Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"முதுமையில் தனிமை" / பகுதி: 01

உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்பு கின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத்தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ?மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும்  நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட  அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம். 
 
அக்டோபர் முதலாம் தேதி சர்வதேச முதியோர் தினமாகும். மூத்த பிரஜைகள் என்று அழைக்கப்படும் முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும், கௌரவமாகவும் நோக்கி அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டு தோறும் அக்டோபர் 1ம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. வயது முதிர்ந்தோரைப் பாதுகாப்பதுடன் அவர்களின் சுதந்திரம், ஆரோக்கியம் மற்றும் பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கமாகும். பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டோர் முதியோர் என வரையறுக்கப் பட்டாலும், இன்றைய  கால கட்டத்தில் ,சுமுக அரசியல் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் கூட்டிக் கொண்டு போகின்றன. தற்போது உலகலாவிய ரீதியாக முதியோர் எண்ணிக்கை 60 கோடியைத் தாண்டியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டில் இரு மடங்காக உயரும் என்று தெரிகிறது. குழந்தை பிறப்பு வீதம் அதிகம் அதே போல் இறப்பு வீதம் அதிகம் என்ற நிலை மாறி தற்போது பிறப்பு-இறப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதால் நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்து உள்ளதுடன், சராசரி ஆயுள் காலம் 75 -ஐ தாண்டுகிறது. என்றாலும் அவர்கள் மகிழ்வாக வாழ்கிறார்களா என்பது ஒரு கேள்வி குறியாகவே உள்ளது? 
 
பிசிராந்தையர் என்ற புலவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பாடிய புறநானூறு பாடல் 191 ஞாபகம் வருகிறது:
 
‘யாண்டுபல வாக , நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க; அதன்தலை
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.
 
“உங்களுக்குச் சென்ற ஆண்டுகள் பலவாக இருக்கவும், உங்களுக்கு நரையில்லையே அது எப்படி என நீங்கள் கேட்பீராயின் கூறுவேன்: "வீட்டில் மனைவி நல்லவள்; மக்கள் அறிவு நிரம்பியவர். ‘ஏவா மக்கள் மூவா மருந்து’ என்பது போல் ஏவலர் குறிப்பறிந்து நடப்பவர். எனவே வீட்டில் சிக்கல் 
இல்லை. அக அமைதி கூடிற்று. புறத்தேயும் அரசன் நல்லவன்,என் நாட்டு அரசனும் நீதி அல்லாதவற்றைச் செய்யாமல் காவல் காப்பவன்.ஊரார் சான்றோர். புறத்திலும் அமைதியே உண்டாயிற்று. கவலைகள் இல்லாத வாழ்க்கையால் நரை உண்டாகவில்லை" என்கிறான் அந்த புலவன். ஆனால் இன்று நிலை மாறிவிட்டது. ஆண்- பெண் இருபாலாரும் இன்று வேலைக்குச் செல்லுதலும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அளவு சுருங்கியிருப்பதும், கூட்டுக் குடும்ப முறை அநேகமாக இல்லாதிருப்பதும்,மற்றும்  நகரமயமாதல், உலகமயமாதல் காரணமும் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இன்று பொதுவாக மூன்று விதமாக இந்த முதியோர்கள் வாழ்கிறார்கள். உதாரணமாக, சிலர் பிள்ளைகளுடன் அல்லது உறவினர்களோடு வசிக்கிறார்கள், சிலர் கணவன் - மனைவி என்று இருவர் மட்டும் தனியாக வசிக்கிறார்கள், மற்றும் சிலர் ஆணோ அல்லது பெண்ணோ ஒருவராக தனியாக வசிக்கிறார்கள். இங்கு ஒரு சாரார் அவர்கள் எங்கு வசித்தாலும், சூழ்நிலை காரணமாக, தனிமையை உணர தொடங்குவதும், தாம் தனித்து விடப் பட்டு விடும் என ஏங்க தொடங்குவதும் அவர்களின் [முதியோர்களின்] உடல் நிலையை /சுகாதாரத்தை மிகவும் பாதிக்கும் காரணியாகும். கொடிது கொடிது இளமையில் வறுமை என்றார் ஔவை அதற்குச் சற்றும் குறைந்ததல்ல முதுமையில் தனிமை! 
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானூறு 243 இல் நாம் ஒரு முதியவரை சந்திக்கிறோம்.அவர் எப்படி இருக்கிறார் தெரியுமா?
 
"இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல்
 செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
 தண்கயம் ஆடும் மகளிரோடு கைபிணைந்து
 தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி
 மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு
 உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
 நீர்நணிப் படுகோடு ஏறிச்சீர் மிகக்
 கரையவர் மருளத் திரையகம் பிதிர
 நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
 குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
 அளிதோ தானே யாண்டு உண்டு கொல்லோ
 தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
 இருமிடை மிடைந்த சிலசொல்
 பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே"   
 
இங்கே முதல் பதினொரு அடிகளில்  தம் இளமைக் காலத்தில் நிகழ்ந்த பசுமையான அனுபவங்களை எண்ணிப் பார்த்து அந்த இளமை இப்ப எங்கே போய்விட்டது? என பெரு மூச்சு விடுகிறார். அப்படி என்றால் இப்ப அவரின் நிலை என்ன? அதையும் கடைசி மூன்று வரிகளில்...  "பூண் சூட்டிய நுனியையுடைய வளைந்த ஊன்றுகோலை ஊன்றித் தளர்ந்து, இருமல்களுக்கு இடை இடையே வந்த சில சொற்களைக் கூறும் , முதுமையின் நிலை இரங்கத் தக்கது" என்கிறார். அது மட்டும் அல்ல, நற்றிணை 10  இல் ,காதல் என்பது உடற்காமம் அன்று அதனையும் கடந்து மனதளவில் உயர்ந்து நிற்பதாகும். எனவே,  உடல் அழகு நீங்கி நரையோடு முதுமை வந்தபோதும் அவளைப் போற்றுவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்கிறது.இது இரு சாராருக்கும் பொருந்தும்.
 
 "பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்த
  நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
  நீத்த லோம்புமதி பூக்கே ழூர"  
 
மேலும்  உடம்பின் வெவ்வேறு மாற்ற நிலையை குண்டலகேசிப் பாடல் ஒன்று இப்படி எடுத்து உரைக்கிறது;
 
"பாளையாம் தன்மை செத்தும்
 பாலனாம் தன்மை செத்தும்
 காளையாம் தன்மை செத்தும்
 காமுறும் இளமை செத்தும்
 மீளும் இவ் வியல்பும் இன்னே
 மேல்வரும் மூப்பும் ஆகி
 நாளுநாள் சாகின் றோமால்
 நமக்குநாம் அழாதது என்னோ?"
 
அதாவது,பாளை போன்ற இளங்குழந்தைப் பருவம் செத்து, குழந்தைப் பருவம் பிறக்கிறது. பின் குழந்தைப் பருவம் செத்து, காளைப் பருவம் பிறக்கிறது. அந்த காளைப் பருவம் செத்து, காதலுக்கு உரிய இளமைப் பருவம் ஏற்படுகிறது. அதுவும் பின் மாறி முதுமை உண்டாகிறது என்கிறது. ஆனால்,பொதுவாக  இளமையைக் கொண்டாடும் சமூகம் முதுமை என்றால் முகம் சுளிக்கிறது. முகத்தில் சுருக்கம், உடலில் குடிகொள்ளும் நோய்கள், தள்ளாடும் நடை, புறக்கணிப்பு, தனிமை இப்படி நீளும் பட்டியலில் "முதுமையில் தனிமை"  மிகவும் கொடியது. அது மட்டும் அல்ல,
முதுமையை இன்னொரு குழந்தைப் பருவம் எனலாம். குழந்தைகள் எப்படித் தங்கள் மீது கவனமும் அன்பும் செலுத்தப்பட வேண்டும் என்ற விரும்புவார்களோ, அதே போல முதியவர்களும் விரும்புவார்கள். இதை நாம் அறிய வேண்டும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 02 தொடரும். 
 
 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.