Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கச்சத்தீவு - உண்மையில் நடந்தது என்ன?
கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 1 ஏப்ரல் 2024
    புதுப்பிக்கப்பட்டது 2 ஏப்ரல் 2024

கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரசும் தி.மு.கவும் தாரை வார்த்திருப்பதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியிருக்கிறது. ஆனால், தி.மு.கவும் காங்கிரசும் இதனை மறுக்கின்றன. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது? இந்தியா - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான போது கருணாநிதி என்ன செய்தார்? இனி மீட்க முடியுமா? கச்சத்தீவு தொடர்பாக இந்தியா - இலங்கை இருநாடுகளிடையே என்ன நடக்கிறது? கச்சத்தீவை மீட்க இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது குறித்து இலங்கை அமைச்சர் அளித்த பதில் என்ன?

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோதி ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிட்ட ஒரு X வலைதளப் பதிவில், காங்கிரசையும் தி.மு.கவையும் குற்றம்சாட்ட புதிதாக ஒரு விஷயத்தைக் கையில் எடுத்திருந்தார்.

அவர் அந்தப் பதிவில், "கச்சத்தீவை எவ்வளவு அலட்சியமாக காங்கிரஸ் கொடுத்தது என்பதை புதிய தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியிருக்கிறது. நாம் ஒருபோதும் காங்கிரசை நம்ப முடியாது என்பதை மக்களின் மனதில் உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் ஒற்றுமையையும் நலன்களையும் பலவீனப்படுத்துவதே கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசின் பணியாக இருந்துவருகிறது" என்று குறிப்பிட்டதோடு, நாளிதழ் ஒன்றில் வெளியான கட்டுரையின் இணைப்பையும் பகிர்ந்திருந்தார்.

கச்சத்தீவு சர்ச்சை

பட மூலாதாரம்,X/NARENDRA MODI

அந்தக் கட்டுரை, பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

கட்டுரை கூறுவது என்ன?

"சுதந்திரத்திற்குப் பிறகு அந்தத் தீவின் மீது உரிமை கொண்டாடிய இலங்கை, இந்தியக் கடற்படை தனது அனுமதி இல்லாமல் அங்கே பயிற்சி செய்யக்கூடாது என்று கூறியதாகவும் 1955ல் தனது விமானப் படை பயிற்சியை அங்கே மேற்கொண்டதாகவும் அந்தக் கட்டுரை குறிப்பிட்டது. இந்த விவகாரத்தை முக்கியத்துவமில்லாத விவகாரமாக பிரதமர் 1961ஆம் ஆண்டு மே பத்தாம் தேதி எழுதிய குறிப்பு ஒன்றில் தெரிவித்திருந்தார்.

"இந்தச் சிறிய தீவுக்கு நான் எவ்வித முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. அதன் மீதான உரிமையை விட்டுத்தர எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த விவகாரம் நீண்ட காலத்திற்கு நிலுவையில் இருப்பதையோ, மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படுவதையோ நான் விரும்பவில்லை" என நேரு குறிப்பிட்டிருந்தார்.

இந்தத் தீவின் மீதான உரிமையை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி ராமநாதபுரம் ராஜாவுக்கு அளித்திருப்பதால், அதன் மீது நமக்கு உரிமை இருக்கிறது என அப்போதைய அட்டர்னி ஜெனரல் எம்.சி. செடல்வத் கூறியிருந்தார்.

அப்போது வெளியுறவுத் துறையின் இணைச் செயலராக இருந்த கே. கிருஷ்ணாராவ், உரிமை குறித்து உறுதியாக இல்லை. ஆனால் அந்தத் தீவைச் சுற்றி மீன் பிடிக்கும் உரிமையைக் கோர சட்ட ரீதியில் வாய்ப்பு இருக்கிறது என்பதை அவர் குறிப்பிட்டார்.

1968ல் இலங்கைப் பிரதமர் டட்லி சேனநாயக இந்தியாவுக்கு வந்தபோது, இந்தத் தீவை இலங்கைக்கு அளிப்பது குறித்து ரகசியப் பேச்சுவார்த்தை நடப்பதாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. இதற்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்த இந்திரா காந்தி அரசு, அப்படி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகச் சொல்வதை மறுத்தது. ஆனால், அது சர்ச்சைக்குரிய பகுதி எனக் குறிப்பிட்டது. இரு தரப்பு உறவுகளை மனதில் வைத்து, இந்தியா உரிமை கோர வேண்டுமென்றும் கூறியது.

 
கச்சத்தீவு - உண்மையில் நடந்தது என்ன?

