Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"காத்திருப்பேன் உனக்காக"
 
 
 
படை படையாக ஒன்றின் பின் ஒன்றாக பொங்கி எழுந்து வரும் கடல் அலைகளின் அசைவிலே, அவ்வற்றின் அசைவிற்கு தாளம் போடுவது போல, அங்கு கடற்கரையில் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த பனை மரங்கள், தம் பனை ஓலைகளை அசைத்தன. அது மாலை நேரம், பகல் முழுவதும் உழைத்து சோர்வு அடைந்த தொழிலாளியின் பெரு மூச்சு போல, கதிரவனும் ஓடிக் களைத்து பிரியா விடை பெற்றுக் கொண்டு இருந்தான். வீசி வந்த கடற்கரை காற்று, அள்ளி வந்த வெண் மணலையும் சருகுகளையும், கவிதாவின் மேல் கொட்டி. அது எதோ ரகசியங்களை கவிதாவிடம் கிசுகிசுத்தது போல் இருந்தது. காலத்தின் ஆழத்தில் தொலைந்து போன காதலின் எதிரொலிகளை அலைகளும் அவளுக்கு நினைப்பூட்டிக்கொண்டு இருந்தன. அவள் கரையோரம் அசையாமல் வெறுத்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
 
அர்ஜுன் இல்லாதது அவளது உள்ளத்தில் ஒரு குழியை செதுக்கியிருந்தது, அது காலப்போக்கில், கடலின் மென்மையான தாலாட்டுகளால் நிரப்ப முடியாத வெற்றிடமாகியது. பகல்களை அவளுக்கு இரவுகளாகவும், இரவுகளை முடிவில்லாத தனிமையாகவும் மாற்றியது, கடற்கரை மணலில் நிழலாடிய நினைவுகளில் அவள் இன்று சங்கமித்து விட்டாள். அவர்களின் கடந்த கால நெருக்கமான காட்சிகள் அவள் கண்களுக்கு முன்பாக நடனமாடின - சிரிப்பு மற்றும் மென்மையின் தருணங்கள், நிலவொளிக்கு அடியில் திருடப்பட்ட முத்தங்கள் மற்றும் வாக்குறுதிகள் அலைகளின் தழுவலில் அவள் நெஞ்சில் கிசுகிசுத்தன. ஆனால் அவள் விரல்களில் மணல் துகள்கள் போல, நழுவிச் சென்ற அன்பின் கொடூரமான நினைவூட்டலாக அது இன்று அவளுக்கு இருந்தது.
 
காகங்கள் கூட அவளுடன் கலக்க விரும்பாதது போல, கெந்திக் கெந்திக் மண்ணில் தாவி பறந்து கொண்டு இருந்தன. மனோரம்மியமான அந்த கடற்கரை மாலைப் பொழுது அவளுக்கு எரிச்சல் ஊட்டியது போலும், அவள் அந்த கடற்கரையின் ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு பாறையில் ஏறி குந்தி இருந்தாள். சில சின்ன சின்ன கற்களை எடுத்து, கரை நோக்கி வரும் அலைகளுக்கு குறி பார்த்து எறிந்தாள். ஆனால் அலைகள் ஓயவில்லை. அது ஒவ்வொரு முறையும் அவளது மென்மையான பாதங்களை தழுவி முத்தமிட்டு சென்றன.
 
கவிதாவின் இன்றைய பைத்தியக்காரத் தனத்தின் ஆழத்தில், மனம் உடைந்த எண்ணங்கள் மற்றும் சிதைந்த கனவுகளின் எச்சங்கள் இன்னும் இருந்தன. கடலோரத்தில் புராணங்களில் வரும் பேயாக அலைந்து திரிந்தாள், அலையினால் அடித்துச் செல்லப் பட்ட மணலில் தடம் பதித்த அவளது காலடிகள், மீண்டும் இன்னும் ஒரு அலையால் அடித்து அழிக்கப் படுவதை பார்த்து தனக்குள் சிரித்தாள்.
 
