Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள், முஸ்லிம்கள் ஜனாதிபதியாக வர முடியுமா?

Oruvan

இலங்கைத்தீவின் வடகிழக்கில் வாழும் ஈழத் தமிழர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு விருப்பம் தெரிவிக்கின்றனர். மக்களின் இந்த விரும்பங்களுக்கு ஏதுவாக சிவில் சமூக அமைப்புகள் ஒன்று கூடி கலந்துரையாடி வருகின்றன. இது 95 சதவிகிதம் இணக்கமாகத் தெரிகிறது. 

யாழ்ப்பாணம் - மட்டக்களப்பு உள்ளிட்ட வடக்கு கிழக்கிலிருந்து மொத்தம் 46 சிவில் அமைப்புகள் இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்து வருகின்றன. 

ஆரம்பக் கலந்துரையாடல்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

'பொது பொறிமுறை'யை அமைத்த பின்னரே சிவில் அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சந்தித்து தமிழ் பொது வேட்பாளர்கள் விவகாரம் தொடர்பாக உரையாடவுள்ளன.

ஜனாதிபதியாக வரமுடியுமா?

இந்த முயற்சியைச் சிலர் இனவாத செயற்பாடு என்று கூற முற்படுகின்றனர். ஆனால் அது இனவாத ஏற்பாடு அல்ல. அது ஈழத்தமிழர்களுக்குரிய ஜனநாயக உரிமை.

இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் ஒரு தமிழரோ அல்லது முஸ்லிமோ ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை வகிக்க முடியாது என்று நேரடியாகக் கூறவில்லை. 

ஏனெனில் 75 வீதமானவர்கள் சிங்களவர்கள். தமிழ் முஸ்லீம் மற்றும் மலையகத் தமிழர்கள் அனைவரும் ஏகமனதாக வாக்களித்தாலும் தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதியாக வருவதற்கு தேவையான குறைந்தபட்ச 51 சதவீத வாக்குகளை பெற முடியாது.

அப்படியானால் கணிசமான சிங்கள மக்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். ஆனால் ஒரு தமிழருக்கு சிங்களவர்கள் வாக்களிக்கும் அரசியல் கலாச்சாரம் இலங்கைத்தீவில் இன்னும் உருவாகவில்லை. 

ஆனால் தமிழ் - முஸ்லிம் மக்கள் பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர். 

அரசியலமைப்பின் விதி

தமிழ் முஸ்லிம் மக்கள் தாங்கள் விரும்பும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது இலங்கை அரசியலமைப்பில் எழுதப்படாத விதியாகும்.

எனினும், இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மலையகத் தமிழர்களும், முஸ்லிம்களும் தங்கள் பிராந்தியங்களில் போட்டியிடும் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர். அவர்கள் தங்கள் மக்களின் பிரதிநிதிகளாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆனால் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் தமது தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு மட்டுமே வாக்களிப்பார்கள். 

வடக்கு - கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வசிப்பதால் சிங்களப் பிரதிநிதிகள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது. 

இதன் காரணமாகவே வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிடப்படுகின்றன, ஆனால் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு சிங்களப் பிரதிநிதிகளும் அது சிங்களக் குடியேற்றம் அல்ல என்றும் வடக்கு கிழக்கு சிங்கள மக்களின் வரலாற்று வாழ்விடமாகும் என்றும் கூறுகின்றனர். 

1987 இல் கைச்சாத்திடப்பட்ட இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தில், வடக்கு-கிழக்கு 'வரலாற்று வாழ்விடங்கள்' என்று அழைக்கப்படுகிறது. 

ஆங்கிலேயேர் ஆட்சியில் தொடங்கியது

இது தமிழர்களின் பாரம்பரிய தாயகம் அல்லது தமிழ் முஸ்லிம் மக்களின் தாயகம் என்று குறிப்பிடப்படவில்லை. 13வது திருத்தச் சட்டத்தை அரசியல் தீர்வாக தமிழர்கள் ஏற்க மறுத்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

ஆனால் தமிழ் முஸ்லிம் மக்கள் வடக்கு கிழக்கு தமது பாரம்பரிய பிரதேசம் என்று கூறி வருகின்றனர். தமிழர்கள் இன்றும் வடக்கு கிழக்கு தமது பாரம்பரிய தாயகம் என்று நம்புகிறார்கள். 

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தினால் வடக்கு - கிழக்குப் பிரச்சனை உருவானது என்று சிங்கள அரசியல் கட்சிகள் இன்னமும் சிங்கள மக்களுக்குக் காரணம் காட்டி வருகின்றன. ஆனால் இந்த பிரச்சனை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கியது. 

1920இல் 'இலங்கைத் தேசிய இயக்கம்' பிளவுபட்டு 1921இல் 'தமிழ் மகா சபை'உருவானபோது எழுந்த சிங்கள-தமிழ் முரண்பாடு 1930இல் டொனமூர் மற்றும் 1947இல் சோல்பரி அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது மேலும் விரிவடைந்தது.

