Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வளிமண்டல நதிகள்: புயல்கள் கூட்டமாக வந்து பேரழிவை ஏற்படுத்தும் இந்த நிகழ்வின் பின்னணி என்ன?

பட மூலாதாரம்,US AIR FORCE

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சோஃபி ஹர்டாக்
  • பதவி,
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

'வளிமண்டல நதிகள்' அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. அவை மேலும் வலுவடைந்து வருகின்றன. அடுத்து எவ்விடத்தைத் தாக்கும் என்று கணிக்க விஞ்ஞானிகள் வானத்தில் அவற்றைத் துரத்தி வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம், ஆன்னா வில்சன் 'கல்ஃப்ஸ்ட்ரீம் IV ஜெட்' விமானத்தில் அமர்ந்து, வடக்கு பசிபிக் பெருங்கடலின் மேல் இருந்த வெள்ளை மேகங்களின் அமைதியான தோற்றத்தைக் கண்டார்.

வளிமண்டல விஞ்ஞானி மற்றும் தீவிர வானிலை நிபுணரான வில்சன் தனது ஹெட்ஃபோன்கள் மூலம் அவரது சக ஊழியர் `கவுண்டவுன்` எண்ணுவதைக் கேட்டார். விமானத்தின் பின்பகுதியில், மற்றொரு சக ஊழியர் மெலிதான, உருளை வடிவக் கருவிகளை ஒரு குழாய் மூலம் கீழே இருந்த புயலில் இறக்கி, அது அமெரிக்காவின் மேற்குக் கரையை நெருங்கும்போது அதன் வலிமை எவ்வளவு இருக்கும் என்று அளவிட்டார்.

அவர்கள் கண்காணிக்கும் புயல் 'வளிமண்டல நதி' என்றழைக்கப்படும் ஒரு வகையைச் சேர்ந்தது. இந்த வானிலை நிகழ்வு சமீபத்திய ஆண்டுகளில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்கள் சிலநேரம் அவை ஏற்படுத்தும் பேரழிவு தாக்கத்தைப் புரிந்துகொள்ள முயன்று வருகிறாரகள். காலநிலை மாற்றத்தின் காரணமாக வளிமண்டல நதிகள் பெரிதாகவும், அடிக்கடி நிகழ்பவையாகவும் தீவிரமானதாகவும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் அவை ஏற்படுத்தும் சேதங்களும் மோசமாகி வருகின்றன.

பெரும்பாலும் வானத்தில் பறக்கும் நதிகள் என்று விவரிக்கப்படும், வளிமண்டல நதிகள் கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய நீராவி ரிப்பன்களாகும். ஒவ்வொன்றும் பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் அகலம் கொண்டவை. மிசிசிப்பி ஆற்றைவிட 27 மடங்கு தண்ணீரைக் கொண்டு செல்பவை.

சூடான கடல்களின் நீர் ஆவியாகி, மேலே உயர்ந்து, குளிர்ச்சியான அட்சரேகைகளுக்கு நகரும்போது, இவை உருவாகின்றன. கலிபோர்னியா போன்ற ஒரு கடற்கரையை இந்த நீராவி அடையும்போது, அது ஒரு மலையில் பாய்ந்து, குளிர்ந்து, மழையாகவோ அல்லது பனியாகவோ கீழே வருகிறது. இது மலைப்பகுதிகளில் வழிந்து நிலச்சரிவுகள், பெருமழை, வெள்ளம், மற்றும் கொடிய பனிச்சரிவுகளை ஏற்படுத்தும் அளவுக்கு வலுவானவை.

 

'புயல் வேட்டைக்காரர்கள்'

வளிமண்டல நதிகள்: புயல்கள் கூட்டமாக வந்து பேரழிவை ஏற்படுத்தும் இந்த நிகழ்வின் பின்னணி என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,'வளிமண்டல நதிகள்' ஏற்படுத்தும் சேதங்களும் மோசமாகி வருகின்றன

அமெரிக்காவின் மேற்குக்கரையில், இந்த வளிமண்டல நதிகள் அதீத மழை, மிக வெப்பமான புயல்கள், பெருவெள்ளம், தீவிர கடலோர காற்று மற்றும் நிலச்சரிவுகளை உருவாக்கின்றன. அவை குழுக்களாக வரலாம் - அப்போது அவை `குடும்பங்கள்` என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில் பல வெகு சில நாட்களின் இடைவெளியில் நிகழ்கின்றன.

முன்பு ஆன்னா வில்சனும் அவரது சகாக்களும் ஒரு 'வளிமண்டல நதி' புயலுக்கு மேலே பறந்தவாறு ஆய்வு செய்வதாக முன்பு குறிப்பிட்டோம் அல்லவா! அந்தப் புயல்களின் குடும்பம் உண்மையில் நான்கு வளிமண்டல நதிகளால் உருவாக்கப்பட்டது. அது பின்னர் கலிபோர்னியாவில் கடுமையான பனிப்பொழிவை ஏற்படுத்தியது. இதனால் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரேகானில் வெள்ளம் ஏற்பட்டது.

ஒவ்வொரு வளிமண்டல நதியும் எழுப்பும் அடிப்படைக் கேள்விகள் ஒரே மாதிரியானவை என்கிறார் கலிபோர்னியா சான் டியாகோ பல்கலைக்கழகத்தின் கடலியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கள ஆராய்ச்சி மேலாளராக இருக்கும் வில்சன். "அது எங்கே நிலச்சரிவை உண்டாக்கப் போகிறது? அது எவ்வளவு வலுவாக இருக்கும்? எவ்வளவு காலம் நீடிக்கும்? இவற்றுக்குப் பதிலளிப்பத்தில் நாங்கள் மேம்பட்டு வருகிறோம்," என்று அவர் கூறுகிறார்.