காற்றினால் கலைந்த தலைமுடியை அவள் பொருட்படுத்தவில்லை. அவளது கண்கள் அன்பை, காதலை, தன் அழகை தேடுவதை நிறுத்தி விட்டது . அது பல ஆண்டுகளாக அவளுக்கு இரக்கமற்றவையாக இருந்தன, ஒரு காலத்தில் துடிப்பான, வசீகரமான பெண்ணாக இருந்த அவளது வாழ்வு, பழங்கதையாகி விட்டது. முணுமுணுப்புகளுக்கும் பரிதாபப் பார்வைகளுக்கும் நடுவே கவிதா கடலோரத்தில், இடிந்து விழும் அலைகளுக்கும், உப்பு முத்தமிட்ட தென்றலுக்கும் நடுவே, தன் காதலனின் கரங்களில் அவள் மிகவும் மகிழ்வுடன் இருப்பது போல ஒரு புன்சிரிப்புடன் இருக்கிறாள். என்றாலும் நீண்ட காலமாக மறைந்து போன ஒரு அன்பின் நினைவுச் சின்னம் போல இன்று அவளுடைய தலைமுடி வெள்ளி நிறமாக இருக்கிறது. அவளுடைய தோல் சுருங்கியுள்ளது, ஆனால் அவள் கண்கள் வானம் கடலை சந்திக்கும் அடிவானத்தில் நிலைத்திருந்து, இன்னும் அவனுக்காக காத்திருக்கிறாள். என்றும் தணிக்க முடியாத ஏக்கத்தில் அவள் இதயம் வலிக்கிறது, அவள் காற்றில் கிசுகிசுத்தாள், "என் அன்பே, நான் காத்திருப்பேன் உனக்காக, காலம் முடியும் வரை."
 
வடக்கிலும், கிழக்கிலும் இந்தியப் பெருங்கடலும், மற்றும் மேற்கிலும், தெற்கிலும் யாழ்ப்பாணக் கடலேரியும் அமைந்துள்ள, யாழ்ப்பாண குடா நாட்டின், கடற்கரையின் வசீகரத்தை அனுபவிக்க வரும் ஒவ்வொரு பார்வையாளர்களையும் ஈர்க்கும் அமைதியான ஒரு அழகிய கடற்கரை நகரத்தில், கவிதா என்ற இந்த பெண், இளமைப் பருவம் பூத்துக் குலுங்க வாழ்ந்து வந்தாள்.
 
"நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலா என்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை!
கோல முழுதும் காட்டிவிட்டால் காதல்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலே பூத்த தனிப்பூவோ?"
 
என்று பாரதிதாசன் நிலவின் அழகை வர்ணித்தான். ஆனால் இவளோ அன்று அந்த நிலவே நாணும் அளவுக்கு வசீகரமாக இருந்தாள். அழகிலும் மட்டும் அல்ல, ஒரு இரக்கத்திற்கான மனோபாவத்திலும், அறிவிலும் கூட சிறந்து விளங்கினாள். அவள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதல் முதல் படிப்பை தொடரும் பொழுது, நடந்த பகிடிவதையின் (ragging, ரேகிங்க்) பொழுதுதான் நான்காம் ஆண்டு அர்ஜுனை சந்தித்தாள்.
 
"ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும்
சீனியருக்கும் ஜூனியருக்கும்
கல்லூரிச் சாலை எங்கும்
ராக்கிங் நடக்கும்
 
ஸ்டூடண்ஸ் மனம் ஒரு நந்தவனமே
ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும்
நட்புக்கு ராக்கிங் கூட
பாதை வகுக்கும்"
 
கவிஞர் வாலியின் வரி இவர்கள் இருவருக்கும் பொருந்தும். அவர்கள் இருவரும் அன்றில் இருந்து நட்பில் பின்னிப்பிணைந்தனர். தேன் போன்ற இனிய சொற்களைப் பேசும், திரண்ட, மென்மையான தோள்களைக் கொண்ட கவிதாவின் குளிர்ச்சியான பூப்போன்ற கண்கள் அம்புகளைப் போல் அவன் நெஞ்சை துளைத்தது. அவளும், அவனின் அலைகளைப் போல நடனமாடும் சிரிப்புக்கும், அவனின் கடல் ஆழத்தின் மர்மங்களைப் போன்ற கண்களுக்கும் அந்த கணமே தன்னை முழுதாகக் கொடுத்து விட்டாள். அவள் அவனை, தன்னைப் போலவே நம்பிவிட்டாள். அவளின் காதல், குளத்தில் தாமரை போல தூய மற்றும் நம்பிக்கைக்குரியதாக மலர்ந்தது.
 
