Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

வடக்கு புன்னாலைக்கட்டுவனில் இந்தியப் படையின் முகாம் பொறுப்பதிகாரியான மேஜர் கே.பி.தாஸ் அச்செழு அங்கிளிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். அதாவது அக்காச்சி எப்படிப்பட்டவன் என்பதே அக்கேள்வி. அதற்கு அங்கிள் நல்ல போராளி அதைவிட மிகச் சிறந்த சமூகசேவையாளன் என்று பதில் கொடுத்தார். இதன் பின் அக்காச்சியின் பொதுப் பணிகள் பற்றி ஆராய்ந்த மேஜர் கே.பி. தாஸ் தான் அக்காச்சியைப் பார்க்க வேண்டும் என்றும், அக்காச்சியருகில் இருந்து தேனீர் குடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அடுத்த போர் நிறுத்தம் வரும்போது தனது கண்களைக் கட்டிக்கொண்டுபோயாவது அக்காச்சியின் முன் நிறுத்துங்கள் என்றார்.

தெற்கு புன்னாலைக்கட்டுவன் முகாம் அதிகாரியான மேஜர் ஒபரோய் பத்து நாட்களுக்குள் அக்காச்சியை உயிருடன் பிடிப்பேன் எனச்சொல்லி தோற்றுப் போனார். ஆனால் பின்னர் அக்காச்சி சமூகத்திற்கு நிறைய சேவைகள் செய்துள்ளான் என்று பிரஜைகள் குழுவிடம் கூறியுள்ளார்.

இதேபோல் நீர்வேலிச் சந்தியில் முகாமிட்டிருந்த படையதிகாரியான மேஜர் பாபுஜி ஏபிரகாம், அக்காச்சியின் சமூக சேவைகள் பற்றி தான் கேள்விப்பட்டதாக பொது மக்களிடம் கூறியிருக்கிறார்
அனைத்து மக்களதும் அன்பிற்கு உரித்துடைய அந்த வெள்ளை உள்ளம் மறைந்த செய்தி குடாநாடெங்கும் பரவியது.

எல்லோர் முகத்திலும் ஒரே துயரம். வலிகாமம் மேற்கில் வட்டுக்கோட்டை தொடக்கம் வலிகிழக்கு அச்சுவேலி, புத்தூர் பகுதியில் இருந்தும் மக்கள் சாரை சாரையாக மிதிவண்டிகள், உழுபொறி வண்டிகள்(டிரக்கரர்), சிறு உழுபொறி வண்டிகள்(லான்ட்மாஸ்ரர்கள்) மூலமும் கப்டன் அக்காச்சியின் வீரவணக்க நிகழ்வு இடம்பெற்ற அந்த இடத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். ஈகைச்சுடர் திலீபன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் தொடங்கிய 15.09.1989 நினைவு வணக்க அலங்கரிப்பு மற்றும் பதாகைகளைக் கட்டுவதிலும் ஈடுபட்டிருந்த மக்களின் செவிகளில் அக்காச்சியின் வீரச்சாவுச் செய்தி விழுந்த போது அக்காச்சியின் உடலையாவது கடைசியாகப் பார்த்து விடவேண்டும் என்ற ஆவலில் எல்லோரும் வீரவணக்க நிகழ்வு இடம்பெற்ற அந்த ஒதுக்குப் புறமான ஏகாந்தமான பகுதியை நோக்கி விரைந்து கொண்டிருந்தோம்.

தரிசு நிலப்பகுதி அந்த தரவை நிலத்தை ஊடறுத்துச் செல்லும் களிமண் பாதையில் நெடுந்தூரம் சென்று பின்னர் இடைக்கிடை கரடுமுரடான பாதையிலும் சேற்று நிலத்திலும் மாறி மாறி சில மைல்கள் தூரம் சென்று அக்காச்சியின் வீரவணக்க நிகழ்வு நடந்த அந்த இடத்தை அச்செழு அங்கிளும் எனது மகனும் நானும் அடைந்தோம். இன்னுமொரு பாதைவழியாக, யாழ். மாவட்ட மக்கள் முன்னணி அமைப்பளார் ராஜன் அவர்களை வழிமறித்து அக்காச்சி பற்றிய செய்தியை வினவிய நீர்வேலி உதயதாரகை வாசிகசாலை மக்கள், துயரம் ததும்பிய குரலில் “ஐயோ எங்கள் தலைவனை இழந்து விட்டோம்” என்று அழுது கூறினார்கள். இப்படித்தான் அக்காச்சியின் வித்துடல் வைக்கப்பட்டிருந்த பேழையைச் சுற்றி அமர்ந்திருந்த மக்கள் பெண்கள் முதியவர்கள் தமது தலைவனை இழந்த சோகத்தில் மூழ்கியிருந்த காட்சி என் நெஞ்சை பிழிவதாக இருந்தது.

