Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
இளையராஜா, சென்னை ஐ.ஐ.டி

பட மூலாதாரம்,IIT MADRAS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 21 மே 2024
    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னையில் உள்ள ஐ.ஐ.டி (இந்தியத் தொழில்நுட்பக் கழகம்) முதல் முறையாக இசைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சியைத் துவங்கியுள்ளது. இதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவுடன் அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த முயற்சியின் மூலம் இசையையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கப் போகிறோம் என்கிறார் ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி.

சென்னை ஐ.ஐ.டி வளாகத்துக்குள் அமையும் 'மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மைய'த்துக்கு இளையராஜா நேற்று மாலை (மே 20) அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, “மொசார்டுக்கு பிறகு 200 ஆண்டுகளாக உலகம் மற்றொரு மொசார்ட்டை உருவாக்கவில்லை. இந்த ஆராய்ச்சி மையத்திலிருந்து 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும். ஒருவனுக்கு தண்ணீர் கொடுக்காதே, தாகம் கொடு, தண்ணீரை அவன் தேடிக்கொள்வான். இசைகற்க கிராமத்திலிருந்து சென்னைக்கு கிளம்பி வந்த போது எனது அம்மா எனக்கு நான்கு ரூபாய் கொடுத்து அனுப்பினார். இசை என் மூச்சானது. நான் சாதித்ததாக கூறுகிறார்கள், ஆனால் இப்போதும் அந்த கிராமத்திலிருந்து கிளம்பி வந்த சிறுவன் போலவே உணர்கிறேன்,” என்று பேசினார்.

இந்த முயற்சி நாடு முழுவதுமே கவனத்தை ஈர்த்துள்ளது, அதேசமயம் தொழில்நுட்பம் சார்ந்த ஐ.ஐ.டி படிப்புகளில் இசையமைப்பாளர் பெயரிலான ஆராய்ச்சி மையம் என்ன செய்ய முடியும் என்ற ஆர்வமும் எழுந்துள்ளது.

இளையராஜா, சென்னை ஐ.ஐ.டி

பட மூலாதாரம்,IIT MADRAS

படக்குறிப்பு, முழு நேர பாடப்பிரிவை நடத்த முடியாவிட்டாலும், இளையராஜா அவர்கள் மிக நெருக்கமாக ஐ.ஐ.டி-யுடன் பணியாற்றுவார்  
இளையராஜா, சென்னை ஐ.ஐ.டி

பட மூலாதாரம்,IIT MADRAS

படக்குறிப்பு, 'மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மைய'த்துக்கு இளையராஜா நேற்று மாலை (மே 20) அடிக்கல் நாட்டினார்

'அனைவருக்குமான இசை'

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்தப் புதிய வளாகத்தின் நோக்கம் ‘அனைவருக்குமான இசை’ என்று கூறப்படுகிறது. இந்த மையம், மனிதனுக்கும் இசைக்குமான தொடர்பை அறிவியல் பூர்வமாக தெரிந்து கொள்ள பயன்படும், இந்த ஆராய்ச்சி மையத்தின் மூலம் இசை தொடர்பான படிப்புகளும், இசைக் கருவிகளை வடிவமைத்து ஆராயும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று சென்னை ஐ.ஐ.டி கூறுகிறது.

இது தொடர்பாக ஐ.ஐ.டி இயக்குநர் டாக்டர். வி காமகோடி பிபிசி தமிழுடன் பேசுகையில், “சென்னை ஐ.ஐ.டி-யில் தொழில்நுட்பப் படிப்புகளைத் தாண்டிப் பிற கலைகளுக்கும் இடமுண்டு. வளாகத்தில் கலை நிகழ்வுகள் பல நடைபெறுகின்றன. இசைக்குழுக்கள் உள்ளன. ஆர்வமுள்ள மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் திறன்களை வெளிப்படுத்துகிறார்கள்,” என்றார்.