சிறப்பான பட்டப்படிப்புக்குப் பிறகு, அர்ஜுன் அமெரிக்காவிற்கு உயர் படிப்பிற்காக ஒரு பயணத்தைத் தொடங்கினான், அவனைப் பிரிய போகிறோமே என்ற ஏக்கத்தால் கவிதாவின் இதயம் கனத்தது, அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பியது. ஒரே ஒரு ஆண்டுதான் அவர்களின் நேரடியான நெருக்கமான காதல் வாழ்வு பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளும் கடற்கரையிலும் இருந்தது. ஆனால் அவளைப் பொறுத்தவரையில் அது மாற்ற முடியாத, மறக்க முடியாத இணைந்த வாழ்க்கை. அனல் பறக்கும் காற்றும், சுட்டெரிக்கும் மணலும், விடியும் வெண்ணிலவும், தன் விருந்துக்கு வரவேற்க, அலைகளோ, ஒன்றன் மேல் ஒன்றாய், முந்தி வந்து முத்தமிட, முன்னும் பின்னுமாய் கை கோர்த்தும் கோர்க்காமலும் நடந்து, அர்ஜுனும் கவிதாவும் கால்கள் நீரில் நனைய தம்மை மறந்து அனுபவித்த நாட்களை அவள் நினைத்துப் பார்த்தாள். ஏன் இந்த அவசரம் என்னவனுக்கு என்று அவளுக்குள் ஒரு ஊடலும் வந்தது. என்றாலும் அவனின் வாக்குறுதியிலும் அவன் மேல் இருந்த நம்பிக்கையிலும், அந்த கடைசி நாளை அவனின் விருப்பத்தின் படியே தன்னை முழுமையாக சமர்ப்பித்தாள். மெல்லிய பூங்காற்று மென்மையாய் மேனி மேல் ஊடுறுவ, மெய் சிலிர்த்து நின்றாள், அவன் பேரழகினைக் கண்டு! பிரிய மனமில்லாமல் அவனும் பிரிந்தான், கவிதாவிடம் பிரியா விடைப்பெற்று!!!
 
முதலில், அவர்களுக்கிடையில் இலங்கை - அமெரிக்கா என்று தூரம் பெரிதாக இருந்தாலும், இன்றைய இணையத்தள மேம்பாட்டால் அது வெல்லக் கூடியதாகத் அவளுக்கு தோன்றியது. காதல் மற்றும் ஏக்க வார்த்தைகளை சுமந்து கொண்டு தினம் தினம் வீடியோ அழைப்பு கண்டங்கள் கடந்து முன்னும் பின்னுமாக பறந்தன. ஆனால் காலப் போக்கில், அவை, அவனிடம் இருந்து அரிதாகவே வரத் தொடங்கின. தனக்கு படிப்பு, ஆராச்சியென காரணம் சொல்லிக் கொள்வான். அதுமட்டும் அல்ல, அந்த சில அழைப்புகளும் அவற்றின் உள்ளடக்கங்கள் ஒரு காலத்தில் இருந்ததைப் போன்று இல்லாமல் வெறும் சம்பிரதாயமாக எதிரொலித்தன. இறுதியில், முற்றிலுமாக திடீரென நின்று விட்டது. அவனின் தொலை பேசியோ, ஈ மெயிலோ, முகநூலோ எல்லாமே முடங்கிவிட்டது.
 
காதல் மழை பொழிந்த அந்தி நேரம் அமைதி பெற்று விட்டது. கடற் கரையின் ஓரத்தில் கடல் அலை அடங்கி ஓய்ந்து விட்டது. ஓடங்களும், மீன்பிடி படகுகளும் கரையை நெருங்கிக் கொண்டிருந்தன. கடலில் மீன் தேடச் சென்ற பறவைகள் கூட இருள் வருகிறதுவென கரைநோக்கி பறந்து கொண்டிருந்தன. கரையில் சிறிது தூரம் வெண்மணல் பரந்த வெளியைக் கொடுத்தது. அதற்கு அப்பால் பனை மரங்களும் புதர்ச்செடிகளும் கொஞ்சம் இருந்தன. பனை ஓலைகள் மற்றும் பற்றைகள் ஆடவில்லை; அசையவில்லை. நாலா பக்கமும் அமைதி நிலவியது. கதிரவன் சிவந்து, கடலும் வானும் கலக்கும் அடிவானத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தான். மேகத்திரள்கள் சில கதிரவனின் செங்கதிர்களை பட்டும் படாமலும் மறைத்தன.
கவிதா ஒரு பாறையில் இருந்தபடி கடலை பார்த்தாள். கடலின் மெல்லிய அலையில் ஒரு சிறிய ஓடம் மிதந்து வந்து கொண்டு இருந்தது, அது அலையுடன் மெள்ள மெள்ள மேலும் கீழும் ஆடி ஆடி அசைந்தது. அந்தப் படகில் அவன், அர்ஜுன், அவளை வா வா என்று அழைப்பது போல கை அசைத்துக் கொண்டு இருக்கிறான். கொஞ்சம் வயது போய், முறுக்கு மீசையுடனும் ஆனால் மிடுக்கான தோற்றத்திலும், கொஞ்சம் வெளிறிய தலை முடியுடனும் அவன், அவனே தான்!
 
