Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும்! - நிலாந்தன்

வெடுக்குநாறி மலை விவகாரம் பெரும்பாலான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒன்றுபடுத்தியிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழ்க் கட்சிகளை ஒன்றுபடுத்துவது எதிர்த் தரப்புத்தான்.

சிவ பூசையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கான போராட்டக் களத்தில் எல்லாக் கட்சிகளும் ஒன்றாக நின்றன. பரவாயில்லை. குறைந்தது ஒரு விவகாரத்தை மையமாகக் கொண்டாவது கட்சிகள் அவ்வாறு ஒன்றாகத் திரள்வது நல்லது. ஆனால் இந்த விவகார மைய ஐக்கியம் மட்டும் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டப் போதாது. தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது என்ற அடிப்படையில் கட்சிகள் ஒன்றிணையும் போதுதான் கடந்த 15 ஆண்டு காலத் தேக்கத்தில் இருந்து விடுபடலாம். அல்லது அவ்வாறு கட்சிகளை ஒன்றிணைக்கத்தக்க பலத்தோடு ஒரு கட்சி பலமானதாக  மேற்கிளம்ப வேண்டும்.

எதுவாயினும் சிவராத்திரியன்று கைது செய்யப்பட்டவர்களை மீட்பதற்காக கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டது வரவேற்கத்தக்கது. இது போன்ற “கலெக்டிவ்” ஆன அதாவது ஒன்றிணைந்த கூட்டு முயற்சிகள்தான் வெற்றியளிக்கும் என்பதற்கு இங்கு அரசியல் அல்லாத வேறு ஒரு உதாரணத்தைச் சுட்டிக் காட்ட வேண்டும்.

எங்களில் எத்தனை பேர் எமது வீடுகளில் உள்ள தென்னை மரங்களில் விளைச்சல் குறைந்து வருவதை அவதானித்திருக்கிறோம்? தென்னோலைகளில் மேற்பரப்பில் கறுப்பாக எண்ணெய்த் தன்மையோடு ஏதோ ஒட்டிக் கொண்டிருக்கிறது. ஓலைகளின் கீட் பகுதிகளில் பூஞ்சனம் போல வெள்ளையாக ஏதோ ஒட்டிக் கொண்டிருக்கிறது. அது தென்னை மரங்களில் இருந்து தொடங்கி கொய்யா,மா,நாவல்,வாழை, வெண்டி, எலுமிச்சை, செம்பருத்தி, சீத்தாப்பழம், கருவேப்பிலை என்று ஏனைய மரங்களின் மீதும் பரவுகிறது. ஒரு வீட்டில் மட்டுமல்ல, ஒரு கிராமம், ஒரு பிரதேசம் முழுவதும் அது பரவி வருகின்றது.

குறிப்பாக வெக்கையான காலங்களில் தென்னை மரங்களைத் தாக்கும் வெள்ளை ஈ-Spiral Whitefly(Aleurodicus disperses)-அதுவென்று துறைசார்ந்த திணைக்களங்கள் தெரிவிக்கின்றன. அதன் தாக்கத்துக்கு இலக்காகிய தென்னோலைகள் சத்திழந்து, காய்ந்து கருகி ஒரு கட்டத்தில் மட்டையோடு கழண்டு விழுகின்றன.

கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களிலும் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரிக்கின்றது. புத்தளம் மாவட்டத்தில் தங்கொடுவ,நாத்தாண்டிய, சிலாபம், முகுனுவடவன,ஆரியகம,பட்டுலுஓயா,முந்தலம ஆகிய பிரதேசங்களில் வெள்ளை ஈயின் தாக்கம்  உள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளது. தீவிரமாகப் பரவும் வெள்ளை ஈயினால் இலங்கையில் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் தென்னந் தோப்புகள்  சேதமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

432445520_955774939431338_82872337086383
432405971_955774856098013_77385212686959

மழைக் காலங்களில் வெள்ளை ஈயின் தாக்கம் குறைவாக இருக்கின்றது. தென்னோலைகள் கழுவப்படும் போது வெள்ளை ஈயின் பெருக்கம் குறைகிறது. ஆனால் வறட்சியான காலங்களில் வெள்ளை ஈ தென்னந் தோப்புக்களுக்கு எதிராக ஓர் உயிரியல் போரைத் தொடுக்கின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை விருதுகள் வழங்கும் நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் பேசிய அந்த அமைப்பின் தலைவராகிய ஐங்கரநேசன் வெள்ளை ஈ தொடர்பாகவும் சுட்டிக்காட்டினார். வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதற்கு ஒஸ்ரேலியாவைச் சேர்ந்த ஒரு தமிழர் கூறிய ஒரு பரிகாரத்தை அவர் மேடையில் வைத்துச் சொன்னார். வீடுகளில் நாங்கள் பயன்படுத்தும் சலவைத் தூளில் இரண்டு அல்லது மூன்று கரண்டிகளை எடுத்து 5 லிட்டர் நீரில் கரைத்த பின் அதனை தென்னோலைகளுக்குத் தெளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். சலவை தூளுடன் ஒரு மரத்துக்கு 200 மில்லி லீட்டர் வேப்பெண்ணெயையும் கலந்து அடித்தால் பயன் தரும் என்று தென்னை பயிர்ச் செய்கை சபையைச் சேர்ந்தவர்கள் கூறினார்கள்.