அமெரிக்க விமானப்படை, தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (நோவா ப- Noaa) மற்றும் பிற அமைப்புகளின் கூட்டுத் திட்டமான வளிமண்டல நதி மறுசீரமைப்பு அல்லது ஏஆர் ரீகானின் (Atmospheric River Reconnaissance - AR Recon) ஒரு பகுதியாகத்தான் கடந்த ஜனவரி மாதம் வில்சன் புயலுக்குள் பயணித்தார். சூறாவளிகளைக் கண்காணிப்பதற்காக பொதுவாக பயன்படுத்தப்படும் 'சூறாவளி வேட்டைக்காரன்' ('hurricane hunter') எனப்படும் NOAA கல்ஃப்ஸ்ட்ரீம் ஜெட், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விமானப்படை விமானங்கள் ஆகியவற்றை விஞ்ஞானிகள் குழு வளிமண்டல நதிகளுக்கு மேல் செலுத்துகிறார்கள். அவற்றிலிருந்து `டிராப்சோன்ட்ஸ்` எனப்படும் கருவிகளை புயல்களில் நுழைத்துச் சோதனைகளை நடத்துகிறார்கள்.

"வளிமண்டல நதிகள் சுவாரஸ்யமானவை. ஆனால் நீங்கள் உண்மையில் அவற்றைப் பார்க்க முடியாது, ஏனெனில் அவை வெறும் நீராவி," என்று வில்சன் கூறுகிறார். "அவை உண்மையில் மேற்பரப்புக்கு நெருக்கமாக உள்ளன. அவை பொதுவாக வளிமண்டலத்தின் மிகத் தாழ்ந்த பகுதிகளில் கூடுகின்றன," என்கிறார்.

இந்தச் செயல்முறையின் போது அவர்கள் மேக மூட்டத்தின் கீழ் பயணிக்க முனைகிறார்கள், என்கிறார் வில்சன். இது செயற்கைக்கோள்கள் போன்ற வழக்கமான வானிலை கண்காணிப்புக் கருவிகளில் இருந்து அவற்றை மறைக்கிறது. "செயற்கைக்கோள்கள் மேற்பரப்பிற்கு அருகில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பது மிகவும் கடினம். எனவே நமது சென்சார்களை கீழே இறக்கி, வெப்பநிலை, காற்றழுத்தம், காற்று, மற்றும் ஈரப்பதம் ஆகிய அடிப்படை வானிலை அளவீடுகளைப் பெறுகிறோம்," என்று அவர் கூறுகிறார்.

 

'ஆபத்தானவை, ஆனால் நன்மையும் உண்டு'

வளிமண்டல நதிகள்: புயல்கள் கூட்டமாக வந்து பேரழிவை ஏற்படுத்தும் இந்த நிகழ்வின் பின்னணி என்ன?

பட மூலாதாரம்,ANNA WILSON

படக்குறிப்பு,ஆன்னா வில்சன்

கடந்த 2023ஆம் ஆண்டு இலையுதிர்காலம் மற்றும் 2024ஆம் ஆண்டு வசந்த காலத்துக்கு இடையில் வாஷிங்டன், ஓரிகான் மற்றும் கலிபோர்னியா ஆகிய பகுதிகளைத் தாக்கிய 51 வளிமண்டல நதிகளின் ஒரு பகுதிதான் வில்சன் மற்றும் அவரது குழுவினர் ஜனவரி மாதம் கண்காணித்து வந்த புயல்கள்.

முந்தைய பருவத்தைவிட 13 புயல்கள் அதிகமாக உருவாகின. அத்தகைய புயல் எப்போது, எங்கே வரும், அது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அறிவது, பூமியில் உள்ள மக்களுக்கு என்ன நேரப் போகிறது என்பதைத் தயாரிக்க உதவுகிறது. எடுத்துக்காட்டாக, சரியான நீர்த்தேக்கங்களைச் சரியான நேரத்தில் காலி செய்ய உதவுகிறது. ஆனால் வில்சன் மற்றும் அவரது சகாக்கள் 2016இல் இந்தப் பணியைச் செய்யத் துவங்கினர். இது வளிமண்டல நதிகளை நன்கு புரிந்து கொள்வதற்கான பரந்த அறிவியல் முயற்சியின் ஒரு பகுதி. அவற்றின் ஆச்சரியமான நன்மைகளையும் அறிந்துகொள்ள இது முயல்கிறது.

தீவிர வானிலை நிபுணர்கள் சுட்டிக்காட்டுவது போல, வளிமண்டல நதிகள் அழிவுகரமானவை மாத்திரமே அல்ல. மாறாக, அவை உயிர்களுக்கு ஆதரவாகவும் இருக்கும்.

"நமக்கு வளிமண்டல நதிகள் அவசியம். அவை இல்லாவிட்டால் அமெரிக்காவின் மேற்கில் வறட்சி ஏற்படும்," என்று வில்சன் கூறுகிறார். அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில் நிகழும் மூன்றில் இரண்டு பங்கு வறட்சிகள் வளிமண்டல நதிகளால் முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றன. அவை `வறட்சி நிவாரணிகள்` என்று அழைக்கப்படுகின்றன.