 
இளையராஜா, சென்னை ஐ.ஐ.டி
படக்குறிப்பு,சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் வி.காமகோடி

செயற்கைத் நுண்ணறிவில் சங்கீதம்

இந்த இசை ஆராய்ச்சி மையத்தில், “புதிய இசைக்கருவிகளை உருவாக்குவது, மின்னணு இசைக்கருவிகளை (சிந்தசைசர் - synthesiser) பயன்படுத்தி புதுமைகள் படைப்பது, இசையை ஆழமாகப் புரிந்து கொள்வது, மேள வாத்திய த்வனிகளை உருவாக்க மென்பொருள் எழுதுதல் என தொழில்நுட்பத்தின் தாக்கம் இசையின் மீதும், இசையின் தாக்கம் தொழில்நுட்பத்தின் மீதும் எவ்வாறு உள்ளது என ஆராய விரும்பினோம்,” என்கிறார் காமகோடி.

இந்தத் துறையில் தற்போது ஆர்வம் அதிகரித்து வருவதால் புதிதாக ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கியதாகவும் வரும் நாட்களில் கர்நாடக இசைக் கச்சேரியில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது பற்றியெல்லாம் ஆராய முடியும் என்றும் சொல்கிறார் அவர்.

“இதற்கான தீர்வுகள் எளிதல்ல, நாங்கள் இது குறித்து மிகத் தீவிரமாக யோசித்த போது, வழக்கமான முறையில் இசை கற்றுத் தருவது இது போன்ற ஆராய்ச்சிக்கு உதவாது என்று உணர்ந்தோம். அதன் அடிப்படையில் இப்போது புதிய மையம் உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.

 
இளையராஜா, சென்னை ஐ.ஐ.டி

பட மூலாதாரம்,ILAYARAJA / INSTAGRAM

இளையராஜா ஏன் தேர்வு செய்யப்பட்டார்?

கல்வியை ஜனநாயகப்படுத்தும் நோக்கில், 'அனைவருக்கும் ஐ.ஐ.டி' என்ற பெயரில் சென்னை ஐ.ஐ.டி பல புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்த மையமும் துவங்கப்பட்டுள்ளது என்கிறார் காமகோடி.

அவர் மேலும் பேசுகையில், “இப்படி ஒரு முயற்சிக்காக இசையமைப்பாளர் இளையராஜாவை நான் நேரில் சந்தித்த போது அவர் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தினார். இளையராஜா, எந்தவித இசைப் பயிற்சியும் இல்லாமல் இசையமைக்கத் தொடங்கினார். அவரது இசைப் பயணத்தில் பல வியக்கத்தக்கப் பாடல்களை வழங்கியுள்ளார். சாஸ்த்ரிய சங்கீதத்தை கிராமப்புற பாடல்களுடன் இணைத்து சாதாரண மக்களிடம் கொண்டு சென்றார். மேற்கத்திய இசை, சூஃபி பாடல்கள் ஆகியவற்றுடன் இணைத்து இசையமைத்துள்ளார் இளையராஜா. எனவே அவர் இந்த ஆராய்ச்சி மையத்துக்கு வழிகாட்டுவது மிகவும் பொருத்தமானது,” என்று குறிப்பிட்டார்.

 

பாடத்திட்டம் இன்னும் இறுதியாகவில்லை

இசை தொடர்பான இந்தப் புதிய படிப்பு மாற்றங்களுக்கு ஆளாகி வருவதாக ஐ.ஐ.டி தெரிவிக்கிறது. உடனடியாக பட்டப்படிப்பு உருவாக்கப்படவில்லை. பாடத்திட்டத்தை படிப்படியாக மெருகூட்டி, இந்த ஆராய்ச்சி மையத்தில், சான்றிதழ் படிப்புகள் வருங்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்கிறது ஐ.ஐ.டி.

இந்தத் துறையில் பட்டப்படிப்பு உருவாக்குவது படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்கிறார்கள். எதிர் காலத்தில் பாடத்திட்டங்களை வளர்த்தெடுக்கும்போது, இசைக்கான புதிய, நவீன கருவிகளை உருவாக்குதல், இசை ஸ்வரங்களை ஒன்றாக கலப்பது (synthesising of notes), மேலும், புதிதாக வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் இசையில் புதுமைகள் உருவாக்குதல், அதே போல மனிதர்களின் மனநலனுக்கு எப்படி இசை உதவியாக உள்ளது என்பதெல்லாம் ஆராயப்படும். அதே போல நாட்டுப்புறப் பாடல்கள் பற்றியும், தொன்மையான இசைக் கோர்ப்புகள் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்படும் என ஐ.ஐ.டி நிர்வாகம் தெரிவிக்கிறது.

