Jump to content

"முதுமையில் தனிமை" / பகுதி: 02


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"முதுமையில் தனிமை" / பகுதி: 02

 

முதுமையில் தனிமைக்கான காரணங்களையும் அதன் விளைவுகளையும் நேரத்துடன் ஓரளவு விபரமாக நாம் அறிவதன் மூலம் அதை இலகுவாக தடுக்கலாம். மனிதர்களுக்கு வயது போகப் போக, தனிமையில் வசிக்கும் நிலையின் வாய்ப்பும் அதிகமாக அதிகரித்து செல்கிறது. தனிமையில் வாழ்வது, அவர் சமூகத்தில் இருந்து தனிமை படுத்தப் பட்டார் என்பதை குறிக்காது எனினும், கட்டாயம் ஒரு நோய் தாக்க நிலைக்கு அடிகோலக் கூடிய காரணிகளில் ஒன்றாகும். மற்றது எவ்வளவு அடிக்கடி முதியோர்கள் சமூக நடவடிக்கைகளில் ஈடு படுகிறார்கள் என்பதும் ஆகும். பொதுவாக, வயது போகப் போக  சமூக தொடர்புகள் குறைய தொடங்கு கின்றன. உதாரணமாக வேலையில் இருந்து ஓய்வு பெறுதல், நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் இறப்பை தழுவுதல், அல்லது அவரால் தன் பாட்டில் அசைதல் முடியாமை [lack of mobility] போன்றவையாகும். தனிமைக்கான காரணங்கள் ஒருபுறம் இருக்க, அதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் பாரதூரமானதும் ஆகும். இந்த முதுமை என்பது ஏதோ ஒரே இரவில் வந்து விடுவதில்லை. எனவே முதுமை எய்தும் முன்னரே, தன்னை அதற்குத் தயார்படுத்திக் கொண்டால் அதை அவரால் தன்பாட்டில் தவிர்க்கவும் முடியும்.
 
பொதுவாக,ஒருவர் முதுமை நிலையை அடையும் பொழுது, அவரின்  உடலின் செயல்பாடு குறையத் தொடங்கு கின்றன. உதாரணமாக, திசுச் சீர்கேடு, தோல் சுருக்கம், தசை எடை குறைவு, புலன் குறைபாடு, நரம்பு மண்டலத் தளர்ச்சி, உடல் அசைவுத் தன்மைக் குறைவு, இனப்பெருக்கத் தடை, உளவியல் பாதிப்புகள் என பல்வேறு முறைகளில் உடல் தொழிற்பாடும் நலமும் குன்றுகின்றன. மேலும் உடல் பல்வேறு நோய்களுக்கும் இலகுவாக  உட்படு கின்றது. இதய நோய், பக்கவாதம், மூட்டுவலி, புற்று நோய், நீரிழிவு நோய் போன்றவை பெரிதும் முதுமைப்படுத்லின் காரணமாகவே ஏற்படுகிறது எனலாம். இன்று ஒருவரின் ஆயுள் எதிர்பார்ப்பு  உலக அளவில் 71.5 ஆண்டுகளை (68 ஆண்டுகள் 4 மாதம் ஆண்களுக்கும் 72 ஆண்டுகள் 8 மாதம் பெண்களுக்கும்) தாண்டியுள்ளது என கணிக்கப் பட்டுள்ளது. என்றாலும் இது நாட்டுக்கு நாடு அங்கு நிகழும் சூழலைப் பொறுத்து வேறுபடுகிறது. உதாரணமாக,ஒட்டு மொத்தம் ஆயுள் எதிர்பார்ப்பு ஜப்பானில்  82 .6 ஐயும் , ஸ்விட்சர்லாந்து 81 .7 ஐயும் , ஆஸ்திரேலியா  81 .2 ஐயும்,கனடா 80 .7 ஐயும், சிங்கப்பூர் 80 .0 ஐயும் ,  ஐக்கிய இராச்சியம் 79 .4 ஐயும், ஐக்கிய அமெரிக்கா 78 .2 ஐயும் , அப்படியே மலேசியா 74 .2 ஐயும் ,இலங்கை 72 .4 ஐயும் , இந்தியா 64 .7 ஐயும் தாண்டி யுள்ளது.
 
