Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"உன்னை மறக்க முடியவில்லை?"
 
 
ஒரு பொத்தானை அழுத்தி, அந்த கணமே  என் நினைவை உடனடியாக அழிக்க முடியும் என்றால்,  நான் உன்னுடன் ஒன்றாய் இருந்த தருணங்கள் எல்லாம் மனதில் இருந்து போய்விடும். ஆனால் நான் இப்ப  ஒரு தந்தையாக இருந்தும், அழகான அன்பான மனைவி காதல் கிழத்தியாக, விழித்ததும் நான் தேடும் ஆசை முகமாக, மறக்காது நான் ரசிக்கும் வண்ண உடலாக, நித்தமும் நான் சுவாசிக்கும் மூச்சுக் காற்றாக இருந்தும், இன்னும் உன்னை மறக்க முடியவில்லை? இது என்ன மாயமோ, அது புரியாமல் நான் தவிக்கிறேன். காலம் மாறும் கோலம் மாறும் என்பது பொய்யோ?, நான் அறியேன் பராபரமே!
 
காதல் என்பது உலகில்  உயிரினங்கள் தோன்றிய காலம் முதல் தொடர்ந்து வரும் தொப்புள்கொடி உணர்வு என்று கூட சொல்லலாம் . வரலாற்றின் பக்கங்களை வண்ணமயமாக மாற்றியதில் காதலுக்கு கணிசமான பங்குண்டு. அது வெற்றியாகவும் இருக்கலாம். தோல்வியாகவும் இருக்கலாம். எத்தனையோ தியாகங்களையும், எண்ணற்ற மாயங்களையும் அதனால் மட்டுமே நிகழ்த்த முடிந்திருக்கிறது என்பதை வரலாற்று சான்றுகள் எமக்கு எடுத்து கூறுகின்றன. காதலைத் தொடாமல் தன் வாழ்வைக் கடந்தோர்  மிக மிக சிலரே. அதனால் தானோ என்னவோ நானும் அதற்கு விதிவிலக்கல்ல. 
 
எப்போதும் என்றும் என் நினைவலைகள் புரண்டு எழும்போது காலடியில் வந்து உரசி கிளர்ச்சியூட்டுகிறதே அந்த அவளின் முதல் முத்தம்! எத்தனை முத்தங்களை மனைவி தந்திருப்பாள், ஆனால் அவ்வற்றை எல்லாம் தாண்டி, அந்த முத்தம், முதல் அனுபவம் இன்னும் நெஞ்சில் நிற்கிறதே, இது தான் முதல் காதலின் வலிமையோ? இப்ப நீ யாரோ ஒருவனின் மனைவி, நான் யாரோ ஒருவளின் கணவன். அது தான் நான் உன்னை மறக்க முயல்கிறேன், மற்றும் படி உன் நினைவு மகிழ்வானதே! நீ தந்த காதலும் காமமும் உயர்வானதே! இன்று கல்யாணம் முன் காதலை சிலர், பலர்  காமம் காமம் என்று அதை இழித்துப் பேசுவது எனக்குத் தெரியும். என்னை பொறுத்தவரையில் அது அச்சமூட்டும் பேய், பிசாசு அல்ல. நோயும் இல்லை. அதிமதுரத் தழையைத் தின்ற யானைக்கு மதம் சிறிது சிறிது சிறிதாகக் கூடுவது போல, மனம் விரும்புகிறவரைக் கண்டு அடைந்த பிறகு ஒருவருக்கு  ஏற்படும் (மதம் போல) பரவச நீட்சியையே காமம் என்று நான் நினைக்கிறன். மற்றும் படி அங்கு ஒன்றும் இல்லை. 
 
”காமம் காமம் என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை
குளகு மென்று ஆள் மதம் போலப்
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே"
 