இசையமைப்பாளர் இளையராஜா, தன்னை போன்று பல இசையமைப்பாளர்களை கண்டறிந்து உருவாக்க வேண்டும் என விரும்புகிறார். அதே போல புதிய இசைக்கருவிகளை உருவாக்கும் முயற்சியில் சென்னை ஐ.ஐ.டி சில காலமாகவே முயற்சிகளை எடுத்து வருகிறது. புதிய இந்த மையத்தில் அந்த இரண்டு விருப்பங்களும் இணைகின்றன என்று ஐ.ஐ.டி நிர்வாகம் தெரிவிக்கிறது.

 
இளையராஜா, சென்னை ஐ.ஐ.டி

பட மூலாதாரம்,IIT MADRAS

இளையராஜா முழுநேரம் வழிநடத்துவாரா?

“ஒரு நேர்த்தியான கமகம் (கர்நாடக இசை ஒலிகள்) எவ்வாறு இசைக்கப்படுகிறது என்பதை இன்னும் சின்தசைஸ் செய்ய முடியவில்லை. அதைப் போலவே இசையின் மொழியை ஆராய்ந்து தெரிந்து கொள்ள இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன,” என காமகோடி தெரிவித்தார்.

இசை மாணவர் ராஜேந்திர பிரசாத் கூறுகையில், “அனுபவத்தில் இருந்து இசை கற்றுக் கொண்ட இசையமைப்பாளர் இளையராஜாவோடு இணைந்து இதுபோன்ற முயற்சிகள் நடப்பது இசையை ஜனநாயகப்படுத்தும். இந்த மையத்தில் செயல்படுத்தப்படும் பாடப்பிரிவின் நோக்கங்கள் என்ன? மாணவர் சேர்க்கைக்காக தகுதிகள் என்ன என்று அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம். இசையமைப்பாளர் இளையராஜாவிடமே கற்க முடியும் என்பது மகிழ்ச்சியான செய்திதான்,” என்று தெரிவித்தார்.

சென்னை ஐ.ஐ.டி-யில் அமையவிருக்கும் இந்த மையத்தில் முழு நேரப் பாடப்பிரிவை இளையராஜா வழிநடத்துவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஐ.ஐ.டி நிர்வாகம், “முழு நேர பாடப்பிரிவை நடத்த முடியாவிட்டாலும், இளையராஜா அவர்கள் மிக நெருக்கமாக ஐ.ஐ.டி-யுடன் பணியாற்றுவார், இந்த மையத்துக்கு தொடர்ந்து வழிகாட்டுவார். இந்த மையத்தில் பிற இசைக் கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றுவோம்,” என தெரிவித்துள்ளது.

 

'பாடல்கள் குறித்து இளையராஜா நேரடியாக விளக்குவார்'

இந்த மையத்தின் மூலம் இசை கற்றலை விரிவுபடுத்த முயல்வதாக சென்னை ஐ.ஐ.டி-யில் பொறியியல் வடிவமைப்புத் துறையின் பேராசிரியர் எம்.ராமநாதன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

“இயற்பியல், வேதியியல் ஆய்வகங்கள் இருப்பது போல் பள்ளிகளில் இசை ஆய்வகங்கள் அமைக்க வேண்டும். வயது வரம்பு இல்லாமல் யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளும் வகையிலான, மாணவர்களுக்கு ஏற்ற பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இன்னும் இரண்டு மாதங்களில் பயிற்சிப் பட்டறைகள் தொடங்கவுள்ளன. இளையராஜா அவரது குழுவினருடன் இணைந்து ஒரு பாடலை எப்படி இசையமைத்தார்கள் என்று நேரடியாக விளக்குவார்கள்,” என்றார்.

