Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு.

கப்டன் மயூரன் 
பாலசபாபதி தியாகராஜா 
தமிழீழம் (யாழ் மாவட்டம்)
தாய் மடியில் :01.11.1970
தாயக மடியில்:11.11.1993

எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான்.


அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். எனது இன்னொரு மகன் – கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். எனது மூத்த இரு பெண்பிள்ளைகளும் அதாவது அவனது மூத்தக்கா, இளையக்கா இருவரும் வெளிநாடு சென்று விட்டார்கள். அவனது சின்னக்கா பிரபாவும், பிரபாவின் கணவர் கணேசும், தங்கை பாமாவும்தான் வீட்டில் என்னுடன் இருந்தார்கள். பிரபாவுடனும் அத்தான் கணேசுடனும் பாமாவுடனும் அவன் ஒரே லூட்டிதான்.

வயிற்றில் அல்சர் இருப்பதால்தான் வைத்தியம் செய்வதற்காக ஒன்றரை மாத லீவில் வந்திருப்பதாகச் சொன்னான். வைத்தியசாலைக்குச் சென்று ஏதோ மருந்துகள் எடுத்து வருவான். ஆனால் சாப்பாட்டில் எந்த விதக் கட்டுப்பாட்டையும் கடைப் பிடிக்க மாட்டான்.

அவன் வந்திருக்கிறான் என்று அவனது பாடசாலைத் தோழர்களும் போராளித் தோழர்களும் மாறி மாறி வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் விரும்பிய உணவுகளைக் கேட்டுச் சமைப்பித்துச் சாப்பிடுவது, ஐஸ்கிறீம் பாருக்குச் சென்று ஐஸ்கிறீம் சாப்பிடுவது, சிற்றுண்டி வகைகளைக் கொறிப்பது….. தங்கையைச் சீண்டி விளையாடுவது என்று ஒன்றரை மாதமும் ஒரே கும்மாளமும் கலகலப்பும்தான் வீட்டில்.

என் பிள்ளை நீண்ட பொழுதுகளின் பின் என்னிடம் வந்திருக்கிறான். அவன் மனம் எந்த வகையிலும் நோகக்கூடாது. போனால் எப்போ வருவானோ தெரியாது. அவர்களது முகாமிற்குள் போய் விட்டால் எல்லாம் கட்டுப்பாடு தானே! என்று நினைத்து நான் என்னால் இயன்றவரை அவனது ஆசைகள் விருப்பங்கள் எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்தேன்.

அப்போதுதான் பிரபா(அவனது சின்னக்கா) திருமணமாகி ஏழு வருடங்களின் பின் கற்பமாகி இருந்தாள். அதையிட்டு அவன் மிகுந்த சந்தோசத்துடன் இருந்தான். மருமகனா..! மருமகளா..! என்று சதா ஆசையுடன் கேட்டுக் கொண்டே இருந்தான்.

இப்படியே ஆட்டமும் பாட்டமும் களிப்பும் கும்மாளமும் என்று ஒன்றரை மாதம் போன வேகமே தெரியவில்லை.

என் பிள்ளை மீண்டும் என்னை விட்டுப் போகும் நாளும் வந்து விட்டது.
அன்று 17.6.1993 – காலையே போக வேண்டும் என்று அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான். பாமா அவனது உடுப்புக்கள் எல்லாவற்றையும் அயர்ண் பண்ணி அடுக்கிக் கொடுத்தாள். அவனது பள்ளி நண்பர்களில் மூவர் எந்நேரமும் அவனுடன்தான் நின்றார்கள். படுக்கைக்கு மட்டுந்தான் தமது வீடுகளுக்குப் போய் வந்தார்கள்.

என் பிள்ளை போகப் போகிறான் என்றதும் எல்லோர் முகங்களிலும் கவலை. படிந்து போனது போன்ற துயர். வீட்டில் ஓரு விதமான மௌன நிலை. ஆனாலும் அவன் வருந்தக் கூடாது என்ற நினைப்பில் சோகம் கப்பிய சிரிப்புக்கள். வேலைகள்.