காலம் எம்மை இருவேறு திசையில் அனுப்பிவிட்டது. ஒருவருக்கு ஒருவர் சில முரண்பாடுகள், விட்டுக்கொடுக்கும் பக்குவம் அன்று வரவில்லை. பக்கத்து வீட்டில் இருந்ததால், பலதடவை நாம் ஒருவரை ஒருவர் பார்த்துள்ளோம். என்றாலும், அவள் ஒரு நாள், எதிர்பாராத விதமாக, 'ஹலோ' சொல்லும் மட்டும் கதைக்கவேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லை? அவள் நல்ல அழகு, நல்ல கவர்ச்சி, நான் இல்லை என்று சொல்லவில்லை, இன்றைய நவீன நாகரீகம் அத்தனையும் அவளில் இருந்தது, நானும் நல்ல படிப்பு படித்துள்ளேன், நல்ல உத்தியோகம் வரும் காலத்தில் கிடைக்கும், என்றாலும் இப்ப சாதாரண வறுமைக் கோட்டில் வாழ்ந்தவன், இன்னும் வாழ்ந்து கொண்டு இருப்பவன், அதனால் தான் நான் அன்று அவளை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. மற்றும் படி ஒரு இளைஞனுக்கு இருக்கும் அத்தனை ஆசையும் எனக்கும் இருந்தது!  
 
'பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்' என திருவள்ளுவர் உரைத்தது போல, மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்று இருக்குமோ என்ற ஒரு எண்ணம் அந்தக்கணம் என் மனதில் தோன்றியது. என்றாலும் அவள் அந்த 'ஹலோ' வார்த்தைக்குப் பின் எனக்கு ஒன்றும் சொல்லவில்லை, ஆனால் தனது கைத் தொலைபேசியில் எனக்கு கேட்கக் கூடியதாக, கொஞ்சம் உரத்த இனிய குரலில், 'நாளை காலை நான் சுருக்கெழுத்து பாடம் படிக்க தொடங்குகிறேன், முதல் நாள் என்பதால் நேரத்துடன் ஒன்பது மணிக்கு பேருந்து தரிப்பு நிலையத்துக்குப் போகிறேன்' என்று சொல்லிக் கொண்டு தனது வீட்டுக்குள் போனாள். கட்டாயம் அது எனக்குத் தான் என்று அவளின் செய்குறி எடுத்துக் கூறியது. அந்தக் கொடிச்சி செல்லும் பின்னழகைப் பார்த்துக் கொண்டிருந்த என் நெஞ்சத்தைத் திரும்பி வாங்க முடியவில்லை, அவள் வீட்டுக்குள் போய் மறையும் மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தேன்! ஆமாம் ஆறு வயது முதல் அறுபது வயது வரை அனைவரும் ரசிப்பது அழகு.  அழகை வெறுப்பவர் உலகில் ஒருவரும் இல்லை. நான் என்ன முனிவரா? கண்ணை மூடிக்கொண்டு என்பாட்டில் போக!
 
"தளதள ததும்பும் இளமை பருவமே  
தகதக மின்னும் அழகிய மேனியே 
நறநறவென பல்லைக் கடித்து நின்று   
திருதிருவென 'ஹலோ'வென அழைப்பது ஏனோ ?"
 
"சல்சல் என சலங்கை ஒலிக்க
சிலுசிலு எனக் காற்று வீச
கமகம என முல்லை மணக்க 
தடதடவென என்மனதை தட்டுவது ஏனோ ?"
 
"திக்குத்திக்கு இன நெஞ்சு துடிக்க 
திடுதிடு என என்னுள்ளத்தில் நுழைந்து 
தரதர என்று என்னை இழுத்து 
விக்கிவிக்கி மெதுவாய் சொல்லுவது ஏனோ ?" 
 
"தொளதொள சட்டையில் வனப்பைக் காட்டி 
சிவசிவக்க கன்னம் வெட்கப் பட்டு 
துடிதுடிக்கும் இதயத்தை தொட்டுப் பார்த்து  
கிளுகிளுப்பு தந்து ஓடிஒழிவது ஏனோ?"
 
"கலகல பேச்சு நெஞ்சை பறிக்க
படபட என இமைகள் கொட்ட  
கிசுகிசு ஒன்றை தொலைபேசியில் சொல்லி 
சரசரவென்று வீட்டுக்குள் செல்லுவது ஏனோ ?"
 
அன்று நடுசாமம் தூக்கம் வராமல் விழித்துக் கொண்டிருந்தேன். புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வருவதாக இல்லை. என்னுடய மனம் எனோ பதற்றத்திலே இருந்தது. இது காதலா, ஈர்ப்பா எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது தான் என் மனதில் அடித்த முதல் அலை!  கண்ணை மூடினால் வந்து ஒட்டிக் கொள்ளும் தூக்கம் அன்று என்னை திக்கு முக்காடத்தான் செய்தது. என் போர்வைக்குள் வந்து பதுங்கி கொண்டது அன்று சாயங்காலம் பார்த்த முகம். எவளவோ துரத்த முயன்று பார்த்தேன் அது ஏனோ என் இதயத்தோடு ஒட்டிகொண்டது. இது என்ன உணர்வு ஏன் இப்படி என்று புரியாமல் எப்படியோ போராடி, நாளை காலை சந்திப்பேன் என எனக்கே நான் ஆறுதல் கூறி, கடைசியில் தூங்கிவிட்டேன்.
 