"வளிமண்டல நதிகள் நன்மையும் பயக்கின்றன," என்று கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் வளிமண்டல விஞ்ஞானி பின் குவான் ஒப்புக்கொள்கிறார். "நாங்கள் அவற்றின் அபாயகரமான பக்கத்தை முன்னிலைப்படுத்த முனைகிறோம். ஆனால் அவை கலிபோர்னியா போன்ற வறண்ட பகுதிகளில் முக்கியமான நீர் விநியோகத்தை வழங்குகின்றன என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்," என்கிறார். ஒட்டுமொத்தமாக, கலிபோர்னியாவின் மழை மற்றும் பனியில் 50% வரை அவை உருவாக்குபவைதான்.

அமெரிக்கா மற்றும் கனடாவின் மேற்குக் கரையில், வளிமண்டல நதிகள் ஹவாய் அருகே தோன்றியவை என்று நம்பப்படுவதால், அவை `பைனாப்பிள் எக்ஸ்பிரஸ்` என்று அழைக்கப்படுகின்றன. இருப்பினும், வளிமண்டல நதிகள் உலகளாவிய நிகழ்வு என்பதால் வல்லுநர்களிடையே இந்தப் பெயர் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது என்று குவான் கூறுகிறார்.

மேலும் மேற்குக்கரையைத் தாக்கும் பல வளிமண்டல நதிகள் உண்மையில் ஹவாய்க்கு வெகு தொலைவில் உருவாகின்றன. 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், வழக்கத்திற்கு மாறாக, ஒரு நீண்ட வளிமண்டல நதி ஜப்பானில் இருந்து வாஷிங்டன் வரை சுமார் 8,000கி.மீ. நீண்டது.

கடந்த 2019ஆம் ஆண்டில், ஆராய்ச்சியாளர்கள் வளிமண்டல நதிகளின் தீவிரத்தை தரவரிசைப்படுத்த ஒன்று (பலவீனமான, மிதமான மழைப்பொழிவு) முதல் ஐந்து (விதிவிலக்கான, அபாயகரமானவை) வரை ஓர் அளவீட்டை உருவாக்கினர்.

ஸ்கிரிப்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் ஓசியானோகிராஃபியின் நீரியல் நிபுணரான கியான் காவ் கூறுகையில், "மிதமான வளிமண்டல நதிகள் நீர் விநியோகத்திற்குப் பயனுள்ளதாகக் கருதப்படுகின்றன. இவை மிகவும் தீவிரமானவை மட்டுமே ஆபத்தானவை. எனவே நன்மை தீமை இரண்டையும் கொண்டுள்ளன," என்கிறார்.

 

முன்னறிவிப்புகள் ஏன் முக்கியமானவை?

வளிமண்டல நதிகள்: புயல்கள் கூட்டமாக வந்து பேரழிவை ஏற்படுத்தும் இந்த நிகழ்வின் பின்னணி என்ன?

பட மூலாதாரம்,RICH HENNING/NOAA

படக்குறிப்பு,வளிமண்டல ஆறுகள் கண்ணுக்கு தெரியாதவை. மேக மூட்டத்தின் கீழ் பயணிக்க முனைபவை. இது 2023இல் நோவா விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம்

வளிமண்டல நதிகளைக் கணிப்பது அவற்றின் அழிவுகரமான பக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியமானது, ஆனால் அது கடினமாது, என்று காவ் கூறுகிறார். ஆரம்பத்தில், அவை கடலுக்கு மேல் உருவாகின்றன. அங்கு அவற்றைக் கவனிப்பதற்கான வழிகள் குறைவு. பின்னர் அவை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்கின்றன.

மேலும் அந்தப் பயணத்தின்போது, அவை நின்று போகலாம், தீவிரமடையலாம், பலவீனமடையலாம், வெப்பமடையலாம் அல்லது குளிர்ச்சியடையலாம், பிற வளிமண்டல நதிகள், அல்லது அவற்றின் எச்சங்களுடன் தொடர்பு கொள்ளலாம். இந்த மாற்றங்கள் ஏதேனும் அவற்றின் தாக்கத்தைப் பாதிக்கும் என்று அவர் கூறுகிறார்.

பெரும் மழை வரும்பட்சத்தில் நீர்த்தேக்கங்களைக் காலி செய்யலாமா என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய, வானிலை மற்றும் நீர் முன்னறிவிப்பு பயன்படுத்தப்படுகின்றன.

"இந்த வளிமண்டல நதிகளை நாம் முன்கூட்டியே சிறப்பாகக் கணிக்க முடிந்தால், அவற்றை இன்னும் துல்லியமாக, நீண்ட காலத்துடன் கணிக்க முடிந்தால், செயல்பாட்டு முடிவுகளை எடுக்க நமக்கு அதிக நேரம் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, நாம் நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்ற வேண்டுமா வேண்டாமா என்பது குறித்த முடிவுகளை எடுப்பது," என்கிறார் காவ்.

மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு முந்தைய குறுகிய கால முன்னறிவிப்புகள் மிகவும் துல்லியமானவை, என்கிறார் காவ். நீண்டகால முன்னறிவிப்புகளின் துல்லியம் குறைகிறது என்று அவர் கூறுகிறார்.