ஆனால் அன்று வாகனம் வரவில்லை. அவன் அன்று போக வில்லை என்றதும் எல்லோரிடமும் ஒரு தற்காலிகமான சந்தோசம்.

அடுத்த நாள் 18.6.1993 காலை அவனது அத்தான் கணேஸ் சோகத்துடன் – அவனிடம் விடை பெற்றுக் கொண்டு வேலைக்குச் சென்றார். திரும்பி வரும் போது அவன் நிற்க மாட்டான் என்பது அவருக்குத் தெரியும்.

பிரபா(அவனது சின்னக்கா) வேலைக்குப் போகும் போது “நான் மத்தியானம் வாற பொழுது நிற்பியோ? அல்லது போயிடுவியோ?” என்று கவலையோடு கேட்டாள். சோகம் கலந்த சிரிப்பொன்றுதான் அவனிடமிருந்து பதிலாகக் கிடைத்தது.

நான் அம்மா அல்லவா! என் சோகம் எல்லாவற்றையும் மறைத்து செய்ய வேண்டியவைகளை ஓடி ஓடிச் செய்து அவனுக்கும் நண்பர்களுக்கும் பன்னிரண்டு மணிக்குச் சாப்பாடு பரிமாறினேன். அதன் பின் வேறு இடத்தில் வாகனம் வருவதாக அவனுக்குச் செய்தி வர அவன் விடை பெற்றுச் சென்றான். அவனது நண்பர்கள் அவனை கூட்டிச் சென்று வாகனத்தில் ஏற்றி விட்டு தமது வீடுகளுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார்கள்.

இம்முறை என் பிள்ளையின் முகத்தில் வழமை போல இல்லாமல் ஏதோ ஒரு சோகம் அப்பி இருப்பது எனக்கு நன்றாகத் தெரிந்தது. அது ஏன் என்று புரியாமல் குழம்பினேன். ஆனாலும் எனக்குள்ளே இருந்த துயரத்தையோ நெருடல்களையோ நான் அவனுக்குக் காட்டவில்லை.

அவன் நின்ற ஒன்றரை மாதமும் இராப்பகல் பாராது ஓடியோடி எல்லாம் செய்த நான் – அவன் போனதும் – அதற்கு மேல் எதுவும் செய்யத் தோன்றாது அப்படியே கதிரையில் அமர்ந்து விட்டேன். எல்லாம் ஒரே மலைப்பாக இருந்தது. என் பிள்ளை போய் விட்டானா..? எல்லாம் பிரமையாக இருந்தது. அப்படியே நான் பிரமை பிடித்தவள் போல அந்தக் கதிரையில் ஒரு மணித்தியாலம் வரை இருந்திருப்பேன்.

என் பிள்ளை திரும்பி வருகிறான். ஏன்..? எனக்குச் சந்தோசமாயிருந்தது.
“என்னப்பு..! என்ன விசயம்?” என்று கேட்டேன்.

“வாகனம் இன்னும் சொன்ன இடத்துக்கு வரேல்லை அம்மா. அதுக்கிடையிலை உங்களை ஒருக்கால் பார்த்திட்டுப் போவம் எண்டு வந்தனான். உடனை போகோணும்.” என்றான். எனக்கு நெஞ்சுக்குள் என்னவோ செய்வது போலிருந்தது.

அதற்குள் அவனது சின்னக்காவும் வேலை முடிந்து நாலைந்து கறுத்தக் கொழும்பு மாம்பழங்களுடன் அரக்கப் பரக்க ஓடி வந்தாள்.
“உனக்கு மாம்பழம் எண்டால் எவ்வளவு ஆசை எண்டு எனக்குத் தெரியும். அதுதான் வேண்டிக் கொண்டு ஓடி வந்தனானடா.” என்று சொன்னாள். நான் மாம்பழத்தின் தோலைச் சீவி அவசரமாய் வெட்டிக் கொடுக்க என் பிள்ளை மிகவும் ஆசையாக ரசித்துச் சாப்பிட்டான்.

அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கவே வாகனம் எங்கள் வீட்டுக் கேற்றடிக்கு வந்து விட்டது. உடனே “பிரபாக்கா சுகத்தோடை பிள்ளையைப் பெத்தெடுங்கோ. மாமா வருவன் மருமகளைப் பார்க்க..” என்று சொல்லிக் கொண்டே அவசரமாய் விடை பெற்றுச் சென்றான்.

வாகனத்தில் ஏறி கை காட்டும் பொழுது அவன் முகத்தில் சோகம் அப்பியிருந்தது. என் கண்கள் குளமாகி விட்டது. என் கண்களில் நீர் வழிவதை அவன் கண்டால் கலங்குவானே என்பதால் என் கண்களைத் துடைக்காமலே திரையிட்ட கண்ணீரோடு கை காட்டினேன்.

எனக்கு அப்போது தெரியாது அன்று அப்போதுதான் என் பிள்ளையைக் கடைசியாகப் பார்க்கிறேன் என்பது.

பிரபாவின் குழந்தையைப் பார்க்க மிகவும் ஆசைப் பட்டான். கடற்புலி கேணல் தளபதி பாமா வந்து குழந்தையைப் பார்த்த போது சொன்னாள். “மயூரன் மணலாறு இதயபூமிச் சண்டைக்குப் போய் வெற்றியோடு திரும்பியிருக்கிறார். மருமகளைப் பார்க்கக் கட்டாயம் வருவார்.” என்று.

வருவான் வருவான் என்றுதான் காத்திருந்தோம். அவன் வரவே இல்லை.

பூநகரித் தவளைப் பாய்ச்சலுக்குச் சென்று விட்டான்.

11.11.1993 அன்று பூநகரித் தவளைப் பாய்ச்சலில் அவன் விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி பொருது நின்ற படையினருள் புயலாகிப் போனான் என்ற செய்தி 15.11.993 அன்றுதான் எனக்குக் கிடைத்தது.

விழுப்புண் பெற்ற அவன் வித்துடலைக் கூடக் காண வழியின்றிக் கலங்கி நின்றேன்.

அதன் பின் தான் உணர்ந்தேன் அப் பெரிய சமர்களுக்குப் போவதற்காகவே அவன் நீண்ட லீவில் என்னிடம் வந்து நின்றான் என்பதை. நீங்காத நினைவுகளை மட்டும் என் நெஞ்சோடு விட்டு விட்டு அவன் சென்று விட்டான்.
 

கப்டன் மயூரன் நினைவலைகள்…
kapdan-mayuran.jpg
 
கரும்புலியாய் செல்லவில்லை கரும்புலி போல் ஆகிவிட்டீர்.
 
அரச பயங்கரவாதத்தில் மக்கள் அடிபட்டுக் கொண்டிருக்க குட்டுப்பட்டு வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா, என்றெண்ணி கொட்டமடிக்கும் கூலிப்படைகளை வெட்டிச் சாய்க்க, திண்ணம் கொண்டான் மயூரன்.
 
பருத்தித்துறை ஆத்தியடியில், பாலசபாபதியாக அன்னை மடியில் முத்தாகச் சிரித்தவன், வாழும் வயதிலேயே மண்ணுக்கு வித்தாவான் என்று யாருமே நினைத்திருக்கவில்லை.
 
15 வயதான பின்னும் கூட தன் கட்டிலை விட்டு வந்து அம்மாவுடன் ஒட்டிக் கொண்டு படுத்திருப்பான். அக்காமார் என்ன கேட்டாலும் முகம் கோணாமல் அத்தனையும் ஓடி ஓடிச் செய்து கொடுப்பான். அக்காமாருக்கு மட்டுமா? ஆத்தியடியில் வயதான கிழவிகளுக்கெல்லாம் இவன் மகன் போல. உதவி செய்வதென்பது இவனோடு பிறந்த குணம்.
 
அண்ணன் மொறிஸ் களத்தில் நிற்கும் போதே, காட்லியின் கல்வியைக் கை விட்டு, 1987 இல் ஈழப்போர் இரண்டு என்னும் சகாப்தம் வெடிக்கையிலே வேங்கையாய் புறப்பட்டான் நாட்டைக் காக்க என்று.
 