காலையில் நான் நண்பனை சந்திக்கப் போகிறேன் என, அவசரம் அவசரமாக தோசை சாப்பிட்டு விட்டு, 8:55 க்கு வீட்டில் இருந்து வெளியே வந்தேன். எங்கள் வீட்டு மல்லிகை வாசம் அன்று அதிகமானது போல் எனக்குத் தோன்றியது. வீட்டு முன் நின்ற ரோசா மரம் அதீத அழகுடன் தென்பட்டது. மெல்ல பக்கத்து வீடடை எட்டி பார்த்தேன். அவள் வெளியே முற்றத்து தோட்டத்தில், வெளியே போக ஆயுத்தமாக  நின்றாள். என்னைக் கண்டதும், ' அம்மா போய்விட்டு வாறன்' என்று  தன் விழிகளால் எதேச்சையாக என்னை நோக்கியவாறு வீதிக்கு வந்தாள். நானும் அவள் பின்னால் பேருந்து தரிப்பு நிலையத்துக்கு போனேன். அந்த பேருந்தில் இருவரும் பக்கத்தில் பக்கத்தில் இருந்தோம். கண்கள் இரண்டும் மௌனமாக பேசின. கைகள் மெல்ல இணைந்தன, வாய்கள் தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், பின் அவள் கலகலவென்று பேசத் தொடங்கினாள். அது தான் என் முதல் காதல் அனுபவம்! 
 
காதல் என்பது காற்றை போல, அதை சுவாசிக்காமல் இருக்க முடியாது. இன்று அதைத்தான் சுவாசித்தேன். அவளும் என்னுடன் சேர்ந்து சுவாசித்தாள். ஆனால், அது அனைவருக்கும் வெற்றிகரமாக அமைகிறதா? என்பது தான் பெரிய கேள்வி. முதல் காதலில் வெல்பவன், அந்த காதலை மட்டும்  தான் வெற்றிப் பெறுகிறான். முதல் காதலில் தோற்றவன் தனது வாழ்க்கையிலேயே வெற்றிப் பெறுகிறான் என்று யாரோ கூறியது இப்ப, காலம் கடந்து ஞாபகம் வருகிறது. ஆமாம், முதல் காதல் என்பது தொப்புள்கொடி போல அறுத்து எறிந்தாலும் கூட, தொப்புள் மரணிக்கும் வரை மறையாது. அது தான் அவளை மறக்க முடியவில்லை? 
 
அவளின் பெயர் சுகந்தினி, கொழும்பில் பிறந்து வளர்ந்தவர், அந்த நேர நாகரிக உடையில், சீகை அலங்காரத்தில் உச்சியில் இருந்தாள். குறுகிய கூந்தல் மற்றும் கொஞ்சம் பருமன் கூட, நியாயமான கொஞ்சம் சிவப்பு நிறம். ஆனால் “குமரி மகளிர் கூந்தல் புரைய அமரின் இட்ட அருமுள்வேலி”  போல, தீண்டப்படாத குமரிப் பெண்ணின் கூந்தலைப்போல் எவராலும் தாண்டப்படாத அரிய முள்வேலி போல அவள் இருந்தாள். அது தான் எனக்கு அவளில் பிடித்துக் கொண்ட அவளின் இயல்பு, அது மட்டும் அல்ல, ஓயாது கலகலப்பாக, என்றும் சிரித்த முகத்துடன், பகிடிகளும் விட்டு கதைக்கக் கூடியவள். ஒரு நாள் "woman இல் முன்னாள் இருப்பது cow இல் பின்னால் இருக்குது அது என்ன என்று கேட்டாள்?" மேலாக பார்க்கும் பொழுது வேறு ஒன்றின் நினைவு வந்தாலும், ஆங்கிலத்தில் woman [பெண்], cow [பசு] என்று சொன்னதால் நான் உடனடியாக 'W' என்றேன். நான் வென்றுவிட்டதால், 
 