"இரண்டு வாரங்களுக்கு அப்பால் உள்ள முன்னறிவிப்புகளை மேம்படுத்த ஆராய்ச்சியாளர்கள் மிகவும் கடினமாக உழைத்து வருகிறார்கள்," என்று அவர் கூறுகிறார். ஏனெனில் ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் தயார்படுத்துவது மக்களுக்குக் கூடுதல் நேரத்தை வழங்கும்.

இங்குதான் AR Recon விமானங்களின் பங்கு வருகிறது. மற்ற கருவிகள் அடைய முடியாத வளிமண்டல நதிகளுக்குள் இவை பார்க்கின்றன.

 

மேம்பட்ட தரவுகளின் அவசியம் என்ன?

வளிமண்டல நதிகள்: புயல்கள் கூட்டமாக வந்து பேரழிவை ஏற்படுத்தும் இந்த நிகழ்வின் பின்னணி என்ன?

பட மூலாதாரம்,US AIR FORCE

படக்குறிப்பு,தொழில்நுட்ப சார்ஜென்ட் லாரி பேங்க்ஸ் 2023இல் வளிமண்டல நதிகள் பணியின்போது ஒரு டிராப்சோன்டை சரிபார்க்கிறார்

வில்சனின் குழுவைப் பொறுத்தவரை, புயல்களைப் பின்தொடரும் ஒவ்வொரு விமானப் பயணமும் காலையில் ஒரு முன்னறிவிப்புக் கூட்டத்துடன் துவங்குகிறது. அந்தக் கூட்டத்தில் வரவிருக்கும் நாட்களில் அமெரிக்காவில் மழை மற்றும் பனிப்பொழிவு பற்றிய முன்னறிவிப்புகளைப் பற்றி விவாதிக்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் மழை அல்லது பனிப்பொழிவைக் உருவாக்கவிருக்கும் வளிமண்டல நதியைப்பற்றிய கூடுதல் தரவுகளைக்கொண்டு மேம்படுத்தப்படக்கூடிய தகவல்கள் அந்தக் கூட்டத்தில் அடையாளம் காணப்படுகின்றன. அவர்கள் பின்னர் அந்த வளிமண்டல நதிக்குப் பறந்து சென்று, தேவையான தரவுகளைத் தங்கள் கருவிகள் மூலம் சேகரிக்கின்றனர்.

"இந்த விமானங்களின் நோக்கம், செயற்கைக்கோள்கள் இவற்றைப் பார்ப்பதில் சிரமப்படும்போது, தரவுகளில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதாகும்," என்று வில்சன் கூறுகிறார்.

ஒவ்வொரு கல்ஃப்ஸ்ட்ரீம் விமானப் பயணமும் சுமார் எட்டு மணிநேரம் நீடிக்கும். மேலும் வில்சன் சொல்வது போல், உங்கள் சொந்த உணவைக் கொண்டு வருவது ஒரு முக்கியமான நடைமுறை தயாரிப்பு. கருவிகள் விமானத்தில் இருக்கும் குழுவிற்கு தரவுகளை அனுப்புகின்றன. விமானத்தில் இருப்பவர்கள் அதைச் சரிபார்த்து உலகளாவிய தொலைத்தொடர்பு அமைப்புக்கு அனுப்புகிறார்கள். இது உலகளாவிய வானிலை தொடர்பான தரவுகளைச் சேகரித்து விநியோகிக்கும் ஒரு வானிலை அமைப்புச் சேவை.

செயற்கைக்கோள்கள் உட்படப் பல நூறு மில்லியன் பிற அவதானிப்புகளுடன் தரவுகளைப் பயன்படுத்தும் முன்கணிப்பு மாதிரிகள் இந்தத் தரவுகளை எடுத்துக்கொள்கின்றன. இப்போது மிகவும் துல்லியமான முன்னறிவிப்புகள், டிராப்சோன்ட் கருவிகளின் தரவு மூலம் மேம்படுத்தப்பட்டு, நீர்த்தேக்க நிர்வாகிகள் மற்றும் அவசரகால நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

டிராப்சோன்ட் (Dropsonde) கருவிகள் தரும் தரவுகள் உண்மையில் முன்னறிவிப்புகளை மேம்படுத்த உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய பகுப்பாய்வு ஒன்று எதிர்காத்தில் கல்ஃப்ஸ்ட்ரீம் ஜெட் மற்றும் விமானப்படை விமானங்கள் இரண்டையும் உள்ளடக்கிய தினசரி விமானப் பயணங்களைப் பரிந்துரைக்கிறது.

முடிந்தவரை அதிகமான தரவுகளைச் சேகரிக்க இது பரிந்துரைக்கப்படுகிறது. தகவல் சேகரிப்பதற்கும், வானிலை மாதிரிகள் உருவாக்கும் அமைப்புகளில் வேலை செய்வதற்கும், முன்னறிவிப்புகளை மேம்படுத்துவதற்கும், தனிப்பட்ட புயல்கள் பற்றிய புரிதலை ஆழப்படுத்துவதற்கும் இந்தக் குழு மற்ற தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறது.

 

ஒரே நேரத்தில் பல பேரழிவுகள்

வளிமண்டல நதிகள்: புயல்கள் கூட்டமாக வந்து பேரழிவை ஏற்படுத்தும் இந்த நிகழ்வின் பின்னணி என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கலிபோர்னியாவை தாக்கிய ஒரு வளிமண்டல நதியால் ஏற்பட்ட வெள்ளம்

வளிமண்டல நதிகளைப் புரிந்துகொள்வதற்கான இந்த முயற்சி மிக அவசரமான தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் வளிமண்டல நதிககளின் தன்மை மாறி வருவதாகவும், அவை அடிக்கடி நிகழ்வதாகவும், அழிவுகரமானதாக மாறி வருவதாகவும் கூறுகின்றனர்.