பொதுவாக இவர்கள் இரண்டு விதமான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். முதலாவது, அவர்களது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்படுதலும் அதன் காரணமாக,வெளியில் தனிமையில் போக முடியாததால், ஓர் இடத்தில் முடங்கிப் போதல், அதனால் பல தேவைகளைப் பூர்த்தி செய்ய பிறரைச் சார்ந்திருத்தல், சமூகத் தொடர்பு குறைந்து போதல் போன்றவையாகும். மற்றது மனம் சார்ந்த பிரச்சினைகள் ஆகும். உதாரணமாக, பிறரைச் சார்ந்திருப்பது, அவர்களால் உதாசீனப்படுவது, நிந்திக்கப்படுவது, பய உணர்வு, தனிமை உணர்வு போன்றவற்றால் அவதிப்படுவது, நேரத்தை உபயோகப்படுத்த இயலாமை, பொழுதுபோக்கின்மை மற்றும் வாழ்வில் சுவாரசியமின்மை [ஆர்வ மின்மை] போன்றவை ஏற்படுத்தும் மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகும். இவர்களது மிக முக்கிய தேவை என்பது அன்பு, ஆதரவு, கரிசனம், இன்சொல், கவனிப்பு போன்றவையாகும். ஆனால், அவர்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளில் மிகக் மிக்க கொடுமையானது அவர்கள் அனுபவிக்கும் முதுமையில் தனிமைதான். உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் அல்லது கல்லூரியில் பலரோடு சேர்ந்து பணி செய்த ஒருவர் முதுமையில் தனிமையில் பேச்சு துணை இன்றி சிலவேளை இருப்பது, தன் மனதில் தோன்றும் கருத்துகளை பகிர்ந்து கொள்ளக்கூட எவரும் இல்லாது சிலவேளை இருப்பது, தனது சுகதுக்கங்களை மனம் விட்டு பேச முடியாது சிலவேளை இருப்பது, போன்ற நிலைமைகள், அவர்களை கட்டாயம் துன்பப் படுத்தும். மேலும் இவர்கள் தங்கள் பிரச்சினைகளை பிறரோடு பகிர்ந்து கொள்ள முடியாத போது, அவற்றுக்குத் தீர்வு என எதுவும் அவர்கள் கண்ணில் படுவதும் இல்லை. நாளை நமக்கு முதுமை வரும் போது எந்த வகையில் நாம் நடத்தப்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோமோ, அப்படியே  இன்று நம் முன் நடமாடும் தாய் தந்தையரை, மற்றும் முதியோரை, நாம் நடத்த வேண்டும் என்ற கருத்தினை,நாம் அனைவரும் எமது மனதில் ஏற்றுக் கொண்டாலே இதற்கு விடை இலகுவாகி விடுகிறது எனலாம். இனி முக்கிய சில தகவல்களை கீழே தருகிறேன்.
 
1. முதுமையில் தனிமை இறப்பு சந்தர்ப்பத்தை அதிகரிக்கிறது.உதாரணமாக, முதிர்ந்தோரில், 52 அல்லது அதற்கு மேற்பட்டோரில், சமூகத்தில் இருந்து தனிமையாதலும் மற்றும் தனிமையில் இருப்பதும் [social isolation and loneliness] இறப்பு சந்தர்ப்பத்தை அதிகரிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.பொதுவாக, ஒரு மனிதன் தனித்தோ அல்லது எந்த வித சமுக தொடர்பு இன்றியோ இருப்பது, அதனால் ஒன்றி இருக்கும் பொழுது, அவர்களின் நம்பிக்கை உடையவர்களால் ஏற்படும் உடனடியான மருத்துவ கவனிப்பு அற்றுப் போகிறது. இது கடுமையான தீவிர நோய் அறிகுறிகள் ஏற்பட வழி வகுக்கலாம். எனவே, தனிமையை குறைப்பதே இறப்பின் வீதத்தை குறைக்கும் முதல் காரணியாக நாம் கொள்ளலாம்.
 
2. தனிமையை ஒருவர் உணரத் தொடங்குவது, அவரின் உடல் ,மன ஆரோக்கியத்தை [physical and mental health] கட்டாயம் பாதிக்கும். அதிலும், முக்கியமாக, முதுமையில் தனிமை மிகவும் பொல்லாதது. இங்கு தனிமை என்பது எதோ தனித்து கண் காணாத இடத்தில், யாவரும் இன்றி, தனி மனிதனாக வாழ்வது அல்ல. தனிமை எல்லா நிலையிலும் உண்டு. உதாரணமாக, குடும்பத்தினரோடு, ஆனால், பேச்சுவார்த்தையே இல்லாத நிலையில் இருப்பவர்களும் தனிமையில் இருப்பவர்களே! அனுபவம், அறிவு எல்லாம் மிகுந்த முதுமை பொதுவாக இனிமையாக இருக்கலாம் என ஒருவர் எண்ணலாம். ஆனால் உண்மை அப்படி அல்ல. நோய்நொடிகள், தனிமை என்று முதுமையை வாட்டும் பிரச்சினைகள் பல இன்று உண்டு. இதிலிருந்து தப்பிக்க வழிகளும் சில இருக்கின்றன. இளமையாக இருக்கும்போதே நமக்கும் முதுமை உண்டு என்பதை உணர வேண்டும். அந்த உண்மை புரிந்தாலே முதுமை இனிமை ஆகிவிடும். ஆகவே நாம் தான் நம்மை தயார் படுத்த வேண்டும். உதாரணமாக, முதியோர் நிலையம் [senior centers], அப்படியான தனிமை உணர்வுகளை தோற்கடிக்க வைக்கும் ஒரு வழியாகும்.
 