இந்திய ஆக்கிரமிப்பு எகத்தாளமாய் நடக்க, ஈழத்து உயிர் மூச்சை இதயத்தில் சுமந்து கொண்டு தலைவர் பிரபாகரனின் அன்புக்குப் பாத்திரமானவனாய் காட்டிலே உயிர் வாழ்ந்தான்.
 
மன்னார், மண்கிண்டி என வீரக்கதை படித்து யாழ்தேவி நடவடிக்கையில் போராளிக் குழுவோடு நின்று பொருத்தமாய் போர் தொடுத்தான். இதய பூமி-1 இல் இறுக்கமாய் கால் பதித்து வெற்றியோடு திரும்பினான்.
 
திரும்பும் வழியில் வற்றாப்பளையில் வாழும் அண்ணன் தீட்சண்யனை (பிறேமராஜன்) காண ஆசை கொண்டு ஒருக்கால் சென்றான்.
 
அந்தக் கணங்களை ஒரு காலை இழந்த அவன் அண்ணன் தீட்சண்யன் இப்படிச் சொல்கிறார்.
 
கடைசிக் கணத்தில் உன் களத்துப் புலிகளுடன்
ஓருக்கால் வந்தாய்
நாம் கண்மூடி விழிக்க முன் கனவாய் சென்றாய்
தடியோடு நான் நடந்து கதவோரம் வந்து நிற்க
கையில் பெடியோடு உனது அண்ணி
கண் கலங்கப் பார்த்திருக்க
பார்த்தாயா…யா? புரியவில்லை
நினைவில் தெரியவில்லை.
தெருவோடு நீ ஓடி
துள்ளி அந்த வாகனத்தின் கூரையிலே பாய்ந்தேறி
குழுவோடு அமர்ந்ததைத்தான் நாம் பார்த்தோம்
கனவாக மறைந்து போனாய்
சும்மா பார்த்து விட்டுப் போக வந்தேன் என்றாய்
எம் கண்ணிலெல்லாம் காயாத
நீர் கோர்த்து விட்டுத் தானய்யா சென்றாய்.


இப்படி அண்ணனின் கண்ணில் நீர் கோர்த்து விட்டுச் சென்றவன் நேரே பூநகரிக் களத்தை நோக்கித்தான் சென்றான். போகும் வழியில் பாசம் அவனை பாடு படுத்தியதோ…? நண்பன் சிட்டுவை(மாவீரன்) அழைத்து ஆத்தியடிக்கு அம்மாவிடம் போய், அக்கா அவர்களிடம் இருந்து கடிதங்கள் வந்திருக்கும். வாங்கி வா என்று அனுப்பினான். பின்னர் களத்தில் நின்று கொண்டும் அவன் சிட்டுவை மீண்டும் பலமுறை அனுப்பினான். கடைசி முறையாக சிட்டு மயூரனின் அம்மாவிடம் சென்ற போது, மயூரனின் தங்கை மகிழ்வோடு கடிதத்தைக் கொடுத்து விட்டாள். ஆனால் சிட்டு கடிதத்துடன் மயூரனிடம் சென்றபோது மயூரன் என்ற தீபம் அணைந்து விட்டது. மயூரன் மண்ணுக்கு வித்தாகி விட்டான்.

மயூரன் 11.11.1993 அன்று சைபர் படைக்குத் தலைமை தாங்கிச் சென்று பூநகரிக் களத்தின் காற்றிலே கலந்து விட்ட செய்தியை தாங்கி வந்த சிட்டு அதை எப்படி அம்மாவிடம் சொல்வதென்று தெரியாமல் தயங்கித் தவித்து கலங்கிச் கொன்ன போது ஆத்தியடியே ஒரு முறை உயிர்வலிக்க அழுதது.