பாடசாலை மாணவர்களுக்கான வரலாற்று பாடப்புத்தகங்களில் கூட இது பற்றிய கதைகள் உள்ளன.

இப்போது நீளம் கருதி இந்த வரலாறுகளை முழுமையாக ஆராய விரும்பவில்லை. ஆனால் இந்த வரலாறுகளின் பின்னணியில்தான் வடகிழக்கு தமிழர்கள் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முதல் முறையாக பொது வேட்பாளரை நிறுத்த நினைக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்.

தமிழ் வாக்காளர்கள் தேவை

2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் பின்னர், முதன்முறையாக ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்காளர்கள் தேவை என்று தமிழர்கள் உணர்ந்தனர். 

ஏனெனில் 2009க்குப் பிறகு 15 வருடங்களில் குறைந்தபட்ச அரசியல் தீர்வைக் கூட வழங்க இலங்கை அரசு விரும்பவில்லை என்பது தமிழர்களின் குற்றச்சாட்டாகும். 

1960களில் வி.நவரத்தினம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தைச் செல்வா), அமிர்தலிங்கம் போன்ற தமிழ்த் தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அகிம்சைப் போராட்டம் எந்த அரசியல் தீர்வையும் காணத் தவறியது. 

அதன் பின்னர் 1970களில் தமிழ் இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தினால் தமிழர்களின் அரசியல் அதிகாரப் பகிர்வைப் பெற முடியவில்லை. போராட்டமும் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

ஆகவே தமிழர்கள் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டதாக உணர்கிறார்கள். 2009ல் அமெரிக்கா, இந்தியா போன்ற வல்லரசு நாடுகள் இறுதிப் போருக்கு இலங்கை அரசுக்கு ஆதரவளித்தன. இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நிதியுதவியும் வழங்குகின்றன. 

அரசியல் தீர்வை முன்வைக்காத இலங்கை

அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு இச் சர்வதேச நாடுகள் இலங்கைக்கு கடும் அழுத்தத்தை மட்டுமே கொடுத்து வருகின்றன. பொருளாதார உதவிகளை வழங்கும்போது அரசியல் தீர்வையும் முன்வைக்க வேண்டும் அல்லது இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால் இலங்கைத்தீவில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் மாத்திரமே அறிக்கை விடுவார்கள். 

2012ஆம் ஆண்டு முதல் ஜெனிவா மனித உரிமைச் சபையில் போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் அரசியல் தீர்வுகளுக்கு இலங்கை பொறுப்புக்கூற வேண்டும் என்று பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆனால் 2009 ஆம் ஆண்டு முதல் 15 வருடங்களாக இலங்கை அரசாங்கம் எந்தவொரு அரசியல் தீர்வையும் முன்வைக்கவில்லை. பொறுப்புக்கூறல் இல்லை. 

2020ல் அப்போதைய கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் ஜெனிவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்தைப் பகிரங்கமாக நிராகரித்தது.

ஆனால், 2009ல் நடந்த போரை ஆதரித்த அமெரிக்கா, இந்தியா போன்ற சர்வதேச நாடுகள் தீர்மானம் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக கோட்டாபய அரசாங்கத்திடம் எதுவுமே கேட்கவில்லை.

மாறாகத் தமக்குரிய பிராந்திய புவிசார் அரசியலில் கவனம் செலுத்தி, வடக்கு கிழக்கில் தங்களுக்குத் தேவையான இயற்கை வளங்களையும் அரசியல் பொருளாதார நலன்களையும் பெறுவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது மட்டுமே இந்த நாடுகளின் பிரதான நோக்கமாக இருந்து வருகின்றது.

கவலை தெரிவித்த சம்பந்தன்

ஆனால், இலங்கைத் தீவிற்குள் நிரந்தர அரசியல் தீர்வும் இல்லை, தமிழர்களுக்கு நீதியும் இல்லை.எனவே, சர்வதேச நீதி கிடைக்கும், குறிப்பாக 2009க்குப் பிறகு, சர்வதேச நீதி வேண்டும் என்ற வலுவான நம்பிக்கையுடன், தமிழர்கள் சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அது அவர்களின் அரசியல் உரிமைகளை பாதுகாக்கும் என்றும் நம்புகின்றனர். 

2020 ஜனவரியில் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய ஆர்.சம்பந்தன், 2009ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள அமெரிக்க-இந்தியத் தூதுவர்கள், விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்ட பின்னர், தமிழர்களுக்கு நிரந்தரமான, நியாயமான அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார். 

எவ்வாறாயினும் பத்து வருடங்கள் கடந்த பின்னரும் இன்று வரை அரசியல் தீர்வு முன்வைக்கப்படவில்லை எனவும் சம்பந்தன் தனது உரையில் கவலை தெரிவித்துள்ளார். அந்த உரையில் சம்மந்தன் தான் ஏமாற்றம் அடைந்ததாகவும் சுட்டிக்காட்டினார். 

