கொடுத்தார்.

அதை படித்த பையனின் முகம் கோணலானது. கண்களை குறுக்கி மூக்கை சுழித்து “அம்மா, ‘எனது ராஜாவுக்கு’ அப்படீணு சுத்த தமிழ்ல பொறிச்சி தரட்டுமா?”
“ஐயோ வேணாம்…நீ ஒண்டும் மாத்த கீத்த வேணாம். அதயே பொறித்துத் தா” என்று ஒரு ரகசியத்தை கூறுவது போல் சொன்ன பாக்கியத்தின் முகம் பெண்மைக்கே உரிய வெட்கத்தால் சிவந்தது. குறும்புக்கார பையனின் கேள்வி தொடர்ந்தது. “அப்படீனா ராசாவுக்கு அப்புறம் ஐயாட பேர பொறித்……”. அவன் வார்த்தையை முடிக்கும் முன்னே இடைமறித்த பாக்கியம் “அது ஒண்டும் தேவையில்ல. நான் சொன்னத செய்…..அவர விட்டா எனக்கு வேறு யாரு ராசா?” என கூறிவிட்டு பையனிடம் அதிகப்பிரசங்கித்தனமாக பேசிவிட்டேனோ என்ற உணர்வில் நாக்கை கடித்துக்கொண்டார்.

கடைக்குள் வேறு சிலைகளை பார்த்துக் கொண்டிருந்த முருகேசரின் காதுகளுக்கும் மனைவியின் இந்த சம்பாஷணை எட்டாமல் இல்லை. பாக்கியத்தின் வார்த்தைகள் அவர் இதயத்தை நெருடிச் சென்று ஒரு இதமான இன்ப அனுபவத்தை விதைத்துச் சென்றது. இந்த மென் உணர்வுகளுக்கு மானுடர் எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும் ஒரு கணவனை மனைவி அன்பினால் சிறைப்படுத்தி உரிமை கொண்டாடும் இத் தருணங்கள் புனிதமானவை. பண்பாடுகளும் கலாச்சாரங்களும் அந்த உணர்வுகளுக்கு வேலி அமைத்து மண்மூடி மறைக்க எத்தனித்தாலும் மண்ணை மீறிய விதைகளாய் அவை என்றும் ஏதோ ஒரு வடிவத்தில் புலப்பட்டு தன் உரிமைகளை மீட்டுக்கொள்ளும்!

பாக்கியம் பதினைந்து வருடங்களுக்கு முன் புற்றுநோயால் மறைந்த பின்பும் அந்த நடராஜர் சிலைக்கு சாமி அறையில் முதன்மை ஸ்தானத்தை அளிக்க முருகேசர் தவறவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்த போதும் முருகேசர் கூட பயணித்து மகன் சபேசனின் வீட்டில் குடிகொண்டார் நடராஜர்.

ஒரு வருடத்திற்கு முன் முருகேசர் இந்த ஏஜ் ட் கெயாருக்கு வர பெட்டியை அடுக்கும்போது மகன் சொன்னது இன்னும் ஞாபகமே. “அப்பு, உதுகள எல்லாம் கட்டி சுமக்க வேணுமே? அங்க உங்கட அறையும் அப்பிடி ஒண்டும் பெரிசில்ல. இத இஞ்ச வச்சிற்றுப் போங்கோவன். நாங்க என்ன பாத்துக்க மாட்டமா?”. சபேசனின் வார்த்தையில் இருந்த அழுத்தத்தை அவர் புரிந்துகொண்டார். ஆனாலும் அவனுக்கு சிலையாக தெரிந்த நடராஜர் அவருக்கோ பாக்கியத்திடம் இருந்து புறப்பட்ட அந்தரங்க உணர்வுகளின் அடையாளம்.

பாக்கியத்துடன் வாழ்ந்த இன்ப நினைவுகள் அவர் மனதில் வரிசை கட்டி நின்றன. காலக் குடுவையின் சிறு துளையில் வடியும் மணல் பருக்கைகளாய் அவர் வாழ்வு மங்கிப் போய் கொண்டிருக்கும் இந்த முதிர் வயதில் அந்த இனிய நினைவுகளை மீட்டெடுக்கும் எந்த ஒரு சடப்பொருளும் அவருக்கு தோணியின் துடுப்பாய்ப் பட்டது.

வாழ்க்கை எனும் வானத்தில் மிதக்கும் முகில் கூட்டங்களாய் அவரின் நினைவுப்பஞ்சுகள் மெல்ல மெல்ல அவரை விட்டு எங்கோ தூர ஓடி மறைகின்றன!

நடராஜர் சிலையை கையில் ஏந்தியபடி கட்டிலில் அமர்ந்திருந்த முருகேசரின் கண்களில் பாசத்தின் ஊற்றாய் நீர் முட்டி கன்னங்களை நனைத்து சிறு துளிகளாய் சிலையில் விழுந்து தெறித்தன. சிலையில் பின்பகுதியில் ஒட்டியிருந்த $10 என எழுதியிருந்த காகிதத்தையும் நனைக்க அவை தவறவில்லை. அவரை அறியாமல் அவர் விரல்கள் சிலையில் ஒட்டியிருந்த அந்த காகிதத்தை சுரண்டி அகற்றியது.
சிலையில் பொறித்திருந்த “என்ர ராசாவுக்கு” என்ற வார்த்தைகள் அவரைப் பார்த்து சிரித்தன!

நடுங்கும் கைகளால் சிலையை மெதுவாய் உயர்த்தி நெஞ்சுடன் அணைத்த அவரின் வாயில் இருந்து “என்ர குஞ்சு” என்ற வார்த்தைகள் ஒரு மந்திர உச்சரிப்பாய் காற்றில் கலந்து மறைந்தன.

 

https://solvanam.com/2023/12/31/என்ர-ராசாவுக்கு/

  • கருத்துக்கள உறவுகள்

எந்தன் மனக்கோயில்

சிலையாக வளர்ந்தாளம்மா

மலரோடு மலராக மலர்ந்தாளம்மா,

கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா

காற்றோடு காற்றாக கலந்தாளம்மா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.