1973ல் கொழும்புவில் நடந்த வெளியுறவுத் துறை செயலர்கள் மட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கச்சத் தீவு மீதான உரிமையை விட்டுத்தர இந்தியா முடிவு செய்தது. இந்த விவரம் வெளியுறவுத் துறைச் செயலர் கேவல் சிங் மூலம் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதிக்குத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பில் அந்தத் தீவு மீதான ராமநாதபுரம் ராஜாவின் உரிமையும், தனக்குத்தான் அந்தத் தீவு சொந்தமெனக் கூறும் இலங்கைத் தரப்பால் அதற்கு சாட்சியமாக எவ்வித ஆதாரத்தையும் காட்ட முடியாததும் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், இலங்கை பிடிவாதமாக இருப்பதாக கேவல் சிங் குறிப்பிட்டார். 1925 முதல் இலங்கை அந்தத் தீவின் மீது உரிமை கோரிவருவதையும் அவர் குறிப்பிட்டார்.

அந்தக் கடற்பகுதியில் எண்ணெய் வளம் இருப்பதை இந்தியா கண்டறிந்திருந்ததாலும் இலங்கை அரசின் மீது சீன ஆதரவுக் குழுக்களின் செல்வாக்கு அதிகரித்துவந்ததாலும் உடனடியாக முதலமைச்சர் அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டுமென கேவல் சிங் வலியுறுத்தினார். அதற்கு கருணாநிதி ஒப்புக்கொண்டார்" என அந்தக் கட்டுரை கூறுகிறது.

கச்சத்தீவு - உண்மையில் நடந்தது என்ன?

கச்சத்தீவு - பாஜக குற்றச்சாட்டு என்ன?

பிரதமர் நரேந்திர மோதியின் எக்ஸ் வலைதள பதிவிற்குப் பிறகு, தமிழக பா.ஜ.க. தலைவர்கள் பலரும் இந்த விவகாரம் குறித்துப் பேச ஆரம்பித்தனர்.

இதற்குப் பிறகு இந்த விவகாரம் குறித்து மீண்டும் ஒரு பதிவை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோதி, "தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க தி.மு.க. எதையும் செய்யவில்லை. கச்சத் தீவு விவகாரத்தில் புதிதாக வெளிவரும் தகவல்கள் தி.மு.கவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகின்றன. காங்கிரசும் தி.மு.கவும் குடும்பக் கட்சிகள். தங்கள் மகன்களையும் மகள்களையும் வளர்ப்பது பற்றி மட்டும்தான் அவர்கள் கவலைப்படுவார்கள். கச்சத்தீவு விவகாரத்தில் அவர்கள் காட்டிய அலட்சியம் ஏழை மீனவர்களின் நலன்களுக்கு பாதகமாகிவிட்டது" என்று குறிப்பிட்டார்.

 
கச்சத்தீவு - உண்மையில் நடந்தது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதற்குப் பிறகு, திங்கட்கிழமையன்று பா.ஜ.கவின் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர். இந்திய மீனவர்களின் உரிமையை பறிகொடுத்துவிட்டு, அதற்குப் பொறுப்பேற்க காங்கிரஸ் மறுப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு, பழைய விவகாரமான கச்சத்தீவு பிரச்னையை பிரச்னையை எழுப்புவதாக கூறுவது தவறு என்று கூறிய அவர், "தொடர்ந்து இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் இது தொடர்பாக தொடர்ந்து கடிதப் போக்குவரத்து நடந்துவருகிறது" என்றும் குறிப்பிட்டார்.

மேலும், காங்கிரசைச் சேர்ந்த பிரதமர்கள் கச்சத்தீவு விவகாரத்தில் அலட்சியமாக நடந்துகொண்டதாகவும் குறிப்பிட்டார்.

கச்சத்தீவைக் கொடுப்பதற்கு தி.மு.க. எதிராக இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும், இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது முழுமையாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார் ஜெய்சங்கர்.

ஜெய்சங்கர் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதிலடி

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஜெய்சங்கர் வெளியுறவுச் செயலாளராக இருந்தபோது, 2015 ஜனவரி 27ஆம் தேதி வெளியுறவு அமைச்சகம் அளித்த பதிலை இப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கர் மறுக்கிறாரா?

இந்த ஒப்பந்தம், இந்தியாவுக்குச் சொந்தமான நிலப்பரப்பைக் கையகப்படுத்துவது அல்லது விட்டுக்கொடுப்பது ஆகியவற்றை உள்ளடக்கியதாக இல்லை, ஏனெனில் கேள்விக்குரிய பகுதி ஒருபோதும் வரையறுக்கப்படவில்லை. ஒப்பந்தங்களின்படி, கச்சத்தீவு இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லைக் கோட்டின் இலங்கைப் பகுதியில் அமைந்துள்ளது. என்று 2015ஆம் ஆண்டில் கச்சத்தீவு குறித்த ஆர்.டி.ஐ கேள்விக்கு வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்துள்ளது" என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

கச்சத்தீவு - உண்மையில் நடந்தது என்ன?