"இளையராஜாவின் பாடல்களை கேட்கும் போது மனதில் ஒருவித விவரிக்க முடியாத உணர்வு ஏற்படும். இசைக்கும் மனித உணர்வுகளுக்கு இருக்கும் தொடர்பு குறித்து கண்டிப்பாக ஆய்வு செய்யப்படும்," என்றார்.

 

'3டி பிரிண்டிங்' முறையில் இசைக் கருவிகள்

இளையராஜா, சென்னை ஐ.ஐ.டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இசைக்கருவிகளைத் தயாரிப்பதற்கான நேரத்தையும் செலவையும் குறைக்க 3டி தொழில்நுட்பம் கொண்டு அவற்றை அச்சிடலாம்

பல விதமான கலாச்சாரங்களை கொண்ட இந்தியாவில் நூற்றுக்கணக்கான இசைகருவிகள் உள்ளன. இவற்றில் பல இன்று அருங்காட்சியகத்தில் மட்டுமே காணப்படுகின்றன. அந்தக் கருவிகளின் வரலாறு, அவற்றின் வடிவமைப்பு பற்றிய ஆய்வுகள் நடைபெறும் என்கிறார் பேராசிரியர் எம்.ராமநாதன். “தமிழ்நாட்டின் யாழ் இன்று பயன்பாட்டில் இல்லை. இது போன்று பல கருவிகள் இந்தியா முழுவதும் இருந்தன, சிலவற்றின் பெயர் கூட நமக்கு தெரியாது,” என்கிறார்.

இசைக் கருவிகளைத் தயாரிப்பதையும் அவற்றை இசைக்கக் கற்றுக் கொள்வதையும் தொழில்நுட்பத்தைக் கொண்டு எளிமையாக்கலாம் என்கிறார் ராமநாதன். “எப்படி விமானம் ஓட்டுவதற்கு முன்பாக, flight simulator (உண்மையான விமானத்தை ஓட்டுவதை போன்ற மெய்நிகர் அனுபவத்தை தரக்கூடிய தொழில்நுட்பம்) பயன்படுத்துகிறார்களோ அதே போன்று வயலின் போன்ற கருவிகளை மெய்நிகர் அனுபவத்தில் இசைத்து பழகலாம். இசைக்கருவிகளைத் தயாரிப்பதற்கான நேரத்தையும் செலவையும் குறைக்க 3டி தொழில்நுட்பம் கொண்டு அவற்றை அச்சிடலாம். சோதனை முறையில் சென்னை ஐ.ஐ.டி-யில் வயலின் மற்றும் யுகலெலே ஆகிய இசைக்கருவிகளை 3டி பிரிண்டிங்க் முறையில் ஆச்சிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வு மையத்தின் மூலம் முற்றிலும் புதிதான இசைக்கருவிகளை படைப்பதற்கு வாய்ப்புண்டு,” என்கிறார்.

சென்னை ஐ.ஐ.டி-யில் விருப்பப் பாடங்களாக ‘இசைக் கருவிகளின் அறிவியல்’ மற்றும் ‘கர்நாடக இசைக்கான அறிமுகம்’ ஆகிய பாடங்கள் உள்ளன.

https://www.bbc.com/tamil/articles/c722ny1pyrqo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த நிகழ்வு சம்பந்தமாக எழுத்தாளர் சாருவிற்கு வந்திருந்த கேள்வி ஒன்றும், அவர் அவரது இணைய தளத்தில் அந்தக் கேள்விக்கு இட்டிருந்த பதிலும் கீழே உள்ளது.

**************************************************

நான் பாட்டுக்கு நான் உண்டு என் ஜோலி உண்டு என்று கிடக்கிறேன்.  ஆனாலும் சில நண்பர்கள் ’ஏன்டா சும்மா கிடக்கிறாய், எழுந்து ஆடு’ என்கிறார்கள்.  ஏற்கனவே அந்த நண்பரிடம் ’எனக்கு எதுவும் எழுதாதீர்கள்’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.  ஆனாலும் அவர் கேட்பது இல்லை.  என் மேலும் தப்பு இருக்கிறது.  கடிதத்தைப் பார்த்து அதைக் குப்பையில் போட்டுவிட்டுப் போக வேண்டியதுதானே? அதுதான் நம்மிடம் இல்லை.  அப்படி இருந்திருந்தால் எப்போதோ உருப்பட்டிருப்பேனே? 