இளமைக்காலம்

இளமைக் காலம் வசந்த காலம் என்பர். நீர்வேலியைச் சேர்ந்த சிவகுருநாதன் – கனகமணி இணையர் தாம் பெற்ற இரட்டைக் குழந்தைகளுக்கு சிறிகாந்தன் என்றும் சிறிரஞ்சன் என்றும் பெயரிட்டிருந்தனர்;. சிறிரஞ்சன் சிறு வயதிலேயே சாவடைந்து விட்டான். சிறிகாந்தன் விடுதலை இயக்கத்தில் ஜெகன் என்ற பெயரில் இணைந்து கொண்டு அக்காச்சி என்ற பெயரில் மக்கள் தலைவனாக இருந்தான். அக்காச்சி பள்ளியில் படிக்கும் காலத்தில் விளையாட்டுக் போட்டிகளிலும் கராட்டிப் பயிற்சிகளிலும் குதிரையேற்றப் பயிற்சிகளிலும் மிகுந்த ஆர்வமுள்ளவனாக இருந்தான்.

துடுப்பாட்டம், உதைபந்தாட்டம் ஆகிய வற்றோடு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கிளித்தட்டு விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக அக்காச்சி விளங்கினான். குதிரையேற்றப் பயிற்சிக்காக சிறுவயதில் ஒரு குதிரையை வளர்த்து வந்தான். சிறுவயதிலிருந்தே கீழ்ப்படிவு, நேர்மை, கண்ணியம், இரக்கம் சகிப்புத் தன்னை, கொடுத்த வேலைகளை திறம்படச் செய்யும் மனப்பான்மை என்பன இவனிடம் குடிகொண்டிருந்தன. ஒரு முறை ஈகைச்சுடர் திலீபனின் தந்தையார் இராசையா மாஸ்ரர் “உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாத வெள்ளையுள்ளம் அக்காச்சியின் உள்ளம்” என்று குறிப்பிட்டார்.

கப்டன் அக்காச்சி (சிவகுருநாதன் சிறிகாந்தன்) எப்படிப் போராளியானான்?

1983ஆம் ஆண்டு கலவரத்தின் எதிரொலிகள் எல்லோரையும் போல அக்காச்சியையும் பாதித்தது. இதனால் விடுதலை இயக்கத்தின் போரணியில் ஒர் உறுப்பினனாக இணைந்து கொண்டான். நீர்வேலியைச் சேர்ந்த கப்டன் கண்ணாடி ராஜனும்(இராஜதுரை ஜெயக்குமார்) இவனும் ஒரே நாளில் இயக்கத்தில் இணைந்து கொண்டனர். ‘அக்காய் ரீசேர்ட்’ அணிந்து கொண்டு நின்ற ஜெகனைக் கண்ட, மறைந்த கப்டன் பண்டிதர் “அக்காச்சி” என்ற பெயரை வைத்தார். அன்றிலிருந்து அப்பெயரே நிலைத்து நின்றுவிட்டது.

விடுதலை இயக்கத்தின் இரண்டாம் படைப்பிரிவில் படையப் பயிற்சியை முடித்துக் கொண்டு 1985ஆம் ஆண்டின் முற்பகுதியில் தாயகம் திரும்பிய அக்காச்சி அக்கால கட்டத்தில் விடுதலை இயக்கத்தினால் நடாத்தப்பட்ட பல தாக்குதல் நடவடிக்கைகளிலும், 1985 பெப்ரவரியில் இடம்பெற்ற கொக்கிளாய் படை முகாம் தாக்குதல், 1985 ஏப்ரல் மாதம் நடைபெற்ற யாழ்ப்பாணப் காவல்துறை நிலையத் தாக்குதல், 1985 மே மாதம் நடைபெற்ற மன்னார் காவல்துறை நிலையத் தாக்குதல் என்பவற்றில் பங்கேற்றான். யாழ். காவல்துறைநிலையத் தாக்குதலில் அக்காச்சி குருநகர் பாசையூர் பகுதிகளில் தாக்குதலுக்குத் தயார் நிலையில் நின்ற விடுதலைப் புலிகளுடன் இணைந்து குருநகர் படை முகாமைச் சேர்ந்தோர் வெளியேறி முன்னேறாதபடி தடுத்துக் கொண்டிருந்தான்.

1985ஆம் ஆண்டு நடுப்பகுதியில் யாழ். குடா நாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இதன் பின் நீர்வேலிப் பகுதிப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்ட அக்காச்சி ஸ்ரீலங்காப் படைகள் முகாமைவிட்டு வெளியேறாத படி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளில் பங்குபற்றினான். குறிப்பாக பலாலியிலிருந்த தரைப்படை – வான்படை கூட்டுத் தளத்திலருந்து படைகள் வெளியேற முயன்றபோது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பல எதிர்த் தாக்குதல்களில் அக்காச்சி பங்கேற்றான். நீர்வேலிப் பகுதியில் பொம்மர் குண்டுவீச்சு வானூர்திகள் குண்டுகளை வீசித் தாக்ககுதல் மேற் கொண்டபோது அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அக்காச்சி உதவி செய்தான். படை நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு நீர்வேலி கூட்டுறவுச் சங்கக் கட்டடமொன்றை ஒதுக்கிக் கொடுத்து அவர்கள் நலன்களைக் திறம்படக் கவனித்துக் கொண்டான். பல இடம்பெயர்ந்தோர் முகாம்களை அமைத்து மக்களைப் பாதுகாத்தான்.