குறிப்பிட்ட கலவையை தென்னோலைகளின் மீது தெளிப்பதற்கு உயர் அழுத்தப் பம்பிகள் தேவை. வடபகுதி தென்னை பயிர்ச் செய்கை சபையிடம் 10 பம்பிகள் உண்டு என்று கூறப்படுகிறது. சீனாவில் இருந்து சிறிய பம்பி ஒன்றை கிட்டத்தட்ட 40,000 ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும் என்று ஒரு வணிகர் கூறினார்.

வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தத் தவறினால், ஒருகட்டத்தில் தேங்காய்த் தட்டுப்பாடு ஏற்படும். அது நேரடியாக வயிற்றில் அடிக்கும். இறுதிக்கட்டப் போரில் தேங்காய்க்கு அலைந்த ஒரு மக்கள் கூட்டம் நாங்கள். இறுதிக் கட்டப் போரில் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆனந்தபுரத்தில் நடந்த சண்டையோடு பெரும்பாலும் தேங்காய் இல்லாமல் போய்விட்டது. முள்ளிவாய்க்கால் கடற்கரையில் தென்னைகள் இருந்தன. ஆனால் அங்கிருந்த அசாதாரண சனத்தொகைக்குப் போதுமான தேங்காய்கள் இருக்கவில்லை. ஆனந்தபுரத்தில்தான் ஒப்பீட்டளவில் அதிக தென்னை மரங்கள் இருந்தன. ஆனந்தபுரத்தை இழந்ததோடு தேங்காய்த் தட்டுப்பாடு தொடங்கியது. அதன் பின் முள்ளிவாய்க்கால் கஞ்சிக்குத் தேங்காய்ப் பாலுக்குப் பதிலாக பால்மாவை பயன்படுத்தப்பட்டது. ஒரு கஞ்சிக்கலயத்துக்கு இரண்டு பால்மா பக்கெட்டுகள்.

அது போர்க்காலம். ஆனந்தபுரத்தோடு தேங்காய் இருக்கவில்லை. ஆனால் இப்பொழுது 15 ஆண்டுகளின் பின் வெள்ளை ஈ ஏறக்குறைய ஒரு போரைத் கொடுத்திருக்கிறது. அது ஒரு கூட்டுத் தாக்கம். இத்தாக்கத்திலிருந்து தென்னை மரங்களைப் பாதுகாக்கத் தவறினால் தேங்காய்க்கு அலைய வேண்டி வரும். தேங்காய் எண்ணையின் விலை கூடும். தேங்காய் எண்ணெயை பயன்படுத்தும் எல்லா உணவுப் பொருட்களின் விலையும் கூடும். பொருளாதார நெருக்கடிக்கு முன்னரே தேங்காய் எண்ணெயின் விலை அதிகரித்துவிட்டது. இப்பொழுது ஒரு லிட்டர் 600 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய்க்கு மேல் வரை போகிறது.

432433726_955774902764675_55941379207253

நுகர்வுக் கலாச்சாரத்துள் சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்திய நல் விளைவுகளில் ஒன்றை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும். பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் தேங்காய் எண்ணையின் தரம் குறித்த சந்தேகங்கள், சமூக வலைத்தளங்களில் பரவலாக வரத் தொடங்கிய ஒரு பின்னணியில், வீட்டில் தென்னைகளை வளர்ப்பவர்கள் தங்களுக்குத் தேவையான தேங்காய் எண்ணெயைத் தாங்களே உற்பத்தி செய்யத் தொடங்கினார்கள். அது ஒரு அற்புதமான செயல். தமிழ்ப் பகுதிகளில் அதிகம் தென்ன மரங்களைக் கொண்ட காணிகளை வைத்திருப்பவர்கள் தங்களுக்கு தேவையான தேங்காய் எண்ணெயைப் பல்பொருள் அங்காடிகளில் வாங்குவதைத் தவிர்க்கத் தொடங்கினார்கள். ஆனால், இப்பொழுது வெள்ளை ஈ எல்லாவற்றையும் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது.

