Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி

Featured Replies

ஈழப்பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி.

http://www.dravidar.org/krbook/1.pdf

இணைப்பு மூலம்: திராவிடர்

விடுதலை க. இராசேந்திரன் எழுதிய ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி

அந்த மர்ம மனிதர்

எம்.கே. நாராயணன்! அவர்தான் தமிழ்நாட்டில் உளவுத் துறையை பின்னணியில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் மர்ம மனிதராக, அதிகார வட்டாரங்களில் பேசப்படுபவர். தமிழ் ஈழத்தில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து, மிகப் பெரும் யுத்தத்துக்கு, சிறீலங்கா அரசு தயாராகி வரும் நிலையில், இந்தியாவின் உளவு நிறுவனங்கள் தமிழ்நாட்டில், தங்களது திரைமறைவுப் பணிகளை வேகம் வேகமாக முடுக்கி விட்டு வருவது பளிச்சென்று தெரிகிறது.

பல்லாயிரக்கணக்கான அகதிகள் சிங்கள ராணுவத்தின் கொடூரத் தாக்குதலிலிருந்து தப்பி, குடும்பம் குடும்பமாக தமிழகம் நோக்கி அகதிகளாக ஓடி வருகிறார்கள். இந்திய கடலோரக் காவல்படை - இந்திய கப்பல் படை மற்றும் உளவுத் துறையின் மிரட்டல் கெடுபிடிகளுக்கு அஞ்சி, அகதிகளை பெரும் பொருட் செலவில் ஏற்றி வரும் படகோட்டிகள் சில தீவுகளில் இறக்கிவிட்டு திரும்பி வருகின்றனர். தீவுகளில் பட்டினிக்கு உள்ளாகி, மரணத்தோடு போராடி ராமேசுவரம் கடற்கரையை இந்த அகதிகள் வந்து சேரும் துயரங்கள் ஏடுகளில் அன்றாட செய்தியாகி விட்டன. பலர் பிணங்களாகிவிடுகிறார்கள். இந்த அகதிகளுக்கு மனிதாபிமானத் தோடு உதவுவதற்கு, இந்தியாவின் கப்பல்படைகளும், உளவு நிறுவனங்களும் தயாராக இல்லை. சிங்களக் கப்பல் படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு பிணமாகிக் கொண்டிருக்கும் மீனவர்களைக் காப்பாற்றும் முனைப்பான தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயாராக இல்லை. மாறாக - சிங்கள ராணுவம் நடத்திவரும் போரில், அந்த ராணுவத்துக்கு வலிமை சேர்க்கும் மறைமுக முயற்சிகளில் இந்த அமைப்புகள் தீவிரமாக களமிறங்கியிருப்பதாகவே தெரிகிறது. எப்படி?

அலுமினிய குண்டுகள், அலுமினிய பால்ரசுகள் தயாரிப் போர் தமிழகம் முழுதும் சுற்றி வளைத்துக் கைது செய்யப்படுகிறார்கள். விடுதலைப்புலிகளுக்கு, ஆயுதம் தயாரிக்கவே இவைகள் அனுப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டு, தேசப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் சிறைப்படுத்தப்படுகின்றனர். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்க வேண்டிய அவசியமின்றியே ஓராண்டு வரை உள்ளே வைக்க ஆட்சியாளர்களுக்கு உதவக்கூடிய ஆள் தூக்கிச் சட்டம் தான், தேசப் பாதுகாப்பு சட்டம்!

தமிழ்நாடு மீண்டும் விடுதலைப்புலிகளின் தளமாகி விட்டதைப்போல் பொய்யான ஒரு தோற்றத்தை உருவாக்கி, தமிழர்களை அச்சுறுத்தி, அவர்களை ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவிடாமல், வாயடைக்கச் செய்யவே இந்த சதி அரங்கேற்றப்படுகிறது.

இந்த செயல்பாடுகளை முடுக்கி விடும் ‘மூளை’க்கு சொந்தக் காரராக ஒருவர் செயல்படுவதாக - தமிழக காவல்துறையின் உயர் வட்டாரங்கள் கூறுகின்றன.

அவர்தான் எம்.கே. நாராயணன். பிரதமர் மன்மோகன் சிங்கின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் உளவுத் துறை அதிகாரி. 2005 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி அதுவரை இப்பதவியிலிருந்த ஜே.என் தீட்சத் மரணமடைந்தார். அடுத்த மூன்று வாரங்களில் ஜன.25, 2005 இல் மயன் கோத்தே கீயாத் நாராயணன் (எம்.கே. நாராயணன்) இப்பதவியில் அமர்த்தப்பட்டார். ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களின் போராட்டத்தை சீர்குலைக்க - கடந்த பல ஆண்டுகளாகவே செயல்பட்டு வரும் புதுடில்லி பார்ப்பன அதிகார மய்யத்தோடு நெருக்கமாக செயல்பட்டு வந்தவர் தான் இந்த அதிகாரி. அந்த ‘அனுபவங்கள்’ தான் இப்போது, பிரதமருக்கு ஆலோசகராக செயல்படும் பதவியை இவரிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

கொழும்பு ஊடகங்கள் -எம்.கே. நாராயணனை எப்போதுமே தங்கள் நேச சக்தியாகவே கருதி வருகின்றன. பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே.நாராயணன் வந்தவுடன், சிங்கள ஊடகங்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கின. இந்திய பார்ப்பன ஊடகங்களும் இலங்கைப் பிரச்சினையில் இவர் மிகவும் கைதேர்ந்தவர், சாதுர்யமானவர் என்று இவரைப் புகழ்கின்றன. ஆனால் அப்படி என்ன சாதனையை இவர் செய்து காட்டியுள்ளார் என்ற கேள்விக்கு, பதில் வராது. உண்மையான போராளிகளுக்கு எதிராக இருந்தாலே போதும் - இத்தகைய புகழ் மகுடங்கள் சூட்டப்பட்டு - அவர்கள், உயர் அதிகாரப் பதவிகளில் அமர்த்தப்பட்டு விடுகிறார்கள். இதுதான் இந்திய தேசியப் பார்ப்பன அதிகார அமைப்பின் இயங்குமுறை.

கடந்த பிப்ரவரி மாதம் ஆங்கில, சிங்கள கொழும்பு நாளேடுகள் எம்.கே. நாராயணனை புகழ்ந்து தள்ளி, அவரது உரை ஒன்றை பெரிய அளவில் வெளியிட்டன. 2007 பிப்.11 ஆம் தேதியில் 43 ஆவது மூனிச் சர்வதேச மாநாட்டில் பாதுகாப்பு கொள்கை பற்றி உரையாற்றிய அவர், தீவிரவாத இயக்கங்கள் எப்படி நிதி திரட்டுகின்றன என்று விவரித்தார். அப்போது விடுதலைப்புலிகள் நிதி திரட்டுவது பற்றி குறிப்பிடும்போது, விடுதலைப்புலிகள் போதை மருந்து விற்பனை மூலம் நிதி திரட்டுவதாக, ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்; ஆதாரம் ஏதுமற்ற ஒரு புகார். அப்படி ஏதாவது ஒரு இடத்தில் விடுதலைப்புலிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? அதற்காக அவர்கள் தண்டிக்கப்பட் டுள்ளார்களா என்று எவ்வித தரவுகளும் இன்றி, சர்வதேச மாநாடு ஒன்றில் - நாராயணன் பொறுப்பின்றி சுமத்திய அவதூறு இது. இதைத்தான் சிங்கள ஊடகங்கள் மகிழ்ச்சியோடு வெளியிட்டன.

தமிழ் ஈழத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதுடில்லியில் பல நாட்கள் தங்கி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கக் காத்துக் கிடந்தனர். இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகள் ஏதும் செய்யாது, தவிர்த்தார் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன். இலங்கை ராணுவம் தமிழர்களுக்கு எதிராக நடத்தும் படுகொலைகளை நேரில் எடுத்துச் சொல்வதே, அந்த மக்கள் பிரதிநிதிகளின் நோக்கம். இவர்கள் - விடுதலைப்புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்கள்கூட அல்ல. நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஆனால் கியுபாவில், ஹவானா நகரில் அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வந்தபோது, அங்கே, பிரதமருடன் இலங்கையில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ்தேவானந்தாவை - கியுபாவுக்கு வரச் சொல்லி, பிரதமர் மன்மோகன் சிங்குடன் சந்திக்க ஏற்பாடு செய்து தந்தவர், இந்த அதிகாரிதான்!

1985 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த படுகொலையில் நேரடி தொடர்பு கொண்டவர் டக்ளஸ் தேவானந்தா! சிறீலங்கா அரசுடன் கைகோர்த்துக் கொண்டு, போராடும் தமிழர்களுக்கு துரோகம் செய்து, பலரை படுகொலை செய்து, இறுதியில் சிங்கள அமைச்சரவையிலும் இடம் பெற்று விட்டார். நாடாளுமன்ற பிரநிதிகளை பிரதமருடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய மறுத்த எம்.கே.நாராயணன், தமிழ்நாட்டில் கொலை வழக்கில் தொடர்புடைய டக்ளசை புதுடில்லியில் சந்தித்துப் பேசியதோடு, ஹவானாவில் பிரதமர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்தார் என்பதிலிருந்தே - எம்.கே.நாராயணன் சிங்கள ஊடகங்களால் ஏன் போற்றி புகழப்படுகிறார் என்பதன் காரணம் புரிந்திருக்கும். (பிறகு - தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலையீட்டால், ஈழத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் பிரதமரை சந்தித்தனர் என்பது வேறு செய்தி.)

1987 ஆம் ஆண்டில் அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் ஒரு ஒப்பந்தத்தை செய்தனர். அந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்க வேண்டும் என்று இந்தியா கட்டாயப்படுத்தியது.

இந்த சதி வலையைப் பின்னிய அதிகார வட்டத்தில் - எம்.கே. நாராயணனுக்கும் முக்கிய பங்கு உண்டு.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், அவசர அவசரமாக ஈழத்திலிருந்து டெல்லிக்கு 1987 ஜூலை 23 ஆம் தேதி அழைக்கப்பட்டார். அப்போது இலங்கையில் இந்தியாவுக்கான தூதராக இருந்த ஜே.என்.தீட்சித் என்ற பார்ப்பனர், ஒப்பந்தத்தின் நகலை பிரபாகரனிடம் காட்டி அடுத்த இரண்டு மணி நேரத்துக் குள் ஒப்பந்தத்தை முழுமையாகப் படித்து, சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லையேல், விடுதலைப்புலிகளை ஊதித் தள்ளிவிடுவோம் என்றும், வாயில் ‘சிகாரை’ப் பற்ற வைத்துக் கொண்டே மிரட்டினார். அந்தச் சூழலில் ஜூலை 23 ஆம் தேதியிலிருந்து 25 ஆம் தேதி வரை பிரபாகரனுக்கு தொடர்ந்து அழுத்தம் தந்தவர் அன்றைக்கு புலனாய்வுத் துறையின் இயக்குநராக இருந்த இதே எம்.கே.நாராயணன் தான். மிரட்டல்களும், அழுத்தங்களும் பலிக்காமல் போனது வேறு சேதி! ஆனால் தமிழ் ஈழப் பிரச்சினை பற்றியோ, போராடும் இயக்கங்கள் பற்றியோ சரியான புரிதலோ, மதிப்பீடுகளோ இல்லாது, அவசர கோலத்தில் அதிகார வெறியில் அப்படி ஒரு ஒப்பந்தம் உருவாக்கக் காரணமாக இருந்தவர்களில் எம்.கே. நாராயணனும் ஒருவர். இத்தகைய அதிகாரிகள்தான், இலங்கைப் பிரச்சினையைக் கையாளுவதில் சமர்த்தர்களாக - பார்ப்பன-சிங்கள ஊடகங்களால் சித்தரிக்கப் படுகிறார்கள். ஜே.என்.தீட்சித் -எம்.கே. நாராயணன் என்ற இரட்டையர்கள் தான், ஈழத்துக்கு இந்திய ராணுவத்தை அனுப்புவதில் ‘மூளையாக’ இருந்து செயல்பட்டவர்கள் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். ‘சவுத் ஆசியா’ எனும் இணையதளத்தில் இதுபற்றி பல விரிவான ஆய்வுகள் வெளியிடப்பட்டன.

“1987 இல் ஈழத்துக்கு இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற கொள்கையை உருவாக்கியது. இரண்டு தனி மனிதர்கள்தான். அவர்கள் ஜெ.என். தீட்சித்தும், எம்.கே.நாரா யணனும் ஆவர்”

-என்று ‘சவுத் ஆசியா’ செய்தியாளர் சுதா ராமச்சந்திரன் தனது ஆய்வில் சுட்டிக் காட்டுகிறார்.

(How India’s Srilankan Policy will evolve under the new Government can be gleaned from examning the opinions of two individuals J.N. Dixit and M.K. Narayanan who are like; to play a Central role in crafting this policy i.e. the deployment of Indian troops in Srilanka)

தமிழ் மக்களைக் கொன்று குவித்து, தமிழ்ப் பெண்களை பாலியல் வன் முறைக்கு உள்ளாக்கி, சிங்கள ராணுவம் நடத்திய வெறியாட்டங்களை மிஞ்சுமளவுக்கு ராணுவ வேட்டை நடத்தியது. ‘இந்திய அமைதிப் படை’ கடைசியில் அவமானப்பட்டு வெளியேறியதுதான் நடந்தது. உலக அரங்கில் இந்தியாவின் முகத்தில் கரிப்பூசச் செய்த இந்த முடிவை எடுத்தவர்களில் ஒருவரான எம்.கே. நாராயணன் தான், இப்போதும் ஈழப் பிரச்சினைக்கு பிரதமரின் ஆலோசகர்.

‘டெகல்கா’ வார ஏட்டில் (ஜூன் 30, 2006) அதன் தமிழக செய்தியாளர் வினோஜ்குமார் - எம்.கே.நாராயணன் நடவடிக்கைகள் தொடர்பான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். பிரதமரின் தூதர், ஆலோசகராக பதவி ஏற்ற சில நாட்களிலேயே நாராயணன், தமிழக முதல்வர் கலைஞரை சந்திக்க வருவதாக ஊடகங்களில் செய்திகள் வந்தன. ஆனால் என்ன காரணத்தாலோ அவரது முதல் வருகை தடைப்பட்டது. தமிழக முதல்வர் எம்.கே.நாராயணனை சந்திக்க விரும்பவில்லை என்றே செய்திகள் வலம் வந்தன. முதலில் தனது அதிருப்தியை தமிழக முதல்வர் பதிவு செய்தாலும், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் என்ற முறையில் அதற்குப் பிறகான சந்திப்பை அவரால் தவிர்க்க முடியவில்லை. எம்.கே. நாராயணன் தமிழ் ஈழப் போராளிகளுக்கு எதிரானவர் என்பதைவிட, தமிழக முதல்வருக்கு அவர் மீதான கோபத்துக்கு வேறு ஒரு முக்கிய காரணம் உண்டு. 1990களில் தி.முக. ஆட்சியைக் கலைப்பதில், இதே அதிகாரிதான் முக்கியப் பங்காற்றியவர் ஆவார். மத்தியில் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, சந்திரசேகர் பிரதமராக இருந்த காலம் அது. தமிழ் நாட்டில் நடந்த தி.மு.க. ஆட்சி, விடுதலைப் புலிகளோடு ரகசிய உறவு வைத்திருப்பதாக புலனாய்வுத் துறை பொய்யாக ஒரு அறிக்கையைத் தயாரித்தது. அப்போது புலனாய்வுத் துறை இயக்குனராக இருந்தவர், இதே எம்.கே.நாராயணன் தான்.

இந்தியாவின் உளவு நிறுவனங்களும், வெளியுறவுத் துறையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற, நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகளை வழி நடத்தி வருகின்றன என்றே சொல்ல வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இந்தியாவை ஆட்சி செய்வது பார்ப்பனியம் தான். பார்ப்பனியத்தோடு கை கோர்த்து நின்றால் மட்டுமே, தங்களின் சுரண்டலை நடத்த முடியும் என்பதைப் புரிந்து கொண்ட - பனியாக்கள் பெரும் தொழில் நிறுவனங்கள் - பன்னாட்டு நிறுவனங்கள் - இதற்கு ஒத்திசைவாக தங்களது நடவடிக்கைகளை தகவமைத்துக் கொள்கின்றன. பெரும் தொழில் நிறுவனங்கள் உயர் பதவிகளில் பார்ப்பனர்களையே நியமித்துக் கொள்வதும், இந்தக் கண்ணோட்டத்தில் தான். இத்தகைய அதிகார அமைப்பில் பிரதமர்களாக வருபவர்கள் ¬பார்ப்பன பனியா - பன்னாட்டு - ஆளும் வர்க்க நலனோடு இணைந்து நின்றால்தான், தங்களது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் பிரதமர்கள் பலரும் பார்ப்பனியம் சுட்டும் பாதையிலேயே நடைபோடுகிறார்கள். இதற்கு மாறாக செயல்பட முடிந்தால் வீழ்ச்சியைத்தான் சந்திக்க வேண்டும். அப்படி பார்ப்பனியத்துக்கு எதிர் திசையில் - சமூகநீதி பாதையில் நடைபோட முயன்று வீழ்த்தப்பட்ட வெகு அபூர்வமான பிரதமர் வி.பி.சிங்! காவிரிப் பிரச் சினைக்கு நடுவர் மன்றம் அமைத்ததிலிருந்து, மண்டல் அமுலாக்கம் வரை அவர் பார்ப்பனிய கட்டமைப்புக்கு வெளியிலிருந்து, இயங்கிய பிரதமராகவே இருந்தார்.

இத்தகைய வி.பி.சிங்கை வீழ்த்தும் பார்ப்பனிய அணியில் தன்னையும் இணைத்துக் கொண்டவர்களில் ஒருவராகவே எம்.கே.நாராயணனும் இருந்திருக்கிறார் என்பதற்கான சான்றுகள் இருக்கின்றன.

ராஜீவ் மரணம் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி ஜெயின் ஆணையத்தின் பரிந்துரையில் இதற்கான ஆதாரங்கள் உள்ளன.

இவற்றை ஆராய்வதற்கு முன் ஈழத் தமிழர் பிரச்சினையில் உளவு நிறுவனங்களின் பார்வை அன்று முதல், இன்று வரை எப்படி இருக்கின்றன என்பதைக் குறிப்பிட வேண்டும். இலங்கைப் பிரச் சினையில் - இந்தியாவின் தலையீட்டுக்கு அடிப்படையான உள் நோக்கம் உண்டு. தெற்கு ஆசியாவில் தன்னை வலிமையான சக்தியாக நிலை நிறுத்திக் கொள்வதே இந்தியாவின் அடிப்படை நோக்கம். மாலத் தீவு, நேபாளம், பூட்டான் போன்ற இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளின் வெளியுறவு மற்றும் ராணுவ ரீதியான கொள்கைகளைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்த இந்தியா, இந்தப் பட்டியலில் இடம் பெறாத, இலங்கையை யும், அதில் இணைத்துக் கொள்ள விரும்பியது. அதுதான், இலங்கைப் பிரச்சினையில் இந்தியா வின் தலையீட்டுக்கான அடிப்படை நோக்கமாக இருந்தது. அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிகை (ஆசியா பதிப்பு 3.4.89) இது பற்றி விரிவாக வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், இவ்வாறு குறிப்பிட்டது:

“இலங்கையில் மைனாரிட்டி மக்களான தமிழர் களுக்கு இந்தியா ராணுவப் பயிற்சி அளித்து, ஆயுதங்களை வழங்கி, இலங்கைக்கு அனுப்பி, ஜெயவர்த்தனாவுக்கு எதிராக கொரில்லா யுத்தத்தை நடத்துமாறு பணித்தது. இதுநாள் வரை, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று இந்தியா மறுத்து வந்தாலும், இதில் பயிற்சி பெற்ற அமைப்புகளைச் சார்ந்தவர்களும், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளும், இலங்கை உளவு நிறுவனமும் இதை உறுதிபடுத்துகின்றன. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு முதலும் முடிவுமான ஒரே காரணம் - இலங்கை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் என்று இந்திய அதிகார வட்டாரங்கள், உறுதியாகக் கூறின”

-என்று சுட்டிக்காட்டியது அந்த ஏடு!

மேலும் பல திடுக்கிடும் தகவல்களும் அதில் இடம் பெற்றிருந்தன.

“1984-ல் இப்படிப் பயிற்சிப் பெற்ற ஈழப் போராளி குழுக்கள் இலங்கை ராணுவத்துக்கு எதிராக நடத்திய தாக்குதல்களில் தோல்வியே அடைந்தன. இதனால் சிங்களப் பொது மக்கள் மீது தாக்குதல்களைத் தொடருமாறு - ‘ரா’ உளவு நிறுவன அதிகாரிகள் வற்புறுத்தினர். ‘புளோட்’ என்ற அமைப்பின் தலைவர் உமா மகேசுவரன் கூறுகையில், “ஒரு ‘ரா’ அதிகாரி சிங்களர்களின் திரையரங்கு ஒன்றில், வெடிகுண்டு வீசுமாறும் அல்லது சிங்களர் கூடும் பேருந்து நிலையத்தில், வெடிகுண்டு வைக்குமாறும் எங்களிடம் கூறினார். நாங்கள் அதற்கு மறுத்து விட்டோம். சிங்கள பொது மக்களைக் கொன்றால், எங்களுக்கு ஏராளமாக பணம் தருவதாகவும் ‘ரா’ அதிகாரிகள் கூறினர்” என்று எழுதியது, ‘டைம்’ ஏடு. இந்திய உளவு நிறுவனங்கள் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவை என்பதற்கு இது ஒரு உதாரணம்.

உளவுத் துறை உருவாக்கிய இந்த நெருக்கடிகளுக்குப் பிறகு தான் அதுவரை ஆசியாவில் இந்தியாவுக்கு எதிர்ப்பான அரசியலை நடத்தி வந்த ஜெயவர்த்தனே, இந்தியாவிடம் இறங்கி வந்தார். (ஜெயவர்த்தனாவின் அரசியல் எதிரியும், அவருக்கு முன் அதிபராகவும் இருந்த திருமதி பண்டாரநாயகே. இந்தியா வின் பிரதமர் இந்திராவோடு நெருக்கமாக இருந்ததும், ஜெயவர்த்தனா வின் இந்திய எதிர்ப்புக்கு, முக்கிய காரணம்) ஜெயவர்த்தனாவைப் பணிய வைக்க - ஈழத்தில் போராளிகளுக்கு ராணுவப் பயிற்சியையும், ஆயுதங்களையும் தந்து அப்பாவி சிங்களர்களைக்கூட கொன்று குவிப்பதற்கு பச்சைக் கொடி காட்டிய இந்திய உளவுத் துறை - அந்த முயற்சியில் வெற்றி பெற்ற பிறகு, தனது கவனத்தை போராளிகளைப் பணிய வைப்பதில் திருப்பியது.

அப்போதுதான் போராட்டக் களத்தில் நின்ற விடுதலைப் புலிகளைக் கலந்து ஆலோசிக்காமல், ஜெயவர்த்தனாவோடு, ராஜிவ் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொண்டார்.

ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்திய ராணுவம் அனுப்பப் பட்டதாகக் கூறப்பட்டாலும், ஆயிரமாயிரமாய் தமிழ் மக்கள் தான் இந்திய ராணுவத்தின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு பலியானார்கள். தமிழர் வாழும் வடக்கு கிழக்குப் பகுதியில், இந்திய உளவு நிறுவனம் தனது ‘பொம்மை’ ஆட்சி ஒன்றை உருவாக்கியது. வரதராஜப் பெருமாள் என்பவருக்கு முதலமைச்சர் மகுடம் சூட்டி உட்கார வைத்தார்கள். ஆனால், உளவு நிறுவனத்தின் அத்தனை முயற்சிகளும், படுதோல்வியில் முடிந்தன.