மெங்கியான் லூ, ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நீர்நிலையியல் மற்றும் நீர் வளங்கள் துறையில் இணைப் பேராசிரியராக உள்ளார். அவரும் அவரது குழுவும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஓர் உலகளாவிய ஆய்வை வெளியிட்டனர். இது வளிமண்டல நதிகளின் எதிர்காலத் தீவிரம், எண்ணிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய மழை மற்றும் பனிப்பொழிவை உலகம் முழுவதும் நடக்கும் என்கிறது. அவர்களின் கணிப்புகள்படி, வளிமண்டல நதிகளின் உலகளாவிய எண்ணிக்கை இந்த நூற்றாண்டின் இறுதியில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும். ஆனால் நிலத்தில் இதன் அர்த்தம் என்னவென்பது பிராந்தியத்திற்குப் பிராந்தியம் மாறுபடும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

"பொதுவாக, அடிக்கடி நிகழும் வலிமையான வளிமண்டல நதிகள், அடிக்கடி மற்றும் வலுவான மழையைக் கொண்டு வருகின்றன. ஆனால் அனைத்து வளிமண்டல நதிகளும் மழையாக மாறும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் காலநிலை அமைப்புகள் நேரானவை அல்ல, மிகக் குழப்பமானவை," என்று லூ கூறுகிறார்.

காலநிலை மாற்றத்தால் வளிமண்டலம் வெப்பமடைவதால், அது ஈரப்பதத்தின் அளவை அதிகரிக்கும். "இதன் விளைவாக அடிக்கடி நிகழும் வலுவான வளிமண்டல நதிகளை எதிர்பார்க்கிறோம்," என்று அவர் கூறுகிறார்.

வெப்பம் மற்றும் ஈரப்பதத்தைக் கொண்டு செல்வதில் அவற்றின் பங்கு காரணமாக, காலநிலை தொடர்ந்து வெப்பமடைவதால் வளிமண்டல நதிகள் எவ்வாறு மாறும் என்பதை அறிவது புவி வெப்பமடைதலின் பரந்த தாக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு அவசியம் என்று லூ கூறுகிறார். உதாரணமாக, வளிமண்டல ஆறுகள் வெப்பத்தைக் கொண்டு வருவதால் மேற்கு அன்டார்டிகாவில் பனியை உருகத் தூண்டுகின்றன.

வளர்ந்து வரும் ஆராய்ச்சி அமைப்பு உலகம் முழுவதும் அவற்றின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. கிழக்கு ஆசியாவில், அவை வெப்பமான பருவங்களில் 90% தீவிர மழைப்பொழிவு, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்துகின்றன. வளிமண்டல நதிகள் ஒரு பகுதிக்கு பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல்களையும், மற்றொரு பகுதிக்கு மழை மற்றும் கடுமையான வெள்ளங்களையும் கொண்டு வரக்கூடும் என்பதால், அவை பல இடங்களில் ஒரே நேரத்தில் பேரழிவு தரும் வானிலையை உருவாக்கக்கூடும்.

அவை காட்டுத்தீ போன்ற பிற பேரழிவுகளையும் உருவாக்கலாம். தாவரங்கள் இல்லாததால் மண் அரிப்பு ஏற்பட்டு நிலச்சரிவை ஏற்படுத்துகின்றன. அவை வேகமாக தாவர வளர்ச்சியைத் தூண்டும், இது அடுத்த காட்டுத்தீக்கு எரிபொருளாக மாறும். அடுத்த பருவத்தில் எரிந்த பகுதிகளில் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இது ஒரு சுழற்சியாக மாறும் என ஆராய்ச்சி கூறுகிறது.

 

அடுத்து என்ன செய்ய வேண்டும்?

வளிமண்டல நதிகள்: புயல்கள் கூட்டமாக வந்து பேரழிவை ஏற்படுத்தும் இந்த நிகழ்வின் பின்னணி என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கடந்த ஜனவரி மாதம் ஒரு வளிமண்டல நதி கலிபோர்னியாவில் உள்ள சாண்டா யெனெஸ் பள்ளத்தாக்கிற்குள் நகர்கிறது

அடுத்தடுத்து உருவாகும் வளிமண்டல நதிகள் முடிவில்லாத மழையைக் கொண்டு வருகின்றன. இது அடிக்கடி நிகழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் நடுப்பகுதி வரை, ஒன்பது வளிமண்டல நதிகள் கலிபோர்னியாவை வரிசையாகத் தாக்கின. இதன் விளைவாக வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மின்சாரத் தடை ஏற்பட்டது. ஒரு ஆய்வின் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியபடி. இத்தகைய வளிமண்டல நதிகளின் நிகழ்வுகளுக்கு இடையில் நனைந்த மண் வறண்டு போகாது, இதனால் வெள்ளம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

"அமெரிக்காவின் மேற்கில் நிகழும் வெள்ளச் சேதங்களில் 90% வளிமண்டல நதிகள் ஏற்படுத்தியவை. இதன் மொத்த மதிப்பு ஓராண்டுக்கு 100 கோடி இந்திய ரூபாய். இந்த எண்ணிக்கை இந்த நூற்றாண்டின் இறுதியில் இரண்டு அல்லது மூன்று மடங்காக ஆகலாம்," என்று குவான் கூறுகிறார்.