பட மூலாதாரம்,X/JAIRAM RAMESH

கச்சத்தீவு - இலங்கை அமைச்சர் பதில் என்ன?

கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுடன் சேர்க்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதற்கு நேர்மாறாக இலங்கை அமைச்சரின் பேச்சு அமைந்துள்ளது. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “இலங்கையைப் பொறுத்தவரையில் கச்சத்தீவு இலங்கை எல்லைக்குள் உள்ளது. நரேந்திர மோதி அரசு இலங்கையுடன் நல்லுறவைக் கொண்டுள்ளது. கச்சத்தீவு தொடர்பாக இந்தியாவிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. அப்படி ஏதேனும் கூறப்பட்டால் அதற்கு இலங்கை வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்கும்” என்று கூறியுள்ளார்.

இலங்கை அமைச்சர் தொண்டமான் இந்திய அரசின் சார்பில் இது தொடர்பாக எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை மறுத்துள்ளார். எந்தவொரு புதிய அரசாங்கத்தின் விருப்பத்திற்கும் ஏற்ப நாட்டின் எல்லையை மாற்ற முடியாது என்று மற்றொரு இலங்கை அமைச்சர், கூறியுள்ளார்.

பெயரை வெளிப்படுத்த விரும்பாத அந்த அமைச்சர், “சரியோ தவறோ, கச்சத்தீவு அதிகாரப்பூர்வமாக இலங்கையின் ஒரு பகுதி. வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டவுடன், எந்த புதிய அரசும் வந்து அதை மாற்றச் சொல்ல முடியாது. ஆனால், கச்சத்தீவு தொடர்பாக இலங்கை அமைச்சரவையில் எந்த விவாதமும் நடைபெறவில்லை, அது குறித்து இந்தியா பேசவில்லை.

கச்சத்தீவின் இருபுறமும் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். இது தமிழக மீனவர் பிரச்சினை என்றால் கச்சத்தீவை இதனுடன் இணைப்பது சரியல்ல. ஏனெனில் இந்திய மீனவர்களின் பிரச்னை அவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்தும் வலைகள் பற்றியது. "இந்திய கடல் எல்லைக்கு வெளியே மீன்பிடிக்கும் இந்த முறை சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி சட்டவிரோதமானது." என்று கூறியதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

கச்சத்தீவு - உண்மையில் நடந்தது என்ன?
படக்குறிப்பு,

ஜீவன் தொண்டமான்

கச்சத்தீவு - உண்மையில் நடந்தது என்ன?

தமிழ்நாட்டில் கச்சத்தீவு விவகாரம் பல முறை முக்கியமான அரசியல் பிரச்னையாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கச்சத்தீவு விவகாரம் தேசிய அளவில் விவாதிக்கப்படுவது கடந்த பல வருடங்களில் இதுவே முதல் முறை.

இந்தியா கச்சத்தீவு மீதான தனது உரிமையில் உறுதியாக இல்லை என்பது உண்மைதான் என்கிறார் கச்சத்தீவு குறித்து பல நூல்களை எழுதியவரும் சென்னை பல்கலைக் கழகத்தின் தெற்கு மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான மையத்தின் முன்னாள் இயக்குநருமான வி. சூரியநாராயண்.

"கச்சத்தீவு விவகாரத்தில் ஒரு முடிவு எட்டப்படுமானால், அது சரிந்துகொண்டிருக்கும் சிறீமாவோவின் இமேஜிற்கு பெரிய அளவில் உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தியா தனது அண்டை நாடுகளை ஆதிக்கம் செலுத்தத் திட்டமிடுகிறது என்று இலங்கையிலிருந்த இடதுசாரி சக்திகள் குரலெழுப்பி வந்தன. கச்சத்தீவு விவகாரத்தை அதற்கு ஒரு உதாரணமாக சுட்டிக்காட்டின. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவது அந்த வாதத்தை முறியடிக்கும் என நம்பப்பட்டது" என்று தனது நூலில் குறிப்பிடுகிறார் சூர்யநாராயண்.

1974ஆம் ஆண்டின் ஒப்பந்தம் செய்யப்பட்ட போது, கச்சத்தீவை இந்தியாவுக்குச் சொந்தமான தீவாகக் கருதாமல், சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதி இந்தியா முடிவெடுத்து எனக் குறிப்பிடும் வி. சூர்யநாராயண், அந்தத் தீவு தனக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை என்கிறார்.

மேலும், 1974ஆம் ஆண்டில் ஒப்பந்தத்தின் கீழ் இந்திய மீனவர்களுக்கு சில உரிமைகள் அளிக்கப்பட்டிருந்தன. அந்த உரிமைகள், 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் நீக்கப்பட்டன. இப்படியாகத்தான் அந்தத் தீவு மீதான உரிமையை இந்தியா முழுவதுமாக இழந்தது என்கிறார் அவர்.