119566282_724310601749889_6742501727907626468_n

மழையில் நனைந்து கொண்டு சென்று இடம்பெயர்ந்தவர்களிற்கு உதவிகள் செய்திருக்கிறான். விடுதலை இயக்கத்துடன் தொடர்பு கொண்டு உழைத்த பொது மக்களுக்கு தோள் கொடுத்து உதவியிருக்கிறான். வறுமையில் வாடிய மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களை அளிக்க பண்ணைகளை நிறுவினான். கிராமிய உழைப்பாளர்கள் சுரண்டியபோது அம்மக்களின் நேர்மையான ஊதியத்திற்காகவும் நேரப்படியான உழைப்பிற்காகவும் போர்கொடி தூக்கிப் போராடியவன் அக்காச்சி. ஏழைகளுக்கு கட்டுப்பாட்டு விலையில் பொருட்கள் கிடைக்க வேண்டுமென்பதற்காக தளபதி கிட்டுவின் அறிவுரையில் பல நேர்மை விலைக் கடைகளைத் திறந்தான்.

பொதுப்பணிகள்

தமிழ் இளைஞர்கள் ஒவ்வொருவரும் பொதுப்பணி செய்ய முன்வரவேண்டும் என அறிஞர் அண்ணாத்துரை ஒரு முறை குறிப்பிட்டார். விடுதலைப் போராளியாகவும், சமூக ஒழுங்கமைப்பவனாகவும் பொதுப் பணியாளனாகவும் விளங்கிய கப்டன் அக்காச்சியை மக்கள் தலைவனாக்கிய சிறப்புப் பரிமாணங்கள் அவனது யாதார்த்தமான செயற்பாடுகளேயாகும். சக விடுதலைப் போராளிகள் அக்காச்சியை ஏழைகளின் தொண்டன், மக்கள் தலைவன் என்று சுவையாக குறிப்பிடுவதுண்டு. படித்தவர்கள் பலர் புத்தகப் பூச்சிகளாகவே வாழ்நாளை வீண் நாளாக்கி மறையும் காலத்தில் கிராமத்தையே கலாசாலையாக்கி ஏழைகளையே தனது ஆசான்கiளாக்கி அக்காச்சி அனுபவக் கல்வியூடாக மக்கள் பணிசெய்யக் கற்றுக் கொண்டவை ஏராளம். அவையே அவனது முன்னேற்றப் பாதையின் படிக்கற்களாகும்.

அபிவிருத்தியென்பது சமூகத்தின் அடி மட்டத்திலிருந்து கட்டியெழுப்பப்பட வேண்டு என ஒர்சுலாக்கிக்ஸ் என்ற அறிஞர் குறிப்பிட்டார். அபிவிருத்தியில் பல்வேறு பரிணாமங்களை சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்ப விரும்பிய கப்டன் அக்காச்சி, கீழ் மட்டத்தில் வாழும் மக்களுக்கு அடிப்படைக் கல்வியறிவைப் போதிக்க விரும்பி அதற்கான திட்டங்களை முதலில் வகுத்துக் கொண்டான்.

கல்விப் பணிகள்

“அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” இப்படி மகாகவி பாரதியார் பாடினார். கப்டன் அக்காச்சியின் கல்விப் பணிகளும் பாரதி பாடலின் தாற்பரியத்தை வெளிப்படுத்துவனவாகவே அமைந்திருந்தன.

நீர்வேலி பல பொருளாதார கட்டுமானங்களைக் கொண்ட மக்கள் வாழும் பகுதியாகும். பொருளாதார வசதி படைத்த செல்வந்தர்களும் மிக ஏழைகளும் இங்கே வாழ்கிறார்கள். முற்றிலும் கிராமப் புறம் சார்ந்த ஒரு பகுதிப் பொறுப்பாளனாக பொறுப்பேற்றுக் கொண்ட அக்காச்சி இப் பகுதியில் வாழும் வசதி குறைந்த குழந்தைகளுக்கு கல்வியூட்ட விரும்பி பல பகுதிகளில் மழலைகள் பாடசாலைகளை உருவாக்கினான். புத்தூர் வாதரவத்தையில் இரண்டு மழலைகள் பாடசாலைகளை திறந்து வைத்தான். நீர்வேலி கந்தசாமி கோயில் அருகில் ஓர் மழலைகள் பாடசாலையை உருக்கினான்.

இதைவிட இடைநிலைக் கல்வி கற்கும் மாணவர்களது வசதி கருதி அக்காச்சி கட்டணமற்ற வகுப்புக்களை தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நடத்தினார். அக்காச்சி அச்செழுவில் நூலகம் ஒன்றை அமைத்திருந்தான். வெளிநாட்டு விடுதலைப் போராட்டங்கள் பற்றி அபூர்வமான நூல்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன.