ஜெயவர்த்தனாவைப் பணிய வைக்க, போராளி களுக்கு ஆயுதப் பயிற்சி தந்தது உளவுத் துறை. பிறகு போராளிகளைப் பணிய வைக்க இந்திய ராணுவத்தை அனுப்பி மூக்குடைபட்டது, உளவுத்துறை! 1991-ல் ராஜீவ் மரணத்துக்குப் பிறகு, இலங்கை அரசியலில் நேரடித் தலையீட்டிலிருந்து, இந்தியா ஒதுங்கிக் கொண்டாலும், இந்தியாவின் உளவுத் துறை மற்றும் வெளியுறவுத் துறையைச் சார்ந்த அதிகார வர்க்கம் தொடர்ந்து திரை மறைவு செயல்களில் ஈடுபட்டே வந்திருக்கிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு.

ஈழத்தில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த பிறகு, 2003 ஆகஸ்டு மாதத்தில் - ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் ஜே.என்.தீட்சித், ஒரு கட்டுரை எழுதினார். அதில்,

“இலங்கையில் நடக்கும் சமாதானப் பேச்சு வார்த்தைகளை இந்தியா ஆதரித்துக் கொண்டே, இலங்கை அரசுக்கு அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும், தீவிரமான உதவிகளை செய்ய வேண்டும். அப்போதுதான், இலங்கை அரசு, பலமான நிலையிலிருந்து விடுதலை புலிகளோடு பேச முடியும்” (While supporting the peace process, India should strengthen the Srilankan Government in Political and logistical terms so that it can negotiate with the tigers from a position of strength )

-என்று எழுதினார்.

2004 ஆம் ஆண்டு மே முதல் வாரத்தில் ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேட்டுக்கு அளித்த பேட்டியிலும் - ஜே.என்.தீட்சித் இதையே வலியுறுத்தினார். ஜே.என்.தீட்சித், வெளியுறவுத் துறையின் முக்கிய அதிகாரி. இலங்கையில் இந்தியாவின் தூதுவராகவும் இருந்தவர். ராஜீவ் காந்தியோடு நெருக்கமாக இருந்த பார்ப்பனர். ஆக - ஈழப் பிரச்சினையில் உளவுத் துறையின் தலையீடு என்பது சிறீலங்காவுக்கு ஆதரவாகவே இருந்தது. அது மட்டுமின்றி, இந்தியாவின் பிரதமர்கள், அமைச்சர்கள் எவரும் இப்பிரச்சினை பற்றி வாய்மூடி மவுனம் சாதித்த நேரம் அது. ஆனால், வெளியுறவுத் துறை அதிகாரிகளாக இருந்த பார்ப்பனர்கள் - இப்படி வெளிப் படையாக கருத்து தெரிவிக்கும் அதிகாரம் படைத்தவர்களாக திகழ்ந்தார்கள்.

இதே வரிசையில் இடம் பெற்ற மற்றொரு உளவுத்துறை அதிகாரி தான் எம்.கே.நாராயணன்.

தி.மு.க. ஆட்சிக் கவிழ்ப்பில் உளவுத் துறையின் பங்கு

ராஜீவ் கொலை செய்யப்பட்டபோது, இந்தியாவின் பிரதமராக இருந்தவர் சந்திரசேகர். தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல் செய்யப்பட் டிருந்தது. சந்திரசேகர் ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்தவர் விடுதலைப்புலிகளை பரம எதிரியாகக் கருதும் பார்ப்பனர் சுப்பிரமணியசாமி. தமிழ்நாட்டில் நடந்து வந்த தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி செயல்பட்டவர் ஜெயலலிதா. 1988-89 ஆம் ஆண்டுகளில் மட்டும் ஆட்சியிலிருந்த தி.மு.க. - சந்திரசேகர் ஆட்சியில் - கலைக்கப்பட்டதற்கு சொல்லப்பட்ட முக்கிய குற்றச்சாட்டு, தி.மு.க. ஆட்சி விடுதலைப் புலிகளோடு ரகசிய உறவு வைத்திருந்தது என்பது தான்!

இப்படி - தி.மு.க.வுக்கு எதிராக ஒரு அறிக்கையைத் தயாரித்துக் கொடுத்த ‘மகா’ மனிதர், இதே எம்.கே. நாராயணன் தான். இப்போதும் தமிழ்நாடு விடுதலைப் புலிகளின் ஆயுதக் களமாகப் பயன்படுகிறது என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்கிட திட்டமிட்டு காய்களை நகர்த்தி வரும் அதே எம்.கே. நாராயணன் தான், அப்போதும் தி.மு.க.வுக்கு எதிரான அறிக்கையைத் தயாரித்தார். இந்த உளவு அறிக்கை பற்றிய விவரங்களைக் காண்பதற்கு முன்பு, அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங், ஈழப் பிரச்சினையில் எத்தகைய பார்வையைக் கொண்டிருந்தார் என்பதையும் குறிப்பிட வேண்டும். காரணம், எம்.கே. நாராயணன் தயாரித்திருந்த உளவுத்துறை அறிக்கைக்கும், வி.பி.சிங் ஈழப் பிரச் சினையில் கொண்டிருந்த பார்வைக்கும் தொடர்பு உண்டு.

ராஜீவ் கொலை பற்றி விசாரிக்க மத்திய அரசு நியமித்திருந்த நீதிபதி ஜெயின் ஆணையம் முன் வி.பி.சிங், சாட்சியமளித்தார். (ஈழத்திலிருந்து இந்திய ராணுவத்தைத் திரும்பப் பெறும் முடிவை எடுத்தவர் அன்றைய பிரதமர் பொறுப்பில் இருந்த வி.பி.சிங் என்பது குறிப்பிடத்தக்கது)

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதுதான் தமிழ்நாட்டில் நடந்த தி.மு.க. ஆட்சி - விடுதலைப்புலிகளோடு ரகசிய தொடர்பு கொண்டிருந்தது என்று உளவுத் துறை அறிக்கை தயாரித்திருந்தது. அந்த அறிக்கையைப் பற்றி, வி.பி.சிங் தனது கருத்துகளை ஆணையம் முன் பதிவு செய்தார். வி.பி.சிங் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்த முக்கிய கருத்துகள்:

“ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் உருவான பிறகும், தமிழ்நாட்டில் அகதிகளாக வந்த 1,40,000 அகதிகளில் ஒரு லட்சம் பேர், ஈழத்துக்குத் திரும்ப முடியாத நிலைதான் நீடித்தது.

தமிழ்நாட்டில் ஈழப் போராளிகளுக்கான தார்மீக, ராணுவ ஆதரவு, 1985-களிலிருந்தே தொடங்கிவிட்டது. பிரதமர் இந்திரா ஆட்சியின்போதும், ராஜீவ் ஆட்சியின் போதும் இவை தொடர்ந்தன. தமிழகத்தின் மூலை முடுக்குகள்கூட போராளிகளுக்குத் தெரியும். அங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழ்நாட்டு மக்கள் உணர்வு பூர்வமாக வழங்கும் உடைகளையும், மருந்துகளையும், எப்படித் தடுக்க முடியும்? கடல் வழியாக கடத்தல் நடப்பது, கடந்த மூன்று அரசுகளிலும் நடந்திருக்கிறது.

விடுதலைப்புலிகளால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று கூறுவது பற்றி எனது கருத்து இது தான். ஜம்மு காஷ்மீரிலும், பஞ்சாபிலும், அசாமிலும் கூட தீவிரவாதிகள் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக் கின்றன. அங்கே 100 சதவீத திருப்தி யான நிலை வந்துவிடவில்லை. தமிழ் நாட்டைப் போலவே இதுவும் மத்திய அரசின் கவலைக்குரிய பிரச்சினைதான் தமிழக அரசியல் தலைவர்களோடு நான் தொடர்பு கொண்டிருந் தேன். அவர்கள் - தமிழ்நாட்டில், ஈழப் போராளிகளின் ராணுவ நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்று கூறினார்கள். அதே நேரத்தில், தீவிர வாதத்தைத் தடுக்கும் நடவடிக்கைகள் தமிழ்நாடு உட்பட, இந்தியாவின் வேறு பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே எனது கருத்து”

-என்றார் வி.பி.சிங்.

விடுதலைப்புலிகளை மட்டும் தனிமைப்படுத்தி, அவர்களை முற்றாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற உளவுத் துறையின் பார்ப்பனப் பார்வையிலிருந்து வி.பி.சிங், மாறுபட்ட - மனித உரிமைப் பார்வை கொண்ட மனிதராகவே இருந்தார் என்பதை வி.பி.சிங் தந்த வாக்கு மூலம் படம் பிடித்துக் காட்டுகிறது. பஞ்சாப், காஷ்மீர், அசாம் மாநிலங்களில் நடக்கும் தீவிரவாதத்தைப் போலவே, தமிழ்நாட்டையும் பார்க்க வேண்டும் என்பதே வி.பி.சிங்கின் கருத்து. ஆனால், விடுதலைப்புலிகள் பிரச்சினையை வைத்து, தமிழ்நாட்டில் நடந்த தி.மு.க. ஆட்சியைக் கலைத்துவிட பார்ப்பன உளவு நிறுவனங்கள் திட்டமிட்டிருந்தன. ஈழத் தமிழர் பிரச்சினைகள் தமிழ்நாட்டில் வலிமை பெற்றால் தமிழின எழுச்சி உரு வாகி, அது பார்ப்பன எதிர்ப்பைத் தீவிரப்படுத்திவிடும் என்றே பார்ப்பன சக்திகள் நடுங்கின. இதுதான், விடுதலைப்புலிகள் பிரச்சினையில் பார்ப்பன சக்திகள் தீவிரம் காட்டுவதற்கான அடிப்படையான நோக்கமாகும்.

மற்றொரு முக்கிய கேள்வியும், வி.பி.சிங்கிடம் ஜெயின் ஆணையத்தில் கேட்கப்பட்டது.

“தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கும், விடுதலைப்புலி களுக்கும் ரகசிய தொடர்பு உண்டு என்று உளவுத் துறை, மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையைத் தாங்கள் பார்க்கவில்லையா?” என்பது கேள்வி.

“என்னுடைய பார்வைக்கு அந்த அறிக்கை கொண்டு வரப்படவில்லை. பிரதமர் அலுவலகத்துக்கும், அமைச்சரவை செயலாளருக்கும் அந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக இப்போது தான் தெரிகிறது. என்னுடைய பார்வைக்கு அதைக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் கொண்டு வரப்படவில்லை”

-என்கிறார் வி.பி.சிங்.

அப்போது உளவுத்துறை இயக்குனராக இருந்தவர் இதே எம்.கே. நாராயணன் தான். அவர் தி.மு.க.வுக்கும், விடுதலைப்புலி களுக்கும் இடையே தொடர்புகள் உண்டு என்று இரண்டு அறிக்கைகளை சமர்ப்பித்தார்.

1. DIB U.O. No.1(14)89(11) - 2699 dated 26.6.1989 by Shri M.K.Narayanan, Director I.B.

2. I.B. U.O. No.1(14)90 (II) dated 8.5.90.

தமிழ்நாட்டில் தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள் விடுதலைப் புலிகளோடு தொடர்பு வைத்துள்ளார்கள் என்று அந்த அறிக்கை கூறியது. அதுமட்டுமல்ல, உணவுப் பொருள்களும், மருந்துகளும்கூட, ஈழத் தமிழர்களுக்கு அனுப்பப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கை வற்புறுத்தியது. எம்.கே.நாராயணனின் மனிதாபிமானத்துக்கு இது ஒரு உதாரணம்.

பிரதமராக இருந்த வி.பி.சிங் பார்வைக்குப் போகாமலேயே ஒரு முக்கிய அறிக்கையை உளவுத் துறையும், பார்ப்பன அதிகார வர்க்கமும் மறைத்துவிட்டதோடு, அந்த அறிக்கையை செயல்பட வைக்கும் அரசியல் மாற்றத்திற்காக காத்திருந்தன என்பது தான் இதிலிருந்து தெளிவாகும் உண்மை. மக்கள் பிரதிநிதிகளை மிஞ்சிய அதிகாரம் படைத்த சக்திகளாக இந்த உளவுத் துறை மற்றும் வெளியுறவுத் துறை பார்ப்பன அதிகார வர்க்கம் செயல்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்!

தமிழ்நாட்டில் நடந்த தி.மு.க. ஆட்சியில் உள்ள சில முக்கிய தலைவர்கள் விடுதலைபுலிகளுடன் தொடர்பு கொண்டு பேசி வருவதே தேச விரோதமாக - நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக உளவுத் துறை மூலம் அறிக்கை தயாரித்தவர் எம்.கே. நாராயணன். உளவுத் துறையின் தலைவர் என்ற முறையில், அன்றைய பிரதமர் வி.பி. சிங் பார்வைக்கு இதைக் கொண்டு போயிருக்க வேண்டிய கடமை எம்.கே. நாராயணனுக்கு உண்டு. ஆனால், அதிகார மட்டத்தில் கமுக்கமாக வைக்கப்பட்டது அந்த அறிக்கை. மண்டல் குழு பரிந்துரை, ஈழத் தமிழர் பிரச்சினைகளில் -பார்ப்பன அதிகார வர்க்கத்தின் உணர்வுகளுக்கு எதிராக உறுதியோடு நின்றார் வி.பி.சிங் என்பதால் அவரது ஆட்சியை பார்ப்பன சக்திகள் திட்டமிட்டு கவிழ்த்தன. சந்திரசேகர் தலைமையில் பொம்மை ஆட்சி ஒன்றை உருவாக்கியவுடன், உளவுத் துறை தயாரித்து வி.பி.சிங்கிடம் காட்டாமல் மறைக்கப்பட்ட அறிக்கையைப் பயன்படுத்தி, அன்று தி.மு.க. ஆட்சியைக் கலைத்தனர். அன்றைய காலகட்டத்தில், விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். ராஜீவ் கொலைச் சம்பவம் நடந்தது, அதற்குப் பிறகுதான். விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்படாத காலத்திலேயே - அந்த இயக்கத்தினரோடு பேசுவதே ‘தேச விரோதம்’ என்ற கருத்தை உருவாக்கி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்க்கும் அதிகாரம் கொண்டவைகளாக உளவு நிறுவனங்கள் செயல்பட்டன என்பது தான் இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.

Edited by Aalavanthan

ராஜீவை இயக்கிய உளவுத் துறை

வெளிநாட்டுக் கொள்கைகளை நிர்ணயிப்பதில் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகார வர்க்கமும், உளவு நிறுவனங்களுமே, தீர்மானகரமான சக்திகளாக மாறி நிற்கின்றன. இந்திரா பிரதமராக இருந்தபோது, அவர் பல்வேறு பிரச்சினைகளில் தன்னிச்சையான முடிவுகளை எடுக்கும் பிரதமராக செயல்பட்டிருக்கிறார் என்பதற்கான சான்றுகள் உண்டு. பாகிஸ்தான் இந்தியாவுக்கு எப்போதும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதிய இந்திரா, அந்நாட்டை கூறுபோட்டு, பங்களாதேஷ் நாட்டை உருவாக்கிட முடிவெடுத்து, அதற்கு இந்தியாவின் ராணுவ உதவியையும் வழங்கினார். அதுபோல இலங்கையையும், இந்திரா உடைத்து விடுவார் என்ற அச்சம் ¬அன்றைய அதிபர் ஜெயவர்த்தனாவுக்கு இருந்து வந்தது. இலங்கைப் பிரச்சினையில் சிங்களத் தலைவர்களைப் பற்றிய சரியான பார்வை, இந்திராவுக்கு இருந்தது என்று மறைந்த விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் தனது ‘போரும் அமைதியும்’ நூலில் குறிப்பிடுகிறார். “இந்திரா தொடர்ந்து அதிகாரத்தில் இருந்தால், அவர் இலங்கையை இரண்டாகப் பிரித்து விடுவார் என்று ஜெயவர்த்தனா என்னிடம் பலமுறை கூறியதுண்டு” என்று, இந்திய வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரி ஜே.என்.தீட்சித் தனது Assignment Colombo’ நூலில் குறிப்பிடுகிறார்.

இந்திராவின் மரணத்தைத் தொடர்ந்து, அரசியலின் ஆழம் புரியாத - ராஜீவ் காந்தி பிரதமராக வந்தார். பார்ப்பன அதிகார வட்டம் மகிழ்ச்சிக் கடலில் குதித்தது. ஆசியாவின் வலிமை மிக்க தலைவராக உயரவேண்டும் என்ற துடிப்பில் இருந்த ராஜீவுக்கு அதிகாரவர்க்கம் தூபம் போட்டது. கடந்த காலத்தில் இந்திராவின் ஆட்சியில் பின்பற்றப்பட்டு வந்த வெளியுறவுக் கொள்கைகளை மாற்றி அதிரடியான நடவடிக்கைகளில் இறங்கினால்தான் உடனடியான மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்று ராஜீவ் காந்தியிடம் தெரிவிக்கப்பட்டன. அதற்கு ராஜீவ் காந்தியும் பச்சைக்கொடி காட்டினார். அதன் காரணமாக இலங்கைப் பிரச்சினையில் இந்திராவின் ஆலோசகர் களாக இருந்த அதிகாரிகள் ஓரம் கட்டப்பட்டனர். ஈழத் தமிழர் பிரச்னையில் ஓரளவு தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பார்த்தசாரதியிட மிருந்து அந்தப் பொறுப்பு களைப் பறித்து ரமேஷ் பண்டாரி என்ற மற்றொரு பார்ப்பன அதிகாரியிடம் ராஜீவ் ஒப்படைத்தார்.

இலங்கை உட்பட - ஆசியாவில் - இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் சக்தி களாக உளவுத் துறை, வெளியுறவுத் துறையின் பார்ப்பனிய அதிகார வர்க்கம் உருவெடுத்தது. ராஜீவ் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த இந்த கொள்கை மாற்றங்களை விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் தனது ‘போரும் அமைதியும்’ நூலில் பதிவு செய்துள்ளார். (அந்நூலின் 64, 65 ஆம் பக்கங்கள்)

இந்திராவின் ஆலோசகராக செயல்பட்டு வந்த பார்த்தசாரதியை அன்டன் பாலசிங்கம் புதுடில்லியில், அந்த அதிகாரியின் இல்லத்தில், 1985 ஜனவரியில் சந்தித்துப் பேசினார். ராஜீவ் ஆட்சிக்கு வந்த பிறகு, வெளியுறவுக் கொள்கைகள் மாற்றப் பட்டு வருகின்றன என்று கூறிய பார்த்தசாரதி, இணக்கமான அணுகு முறைகளை கைவிட்டு இனி கடுமையான போக்குகளைப் பின்பற்ற முடிவு செய்துவிட்டார்கள். ராஜீவ், ஜெயவர்த்தனாவை நம்பத் துவங்கிவிட்டார் என்றும், ஜெயவர்த்தனாவின் இரட்டை வேடம் - சூழ்ச்சிகளை, ராஜீவிடம் எடுத்துச் சொல்லி, அவரை ஏற்க வைக்கும் நிலையில் தான் இல்லை என்றும், பிரச்சினை தனது கையை விட்டுப் போய்விட்டது என்றும், பார்த்தசாரதி தம்மிடம் கூறியதாக, பாலசிங்கம் பதிவு செய்துள்ளார்.

“போராடும் அமைப்புகள் தங்களுக்குள் ஒருங்கிணைப்பை உருவாக்கிக் கொண்டு, பொதுவான கோரிக்கைகளை உருவாக்கி, பேச்சு வார்த்தையில், அழுத்தமாக வலியுறுத்துங்கள்”

- என்று ஆலோசனை கூறிய பார்த்தசாரதி, இனி உளவுத் துறைதான் புதிய கொள்கை மற்றும் அணுகுமுறைகளை போராளி குழுக்களுக்கு விளக்கும் என்பதையும் சுட்டிக் காட்டினார். (Mr. Parthasarathy also told me that the Indian Intelligence agencies wood soon brief us on the new policies and approaches of Rajiv’s administration)

ஆக, ராஜீவ் பிரதமராக வந்த பிறகு, வெளியுறவுக் கொள்கைகளை - குறிப்பாக ஈழப்பிரச்சினைக்கான கொள்கை களையும் அணுகுமுறைகளையும் தீர்மானிக்கும் உரிமைகளை உளவுத்துறை பார்ப்பனிய அதிகாரவர்க்கம் எடுத்துக் கொண்டு விட்டது என்பதை இது உறுதிப்படுத்துகிறது. ஒரு ஜனநாயக அமைப்பில் அரசியல் தலைவர்கள் - அமைச்சர்கள் தீர்மானிக்க வேண்டிய கொள்கைகளை அவர்களை எல்லாம் ஓரம் கட்டி விட்டு, அதிகாரவர்க்கம், தன் கரங்களில் எடுத்துக் கொண்டது.

இந்த மாற்றங்கள் -வெளிப்படையாகவே தெரியத் தொடங்கின. ஒரு புறம் ‘டெலோ’ அமைப்பும், மறுபுறம் விடுதலைப்புலிகள் அமைப்பும், இலங்கை ராணுவத்துக்கு எதிராகத் தீவிரமான தாக்குதல்களை நடத்தி வந்தன. யாழ்தேவி தொடர் வண்டியில் டெலோ நடத்திய தாக்குதலில் (1985 ஜன.19-ல்) 22 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். கொக்கிளாய் ராணுவ முகாம் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் (1985, பிப்.13) 106 சிங்கள ராணுவத்தினர் பலியானார்கள். அதிர்ந்து போனது இலங்கை ராணுவம். தாக்குதலை சமாளிக்க முடியாத நிலையில், முல்லைத் தீவில் தமிழர் அகதிகள் முகாமில் பதிலடித் தாக்குதலை நடத்தி 52 அப்பாவித் தமிழர்களைக் கொன்றது. இந்த ‘இனப் படுகொலையைத் தடுக்க வேண்டும்’ என்று தமிழ் ஈழ அரசியல் தலைவர்கள் இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்தும் - இந்தியா மவுனமே சாதித்தது. கடந்த காலங்களில் இத்தகைய இனப் படுகொலைகளைக் கண்டித்து வந்த இந்தியா - அப்போது மவுனம் சாதித்தது, இந்தியாவின் அணுகுமுறையில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை அறிவிப்பதாகவே இருந்தது, என்கிறார் அன்டன் பாலசிங்கம்.

1985 ஆம் ஆண்டு மார்ச் மாதம் - ஈழப் போராளிக் குழுக்களின் தலைவர்களை, உளவு நிறுவனங்கள் அழைத்தன. அவர்களிடம், உளவு நிறுவன அதிகாரிகள், இந்தியாவின் புதிய கொள்கைகளை விளக்கினார்கள்.

அப்போது ‘ரா’ உளவு நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் கிரிஷ் சந்திர செக்சேனா. இவர் தான் ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு ஆலோசகராக பிறகு நியமிக்கப்பட்டார். அதன் பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். அவ்வளவு அரசியல் செல்வாக்கு அவர்களுக்கு இருந்தது. சென்னையில் ஒரு ரகசிய இடத்தில் - ‘ரா’ தலைவர் செக்சேனா

அழைப்பை ஏற்று, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனும், அன்டன் பாலசிங்கமும் அவரை சந்தித்தனர். அதிகாரமிடுக்குடன், பேசிய அந்த அதிகாரி

“கடந்த கால அணுகுமுறை இப் போது மாறிவிட்டது. இலங்கைத் தமிழர்களை ராணுவத் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றுவதற்குத்தான் உங்களுக்கு இந்தியா ஆயுதம் வழங்கியதே தவிர, தனி நாடு போராட்டத்துக்கு அல்ல. அது உங்களின் உணர்வாக இருக்கலாம். ஆனால், அங்கே நாடு பிரிவதை இந்தியா ஒரு போதும் ஆதரிக்காது. அது எங்கள் நாட்டில் பெரும் பாதிப்புகளை உருவாக்கிவிடும்”

-என்று கூறிய அவர், பிரபாகரனைப் பார்த்து, குரலை உயர்த்தி,

“எங்களின் இந்த அணுகுமுறையைப் புரிந்து கொண்டு, நீங்கள் இதை ஆதரித்தாக வேண்டும்”

-என்றார். ‘ரா’வைத் தொடர்ந்து வேறு ஒரு நாளில், இந்திய உளவுத்துறை (அய்.பி.) விடுதலைப்புலிகளைஅழைத்தது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் -அன்டன் பால சிங்கத்தை அப்போது சந்தித்தவர் உளவுத்துறை இயக்குனராக இருந்த இதே எம்.கே.நாராயணன் தான். உ.பி. மாநிலம் காசியில் இந்த சந்திப்பு நடந்தது. செக்சேனா கடுமையான குரலில் - புதிய வெளியுறவுக் கொள்கையை விளக்கினார் என்றால், எம்.கே.நாராயணன், மென்மையாக, அதே கருத்தை பிரதிபலித்தார். இவை எல்லாம் உளவுத் துறை வழக்கமாகப் பின்பற்றும் தந்திரங்கள் தான்.

