Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கனடாவில் சீக்கிய தலைவர்  கொல்லப்பட்ட வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது

பட மூலாதாரம்,SIKH PA

படக்குறிப்பு,ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜெசிகா மர்பி
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 47 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியா - கனடா இடையிலான உறவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா காவல்துறை தெரிவித்துள்ளது.

காலிஸ்தானுக்கு ஆதரவாகப் பல வழக்குகளில் இந்திய அரசால் தேடப்பட்டு வந்த 45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 2023 ஜூன் மாதம் கனடாவின் சர்ரேயில் படுகொலை செய்யப்பட்டார். வான்கூவர் புறநகர்ப் பகுதியில் ஒரு பரபரப்பான கார் நிறுத்துமிடத்தில் முகமூடி அணிந்து, துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தக் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுகளை டெல்லி திட்டவட்டமாக மறுத்தது.

நிஜ்ஜார் கொலை வழக்கில் குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களைக் கைது செய்ததாக கனடாவை சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் மன்தீப் முகர் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தார். மேலும் கைதான மூன்று நபர்களின் பெயர்களையும் அறிவித்தார் - கரன் ப்ரார் (22), கமல் ப்ரீத் சிங் (22), மற்றும் கரண் ப்ரீத் சிங் (28) என்று கூறினார்.

 
கனடாவில் சீக்கிய தலைவர்  கொல்லப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது

பட மூலாதாரம்,GETTY IMAGES

கைது செய்யப்பட்ட மூவரும் ஆல்பர்ட்டா என்னும் பகுதியில் எட்மன்டனில் வசித்து வந்ததாக அவர் கூறினார். அவர்கள் மீது கொலை மற்றும் கொலைக்கான சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவர்கள் மூவரும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளாக கனடாவில் வசித்தவர்கள் என காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். இந்தக் கொலை வழக்கில் "இந்திய அரசாங்கத்துக்கு தொடர்புகள்" உள்ளனவா என்பது உட்படப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை கூறியது.

இந்தக் கைது நடவடிக்கை குறித்து உதவி ஆணையர் டேவிட் டெபுல் கூறுகையில், "இந்த வழக்கில் கைதானவர்களிடம் தனித்தனியாக மற்றும் பிரத்யேக விசாரணைகள் நடந்து வருகின்றன. அதேநேரம், நிச்சயமாக இன்று கைது செய்யப்பட்டவர்களின் ஈடுபாடு மட்டுமின்றி அவர்களைத் தாண்டியும் விசாரணை நடத்தப்படும்,” என்று கூறினார்.

இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டுள்ள கனடா புலனாய்வு அதிகாரிகள் இந்திய புலனாய்வு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ஆனால், இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு கொஞ்சம் கடினமானதாகவும் சவாலாகவும் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்தக் கொலையில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும், மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சீக்கிய பிரிவினைவாதத் தலைவரான நிஜ்ஜார், காலிஸ்தானுக்காக பகிரங்கமாக, இந்தியாவின் பஞ்சாப் பகுதியில் ஒரு சுதந்திர சீக்கிய தாயகம் உருவாக்கப்பட வேண்டும் என்று பிரசாரம் செய்தார்.

 

அழுத்தத்தை எதிர்கொள்ளும் ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவில் சீக்கிய தலைவர்  கொல்லப்பட்ட வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

சீக்கியர்கள் 1970களில் இந்தியாவில் ஒரு பிரிவினைவாத கிளர்ச்சியைத் தொடங்கினர். பிரிவினை கோரிக்கை உச்சத்தில் இருந்தது. இதனால் பல வன்முறை தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்தப் பிரச்னை தணிக்கப்படுவதற்கு முன்னரே, அடுத்த பத்து ஆண்டுகளில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அப்போதிருந்து, இந்த இயக்கம் பெரும்பாலும் சீக்கிய மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் மட்டுமே இயங்கி வருகிறது.

இந்தியா கடந்த காலங்களில் நிஜ்ஜாரை ஒரு போர்க்குணமிக்க பிரிவினைவாத குழுவிற்குத் தலைமை தாங்கிய பயங்கரவாதி என்று குறிப்பிட்டது. "அவரது ஆதரவாளர்கள் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அவரது செயல்பாட்டின் காரணமாக கடந்த காலங்களில் அவருக்கு அச்சுறுத்தல்கள் வந்ததாக அவர்கள் கூறுவது ஆதாரமற்றது" என இந்தியா தரப்பில் கூறப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி வான்கூவருக்கு கிழக்கே 30 கிமீ (18 மைல்) தொலைவில் உள்ள சர்ரே நகரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் "ஹிட் லிஸ்ட்டில்" இருப்பதாகவும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும் அவர் இறப்பதற்கு முன்பு கனடாவின் உளவுத்துறையால் எச்சரிக்கப்பட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர்.