அவை எப்போதும் நீராவியை மட்டும் எடுத்துச் செல்வதில்லை. 2021ஆம் ஆண்டில், அவை ஆப்பிரிக்காவில் இருந்து சஹாரா பாலைவனத்தின் தூசியை ஐரோப்பாவிற்கு ஓட்டிச் சென்று, ஆல்ப்ஸ் மலையின் பனியை இருட்டாக்கி, அதன் பிரதிபலிப்பைக் குறைத்து, வெப்பத்தைக் கொண்டு வந்து, பனியின் ஆழத்தை 50% குறைத்தன.

வளிமண்டல நதிகளை நாம் எவ்வாறு சமாளிக்க முடியும்?

காலநிலை மாற்றம் அவற்றை எவ்வாறு மாற்றுகிறது என்பதை நாம் அடையாளம் காண வேண்டும் என்றும், புவி வெப்பமடைதலை எதிர்த்துப் போராட இன்னும் நிலையான வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் காவ் கூறுகிறார். முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள், பொது விழிப்புணர்வு மற்றும் மிகவும் துல்லியமான மற்றும் அதிநவீன வானிலை முன்னறிவிப்புகளும் நம்மைத் தயார்படுத்துவதில் முக்கியமானவை என்று அவர் கூறுகிறார். அத்துடன் வளிமண்டல நதிகளை முதலில் உருவாக்க எந்த வானிலை மற்றும் காலநிலை நிலைமைகள் உதவுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம் என்கிறார்.

இதற்கிடையில், ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான டிராப்சோன்ட்கள் இந்த மர்மமான புயல்களைக் கண்காணிக்கின்றன. அவற்றை மேலும் கணிக்கக்கூடிய தரவுகளைச் சேகரிக்கின்றன என்பதை அறிவது குறைந்தபட்சம் ஆறுதலாக இருக்கலாம்.

இந்தப் பணி தனக்கு நம்பிக்கை அளிப்பதாகவும், குறிப்பாக கலிபோர்னியாவில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையம் போன்ற நிலத்தில் பதில் அளிப்பவர்களுடன் பணிபுரிவது நம்பிக்கையை அளிப்பதாகவும் ஆன்னா வில்சன் கூறுகிறார். "உடனடியாக பொருந்தக்கூடிய ஒரு பணியைச் செய்வது ஒரு விஞ்ஞானிக்கு மிகவும் அற்புதமான உணர்வு. இது மக்களுக்கு மிக அவசியமானதாக இருக்கிறது," என்று அவர் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/cyj3jmgj4mxo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த உலகு போர்களை நிறுத்தி  பூமியை காப்பாற்றுவதில் கவனம் செலுத்தினாலே ஆயிரம் பிரச்சனைகள் குறைந்து விடும்.

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வானில் மிதக்கும் 2,000கி.மீ நீளமான ‘நதிகள்’ இந்தியாவில் பேரழிவுகளை ஏற்படுத்துவது எப்படி தெரியுமா?

பறக்கும் நதிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சமீபத்தில் கேரளா வயநாட்டில் ஏற்பட்ட பெருமழையால் நடந்த நிலச்சரிவு கட்டுரை தகவல்
  • எழுதியவர், நவீன் சிங் கட்கா
  • பதவி, சுற்றுச்சூழல் நிருபர்
  • 58 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியாவில் கடந்த சில வாரங்களில் மட்டும் பல்வேறு பகுதிகளில் கனமழை, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

தெற்காசியாவில், குறிப்பாக இந்தியாவில் வெள்ளப் பேரிடர்கள் ஏற்படுவது புதிதல்ல. வருடத்தின் அதிக மழைப்பொழிவை பெறும் இந்த காலகட்டத்தில் வெள்ளம் ஏற்படுவது வழக்கமாக நடப்பது தான்.

ஆனால் காலநிலை மாற்றம், பருவமழையை மிகவும் ஒழுங்கற்றதாக ஆக்கியுள்ளது, குறுகிய காலத்தில் பெருமளவு மழைப்பொழிவு ஏற்பட்டு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதனைத் தொடர்ந்து நீண்ட கால வறட்சி பதிவாகிறது.

தற்போது விஞ்ஞானிகள் 'வளிமண்டல நதி’ எனப்படும் ஒருவகையான புயல், இந்த நிலைமையை தீவிரமாக்குகிறது என்று கூறுகின்றனர். இது புவி வெப்பமடைதலால் ஏற்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலில் ஈரப்பதம் அதிகரித்து நிலைமை மோசமாகிறது என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

'பறக்கும் நதிகள்' என்று அழைக்கப்படும் வளிமண்டல நதிகள் என்பவை, பட்டை வடிவிலான கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய நீராவி ரிப்பன்களாகும் (ribbons of water vapour). கடலின் வெப்பம் அதிகரித்து, கடல் நீர் ஆவியாகும்போது நீராவியின் மிகப்பெரிய, கண்ணுக்குத் தெரியாத இந்த ரிப்பன்கள் உருவாகின்றன. அவை ஒவ்வொன்றும் பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் அகலம் கொண்டவை.