தனது போராளிகளை அரசியல் அறிஞர்களாக வளர்த்து எழுப்பதில் அவன் அதிக நாட்டமுடையவனாக இருந்தான். அந் நூலகத்தில் அருந்த நூல்களையெல்லாம் 1987 ஒக்ரோபர் – நவம்பர் மாத காலத்தில் அந்நிய ஆக்கிரமிப்பு அள்ளிக் கொண்டு சென்று நீர்வேலி – மாசுவன் சந்தியில் போட்டுத் தீயிட்டது. யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டபோது அதனைக் கண்டித்த இந்தியா தனது வல்வளைப்புப் படைகள் மூலம் ஈழத்தின் பல பகுதிகளிலிருந்த நூலகங்களைத் தீக்கிரையாக்கி ‘வரலாற்று பெருமை’ யைப் பெற்றுக் கொண்டது.

மதிய உணவு

தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படும் திட்டமும் இலங்கை அரசின் மாணவர் மதிய உணவுத் திட்டமும் அறிமுகப்படுத்தப்படு முன்னரேயே கப்டன் அக்காச்சி பாலர்களிற்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தான். இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் அரசியல் நோக்குடன் இத்திட்டம் அடுத்த தேர்தலை நோக்காக் கொண்டே மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அடுத்த சந்ததின் வளமான வாழ்வுக்காக அக்காச்சி இத்திட்டத்தை அறிமுகம் செய்தான். நீர்வேலி கந்தசுவாமி கோயில் அருகில் அமைக்கப்பட்ட பாடசாலை அபிவிருத்திக்காக காலஞ்சென்ற மக்கள் கலைஞர் வி.எம்.குகராஜா அவர்கள் தயாரித்த “மனிதனும் மிருகமும்” என்ற நாடகத்தை அரங்கேற்றி அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு பாடசாலைக்கான சுற்றுமதில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தான். பாடசாலை காலையிலும் மாலை வேளையிலும் இலவசமாக இருநேர உணவு வழங்க ஏற்பாடு செய்தான். பொருளாதார வசதியுடையவர்களை அணுகி அவர்கள் மூலமாக தளபாட வசதிகளைப் இப் பாடசாலைக்குச் செய்த கொடுத்தான்.

நீர்வேலி வீரபத்திரர் கோயில் அருகில் ஈகைச்சுடர் திலீபன் நினைவு ஒரு நூலகத்தை அமைத்த அக்காச்சி, அக் கட்டடித்திற்குத் தேவையான சீமெந்து கற்களை தனது சொந்த வீட்டிலிருந்தே எடுத்து வந்து பயன்படுத்தினான். ஏழை மக்கள் மதுப்பழக்கத்திற்கு இலக்காகி சீரழியாமல் தடுக்க விரும்பிய அக்காச்சி கசிப்பு ஒழிப்பு நாடக மூலம் பரப்புரை செய்தான். கசிப்பு ஒழிப்பு நேரடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டான்.

தூய்மைப்படுத்தல் பணி

அக்காச்சி தான் பொறுப்பாளராகவிருந்த நீர்வேலிப் பகுதியில் காலத்திற்குக் காலம் பல தூய்மையாக்கல் பணிகளைச் செய்து வந்தான். இப் பணிகளில் போராளிகளும் பொது மக்களும் இணைந்து பங்கேற்றார்கள். நீர் வழங்கல் வசதி குறைந்த இடங்களில் குளங்களைத் திருத்தும் வேலைகளை அக்காச்சி செய்து வந்தான். அந்த வகையில் நீர்வேலிப் பகுதியிலுள்ள நடுவத்தாள், கிராஞ்சி போன்ற குளங்களின் திருத்த வேலைப் பணிகள் கப்டன் அக்காச்சியால் மேற்கொள்ளப்பட்டவையாகும். அக்காச்சி இரக்கம் மிக்க போராளி என்ற முறையில் வரட்சிக் காலத்தில் மேய்ச்சலுக்காக செல்லும் கால் நடைகளும் இக்குளங்களில் நீர் பருக வேண்டும் என்பது அவனது ஆசையாக இருந்தது. வாதரவத்தைப் பகுதியில் கல்வி வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் அயராது உழைத்த அக்காச்சி இப் பகுதியில் குடிநீர்ப் பிரச்சினையை தீர்கும் முகமாக வாகரவத்தையில் பெரியபொக்கணைக்கும் வீரவாணிக்கும் இடையில் வாழ்ந்த மக்கள் நலன் கருதி தண்ணீர் வசதிகளைச் செய்து கொடுத்தான்.

மக்கள் மத்தியில் ஏற்பட்ட பிணக்குகளை மனச்சாட்சியின் படி இயற்கை நீதிக் கோட்பாட்டைப் பின்பற்றி தீர்த்து வைத்தான். காணிப் பிரச்சினைகளை அவன் அணுகிய விதமும் தீர்த்து வைத்த முறையும் பலரது பாராட்டுதல்களையும் பெற்றது.

“ஒப்பரேஷன் லிபரேஷன்”

1987இல் சிறிலங்கா அரசு வடமராட்சி மீது தொடுத்த ஒப்பரேஷன் லிபரேஷன் படை நடவடிக்கைக்கு எதிரான யுத்தத்தில் அக்காச்சி பங்குபற்றினான். சிறிலங்கா படைகள் எனது பகுதிக்குள் நுழைய முயன்றால் எல்லையில் வைத்து மோதுவேன், என் உடலைத் தாண்டி வந்தே அவர்கள் எனது பகுதிக்குள் நுழையலாம் என சபதம் எடுத்துச் செயற்பட்டான். வடமராட்சி சென்று பலதாக்குதல்களில் பங்குபற்றிவிட்டு பொது மக்களுக்கு உதவியும் செய்துவிட்டே அக்காச்சி மீண்டும் வந்தான்.

