Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"என் அன்பு மகளே"
 
 
"யாயே, கண்ணினும் கடுங் காதலளே,
எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; 
‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!
 இயங்குதி! என்னும்;’யாமே," 
 
 
தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை. 
 
 
வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!
 
 
"உள்ளம் களிக்க உடனே சிரிக்க
உதிர்மா வேண்டுமம்மா! .    
துள்ளித் திரிந்து துயரை மறந்திடத்
துளிமா வேண்டுமம்மா!"
 
 
அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.
 
 
"இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை
ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள்
திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச்
சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"
 
 
மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!
 
 
"பூக்களின் அழகை வண்டுகள் அறியும்
பூங்கா முழுவதும் மயங்கி திரியும் 
பூவையரின் அழகை ஆண்கள் அறிவர் 
பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்" 
 
 
அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!
 
 
ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.
 
 
“கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும்
நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும்
சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”   
 
 
என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!  
 
என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்! 
 
 
"பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால்
விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப்,
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல்
‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர்
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5
அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி,
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"
 
 
தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !! 
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
No photo description available. No photo description available.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.