கச்சத்தீவு சர்ச்சை
படக்குறிப்பு,

வி. சூர்யநாராயண்

கச்சத்தீவு - ஒப்பந்தம் கையெழுத்தான போது கருணாநிதி என்ன செய்தார்?

கச்சத்தீவை இலங்கைக்கு அளிக்கும் விவகாரத்தில் அப்போதைய தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்தது என்கிறார் வி. சூர்யநாராயண். "இது தொடர்பாக பிரதமர் இந்திரா காந்தியைச் சந்திக்க முதலமைச்சர் மு. கருணாநிதியும் அமைச்சர் எஸ். மாதவனும் சென்றனர். பிரதமரைச் சந்தித்த போது இந்த விவகாரத்தில் தனது கடுமையான எதிர்ப்பை மு. கருணாநிதி தெரிவித்ததாக மாதவன் சொன்னார்.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஒரு கடிதமாக எழுதி பிரதமரிடம் அளித்தார் மு. கருணாநிதி. மாநில அரசு சேகரித்த ஆதாரங்களின்படி, கச்சத்தீவின் மீது இலங்கை அரசானது ஒருபோதும் இறையாண்மையைச் செலுத்தியதில்லை என்பதைச் சுட்டிக்காட்ட போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. கச்சத்தீவைக் கட்டுப்படுத்திய ராமநாதபுரம் ராஜா எந்தக் காலகட்டத்திலும் இலங்கை அரசுக்கு வாடகையோ, ராயல்டியோ செலுத்தியதில்லை என கருணாநிதி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டினார்" என்கிறார் சூர்யநாராயண்.

மேலும், "இந்த கடல்சார் ஒப்பந்தமானது மாநில அரசின் உரிமையைக் கடுமையாக பாதித்தாலும் அந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகளைக் கூட மாநில அரசுடன் விவாதிக்க மத்திய அரசு முன்வரவில்லை என தொடர்ந்து சொல்லிவந்தார் கருணாநிதி. பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த காலத்தில் அவர் பிரதமர் இந்திரா காந்தியையும் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளையும் சந்தித்து கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது என்றும் அதனை இலங்கைக்குக் கொடுக்கக் கூடாது என்றும் தொடர்ந்து வலியுறுத்தினார். தமிழக மக்களின் கோபத்தையும் அதிருப்தியையும் காட்டும் வகையில் 1974 ஜூன் 29ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. 1974 ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது" என்கிறது வி. சூர்யநாராயணின் புத்தகம்.

கச்சத்தீவு - உண்மையில் நடந்தது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

1974 ஆகஸ்ட் 21ஆம் தேதி முதலமைச்சர் மு. கருணாநிதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பின்வரும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்: "இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவுடன் தமிழ்நாட்டிற்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கச்சத்தீவு தொடர்பாக இந்திய அரசு எடுத்துள்ள முடிவு குறித்து இந்த மன்றம் ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கிறது. இந்திய அரசு தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கச்சத்தீவின் மீது இந்திய இறையாண்மையைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் இலங்கையுடனான ஒப்பந்தத்தைத் திருத்த வேண்டும் என்றும் அதன் மூலம் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் இந்த மன்றம் இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது". இந்தத் தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விட்டு நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு. கருணாநிதி அந்தத் தருணத்திலேயே நீதிமன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டும் என்கிறார் வி. சூர்யநாராயண். "மேற்கு வங்கத்தில் இருக்கும் பேருபரி பகுதியை கிழக்கு பாகிஸ்தானோடு இணைக்க அப்போதைய பிரதமர் நேரு முடிவுசெய்தபோது, அம்மாநிலத்தின் காங்கிரஸ் முதல்வரான பி.சி. ராய் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அது தடுத்து நிறுத்தப்பட்டது" என்கிறார் அவர்.

ஆனால், 1974, 1976ஆம் ஆண்டின் ஒப்பந்தங்களை இப்போது முறித்துக்கொள்வது சாத்தியமில்லை என்கிறார் அவர். "சர்வதேச ஒப்பந்தங்களுக்கு என ஒரு புனிதத்தன்மை உண்டு. அதை மீறக்கூடாது. பல அண்டை நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அவையெல்லாம் சிக்கலுக்குள்ளாகும்" என்கிறார் வி. சூர்யநாராயண்.

கச்சத்தீவு - திமுக விளக்கம் என்ன?