'சினம் கொண்டு முறைத்தாள், 
கொஞ்சம் விலத்தி இருந்தாள், 
வெறுப்பாய் என்னைப் பார்த்தாள், 
நறுக்காய் பின் சிரித்தாள்'        
 
அந்த அவளின் புரியாத புதிர் தான் எனக்கு உண்மையில் பிடித்த அழகு. எது எப்படியாகினும், நெருங்கி பழகும் பொழுது நான் கண்ட அவளின் பருமன், என்னை விட ஒரு அங்குல உயரம் எனக்கு கொஞ்சம் சஞ்சலமும் கொடுத்தது.
 
ஆண் பெண் நண்பர்களாக இருப்பதும், கணவன் மனைவியாக இருப்பதும் ஒன்றல்ல, கூடி வாழும் பொழுது ஜோடி பொருத்தம் ஒரு முக்கியம், நான் இங்கு சாதக, சாதி பொருத்தங்களை கூறவில்லை. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. செந்தாமரைப் பூப்போன்று சிவப்பு கால்களுக்கு வெள்ளி கொலுசு போல, பரந்து விரிந்த செவிக்கு தங்க தோடு போல, உயர்ந்த கூரான மூக்கிற்கு சிவப்பு கல் மூக்குத்தி போல, கருங்கூந்தலிலே தஞ்சமிட்டுள்ள மல்லிகைப்பூ போல, அப்படியான ஒரு அழகு பொருத்தத்தைத்தான் நான் இங்கு கூறுகிறேன். அது தான் என்னை மெல்ல மெல்ல அவளிடம் இருந்து விலக வைத்தது. அதை அவளும் உணர்ந்தாள். ஆனால் அந்த நட்பு, முதல் காதல் போர்வைக்குள் மறைந்து இருந்ததே தவிர, விலகவில்லை என்பதை, ஒரு கிழமைக்கு முன்பு, நாம் விடுதலையில் கொழும்பு சென்று, கடற்கரைக்கு பிள்ளைகளுடன் போனபொழுது அறிந்துகொண்டேன். 
 
அவள், அவளேதான் கடற்கரையின் ஒரு ஓரத்தில் இருந்த வாங்கில், கடல் அலைகளை பார்த்துக் கொண்டு தனிய இருந்தாள். 'ஹலோ' என்று சொல்ல என் மனம் துடித்தாலும், நான் அதை நிறுத்தி விட்டேன். சுகந்தினி மேல் கடற்கரை புழுதிகள் படர்ந்து இருந்தாலும், ஐம்பது வயதை நெருங்கி இருந்தாலும் இன்னும் பொலிவு குறையாமல் அப்படியே இருந்தாள். எனினும் நிலவின் கிரணங்களை மேகங்கள் மறைத்து விடுவது போல, நெடு நாட்கள் வாசிக்கப்படாத வீணை போல, எனக்கு அவள் தோன்றினாள். எதோ ஒரு சோகம் என்ற பெரும் கடலில் அவள் மூழ்கி இருப்பதை உணர்ந்தேன். நானும் மனைவியும் போவதை  அவள் எப்படியோ பார்த்துவிட்டாள். இமைகள் வெட்டாமல் அப்படியே கொஞ்ச நேரம் பார்த்தாள். மான் போன்ற விழிகொண்ட அவள், அதே கம்பீரமாக, ஆனால் இப்ப மெலிந்து ஒன்றும் பேசாமல் மனம் ஒடுங்கி இருந்தாள். நான் அவளை நெருங்கவும் இல்லை, குழப்பவும் இல்லை. பொதுவாக அண்ணா என்று தொடங்கி, அத்தான் என்று முடியும் நட்புகளை பார்த்துள்ளேன், ஆனால் என்னுடையது அதற்கு தலைகீழ், ஆமாம் 'கண்டி அண்ணா' என்று முடிந்தது அது! 
 