Kamakoti, The Director of IIT belongs to a family of Vedic Brahmins from Sri Sankara Math Kancheepuram as the name itself shows.   He could have chosen a Sanjay Subramanian, but he chose Ilayaraja.

A befitting reply to T.M. Krishna.

V.  Balasubramanian.

இந்தக் கடிதத்தில் இருக்கும் அரசியலும், இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் காரியத்தில் உள்ள அரசியலும்தான் நான் இந்தக் கட்டுரையை எழுதக் காரணம். 

பிராமண சாதியுடன் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் பிராமணர்கள் என்னை பிராமண வெறுப்பாளன் என்கிறார்கள்.  முஸ்லிம்கள் என்னை ஹிந்துத்துவா என்றும், பிராமண அடிவருடி என்றும் சொல்கிறார்கள்.  ஹிந்துத்துவர்கள் என்னை இஸ்லாமியச் சார்பாளன் என்கிறார்கள்.  கம்யூனிஸ்டுகள் என்னை செக்ஸ் எழுத்தாளன் என்கிறார்கள்.  ஆக மொத்தத்தில் நான் எல்லோராலும் வெறுக்கப்படுகின்றவனாக இருக்கிறேன். 

(சமீபத்தில் கூட கர்னாடக சங்கீதத்தின் சே குவேராவாகிய டி.எம். கிருஷ்ணா விருது வாங்கியபோது அவரை விமர்சித்து எழுதினேன்.  அப்போது எல்லா பெரியாரியவாதிகளும் என்னை ஹிந்துத்துவா என்று திட்டினார்கள்.)

காரணம் என்னவென்றால், நான் எப்போதுமே ஒரே கட்சியைச் சார்ந்தவனாக இருப்பதில்லை.  எந்தெந்தப் பிரச்சினைக்கு எப்படி எப்படி எதிர்வினை ஆற்ற வேண்டுமோ, அப்படி அப்படி நிலைப்பாடு எடுப்பதால்தான் மேலே கண்ட குழப்படியான புரிதல்கள் உண்டாகின்றன.  உதாரணமாக, ஜம்மு கஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து இருக்கக் கூடாது, எல்லா மாநிலமும் சமம்தான் என்ற நிலைப்பாடு உள்ளவன் நான்.  இதை எழுதினால் நான் ஹிந்துத்துவா.  இந்தியாவில் கலாச்சாரத் தளத்தில் ஆதிக்கம் செலுத்துவது பிராமணர்கள் என்பது என் அபிப்பிராயம்.  இதை எழுதினால் நான் பிராமண எதிர்ப்பாளன். 

அந்த அர்த்தத்தில் பார்த்தால் இப்போது எழுதப் போகும் கட்டுரையை பிராமணர்கள் கடுமையான பிராமண வெறுப்பைக் கக்கும் கட்டுரை என்று கருதலாம். அப்படி நினைப்பவர்களுக்கு ஒரு விஷயம்.  நான் என் குருநாதர்களில் ஒருவராகக் கருதுபவர் மஹா பெரியவர் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். 

இப்போதைய மெட்ராஸ் ஐஐடி இயக்குனர் காமகோடி காஞ்சி காமகோடி மடத்துக்கு நெருங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.   இந்த ஐஐடி ஒரு சஞ்சய் சுப்ரமணியத்தின் பேரால் இல்லாமல் இளையராஜாவின் பெயரால் ஒரு இசை மையத்தைத் தொடங்கியிருக்கிறது.  (IITM – Maestro Ilaiyaraaja Centre For Music Learning & Research)

ஐஐடி ஏன் இளையராஜாவின் பெயரால் இசை மையத்தைத் தொடங்கியது என்றால், இளையராஜா ஒரு தலித் என்பதால் அல்ல.  அவர் தலித் சமூகத்தில் பிறந்து பிறகு தன் வாழ்முறையால் பிராமணராக மாறியவர் என்பதால்.  ஆனால் சஞ்சய் சுப்ரமணியம் பிறவியிலேயே பிராமணர். அவரை விட தலித்தாகப் பிறந்து பிறகு பிராமணராக மாறியவர் முக்கியம் இல்லையா?  செம்மங்குடி சீனிவாச அய்யரின் மரியாதையைப் பெற்ற இசைக் கலைஞர் இளையராஜா என்பதன் காரணம் என்ன?  இளையராஜா பிராமணராக மாறி விட்டார் என்பதுதான்.