கச்சத்தீவு விவகாரத்தைப் பொறுத்தவரை அந்தத் தருணத்தில் தி.மு.க. முடிந்த அளவு எதிர்ப்பைப் பதிவுசெய்தது என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டைன்டீன். "கேவல் சிங் முதலமைச்சரைச் சந்தித்து இந்த விவகாரத்தை விளக்கும்போது, இந்த ஒப்பந்தம் நிலம் தொடர்பான ஒப்பந்தம் மட்டும்தான். அந்த நிலத்தின் மீது உள்ள மீன் பிடி உரிமைகள் அப்படியே நீடிக்கும் என்று கூறினார். காரணம், அந்த நிலம் இந்தியாவுக்குச் சொந்தம் என்பதற்கான ஆவணங்கள் நம்மிடம் இல்லை. மாறாக, யாழ்ப்பாணத்துடன் அந்தப் பகுதி இணைந்திருந்ததைக் காட்டும் ஆவணங்கள் உள்ளன என்றார் கேவல் சிங். இருந்தபோதும் ஒப்பந்தம் கையெழுத்தானதும் தி.மு.க. அரசு அது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

1974ல் வழங்கப்பட்ட உரிமைகள், 1976ல் பறிக்கப்பட்டன. அப்போது தி.மு.க. அரசு கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. இந்த விவகாரத்தில் தி.மு.கவைக் குற்றம்சாட்டுவது முழுக்க முழுக்க அபத்தமானது" என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

இந்த விவகாரத்தை அரசியலாக்குவதன் மூலம் பா.ஜ.க. எவ்விதமான பலனையும் பெற முடியாது என்கிறார் கான்ஸ்டைன்டீன். "பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தவர்கள் இப்போது இந்த விவகாரத்தைப் பேசுவது ஏன்? இப்போதும்கூட, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கச்சத்தீவை மீட்போம் என உறுதியளிக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க. அரசு எதையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை நாங்கள் முன்வைக்கும், அதற்கு பதில் சொல்ல முடியாமல் இதைச் செய்கிறார்கள். இதெல்லாம் அரசியல் சித்து விளையாட்டு. இதற்கு எந்த பலனும் இருக்காது" என்கிறார் அவர்.

 
கச்சத்தீவு - உண்மையில் நடந்தது என்ன?

கச்சத்தீவு - நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா?

கான்ஸ்டைன்டீன் கருத்தையே எதிரொலிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். இந்த விவகாரம் எந்த வகையிலும் பா.ஜ.கவுக்கு பலனளிக்காது, மாறாக எதிர்மறையாகச் செல்லலாம் என்கிறார் அவர்.

"இந்த விவகாரத்தை இப்படி விவாதிப்பதே தவறு. காரணம், இது தொடர்பாக, அ.தி.மு.க., தி.மு.க., வேறு சில தனி நபர்கள் தொடர்ந்த வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன. தவிர, கச்சத்தீவு ஒப்பந்தம் ஏற்பட்ட சூழலை புரிந்துகொள்ளாமல் பேசுகிறார்கள். 1974ஆம் ஆண்டு மே மாதம் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, பொக்ரானில் அணுகுண்டு சோதனை செய்தார். இதனால் சர்வதேச அரங்கில் இந்தியா தனிமைப்பட்டது. அப்போது, இலங்கையை இந்தியா பக்கமே வைத்திருக்கவே இதை செய்ததாகப் பார்க்கலாம்" என்கிறார் ஷ்யாம்.

1974ல் இந்தியாவும் வங்கதேசமும் தங்களது எல்லைகளை வரையறுக்கும் போது இந்தியா சில பகுதிகளை விட்டுக்கொடுத்தது. அதற்கு இந்தியா தனது அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டியிருந்தது. "அதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டம் 100வது முறையாகத் திருத்தப்பட்டது. இது நடந்தது 2015ல் நரேந்திரமோதியின் ஆட்சியில்தான். அதற்காக, அவர் இந்திய நிலப்பகுதியை விட்டுக்கொடுத்துவிட்டார் என்று சொல்ல முடியுமா? இரு நாட்டு எல்லைகளை வரையறுக்கும்போது, சில நிலப்பரப்புகளை விட்டுத்தருவது நடந்தே ஆகும்" என்கிறார் ஷ்யாம்.

கச்சத்தீவு - உண்மையில் நடந்தது என்ன?

ஆனால், கச்சத்தீவு விவகாரத்தை பிரதமரே எழுப்புவது போன்ற தாக்குதலை தி.மு.க. எதிர்பார்த்ததா? "பா.ஜ.க. தமிழ்நாட்டிற்கு ஏதாவது செய்ததா என்ற கேள்வியை முதலமைச்சர் மீண்டும் மீண்டும் முன்வைத்து வருகிறார். நாங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்த போது தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தந்தது, மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டுவந்தது போல அவர்களால் ஏதாவது ஒரு சாதனையைச் சொல்ல முடியுமா எனக் கேட்டார் முதலமைச்சர். அவர்களால் எந்த பதிலும் சொல்ல முடியாத நிலையில், இதைப் போல எதையாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம்" என்கிறார் தி.மு.கவின் கான்ஸ்டைன்டீன்.