இந்த நீராவி ரிப்பன்கள், வளிமண்டலத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு பட்டை (band) அல்லது ஒரு நெடுவரிசையை உருவாக்குகிறது, இது மேலே உயர்ந்து, குளிர்ச்சியான அட்சரேகைகளுக்கு நகரும்போது, 'பறக்கும் நதிகள்’ உருவாகின்றன. அதன் பின்னர் மழை அல்லது பனியாகப் பெய்து, வெள்ளம் மற்றும் ஆபத்தான பனிச்சரிவுகளை ஏற்படுத்தும் அளவுக்குப் பேரழிவுக்கு வழிவகுக்கிறது.

இந்த 'வானத்தில் உள்ள நதிகள்' பூமியின் நடு அட்சரேகைகள் முழுவதும் நகரும் மொத்த நீராவியில் 90%-ஐ எடுத்துச் செல்கின்றன. அதாவது, சராசரியாக அமேசான் நதியின் வழக்கமான ஓட்டத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக நீரை வெளியேற்றுகின்றன.

 
`பறக்கும் நதிகள்’ : இந்தியாவில் பேரழிவு தரும் வெள்ளத்தை ஏற்படுத்தும் அபாயம்

பல நூறு கோடி மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் அபாயம்

பூமி வேகமாக வெப்பமடைவதால், இந்த வளிமண்டல நதிகள் நீளமாகவும், அகலமாகவும், மேலும் தீவிரமாகவும் மாறி, உலகளவில் பல நூறு கோடி மக்களை வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில், இந்தியப் பெருங்கடலின் வெப்பமயமாதல் 'பறக்கும் நதிகளை' உருவாக்கியுள்ளது, இது ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் வரும் பருவமழையை பாதிக்கிறது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

2023-ஆம் ஆண்டில் 'நேச்சர்' என்ற பிரசித்திபெற்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, இந்தியாவில் 1951 மற்றும் 2020-க்கு இடையில் பருவமழை காலத்தில் மொத்தம் 574 'வளிமண்டல நதிகள்' உருவானதாகக் காட்டுகிறது. காலப்போக்கில் இதுபோன்ற தீவிர வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

"கடந்த இருபது ஆண்டுகளில், கிட்டத்தட்ட 80% வளிமண்டல நதிகள் இந்தியாவில் வெள்ளத்தை ஏற்படுத்தியது," என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஆய்வில் ஈடுபட்டுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி) மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, 1985 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடையிலான பருவமழைக் காலங்களை ஆராய்ந்தது. அந்த காலகட்டத்தில் இந்தியாவில் 10 மிகக் கடுமையான வெள்ளப் பேரிடர்கள் ஏற்பட்டன. அவற்றில் ஏழு நிகழ்வுகள் வளிமண்டல நதிகளால் ஏற்பட்டன என்பதை இந்த ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியப் பெருங்கடலில் இருந்து நீர் ஆவியாதல் செயல்முறை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகவும், வானிலை வெப்பமடைவதால் வளிமண்டல நதிகள் மற்றும் அவற்றால் ஏற்படும் வெள்ளங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பருவமழைக் காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தை நோக்கி கொண்டு வரப்படும் ஈரப்பதத்தில் மாறுபாடுகள் அதாவது ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து வருகின்றன," என்று இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு மையத்தின் வளிமண்டல விஞ்ஞானி டாக்டர் ராக்ஸி மேத்யூ கோல் பிபிசி-யிடம் தெரிவித்தார்.

"இதன் விளைவாக, சூடான கடல்களில் இருந்து ஈரப்பதம் அனைத்தும் வளிமண்டல நதிகளால் சில மணிநேரங்கள் முதல் சில நாட்களில் வரையிலான கால அளவில் வெளியேற்றப்படும். இது நாடு முழுவதும் நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளத்திற்கு வழிவகுத்தது,” என்கிறார்.

`பறக்கும் நதிகள்’ : இந்தியாவில் பேரழிவு தரும் வெள்ளத்தை ஏற்படுத்தும் அபாயம்

மேலும் அகலமாகவும் நீளமாகவும் உருவாகும் வளிமண்டல நதிகள்

ஒரு சராசரி 'வளிமண்டல நதி’ சுமார் 2,000கி.மீ (1,242 மைல்கள்) நீளமும், 500கி.மீ அகலமும், கிட்டத்தட்ட 3கி.மீ ஆழமும் கொண்டது. இருப்பினும் இவை சமீக காலத்தில் மேலும் அகலமாகவும் நீளமாகவும் உருவாகின்றன. சில நதிகள் 5,000கி.மீ நீளம் வரை உருவாகின்றன. அதே சமயம், அவை மனித கண்களால் பார்க்க முடியாத பண்புகளை கொண்டுள்ளது.

"அவை இன்ஃப்ரா ரெட் மற்றும் மைக்ரோவேவ் அதிர்வெண் பண்புகளைக் கொண்டுள்ளன," என்று நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் வளிமண்டல ஆராய்ச்சியாளர் பிரையன் கான் கூறுகிறார்.

"அதனால்தான் உலகெங்கிலும் உள்ள நீராவி மற்றும் வளிமண்டல நதிகளைக் கண்காணிக்க செயற்கைக்கோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்," என்று கான் விவரித்தார்.

மேற்கத்திய இடையூறு (western disturbances), பருவமழை மற்றும் சூறாவளி போன்ற பிற வானிலை சூழல்களும் வெள்ளத்தை ஏற்படுத்தும்.