மயூரனை இழந்து தவித்த அண்ணன் தீட்சண்யன் நினைவில்…
 

விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி
பொருதி நின்ற படையினருள் புயலாகிப் போனாயென
விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்கையிலே
பூநகரிக் காட்சி எங்கள் கண்ணில் நிழலாடுதையா
தலைவன் வளர்த்த மணிவிளக்காய் நீ அங்கு
தலைகள் சிதறடித்து தானை துடைத்தெறிந்த
கதைகள் பல இங்கு காதில் அடிபடுது
ஆனாலும் மயூரா உன்
உடலைக் காணவில்லையடா
விழுப்புண்கள் பெற்ற உன் வித்துடலை காண்பதற்கு
விதி எமக்கு இல்லையடா-அதனால்தான்
உதிரம் கொதிக்கிறது உடலம் பதைக்கிறது
சடலம் என்ற பெயர் உனக்கு இல்லையடா
பொன்னுடல் மின்னிடுடும் படம் வந்த ஊர்தியில்
கண்ணிலே ஒற்றி நாம் மாலை போட்டோம்
நிறை குடத்தோடு நின்று நாம் நினைவை மீட்டோம்
மொறிஸ் சோடு நீ சென்ற பாதையின் வழியில் நாம்
உடலோடு உதிரமாய் ஒன்றி வாழ்வோம்
உயிரையே உருக்கி நாம் வேள்வி காண்போம்

- தீட்சண்யன்..

மயூரனின் நண்பர்களின் நினைவில்…
 

களத்திலே புலியாகப் பாய்ந்திட்ட வேளையில்
கரும்புலியாய் செல்லவில்லை கரும்புலிபோல் ஆகிவிட்டீர்
களத்தினிலே பாய்ந்த போது கண்டபின் நாம் காணவில்லை
வளமான நெல்வயல் சூழ் நைய்தல் நில எல்லையிலே
எதிரியின் வேட்டுக்களை ஏந்தி விட்டாய் மார்பினிலே
என்றுன்னை நினைக்க மாட்டோம் எரியாகி எரிந்து விட்டாய்
எரிமலையாகி வெடித்து விட்டாய்
நண்பனே! வள்ளலாகி விட்டாய் மயூரா!
உன் பாதம் அடிச்சுவடு உன்னாடை பாதுகை
உன் துப்பாக்கி இனி எங்கள் கையிலே
உன் நினைவுகள் துணையாகும் எம் பாதையிலே………

..நண்பர்கள்...
 

மயூரனின் தங்கையின் நினைவில் (பாமா)

 

அன்று சிட்டு அண்ணா வந்த போது, நான் முதல் நாள் சின்னண்ணாவுக்குக் (மயூரன்) கொடுத்து விட்ட கடிதத்துக்குப் பதில் கடிதம் கொண்டு வந்திருக்கிறார் என்று நினைத்து சந்தோஷப் பட்டேன். ஆனால் சிட்டு அண்ணா நான் எழுதிக் கொடுத்து விட்ட அந்தக் கடிதத்தை எனக்கு முன்னாலேயே சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தார். எனக்குச் சரியான கோபமும் அழுகையும் வந்தது. சிட்டு அண்ணாவைத் திட்டினேன். அவர் ஒன்றும் பேசாமல் கூட வந்த நண்பருடன் திரும்பிப் போய் விட்டார். அடுத்த நாள் நடுச்சாமம் 12 மணிக்கு மீண்டும் அவர் எமது வீட்டுக்கு வந்த போது நான் அவரிடம் முகம் கொடுத்துப் பேசாமல் கோபமாய் இருந்தேன்.


அப்போதுதான் துயரம் தோய்ந்த அந்த செய்தியை, என் அன்பு அண்ணா, களத்தில் காவியமாகி விட்டான் என்ற செய்தியை சிட்டு அண்ணா அழுதழுது சொன்னார்.

1.11.1970 இல் பிறந்து 11.11.1993 அன்று நடை பெற்ற பூநகரிப் பெருந்தளச் சமரில்-தவளைப் பாய்ச்சலில்-வெற்றி பெற்றுத் தந்து விட்டு உறங்கிப் போய் விட்டான் மயூரன்.
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.