இந்த விவகாரத்திற்கு இப்போதைக்கு நேரடியாக பதில் சொல்வதை தி.மு.க. தவிர்க்கும்; ஆனால், பா.ஜ.க. இதனை மேலும் மேலும் பெரிதாக்கினால் அவர்களும் தீவிரமாக பதில் சொல்ல ஆரம்பிப்பார்கள் என்கிறார் ஷ்யாம்.

https://www.bbc.com/tamil/articles/cglkmeze9lgo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவு குறித்து மீண்டும் பேசவேண்டிய தேவையில்லை - அலிசப்ரி

04 APR, 2024 | 02:55 PM
image
 

ஐம்பது வருடங்களிற்கு முன்னர் இந்தியா கையளித்த சர்ச்சைக்குரிய கச்சதீவு குறித்து புதிய பேச்சுவார்த்தைகள் எவற்றையும் ஆரம்பிக்கவேண்டிய தேவைஉள்ளதாக இலங்கை கருதவில்லை  என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் களத்தில் கச்சதீவு விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

1976ம் ஆண்டு இரண்டு அயல்நாடுகளும் கச்சதீவு குறித்து செய்துகொண்ட உடன்படிக்கையை தேர்தலில் மீண்டும் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படும் நரேந்திரமோடி தேர்தல் விவகாரமாக்கியுள்ளார்.

இந்த பிரச்சினை ஐம்பது வருடங்களிற்கு முன்னரே பேசப்பட்டு தீர்வுகாணப்பட்டுள்ளது இதன் காரணமாக மீண்டும் இது குறித்து பேசவேண்டிய அவசியமில்லை என அலிசப்ரி ஹிரு தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டிய நிலையேற்படும் என  நான் கருதவில்லை என தெரிவித்துள்ள அவர் கச்சதீவின் தற்போதைய நிலையில் மாற்றங்கள் வேண்டும் என எவரும் இதுவரை வேண்டுகோள் விடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/180431

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கச்சத்தீவை இந்தியாவுக்குத் தரும் எண்ணம் இல்லை: இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

கச்சத்தீவு, இந்தியா, இலங்கை, டக்ளஸ் தேவானந்தா, நரேந்திர மோதி
கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கச்சத்தீவு இலங்கையின் கடுப்பாட்டுக்குச் சென்ற விவகாரம் இந்திய அரசியலில் பெரும் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், கச்சத்தீவை இந்தியாவிற்கு திருப்பிக் கொடுக்கும் எந்தவொரு எண்ணமும் இலங்கைக்கு இல்லை என இலங்கையின் கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழன், ஏபர்ல் 5) யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதைக் குறிப்பிட்டார்.

கன்னியாகுமரிக்கு அருகாமையிலுள்ள வாட்ஜ் பேங்க் பகுதியை இந்தியா தனது நலன்களை கருத்திற் கொண்டு உள்வாங்கிக் கொண்டிருக்கலாம் எனவும் அவர் கூறினார்.

இலங்கையின் மீனவர்களுக்கும், கடல் தொழில் செய்பவர்களுக்கும் அதிக வளங்களை கொண்ட வாட்ஜ் பேங்க் பகுதியை எதிர்காலத்தில் இலங்கை உரிமை கோரக்கூடாது என்ற உள்நோக்கத்துடனேயே வாட்ஜ் பேங்க் பகுதியை இந்தியா கையகப்படுத்தி இருக்கலாம் என தான் எண்ணுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, கச்சத்தீவை இந்தியாவிற்கு வழங்க இடமளிக்க முடியாது என இலங்கை மீனவர்களும் கூறுகின்றனர்.

 
கச்சத்தீவு, இந்தியா, இலங்கை, டக்ளஸ் தேவானந்தா, நரேந்திர மோதி

கச்சத்தீவு விவகாரம்

கச்சத்தீவு பகுதியை காங்கிரஸ் இலங்கையின் கட்டுப்பாட்டுக்குக் கொடுத்ததாக பாரதிய ஜனதா கட்சி சமீபத்தில் குற்றம் சாட்டியது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அண்மையில் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவொன்றிலேயே இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

"கச்சத்தீவை எவ்வளவு அலட்சியமாக காங்கிரஸ் கொடுத்தது என்பதை புதிய தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியிருக்கிறது. நாம் ஒருபோதும் காங்கிரஸை நம்ப முடியாது என்பதை மக்களின் மனதில் உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் ஒற்றுமையையும் நலன்களையும் பலவீனப்படுத்துவதே கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசின் பணியாக இருந்துவருகிறது," என பிரதமர் நரேந்திர மோதி பதிவிட்டிருந்தார்.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோதி இதனை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்தியாவில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள பின்னணியில், கச்சத்தீவு விவகாரம் பாரிய பேசுப்பொருளாக மாறியுள்ளது.