அது மட்டும் அல்ல.  தன்னை தலித் என்று குறிப்பிடுபவர்கள் மீது வழக்குத் தொடுக்கும் வழக்கம் உள்ளவர் இளையராஜா.  புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த கே.ஏ. குணசேகரன் இளையராஜா பற்றி ஒரு நாமாவளிப் புத்தகம் எழுதியிருக்கிறார்.  அதில் இளையராஜாவை தலித் என்று குறிப்பிட்டு விட்டதற்காக குணசேகரன் மீது வழக்குத் தொடுத்து அவரை புதுச்சேரியிலிருந்து சென்னை நீதிமன்றத்துக்குப் பல முறை இழுக்கடித்தவர் இளையராஜா.

இப்படி தனது எல்லா செயல்பாடுகளிலும் தன் தலித் அடையாளத்தை மறுதலித்து, பிராமண மதிப்பீடுகளை உயர்த்திப் பிடிப்பவர் இளையராஜா.    

நான் சந்தித்த நூற்றுக்கணக்கான பிராமணர்களும் இளையராஜா என்ற பெயரைக் கேட்டதுமே கைகால் நடுங்க, ரோமாஞ்சனம் துலங்க கண் கலங்குவதன் காரணம், இளையராஜாவின் இசை அல்ல.  அவரது பிராமண மதிப்பீடுகள்தான். அவர் எழுதி இசையமைத்த ரமண மாலை அவரது பிராமண வாழ்வுக்கு மற்றொரு உதாரணம்.   இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். 

இளையராஜா மட்டும் தனக்குப் பிடித்த உணவு பீஃப் பிரியாணி என்று சொல்லிப் பார்க்கட்டும்.  எல்லா பிராமணர்களும் அவரிடமிருந்து விலகி விடுவார்கள்.  இதே காரணத்தினால்தான் பிராமண சமூகம் ரஜினியை ஆதரிக்கிறது; கமல்ஹாசனை வெறுக்கிறது.  ஏனென்றால், கமல் எல்லா இடங்களிலும் பிராமண மதிப்பீடுகளை விமர்சிக்கிறார்.  சமயங்களில் இகழ்கிறார்.  பார்ப்பான் என்கிறார்.  நான் பெரியாரிஸ்ட் என்கிறார்.  நான் நாத்திகன் என்கிறார்.  அதனால்தான் பிராமணர்களுக்கு கமலைப் பிடிப்பதில்லை, ரஜினியைப் பிடிக்கிறது. ரஜினியின் ஆன்மீகம், ராகவேந்திரா பக்தி எல்லாமும் பிராமண மதிப்பீடுகளோடு இணைத்துக் காணப்பட வேண்டியதுதான்.

கற்பனை செய்து பாருங்கள்.  இளையராஜாவும் பா. ரஞ்சித் போல சிகையலங்காரம் செய்து கொண்டு, தன்னுடைய எல்லா செயல்பாடுகளிலும் தலித் அடையாளத்தை முன்னிறுத்தியபடி இருந்தால் பிராமணர்கள் இளையராஜாவைக் கொண்டாடுவார்களா?  இளையராஜாவை பிராமணர்கள் கொண்டாடுவதன் காரணம், பிராமணர்கள் தாங்கள் இழந்து விட்ட மதிப்பீடுகளை இளையராஜா ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதுதான். 