பிரிட்டிஷ் கொலம்பியா குருத்வாராஸ் கவுன்சிலின் உறுப்பினரான மொனிந்தர் சிங், நிஜ்ஜாருடன் 15 ஆண்டுகளாக நட்பு கொண்டிருந்தவர், ``விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு சீக்கிய சமூகம் நன்றியுடன் இருக்கும். இருப்பினும்,கொஞ்சம் பொதுப் பாதுகாப்பு பற்றிய கவலையும் நிறைய பதற்றமும் உள்ளது. இதனால் விரக்தி ஏற்பட்டுள்ளது. அனைத்தையும் தாண்டி வழக்கு நியாயமாக விசாரிக்கப்படும் என்ற ஒரு நம்பிக்கையும் உள்ளது,” என அவர் பிபிசி செய்தியிடம் கூறினார்.

நிஜ்ஜார் கொல்லப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, கனடாவின் நாடாளுமன்றத்தில் (House of Commons) உரையாற்றிய ஜஸ்டின் ட்ரூடோ, ”இந்திய அரசை நிஜ்ஜார் கொலையுடன் தொடர்புபடுத்தும் நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் இருக்கிறதா என கனடா கவனித்து வருகிறது,” என்று கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டை இந்திய அதிகாரிகள் கடுமையாக மறுத்தனர். கனடா "காலிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு" அடைக்கலம் அளித்ததாக இந்தியா தரப்பில் குற்றம் சாட்டினர். இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக இந்தியாவில் உள்ள கனடா தூதர்களின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு டெல்லி ஒட்டாவாவிடம் கோரியது.

நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவின் தலையீடு இருப்பதாகக் குற்றம் சாட்டும் ட்ரூடோ, தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை வழங்குவதற்கான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c51nvzjezywo

  • கருத்துக்கள உறவுகள்

கொலை, வழக்கு, விசாரணை என இருக்கும் நிலையில் ஆதாரங்களை பகிரங்கப்படுத்த முடியுமா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்று இந்தியர்கள் கைதால் கனடா - இந்தியா உறவில் மீண்டும் பதற்றம் - என்ன நடக்கிறது?

இந்தியா, கனடா, காலிஸ்தான், சீக்கியர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

6 மே 2024
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கனடாவில் காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மீண்டும் ஒரு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

இந்த கைது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "கனடா வலுவான மற்றும் சுதந்திரமான நீதி அமைப்பைக் கொண்ட நாடு," என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், கனடா தனது குடிமக்களின் பாதுகாப்பிற்கு உறுதியளிக்கும் `சட்டப்பூர்வமான நாடு` என்று அவர் கூறினார்.

2023-ஆம் ஆண்டு, ஜூன் 18-ஆம் தேதி அன்று, கனடிய குடிமகன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் உள்ள ஒரு குருத்வாரா முன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில், கனடாவின் எட்மண்டன் நகரில் வசிக்கும் இந்தியக் குடிமக்களான 22 வயது கரண் ப்ரார், 22 வயது கமல்ப்ரீத் சிங் மற்றும் 28 வயது கரன்ப்ரீத் சிங் ஆகியோர் முதல் நிலை கொலை மற்றும் கொலை செய்ய சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வெள்ளிக்கிழமை (மே 3) கைது செய்யப்பட்டனர்.

சனிக்கிழமையன்று (மே 4) கனடாவின் டொரோண்டோ நகரில் இந்தக் கைது நடவடிக்கை பற்றிப் பேசிய கனடா பிரதமர் ட்ரூடோ, “கனடா சட்டத்தை மதிக்கும் ஒரு நாடு என்பதால் இது முக்கியமானது. எங்களிடம் வலுவான மற்றும் சுதந்திரமான நீதி அமைப்பு உள்ளது. எங்கள் குடிமக்கள் அனைவரின் பாதுகாப்பிற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்," என்றார்.

“ஆர்.சி.எம்.பி (கனடா நாட்டின் காவல்துறை) கூறியது போல், விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை இந்த மூன்று பேரை கைது செய்வதோடு மட்டும் நின்றுவிடப் போவதில்லை," என்றார்.

நிஜ்ஜார் கொலைக்குப் பிறகு, கனடாவில் உள்ள சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் ட்ரூடோ கூறினார்.