“தெற்கு ஆசியாவின் வலிமையான நாடு இந்தியா. இந்த மண்டலத்தில் நிலையான அமைதியைக் கொண்டு வருவது இந்தியாவின் கடமை. தெற்கு ஆசியாவை அமைதி மண்டல மாக்கிடுவதற்கான புதிய திட்டங்களை, நாங்கள் வகுத்துள்ளோம். இதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்”

-என்றார் எம்.கே.நாராயணன்.

இந்தியாவின் பல்வேறு இனங்களை தனது அதிகார மய்யத்தின் கீழ் அடக்கி வரும் இந்திய தேசிய ஆட்சி, தனது எல்லைகளையும் கடந்து, தெற்கு ஆசிய மண்டலம் முழுவதற்கும் ‘அமைதியை’ தனது அதிகார வலிமையால் திணிக்க விரும்பியது.

தெற்கு ஆசியா ‘அமைதி’ மண்டலமாக இருப்பதுதான் அவர்களின் ஒரே நோக்கமே தவிர, அங்கு ஒடுக்கப்படுகிற இனங்களின் பிரச்சினைகள், அடக்கு முறைகள் அவர்களுக்கு முக்கியமல்ல. இதுவே ராஜீவ் காந்திக்கு பார்ப்பனிய அதிகார வர்க்கம் உருவாக்கிக் கொடுத்த, புதிய வெளியுறவுக் கொள்கைக்கான அணுகு முறையாகும். இந்திய அதிகாரப் பார்ப்பன மேலாண்மை யின் விரிவாக்கமாகவே இது அமைந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?

இலங்கை ராணுவத்தின் ஒடுக்குமுறை பற்றியும் ஜெய வர்த்தனா விரிக்கும் சூழ்ச்சி வலை பற்றியும் பிரபாகரன், எம்.கே.நாராயணனிடம் எடுத்துக் கூறினார், அவற்றைப் பொறுமையுடன் கேட்ட எம்.கே. நாராயணன், இறுதியில் தனது கருத்தையே மீண்டும் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, வேகமான மாற்றங்கள் உருவாயின. ‘டெலோ’ ஈ.பி.ஆர்.எல்.எப்.’, ‘ஈரோஸ்’ ஆகிய அமைப்புகள் கூட்டாக உருவாக்கியிருந்த ‘ஈழ தேசிய விடுதலை முன்னணி’ என்ற கூட்டமைப்பில், விடுதலைப் புலி களும் அங்கமாகியது. பூட்டான் தலைநகரான திம்புவில் இலங்கை அரசின் பிரதிநிதிகளுடன், போராளிகளின் பிரதிநிதிகள் பேச்சுவாத்தை நடத்த இந்திய உளவு நிறுவனங்கள் ஏற்பாடு செய்தன. பேச்சுவார்த்தை துவங்குவதற்கு இரு வாரங்களுக்கு முன் ராணுவ விமானத்தில் போராளி குழுக்களின் தலைவர்களை டெல்லிக்கு அழைத்து, நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்தனர். போராளிகளை ‘ரா’ தலைமை நிலையத்துக்கு அழைத்துப் பேசிய ‘ரா’ உளவு நிறுவனத் தலைவர் செக்சேனா

“பேச்சு வார்த்தைக்கு முழு ஒத்துழைப்பு தந்தாக வேண்டும். எந்த மீறலையும், மோதலையும், ராஜீவ் அரசு சகித்துக் கொள்ளாது. அப்படி ஏதும் நடக்குமானால், இந்தியாவில் நீங்கள் பாதுகாப்புக் கேட்டு அடைக்கலம் கோர முடியாது. எந்தப் பாதுகாப்பு உதவியையும் இந்தியா செய்யாது. பூட்டானில் பேச்சு வார்த்தை, இன்னும் இரண்டு வாரங்களில் துவங்கும். பங்கேற்க மறுப்பீர்களேயானால், இந்தியாவின் மண்ணையோ, அல்லது இந்தியாவின் கடற்பரப்பையோ நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாது. (If you refuse to attend, neither Indian soil, nor territorial waters will be made available to you)

-என்று மிரட்டினார் (அன்டன் பாலசிங்கம் எழுதிய ‘போரும் அமைதியும்’ நூல். பக்.76)

தாயகத்தின் விடுதலைக்காக போராட முன் வந்துள்ள விடுதலை இயக்கங்களின் தலைவர்க

ளிடம், அரசிடம் ஊதியம் பெறும் அதிகாரிகள், அதிகாரத் திமிருடன், உதிர்த்த வார்த்தைகளே இவர்களின் பார்ப்பனிய அதிகாரத்துவத்தை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. திம்பு பேச்சு வார்த்தையில் போராளிகளை பங்கேற்கச்செய்வதில் பெரும் வெற்றி பெற்றுவிட்டதாகவும், இது மகத்தான சாதனை என்றும் உளவுத் துறை அதிகார வர்க்கம் பீற்றிக் கொண்டது. ஆனால் நடந்தது என்ன? திம்பு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே (1985-ஆகஸ்டு) ஜெயவர்த்தனா ஆட்சி, தமிழர்கள் மீது ராணுவத் தாக்குதலைத் தீவிரப் படுத்தியதோடு, போராளிகளின் மறைவிடங்களிலும், தாக்குதல்களை தொடுத்தது. செய்திகளை அறிந்த போராளிகள், பேச்சு வார்த்தையை பாதியிலேயே முறித்துக் கொண்டு வெளியேறினர்.

வெளியுறவு மற்றும் உளவுத் துறை அதிகார வர்க்கத்தின் முயற்சிகள் பெரும் தோல்வியை சந்தித்தன.

திம்புப் பேச்சு தோல்வி அடைந்த பிறகும், அதிகார வர்க்கம் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. திம்பு பேச்சு வார்த்தையின் போது போராளிகளுடன் சென்னையிலிருந்து தொலைபேசியில் (Hot line) தொடர்பு கொண்டு கருத்துகளைத் தெரிவித்து வந்தார் பாலசிங்கம்! பேச்சு வார்த்தை முறிந்ததற்கு பாலசிங்கம் தான் காரணம் என்று உளவுத்துறை முடிவு செய்தது. பேச்சு வார்த்தை நடக்கும் போதே - தமிழர்கள் மீது ஜெயவர்த்தனா, தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியதைப் பற்றியோ, உருப்படியான திட்டங்களை ஜெயவர்த்தனா ஆட்சி முன் வைக்காதது பற்றியோ கவலைப்படாத உளவுத் துறை, போராளிகளை மிரட்டி, பணிய வைப்பதில் மட்டும் குறியாக இருந்தது. பாலசிங்கம் - திம்புவில் தொடர்பு கொண்டு பேசியதை பதிவு செய்து கண்காணித்து வந்த உளவுத் துறை, பாலசிங்கத்தின் மீது கோபம் கொண்டது. (திம்புவில் தொடர்பு கொண்டு பேசும் இணைப்புகளை உருவாக்கித் தந்ததே உளவுத் துறைதான்) கோபமடைந்த உளவுத் துறை பாலசிங்கத்தை இந்தியாவிலிருந்து நாடு கடத்த உத்தரவிட்டது. 1985 ஆக. 23 ஆம் தேதி சென்னை பெசன்ட் நகரில் விடியற்காலையில் அன்டன் பாலசிங்கம் தங்கியிருந்த வீட்டில், அவரை கைது செய்த காவல்துறை அடுத்த நாளே விமானத்தில் ஏற்றி லண்டனுக்கு அனுப்பியது. ஏற்கனவே லண்டனுக்குப் போய்விட்ட ‘டெலோ’ ஆலோசகர்கள் சந்திரகாசன், நடேசன் சத்தியேந்திரா ஆகியோருக்கும் நாடு கடத்தல் உத்தரவு தமிழகத்திலிருந்து பிறப்பிக்கப்பட்டது.

உளவு நிறுவனத்தின் கைபொம்மையாகி, ராஜீவ் ஆட்சி எடுத்த இந்த விபரீத முடிவு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகளை உருவாக்கியது. தமிழ்நாடு கொந்தளித்து எழுந்தது. இதனால் அடுத்த ஆறு வாரங்களிலேயே நாடு கடத்தல் உத்தரவு ரத்தானது.

தொடர்ந்து ராஜீவ் காந்தி மேற்கொண்ட ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் தோல்வி யிலேயே முடிந்தன. உளவுத் துறையும், அதிகார வர்க்கமும் மேற் கொண்ட ‘திணிப்பு’ நடவடிக்கைகள் வெற்றி பெறாமலே போயின!

ஈழத் தமிழ்ப் போராளி குழுக்களுக்கு, இந்தியாவில் - ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதற்கான காரணமே, இலங்கை அரசை மிரட்டி, இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதான் என்பதை, ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தோம். உளவுத் துறையின் செயல்பாடுகள், அந்த எல்லையோடு மட்டும் நின்றுவிடவில்லை. போராளிக் குழுக்களை, வேறு பிரச்சினைகளுக்குப் பயன்படுத்திய அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் உண்டு.

Edited by Aalavanthan

மாலத் தீவில் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு சதி

தென்கிழக்கு ஆசியாவில், காஷ்மீர், சிக்கிம் நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குக் கீழே கொண்டு வந்த பிறகு, நேபாளம், பூட்டான் நாடுகளும், இந்திய ராணுவத் தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுவிட்டன. இலங்கையையும் தனது கட்டுப்பாட்டுக்குக் கீழே கொண்டு வரும் முயற்சிகள் தொடங்கிய நிலையில் இலங்கைக்கு அருகிலே உள்ள மாலத்தீவு மட்டும் ஒதுங்கியே இருந்தது. மாலத் தீவிலே தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருபவர் அப்துல் ஹயூம். இந்தியாவுடன் அதிக நெருக்கமில்லாத அப்துல்ஹயூம், பாகிஸ்தானோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர். மாலத்தீவையும், இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, ‘ரா’ உளவு நிறுவனம் திட்டம் தீட்டியது. அதற்கான ரகசிய திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அப்துல் ஹயூம், ஏற்கனவே ஆட்சியிலிருந்தவர்களைக் கவிழ்த்து விட்டு அதிகாரத்தைப் பிடித்தவர். அவரால், ஆட்சியிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டவர்கள் இரண்டு பேர். ஒருவர் சிங்கப்பூரிலும், மற்றொருவர் கொழும்பிலும் தஞ்சமடைந் திருந்தனர். இவர்களைப் பயன்படுத்தி மாலத் தீவில் கலகம் ஒன்றை உருவாக்கி, ஆட்சியைக் கவிழ்க்க திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதற்கு - ஈழப் போராளி குழு ஒன்றையே பயன்படுத்த இந்தியாவின் உளவு நிறுவனம் ‘ரா’ முடிவு செய்தது.

இந்தியாவிடம் நேரடியாகப் பயிற்சிப் பெற்ற போராளிக் குழுக்களைப் பயன்படுத்தினால், பின்னணியில் இந்தியா நிற்பது புரிந்து விடும் என்பதால், இந்தியாவின் பயிற்சித் திட்டத்திலிருந்து ஒதுங்கி நின்ற உமா மகேசுவரனின் தலைமையில் செயல்பட்ட ‘புளோட்’ என்ற போராளிக் குழுவைப் பயன்படுத்த முடிவு செய்தார்கள். முதலில் - கொழும்புக்கும், சிங்கப்பூருக்கும் சென்று, அப்துல் ஹயூமின் அரசியல் எதிரிகளை சந்தித்துப் பேசி, ஒப்புதல் பெற்றது ‘ரா’.

வவுனியாவில் செட்டிகுளம் என்ற பகுதியில் தங்கி யிருந்தார் உமா மகேசுவரன். அப்போது விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், உமாமகேசுவரன் அமைப்புக்கு மிடையே மோதல்கள் நடந்து கொண்டிருந்தன. 1987 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 22 ஆம் தேதி இந்திய ராணுவத்தின் விசேட விமானம் வவுனியா வந்து, உமா மகேசுவரனை சென்னைக்கு அழைத்து வந்தது. சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் உமாமகேசுவரன் - ரா அதிகாரிகள் ரகசிய சந்திப்பு நடந்தது. மாலத் தீவுப் பிரச்சினையை வெளிப்படையாக சொல்லாமல், தாங்கள் கூறும் பகுதியில் தாக்குதல் நடத்த வேண்டும் என்றும், அதற்குரிய பணம், ஆயுதம் வழங்குவதாகவும் ‘ரா’ பேரம் பேசியது. புலிகளுக்கு எதிராகவே, தம்மை ‘ரா’ நிறுவனம் பயன்படுத்துவதாக உமாமகேசுவரன் கருதி சம்மதம் தெரிவித்தார். ஒரு தொகை முன் பணமாக வழங்கப் பட்டது. தாக்குதல் நடத்தப்படும் இடம், நாள் ஆகியவற்றை பிறகு தெரிவிப்பதாக, ‘ரா’ அதிகாரிகள் கூறிவிட்டனர். மீண்டும் ராணுவ விமானத்திலேயே உமாமகேசுவரன் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ‘ரா’ நிறுவனம் தந்த பணத்தைக் கொண்டு கற்பிட்டி என்ற பகுதியில் ‘மாசிக்கருவாடு’ (இது இலங்கையில் பிரபலமான உணவுப் பொருள்) தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றையும், கொழும்பின் புறநகர்ப் பகுதியில், மிகப் பெரிய கோழிப் பண்ணை ஒன்றையும் ஏற்படுத்த, உமாமகேசுவரன் முதலீடு செய்து, ‘ரா’வின் அழைப்புக்காகக் காத்திருந்தார்.

இந்த நிலையில் கோழி இறைச்சி ஏற்றுமதி வியாபாரி என்றும், தனது பெயர் அப்துல்லா என்றும் கூறிக் கொண்டு, ஒருவர், உமாமகேசுவரனை சந்தித்தார். உமாமகேசுவரனும், ஒரு கோழி வியாபாரி என்ற முறையிலேயே அவரிடம் பேசினார். சந்திக்க வந்தவர் ¬

“உங்களை எனக்குத் தெரியும்; நீங்கள்தான் புளோட் தலைவர் உமாமகேசுவரன்; நான் மாலத் தீவின் குடிமகன்; மாலத் தீவில் அப்துல் ஹயூம், இஸ்லாமிய நெறிகளுக்கு எதிராக ஆட்சி நடத்துகிறார். மக்களுக்கு உரிமை இல்லை. அவரது ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும். ‘ரா’ அதிகாரிகள் தான், என்னிடம் உங்களை சந்திக்கச் சொன்னார்கள்”

-என்று கூறியவுடன், உமாமகேசுவரன் அதிர்ச்சியடைந்தார்.

“மாலத் தீவு பற்றி என்னிடம் ‘ரா’ அதிகாரிகள் எதுவும் சொல்லவில்லையே; அங்கே ஆட்சிக் கவிழ்ப்புக்கு நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார். “உங்களிடம் இது பற்றி பேசியிருப்பதாக ‘ரா’ அதிகாரிகள் என்னிடம் கூறினார்களே, உங்களிடம் ஏதும் கூறவில்லையா? அவர்கள் உங்களிடம் திட்டங்களை விரிவாகக் கூறுவார்கள். நீங்கள் அவர்களுடன் பேசி, உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள். நம்முடைய சந்திப்பின் நினைவாக, இந்தப் பரிசை பெற்றுக் கொள்ளுங்கள்”

-என்று கூறி, புத்தம் புதிய ‘மெர்சிடிஸ்’ கார் ஒன்றை பரிசாக வழங்கிவிட்டு அப்துல்லா விடைபெற்றார். இடையில் ஒருவார காலம் ஓடியது. மற்றொரு ‘ரா’ அதிகாரி, உமாமகேசுவரனை சந்தித்தார். கேரளாவின் துறைமுக நகரமான கொச்சியில் அடுத்து சந்திக்க வேண்டும்; இது வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் என்று கூறிச் சென்று விட்டார்.

இந்த முறை -இந்திய ராணுவ விமானத்தில் உமாமகேசுவரன் செல்லவில்லை. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கொழும்பி லிருந்து திருவனந்தபுரம் வந்தார். ‘ரா’ அதிகாரிகள் அவரை அங்கிருந்து காரில் கொச்சிக்கு அழைத்துச் சென்றனர். கொச்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிங்கப்பூர் கப்பல் ஒன்றில் இந்த முக்கிய சந்திப்பு 1987 அக்டோபர் 14 ஆம் தேதி நடந்தது. மாலத் தீவில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள் என்று ‘ரா’ அதிகாரிகளிடம் உமாமகேசுவரன் கேட்டார். அதற்கு ‘ரா’ அதிகாரிகள் இவ்வாறு பதிலளித்தனர்:

“இந்தியா மிகப் பெரிய நாடு; ராஜீவ் ஆசியாவிலேயே பெரும் தலைவராக வளர்ந்து வருகிறார். ஆனால், இது ஜெயவர்த்தனாவுக்கோ, சிங்கள அரசியல்வாதிகளுக்கோ புரியவில்லை. நாங்கள் அவர்களுக்கு இதைப் புரிய வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் செல்வாக்கு பெற்று, எல்லா இடங்களிலும் ஊடுருவி விட்டார்கள். இந்த நிலையில் ஜெயவர்த்தனா - ஜே.வி.பி. மற்றும் - விடுதலைப் புலிகளுக்கு நாங்கள் பாடம் கற்பிக்க விரும்புகிறோம்; அதற்கு ஒரு தளம் வேண்டும்; எனவே தான் மாலத்தீவைப் பயன் படுத்தத் திட்டமிட்டுள்ளோம்; ஏற்கனவே, ஆட்சி அதிகாரத் திலிருந்து இறக்கப்பட்ட தற்போதைய அதிபரின் அரசியல் எதிரிகளை முன்னிறுத்தி இதை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இதை நீங்கள் வெற்றிகரமாக செய்து முடித்து விட்டால், மாலத் தீவிலுள்ள இரண்டு தீவுகளை நீங்கள் தளமாகப் பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்கிறோம். அந்தத் தீவிலிருந்து கிடைக்கும் வருமானத்தையும் நீங்களே எடுத்துக் கொள்ளலாம்”

-என்று உமாமகேசு வரனுக்கு நம்பிக்கை ஊட்டினார்கள். மூன்று மணி நேரப் பேச்சு வார்த்தைக்குப் பின்பு உமாமகேசுவரன் மாலத் தீவில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு சம்மதித்தார்.

“பாலத்தீன மக்கள் விடுதலை முன்னணியிடம் பயிற்சி பெற்றவர்கள் என்னிடம் இருக்கிறார்கள்; எனக்குத் தேவை ஆயுதமும், பணமும் தான்”

-என்று உமாமகேசுவரன் கூறினார்.

“அது பிரச்சினையல்ல, கொழும்பில், உங்களுக்கு முதல் கட்டமாக அப்துல்லா (அவரும் அப்போது உடனிருந்தார்) ஒரு கோடி ரூபாய் இலங்கைக் காசு தருவார். எல்லாம் முடிந்த பிறகு ரூ.10 கோடி இலங்கைக் காசு தருகிறோம். அடுத்த வாரம் ஆயுதங்கள் உங்கள் கைகளில் கிடைக்கும்”

-என்று ‘ரா’ அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆயுதங்களை எங்கே வைப்பீர்கள் என்ற கேள்வியை ‘ரா’ அதிகாரிகள் கேட்டனர். மன்னார் மாவட்டத்தில் எங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்துக் கொள்கிறோம் என்றார், உமாமகேசுவரன். விடுதலைப் புலிகள் உங்கள் பகுதியில் ஊடுருவி, தாக்குதல் நடத்தினால் என்ன செய்வீர்கள் என்று ‘ரா’ அதிகாரிகள் கேட்டனர். சற்று நேரம் அவர்களே யோசித்துவிட்டு,

“உங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளை விடுதலைப் புலிகள் கைப்பற்றாமல் இருக்க இந்திய அமைதிப்படையின் கட்டுப்பாட்டின் கீழ் அதைக் கொண்டு வந்து விடுகிறோம்”

-என்று கூறினர். அந்தப் பகுதி அப்போது ‘அமைதிப் படை’யின் கட்டுப் பாட்டின் கீழ் வராமல் இருந்தது.

அதன்படி கொச்சின் சந்திப்புக்குப் பிறகு, புளோட் முகாம்கள் இருந்த முள்ளி குளம், செட்டிகுளம், முருங்கன் ஆகிய பகுதிகள், புளோட் ஒப்புதலோடு இந்திய ‘அமைதி’ப்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. அப் பகுதிகளை இணைக்கும் முக்கிய தரை வழிப் பகுதிகளில் இந்திய இராணுவத் தடை அரண்கள் உருவாக்கப்பட்டன. மாலத் தீவு ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான ஆயுதங்களைப் பாதுகாத்து வைப்பதற்காகவே, தமிழ் ஈழ மண்ணில் ‘ரா’ உளவுத் துறை இந்த நடவடிக்கைகளில் இறங்கியது.

அதே நேரத்தில் - தமிழ்நாட்டில் மண்டபத்துக்கு அருகே உள்ள தீவு ஒன்றில் வைத்து ‘ரா’ - ‘புளோட்’டுக்கு ஆயுதங்களை வழங்கியது. மண்டபத்துக்கு அருகே உள்ள ஒரு தீவிலேயே மூன்று பிரிவுகளுக்கு பயிற்சிகளும் தரப்பட்டன.

மாலத் தீவுக்குப் புறப்படுவதற்கான சமிக்ஞை கிடைத்தவுடன் மண்டபம் தீவிலிருந்து ஆயுதங்களும், ஆட்களும், தூத்துக்குடி துறைமுகம் கொண்டு வரப்பட்டனர். ‘அல் அகமத்’ என்ற போலிப் பெயர் ஒட்டப்பட்டிருந்த கப்பல் - 1988 நவம்பர் 2 ஆம் தேதி இரவு 11 மணிக்கு 72 பேருடனும் - ஆயுதங்களுடனும் புறப்பட்டது. இந்திய இலங்கை கடல் எல்லைகளைத் தாண்டி, சர்வதேச கடல் எல்லைக்குள் செல்லும் வரை, ‘ரா’வின் ஏற்பாட்டின்படி, இந்திய கப்பல் படை கப்பல்கள் பாதுகாப்பு தந்தன. சர்வதேச கடற்பரப்பில் வேறு ஒரு விசைப்படகு களுக்கு ஆட்களும், ஆயுதங்களும் மாற்றப் பட்டன. தூத்துக்குடியிலிருந்து புறப்பட்ட கப்பல், மீண்டும் தூத்துக்குடி துறைமுகம் திரும்பியது.