நான் வெறுத்த அந்த பருமன் இப்ப இல்லை. "என்றும் நுடங்கும் இடைஎன்ப ஏழுலகும் நின்ற கவிகை நிழல்வேந்தே - ஒன்றி அறுகால் சிறுபறவை அஞ்சிறகால் வீசம் சிறுகாற்றுக் காற்றாது தேய்ந்து." அதாவது, அவள் கூந்தலில் மலர் சூடி இருக்கிறாள். அந்த மலர்களில் இருந்து தேனை உண்ண வண்டுகள் வருகின்றன. அந்த வண்டுகள் தங்கள் சிறகுகளை அடிக்கின்றன. அந்த சிறகில் இருந்து காற்று வருகிறது. அந்த காற்று அவளின் தலை மேல்  உள்ள பூவின் மேல் மோதுகிறது. அதனால் அவள் இடை அங்கும் இங்கும் அசைகிறது, வளைகிறது. இப்படி அங்கும் இங்கும் அசைந்து அவள் இடை நாளடைவில் தேய்ந்தே போயிற்றாம் என்பது போல, அவள் இன்று கொடி இடையாக இருந்தாள்!  நான் மெதுவாக, இடைக்கிடை அவளை பார்த்துக்கொண்டு நகர்ந்தேன்!  "என்ன மெதுவாக, பிள்ளைகள் முன்னுக்கு ஓடிவிட்டார்கள். கெதியாக நடவுங்கள்"  என்ற சத்தம் கேட்காவிட்டால்,  ஒருவேளை நான் அவளை விசாரித்து இருப்பேன். பெருமூச்சுடன் நான் கெதியாக, மனைவியுடன் பிள்ளைகளை நோக்கி நடந்தேன்.
 
முதல் காதல் மட்டுமல்ல சிறு வயதில் ஆசைப்பட்ட  பொம்மை, பள்ளிப் பருவத்தில் விரும்பய சைக்கிள், பல்கலைக்கழகம் படிக்கும் போது ஆசைப்பட்ட உத்தியோகம்  என எதுவெல்லாம் நாம் மிகவும் விரும்பி அது கிடைக்கவில்லையோ அதன் மீதான மோகம் என்றுமே நமக்கு தீராது! மறக்காது! ஆனால் முதல் காதல் தான் ஒருவரை எப்படி காதலிக்க வேண்டும், ஒருவரை எப்படி காதலிக்க கூடாது, காதல் என்றால் என்ன என்பதன் உண்மையான விளக்கத்தை தருகிறது.
 
"கரணத்தின் அமைந்து முடிந்த காலை
நெஞ்சுத் தளை அவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும்.."
 
திருமணச் சடங்கிற்குப் பின்னர், தங்குதடையின்றி இன்பத்தைத் துய்ப்பர் என்கிறது தொல்காப்பியம். ஆனால் கல்கிசை கடற்கரையால் ஹோட்டல் திரும்பி நானும் மனைவியும் ஒன்றாக எம் அறையில் தூங்கினாலும், அழகு தேவதையாக அவள் என்னை அணைத்தபடி முத்தம் கொடுத்தாலும், இன்று என் மனதில், சுகந்தினியின் அந்த சோக முகம் தான் நிறைந்து இருந்தது? இந்த கடற்கரையில் எத்தனை நாட்கள் நானும் சுகந்தினியும் சந்தித்து இருப்போம், அப்ப எல்லாம் அவள் முகம் காலையில் தோன்றும் கதிரொளி போல அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும். இன்று ஏன் இப்படி?, அவளுக்கு என்ன நடந்தது? அது தான் மனதை வாட்டிக்கொண்டு இருந்தது. இதே கடற்கரையில் தான் கடைசியாக நானும் அவளும் விலகியது கூட. " உங்களுக்கு என்ன நடந்தது?", மனைவி வராத கோபத்துடன் செல்லமாக அதட்டினாள். சந்தேகத்தோடு நம் வாழ்வில் ஒரு நிமிடம் கூட பொய்யாக நகரக்கூடாது என்ற எண்ணம் கொண்டவன் நான். ஆகவே சுகந்தினியைப் பற்றி முழுமையாக என் மனைவிக்கு கூறி, இன்று கண்ட கோலத்தையும் கூறினேன். 
 
அவள் மௌனமாக இன்னும் ஒரு முத்தம் தந்தாள், என் கைகளை இறுக பிடித்தாள். "நான் சொன்னதை முழுதும் கேட்டாயா ?, என்னை மன்னித்துவிடு. என் மனதில்  அவளுக்கு என்ன நடந்தது, ஏன் அவள் இந்தக் கோலம்?, அது தான் வாட்டுகிறது, மற்றும்படி நீயே என் தேவதை" என்று படபட என்று சொல்லி முடித்தேன். அவள் என்னையே கொஞ்ச நேரம் பார்த்தாள். " நாளைக்கு நாம் இருவரும் அவளை சந்தித்து பேசினால் என்ன?, அதில் ஒரு தப்பும் இல்லை, ஓகேயா கண்டி அண்ணா" என்று புன்சிரிப்புடன் தன்னையும் என்னையும் சேர்த்து போர்வைக்குள் மறைத்தாள்! 
 