ஆனால் 1960-களில் இருந்து வளிமண்டல நீராவி 20% வரை அதிகரித்துள்ளதாக உலகளாவிய ஆய்வுகள் காட்டுகின்றன.

வளிமண்டல நதிகள் தெற்காசியாவில் 56% தீவிர மழைப்பொழிவுக்குக் (மழை மற்றும் பனிப்பொழிவு) காரணம் விஞ்ஞானிகள் தொடர்புபடுத்தியுள்ளனர், இருப்பினும் இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் தேவைப்படுகிறது.

அண்டை நாடான தென்கிழக்கு ஆசியாவில், வளிமண்டல நதிகள் மற்றும் பருவமழை தொடர்பான கனமழை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு பற்றிய விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்கப் புவி இயற்பியல் கூட்டமைப்பால் வெளியிடப்பட்ட 2021-ஆம் ஆண்டின் ஆய்வு ஒன்றில், பருவமழையின் ஆரம்ப காலத்தில் (மார்ச் மற்றும் ஏப்ரல்) கிழக்கு சீனா, கொரியா மற்றும் மேற்கு ஜப்பானில் 80% வரை அதிக மழைப்பொழிவு நிகழ்வுகள் வளிமண்டல நதிகளுடன் தொடர்புடையவை என்று கண்டறியப்பட்டது.

"கிழக்கு ஆசியாவில் 1940 முதல் வளிமண்டல நதிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது," என்று ஒரு தனி ஆய்வுக்குத் தலைமை தாங்கிய ஜெர்மனியில் உள்ள போட்ஸ்டாம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் சாரா எம் வல்லேஜோ-பெர்னல் கூறுகிறார்.

"அப்போதிலிருந்து அவை மடகாஸ்கர், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் மீது மிகவும் தீவிரமாக உருவானதை நாங்கள் கண்டறிந்தோம்." என்று விவரித்தார்.

 
`பறக்கும் நதிகள்’ : இந்தியாவில் பேரழிவு தரும் வெள்ளத்தை ஏற்படுத்தும் அபாயம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்தியாவிலும் தெற்காசியாவிலும் இந்த பருவத்தில் வெள்ளம் ஏற்படுவது வழக்கமான நிகழ்வு தான்

பிற நாடுகளில் உள்ள வானிலை ஆய்வாளர்கள் சமீபத்திய சில பெரிய வெள்ளங்களை வளிமண்டல நதிகளுடன் தொடர்புப் படுத்தி ஆய்வு செய்து வருகின்றனர்.

2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இராக், இரான், குவைத் மற்றும் ஜோர்டான் அனைத்தும் கடுமையான இடி, ஆலங்கட்டி மழை மற்றும் விதிவிலக்கான மழைக்குப் பிறகு பேரழிவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

2005-ஆம் ஆண்டில் இதேபோன்ற நிகழ்வை விஞ்சும் வகையில், இப்பகுதி முழுவதும் உள்ள வானில் அதிக அளவு ஈரப்பதம் இருப்பதை வானிலை ஆய்வாளர்கள் பின்னர் கண்டறிந்தனர்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சிலி நாட்டில் மூன்று நாட்களில் 500மி.மீ மழை பொழிந்தது. பெரும் மழைப்பொழிவு பதிவானது. அது ஆண்டிஸ் மலையின் சில பகுதிகளில் பனியை உருக்கி, சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட வளங்களை அழித்த பெரிய வெள்ளத்தை உருவாக்கியது.

பேரழிவுகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் அபாயங்களைக் கருத்தில் கொண்டு, சூறாவளிகளைப் போலவே வளிமண்டல நதிகள் அவற்றின் அளவு மற்றும் வலிமையின் அடிப்படையில் ஐந்து வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் சூறாவளிகளைப் போல அனைத்து வளிமண்டல நதிகளும் தீங்கு விளைவிப்பதில்லை, குறிப்பாக அவை குறைந்த தீவிரத்தில் உருவாகும் போது. நீண்டகால வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களில் மழைப் பொழிவை ஏற்படுத்தினால் நன்மை பயக்கக்கூடும்.

வளிமண்டல நதிகள் உருவாவது வேகமாக வெப்பமடைந்து வரும் வளிமண்டலத்தின் முக்கியமான சமிக்ஞை ஆகும்.

பிற இயற்கைச் சீற்றங்களை ஒப்பிடும் போது 'வளிமண்டல நதிகள்' குறித்து தெற்காசியாவில் ஒப்பீட்டளவில் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

"வானிலை ஆய்வாளர்கள், நீர்வியலாளர்கள், மற்றும் காலநிலை விஞ்ஞானிகளிடையே பயனுள்ள கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது தற்போது சவாலாக உள்ளது. ஏனெனில் இந்த வளிமண்டல நதிகள் இந்த பகுதிக்குப் புதியவை. மக்கள் மத்தியில் இது பற்றி அறிமுகப்படுத்துவது கடினம்," என்று ஐ.ஐ.டி இந்தூரில் உள்ள ஆராய்ச்சி அறிஞர் ரோசா வி லிங்வா கூறினார்.

ஆனால் இந்தியாவின் சில பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், இந்தப் புயல் மற்றும் அதன் சாத்தியமான பேரழிவு தாக்கத்தை ஆய்வு செய்வது மிகவும் முக்கியமானது என்று அவர் மேலும் கூறுகிறார்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Flying rivers: பேரழிவிற்கு வித்திடும் பறக்கும் நதிகள்; எப்படி உருவாகிறது?

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.