"கனடாவில் உள்ள அனைவருக்கும் பாரபட்சம் மற்றும் அச்சமின்றி சுதந்திரமாக வாழ உரிமை உள்ளது," என்று அவர் கூறினார்.

 
இந்தியா, கனடா, காலிஸ்தான், சீக்கியர்கள்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன?

இந்தக் கைது நடவடிக்கைகள் குறித்து சனிக்கிழமை (மே 4) பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இந்தியாவில் தேடப்படுபவர்களுக்கு கனடா விசா வழங்க்குவதாகக் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்துப் பேசிய ஜெய்சங்கர், "இந்தியாவின் பஞ்சாபில் திட்டமிடப்பட்டக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் கனடாவில் வரவேற்கப்படுகிறார்கள்," என்று கூறினார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் இதைத் தெரிவித்தார்.

மேலும் பேசிய ஜெய்சங்கர், தான் இந்தச் செய்தியைப் பார்த்ததாகச் சொன்னார். "போலீஸ் விசாரணையில் யாரையாவது கைது செய்திருக்க வேண்டும். ஆனால் உண்மை என்னவெனில், திட்டமிட்ட குற்றங்களில் தொடர்புடைய பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் கனடாவில் வரவேற்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கனடா விசா வழங்குகிறது," என்றார்.

“இந்தியாவில் தேடப்படுபவர்களுக்கு விசா கொடுக்கிறீர்கள். பலர் பொய்யான ஆவணங்களுடன் வருகிறார்கள். ஆனாலும் நீங்கள் அவர்களை தங்க அனுமதிக்கிறீர்கள். அரசியல் ஆதாயத்துக்காக அவர்களை இருக்க விடுகிறீர்கள். இதனால் உங்களுக்கும் பிரச்னைகள் இருக்கும். சில சமயங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் சிந்திக்க வேண்டும்," என்றார்.

கனடாவுடன் இந்தியாவுக்கு பிரச்னை இருப்பதை வெளியுறவு அமைச்சர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

ஜெய்சங்கர் கூறுகையில், “அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் கனடாவுடன் பிரச்னை உள்ளது," என்றார்.

"கனடாவில் ஆட்சியில் இருக்கும் கட்சியும் எதிர்க்கட்சியும் பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் தீவிரவாதம் மற்றும் வன்முறையை ஆதரிப்பவர்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளன," என்றார் ஜெய்சங்கர்.

கடந்த ஆண்டு செப்டம்பரில், நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதற்குத் தன்னிடம் வலுவான ஆதாரம் இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருந்தார். அப்போதிருந்து, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் மிகவும் பதற்றமான நிலையில் இருக்கின்றன.

அப்போது கனடாவின் குற்றச்சாட்டுகளை 'அடிப்படையற்றது மற்றும் அபத்தமானது' என்று இந்தியா விவரித்திருந்தது.

 
இந்தியா, கனடா, காலிஸ்தான், சீக்கியர்கள்
படக்குறிப்பு,கனடாவில் கைது செய்யப்பட்டிருக்கும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மூவர்

கைது செய்யப்பட்ட மூன்று பேர் யார்?

காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் மூன்று இந்தியர்களை கனடா போலீசார் வெள்ளிக்கிழமை (மே 3) கைது செய்தனர். கனடாவின் ஒருங்கிணைந்த படுகொலை விசாரணைக் குழு இவர்களைக் கைது செய்தது.

அவர்கள் இந்தியக் குடிமக்களான கரண் ப்ரார், கரன்ப்ரீத் சிங் மற்றும் கமல்பிரீத் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கரண் ப்ரார், 22, பஞ்சாபின் ஃபரித்கோட்டில் வசிப்பவர், கரன்ப்ரீத் பஞ்சாபின் குர்தாஸ்பூரைச் சேர்ந்தவர், மூன்றாவது நபரான கமல்ப்ரீத் பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

கரண் கல்விக்கான அனுமதியில் (ஸ்டடி பெர்மிட்) கனடா சென்றவர். பஞ்சாப் போலீஸ் வட்டாரங்களின்படி, கரண் ப்ரார் ஃபரித்கோட் மாவட்டத்தின் கோட்காபுரா நகரை சேர்ந்தவர்.

பஞ்சாப் போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "கரண் ப்ரார் தனது பள்ளிப் படிப்பை கோட்காபுராவில் முடித்தார், பின்னர் அவர் 2020-இல் கல்வி அனுமதியில் கனடா சென்றார்," என்றனர்.