நன்றி  
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கும் அசாத்திற்கு வெள்ளை அடிக்கவில்லை என்பதை இங்கு உறுதியாக கூறுகின்றேன்.  நான் மேற்குலகின் நடவடிக்கைகளுக்கு எதிராக எழுதினால் ஏன் இவர் ரஷ்யாவில் தஞ்சம் கோரவில்லை என எழுதுகின்றார்கள். எனக்கு எதிராக எழுதுபவர்கள் ஒன்றும் இலங்கையில் இருந்து எழுதுபவர்களல்ல.  எனவே தாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் ஆட்சியில் இருக்கும்  அரசை விட மாற்றுக்கருத்து கட்சிகள் இல்லையா என யாராவது பதில் சொல்ல முடியுமா?  தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு செய்யும் நடவடிக்கைகளை மட்டும் ஆதரிப்பீர்களா? நீங்கள் ஆதரிக்கும் இந்த மேற்குலகுதானே முள்ளிவாய்க்கால் நிகழ்வை வேடிக்கை பார்த்தது. 👈 அப்போது வராத உணர்ச்சிகளும் வார்த்தைகளும் உக்ரேன்,சிரியா ,காஸா போன்ற நாடுகளின் கலவரங்களில் மேற்குலகு சார்பான கருத்துக்கள் வருகின்றனவே அது ஏன்? எப்படி? விடுதலைப்புலிகள் செய்தவை மாறானவை என்பதையே உங்கள்  அன்றைய மௌனம் சொல்லி நிற்கின்றது. மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கும் காசா அழிவிற்கும் சிரியா வீழ்சிக்கும் சந்தோசமாக ஆர்ப்பரிப்பவர்கள் ஏன் முள்ளிவாய்க்கால் அழிப்பை ஆர்ப்பரிக்கவில்லை?    அண்மைய மேற்குலகின் அழிவுகள் எல்லாம் நான், என் மண், என் தேசம், என்பவர்களை தான் தேடி அழித்தொழித்துக்கொண்டிருக்கின்றது. எல்லா மனிதர்களுடனும் எல்லா கருத்துக்களுடனும் ஒருமித்து நிற்க முடியாது.
    • ஒரு படைவீரர் இப்படி தன் நிலையைச் சொல்லியிருந்தார். இது அவரின் வார்த்தைகளே...........   கொடுங்கோலின் கடைசிப் படைவீரன் ------------------------------------------------------------- என்னுடன் இருந்தவர்கள் என்னவானார்கள் என்று எனக்குத் தெரியாது   சிலர் அந்தப் பக்கமாக போனார்கள் சிலர் இந்தப் பக்கமாக போனார்கள்   நான் பிரதான தெருவுக்கு போக விரும்பினேன்   அங்கிருந்து எந்த ஊருக்கும் போகலாம் பின்னர் என்னை யாருக்கும் தெரியாது அதன் பின் எனக்கு கவலையும் இல்லை   ஒரு ஊருக்கு போனேன் பின்னர் இன்னொரு ஊருக்கு போனேன்   எங்கும் மக்கள் கூட்டங்களாக கூடியிருந்தனர் அவர்கள் எல்லோரும் ஓடி விட்டனர் என்றனர்   அழுது அழுது மகிழ்வாக இருந்தேன்   இறைவனே எல்லாப் புகழும் உனக்கே.
    • அடே, இதுவும் நல்ல தொழிலா இருக்கே! சத்தமில்லாமல், எதிர்ப்பில்லாமல், வந்தோமா போனோமா என்று கைநிறைய பணம். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள், திட்டம் போடுகிறார்கள், கூட்டு சேர்கிறர்கள், இடம் தெரிகிறார்கள், அபாரமாய் உழைக்கிறார்கள், உல்லாசமாய் வாழ்கிறார்கள். திருமண உறவாய்,, தொழில் சிநேகித  இருக்குமோ இருவருக்கும்? 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.