இந்திய படையினருடன் ஏற்பட்ட மோதல்

இந்திய படைகள் 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் விடுதலைப் புலிகளுடன் மீது போர் தொடுத்தது. யாழ்ப்பாணம் டச்சுக் கோட்டையில் இருந்து ஒரு பிரிவினர் வெளியேற முயன்று கொண்டிருந்த அதே வேளையில் வேறு படைப் பிரிவினர் பலாலி வீதி, காங்கேசன்துறை. வீதி, கண்டி வீதி வழியாக யாழ்ப்பாண நகரை நோக்கி முன்னேற முயன்று கொண்டிருந்தனர். கைதடி – கோப்பாய் வீதி வழியாக கோப்பாய்ச் சந்திக்க வரமுயன்ற இந்திய படையினரை அந்த இடத்தை நோக்கி நகரவிடாமல் பதினொரு நாட்கள் அக்காச்சியின் அணி தடுத்து நிறுத்தி வைத்துக்கொண்டது.

கடுமையான போர் இடம்பெற்றது. பலத்த எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றன. சமர்க் களத்தில் நின்ற இந்திய போர் வீரர்களிற்கு உணவு கொண்டு வந்த இந்திய உலங்குவானூர்திகள் மீது விடுதலைப் புலிகள் தொடுத்த தாக்குதலால் அவை உணவுப் பொட்டலங்களை நாவற்குழி தரவகை; காட்டுப்பகுதியில் போட்டுவிட்டு ஓடித்தப்பி தலைமறைவாயின. இந்த கடுமையான போரில் கோப்பாய் சந்திக்கு வரமுடியாத நிலையில் நின்ற இந்திய படைகளின் ஒரு பிரிவை அக்காச்சியின் அணி தடுத்து நிறுத்தி வைத்துக் கொண்ட நிலையில் இன்னுமொரு இந்தியப் படைப்பிரிவு மறுபக்கத்தால் உரும்பிராய் கிருஷ்ணன் கோயிலடிக்கு வந்து வாழைத் தோட்டங்களுக்கூடாக நீர்வேலி வெங்காயக் கூட்டுறவுச் சங்கமருகில் வந்தது. கொமாண்டோ மோட்டார் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியவாறும், போர் டாங்கிகளுடன் கோப்பாய்ச் சந்திக்கு இந்திய படைகண் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கே சென்றடைந்தது. இந்திய படை நடவடிக்கைளின் போது நீர்வேலிப்பகுதியில் அதிக உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏற்படாமல் அக்காச்சியே ஏற்ற நடவடிக்கைகளையெடுத்து தனது திறமையால் கிராமத்தைக் காப்பாற்றினான் என இப்பகுதி மக்கள் நினைவு கூர்ந்து கொள்கிறார்கள்.

வேறும் பல தாக்குதல்கள்

1987 அக்டோபர் தொடக்கம் 1988 மார்ச் வரையுள்ள காலப்பகுதியில் நீர்வேலிப் பகுதியில் இந்திய படையினருடன் பல சண்டைகளில் அக்காச்சி பங்கேற்றான். இந்தத் தாக்குதல்களில் பலவும் தற்காப்பு நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்டவையாகும். அதாவது 1987 டிசம்பர் மாதத்தின் பின்னர் நீர்வேலி, அச்செழுப் பகுதிகளில் போராளிகளைத் தேடி இந்திய படைகள் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களை உடைத்து அவர்களது தேடுதல் வேட்டைகளை நிறுத்திய பின் அக்காச்சி அங்கிருந்து தப்பி பிறிதொரு பகுதிக்குள் நுழைந்தான். இந்த சுற்றி வளைப்பின் போது காயப்பட்ட மன்னாரைச் சேர்ந்த பெண் போராளி சகிலா சயனைட் உட்கொண்டு ஈகைச் சாவடைந்தார்.

பொதுமகன் காப்பாற்றல்

1988 முற்பகுதியில் ஒரு நாள் அச்செழு பகுதிக்கு வந்த இந்திய படையினர் பற்றை மறைவுகளின் பின்னால் படுத்துக் கொண்டு போராளிகளது வாருகைக்காகக் காத்துக் கிடந்தனர். முக்கிய போராளிகளான லெப்டினன்ட் கேணல் இம்ரான், கப்டன் நேரு, அக்காச்சி இப்படியாக பல போராளிகள் அங்கே தங்கியிருந்தனர். அதிகாலை ஆகையால் மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் படையினரின் நடமாட்டம் பற்றிய தகவல் அன்றைய நாள் போராளிகளுக்குக் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பொதுமகன் ஒருவர் மீன் வலைகளைத் தன் தோளில் போட்டுக் கொண்டு வந்து படையினர் நடமாட்டம் பற்றிய தகவலைக் கொடுத்து போராளிகளைக் காப்பாற்றினார். தலைவர் பிரபாகரன் கூறியது போல “நாம் கடக்க வேண்டியது நெருப்பாறு என்பது எமக்குத் தெரியும். ஆனால், அதனைக் கடக்க மக்கள் ஆதரவு எனும் கவசம் எம்மிடம் உண்டு” என்ற கூற்றை இச் சம்பவம் நினைவு படுத்துவதாக அமைந்தது.