தாக்குதல்காரர்கள் - அதிகாலை ஒரு மணிக்கு மாலத் தீவு கடல்பகுதியை சேர்ந்த போது - நல்ல காற்றும் மழையும் வீசியது. இதனால் திசை மாறியது கலகக் காரர்களின் படகு! அதிபர் மாளிகையைக் கைப்பற்றி, காவல் அரண்களை தாக்கி, அதிபரை கைது செய்வதே திட்டம். திசை மாறிப் போய்விட்டதால் திட்டமிட்டபடி இருளில் வந்து இறங்க முடியாமல், பொழுது விடிந்துவிட்டது. கொழும்பிலிருந்து - உமாமகேசுவரன் கொண் டிருந்த வானொலி தொடர்பு, காற்று மழை காரணமாக செயலிழந்தது. துப்பாக்கியால் சுட்டு, அதிபர் மாளிகையை கலகக் காரர்கள் கைப்பற்றி விட்டார்கள். ஆனால், அதிபர் அங்கில்லை. அவர் வேறு ஒரு தீவுக்குப் போய் தங்கிவிட்டார்.

அடுத்து எதைத் தாக்குவது என்பதில் கலக்காரர்களிடையே குழப்பம். செய்தி யறிந்த மாலத் தீவு அதிபர் - தான் தங்கியிருந்த தீவிலிருந்தே, சர்வதேச உதவிகோரி, வானொலியில் வேண்டு கோள் விடுத்தார். அதிபரை கைது செய்யும் ‘ரா’வின் திட்டம் படு தோல்வியில் முடிந்தது. மாலத் தீவின் நட்பு நாடான பாகிஸ்தானோ, சீனாவோ, உதவிக்கு படையை அனுப்பி, காப்பாற்றிவிட்டால், ‘ரா’ உளவு நிறுவனத்தின் சதி அம்பலமாகி விடும் என்ற நிலையில், இந்தியாவே முந்திக் கொண்டு, படையை அனுப்புவதே புத்திசாலித்தனம் என்ற முடிவுக்கு ராஜிவ்காந்தி வந்தார். இந்திய விமானப் படைப் பிரிவு ஒன்றும், கப்பல்படைப் பிரிவு ஒன்றும் மாலத் தீவுக்கு உடனே அனுப்பப்பட்டது. இந்திய விமானப் படை விமானங்கள், தாக்கு தலுக்கு சென்றவர்களைக் கைது செய்து -அவர்கள், பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை விடுவித்தது. கலவரக் காரர்களை மாலத் தீவுக்கு அனுப்பி வைக்கும்போது, அவர்களுக்கு பாதுகாப்பாக செயல்பட்ட அதே இந்திய கப்பல் படை கப்பல்களே, அவர்களைக் கைது செய்வதற்கும் வந்தது, அது தான் வேடிக்கை.

நாடாளுமன்றத்திலே பேசிய பிரதமர் ராஜீவ்,

“நட்பு நாடு ஒன்றுக்கு உதவக் கூடிய நல்ல வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது”

-என்று பெருமையுடன் கூறிக் கொண்டார். இதற்குப் பின்னால் - இலங்கையுடன் மாலத் தீவுக்கு இருந்த வர்த்தகத் தொடர்புகள் குறைந்து இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்புகள் அதிகரித்தன. அதுவரை மாலத் தீவின் மொத்த இறக்குமதிப் பொருள்களில் 65 சதவீதம் இலங்கையிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. மாலத் தீவிலிருந்து மொத்த ஏற்றுமதியில் 10 சதவீதம் இலங்கைக்குச் சென்றது. இந்தியாவுடனான மாலத் தீவு வர்த்தகம், ஒரு சதவீதம் கூட கிடையாது. இந்தியா மாலத் தீவுக்கு விமான, கப்பல் படை அனுப்பியதைத் தொடர்ந்து நிலைமை தலை கீழானது. 1988-ல் 8.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருள்களை கொழும்பு மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. திடீரென 1989-ல் 5.8 மில்லியன் அமெரிக்க டாலராக இது சரிந்தது. அது வரை இலங்கையுடன் மாலத் தீவு கொண்டிருந்த உறவிலும், மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டது. இந்தியாவுடனான தனது உறவை மாலத் தீவு வலிமையாக்கிக் கொண்டது. இந்தியா மாலத் தீவுடன் உறவை வளர்த்துக் கொள்வதற்கான பல புதிய திட்டங்களை அனுமதித்தது.

ஆனாலும், மேலை நாட்டு ஊடகங்கள் - மாலத் தீவில் இந்தியாவின் தலையீடு பற்றி கடுமையான விமர்சனங்களை முன் வைத்தன!

“தெற்கு ஆசியாவின் போலீஸ்காரனாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள்ள திட்டமிட்டு நடத்திய சதியே இது”

-என்று எழுதின. வேறு இரண்டு கேள்விகளையும் மேலைநாட்டு ஊடகங்கள் முன் வைத்தன. கலகக்காரர்கள் இலங்கை இந்திய கடல் பகுதி வழியாக கப்பலில் எப்படி வரமுடிந்தது? அந்தப் பகுதிகள், “இந்திய அமைதிப் படையின்” (அய்.பி.கே.எப்.) முழு கண் காணிப்பில் இருக்கும்போது - இந்திய அமைதிப்படைக்குத் தெரியாமல், கலகக்காரர்கள் வந்தார்கள் என்பதை நம்ப முடியாது. அத்துடன், மாலத் தீவு அதிபர், உதவி கேட்டவுடனேயே இந்திய விமானப் படைகள், உடனடியாக அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவின் தொடர்பு இதில் உண்டு என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி இவை உறுதியாக்குகின்றன என்று மேலை நாட்டு ஊடகங்கள் எழுதின.

இப்படி ஈழப் போராளிக் குழுவை வேறு ஒரு நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பயன் படுத்தியது ‘ரா’.

அதற்காக - தமிழ்நாட்டிலேயே வைத்து ஆயுதங்களும் பணமும் தரப்பட்டுள்ளது.

இலங்கையில் ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை நிறைவேற்றச் சென்றதாகக் கூறப்பட்ட இந்திய இராணுவம், தமிழ் ஈழத்தில் இந்த ஆயுதங்களைப் பதுக்கி வைப்பதற்கு பாதுகாப்பு அரண் அமைத்து தந்தது.

ஆயுதங்களோடு கலகக்காரர்கள் இந்திய இலங்கைக் கடல்வழியாகப் பயணம் செய்ய பாதுகாப்பு தந்ததோடு இந்தியக் கப்பலையும் கொடுத்து உதவியது ‘ரா’.

கவிழ்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்தவுடன், நட்பு நாடகமாடி, உண்மைகள் அம்பலமாகாமல் தடுக்க, விரைந்து படைகளை அனுப்பியது.

இப்படி தேசிய சுய நிர்ணய உரிமைக்காக போராடும் இயக்கங்களை தங்களது மேலாண்மை அரசியலுக்காக அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காய் களாக உருட்டி, விளையாடியவை தான், இந்திய அரசும், அதன் உளவு நிறுவனங்களும்! அவர்கள்தான் சொந்த நாட்டின் விடுதலைக்குப் போராடும் போராளிகளை பயங்கரவாதி என்கிறார்கள்!

‘பாண்டிபசார்’ மோதலில் உளவுத்துறையின் சதி!

பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் என்ற பதவியில் அமர்த்தப்பட்டுள்ள முன்னாள் உளவுத்துறை இயக்குநர் எம்.கே.நாராயணன் - தமிழ்நாட்டில், விடுதலைப்புலிகள் ஊடுருவி விட்டதைப் போல், ஒரு பிரச்சாரத்தை உருவாக்கி வருவதை நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டினோம். அலுமினிய குண்டு, சைக்கிள் களில் பயன்படுத்தப்படும் ‘பால்ரசு’ போன்ற உதிரி பாகங்களைக் கொண்டு எவ்வளவோ பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக இந்தத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள எல்லோருமே - ஏதோ விடுதலைப் புலிகளின் ஆயுதத் தயாரிப்புக்காகவே தயாரித்து, கடல் வழியாகக் கடத்தி வருவதுபோல், ஒரு அச்ச உணர்வு தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பம்பாயைச் சார்ந்த ஒரு உற்பத்தியாளரை தமிழக உளவுத் துறை கைது செய்தது. “அலுமினிய குண்டுகள் தயாரிப்போர் எல்லோருமே விடுதலைப் புலிகளுக்கு ஆயுதத் தயாரிப்புக்காகவே உதவுகிறார்கள் என்று உளவுத் துறை கூறுவது உண்மையல்ல; கடந்த பல ஆண்டு காலமாகவே இவர் இந்தத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்” என்று கைதானவர் சார்பாக உயர்நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது. வாதத்தை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், அவருக்கு பிணை வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் பின்னணி பற்றி, உளவுத்துறை எந்தத் தகவலையும் வெளி யிடாததை ‘தினமணி’ நாளேடு ஆய்வுக் கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது (மார்ச் 25, திருச்சி பதிப்பு) கைதான அனைவரையும் ஒரே வழக்கின் கீழ் எப்படி இணைக்கலாம் என்று உளவுத்துறை திட்டமிடுவதே காரணம் என்று, அந்த ஏடு எழுதியுள்ளது. பொய் வழக்குகளே புனையப்படுகின்றனவா என்ற சந்தேகமே ஏற்படுகிறது.

‘டெகல்கா’ ஆங்கில வார ஏட்டில் அதன் செய்தியாளர் வினோஜ்குமார் எழுதியுள்ள கட்டுரை ஒன்று (ஜுன் 30, 2006) எம்.கே.நாராயணன் பற்றிய கருத்துகளை முன் வைத்துள்ளது. ‘எம்.கே. நாராயணன், விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் கடுமையாக எதிர்ப்பவர். அவரது செயல்பாடுகளில் உள்ளீடாகவே புலிகள் எதிர்ப்பே இருக்கும்’ என்று அக்கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.

“ஈழத் தமிழர்களின் ஒரே பிரதிநிதி விடுதலைப்புலிகள் அல்ல; ஈழத் தமிழர் பிரச்னைக்கு இறுதியான தீர்வு உருவாக வேண்டுமானால், அதற்கு பல்வேறு குழுக்களின் ஆதரவைப் பெற்றால்தான் இயலும்”

-என்பதே எம்.கே.நாராயணன் கருத்து என்பதையும் அக்கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.

ஈழத்தில் - சிங்கள ராணுவத்தை எதிர்த்து போராடும் ஒரே அமைப்பு விடுதலைப்புலிகள் தான். போர் நிறுத்த ஒப்பந்தம், இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத் துக்கும் இடையே தான் உருவானது. இலங்கை அரசே தமிழர்களின் ஒரே பிரதிநிதி விடுதலைப் புலிகள்தான் என்று ஏற்றுக் கொண்ட பிறகும்கூட எம்.கே. நாராயணன் - விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே தமிழர்களின் ஒரே பிரதிநிதியல்ல என்று கூறுவது அவரது விடுதலைப்புலிகள் எதிர்ப்புக் கண்ணோட்டத்தையே பிரதிபலிக்கிறது. 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இணையதளம் ஒன்றில், எம்.கே.நாரா யணன் எழுதிய கட்டுரையில், இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையே உருவான போர் நிறுத்த ஒப்பந்தத்தையே எதிர்த்தார். தனது மேலாண்மை உறுதிப்படுத்தும் நோக்கத்துடனே விடுதலைப்புலிகள் இந்த உடன் பாட்டை ஏற்றுள்ளனர் என்று எம்.கே. நாராயணன் அதில் எழுதியிருந்தார்.

“விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் நார்வே தூதர்கள் ஈடுபடவில்லை. விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையான கரும்புலிப்படையை கலைத்துவிட வேண்டும் என்று அதிபர் சந்திரிகா வலியுறுத்திய நிபந்தனையை புலிகள் நிராகரித்து விட்டார்கள். அவர்கள் தொடர்ந்து பயங்கரவாதிகளாகவே செயல்படப் போகிறார்கள் என்பதற்கு இதுவே சான்று”

-என்று எம்.கே.நாராயணன் அக்கட்டுரையில் விஷம் கக்கி இருந்தார்.

சிறீலங்காவின் ஒற்றுமையைக் காப்பாற்றுவதற்கும், விடுதலைப்புலிகளின் “வன்முறை” நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கும், எத்தகைய வழி முறைகளைப் பின்பற்றலாம் என்பது பற்றி இந்தியா மிகவும் கவலையுடன் பரிசீலிக்க வேண்டும்” என்று அந்தக் கட்டுரையை அவர் முடித்திருந்தார். போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகும்கூட, விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்த வேண்டும் என்று எழுதும் அளவுக்கு, எம்.கே.நாராயணனுக்கு, விடுதலைப்புலிகளின் மீதான பகைமை இருந்தது. மத்திய உள்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகிற ஆண்டறிக்கையில் விடுதலைப்புலிகள் பற்றிய குறிப்புகள் எதுவும் இடம் பெறுவது இல்லை. ஆனால், எம்.கே.நாராயணன், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட பிறகு, 2004-2005 ஆம் ஆண்டுக்கான உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில்,

“விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு ஆபத்தானதாகும்”

-என்ற குறிப்பு சேர்க்கப்பட்டது. தமிழ் ஈழத்தில் சுனாமி பேரழிவு உருவான நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர் வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசுடன் உள்ள பகையை ஒதுக்கி, விடுதலைப் புலிகள், அரசுடன் இணைந்து மனிதாபிமான புனர்வாழ்வுப் பணிகளில் செயல்பட நேசக்கரம் நீட்டியபோது, அதைக் குலைக்கச் செய்வதில், இந்திய உளவுத் துறைக்கு பெரும் பங்கு உண்டு என்று, ‘வின்’ தொலைக்காட்சியில் செய்தி விமர்சனம் வழங்கி வரும் டி.எஸ்.எஸ்.மணி, ‘டெகல்கா’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில் சுட்டிக் காட்டியுள்ளார்.

‘டெகல்கா’வின் இணையதளம் வெளியிட்டுள்ள மற்றொரு கட்டுரையில் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இடம் பெற்றிருந்தன. தமிழ்நாட்டில் அகதிகள் முகாம்களிலிருந்து இலங்கை ராணுவத்துக்கு உதவும் தமிழ்க் குழுக்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதற்காக நல்ல தொகை மாத ஊதியமாக அவர்களுக்கு தரப்படுகிறது. என்று செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவலை, ‘டெகல்கா’ சுட்டிக் காட்டியுள்ளது.

“இப்படி ஆட்கள் தேர்வு நடத்தியது, ‘ரா’ உளவு நிறுவனத்துக்கு தெரியும். ‘ஈ.என்.டி.எல்.எப்.’ என்ற இலங்கை அரசு ஆதரவு தமிழ்க் குழுவின் தலைவரான பரந்தன்ராஜன் என்பவர் தமிழ்நாட்டின் அகதி முகாம்களிலிருந்து, கருணா குழுவுக்காக ஆட்களை தேர்வு செய்து வருகிறார்” (The recruitment is being conducted with the knowledge of India’s externel inteligence agency RAW (Research and Analysis Wing) the ENDLF, reportedly headed by Parathan Rajan, has been recruiting cadres for the Karuna Group)

-என்றும் அக்கட்டுரை சுட்டிக் காட்டியுள்ளது.

1987 ஆம் ஆண்டு இலங்கையில் இந்திய ராணுவம் இருந்த போது - ‘ரா’ உளவு நிறுவன அதிகாரிகள் பரந்தன்ராஜன் தலைமையில் உருவாக்கியதுதான் ‘ஈ.என்.டி.எல்.எப்.’ என்ற குழுவாகும். இந்தியாவின் பினாமியாக செயல்பட்டது இந்தக் குழு. சென்னையிலும், பெங்களூரிலும் தங்கி செயல்படும் பரந்தன் ராஜன், அண்மையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயல்படும் கருணா குழுவோடு இணைந்துள்ளார். ‘தமிழ் ஈழ அய்க்கிய விடுதலை முன்னணி’ என்ற அரசியல் பிரிவையும் அவர் தொடங்கி யுள்ளார். இவை அனைத்தும் ‘ரா’ உளவு நிறுவனத்தின் ஏற்பாடாகவே இருக்கலாம் என்று, ‘டெகல்கா’வின் அந்தக் கட்டுரை கூறுகிறது.

‘வழக்கத்துக்கு விரோதமாக ராஜன் 1990 ஆம் ஆண்டிலிருந்து நீண்ட காலமாக இந்தியாவில் தங்கி சுதந்தரமாக விடுதலைப் புலிகளின் எதிர்ப்பு நடவடிக்கை களில் செயல்பட்டு வருகிறார். அவர் ‘ரா’வின் ஏஜென்ட் என்பதற்கு, இது அசைக்க முடியாத ஆதாரம்; விடுதலைப் புலிகளை எதிர்க்கும் சக்திகளை ஒருங்கிணைக்கும் தளமாக ‘ஈ.என்.டி.எல்.எப்’வை ‘ரா’ உளவு நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. (Given his (Paranthan Rajan) background, observers feel Rajan’s alliance with Karuna might be RAW’s handiwork)

-என்றும் அக்கட்டுரை கூறுகிறது. விடுதலைப்புலிகள் மட்டுமே ஈழத் தமிழர் பிரதிநிதிகள் அல்ல என்று எம்.கே. நாராயணன்கள் வலியுறுத்துவதற்கு காரணமே, இதுதான். இத்தகைய பினாமி துரோகக் குழுக்களை பேச்சு வார்த்தைகளில் பங்கெடுக்கச் செய்து தமிழர்களின் பிரச்சினையைக் குழப்பு வதிலேயே இவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஈழத் தமிழ்ப் போராளிகளை தமிழ்நாட்டிலோ, இந்தியாவின் வேறு மாநிலங் களிலோ அனுமதிக்க முடியாது என்று ஒருபுறம் கூறிக் கொண்டு, மறுபுறம், விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயல்படும் குழுக் களை உளவு நிறுவனங்கள், சுதந்திரமாக செயல்பட அனுமதித்துவரும், ‘இரட்டை வேடத்தை’ தமிழ்நாட்டு மக்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். இவற்றை எல்லாம் நன்றாக அறிந்து வைத்திருக்கும் அதிகார அமைப்பில் உள்ளவர்தான் எம்.கே. நாராயணன். விடுதலைப்புலிகளுக்கு எதிரான எம்.கே. நாராயணன் செயல்பாடுகள் 1982 ஆம் ஆண்டிலேயே துவங்கி விட்டது.

1982 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி சென்னை தியாகராயர் நகர் ‘பாண்டிபசாரில்’ இரவு 9.45 மணிக்கு, ஒரு சம்பவம் நடந்தது. அப்போது ஈழ விடுதலைக்கான போராளிக் குழுக்கள் எதுவுமே வளர்ச்சிப் பெறாத காலம். விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்த பிரபாகரன், இராகவன் ஆகியோரும், புளோட் அமைப்பைச் சார்ந்த உமாமகேசுவரனும், நேருக்கு நேர் சந்தித்த போது துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். உமாமகேசுவரன் காயமடைந்தார். பிரபாகரனும், சிவக்குமாரும் கைது செய்யப்பட்டனர். அடுத்த சில நாட்களில் உமா மகேசுவரனும் கைது செய்யப்பட்டார். தமிழ் நாட்டில், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். உத்தரவின் பேரில் அன்றைய காவல்துறை தலைமை இயக்குநர் மோகன்தாஸ் உரிய நடவடிக்கைகளை மேற் கொண்டார். அப்போது இந்திய உளவுத் துறையில் கூடுதல் இயக்குனராக இருந்தவர் எம்.கே.நாராயணன். சென்னை யில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, அடுத்த நாளே டெல்லியிலிருந்து சென்னைக்கு பறந்து வந்தார் எம்.கே.நாராயணன். காவல்துறை இயக்குனர் மோகன்தாசை சந்தித்து - பிரபாகரன், உமாமகேசுவரன் மீது நட வடிக்கை எடுப்பதில் அவசரம் காட்டா தீர்கள்; நடவடிக்கைகளைத் தள்ளிப் போடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். பிறகு முதலமைச்சர் எம்.ஜி.ஆரையும் சந்தித்து, இதையே வலியுறுத்தினார். ஆனால் முதல்வர் எம்.ஜி.ஆரோ, இது எங்கள் மாநிலத்தின் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை. இதில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று நேருக்கு நேராக கண்டிப்பாகக் கூறிவிட்டார். ராஜிவ் கொலை பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜெயின் ஆணைய விசாரணையின் போது காவல்துறை இயக்குநர் மோகன்தாஸ் அளித்த வாக்குமூலத்தில் (2.1.1996) இதைப் பதிவு செய்துள்ளார்.

பிரபாகரன், உமா மகேசுவரனைப் பிடித்துக் கொடுத்தால், ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று சிறீலங்கா அரசு அறிவித்திருந்தது. பிரபாகரனும், உமா மகேசுவரனும் சென்னையில் கைது செய்யப்பட்டு விட்டார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன், சிறீலங்காவின் காவல்துறை தலைமை அதிகாரி (அய்.ஜி.) ருத்ரா ராஜசிங்கம் உடனடியாக சென்னைக்கு பறந்து வந்தார். மத்திய அரசின் அனுமதியின்றி, இலங்கைக் காவல்துறை அதிகாரி தமிழ்நாடு வந்திருக்க முடியாது.

தமிழ்நாட்டில் அவர்களைக் கைது செய்து, காவலில் வைக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டாம் என்று உளவுத் துறை அதிகாரி எம்.கே. நாராயணன், தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டிய அவசியமென்ன? உடனடியாக - இலங்கை காவல்துறை தலைமை அதிகாரி, ஏன், தமிழகத்துக்கு வர வேண்டும்? இந்த நிகழ்வுகளுக்கு இடையே தொடர்புகள் உண்டு. கைது செய்யப்பட்ட பிரபாகரன், உமாமகேசுவரன் உட்பட நான்கு ஈழப் போராளிகளையும், தமிழ்நாட்டில் காவலில் வைக்காமல், சிறீலங்கா அரசிடம் ஒப்படைக்க, இந்திய உளவுத்துறை திட்டமிட்டதே இதற்குக் காரணம். இப்படி ஒரு சதி நடக்கிறது என்ற நிலையில், அன்று காமராசர் காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வந்த பழ. நெடுமாறன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்ட ஈழப் போராளிகளை இலங்கை அரசிடம் ஒப்படைக்கக் கூடாது என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் தமிழக அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்தி யது. இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அ.தி.மு.க. சார்பில் பிரதிநிதியை எம்.ஜி.ஆர். அனுப்பி வைத்தார். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட முதல்வர் எம்.ஜி.ஆர்., கைது செய்யப்பட்ட ஈழப் போராளிகளை மரியாதையுடன் நடத்துமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டார். அவர்களை இலங்கைக்கு நாடு கடத்தும் திட்டமில்லை என்று காவல்துறை இயக்குநர் மோகன்தாஸ் அறிவித்தார். எதிர்கட்சியிலிருந்த கலைஞரும், போராளிகளை இலங்கை அரசிடம் ஒப்படைப்பதை எதிர்த்துப் பேசிய தோடு, உடனடியாக பிரதமர் இந்திரா காந்திக்கு தனது தூதர் ஒருவரை அனுப்பி, உளவுத் துறையின் நாடு கடத்தும் முயற்சிகளை நிறுத்தக் கூறினார். உளவுத் துறையின் சதித் திட்டம் தோல்வியில் முடிந்தது.