கரண் ப்ராரின் குடும்பத்துக்கு நிலபுலன்கள் இருப்பதாக காவல்துறை கூறுகிறது. அக்கம்பக்கத்தினர் மற்றும் அருகிலுள்ளவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, கரணின் தாத்தா பல்பீர் சிங் ப்ரார் ஒரு உள்ளூர் தொழிலதிபர். கரண் தனது பெற்றோருக்கு ஒரே மகன். அவரது தாயார் ரமன் ப்ரார் வேலை நிமித்தமாக சிங்கப்பூரில் வசிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

கரண் ப்ராரின் தந்தை மன்தீப் பிரார் கடந்த மாதம் 18-ஆம் தேதி காலமானார். இதன் காரணமாக கரணின் தாயும் இந்தியா வந்தார்.

குர்தாஸ்பூரைச் சேர்ந்த கரண் ப்ரீத் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை துபாயில் லாரி ஓட்டுநராக வேலை செய்கிறார். கரன்ப்ரீத் சிங்கின் மாமாவும் கிராம சர்பஞ்சின் மகனுமான ரஞ்சித் சிங் ராணா, "கரண் ப்ரீத் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்," என்றார்.

ஆரம்பக் கல்வியை முடித்த கரண்ப்ரீத் 2016-இல் துபாய்க்குச் சென்றதாகவும், அங்கு தனது தந்தையுடன் சுமார் நான்கு ஆண்டுகள் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்ததாகவும் அவர் கூறினார்.

கரண்ப்ரீத் கனடா சென்றது குறித்து ரஞ்சித் சிங் கூறுகையில், "கரண்ப்ரீத் பணி அனுமதிச் சீட்டில் கனடா சென்றுள்ளார்," என்றார்.

கரண்ப்ரீத் கடந்த மூன்று ஆண்டுகளாக கனடாவில் இருப்பதாகவும், அங்கு லாரி ஓட்டுவதாகவும் கூறினார்.

மூன்றாவது நபரான கமல்ப்ரீத் சிங் பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தின் நாகோதரில் இருக்கும் கலான் கிராமத்தில் வசிப்பவர்.

கமல்பிரீத் சிங் நகோதரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்தார். 2019-ஆம் ஆண்டில் 12-ஆம் வகுப்பை முடித்தார். அதன் பிறகு கல்வி விசாவில் கனடா சென்றார்.

கமல்ப்ரீத்தின் தந்தை சத்னம் சிங் வருமானம் ஈட்டுவதாலும், கிராமத்தில் அவர்களுக்கு நிலம் உள்ளதாலும் அவரது குடும்பம் பொருளாதார ரீதியாக வலுவாக உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

கமல்ப்ரீத்தின் சகோதரி கனடாவில் வசிக்கிறார் என்று பஞ்சாப் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார். 2022-இல் அவரைச் சந்திக்க அவரது தாயும் கனடா சென்றார்.

 
இந்தியா, கனடா, காலிஸ்தான், சீக்கியர்கள்
படக்குறிப்பு,சமீப காலமாக இந்தியா-கனடா உறவுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

கனடா-இந்தியா வார்த்தைப் போர்

கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி கனடாவின் டொராண்டோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த `கல்சா தின` நிகழ்ச்சியில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் வசிக்கும் சீக்கிய சமூக மக்களிடையே உரையாற்றினார்.

ஊடக அறிக்கைகளின்படி, இந்த நிகழ்வில் ட்ரூடோ, கனடா சீக்கிய சமூகத்தின் மத உரிமையை `பாகுபாடு` இன்றி ஆதரிக்கும் என்று கூறியிருந்தார்.

இந்த நிகழ்வில் காலிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த நிகழ்வில் ஊடகங்களிடம் பேசிய ட்ரூடோ, காலிஸ்தான் ஆதரவு போராட்டங்களை சுட்டிக்காட்டி, “எங்கள் வேலை அரசியல் போராட்டங்களை நிறுத்துவது அல்ல," என்றார்.

இதற்கு அடுத்த நாள், இந்திய வெளியுறவு அமைச்சகம், இந்தியாவுக்கான கனடா துணை உயர் ஸ்தானிகரை வரவழைத்து தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது.

இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கடந்த வியாழன் அன்று (மே 2), "கனடாவில் பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கு எப்படி அரசியல் இடம் கொடுக்கப்படுகிறது என்பது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது கனடா-இந்தியா உறவுகளை மட்டும் பாதிக்காது. கனடா தனது சொந்த குடிமக்களுக்கு வன்முறை மற்றும் குற்றச் சூழ்நிலையை உருவாக்குகிறது," என்றார்.