வன்னியில் அக்காச்சி

1988 மார்ச் மாதம் தொடக்கம் 1989 தை மாதம் வரை அக்காச்சி வன்னிப் பகுதியில் இந்திய படையினருடன் பல மோதல்களில் ஈடுபட்டான். காலத்திற்குக் காலம் பல்வேறு சங்கேத மொழிகளில் இந்திய படையினர் மீது விடுதலைப் புலிகள் மீது தொடுத்த தாக்குதல்களின் இந்திய படை ஒவ்வொரு தடவையும் பலத்த இழப்புக்களைச் சந்தித்துக் கொண்டது. போராட்டத் தலைமையையும் போராட்டத்தையும் இக் கால கட்டத்தில் காப்பாற்றுவதில் வன்னிப் பகுதி வகித்த பங்கு வரலாற்றுச் சிறப்புடையது. பாரிய இழப்புக்களை இந்திய படைகள் அடைந்ததோடு, பெரும் ஈகத்தை செய்து வரலாற்றுக் கடமையை விடுதலைப் புலிகள் நிறைவேற்ற வன்னியின் இயற்கை அரணுடன் மக்களும் உறுதுணையாயினர். முல்லைத்தீவுப் பகுதியில் நின்று போரில் ஈடுபட்ட அக்காச்சியிடம் வன்னி அனுபவங்கள் பற்றிக் கேட்டபோது, ஒரு நாள் அடர்த்தியான காட்டில் பொழுது இருண்ட வேளையில், ஒரு இளம்புலி தனது கையிலிருந்த துப்பாக்கியால் இரண்டு தடவைகள் சுட்டான். மறுநாள் காலையில் இந்திய வானொலி அந்த இடத்தைக் குறிப்பிட்டு அந்த இடத்தில் இரண்டு படையினர் சொன்னது. தலைவர் அந்த இளம் போராளியை அழைத்துப் பாராட்டினார். அதனை என்னால் மறக்க முடியாது என்று அக்காச்சி பதில் சொன்னான்.

மீண்டும் அக்காச்சி

சில மாதங்களை வன்னியில் கழித்துவிட்டு மீண்டும் 1989 தை மாதமளவில் அக்காச்சி குடா நாட்டிற்குள் வந்தான். இக்காலத்தில் அக்காச்சியும் அவனது தோழர்களும் கெரில்லா வாழ்க்கையே மேற்கொண்டனர். வீதிகளைக் கடக்கும் போது அல்லது தனது ஆதரவாளர்களைச் சந்திக்க வரும்போது எதிர்பாராமல் இந்திய படையினரைச் சந்திக் நேரிட்டால் மோதல்கள் ஏற்படுவதுண்டு.

இவ்வாறான மோதல்களில் பெரும் இழப்புக்களோடு இந்திய படை முகாம் திரும்பிய ஒரு மோதல் 17.05.1989 அன்று நீர்வேலிப் பகுதியில் நிகழ்ந்தது. இதேபோல் 30.05.1989 அன்று அக்காச்சியும் சிவநேசன் என்ற இன்னொரு போராளியும் எதிரும் புதிருமாக இந்திய படையினரைச் சந்தித்தபோது பெரும் மோதல் ஒன்று நிகழ்ந்தது. இந்த மோதலின் போது கப்டன் நேரு, லெப்.குட்டி ஆகியோரும் இந்தியப் படையினருடன் மோதினர். நீர்வெலி – அச்செழு வீதியில் நிகழ்ந்த இந்த மோதலில் எல்லோரும் சுற்றி வளைப்பை உடைத்து வெளியேறினர். ஆனால் போராளி சிவநேசன் நேருக்கு நேர் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவடைந்தான்.

இதே போன்ற பிறிதொரு மோதல் 8.8.1989 அன்று பருத்தித்துறை வீதியில் சிறுப்பிட்டிக்கு அருகே ஏற்பட்டது. இந்த மோதலில் கப்டன் ஒருவன் உட்பட இரண்டு இந்திய படையினர் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் அக்காச்சி முக்கிய பங்கு வகித்தான். இந்த மோதல் நிகழ்ந்த மறுநாள் காலை 7:15 மணிக்கு ஆகாசவாணி டில்லி தமிழ்ச் செய்தியில் இந்த மோதல் பற்றிக் குறிப்பிட்டு அக்காச்சி தலைமையிலான குழுவே இந்த மோதலில் ஈடுபட்டது என்று தெரிவித்தது.