எம்.கே.நாராயணன் தொடர்பான மற்றொரு சம்பவத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில், ராஜீவ் கொலை செய்யப்பட்டார். அப்போது இறந்து போன ஹரிபாபுவின் கேமிராவுக்குள் சிக்கிய புகைப்படம் தான், கொலைகாரர்களை அடையாளம் காட்டும் ஒரே ஆதாரமாக இருந்தது என்று சிறப்புப் புலனாய்வுக் குழு கூறியது. ஆனால், சம்பவம் நடந்த அடுத்த நாளே - அதாவது 22.5.91-ல் அன்றைய உளவுத் துறை இயக்குனராக இருந்த எம்.கே. நாராயணன், பிரதமர் அலுவலகத்தில் சில வீடியோ காட்சிகளை ஆவணமாக சமர்ப்பித்துள் ளார். ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தின் வீடியோ படத்தை ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது என்றும், ராஜீவுக்கு மாலை அணிவித்த அந்தப் பெண் யார் என்பதை கண்டறிய முயற்சிக்கப்பட்டது என்றும், உளவுத் துறை குறிப்பை எழுதியிருந்தது. ஆனால், ராஜீவ் கொலை பற்றி விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் அந்த வீடியோ படத்தை உளவுத் துறை சமர்ப் பிக்கவே இல்லை. சிறப்புப் புலனாய்வுத் துறையின் இயக்குனர் டி.ஆர். கார்த்தி கேயன், ராஜீவ் கொலையில் வெளிநாட்டு சதி பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட வர்மா ஆணை யத்தின் முன் அளித்த வாக்கு மூலத்தில் இதைப் பதிவு செய்துள் ளார். (வர்மா ஆணையம் அறிக்கை 11வது அத்தியாயம்-53வது பக்கம்)

உளவுத் துறை இயக்குனராக இருந்த எம்.கே.நாராயணன், ராஜீவ் பாதுகாப்புப் பிரச்சினையில் தனது கடமையை ஒழுங்காக செய்யவில்லை என்று வர்மா ஆணையம் சுட்டிக் காட்டியது. அப்போது ராஜீவ்காந்தி, இந்தியாவின் பிரதமர் அல்ல. எதிர்க் கட்சித் தலைவர். தேர்தல் பிரச்சாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூருக்கு வருகிறார். அன்று பிரதமர் பதவியில் இருந்தவர் - சந்திரசேகர்.

“உளவுத் துறை இயக்குனராக இருந்த நாராயணன், ராஜீவுக்கு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் அதிருப்தி கொண்டிருந்தார். ஆனால் வெளியில் சொல்ல முடியாத சில காரணங்களால், அவரால் ஏதும் செய்ய முடியவில்லை. எனவே ராஜீவ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி இதுவரை அவர் மவுனம் சாதிக்கிறார்”

-என்று வர்மா ஆணையம் எம்.கே.நாராயணன் பற்றி குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமல்ல

“ஆணையம் இப்படிக் கருதுவது உண்மை என்றால், உயர்ந்த பதவியில் உள்ள ஒருவருக்கு அத்தகைய இயலாமை ஏன் ஏற்பட்டது. இது மோசமான கவலைக்குரிய பிரச்சினை. இதற்கான காரணத்தைக் கண்டுபிடித்தாக வேண்டும். அதை அகற்ற வேண்டும். அதுவே ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்தது”

“14.24: The Commission is left with the impression that the DIB M.K. Narayanan was not satisfied with the security arrangements for Rajiv Gandhi and was apprehensive about his

safety, but for some undisclosed reason he was ineffective and has chosen to maintain silence even now. If the impression of the commission be correct, such disability in the holder of a high office is disturbing and its cause needs to be discovered and eradicated for the health of policy” (Page 75)

-என்றும் வர்மா ஆணையம் இடித்துக் காட்டியது.

ராஜீவ் காந்திக்கு உரிய பாதுகாப்பு தரப்படாமல் தடுத்தது யார்? அந்த சக்திகளுக்கு எம்.கே. நாராயணன் உடந்தையாக இருந்தது ஏன்? அந்த ரகசியங்களை, எம்.கே.நாராயணன் வெளி யிடாதது ஏன்? ஸ்ரீபெரும்புதூர் கூட்டத் தின் ‘வீடியோ’வை உளவுத் துறை எடுத் திருந்தும், அதை சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன் சமர்ப்பிக்காமல் போனதற்கு பின்னணி என்ன? இவை இன்றும் விடை தெரியாத கேள்விகள்.

வர்மா ஆணையத்தின் முன் இப்படி சந்தேகக் கூண்டில் நிறுத்தப்பட்டவர்தான் எம்.கே.நாராயணன். அவர் தான், இப்போது, பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர். அதுவும் ராஜீவ் துணைவியார் சோனியாவின் தலைமையில் செயல்படும் கூட்டணி ஆட்சியில்! அதே நாராயணன் தான் இப்போது விடுதலைப் புலிகளின் தளமாக தமிழகம் மாறிவிட்டதைப்போல் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு, திரைமறைவில் காய்களை நகர்த்திக் கொண்டிருப்பவர்.

ஆட்சிகள் மாறினாலும் - இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சியின் அதிகாரங்களை ஆட்டிப் படைக்கும் சக்திகள் தங்களது பார்ப்பன மேலாதிக்கப் பார்வையுடனே திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துகின்றன.

பிற்சேர்க்கை

பிரபாகரன் சந்தித்த “மரணங்கள்”

ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவரான பிரபாகரனை கொலை செய்வதற்கு 1989 ஆம் ஆண்டே உளவு நிறுவனங்கள் திட்டம் தீட்டின. அதற்காக, விடுதலைப் புலிகள் இயக்கத்திற் குள்ளேயே ஆட்கள் தயாரிக்கப்பட்டனர். 1989 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி இந்தியாவின் நாளேடுகளில் பிரபாகரன், அவரது இயக்கத்தில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மாத்தையாவால் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்துவிட்டார் என்ற செய்தியை தலைப்பு செய்தியாக வெளியிட்டது. ‘எந்தச் செய்தி யானாலும் ஆதாரத்துடன்தான் வெளியிடுவோம்’ என்று மார்தட்டும் ‘இந்து’ நாளேடும், இந்தப் பொய்ச் செய்தியை வெளி யிட்டது. உளவு நிறுவனங்கள் தயாரித்திருந்த திட்டம் தான் செய்தியாகப் பரப்பப்பட்டது என்பதுதான் உண்மை. ஊகங் களுக்கே இடமில்லாமல் உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாகவே அது இருந்தது.

1984 ஜூலை 24 ஆம் தேதி ‘இந்து’ நாளேடு வெளியிட்ட செய்தியை அப்படியே கீழே வெளியிடுகிறோம்.

“சென்னை-ஜூலை 13 - ‘தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர்’ வி. பிரபாகரன், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மாத்தையா குழுவினரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். சில நாட்களுக்கு முன் இது நடந்துள்ளது. சிறீலங்காவின் வடக்கு கிழக்கு மாகாண அரசியல் வட்டாரங்கள் இந்த செய்தியைத் தெரிவித்துள்ளன. சுட்டுக் கொல்லப்பட்ட பிரபாகரன் உடல், வவுனியாவி லிருந்து வட கிழக்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அனந்த பெரிய குளம் என்ற கிராமத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. வடக்கு கிழக்குப் பகுதியைச் சார்ந்த பல்வேறு அரசியல் பிரிவினர், கடந்த இரண்டு நாட்களாக இதைப் பற்றியே பேசி வருகின்றனர். விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவராக, மாத்தையா அறிவித்துக் கொண்டுவிட்டார். இப்படி மாத்தையா தன்னை தலைவராக அறிவிக்கும் “வீடியோ கேசட்” மக்களிடையே வலம் வந்து கொண்டிருக் கிறது. துப்பாக்கி சூட்டில் -மாத்தையாவும் காயமடைந்துள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.

லண்டனில் உள்ள விடுதலைப் புலிகள் பிரதிநிதியிடம், இது பற்றி தொடர்பு கொண்டு கேட்டபோது, இது பற்றி எதுவும் சொல்ல மறுத்ததோடு, இந்த செய்திக்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை.”

-என்று செய்தி வெளியிட்டது ‘இந்து’ ஏடு.

புலிகளின் முன்னணி தலைவர்களில் ஒருவரான கிட்டுவும், துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது என்றும், பிரபாகரனுக்கு எதிரான போட்டிக் குழு, பிரபாகரனையும், அவரது ஆதரவாளர்களையும் வவுனியா காட்டுப் பகுதிக்குள் முடக்கிவிட்டது என்றும், அந்தப் பகுதியில் இரு தரப்பினருக்கு மிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருவதாகவும், முக்கியமான பலரும் கொல்லப்பட்டுவிட்டதாகவும், சிலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்த செய்தி கூறியது. இரு போட்டிக் குழுவினரும் தங்களுக்குள் இந்தத் தகவல்களை பேசிக் கொண்டபோது, வவுனியாவுக்கு அருகே உள்ள கொரியங்குளம் கிராமத்தில் இந்த உரையாடல்கள் இடைமறித்துக் கேட்கப் பட்டன என்றும் ‘இந்து’ ஏட்டின் செய்தி கூறியது. பிரபாகரன் சடலம் வைக்கப்பட்டுள்ள அனந்த பெரியகுளம் கிராமத்தில், கடந்த இரண்டு நாட்களாக மக்கள் அவருக்கு மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தி வருவதாகவும் ‘இந்து’ ஏட்டின் செய்தி கூறியது. இப்படி விரிவான “உண்மைகளை” வெளியிட்ட “தரம் நிறைந்த” ‘இந்து’ பார்ப்பன ஏடு, (4 பத்திகள் - 450 வார்த்தைகள்) செய்தியின் கடைசியில் இவை எல்லாம் புரளிகள் என்று விடுதலைப்புலிகள் வெளியிட்ட மறுப்பை இரண்டே வரிகளில் போட்டு முடித்துவிட்டது. உயிர்த் துடிப்புடன் உலகமே வியக்கும் விடுதலைப் போராட்டத்தைத் தலைமை ஏற்று நடத்திய ஒரு தலைவருக்கு அவர் உயிருடன் இருக்கும் போதே, ‘மரணச் செய்தி’ வெளியிட்ட, இந்த ஏடுகள், அதற்காக ஒரு வருத்தம்கூட இது காலம்வரை தெரிவித்ததில்லை. இந்த செய்திக்கான பின்னணி என்ன? இந்திய உளவு நிறுவனம் திட்டமிட்டு உருவாக்கிய சதித் திட்டம் தான், இந்த செய்தியின் பின்னணி. தங்களுக்கு ஆதரவாக விடுதலைப்புலிகள் இயக்கத் திலேயே - மாத்தையாவைப் பிடித்து ¬அவர் மூலம், பிரபாகரன் வாழ்வை முடிக்கத் திட்டம் தீட்டப்பட்டது.

ஜெயவர்த்தனாவைத் தொடர்ந்து சிறீலங்காவின் அதிபர் பதவிக்கு வந்த பிரேமதாசா, வடக்கு கிழக்கில் இந்திய ராணுவம் நிலை கொண்டிருந்ததைக் கடுமையாக எதிர்த்து வந்தார். 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஒன்றாம் தேதி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரேமதாசா, “இந்திய அமைதிப்படை உடனடியாக வெளியேற வேண்டும்” - என்று அறிவித்ததோடு, வெளியேறுவதற்கு காலக் கெடுவையும் நிர்ணயித்தார். 1989, ஜூலை 29 தான் அவர் நிர்ணயித்த காலக் கெடு. அந்தத் தேதிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதுதான் ராஜீவ் ஜெயவர்த்தனா உடன்பாடு அமுலுக்கு வந்த நாள். 1989 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதியோடு, ஒப்பந்தத்தின் இரண்டாவது ஆண்டு முடிவடைகிறது. எனவே பிரேமதாசா, இந்திய ராணுவம் வெளியேறுவதற்கான ‘கெடு’வை அந்தத் தேதியில் நிர்ணயித்தார்.

பிரேமதாசா இதை அறிவித்த 1989 ஜூன் முதல் தேதியிலிருந்து அவர் கெடு நிர்ணயித்த ஜூலை 29 ஆம் தேதிக்குள் ஒருவர் பின் ஒருவராக ஈழத்தின் முக்கிய தமிழர் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

1989 ஜூலை 13 ஆம் தேதி தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அடுத்த நான்கு நாட்களில், ஜூலை 17-ல் ‘புளோட்’ இயக்கத் தலைவர் உமா மகேசுவரன் கொல்லப்பட்டார்.

அடுத்த பத்து நாட்களில் ஜூலை 23-ல் ‘இந்து’ ஏட்டின் வழியாக பிரபாகரன் “கொல்லப்பட்டார்”.

“இந்திய ராணுவத்துக்கு எதிராக பிரேமதாசா குரல் கொடுத்த ஜுன் முதல் தேதியிலிருந்து அவர் கெடு நிர்ணயித்த ஜூலை 29க்குள் இந்தக் கொலைகள் திட்டமிட்டப்படி நடந்தன. இந்த சதி வலைக்குள் சிக்காத தலைவர் பிரபாகரன் மட்டுமே!”

-என்று எழுதுகிறார், ஆய்வாளர் சச்சி சிறீகாந்தா, தனது ‘Pirabhakaran Phenomenon’ என்ற நூலில்.

மூன்று முன்னணித் தலைவர்களை கொலை செய்யும் திட்டத்தை உருவாக்கியவர்கள் உளவுத் துறையினரே என்று கருதுவதில் எந்த தவறும் இருக்க முடியாது.

(It may not be wrong to infer that Indias intelligence operators had planned assiduously to eliminate the three leading figures)

-என்றும் சச்சி சிறீகாந்தா சுட்டிக் காட்டுகிறார்.

பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய தளபதியாக செயல்பட்டு வந்த மாத்தையா, இந்திய உளவு நிறுவனம் வீசிய வலையில் வீழ்ந்தார். 1994 ஆம் ஆண்டு ‘இந்தியா டுடே’ இதழில் (மார்ச் 15) ஆர். பதக், பி. ஜெயம் ஆகியோர் இது பற்றி எழுதிய விரிவான கட்டுரை ஒன்று, இது தொடர்பான பல செய்திகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.

“1993 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி - சர்வதேசக் கடலில் சென்று கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் ‘எம்.வி. அகத்’ கப்பலை - இந்தியாவின் கடலோரப் பாதுகாப்புப் படை சுற்றி வளைத்தபோது, கப்பலில் இருந்த, விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதி கிட்டு, கப்பலுக்குத் தீ வைத்துக் கொண்டு, தன்னைத் தானே அழித்துக் கொண்டார். கிட்டு கப்பலில் வரும் தகவலை இந்திய உளவு நிறுவனத்துக்கு முன்கூட்டியே தந்தது மாத்தையாவும், யோகி யோக ரத்தினமும் தான் என்று பிரபாகரன் குற்றம் சாட்டினார். 1989 - 90 இலங்கை அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் அரசியல் தீர்வுக்கு மாத்தையா உடன்பட வேண்டும் என்று கூறியதை, பிரபாகரன் ஏற்கவில்லை. இந்தக் கருத்து வேறுபாடு, மேலும் தீவிரமடைந்தது தொடர்ந்து 1991-ல் நடந்த ஆணையிரவு தாக்குதலில் கிடைக்க வேண்டிய வெற்றி, கடும் பின்னடைவை சந்தித்தது. இதற்குக் காரணம் மாத்தையாவே என்று குற்றம் சாட்டினார் பிரபாகரன். தொடர்ந்து 1992 மே மாதத்தில் மாத்தையாவுக்கு தரப்பட்ட பொறுப்புகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து நவம்பரில் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அருகே பிரபாகரன் தங்கியிருந்த மறைவிடம், குண்டுவீச்சுக்கு உள்ளானது. புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அவரது உதவியாளர் 1993 ஜன.7-ல் கொல்லப்பட்டார். அடுத்த பத்து நாட்களில் ஜனவரி 16-ல் கிட்டு வந்த கப்பல் இந்திய கப்பல் படையால் சுற்றி வளைக்கப்பட்டது. மாத்தையாவும், அவரது பழைய நண்பரான என்ஜினியர் என்று அறியப்பட்ட மாணிக்கவாசகம் என்பவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். மாத்தையாவின் ஆதரவாளர்கள் 120 பேர் கைது செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகளின் ராணுவ நீதிமன்றம்

-1993 டிசம்பர் 19 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் கிட்டுவின் மரணத்துக்குக் காரணமானவர் மாத்தையா தான் என்றும், ‘ரா’ (RAW) உளவு நிறுவனத்தோடு சேர்ந்து பிரபாகரனை கொல்வதற்கு மாத்தையா சதித் திட்டம் தீட்டினார் என்றும், ‘ரா’வின் முகவராக மாத்தையா செயல்பட்டார் என்றும் புலிகளின் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது”

-என்று ‘இந்தியா டுடே’ அக்கட்டுரையில் சுட்டிக் காட்டியது.

1991-ல் ராஜீவ் கொலை நடந்தபோது மாத்தையா, விடுதலைப்புலிகள் இயக்கத்தில், 2வது தலைவராகவே இருந்தும், ராஜீவ் கொலை வழக்கில், பிரபாகரனையும், பொட்டு அம்மானை யும் சேர்ந்த இந்திய உளவுத் துறை, இரண்டாவது இடத்தில் இருந்த மாத்தையாவை, குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கவில்லை என்பது மாத்தையா மீது, உளவுத் துறை கொண்டிருந்த நெருக்கத்தை உறுதிபடுத்துவதாகவே இருக்கிறது.

பிரபாகரனின் இரண்டாவது “மரணம்”

1989 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் - பிரபாகரனை “மரணமடையச்” செய்த உளவு நிறுவனங்கள் 2005 ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் ஒருமுறை ‘மரணமடைய’ச் செய்தன. 2005 ஜனவரி 8 ஆம் தேதி இலங்கை அரசுக்குச் சொந்தமான சிறீலங்கா வானொலி, சுனாமி பேரழிவில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனும், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும், இறந்துவிட்டதாக அறிவித்தது.

கொழும்பிலிருந்து வெளிவரும், ‘அய்லேன்ட்’ நாளேடு, பிரபாகரன் சடலத்தை எடுத்துச் செல்ல மிகவும் விலை உயர்ந்த சவப்பெட்டி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள், சுனாமி நிவாரணப் பொருள்களோடு, கடத்தப்பட்டுள்ளது என்று செய்தி வெளியிட்டது. சிறீலங்கா ராணுவத் துணை தளபதி அட்மிரல் தயாசந்த கிரி, இந்தச் செய்தியை வெளியிட்டதாக, அரசு வானொலி அறிவித்தது. ‘ஏ.எஃப்.பி.’ என்ற சர்வதேச செய்தி நிறுவனமும் இந்த செய்தியைப் பரப்பியது. சிங்களர்களின் இணைய தளங்களில் இது பற்றி ஏராளமான கருத்துகள் குவிந்தன. உதாரணத்துக்கு ஒரு சில:

“இறந்தவர்களை அப்படியே விட்டுவிடுவோம்; வியாதி பரவி, வியாதியாலேயே அவர்கள் அழிந்து போய் விடுவார்கள். எகிப்தில் பிளேக் நோய் ஏற்படுத்திய அழிவு போல் இப்போதும், அங்கே நடந்திருக்கிறது. மனிதர்களால் விருப்பமில்லாத - செய்து முடிக்கவியலாத ஒரு செயலை, இப்போது கடவுளே செய்து முடித்துள்ளார்.”

“ஒரு கொடும் வில்லனை ஒழிப்பதற்கு, இத்தகைய சுனாமிகளால் தான் முடியும்”.

“சுனாமியால், காப்பகத்தில் இருந்த குழந்தைகள் இறந்துவிட்டார்கள். புலிகள் ராணுவத்தில் சிறுவர்கள் மடிவதைப் போல், இவர்கள் கதையும் முடிந்து விட்டதாகவே கருதுவோம்.”

“இனி, அவர்களின் தலைவர்கள் இடுப்பில் பெரிய குண்டை கட்டிக் கொண்டு, அதை வெடிக்க வைத்து சாகட்டும்”

-இப்படி எல்லாம் சிங்களர்களின் இணையத்தளங்களில் மகிழ்ச்சிகள் பரிமாறப்பட்டன!

மகிழ்ச்சி சிங்களர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் உளவு நிறுவனங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் தான்!

இந்திய அரசின், முன்னாள் உளவுத் துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பி.இராமன், இப்போதும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கட்டுரைகளை எழுதி வருபவர். சென்னையில், ஆய்வு மய்யம் ஒன்றின் இயக்குனர் (Director, Institute of Topical Studies),, உளவு நிறுவனங்களின் கருத்துகளைப் பிரதிபலிப்பவர். பிரபாகரனின் ‘இரண்டாவது மரணம்’ பற்றி அவர் ஜன.10, 2005 இல் இணையதள கட்டுரையில் இவ்வாறு எழுதினார்.

“விடுதலைப்புலிகள் அமைப்பு கொடூரமானது. பிரபாகரன் உலகிலே மிகவும் கொடூர பயங்கரவாதி. அவருடைய மரணத்துக்குக்கூட யாரும் கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியமில்லை. (One need not shed any tears over his death) உண்மையிலே அவர் இறந்திருந்தால் இலங்கைத் தமிழர்களுக்கான தேவை, பிரபாகரன் இல்லாத விடுதலைப் புலிகள் அமைப்பு. விடுதலைப் புலிகள் பிரபாகரனைத் துரத்தி அடித்துவிட்டு, பயங்கரவாதத்தைக் கைவிட்டால், இந்தியாவும், சிறீலங்காவும், விடுதலைப்புலிகளோடு இணைந்து செயல்படத் தயாராக உள்ளது. இத்தகைய நிலையை உருவாக்க சிறீலங்கா தலைவர்கள், ராஜ தந்திரத் துடன் குறுகிய அரசியலைக் கடந்து செயல்படவேண்டும்.”

-இதுதான் பிரபாகரனின் மீது திணிக்கப்பட்ட “கற்பனை மரணத்துக்கு” இந்தியாவின் மூத்த உளவு அதிகாரியாக இருந்த பார்ப்பனர் தெரிவித்த கருத்து. பிரபாகரன் தலைமையை அழித்துவிட - ஒவ்வொரு முறையும் திட்டம் தீட்டி தோல்வி அடைந்த உளவுத் துறையினர் மீண்டும், அதே நிலையில் உறுதியுடன் செயல்பட்டு இருப்பதையே இது உணர்த்துகிறது.

1989 ஆம் ஆண்டில், பிரபாகரனின் ‘மரணச் செய்தியை’ அறிவித்த ‘இந்து’ பார்ப்பன நாளேடு, அதற்காக வெட்கப்பட்டு இப்போது ஒதுங்கிடவில்லை. தமிழ்நாட்டில், மீண்டும் ஒரு ‘கற்பனை மரணச்’ செய்தியை வெளியிடாமல், பல ஏடுகளும், ஒதுங்கிக் கொண்ட நிலையில் பார்ப்பன ‘இந்து’ மட்டும், மீண்டும் பிரபாகரன் ‘மரணச் செய்தியை’ வெளியிட்டு, தனது தற்கால மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டது.

ஜன. 8 ஆம் தேதி இலங்கை அரசு வானொலி, இந்தப் பொய் செய்தியைப் பரப்பிய உடனேயே அதே நாளில், விடுதலைப்புலிகள் அமைப்பு, இதற்கு மறுப்பைத் தெரிவித்து விட்டது. மிகவும் கீழ்த்தரமான முறையில் உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பும் இலங்கை அரசு வானொலிக்கு, கடும் கண்டனத்தைத் தெரி வித்து, அந்த செய்தி அப்பட்டமான பொய் என்று விடுதலைப் புலிகளின் மறுப்பு அறிக்கை கூறியது. அந்த மறுப்பு வந்ததற்குப் பிறகும்கூட, ‘இந்து’, பிரபாகரன் மரணச் செய்தியை வெளியிட்ட தோடு - “பிரபாகரன் எங்கே?” என்ற தலையங்கமும் தீட்டியது குறிப்பிடத்தக்கது.

“சுனாமியால் - தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது, அவர்களை நேரில் சந்திக்க பிரபாகரன் ஏன் வரவில்லை? இது போன்ற அசாத்திய சூழ்நிலைகளில்கூட, அவர் தனது பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படலாமா?”