பிராமணர்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் குடியேறி விட்டார்கள்.  ஒரே காரணம்.  டாலர்.  இப்போது அவர்களின் பேரப் பிள்ளைகள் அமெரிக்கப் பள்ளிகளில் மாட்டுக் கறி தின்கிறார்கள்.  அதை பிராமணர்களால் தடுக்க முடியாது.  அதன் காரணமாகவே, மாட்டுக் கறியை நிராகரித்து விட்டு, நெற்றியில் குங்குமப்பொட்டுடன் ரமண மாலை பாடிக் கொண்டிருக்கும் இளையராஜாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது பிராமண சமூகம்.  அதனால்தான் இளையராஜாவின் பெயரால் ஐஐடியில் இசை மையம் திறக்கிறார் காஞ்சி சங்கர மடத்துக்கு நெருங்கிய குடும்பத்தைச் சேர்ந்த திரு. காமகோடி.    

இதே காரணத்தினால்தான் இதற்கு முன்பு அப்துல் கலாமையும் கொண்டாடித் தீர்த்தது பிராமண சமூகம்.  அப்துல் கலாமும் இளையராஜாவைப் போலவே பிராமண மதிப்பீடுகளை ஏற்று, ஒரு பிராமணனைப் போலவே வாழ்ந்தவர் – முக்கியமாக, சைவ உணவுக்காரர் – என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். 

என் கேள்வி என்னவென்றால், இளையராஜா கைலியைக் கட்டிக்கொண்டு, எனக்குப் பிடித்த உணவு பீஃப் பிரியாணி என்றும், பிடித்த பானம் சாராயம், கஞ்சா என்றும் சொன்னால் ஐஐடி இயக்குனர் திரு. காமகோடி இளையராஜாவின் பெயரால் ஐஐடியில் இசை மையம் அமைப்பாரா?

இதில் மற்றொரு பிரச்சினை என்னவென்றால், தமிழ்நாட்டில் மிகவும் உயர்ந்த இடத்தில் இருக்கும் கல்வி நிறுவனமான ஐஐடி இம்மாநிலத்தையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் லும்பன் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாக ஆகி விட்டதுதான்.  தியாகராஜரின் பஞ்சரத்னா கீர்த்தனைகள் உலகப் புகழ் பெற்றவை.  ஆனால் அதை விட உலகப் புகழ் பெற்றவை இசைஞானியின் பஞ்ச ரத்னா கீர்த்தனைகள் என்று நினைத்துவிட்டது மெட்ராஸ் ஐஐடி என்பது இந்த நிலத்தின் துரதிர்ஷ்டங்களில் ஒன்று.  இசைஞானியின் பஞ்சரத்னா:      

மச்சானைப் பாத்தீங்களா மலவாழத் தோப்புக்குள்ளே…

நேத்து ராத்திரி யம்மா…

நெலா அது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…

குருவி கொடஞ்ச கொய்யாப் பழம் கொண்டு வந்து தரவா? 

இந்த சாகாவரம் பெற்ற பஞ்ச ரத்னா கீர்த்தனைகளுக்காகத்தான் ஐஐடி இயக்குனர் திரு காமகோடி இளையராஜா பெயரில் இசை மையம் ஆரம்பித்திருக்கிறாரா?  அதே காரணத்தினால்தான், ”கடந்த இருநூறு ஆண்டுகளாக மொஸார்ட் போன்ற ஒரு இசைக் கலைஞர் தோன்றவில்லை.  இந்த இசை நிறுவனத்தின் மூலம் இருநூறு இளையராஜாக்கள் தோன்ற வேண்டும்” என்று இளையராஜாவே திருவாய் மலர்ந்திருக்கிறார் போலும்! 