சுவையான சம்பவங்கள்

1987 ஒக்டோபர் தொடக்கம் 1989 செப்ரம்பர் வரை ஏறத் தாழ இரண்டு ஆண்டுகளில் அக்காச்சி கரந்துறை வாழ்வில் பல சுவையான சம்பவங்கள் நிகழ்நதன. 1987 டிசெம்பர் மாதம் ஒருநாள் அக்காச்சி இராஜ வீதி வழியாக வந்துகொண்டிருந்தான். இந்திய படையினர் வீதியில் நின்று வீதியாற் செல்வோரை வழிமறித்து விசாரிப்பதும் அவர்களைச் சோதனையிடுவதுமாக நின்றனர்.எதிரும் புதிருமாக அந்த வீதி வழியாக வந்த அக்காச்சி படையினரைக் கண்டவுடன் பதட்டமடையாமால் வாழைத் தோட்டம் ஒன்றுக்குள் இறங்கினான். மறு மக்கமாக சீக்கிய இனப்படையாள் வருவதைக் கண்ட அக்காச்சி அந்தத் தோட்டத்திலே நின்று வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவரின் கையில் தனது சேட்டைக் கழற்றிக் கொடுத்து விட்டு அந்த விவசாயியின் சவுக்கத்தை(சால்வை)யை வாங்கி தலைப்பா கட்டிக் கொண்டு அந்த விவசாயின் மாட்டை மேய்த்துக் கட்டுவதுபோல் சாய்த்துக் கொண்டு சென்று அப்பால் உள்ள மரம் ஒன்றில் கட்டிவிட்டுத் தலைமறைவானான்.

இதேபோல் இந்திய படைகள் நூற்றுக் கணக்கில் ஒரு கிராமத்தைச் சுற்றி வளைத்த போது ஒரு வீட்டின் தண்ணீர்த் தாங்கி ஒன்றினுள் ஏறி அக்காச்சியும் அவனது தோழர்களும் படுத்துக் கொண்டனர். நீண்ட நேரமாகியும் படையினர் அகல்வதாக இல்லை. திடீரென தண்ணீத் தாங்கி அருகில் இருந்த பப்பாசி மரம் அசைந்தது. திகைப்படைந்த அக்காச்சி எட்டிப் பார்த்தான். அந்த வீட்டுக்காரர் பப்பாசிமரம் மரம் வழியாக ஏறி தண்ணீர்த் தாங்கி அருகில் வந்து “இந்தாங்கோ ஜூஸ் கரைச்சுக் கொண்டு வந்தனான்” என்று கொடுத்துவிட்டு மரத்தில் இருந்து இறங்கிச் சென்றார்.
இதேபோல் பிறிதொரு இடத்தில் அக்காச்சியும் அவனது நண்பர்களும் ஒரு சுற்றிவளைப்பின் போது தண்ணீர்த் தாங்கி ஒன்றினுள் ஒளிந்து கொண்டனர். ஏணி வழியாக ஏறி மேலே வந்த அந்த வீட்டின் ஐந்து வயதுச் சிறுவன் தானும் அக்காச்சியோடு தண்ணீர்த் தாங்கியினுள் ஒளிந்து கொள்ளவேண்டும் என்று அடம்பிடித்தான். உடனே அக்காச்சி “நீ போகாவிட்டால் அடிப்பேன்” என்று அதட்டிக் கூறினான். உடனே அந்தச் சிறுவன் “அண்ணை இப்ப அடிப்பியளோ? அல்லது ஆமி போனப்பிறகு அடிப்பியளோ?” என்று வினா எழுப்பினான்.

இதேபோல் அக்காச்சியும் அவனது தோழர்களும் ஒரு வீட்டிற்கு மதிய உணவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். அந்த வீட்டிற்குள் நுழைந்த அக்காச்சி குழுவினர் “எம்மைப் போல் இன்னும் இரண்டு நண்பர்கள் இங்கோ சாப்பிட வருவார்கள்” என்று கூறிவிட்டு உள்ளே இருந்த தமது வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர். திடீரென அங்கு வந்த அந்த வீட்டுக்கார அம்மா, “தம்பியவை, இரண்டுபேர் படலேலை வந்து நிக்கினம். ஒருவர் தாடியும் தலைப்பாகையுமாக நிற்கிறார், மற்றவர் ஆமி உடுப்புப் போட்டிருக்கிறார். அவையளைக் கூட்டிக் கொண்டு வரட்டோ” என்றார். வெளியே அக்காச்சி எட்டிப் பார்த்தான். படலையில் ஒரு சீக்கியனும் அவனுக்குதவியாக ஒரு ஒட்டுக்குழு உறுப்பினரும் நின்றனர்.

இப்படியாகப் பல சுவையான சம்பவங்களையெல்லாம். தனது கெரில்லா வாழ்க்கையின் போதுதான் சந்திக்க நேரிட்டது என்று அக்காச்சி தனது நண்பர்களுக்குக் கூறி தானும் சேர்ந்து சிரிப்பான். அக்காச்சியின் வசீகரமான அந்த முகத்தில் அடிக்கடி உதிரும் புன்னகை ஆயிரம் பொருட்களைக் கொண்டது. அவனது அந்தப் புன்னகையில் எம்மை மறந்து எமது கவலைகளை மறந்து மகிழ்சியடைந்த நாட்கள் எத்தனை எத்தனை.