-என்றெல்லாம் கேட்ட ‘இந்து’,

“பிரபாகரன் இறந்துவிட்டார் - என்ற செய்தியை புலிகள் திட்டவட்டமாக மறுக்கவில்லை. அவர்களின் மறுப்பு அறிக்கையில் உறுதியாகத் தெரிவிக்கப்படவில்லை”

-என்று எழுதி, பிரபாகரன் இறந்த செய்தியை மீண்டும் உண்மையாக்கவே முயற்சித்தது. இதுதான் ‘பார்ப்பனர்களின் பத்திரிகை தர்மம்’ போலும்!

பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாக உளவுத்துறை பரப்பிய செய்தி - ‘ஏ.எஃப்.பி.’ செய்தி நிறுவனத்திடமிருந்து இலங்கை அரசு வானொலிக்குப் போய் அங்கிருந்து ‘இந்து’ ஏட்டுக்கு வந்து - சிங்கள இணையதளத்துக்குப் போய் ‘இந்து’வின் தலையங்கத்தில் வலம் வந்து, மீண்டும் உளவுத் துறை உருவாக்கிய அமைப்புகளின் வழியாக பிரச்சாரத்துக்கு வந்தது. ஆம்; பிரபாகரன் “மரணமடைந்த” அந்த “செய்தியை” உளவுத்துறையின் உருவாக்கமான கருணா மீண்டும் “உறுதி” செய்தார்.

‘ஜன. 14, 2005 அன்று பிரபாகரன் இறந்து விட்டார்; இறந்த உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 500க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைவர்களும் மரணமடைந்துவிட்டனர். இறந்தவர்களில் பொட்டு அம்மான், பிறைஹரன் ஆகியோரும் அடங்குவர். பிரபாகரனின் சடலம் 12 ஆம் தேதி பகல் 11.30 மணிக்கு கண்டெடுக்கப்பட்டது. சுனாமி அலையில் இழுத்துச் செல்லப்பட்ட பிரபாகரனின் சடலத்தை, படகுகளில் சென்று, விடுதலைப்புலிகள் தேடியபோது சடலம் கிடைத்தது. சடலம் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தது. ஆனாலும், புலிகள் அது பிரபாகரன்தான் என்பதை உறுதிப்படுத்தினர்.

வன்னியில் உள்ள எனது ஆதரவாளர்கள் இந்த செய்தியை எனக்குத் தெரிவித்தனர். பொட்டு அம்மானும், அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவரும், மரணமடைந்த செய்தி ஏற்கனவே உறுதியாகியுள்ளது. முக்கியத் தலைவர்களுக்குள்ள மரியாதையோடு, பொட்டு அம்மான், ‘மாவீரர்’ துயிலுமிடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அதற்கு பிரபாகரன் வரக்கூடும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், பிரபாகரன் அனுப்பியதாக ஒரு இரங்கல் செய்தியை பால்ராஜ் படித்தார். புலிகளின் பல பதுங்கு குழிகளில் தண்ணீர் புகுந்துவிட்டது. புலிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வன்னி மருத்துவமனை முற்றிலும் நாசமாகிவிட்டது. மருத்துவமனையில் இருக்கும்போதுதான் பொட்டு

அம்மான் இறந்தார். ஆனாலும், விடுதலைப்புலிகள் இந்த உண்மைகளை வெளிப்படுத்தவில்லை. தங்களுடைய தலைவர் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகக் கூறி வருகிறார்கள். நாங்கள் சவால் விடுகிறோம். பிரபாகரன் உயிருடன் இருப்பது உண்மையானால் அவர் வீடியோ மூலம் பொது மக்களிடம் தோன்றி பேசட்டும்; பேசுவாரா? (I challenged if Pirabaharan is alive, let him Video a statment about the latest situation) -

இதுதான் பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்று சவால் விட்டு - ஏராளமான “உண்மைத்” தகவல்களை தனது வன்னி ஆதரவாளர்கள் மூலம் திரட்டி, கருணா வெளியிட்ட அறிக்கை Lanka Truth (சிறிலங்கா உண்மை) என்பது கருணா அறிக்கை வெளியிட்ட அந்த இணைய தளத்துக்குப் பெயர். சிறீலங்காவின் உண்மை என்பது எது என்பதை நன்றாகவே இந்த செய்தி நாட்டுக்கு உணர்த்தியிருக்கும்.

உயிருடன் இருக்கும் பிரபாகரனும், பொட்டு அம்மானும் இந்த செய்தியைப் படித்து, சுனாமி சோகத்திலும் எப்படி சிரித்திருப்பார்கள் என்பதை வாசகர்கள் கற்பனை செய்து கொள்ளலாம். உளவுத் துறையின் “திறமை” மிக்க பிரச்சார யுக்திகளுக்கு இது ஒரு மரண அடி.

சந்திரிகாவின் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான ‘தினகரா’ தலைப்பு செய்தியை இப்படி வெளியிட்டது. Prabakaran, no, no, no - Dinakara States! “பிரபாகரன் இல்லை; இல்லை; இல்லை; தினகரா அறிவிக்கிறது.”

இது சந்திரிகா குமாரதுங்காவின் நேரடி மேற்பார்வையில் வெளிவந்த ஏடு என்பது குறிப்பிடத்தக்கது. சுனாமி பேரலையால் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் பிணமாகிய சூழ்நிலையில் பிரபாகரன் மரணத்தைக் கொண்டாடி மகிழும் மனநிலையில் தான் சிங்கள உயர்மட்டத் தலைவர்களும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் களும் இருந்தனர் என்பதே, இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். நாட்டின் பிரதமர் பதவியில் இருந்த சந்திரிகாவே தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏட்டில் பிரபாகரன் மரணத்தைக் கொண்டாடி மகிழ்கிறார். நூற்றாண்டு கண்ட பார்ப்பன ‘இந்து’ ஏட்டின் ஆசிரியர் என்.ராம் - பிரபாகரன் மரணத்தை செய்தியாக்கி

-அந்தப் பொய்யை தலையங்கமாகத் தீட்டும் வெட்கக் கேடான நிலைக்கு கீழே இறங்கிச் சென்றிருக்கிறார். பரப்பப்படும்

புரளிகளுக்கு தலையங்கம் தீட்டுவதுதான் ஒரு “தேசிய நாளேட்டுக்கு” உரிய தகுதியா? ‘இந்து’ ராம் இப்படி என்றால், உளவுத் துறையில் உயர் அதிகாரியாக செயல்பட்ட பி. இராமன், பிரபாகரன் மறைவுக்கு எவரும் கண்ணீர் கூட சிந்தக் கூடாது என்று எழுதும் நிலைக்குப் போய்விட்டார். பார்ப்பன ராமன்களும், சிங்கள பேரினவாதிகளும், பிரபாகரன் மரணத்தைக் கொண்டாடு வதில் ஒன்றுபட்டு கைகோர்த்தே நிற்கிறார்கள்.

உளவுத் துறையின் முகம் மீண்டும் ஒருமுறை கிழிந்து தொங்கியது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு திட்டங்கள் தீட்டிட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கிளிநொச்சியில் அப்போது நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கம்பீரமாக வந்து கலந்து ஆலோசனைகளை வழங்கி தன்னை “சுனாமிப் பேரலையில் சாகடித்த” பார்ப்பன - சிங்களக் கும்பலின் பொய்களை மரணக்குழிக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன்!

டாக்டர் ரஜினி மரணத்தின் பின்னணி

யாழ்ப்பாணத்தில் - நடுத்தர தமிழ் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த திருமதி டாக்டர் ரஜினி திரணகம கொழும்பு பல்கலைக் கழகத்தில் மருத்துவம் படித்தவர். பல்கலையில் மாணவர் அரசியலில் தீவிரப் பங்கெடுத்த ரஜினி, தம்மைப் போல் மாணவர் அரசியலில் தீவிரமாக செயல்பட்ட கோன்யா பல்கலை மாணவரும், சிங்கள பவுத்தருமாகிய திரணகம தயாபளா என்ற கிராமத்து சிங்கள மாணவனை காதலித்து 1977 இல் திருமணம் செய்து கொண்டவர். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். மருத்துவப் படிப்பை முடித்த ரஜினி -யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிதாகத் துவக்கப்பட்ட ‘உடற்கூறுவியல்’ துறையில் விரிவுரையாளராக பணியாற்றினார். தனது மூத்த சகோதரி நிர்மலாவைப் பின்பற்றி விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தீவிரமாக ஆதரித்த ரஜினி, 1983 இல் மேல் படிப்புக்கு லண்டன் சென்றபோது, மனித உரிமை இயக்கங்களிலும், பெண்ணிய அமைப்புகளிலும் தீவிரமாக பங்கெடுத்தார். ஆயுதம் தாங்கியப் போராட்டங்களினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்ற முடிவுக்கு வந்த ரஜினி, இந்திய ராணுவம், சிங்கள ராணுவத்தின் வன்முறைகளைக் கடுமையாக எதிர்த்ததோடு, விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்திலும் கருத்து மாறுபாடு கொண்டிருந்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு திரும்பிய அவர், மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு ஒன்றை உருவாக்கி செயல்பட்டார். யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திலும், மருத்துவமனையிலும் இந்திய ராணுவம் நடத்திய கொடூரமான படுகொலைகள் அவரை மிகவும் பாதித்தன. யாழ்ப்பாண மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள், மருத்துவம் பார்த்த டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என்று 70 பேரை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம், மனித நேயம் பேணப்பட வேண்டிய மருத்துவமனைக்குள்ளே ‘அமைதிப்படை’ என்ற பெயரில் சென்ற இந்திய ராணுவம் நடத்திய இந்தப் படுகொலைகள் உலகின் மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்களில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது. ரஜினியின் மூத்த சகோதரி நிர்மலா, விடுதலைப்புலிகளுக்கு அடைக்கலம் தந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மட்டக் களப்பு சிறையில் அடைக்கப்பட்டவர். சிறையை உடைத்து, விடுதலைப்புலிகள் நிர்மலாவை மீட்டனர். சிறிது காலம் சென்னையில் தங்கிய நிர்மலா, பிறகு லண்டனில் அடைக்கலம் புகுந்து விட்டார்.

டாக்டர் ரஜினி, இந்திய ராணுவத்தின் இந்த அடக்கு முறைகளால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். ‘முறிந்த பனை’ என்ற அவரது நூல் - இந்திய ராணுவத்தின் படுகொலைகள், சிங்கள ராணுவத்தின் படுகொலைகளை கடும் கண்டனத்துக்கு உள்ளாக்கியதோடு, விடுதலைப்புலிகள் மீதும், விமர்சனங்களை முன் வைத்தது.

ஆனால், இந்திய ராணுவத்தின் அடக்குமுறைகளும், படுகொலைகளும் தான் அதில் அழுத்தமாக விவரிக்கப் பட்டிருந்தன என்பதே உண்மை.

1989 செப்டம்பர் 21 ஆம் தேதி, யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் சைக்கிளில் வீடு திரும்பிய ரஜினி சுட்டுக் கொல்லப்பட்டார். ‘முறிந்த பனை’ நூலில் - விடுதலைப்புலிகள் மீதும் அவர் விமர்சனம் வைத்ததால், அவரை சுட்டது விடுதலைப்புலிகள்தான் என்ற பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டது. புலிகளைவிட, மிகக் கடுமையாக அதில் விமர்சிக்கப்பட்டது. இந்திய ராணுவம் தான் என்ற உண்மையை திட்டமிட்டு மறைத்து விட்டார்கள்.

ரஜினியை சுட்டுக் கொன்றது யார் என்ற கேள்வி எழுந்தது. விடுதலைப்புலிகள்தான் ரஜினியை சுட்டதாக செய்திகள் பரப்பப்பட்டன. இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று விடுதலைப்புலிகள் நீண்ட அறிக்கையையும் வெளியிட்டனர். இரண்டு மாதங்கள் கழித்து, 1989 நவம்பர் 21 ஆம் தேதி ரஜினியின் நினைவு நாள் பல்கலைக்கழகத்தில் 3 நாட்கள் அனுசரிக்கப்பட்டன. அந்த நினைவு நாள் நிகழ்ச்சிகளை விடுதலைப்புலிகள், வீடியோவில் பதிவு செய்தனர். அப்போது, இந்தக் கொலையில் விடுதலைப்புலிகளுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்ற நீண்ட மறுப்பு அறிக்கையை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதிநிதிகளிடம் விடுதலைப் புலிகள் வழங்கினர். பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்களில் ஒருவரான ராஜன்ஹுல் என்பவர் தொடர்ந்து விடுதலைப் புலிகளைக் கடுமையாக எதிர்த்து கொழும்பு ஆங்கில நாளேடுகளில் கட்டுரை எழுதி வருபவர். அவர், ரஜினியை கொலை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று உறுதியாக எழுதினார். கொலை சம்பவம் நடந்தபோது அருகே இருந்த சைக்கிள் பழுது பார்ப்பவரும், தேனீர் விற்பனை செய்பவரும், சுட்டது புலிகள்தான் என்று கூறியதாக அவர் எழுதினார். சைக்கிள் பழுது பார்ப்பவர் யார்? தேனீர் விற்றவர் யார்? என்ற பெயர்களைக்கூட அவரால் கூற முடியவில்லை.

ரஜினியின் மரணத்தைத் தொடர்ந்து, ரஜினியின் மனித உரிமைப் போராட்டத்தை விரிவாகப் பதிவு செய்வதற்கு, பிரிட்டனிலிருந்து, ‘லண்டன் அப்சர்வர்’ பத்திரிகை சார்பில் ஜான்மெரிட் என்ற பிரிட்டிஷ், மனித உரிமையாளர் யாழ்ப்பாணம் வந்து, ரஜினி பற்றிய தகவல்களை சேகரித்தார். பத்திரிகையாளர் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர். ரஜினியும் அதே பிரிவைச் சார்ந்தவர். யாழ்ப்பாணத்தில் 1,50,000 ரோமன் கத்தோலிக்க மதப் பிரிவினரின் தலைவரான, பாதிரியார் தியாகுப்பிள்ளையிடம் - ரஜினியைக் கொன்றது யார் என்று ஜான்மெரிட் கேட்டதற்கு, பாதிரியார்,

“இந்திய ராணுவத்துக்கு நெருக்கமான ஒரு பிரிவு தான் கொன்றது என்று மக்கள் கூறுகிறார்கள்”

“Who killed Rajani? The Bishop replied that the people say it is a party close to the Indian Army” - (Observer, London, Ap.29, 1990)

-என்று பதிலளித்தார்.

பாதிரியார் தியாகுப்பிள்ளை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் அல்ல; ஆனாலும் புலிகள் மீது பழி போடாமல், அவர் உண்மையையே மறைக்காமல் சொன்னார்.

லண்டன் பத்திரிகையாளர் மெரிட் - ரஜினியின் பெற்றோர் களையும் பேட்டி கண்டு எழுதியுள்ளார். 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் யாழ்ப்பாண மருத்துவமனையில் நுழைந்த இந்திய ராணுவம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் - ஊழியர்கள் - டாக்டர்கள் என்று 70 பேரை சுட்டுக் கொன்றபோது - அதை நேரில் பார்த்த மருத்துவர்களே இந்த உண்மையை வெளியிட அஞ்சிய நேரத்தில், ரஜினி, இந்தக் கொடுமைகளைத் துணிவுடன் பதிவு செய்தார். யாழ்ப்பாண மருத்துவமனையை இந்திய ராணுவம் ஆக்கிரமித்த போது - ரஜினி, தன்னந்தனியாக பல்கலைக்கழகத்துக்குச் சென்றவர், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நேரங்களில் குண்டுகளால் துளைக்கப் பட்ட பகுதிகளை, சரி செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டவர். பிரிட்டிஷ் பத்திரிiயாளர் மெரிட் பேட்டி கண்ட ரஜினியின் பெற்றோர்கள் வீட்டுக்கு எதிரேதான் விடுதலைப் புலிகள் தங்கியிருந்த முகாம் இருந்தது. ரஜினியின் தந்தை ராஜசிங்கம் - அந்த புலிகளின் முகாமை சுட்டிக் காட்டிப் பேசினார்.

“புலிகள் இங்கு வருவதற்கு முன் இந்த வீட்டை இந்திய ராணுவம் ஆக்கிரமித்திருந்தது. யாழ்ப்பாண மருத்துவமனை யில் இந்திய ராணுவம் நடத்திய படுகொலைகள் பற்றி ரஜினி தயாரித்த அறிக்கைகளையும், எழுத்துகளையும் எங்கள் வீடுகளில் புகுந்து சோதனையிட்டு இந்திய ராணுவத்தினர் எடுத்துச் சென்றுவிட்டனர். அதற்கு முன்பு, இலங்கை ராணுவத்தினர் வந்து எங்களது வீட்டில் இருந்த பொருட்களை அழித்து - குடும்பப் புகைப்படங்களையும் பறித்துச் சென்றுவிட்டனர். ரஜினியின் மூத்த சகோதரி நிர்மலாவைப் பிடிப்பதற்காக, இலங்கை ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தியது. விடுதலைப்புலிகளுக்கு அவர் அடைக்கலம் தந்ததாகக் குற்றம்சாட்டினார்கள். இந்த நிலையில் ரஜினியைக் கொன்றது யார் என்று எப்படி சொல்ல முடியும்? ரஜினி மிகவும் நேர்மையானவர், ஒரு முறை பல்கலைக்கழக செனட் கூட்டத்திலிருந்து அழுது கொண்டே அவர் வெளியே வந்தார். பல்கலைக்கழக மாணவர்களை இந்திய ராணுவமும், இலங்கை அரசும் படுகொலை செய்தது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்க மறுத்ததே, ரஜினியின் அழுகைக்கு காரணம்.”

-என்றார் ரஜினியின் தந்தை! (ஆதாரம்: Observer)

தங்களது மகளைக் கொன்றது விடுதலைப் புலிகள்தான் என்று, எந்த ஒரு இடத்திலும் அந்தப் பெற்றோர்கள் கூறவில்லை.

மாறாக, இந்திய ராணுவத்தின் மீது தான் அவர்களின் ஆத்திரம் மேலோங்கி இருந்தது.

விடுதலைப் புலிகள் மீது கடும் விமர்சனம் கொண்ட பாதிரியார் தியாகுப் பிள்ளையும் இந்திய ராணுவத்துக்கு நெருக்கமான ஒரு குழுதான் ரஜினியை சுட்டது என்று கூறினார்; ஆனாலும் விடுதலைப் புலிகள்தான் சுட்டதாக உளவுத் துறை பொய்யைப் பரப்பியது.

சகோதர யுத்தத்தைத் தொடங்கி வைத்த ‘ரா’

‘ரா’ உளவு நிறுவனம், அவ்வப்போது, பல ஈழத் தமிழர் குழுக்களை உருவாக்கி, விடுதலைப் புலிகளுக்கு எதிராக, அந்தக் குழுக்களைப் பயன்படுத்தி வருவது கல்லில் செதுக்கப்பட்ட உண்மையாகும். ஆனால், விடுதலைப்புலிகளை முழுமையாக அழிக்கும் இலக்கில் தோல்வி அடைந்து, இந்திய ராணுவம் இந்தியா திரும்பிவிட்டது. அதன் பிறகு விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை - இந்திய ராணுவத்துக்கு பதிலாக, இந்திய உளவுத் துறையே ரகசியமாக நடத்தி வருகிறது என்பதே பல ஆய்வாளர்களின் கருத்தாகும்.

ஆனாலும், விடுதலைப்புலிகள் - மக்கள் பேராதரவோடு சிறிலங்கா ராணுவ ஒடுக்குமுறைகளை எதிர்த்து - உலகமே வியக்கும், விடுதலைப் படையாக போராட்டக்களத்தில் நிற்கிறது. 1983 ஆம் ஆண்டிலிருந்து, வலிமை மிக்க இந்திய ராணுவமும், ஏகாதிபத்திய நாடுகளின் ராணுவ உதவிகளைப் பெற்ற சிறிலங்கா ராணுவமும், தமிழ் மக்கள் மீது நடத்திய ராணுவத் தாக்குதல்கள், குண்டுவீச்சுகள், அழித்தொழிப்புகளை எதிர்கொண்டு, தமது தாயகத்துக்கான விடுதலை போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. ஈழப் பிரச்சினையில் இனி இந்தியா நேரடியாகத் தலையிடாது என்று அறிவிப்புகள் வந்தாலும், பார்ப்பன-பனியா அதிகாரவர்க்கத்தின் ஆதிக்கத்தில் இயங்கும் உளவு நிறுவனம் - தனது முழு ஆற்றலையும் பன்படுத்தி, ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நிலைகுலையச் செய்யும் முயற்சிகளில் முனைப்பாக பங்காற்றி வருகிறது.

விடுதலைப்புலிகளை ஒழிக்க வேண்டுமெனில் அவர்களின் மக்கள் ஆதரவுத் தளத்தை அழித்தொழிக்க வேண்டுமென்ற

நோக்கத்தோடு, பல போராளிக் குழுக்களை ‘ரா’ உளவு நிறுவனமே உருவாக்கியது.

‘டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். என்ற அமைப்புகள் ஈழத்தின் விடுதலைக்காக - ஆயுதம் ஏந்திப் போராடும் அமைப்புகளாக தங்களை அறிவித்துக் கொண்டவை. ‘டெலோ’ அமைப்பின் தலைவர் சிறீ சபாரத்தினம். அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுட்டுக் கொல்லப்பட்ட சிறி சபாரத்தினத்துக்கும் ‘ரா’ உளவு நிறுவனத்துக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. விடுதலைப் புலிகளுக்கு எதிராக வெளிவந்த நூலிலிருந்தே இதற்கு சான்று காட்டலாம். எம்.ஆர். நாராயணசாமி, ஆங்கிலத்தில் எழுதி, உளவு நிறுவனங்களால் பெரிதும் போற்றப்படும் நூல் ‘கூபைநசள டிக டுயமேய’. நூலில் இவ்வாறு நூலாசிரியர் குறிப்பிடுகிறார்:

“1983-ல் ‘ரா’ தமிழ்ப் போராளி குழுக்களுக்கு ராணுவப் பயிற்சி தந்தது. அப்போதே பல்வேறு குழுக்களுக்கிடையே பகைமையையும், முரண்பாடுகளையும் ‘ரா’ உருவாக்கியது. செயலிழந்த குழுக்களுக்கு ‘ரா’ உயிரூட்டும் முயற்சிகளில் இறங்கியது. இதனால் எல்.டி.டி.ஈ. கவலைக் கொண்டது. ‘டெலோ’வை ‘ரா’ ஊக்குவித்தது. ‘ரா’வுக்கு மிகவும் நெருக்கமான குழு ‘டெலோ’ தான் என்றும், அந்தக் குழுவைத்தான் ‘ரா’ உண்மையாக ஆதரிக்கிறது என்றும், ‘ரா’ கருத்துகளைப் பரப்பி, ‘டெலோ’வை உற்சாகப்படுத்தியது. இதனால், ஒவ்வொரு ராணுவ நடவடிக்கையையும் - சிறீசபாரத்தினம் ‘ரா’வோடு கலந்து ஆலோசித்தார். ஒவ்வொரு தாக்குதலுக் கும், எத்தனை போராளிகள் தேவை என்பதைக்கூட ‘ரா’வின் ஆலோசனை களைப் பெற்றே செயல்பட்டார். (நூல்: பக். 326)”

இப்படி, ‘டெலோ’வின் மூளையாகவே செயல்பட்டது ‘ரா’ உளவு நிறுவனம் தான்.