மொஸார்ட்டையும் தன்னையும் ஒப்பிட்டுக் கொள்ளும் ஒரு மௌடீகத்தை உலகத்தில் வேறு எங்குமே காண முடியாது என்பது ஒரு பக்கம் இருக்க, இளையராஜா இதுவரை இசைக்குச் செய்தது என்ன?  பல நூறு குப்பைப் படங்களுக்கு இசை அமைத்ததுதானே?  மணி ரத்னம், கமல்ஹாசன் ஆகிய இருவரைத் தவிர இளையராஜா வேறு என்ன தரமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்?  தமிழ் சினிமா என்ன உலக சினிமா அரங்கில் பெயர் பெற்றிருக்கிறதா?  மலையாளம், வங்காளம், கன்னடம், மராத்தி, ஹிந்தி போன்ற மொழிகளாவது உலக சினிமா அரங்கில் தங்கள் இருப்பை நிறுவியிருக்கின்றன.  அதிலும் சத்யஜித் ரே, ரித்விக் கட்டக் ஆகிய இருவர் மூலம் உலகம் முழுவதிலும் மகத்தான இடத்தைப் பெற்றிருக்கிறது வங்காள சினிமா.  ஆனால் தமிழ் சினிமாவோ உலக அரங்கில் வெறும் கேலிப் பொருளாகத்தானே கருதப்படுகிறது? 

கடந்த இருநூறு ஆண்டுகளில் மொஸார்ட் போன்ற ஒரு இசை மேதை தோன்றாமல் இருக்கலாம்.  ஆனால் இளையராஜா இங்கே வேலை செய்து கொண்டிருக்கும் அதே சினிமாத் துறையில்தான் ஹாலிவுட்டில் Philip Glass, Hans Zimmer போன்ற மேதைகள் தோன்றியிருக்கிறார்கள்.  The Hours என்று ஒரு படம்.  ஃபிலிப் க்ளாஸ் இசையமைத்தது.  அப்படி ஒரு இசையை இளையராஜா தான் இசையமைத்த ஒரு படத்திலாவது கொடுத்திருக்கிறாரா?  அதற்கான ஒரு படம் அவருக்குக் கிடைத்திருக்கிறதா?  The Hours மாதிரி ஒரு படம் தமிழில் வந்திருக்கிறதா?  அதேபோல் இன்னொரு படம் Inception.  அதற்கு இசையமைத்தவர் ஹான்ஸ் ஸிம்மர்.  இளையராஜாவுக்கு இசை தெரியும்.  ஆனால் சினிமா தெரியுமா?  சினிமா தெரியாமல் சினிமாவுக்கு எப்படி இசையமைக்க முடியும்?  நல்ல சினிமா என்றால் என்ன என்று தெரிந்தால்தானே The Hours, Inception போன்ற படங்களைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியும்? அது புரிந்தால்தானே அதற்கேற்ற இசையைத் தர முடியும்?

அறிவுக்கான ஸ்தாபனங்களும் தமிழ்நாட்டின் லும்பன் கலாச்சாரத்துக்கு ஏற்ப தங்களைத் தரம் தாழ்த்திக் கொள்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.  இனிமேல் மெட்ராஸ் ஐஐடி நடிகர் விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுப்பது பற்றி யோசிக்கலாம்.

http://charuonline.com/blog/?p=14649
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இளையராஜா ஒரு சகாப்தம். அவர் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற பெருமிதம் எனக்கு இருக்கின்றது. அவரின் இசைச் சாதனைகள் அளப்பெரியது.

வார்த்தைகளும் பாடல் வரிகளும் இல்லாமல் இசை பயணம் செய்த படம்.

https://www.facebook.com/reel/1092014695210357

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவரின் பாடல்களை கேட்பது எனக்கு ஒரு பழக்கம், பின்னர் அதுவே ஒரு வழக்கமும் ஆகிவிட்டது. மற்றைய சில இசையமைப்பாளர்களின் பாடல்களையும் கேட்கின்றேன், ஆனால் இவரின் அளவிற்கு அல்ல.

ஆனால் இன்று பல் வேறு விதமான கருத்துகளையும் கேட்டு, கட்டுரைகளையும் வாசித்த பின், மனதில் கேள்விகள் எழுவதை தடுக்க முடியவில்லை. சாரு மட்டும் இல்லை, ரியாஸ் குரானா, அராத்து, இப்படி இன்னும் பலரும் விமர்சித்து எழுதியிருக்கின்றனர். என் நட்பு வட்டத்திலேயே இந்த துறையில் பரிச்சயமும், பாண்டித்தியமும் உள்ள சிலர் பொது வெளியில் உலவும் பிம்பத்தை உடைக்கும் விதமாகவே கருத்துகள் சொல்கின்றனர்.  



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.