வெள்ளை ஈயின் உயிரியல் எதிரிகளான பூச்சிகளை, வண்டுகளைப் பெருக்குவதின்மூலம் அதைக் கட்டுப்படுத்தலாமா என்று தென்னை பயிர் செய்கை சபை கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் ஒரு பரிசோதனை முயற்சியைத் தொடங்கியிருக்கிறது. அதன் விளைவுகள் விரைவில் தெரிய வரலாம் என்று கூறப்படுகின்றது. வெள்ளை ஈயின் தாக்கத்துக்கு உள்ளாகிய தென்னை மர உரிமையாளர்கள், தென்னை பயிர்ச் செய்கை சபையை அணுகி பரிகாரத்தைப் பெறலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.ஒவ்வொரு பிரதேசத்துக்கும் உரிய கமநல சேவை நிலையத்தில் தென்னை பயிர்ச் செய்கை சபையின் ஒரு பிரிவு இயங்குவதாகவும் அங்கே பாதிக்கப்பட்டவர்கள் தமது முறைப்பாடுகளைச் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட ஒருவர் அல்லது சில பண்ணையாளர்கள் அதற்கு தீர்வு காண்பதன்மூலம் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த முடியாது. அது ஒரு கூட்டுத் தாக்கம். ஒரு முழுப் பிரதேசத்தையும் அது தாக்குகின்றது. ஒரு வீட்டில் கட்டுப்படுத்தினால் சிறிது காலத்தின் பின் பக்கத்துக்கு வீட்டிலிருந்து வெள்ளை ஈ மீண்டும் வரும். எனவே ஒரு வீட்டில் அல்லது ஒரு பண்ணையில் மட்டும் அதை கட்டுப்பட்டுவதால் பிரியோசனம் இல்லை. அதை முழுச் சமூகத்துக்கும் உரிய ஒரு கூட்டு செயற்பாடாக முன்னெடுத்தால் மட்டுமே வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தலாம் என்று சம்பந்தப்பட்ட துறைசார் திணைக்களங்கள் தெரிவிக்கின்றன.

 

ஏற்கனவே தமிழ் மக்கள் முள் முருக்கு மரத்தை பெருமளவுக்கு தொலைத்து விட்டார்கள். தமிழ் பண்பாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு நிகழ்வாகிய திருமணத்தில் கன்னிக்கால் என்று கூறி நடப்படுவது முள்முருக்கு. முள் முருக்கில் ஏற்பட்ட ஒரு நோய்த் தாக்கம் காரணமாகவும் நகரமயமாக்கத்தின் விளைவாக  உயிர் வேலிகள் அருகிச் செல்வதன் காரணமாகவும் முள் முருக்கு அழிந்து செல்லும் ஒரு தாவரமாக மாறி வருகிறது.

தமிழ் மக்கள் மத்தியில் உயர் கல்வி நிறுவனங்களில் தாவரவியல் ஓர் ஆராய்ச்சிப் பிரிவாக உண்டு. தமிழ் பண்பாட்டில் தனக்கென்று தவிர்க்க முடியாத ஒரு தாவரவியல் இருப்பைக் கொண்டிருக்கும் முள்முருக்கைக் காப்பாற்ற ஏன் அதில் சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள் அல்லது புலமையாளர்களால் முடியவில்லை? திருமணங்களில் முள்முருக்கிற்குப் பதிலாக குரோட்டன் முருக்கந்தடியைப்  பயன்படுத்துவதுபோல, தேங்காய்க்குப் பதிலாக வேறு எதையாவது பயன்படுத்தப் போகிறோமா?

Erythrina-variegata-L.-1-1024x730.jpg

முள் முருக்குப் போலவே வெள்ளை ஈயின் விடயத்திலும் பொருத்தமான துறை சார்ந்த ஆய்வுகள் அவசியம். வடக்குக் கிழக்குப் பகுதிகள் உலர் வலையத்துக்குரியவை. நாட்டில் உலர் வலையத்துக்கு என்று தென்னை ஆராய்ச்சி மையம் எதுவும் கிடையாது. அதனால், உலர் வலையத்துக்குரிய தென்னை ஆராய்ச்சி மையம் ஒன்று தமிழ்ப் பகுதிகளில் உருவாக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

எனவே, வெள்ளை ஈயிடமிருந்து தமிழ்ச்  சமையலைப் பாதுகாக்க, துறைசார் ஆராய்ச்சியாளர்களும் திணைக்களங்களும் சமூக நலன் விரும்பிகளும் சுற்றுச்சூழலியலாளர்களும் கிராமமட்ட அமைப்புகளும் குடிமக்கள் சமூகங்களும் ஊடகங்களும் ஒன்றிணைய வேண்டும். பொதுவாக சமூகம் தழுவிய கூட்டு முயற்சிகள் என்று வரும்பொழுது அங்கே அரசியல் தலைமைத்துவம் அல்லது சமூகச் செயற்பாட்டு அமைப்புக்களின் தலைமைத்துவம் தேவைப்படுவதுண்டு. எனவே வெள்ளை ஈ தமிழ் மக்களின் சாப்பாட்டு மேசைக்கு வரமுன்னரே அதைத் தடுக்கும் முயற்சிகளில் கூட்டாகத் தமிழ்ச் சமூகம் இறங்க வேண்டும். வெடுக்குநாறி மலையில் உள்ள தமிழ் மரபுரிமை சின்னத்தைப் பாதுகாப்பதற்காகத் தமிழ்க்கட்சிகள் ஒன்று திரண்டதைப்போல.

 

https://www.nillanthan.com/6647/

 

 

 

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.