ஈ.பி.ஆர்.எல்.எப். - இந்திய ராணுவத்தின் செல்லப் பிள்ளை. மக்கள் ஆதரவற்ற அந்த அமைப்பு இந்திய ராணுவத்தின் வலிமையில் தான் ஆட்சியில் அமர முடியும் என்ற நிலையில், இந்திய ராணுவம் இந்தியா திரும்பியவுடனேயே அந்த அமைப்பினரும், அந்த அமைப்பின் சார்பில் வடக்கு-கிழக்கு மாகாண சபையில் முதல்வராக அமர வைக்கப்பட்ட வரதராஜப் பெருமாளும் இந்திய ராணுவத்துடனேயே இந்தியாவுக்கு கரை

சேர்ந்து விட்டனர். அவர்களை பத்திரமாக கரை சேர்த்தது இந்திய உளவுத் துறை தான்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக - அப்போது உளவு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மற்றொரு அமைப்பு ‘ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி’ என்று அழைக்கப்படும் ‘ஈ.என்.டி.எல்.எப்.’ அமைப்பாகும்.

இந்த அமைப்பை உருவாக்கியது யார்? எப்படி உருவாக்கப்பட்டது? ‘இந்து’, ‘பிரன்ட் லைன்’, ‘சண்டே லீடர்’ போன்ற பத்திரிகைகளில் தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வரும். செய்தியாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் கட்டுரையிலிருந்து இதற்கு விடை தர முடியும். அவர் எழுதுகிறார்:

“ஈ.என்.டி.எல்.எப். -உருவான கதை மிகவும் சுவையானது. (இதன் தலைவராக உள்ள) பரந்தன் ராஜன் என்பவர் ஆரம்பத்தில் ‘புளோட்’ அமைப்பில் இருந்தார். லெபனான் நாட்டுக்குப் போய் பயிற்சி பெற்றவர். இவர் புளோட்டில் - ராணுவத் தளபதி பதவியை எதிர்பார்த்தார். ஆனால், ‘புளோட்’ தலைவர் உமாமகேசுவரன் அப்பதவியை வேறு ஒருவருக்கு தந்ததால் - பரந்தன் ராஜன் வெறுப் படைந்து, தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார். இப்படி வெளியேறிய குழுவினரும், ஏற்கனவே ‘டெலோ’, ‘ஈ.பி.ஆர்.எல்.எப்.’ அமைப்புகளிலிருந்து அதிருப்தியுற்று வெளியேறிய குழுவினரும் இணைந்து -‘மூன்று நட்சத்திரங்கள்’ (Three Stars) என்ற பெயரில் ஒரு குழுவை உருவாக்கினார். மூன்று அமைப்புகளின் அதிருப்தியாளர்கள் உருவாக்கிய குழு என்பதால் - மூன்று நட்சத்திரம் என்று பெயர் சூட்டப் பெற்றது. பிறகு ‘புளோட்’ அமைப்பிலிருந்து ஈசுவரன் என்பவர் தலைமையில் மற்றொரு அதிருப்தி குழு விலகியது. அதேபோல் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பிலிருந்து பத்மநாபா தலைமையில் ஒரு குழுவும், டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஒரு குழுவும் ஆக, 2 குழுக்கள் விலகின. அப்போது ‘ரா’ 1987-ல் மூன்று நட்சத்திர அமைப்பையும், டக்ளஸ், ஈசுவரன் தலைமையிலான குழுக்களையும் ஒன்றாக்கி ஈ.என்.டி.எல்.எப். என்ற அமைப்பை உருவாக்கியது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்குப் பிறகு பரந்தன் ராஜனிடமிருந்து டக்ளஸ் தேவானந்தா விலகி ஈழம் மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) என்ற அமைப்பை தனியே ஏற்படுத்திக் கொண்டார். இதனால் ‘ஈ.என்.டி.எல்.எப்.’ பரந்தன்ராஜனின் முழுக் கட்டுப் பாட்டுக்குள் வந்தது” - இதுதான் ஈ.என்.டி.எல்.எப். தோன்றிய கதை. இந்த அமைப்பை உருவாக்கியது இந்தியாவின் ‘ரா’ உளவு நிறுவனம்.”

டெல்லியிலிருந்து வெளிவரும் ‘டெகல்கா’ ஆங்கில வார ஏட்டில் (ஜுலை 1, 2006) பி.சி. வினோஜ்குமார் எழுதிய கட்டுரையிலும் ¬

“பரந்தன்ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எப். என்ற அமைப்பு விடுதலைப் புலிகள் செல்வாக்கைக் குறைப்பதற்காக ‘ரா’ உளவு நிறுவனத்தால் உருவாக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது”

-என்றும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான குழுக்களை ஒருங்கிணைக்கும் மய்யப் புள்ளியாக இந்த அமைப்பு திகழுகிறது என்றும் குறிப்பிடுகிறார்.

இதில், இந்திய உளவுத் துறையின் ஆதரவோடு செயல்பட்ட டக்ளஸ் தேவானந்தாவைப் பற்றி குறிப்பிட வேண்டும். யார் இந்த டக்ளஸ் தேவானந்தா?

ஈ.பி.டி.பி.யின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா ¬இலங்கையில் இப்போது சமூக நலத்துறை அமைச்சர் - 1986-ல் சென்னையில் இவர் தங்கியிருந்தபோது, பொது மக்களிடம் ஏற்பட்ட தகராறில் இவர் துப்பாக்கியால் சுட்டபோது ஒருவர் இறந்தார். நான்கு அப்பாவி பொது மக்கள் காயமடைந்தனர். சென்னை சூளைமேட்டில் இந்த சம்பவம் நடந்தது. அப்போது அவர் மீதும், அவரது ஆதரவாளர்கள் 9 பேர் மீதும் தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. வழக்கு இப்போதும் நிலுவையில் இருக்கிறது. ஆனாலும், இந்திய உளவு நிறுவனத்தின் முழு ஆதரவோடு இவர் செயல்பட்டு வருகிறார்.

இதே டக்ளஸ்தான் சென்னையில் 10 வயது பையனைக் கடத்திப் போய், ரூ.7 லட்சம் பணம் கேட்டார் என்று ஒரு வழக்கு கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் இவர் 1989-ல் சென்னையில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஓராண்டு கழித்து விடுதலை செய்யப்பட்டார். இவரை விடுதலை செய்ய வைத்து, அதன் பிறகு இந்திய ராணுவ விமானத்தில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி விடுதலைப்புலிகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை களில் ஈடுபட வைத்தது - இந்திய உளவு நிறுவனமாகிய ‘ரா’ தான் என்று ‘டெகல்கா’ வார ஏடு (ஜூலை 1, 2006) எழுதியுள்ளது. (Sources say, it was ‘R&AW’ which Air lifted Devananda to Jaffna on an Indian Army helicopter to pit him against the LTTE)

ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்கவில்லை என்றாலும், இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பாமல், தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க முன் வந்தனர். ஆனாலும், விடுதலைப் புலிகள் இயக்கம் எந்தக் காலத்திலும் இந்தியாவுக்கு அடிபணியாது என்று ‘ரா’ உளவு நிறுவனம், உறுதியான முடிவுக்கு வந்துவிட்டது. எனவே, ஆயுதங்களை ஒப்படைத்துவிட்ட விடுதலைப்புலிகளை, பலவீனமாக்கி செயலிழக்கச் செய்யும் திட்டங்களை உருவாக்கியது. இந்திய ராணுவத் தின் தளபதியாக இருந்த லெப்டினென்ட் ஜெனரல் தீபிந்தர் சிங் பிரபாகரனை சந்தித்தபோது, பிரபாகரனே அவரிடம் நேரில் நடத்திய உரையாடலை இந்திய ராணுவத் தளபதியாக இலங்கையில் செயல்பட்ட தீபிந்தர் சிங் தனது நூலில் பதிவு செய்துள்ளார்:

“1987 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி, யாழ்ப்பாணத்தில் பிரபாகரனை நான் சந்தித்தபோது, தங்களுக்கு நம்பகமான ஒரு தகவல் கிடைத்துள்ளது என்றார். நாங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டதால், மிகவும் பலவீனமாகி விட்டோம் என்று ‘ரா’ உளவு நிறுவனம் கூறி வருவதோடு, எங்களோடு ராணுவ மோதலை நடத்துமாறு, ஏனைய தமிழ் குழுக்களைத் தூண்டிவிட்டு வருகிறது. குறிப்பாக அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள மூன்று நட்சத்திரக் குழுக்களை எங்களுக்கு எதிராகப் பயன்படுத்த ‘ரா’ திட்டமிட்டுள்ளது என்று பிரபாகரன் என்னிடம் கூறினார். இது மிகக் கடுமையான குற்றச்சாட்டு என்பதால், அன்று மாலையே இந்திய ராணுவத் தலைமையகத்துக்கு தெரிவித்து, இது பற்றி விசாரிக்குமாறு கூறினேன். அது உண்மையல்ல என்று அடுத்த நாள் எனக்கு பதில் வந்தது. அதை பிரபாகரனை சந்தித்துத் தெரிவித்தேன். எனது மறுப்பைக் கேட்ட பிரபாகரன் மிகவும் அமைதியாக பதில் சொன்னார். நீங்கள் உண்மையானவராக இருக்கிறீர்கள். ஆனால், டெல்லியிலிருந்து உங்கள் மூலமாக தரப்பட்ட தகவல் உண்மையல்ல; நான் கூறியதுதான் உண்மை என்று தனது குற்றச்சாட்டில் உறுதியாக இருந்தார்.”

-லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர்சிங் எழுதிய“The I.P.K.F. in Srilanka” நூல் - பக்.56

பிரபாகரன் கூறியதுதான் நடந்தது. போட்டிக் குழுக்களை உருவாக்கி சகோதர யுத்தத்தை தொடங்கி வைத்ததே ‘ரா’ நிறுவனம் தான். அதற்காகவே டக்ளஸ் தேவானந்தாவை சென்னை சிறையிலிருந்து விடுவித்து, இந்திய ராணுவ விமானத்தில் யாழ்ப் பாணத்துக்கு அனுப்பி வைத்தது ‘ரா’.

தனது கட்டுப்பாட்டுக்குள் வர மறுத்து - தமது இலக்கில் உறுதியாகத் திகழ்ந்த விடுதலைப்புலிகளைத் தனிமைப்படுத்தி, அவர்களுக்கு எதிராக போட்டிக் குழுக்களை உருவாக்கியும், அதில் வெற்றி பெற முடியாமல் கரியைப் பூசிக் கொண்டு, 1990-ல் இந்திய ராணுவம், இந்தியா திரும்பிய போது, ‘ரா’ உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எப்., ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய குழுக்களையும் இந்தியாவுக்கு தங்களுடனே அழைத்து வந்துவிட்டது உளவுத் துறை. அப்போது இந்தப் போட்டிக் குழுக்களுக்கு முழு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது, இந்திய உளவு நிறுவனம் தான். ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டத்தைக் குலைக்க ‘ரா’ எவ்வளவு முறைகேடுகளை செய்தது என்பதற்கு இவைகள் சாட்சியங்கள்!

இதற்கான ஆதாரங்கள் - ராஜீவ் கொலையில் அன்னிய சதி பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜெயின் ஆணையத்தின் அறிக்கையில் அரசு ஆவணங்களோடு பதிவாகியுள்ளன. போட்டிக் குழுக்களையும் தமிழகத்துக்கு அழைத்து வருவதை தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்த தி.மு.க. ஆட்சி எதிர்த்தது. இப்படிப் போட்டிக் குழுக்கள் தமிழகத்துக்கு வந்தால், தமிழ்நாட்டில் சகோதர யுத்தங்கள் நடக்கும் ஆபத்துகள் இருப்பதை முதல்வர் கலைஞர் கருணாநிதி சுட்டிக் காட்டினார். அன்றைய பிரதமர் வி.பி.சிங்குக்கும் இதை கடிதம் மூலம் எழுதினார். ஆனால், இந்திய உளவுத் துறை இதை செவிமடுக்காமல் போட்டிக் குழுக்களை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டியது.

மத்திய அரசிடமுள்ள உளவுத் துறை தொடர்பான ஆவணங் களில் இது குறித்து, ஏராளமான செய்திகள் பதிவாகியுள்ளன. அவற்றை சுருக்கமாகப் பார்க்கலாம்:

1990 மார்ச் மாதத்திலிருந்து (இந்திய ராணுவம் ஈழத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து) தமிழ்நாட்டுக்கு வரும் ஈழத் தமிழ் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்தது. வழக்கமாக ராமேசுவரம் வழியாகவே வந்து சேருவார்கள். ஆனால், கன்னியாகுமரி வழியாக அதிகம் வரத் துவங்கினர்; சில நியாயமான காரணங்களுக்காக தி.மு.க. அரசு, போட்டிக் குழுக்களின் வருகையை எதிர்த்ததே இதற்குக் காரணம்.

அப்படி கன்னியாகுமரியில் வந்து இறங்கியவர்களுக்கு உரிய பாதுகாப்பு தந்து, அவர்களை தமிழ்நாடு - கேரளா எல்லையோர மாவட்டங்களுக்குக் கொண்டு போவதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க ஏராளமான ‘ஏஜெண்டுகள்’ இருந்தனர். பெரும்பாலோர் கேரளாவின் இடுக்கி மாவட்டத்துக்குக் கொண்டு போகப் பட்டனர். (உளவு நிறுவனம் உருவாக்கிய - தமிழ்க் குழுக்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததால், உடனே கேரளாவுக்கு அவர்களை அனுப்பி வைத்தது உளவு நிறுவனங்களின் ஏற்பாடுதான். அதற்காக ஏஜெண்டுகளும் நியமிக்கப்பட்டார்கள்.)

ராணுவத்தின் தாக்குதலுக்கு அஞ்சி, தமிழர்கள் அகதிகளாக 1983 ஆம் ஆண்டு முதல் வந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அவர்கள் அகதிகளாக பதிவு செய்யப்பட்டு, முகாம்களில் வைக்கப்படுகிறார்கள். இது வழமையான நடைமுறை.

ஆனால், விடுதலைப் புலிகளுக்கு எதிராக குழுக்களை உருவாக்கிய இந்திய உளவு நிறுவனமே தனியாக கப்பல்களையும், விமானங்களையும் ஏற்பாடு செய்து, அந்தப் போட்டிக் குழுக்களை அழைத்து வந்தது.

கப்பல்களில் வரும்போது, அவர்கள் துறைமுகம் வழியாக இறங்க வேண்டும். துறைமுக விதிகளின்படி கடவுச் சீட்டு, தமிழகத்தில் நுழைவதற்கான முறையான அனுமதி போன்றவை அவசியமாகும். ஆனால், உளவு நிறுவனங்கள் இந்த விதிகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. சென்னைத் துறைமுகத்தில் தான் உருவாக்கிய போட்டிக் குழுவினை இறக்க முயன்றபோது, துறைமுக அதிகாரிகள் உரிய ஆவணங்களைக் கோரினர்; அவை இல்லாததால், துறைமுகத்தில் இறங்க அதிகாரிகள் அனுமதிக்க வில்லை.

இந்திய உளவுத் துறையின் ஆதரவுக் குழுக்கள் திருகோண மலையிலிருந்து சென்னை துறைமுகத்துக்கு இரண்டு கப்பல்களில்

வருகிறார்கள் என்ற தகவல், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. இதனால் மாநில அரசின் ‘சி.அய்.டி.’ பிரிவு துறைமுகத்தில் கண்காணிப்புப் பணிகளை முடுக்கிவிட்டிருந்தது. ஆக, இவர்களை கப்பல்களில் அழைத்து வந்தது உளவு நிறுவனம் தான் என்பது, இதன் மூலம் உறுதியாகியது. அதனால் தான் காவல்துறை அதிகாரிகளோடு முன் கூட்டியே பேச முடிந்திருக்கிறது.

இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான இந்திய கப்பல் வாரியத்துக்கு சொந்தமான ‘ஹர்ஷவர்த்தனா’, ‘திப்பு சுல்தான்’ என்ற இரண்டு கப்பல்கள் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ‘ரா’ உளவு நிறுவனத்தின் அமைப்பான ‘ஈ.பி.ஆர்.எல்.எப்.’ குழுவினரும், அவர்களது குடும்பத்தினருமாக 747 பேருடன் 8.3.1990-ல் ‘ஹர்ஷவர்த்தனா’ கப்பல் சென்னை துறைமுகம் வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாமையால் தமிழ்நாட்டில் இறங்க அவர்கள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கப்பல் எரிபொருளை நிரப்பிக் கொண்டு, விசாகப்பட்டினம் துறைமுகத்துக்குப் புறப்பட்டது. அதே போல் ‘ரா’ உருவாக்கிய மற்றொரு குழுவான ‘ஈ.என்.டி.எல்.எப்’ குழுவினரை ஏற்றிக் கொண்டு வந்த ‘திப்பு சுல்தான்’ கப்பல் 10.3.90-ல் விசாகப்பட்டினம் வந்து சேர்ந்தது. இரண்டு கப்பல்களிலும் வந்த இரண்டு குழுக்களைச் சார்ந்த 1324 பேரும் தனிப் பேருந்துகளில் ஏற்றப்பட்டு ஒரிசாவின் மால்கங்கிரி, சத்திகுடா என்ற இரு வெவ்வேறு பகுதிகளில் தங்க வைக்கப் பட்டனர். (இத்தகவல்கள் ஜெயின் ஆணையத்தின் முன் அன்றைய சென்னை மாநகர காவல்துறை இயக்குநர் சிறீபால் தாக்கல் செய்த அறிக்கையிலும் அரசு ஆவணங்களிலும் இடம் பெற்றுள்ளன. (நூலின் பின் இணைப்பில் அந்த ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)

ஏற்கனவே சென்னையிலிருந்த, ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈ.என்.டி.எல்.எப். குழுவினர் ஒரிசாவுக்குப் போய் அங்கே இருந்த தங்களது குழுவினரை, தமிழ்நாட்டுக்குக் கொண்டு வருகிறார்கள் என்ற செய்தி உளவுத் துறை மூலம் தமிழக அரசுக்குக் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ஒரிசா மாநில அரசின் தலைமைச் செயலாளருக்கு 11.3.1990ல் தொலைவரி மூலம் (Telex)ஒரு அவசர செய்தியை விடுத்தார். “தமிழ்நாட்டில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை தலை தூக்காமல் இருக்க, ஒரிசாவில் உள்ள ஈழத் தமிழ்க் குழுக்களை தமிழ்நாட்டுக்கு வராமல் தடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் விரும்புகிறார்” என்று அந்த செய்தி எச்சரிக்கை செய்தது.

கப்பலில் கொண்டுவரப்பட்டவர்களைத் தவிர, 11.3.1990-ல் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா உட்பட அக்குழுவைச் சார்ந்த 295 பேரை இந்திய உளவு துறை விமானத்திலும் ஒரிசாவுக்கு அனுப்பியது.

ஆனால், தமிழக அரசின் கண்காணிப்புகளையும் மீறி உளவுத்துறை உருவாக்கிய குழுக்கள் ஒரிசாவில் தங்கள் முகாம்களை மூடிவிட்டு, தமிழகத்துக்குள் நுழைந்து விட்டனர். இதை ‘கியு’ பிரிவு போலீசின் ரகசிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி -பிரதமர் வி.பி. சிங் அவர்களுக்கு ஒரு கடிதம் (26.4.1990) எழுதினார். அதில், ஒரிசாவில் மால்கங்கிரி முகாமில் இருந்த இலங்கை அகதிகள், அங்கிருந்து, தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார்கள் என்றும், அதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை தலைதூக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். கடிதத்தில் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறிப்பிட்டுள்ள மற்றொரு கருத்து மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.

“ஒரிசா முகாமிலிருந்து, தமிழ்நாட்டுக்குள் நுழைந்த அகதிகள் மீது குடியேற்றச் சட்டத்தின் கீழோ, அல்லது ‘பாஸ்போர்ட்’ சட்டத்தின் கீழோ தான் அரசு நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், இந்தப் பிரச்னையில் அப்படி வழக்குகள் தொடர முடியாது என்று எங்களுக்கு ஆலோசனை கூறப்பட்டது. காரணம், இவர்கள், இந்தியா வுக்கு சொந்தமான கப்பல்களில், இந்தியத் துறைமுகமான விசாகப்பட்டினம் வழியாக வந்தவர்கள் என்பதால், அவர்களை அகதிகளாகவே கருத வேண்டும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது”

“But we have been advised that such prosecution cannot be sustained in this particular case, as they were brought by Indian Ships to an Indianport.”

-என்று முதல்வர் கலைஞர் கருணாநிதி அக்கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தார். உளவு நிறுவனத்தின் அத்துமீறல்கள் எல்லை மீறி நடந்துள்ளதை, இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன.

• தங்களின் தாயக விடுதலைக்குப் போராடும் விடுதலைப் புலிகளை - ராணுவ ரீதியாக ஒடுக்க முயன்று, தோல்வி கண்டார்கள்.

• விடுதலைப் புலிகளுக்கு எதிராக -விரக்தியடைந்த குழுக்களைத் திரட்டி - ஆயுதம் வழங்கி, சகோதர யுத்தத்தைத் தூண்டி விட்டார்கள்.

• ஈழத்தில் துப்பாக்கி முனையில் - தங்களது எடுபிடி ஆட்சியை நிறுவினார்கள்.

• இந்திய ராணுவம் - அரசியல் நெருக்கடிகளால் திரும்ப வேண்டிய சூழ்நிலையில் -தாங்கள் உருவாக்கிய குழுக்களையும் இந்தியாவுக்கு அழைத்து வந்தனர்.

• அதற்கு இந்திய அரசு கப்பல்களையும், விமானங்களையும் பயன்படுத்தினர்.

• அன்றைக்கு தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த எதிர்ப்பைப் புறக்கணிக்கணித்து, வேறு மாநிலத்தில் தங்க வைத் தார்கள்.

‘ரா’ உளவு நிறுவனத்தன் இந்த அடாவடி நடவடிக்கைகளில் அரசியல் நேர்மை ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்கிறோம்.

பின்னர் - தமிழ்நாடு சட்டமன்றத்தில் இது பற்றிய விவாதம் வந்தது. உளவு நிறுவனங்கள் இப்படி போட்டிக் குழுக்களை உருவாக்கி, சகோதர யுத்தங்களைத் தொடங்கி வைத்ததை காங்கிரஸ், அ.தி.மு.க., சி.பி.அய்., (எம்) கட்சிகள் கண்டிக்க முன்வரவில்லை. முறைகேடாக கப்பல்களில் விமானங்களில் ஏற்றி இந்தியாவுக்கு உளவு நிறுவனங்கள் போட்டிக் குழுக்களைக் கொண்டு வந்ததைக் கண்டிக்கவில்லை. மாறாக தி.மு.க ஆட்சியில் விடுதலைப்புலிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்ற பார்ப்பன ஏடுகளின் குரலையே இவர்கள் எதிரொலித்தார்கள். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி

“‘ரா’ உளவு நிறுவனம் தான் இந்தக் குழப்பங்களை உருவாக்குகிறது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கு மிடையே மோதலை உருவாக்குவதே ‘ரா’வின் நோக்கமாக இருக்கிறது. எனவே இதில் பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழத் தமிழ்க் குழுக்களிடையே கடந்த காலங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கியதற்கு ‘ரா’ தான் காரணமாக

இருந்தது. இப்போது அதே வேலையை மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமிடையே செய்து கொண்டிருக்கிறது”

“Sri Karunanithi, on 8th May 1990, on the floor of

the Assembly is reported to have accused the Research

and Analysis Wing (RAW) of trying to create a rift between

the Centre and the State appealed to the Prime Minister

to take appropirate action. He alleged that the RAW

which was responsible in the past for creating divisions

among various Tamil Groups of Srilanka was doing the

same between the Centre and the State”

(ஆதாரம்: ஜெயின் ஆணைய அறிக்கை)

-என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்.

தமிழகத்தின் முதலமைச்சர் ஒருவராலேயே சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்து இது!

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்த அச்சப்படி அதற்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் பத்மநாபா படுகொலையும், சகோதர யுத்தங்களும் தொடர்ந்தன.

உளவு நிறுவனங்களின் பார்ப்பன சதித் திட்டம் உருவானது. இதற்கு தளம் அமைத்துத் தந்தது ‘ரா’ உளவு நிறுவனம் தான்!