 
நிஜ்ஜார் கொலை வழக்கு

பட மூலாதாரம்,SIKH PA

படக்குறிப்பு,கடந்த ஆண்டு, காலிஸ்தான் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுவின் சொத்துக்களை என்.ஐ.ஏ பறிமுதல் செய்தது

என்.ஐ.ஏ வெளியிட்ட காலிஸ்தான் ஆதரவாளர்களின் பட்டியல்

கடந்த ஆண்டு, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) காலிஸ்தான் ஆதரவு தலைவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டது. அதில் உள்ளவர்களின் சொத்துகளை அந்த நிறுவனம் பறிமுதல் செய்ய முடிவு செய்தது.

கடந்த ஆண்டு, காலிஸ்தான் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுவின் சொத்துகளை என்.ஐ.ஏ பறிமுதல் செய்தது.

இந்தப் பட்டியலில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவு தலைவர்கள் பலரின் பெயர்கள் இருந்தன. அவர்களை என்.ஐ.ஏ 'பயங்கரவாதிகள்' என்று குறிப்பிட்டிருந்தது.

  • பரம்ஜித் சிங் பம்மா - இங்கிலாந்து
  • வாத்வா சிங் (பாபர் சாச்சா) - பாகிஸ்தான்
  • குல்வந்த் சிங் முத்ரா - இங்கிலாந்து
  • ஜே.எஸ்.தலிவால் - அமெரிக்கா
  • சுக்பால் சிங் - இங்கிலாந்து
  • ஹர்பிரீத் சிங் (ராணா சிங்) - அமெரிக்கா
  • சரப்ஜித் சிங் பெனூர் - இங்கிலாந்து
  • குல்வந்த் சிங் (காந்தா) - இங்கிலாந்து
  • ஹர்ஜப் சிங் (ஜப்பி சிங்) - அமெரிக்கா
  • ரஞ்சித் சிங் நீத்தா - பாகிஸ்தான்
  • குர்மீத் சிங் (பக்கா பாபா)
  • குர்பிரீத் சிங் (ரிபெல்) - இங்கிலாந்து
  • ஜஸ்மீத் சிங் ஹக்கிம்கஜாதா - துபாயில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்
  • குர்ஜந்த் சிங் தில்லோங் - ஆஸ்திரேலியா
  • லக்பீர் சிங் ரோட் - கனடா
  • அமர்தீப் சிங் பூரேவால் - அமெரிக்கா
  • ஜதீந்தர் சிங் க்ரேவால் - கனடா
  • துபிந்தர் சிங் - இங்கிலாந்து
  • ஹிம்மத் சிங் - அமெரிக்கா

https://www.bbc.com/tamil/articles/c04307g9kd0o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹர்தீப் நிஜ்ஜார் கொலை வழக்கு | 4வது நபரை கைது செய்தது கனடா காவல்துறை!

12 MAY, 2024 | 09:21 AM
image

கனடாவில் பிரபல சீக்கிய ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார்  படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக  4 வது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனால் இந்தியா கனடா உறவும் கூட மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.  அந்தக் குற்றச்சாட்டையும் இந்தியா மொத்தமாக நிராகரித்தது.  இதற்கிடையே ஹர்தீப் சிங் கொலை தொடர்பாக கரன் பிரார் (22) கமல்ப்ரீத் சிங் (22) கரன்ப்ரீத் சிங் (28) ஆகிய மூன்று பேரை கனடா போலீசார் கைது செய்தனர்.  அவர்கள் மூன்று பேரும் ஆல்பர்ட்டா என்ற பகுதியில் வசிக்கும் non-permanent residents என்றும் விசாரணை அதிகாரி மன்தீப் முகர் தெரிவித்தார்.

அவர்கள் மீது கொலை மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதேநேரம் அந்த மூன்று பேருக்கும் ஒருவரை மற்றொருவருக்குத் தெரியாதாம்.  இதற்கிடையே இந்திய அரசுடன் அவர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.  கொலை விசாரணையும் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் உதவி ஆணையர் டேவிட் டெபூல் தெரிவித்தார்.

இந்த நிலையில்,  இந்த கொலை வழக்கில் நான்காவது நபராக இந்தியரான அமந்தீப் சிங் (22) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர் மீது கொலை மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவர் சர்ரே மற்றும் அபோட்ஸ்ஃபோர்டில் வசித்து வந்துள்ளார்.  அமன்தீப் சிங், ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் ஏற்கனவே ஒன்டாறியோவில் காவலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/183282

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.