ஆனால் 2009க்குப் பின்னரான சூழலில் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் இலங்கையில் பொருத்தமான அரசாங்கத்தை அமைப்பதில் முழுக் கவனத்தையும் செலுத்துகின்றன. 2010, 2015 மற்றும் 2020 ஆட்சி மாற்றங்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. 

குறிப்பாக 2015ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அனைவரின் நம்பிக்கையையும் வீணடித்தது. ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த வல்லரசுகள் கூட மைத்திரி - ரணில் அரசாங்கத்திடம் இருந்து தாம் நினைத்த எதையும் சாதிக்க முடியவில்லை.

சந்திரிக்கா ஆட்சி

1994 இல் வடகிழக்கு தமிழர்கள் ஏகமனதாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வாக்களித்திருந்தனர். ஆனால் அவரது பதினொருஆண்டு கால ஆட்சியில் போர் மாத்திரமே நடந்தது. 2000 ஆம் ஆண்டு சந்திரிகாவின் பலவீனமான ஆட்சி பல அரசியல் நெருக்கடிகளையும் கண்டது. 

எனவே இலங்கைத் தீவிற்குள் முழுமையான அரசியல் அதிகாரப் பகிர்வு மாத்திரமே நிலையான சமாதானத்திற்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் உகந்தது என்பதைச் சர்வதேச நாடுகள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டன. எனினும், இந்த வரலாறுகள் பற்றிச் சர்வதேச சமூகம் அறியாதவை அல்ல. 

எனவே இந்த வரலாறுகளைப் புரிந்து கொண்டு வேறு மாற்று அணுகுமுறைகளை கையாளாமல் மறைமுகமாகவும் நேரடியாகவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தங்களுக்கு சாதகமான ஒருவரை இந்த நாடுகள் தேடி வருகின்றன. 

ஆனால் இந்த நாடுகள் இலங்கை அரசியலில் தலையிடுவதில்லை என அவ்வப்போது மறுத்தும் வருகின்றன. 

இந்தப் பின்னணியில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்து சர்வதேச நீதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளரை இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த சிவில் அமைப்புக்கள் கலந்துரையாடி வருகின்றன.

இங்கு தமிழ் பொது வேட்பாளர் எத்தனை வாக்குகளைப் பெறுகிறார் என்பதை விட, தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் முக்கியமானவை.

சர்வதேச நீதியே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வாகும் என்பதை அக் காரணங்கள் பகிரங்கப்படுத்துகின்றன. அது்துடன் இது தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துகிறது. 

இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் தன்மை பற்றி உலகுக்கு உணர்த்துகிறது. 

தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சேர்ந்த சிலர் கொழும்பை மையப்படுத்திய சிங்கள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஆதரவாகவும் சில வெளிநாடுகளின் விருப்பத்துக்கு ஏற்பவும் செயற்படுவது உண்மைதான். அதை மறுக்க முடியாது. 

2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் சில தமிழ் உறுப்பினர்கள் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர். 

தமிழர்களின் அரசியல் விடுதலை உணர்வு

இதனால் தமிழ் தேசிய கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ள இந்த சந்தர்ப்பங்களைச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சில சக்திகள் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள் தமிழர்களின் அரசியல் விடுதலை உணர்வுகளை முடக்க முயற்சிக்கின்றனர்.

அதே சமயம் தமிழர்கள் உண்மையான அரசியலை ஏற்க வேண்டும் என்று சில தமிழ் முற்போக்கு சிந்தனையாளர்கள் வலியுறுத்துகின்றனர். இருப்பதை எற்க வேண்டும் என்கிறார்கள், இணக்க அரசியலுக்குள் செல்ல வேண்டும் என்கின்றனர்.

ஆனால் 'உண்மையான அரசியல்' மற்றும் 'இணக்க அரசியல்' ஆகியவற்றின் வரையறை எப்போதும் கேள்விக்குரியது. 

தமிழீழ விடுதலைப் புலிகளால் நிலையான அரசியல் தீர்வை முன்வைக்க முடியவில்லை என்று கடந்த முப்பது வருடங்களாக இலங்கை அரசு வாதிட்டு வருவது உலகம் அறியாதது அல்ல. 

ஆனால் விடுதலைப் புலிகள் இல்லாத கடந்த 15 வருடங்களில் என்ன நடந்தது என்பதைச்சர்வதேச சமூகத்திற்கு உணர்த்துவதற்காகவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தீர்மானத்திற்கு சிவில் சமூக அமைப்புக்கள் தயாராகி வருவதாக யாராவது கூறினால் அதில் மாற்றுக் கருத்து இல்லை.

அ.நிக்ஸன்

 

https://oruvan.com/sri-lanka/2024/05/10/can-tamils-and-muslims-become-president

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.