மக்கள் காப்பாற்றல்

ஒரு நாள், 1989 ஆகஸ்ட் மாதமளவில், அக்காச்சியும் அவனது நண்பர்களும் கப்புது என்ற கிராமத்தில் தங்கியிருந்தனர். கிராமத்தை 800க்கு மேற்பட்ட இந்தியச் படையினர் சுற்றிவளைத்துக் கொண்டனர். வீடுவீடாகத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சாதாரண மக்களைக் கொண்ட அந்தக் கிராமம் அக்காச்சியையும் அவனது தோழர்களையும் காப்பாற்றியது. இந்தக் கிராம மக்கள் நீண்ட காலமாகவே போராளிகளுக்கு உறுதுணையாக இருந்து வருபவர்கள்.
இன்னும் ஒரு சம்பவம் மறக்க முடியாதது.

1987 ஜூலை 5ஆம் திகதி மில்லர் இலங்கை இராணுவம் தங்கியிருந்த நெல்லியடி மத்திய கல்லூரி முகாம் மீது தாக்குதலைத் தொடுக்க முன்னர் தயாரிப்பு வேலைகளை முடித்துக் கொண்டு இக் கிராமத்துக்குள் சென்றான். கப்டன் மில்லர் எடுத்துச் சென்ற அந்த ஊரை்தி இலங்கை படையினரின் கண்களில் படாதபடி அந்தப் பெரிய ஊர்தி இலைகுழைகளில் மூடி மறைத்து உருமறைப்புச் செய்து உதவியவர்கள் இந்தப் பகுதி மக்கள் தான் என்று ஈகைச்சுடர் திலீபன் பெருமையோடு கூறுவார். மில்லரின் அந்தத் தாக்குதல் தமிழர் வரலாற்றில் ஒரு திருப்பு முனைக்கு வழிவகுத்தது.

கடைசித் தாக்குதல்

ஓட்டுமடம் என்ற இடத்தில் கூடாரமடித்து தேசத்துரோகச் செயல்களில் ஈடுபட்டிருந்த ஈ.என்.டி.எல்.எப். என்ற ஒட்டுக் கும்பல் 15.09.1989 அன்று ஈகைச்சுடர் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு மக்களை கொடுமைப்படுத்தியது. நிகழ்ச்சிகளைக் குழப்பும் நோக்குடன் நீர்வேலிக்கு ஹைஎஸ் ரக ஊர்தி ஒன்றைக் கடத்திக் கொண்டு வந்தார்கள். திலீபனின் நினைவு வணக்க பதாகை ஒட்டிய மதனா என்ற இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டான். இவற்றையெல்லாம் கேள்வியுற்ற அக்காச்சி நீர்வேலிச் சந்தியில் நின்ற தேசவிரோதிகளை நோக்கி சக போராளிகளோடு விரைந்தான். அங்கே பெரும் மோதல் ஒன்று தொடங்கிய. தேசத் துரோகிகள் தாம் கடந்தி வந்த வானையும் விட்டுவிட்டு நீர்வேலி தரவைப் பாதையூடாக ஓட்டம் பிடித்தனர். சண்டையில் பல துரோகிகள் மாண்டுபோயினர். ஒருவன் உயிருடன் பிடிபட்டான். தற்செயலாக நீர்வேலி கண்ணாடித் தொழிற்சாலைக்குச் சென்ற அக்காச்சி மீது அங்கு ஒளிந்திருந்த கோழையொருவன் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மார்பினில் குண்டேந்தி அக்காச்சி வீரச்சாவை அணைத்துக் கொண்டான்.

நீர்வேலியில் பிறந்து நீர்வேலியில் கல்வி கற்று நீர்வேலிப் பகுதிப் பொறுப்பாளனாக இருந்து நீர்வேலியில் வீரச்சாவடைந்த அக்கச்சியின் வாழ்வு விடுதலைக்குப் போராடும் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாகவுள்ளது. அவன் செய்த சேவையின் நினைவுச் சின்னங்களாக நீர்வேலிப் பகுதியில் காணப்படும் கட்டங்களாக மிளிர்கின்றன. இவனது ஒன்றுவிட்ட சகோதரர் பல தடவை தன்னுடன் வெளிநாடு வருமாறு அழைத்தும் அங்கு செல்ல மறுத்து விட்டான். இவன் வீரச்சாவடைவதற்கு இரண்டு நாட்களிற்கு முன்னரும் இவ்வாறான வேண்டுகோளை அவர் அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியைக் கொண்டு வந்தவரிடம் அக்காச்சி பின்வருமாறு சொன்னான் “நான் செய்யும் பணிகளை வேறு ஒருவரைக் கொண்டு நிறைவு செய்ய முடியுமாயின் தான் வருவேன். அதுவரை நான் வரமாட்டேன்.” இந்த ஆணித்தரமான பதில் வெறும் மேனி மினுக்கு வார்ததைகளல்ல, அது ஒரு உறுதியான வீரனின் வெளிப்பாடு என்பதில் சந்தேகமில்லை.

ஈழம் ரஞ்சன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.