கவிதா பாறையில் ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டு எதோ முணுமுணுத்தாள். தூரத்தில் தெரிந்த ஓடம் அசையாமல் நின்று அவளுடைய முணுமுணுப்பை கவனமாகக் கேட்டது. ஏன் வானமும், பூமியும் கூட அந்த முணுமுணுப்பைக் கேட்டு மதிமயங்கி அசைவற்று நின்றது! கதிரவன் கூட அந்த முணுமுணுப்பை கேட்க கடலை அடைந்தும் முழுகி மறையாமல் தயங்கி கொஞ்சம் நின்றது.
 
"அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?
நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?
வானகமும் நானிலமும் மோனமதில் ஆழ்ந்திருக்க
மான்விழியாள் பெண்ணொருத்தி மனத்தில் புயல் அடிப்பதுமேன்?"
 
பொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தியின் பாடல் வரிகள் அது. கவிதாவின் உள்ளத்தில், அவளின் சோகத்தை அது காட்டியது. அப்பாடலின் சொற்களோடு அவள் கண்ணீரும் கடலில் கலந்து அர்ஜுனிடம் சென்றது, ஆனால் அவன் ஓடத்தில் இருந்து மறைந்து விட்டான். அதில் யாரோ ஒரு முதியவர் மீனுடன் திரும்பிக் கொண்டு இருந்தார், அவன் இப்படி இனி எத்தனை தடவை ஏமாற்றுவானோ?
வருடங்கள் கரையில் மோதிய அலைகளைப் போல உருண்டோடின, ஆனால் கவிதா தன் காதலில், நம்பிக்கையில் உறுதியாக இருந்தாள். அவளுடைய பெற்றோர் மற்றும் மூத்தவர்கள் முன்வைத்த வரன்களையும் அவள் மறுத்துவிட்டாள், அவளுடைய இதயம் தன் ஆன்மாவில் அழியாத முத்திரையை பதித்த அர்ஜுனனுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டது.
 
ஒவ்வொரு மாலையும், அவள் கடற்கரையோரம் நடந்து செல்வாள், அவள் அந்த கடைசி நாளில் அவனுடன் அனுபவித்த அந்த ஒதுக்குப்புறத்தில், அந்த பாறையின் மேல் குந்தி இருப்பாள். அவளுடைய பார்வை வெறிச்சோடி இருக்கும். படபடத்து வேலைக்கு ஓடும் மனிதர்களில் சிலர் அவளை எட்டிப் பார்ப்பார்கள். வண்டி இல்லாத பாதையும் மக்கள் இல்லாத வீதியும் தான் இப்ப அவளை வரவேற்கிறது. ஒவ்வொரு சூரிய அஸ்தமனத்திலும் அவள் இன்னும் மெல்லிய குரலில் "நான் காத்திருப்பேன் உனக்காக" என்று சொல்ல மட்டும் மறக்க மாட்டாள்!
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
436510455_10225150031800680_1862126334461807635_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=FsZ4i1owf8AQ7kNvgEXOIpM&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCD0AURaHnH-acKo9PoFSBTTvyn7Y0Yy-58RcTKP5rYkw&oe=664567EB 442410173_10225150031480672_1094775532594247872_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=YtuOjupX2EgQ7kNvgEmoMjA&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAZyYpgLTZayOo8KFFHfz7kQuV5l1MYr5MYa-iJZ4e8lA&oe=6645842C 442423986_10225150032200690_3497965495754409322_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=dbocHvXY9MwQ7kNvgE-j52Q&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCxrk-1vIeBb9dJobbsasQqIiRURrX1jTio78J-Nt1Vyw&oe=664579E8 441880647_10225150032360694_4307106630234016695_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=PXUh9_9qo2kQ7kNvgFcfyhZ&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYB5D67MioerJwli8tKD8MAY7Y1QE2mchJF0U8rRSZXgqQ&oe=66457A37
 
 
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.