இதைத்தொடர்ந்து, இலங்கையிலும் இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

 
கச்சத்தீவு, இந்தியா, இலங்கை, டக்ளஸ் தேவானந்தா, நரேந்திர மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கை அரசின் பதில் என்ன?

கச்சத்தீவு விவகாரம் இந்தியாவில் பேசுப்பொருளாகியுள்ள நிலையில், இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (வியாழன், ஏப்ரல் 4) பதிலளித்தார்.

அப்போது அவர், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமா அல்லது இந்தியாவிற்கு சொந்தமா என்ற வாத பிரதிவாதங்கள் இருக்கின்றது என்றும், இவை தேர்தல் காலகட்டங்களில் மேலெழுகின்றன என்றும் கூறினார்.

“1974-ஆம் ஆண்டு கச்சத்தீவு தொடர்பாக இலங்கை அரசும் இந்திய அரசும் செய்த ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, அந்த ஒப்பந்தத்தின் படி இந்திய மீனவர்கள் இலங்கைக்குள்ளும், இலங்கை மீனவர்கள் இந்திய கடலுக்குள்ளும் போய் தொழில் செய்யலாம் என்று இருந்தது. பின் 1976-ஆம் ஆண்டு அது தடுக்கப்பட்டது. இந்திய மீனவர்கள் இலங்கைக்கு வருவதும், இலங்கை மீனவர்கள் இந்தியாவிற்குள் செல்வதும் தடுக்கப்பட்டிருந்தது,” என்றார்.

மேலும், “அதேபோல இந்த வாட்ஜ் பேங்க் என்று ஒரு விடயம் சொல்லப்படுகின்றது. அது கன்னியாகுமரிக்கு கீழ் அதிக வளங்களை கொண்ட பெரிய பிரதேசமாக இருக்கின்ற ஒரு பகுதி. அதாவது கச்சத்தீவை போல 80 மடங்குக்கு மேற்பட்ட ஒரு பிரதேசம். அந்த பிரதேசம் 1976-ஆம் ஆண்டு மீளாய்வு செய்யப்பட்டு, அவர்கள் அதனை உள்வாங்கிக் கொண்டார்கள்,” என்றார்.

அதிக வளங்கள் உள்ள பகுதி வாட்ஜ் பேங்க் என்றபடியால், இலங்கை மீனவர்கள் அங்கு தொழில் செய்வதைத் தடுக்கும் நோக்கில், எதிர்காலத்தில் இலங்கை அப்பகுதிக்கு உரிமை கோரிவிடக்கூடாது என்ற ஒரு உள்நோக்கத்துடன் தான் அது செய்யப்பட்டதாக தான் கருதுவதாக அவர் கூறினார்.

மேலும் “கச்சத்தீவை திருப்பி கொடுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை," என டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

 
கச்சத்தீவு, இந்தியா, இலங்கை, டக்ளஸ் தேவானந்தா, நரேந்திர மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கை மீனவர்கள் சொல்வது என்ன?

இந்நிலையில், கச்சத்தீவை இந்தியாவிற்கு வழங்க முடியாது என இலங்கை மீனவர்கள் கூறுகின்றனர்.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட கடல் தொழில் கிராமிய அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் செல்லத்துரை நற்குணத்திடம் பிபிசி தமிழ் இதுகுறித்துக் கேட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

''கச்சத்தீவு என்பது எங்களுடைய தீவு என்பதே முடிவு. அது சம்பந்தமாக இந்தியாவில் கதைக்கின்றார்கள் என்றால், முழுமையாக அரசியல் நோக்கமாக தான் கதைக்கின்றார்கள். அரசியல் காலத்தில் மாத்திரம் தான் இது பற்றிய கதை வருகின்றது,” என்றார் நற்குணம்.

“இந்திரா காந்தி அம்மையார் இருந்த நேரம் 1974-ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தம். அதனூடாக [கச்சத்தீவு] இலங்கைக்கு சொந்தமாக்கப்பட்டது. மத்திய அரசாங்கம் செய்த ஒப்பந்தத்திற்கு மாநில தரப்பு பெற்றுத்தருவதாக கூறுவது அர்த்தமற்ற ஒன்று,” என்றார்.

மேலும், “இந்திய வெளிவிவகார அமைச்சர்கூட சொல்லியிருக்கின்றார், இந்திய டோலர் படகுகள் எல்லை தாண்டிப் போவது குற்றம். கச்சத்தீவு பகுதிக்குள் வந்து ஆக்கிரமிப்பு செய்வது என்பது சட்டப்படி குற்றம்,” என்றார்.