3.ஒருவர் தனிமையை உணரும் பொழுது அல்லது தனிமையை அனுபவிக்கும் பொழுது,அவரின் அறிவாற்றலில் வீழ்ச்சி [cognitive decline] ஏற்பட்டு , டிமென்ஷியா [dementia] என்ற மனத்தளர்ச்சியினால் ஏற்படும் மறதிநோய், புத்திமாறாட்டம், போன்ற ஆபத்துக்கள் நிறைய உண்டு. இவை ஆய்வு மூலம் நிருவப் பட்டுள்ளன [feelings of loneliness are linked to poor cognitive performance and quicker cognitive decline.]. வயதான பிறகு மனது பந்த பாசங்களை எதிர்பார்க்கும். இருந்தாலும் அவர்களோடு அதிக எதிர் பார்ப்புகளை வைத்திருக்காமல், எம்மை நாம் தயார் படுத்தினால் முதுமையை ஓரளவாவது இனிமை ஆக்கலாம். உதாரணமாக,டாக்டர் கசியப்போ [Dr. Cacioppo] ,நாம் ஒரு சமூக இனங்களாக [social species] பரிணாமம் அடைந்து உள்ளோம் என்கிறார்.எனவே எங்கள் மூலையில் அப்படியான எண்ணம் இறுக்கமாக படிந்துள்ளது. எனவே அவை நிறைவேறாத வேளையில், அது உடல் மற்றும் நரம்பியல் [physical and neurological] தாக்கங்களை உண்டாக்கலாம்.
 
4.முதியோர்கள் முறை கேடுகளால் அல்லது முதியோர் வன்கொடுமைகளால் மிகவும் பாதிக்கப் படுவதற்கு [vulnerable to elder abuse],  சமூக தனிமை [Social isolation] இலகுவாக வழிவகுக்கிறது, பல ஆய்வுகள் இதை ஆதரிக்கின்றன. மேலும் இதை கருத்தில் கொண்டு,ஜூன் 15-ல் உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு நாள் உலகம் எங்கும் அனுசரிக்கப்படுகிறது. 2050-ல் ஒட்டுமொத்த இளைஞர்களின் எண்ணிக்கையை விடவும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்கிறது ஓர் ஆய்வு. ஏற்கெனவே உலக அளவில் வாழும் பெருவாரியான முதியோர் உடல் மற்றும் மனரீதியிலான வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பதையும் தெரிவிக்கிறது அந்த ஆய்வு. இதனை முன்னிறுத்தி முதியோர் எதிர்கொள்ளும் சவால்களையும் பிரச்சினைகளையும் அவதானிக்கத் தொடங்கியது உலக சுகாதார அமைப்பு. அதன் விளைவாக முதியோர், முதியோரைப் பராமரிப்பவர்கள் மற்றும் அரசாங்கம் ஒன்றுகூடி முதியோருக்கு எதிரான கொடுமைகளை எதிர்க்க வேண்டும் என உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு நாளை ஐ.நா. சபை 2006-ல் அறிவித்தது என்பது குறிப்பிடத் தக்கது. 
 
5. நங்கை, நம்பி, ஈரர், திருனர் (ந.ந.ஈ.தி) அல்லது Lesbian, Gay, Bisexual, Transgender (LGBT) என்ற ஆண்-பெண் உறவு மட்டும் கொள்வோர் அல்லாதோர் பெரும் பாலும்  சமூகமாக தனிமைப்படுத்தப்படலாம் [likely to be socially isolated]. இவர்கள் மற்ற முதியோர்களை விட குறைந்தது இரண்டு மடங்கு தனிமையில் வாழ நேரிடலாம். இவர்கள் அதிகமாக ஒற்றையாக [single] ஆக வாழ்வதுடன் மேலும் அதிகமாக தமக்கென பிள்ளைகள் அற்றவர்களாகவும் இருப்பார்கள். அது மட்டும் அல்ல அவர்களின் இரத்த உறவினர்களிடம் [biological families] இருந்து அநேகமாக பிரிந்து வாழ் பவர்களாகவும் இருப்பார்கள். அவர்களை ஆதரிப்பதற்கு பொதுவாக அவர்களளைப் பற்றிய களங்கம் மற்றும் பாகுபாடு [Stigma and discrimination] ஒரு தடையாக உள்ளது.
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 03 தொடரும். 
 
 
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.