மேலும், வாக்கு அரசியலுக்காகவே இது இந்தியாவில் பேசுபொருளாகியிருக்கிறது என்று அவர் கூறுகின்றார்.

 

‘வாட்ஜ் பேங்க் பகுதிக்குள் நாங்கள் செல்லவேண்டிய நிலை வரலாம்’

வாட்ஜ் பேங்க் பகுதி குறித்தும் நற்குணம் தனது கருத்தை வெளியிட்டார்.

''அந்த பிரதேசங்களில் நல்ல மீன் வளம் இருக்கின்றது. வாட்ஜ் பேங்க் என்ற பகுதிக்குள் நாங்களும் தொழில் செய்யக்கூடிய வகையிலான சட்ட அமைவு தான் இருக்கின்றது. ஆனால், ஒப்பந்த அடிப்படையில் அந்த பாரிய கடல் பிரதேசத்தை தாங்கள் எடுத்துக்கொண்டு, கச்சத்தீவு பகுதியை வழங்கினார்கள்,” என்றார் அவர்.

“கச்சத்தீவு சட்டப்படி எங்களுடையது. கச்சத்தீவை எந்த வகையிலும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்களிடமும் சர்வதேச கடலுக்குச் சென்று மீன்பிடி தொழில் செய்யும் வகையிலான படகுகள் இருக்கின்றது. அதைக் கொண்டு வாட்ஜ் பேங்க் பகுதிக்குள் சென்று நாங்களும் மீன்பிடிக்க எத்தனிக்கலாம். அப்படியொரு கட்டத்திற்கு மாற வேண்டிய நிலைமையும் எங்களுக்கு ஏற்படும். அப்படியொரு தேவைப்பாடு எங்களுக்கு ஏற்படுகின்றது. கச்சத்தீவை வலியுறுத்தினால், நாங்களும் வாட்ஜ் பேங்க் பகுதியை வலியுறுத்தும் நிலை வரும்," என அவர் மேலும் குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/articles/cv2yxz0qqxeo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவு இந்தியாவின் உள்ளகப் பிரச்சினை - அலி சப்ரி

Published By: DIGITAL DESK 7   07 APR, 2024 | 11:13 AM

image

ஆர்.ராம்

கச்சதீவு சம்பந்தமாக பல்வேறு விதமான கருத்துக்கள் வெளிப்பட்டு வருகின்ற நிலையில், அந்த விவகாரம் இந்தியாவின் உள்ளகப் பிரச்சினையாகும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அரை நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே நிறைவடைந்த கச்சதீவு விடயம் சம்பந்தமாக தற்போது எவ்விதமான உரையாடல்களும் இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

இலங்கைக்குச் சொந்தமாக கச்சதீவு தற்போது கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இந்த கச்சதீவானது 1974இல் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியினால் இலங்கைக்கு வழங்கப்பட்டதாகும்.

இந்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி கச்சதீவு மீட்புக் கோசத்தினை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது. அத்துடன், காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான திராவிட முன்னேற்ற கழகமும் தான் கச்சதீவினை இலங்கைக்கு தாரைவார்த்தது என்பதையும் வெளிப்படுத்தி வருகிறது.

இவ்வாறான நிலையில் கருத்து வெளியிடுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி தமிழ்நாட்டில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இத்தகையதொரு சூழல் தான் கச்சதீவு விடயம் இந்திய அரசியல் கட்சிகளால் சீர்தூக்கப்பட்டுள்ளது. ஆகவே எம்மைப் பொறுத்தவரையில் இந்தியா இந்த விடயம் சம்பந்தமாக எம்முடன் உத்தியோகபூர்வமாக இன்னமும் உரையாடவில்லை. எனினும், அயல்நாடு என்ற வகையில் நாம் குறித்த விடயம் சம்பந்தமாக கரிசனைகளைக் கொண்டுள்ளோம்.

உண்மையில் கச்சதீவு 50 ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கைக்கு வழங்கப்பட்ட நிலமாகும். ஆகவே, கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதாகிவிட்டது. இவ்வாறான நிலையில், தற்போது அதனைப் மீளப்பெறுமாறு வலியுறுத்துவதானது யதார்த்ததுக்கு புறம்பானதாகும். அதுமட்டுமன்றி, தமிழகத்தில் காணப்படுகின்ற உள்ளக அரசியல் நிலைமைகளே இந்த விடயம் சம்பந்தமாக பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுவதற்கு காரணமாகின்றது.

எனவே, பிறிதொரு நாட்டின் உள்ளக அரசியல் விடயங்கள் சம்பந்தமாக தலையீடு செய்ய முடியாது. அதுவொரு முடிந்துபோன விடயமாகும் என்றார். 

https://www.virakesari.lk/article/180619

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.