உளவு நிறுவன மிரட்டலுக்கு தி.மு.க. பணிய மறுத்தது. உடனே ஜெயலலிதா, சுப்ரமணியசாமி, எம்.கே.நாராயணன் என்று உளவு நிறுவன பார்ப்பன சக்திகள் தீட்டிய திட்டத்தின்படி தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது.

அதே உளவு நிறுவனம் தான் தமிழ்நாட்டில் மீண்டும் 2007¬லும் தனது திருவிளையாடல்களைத் துவக்கி இருக்கிறது.

உளவு நிறுவனங்களோடு கடந்த காலங்களில் கசப்பான அனுபவங்களை சந்தித்து, அவர்களின் சூழ்ச்சிப் பொறிகளைத் தெளிவாகப் புரிந்து வைத்துள்ள தி.மு.க. ஆட்சி, பொய்மைப் பிரச்சாரத்துக்கு துணை போய்விடக் கூடாது என்பதே நமது வேண்டுகோள்.

உளவுத் துறை உருவாக்கிய கருணா குழு

இந்திய உளவு நிறுவனங்களின் சதித் திட்டங்கள், ஏதோ கடந்த காலங்களோடு முடிந்துவிட்டதாகக் கருத முடியாது. அவை இப்போதும், எப்போதும் தொடரவே செய்கின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிராக, 2004-ல் தோற்றுவிக்கப்பட்ட கருணா குழுவும், உளவு நிறுவனங்களின் முன்னோடும் பிள்ளை தான்.

விடுதலைப் புலிகளின் நம்பிக்கைக்குரிய தளபதியாக செயல்பட்டு வந்த மட்டக்களப்புப் பகுதிப் பொறுப்பாளர் கருணாவும், உளவு நிறுவனங்களின் வலையில் வீழ்ந்து, விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயல்படத் தொடங்கிவிட்டார். இதற்கு பின்னணியிலிருந்து செயல்பட்டது உளவு நிறுவனங்கள்தான் என்பதற்கான ஆதாரங்கள் அடுக்கடுக்காய் இருக்கின்றன.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் - இரண்டாவது நிலையில் இருந்த மாத்தையா - 15 ஆண்டுகள் இயக்கத்தில் போராளியாக இருந்து 1992-ல் உளவு நிறுவனங்கள் விரித்த வலையில் வீழ்ந்தார். 1982-ல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து, பல போராட்டக்களங்களைக் கண்ட கருணா, மாத்தையாவைப் போல் 2004-ல் உளவு நிறுவனங்களின் வலையில் வீழ்ந்ததுதான் சோகம்; துரோகம்.

நார்வே நாட்டின் முன் முயற்சியால் நடைபெற்ற சமாதானப் பேச்சு வார்த்தைகளில் தொடர்ந்து பங்கேற்ற நான்கு விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளில் கருணாவும் ஒருவர். அன்டன் பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், தமிழ்ச் செல்வன் ஆகியோர் மற்ற மூவர். கருணா மீது அவ்வளவு நம்பிக்கைக் கொண்டிருந்தார்

பிரபாகரன். 1983 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து போராட்டக் களத்தில் நின்று வந்த ஒரு இயக்கம் - 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றபோது, விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் உளவு நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு காய்களை நகர்த்தத் துவங்கின. இதுவே தக்க தருணம் என கருணாவுக்கு உளவு நிறுவனங்கள் வலை வீசத் துவங்கிவிட்டன. இதற்கான அறிகுறி - 2002 ஆம் ஆண்டிலேயே தெரிய ஆரம்பித்தது. கிழக்கு மாகாணத்தைத் துண்டித்து அதன் ஆட்சி அதிகாரத்தை கருணாவிடம் வழங்கப் போவதாக உளவுத் துறை ஆசை காட்டியது.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக உளவு நிறுவனங்களின் கருத்துக்களை எதிரொலித்து தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டுவரும் ‘பிரன்ட்லைன்’ மாதமிருமுறை ஆங்கில பத்திரிகை 2002 ஆம் ஆண்டில்

-அதாவது கருணா விலகுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கட்டுரை வெளியிட்டது. அது இவ்வாறு கூறியது:

“உண்மையில் - விடுதலைப்புலிகள் அமைப்பில் கருணா, கிழக்கு மாநிலத்தைச் சார்ந்தவராக இருந்தும், சக்தி மிக்க தலைவராக உருவாகி வருகிறார். பிரபாகரனையும் மிஞ்சும் தலைவராகவும் அவர் வர முடியும். ஒரு நாள் பிரபாகரனிடத்திலே கருணா இப்படி சொல்லும் நிலை வரலாம். நான் கிழக்குப் பகுதியைப் பார்த்துக் கொள்கிறேன்; நீங்கள் வடக்குப் பகுதியைப் பார்த்துக் கொள்ளுங்கள்”

(பிரன்ட் லைன்; ஜுன் 22, 2002)

கருணாவைத் தனது வலையில் வீழ்த்த உளவுத் துறை தன் வசம் வைத்திருந்த ‘துருப்புச் சீட்டு’ இதுதான். இந்த எண்ண ஓட்டத்தை 2002 ஆம் ஆண்டிலேயே ‘பிரன்ட்லைன்’ சூசகமாக உணர்த்திக் காட்டிவிட்டது. ஆனால், கருணாவிடம் ஆசை காட்டி, துரோக வலையில் சிக்க வைத்தவர்கள், அந்த முயற்சியிலும் தோல்வியைத்தான் தழுவினார்கள். 2004 ஆம் ஆண்டு ஏப்.9 ஆம் தேதி விடுதலைப்புலிகளுக்கு எதிராக வெளிப்படையாக ஆயுதத்தைத் தூக்கிய கருணா மூன்றே நாட்களில் படுதோல்வியைச் சந்தித்தார். மக்கள் ஆதரவு என்ற அடித்தளம் அவருக்கு இல்லை என்பது அம்பலமானது. விடுதலைப்புலிகளுக்கு எதிராக உளவு நிறுவனங்கள் உருவாக்கும் சதிகளுக்கு வலிமை சேர்க்கும் கருத்துக்களை ஊடகங்களில் பரப்புவதையே தங்களது “உயர்ந்த” லட்சியமாக்கிக் கொண்டுள்ளன பார்ப்பன ஏடுகள்; சிங்கள ஏடுகளின் குரலும் - பார்ப்பன ஏடுகளின் குரலும் ஒன்றாகவே ஒலிக்கின்றன. பார்ப்பன இந்து ராம்களுக்கு இலங்கை அரசு, ‘சிங்கள ரத்னா’ விருது வழங்கி பாராட்டுவதிலிருந்தே, இதைப் புரிந்து கொள்ளலாம். ஈழப் பிரச்சினையில் உளவு நிறுவனங்களின் ஊது குழல்களாக செயல்படும் பத்திரிகையாளர்களின் நீண்ட பட்டியலே உண்டு. உதாரணமாக - இக்பால் அத்தாஸ் (சண்டே டைம்ஸ், கொழும்பு), பண்டலா ஜெயசேஷா (அய்லேன்ட், கொழும்பு), என். ராம், நிரூபமா சுப்ரமணியம், வி.எஸ். சம்பந்தம் (‘இந்து’ சென்னை), எம். ஆர். நாராயணசாமி, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அசோக் கே. மேத்தா, கே.பி. பாலசந்திரன் (இந்துஸ்தான் டைம்ஸ்), உளவுத் துறையின் முன்னாள் அதிகாரிகள் பி. ராமன், ஹரிஹரன் என்று பட்டியலிடலாம். கருணா குழுவை இவர்கள் உயர்த்திப் பிடித்தனர் - விடுதலைப்புலிகள் இனி எழவே முடியாது என்று எழுதித் தீர்த்தார்கள். ஆனால், எதிர்பார்த்தது நடக்காமல் ஆசைகள் பொடிப் பொடியாகி மீண்டும் தோல்வியையே சந்தித்தார்கள்.

விடுதலைப்புலிகள் இயக்கம் - ஈழத் தமிழர்களின் ஒரே பிரதிநிதியல்ல என்ற கருத்தை உருவாக்கிட வேண்டும் என்பதே உளவு நிறுவனங்களின் முக்கிய இலக்கும் - செயல்பாடும். போட்டிக் குழுக்களை உருவாக்கி விடுதலைப்புலிகளுக்கு எதிராக நிறுத்தும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தையே பிளக்கும் அடுத்தத் திட்டத்தைத் தொடங் கினார்கள். மாத்தையாவைத் தொடர்ந்து கருணா உருவாக்கப் பட்டார். கிழக்குப் பகுதி கருணாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது என்றும், விடுதலைப்புலிகளால் கருணாவை எதிர் கொள்ள முடியாது என்றும் தொடர்ந்து ஊடகங்கள் வழியாக பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டன உளவு நிறுவனங்கள்.

இதற்குச் சான்றாக ஒன்றைக் குறிப்பிடலாம். ஈழத் தமிழர்களுக்கான பல்வேறு அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, “தமிழ் தேசிய கூட்டமைப்பு” உருவாக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் தான் ஈழத் தமிழர்களின் ஒரே பிரதிநிதி என்று, இந்தக் கூட்டமைப்பு அறிவித்ததோடு 2004 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வேட்பாளர்களையும் நிறுத்தியது. அப்போது உளவுத்துறை - கருணாவுக்கு ஒரு திட்டத்தைத் தீட்டித் தந்தது. அதன்படி மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் அம்பாறையில் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள் பெரும்பாலோர் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் என்றும், அவர்கள் கருணாவையே ஆதரிக்கிறார்கள் என்றும், கருணா குழு அறிவித்தது. கருணா குழுவின் அதிகாரபூர்வ பேச்சாளரான வரதன் - பத்திரிகை யாளர்களிடம் இவ்வாறு பேட்டி அளித்தார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்தி, ஒரு பிரிவினரை கருணாவுக்கு ஆதரவாக மாற்ற உளவுத் துறையும், ஊடகங்களும் மேற்கொண்ட முயற்சிகளும் படுதோல்வி அடைந்தன. அவர்கள் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லை.

கருணா குழுவை உருவாக்கியவுடன், அதன் விளைவுகள் பற்றி ஆராய்வதற்காக ஒரு நாள் கருத்தங்கம் ஒன்று, சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டது. உளவுத் துறை முன்னாள் அதிகாரி பி. ராமன் தலைமையிலான ‘பார்வையாளர் ஆய்வு மய்யம்’ என்ற அமைப்பின் பெயரில் உளவு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது அந்தக் கருத்தரங்கம். அதைத் துவக்கி வைத்துப் பேசியவர் ‘இந்து’ ராம். அவர் பேசினார் ¬

“கருணா பிரிந்துவிட்டதால் பெரிய விளைவுகள் ஏற்படும். எல்.டி.டி.ஈ. இனி மிகவும் பலவீனமாகிவிடும். வடக்கு-கிழக்கு மாநிலங்களைப் பிரிக்கவே கூடாது என்ற கருத்துக்கு, அரசியல் அரங்கில், பலத்த அடி விழுந்துள்ளது. இனி வடக்கும்-கிழக்கும் ஒரே பகுதியாக இணையப் போவதே இல்லை. சிறீலங்காவை - ஜனநாயகப் பாதையில் கொண்டு செல்வதற்கு, இந்தப் பிளவு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கும் கருணாவின் பிளவால், தமிழ் ஈழத் துக்கான ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது”

-என்று உளவுத் துறை நடத்திய அந்தக் கருத்தரங்கில் தனது உள்ளத்து ஆசைகளையெல்லாம் கொட்டினார், ‘இந்து’ ராம் (மார்ச் 26, 2004-www.observerindia.com). கருணா பிளவால் இவர்கள் பேரானந்தம் பெற்றார்கள். ஆனால், பார்ப்பன ‘இந்து’ ராம்களும் உளவு நிறுவனங்களும் போட்ட கணக்குகள் பொய்யாகிப் போயின என்பதை காலம் நிரூபித்துவிட்டது. ஆயுதப் போராட்டமே முடிவுக்கு வந்துவிட்டது என்று மகிழ்ச்சிக் கூத்தாடிய அதே ‘இந்து’ ராம்கள், இப்போது - புலிகள் மேலும் முன்னேறி வான்படைத் தாக்குதல் நடத்தும் நிலைக்கு வளர்ந்து நிற்பதைப் பார்த்து புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

கருணா குழு பிரிந்ததற்காக கருத்தரங்கு நடத்தி விவாதிக்க வேண்டிய அவசியம் ‘ரா’வுக்கு ஏன் வந்தது? ஈழப் பிரச்சினை யிலிருந்து ஒதுங்கி நிற்பதாக, இந்தியா கூறுவது அப்பட்டமான பொய் என்பதைத் தானே இந்த நிகழ்வு உணர்த்துகிறது? கருணா குழுவை உருவாக்கியதே ‘ரா’ எனும் போது, இவர்களால் எப்படி ஒதுங்கி நிற்க முடியும்?

கருணா குழுவை உருவாக்கியதே ‘ரா தான் என்பதற்கு பல சான்றுகள் இருக்கின்றன. இந்திய உளவு நிறுவனம் உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எப். அமைப்புடன், கருணா அமைப்பு இணைந்து ¬‘தமிழ் ஈழ அய்க்கிய விடுதலை முன்னணி’ என்ற அமைப்பை உருவாக்குவதாக கூட்டாக அறிவித்ததே, முதல் சான்று. பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. இத்தனைக்கும் இந்திய உளவு நிறுவனத்தின் கைப்பாவையான ஈ.என்.டி.எல்.எப். - தமிழ் ஈழப் பகுதியிலேயே இல்லாத ஒரு அமைப்பு. இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் மல்கங்கிரி என்ற மலைவாழ் மக்கள் பகுதியில்தான் அது முகாம்களை அமைத்துள்ளது. தமிழ்நாட்டில் சேலத்திலும் ¬இதற்கு முகாம் உண்டு. கருநாடகாவில் ஈழத் தமிழ்க் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றையும் இந்த அமைப்பு நடத்தி வருகிறது. இவ்வளவும் உளவுத் துறையின் ஆதரவோடு இயங்குகின்றன.

இந்திய உளவு நிறுவனத்தின் முழுமையான ஆதரவோடு இந்தியாவில் மட்டும் முகாமிட்டுள்ள ஈ.என்.டி.எல்.எப். மட்டக் களப்பிலுள்ள கருணா குழுவோடு ஒன்றுபட்டு செயல்பட முன் வருகிறது என்றால் - இதன் பின்னணியில் நிற்பது இந்திய உளவுத் துறைதான் என்பது உறுதியாகிறது அல்லவா?

இந்தக் கருத்தை மேலும் உறுதிப்படுத்திட, பிரபல பத்திரிகையாளர் டி.பி.எஸ். ஜெயராஜ், ‘சண்டே லீடர்’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையைக் குறிப்பிடலாம்.

“ஈ.என்.டி.எல்.எப். குழுவினரும், அதன் தலைவர் பரந்தன் ராஜனும், 1990 முதல் இந்தியாவில் எந்தப் பிரச்சினையும் இன்றி பாதுகாப்பாக இருந்து வருகிறார்கள். காரணம், இந்தக் குழுவை உருவாக்கியதே, ‘ரா’ உளவு நிறுவனம் தான். புதுடில்லியின் முழுமையான கட்டுப் பாட்டின் கீழ் இந்த அமைப்பு இருந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் நிலை கொண்டுள்ள இந்த அமைப்பு

அண்மைக் காலமாக - கருணா குழுவுடன் இணைந்து நிற்பதால், புதிய குழப்பங்கள் உருவாகிவிட்டன. இதனால் இவர்களுக்கு, விடுதலைப்புலிகளால் ஏதேனும் ஆபத்து நேரிடலாம் என்பதால், ஈ.என்.டி.எல்.எப். குழுவின் முன்னணித் தலைவர்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியின்போது, ‘க்யூ’ பிரிவு போலீசார், அவர்களை கைது செய்து சிறையில் வைத்தனர்”

-என்று டி.பி.எஸ். ஜெயராஜ் குட்டை உடைத்துள்ளார்.

பரந்தன் ராஜனையும், அவரது ஆதரவாளர்களையும் காப்பாற்றும் நோக்கத்துடனே ஜெயலலிதா ஆட்சியில் ‘க்யூ’ பிரிவு போலீஸ் அவர்களை கைது செய்து, முகாம்களில் பாதுகாப்போடு வைத்தது. கைது செய்யப்பட்ட அடுத்த இரண்டு நாள்களில், அவர்கள் மீதான கெடுபிடிகள் நீக்கப்பட்டு, தாராளமாக சலுகைகள் காட்டியது தமிழகக் காவல்துறை. சிறையிலிருந்து வசதியான தனி வீடுகளுக்கு அவர்கள் மாற்றப்பட்டனர். நாள் முழுதும் எந்தத் தடையுமின்றி, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சந்திப்பதற்கு அனுமதிக்கப் பட்டனர். சிறைவிதிகளுக்கு மாறாக, வெளியிலிருந்து உணவு சமைத்து, காவலில் வைக்கப்பட்ட வீடுகளுக்கு கொண்டு வந்து பரிமாறப்பட்டது.

தமிழ்நாட்டில் தீவிரவாதிகளுக்கு இடமில்லை; இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என்று ‘முழங்கி’ வரும் ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் இத்தனையும் நடந்தது. ஜெயலலிதா ஆட்சியில் காவல்துறை - இப்படி இவர்களுக்கு சலுகைகளை வழங்கி ‘சுதந்திர’ கைதிகளாக நடத்தக் காரணம் என்ன? இதன் பின்னணி என்ன? ‘ரா’ உளவுத் துறையின் தலையீடு தான், காரணம் என்கிறார், டி.பி.எஸ். ஜெயராஜ், தனது கட்டுரை யில்! ‘ரா’ உளவு நிறுவனத்தோடு நெருக்கமான தொடர்புடைய லண்டனில் இருந்த ஈ.என்.டி.எப். தலைவர் ராமராஜ் என்பவர், உடனே டெல்லி விரைந்தார். ‘ரா’ உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசினார். உடனே தமிழகத்தில் கெடுபிடிகள் தளர்ந்தன என்று எழுதுகிறார், டி.பி.எஸ். ஜெயராஜ்.

மேலும் பல அதிர்ச்சியான தகவல்களை டி.பி.எஸ். ஜெயராஜ், ‘சண்டே லீடர்’ கட்டுரையில் தந்துள்ளார்.

“ஈ.என்.டி.எல்.எப். கருணா குழுவுடன் இணைந்து புதிய அரசியல் குழுவை அறிவித்த பிறகு, ஈ.என்.டி.எல்.எப்.

செயல்பாடுகள் இந்தியாவில் தீவிரமாயின. அவர்களின் பிரதிநிதிகளடங்கிய குழு ஒன்று டெல்லியில் முகாமிட்டு, ஆதரவு திரட்டியது. விடுதலைப்புலிகளை எதிர்த்து போரிட 3500 பேர் கொண்ட படையை உருவாக்க, இந்தியாவின் ஆதரவைக் கேட்டது. மனோமாஸ்டர் என்பவர் தான், இந்திய அதிகாரிகளோடு இதுபற்றி கலந்து பேசினார். அத்துடன் கருணாவை முன்னிறுத்தி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டன. ஒரு ஸ்டுடியோவில் - விடுதலைப்புலிகளுக்கு எதிராக கருணாவை பேச வைத்து, அந்த உரையை, மக்களிடம் நேரடியாக பேசுவது போல் மாற்றி அமைத்து, ஆயிரக்கணக்கில் பிரதிகள் எடுத்து, பல்வேறு நாடுகளில் பரப்பினார்கள். கருணாவுக்கு மக்கள் ஆதரவு இருப்பது போல் காட்ட இப்படி ஒரு நாடகம் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் பிரபாகரனை ஹிட்லராக சித்தரிக்கும் சுவரொட்டிகளை ஈ.என்.டி.எல்.எப். குழு ஒட்டியது. தமிழ்நாட்டில் நடந்த ஈழத் தமிழர் ஆதரவுக் கூட்டங்களிலும் - வைகோ கூட்டத்திலும் புகுந்து, விடுதலைப்புலிகளுக்கு எதிரான துண்டறிக்கைகளை விநியோகித்தனர்”

-என்று டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதுகிறார். கருணாவின் பிளவை வைத்து, இவர்கள் எவ்வளவோ கற்பனைக் கோட்டைகளை கட்டியிருந்தார்கள் என்பதை இந்நிகழ்வுகளால் புரிந்து கொள்ள முடிகிறது. கருணா குழுவை உருவாக்கி - அதை ஈ.என்.டி.எல்.எப். குழுவோடு இணைக்கும் ‘திருப்பணி’யைச் செய்ததே ‘ரா’ உளவு நிறுவனம் தான் என்று ‘டெகல்கா’ வெளியிட்ட கட்டுரையும் உறுதிப்படுத்துகிறது.

“பரந்தன்ராஜன் - கருணாவோடு இணைந்திருப்பது ‘ரா’வின் வேலையாக இருக்கலாம் என்பதே நோக்கர்கள் கருத்து” www.observerindia.com). என்று எழுதியது, டெகல்கா.

தமிழ் நாட்டில் ஈ.என்.டி.எல்.எப். செயல்பாடுகள் தீவிரமானதற்கும் காரணம் என்ன? அதையும் ‘டெகல்கா’ படம் பிடித்துக் காட்டியது.

“கருணா தான் - இனி ஈழத்தின் ஒரே பிரதிநிதி என்று முன்னிறுத்தி அதன் மூலம் தமிழ்நாட்டில் பிரபாகரனின் செல்வாக்கைக் குறைத்து விடலாம் என்று ‘ரா’ திட்டமிட்டது. இதுதான் ஈ.என்.டி.எல்.எப். தமிழகத்தில் தீவிரமாக செயல்பட அனுமதித்ததற்கான காரணம்.”

-என்று ‘டெகல்கா’ சுட்டிக்காட்டியது (ஜுலை 1, 2006).

கருணா குழுவோடு இணைந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டு ஈ.என்.டி.எல்.எப். குழுவினர் இந்தியாவிலிருந்து ஈழத்துக்குப் போனார்கள். இதற்காக இந்தியாவின் கடவுச் சீட்டுகள், அவர்களுக்கு வழங்கப்பட்டன.

சிறீலங்காவின் ராணுவக் கட்டுப்பாடு பிரதேசமான பொலநறுவ எனுமிடத்தில் கருணா முகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் ஒன்றை நடத்தினர். அதில் இறந்தவர்களில் 5 பேர் -இந்தியாவிலிருந்து சென்ற ஈ.என்.டி.எல்.எப். அமைப்பைச் சார்ந்தவர்கள். கொல்லப்பட்டவர்களில் ஒருவரான விஜயன் ஈ.என்.டி.எல்.எப்.பின் முக்கிய தலைவர். கொல்லப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட இந்திய கடவுச் சீட்டுகளும் கைப்பற்றப்பட்டன. ஆக விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கேற்க இந்தியாவிலிருந்து உளவுத் துறையின் குழுவான ஈ.என்.டி.எல்.எப். குழு, மட்டக் களப்புக்குப் போனது. இதன் மூலம் உறுதியாகிறது. ஏப். 19, 2005-ல் இந்தத் தாக்குதல் நடந்தது. இதே போல் 2006 ஆம் ஆண்டு, ஏப். 30 ஆம் தேதி கண்டன்காடு பகுதியில் கருணா குழுவின் முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். அதில் ஈ.என்.டி.எல்.எப். முகாமும் ஒன்று. இந்தியாவிலிருந்து வந்து உருவாக்கிய முகாம் இது. இத் தாக்குதலில் 15 பேர் கொல்லப் பட்டனர். இறந்தவர்களின் 8 சடலங்களை விடுதலைப்புலிகள் மீட்டனர். அதில் 4 சடலங்கள் கருணா குழுவைச் சார்ந்தவை. 4 சடலங்கள் இந்தியாவிலிருந்து உளவுத் துறை ஆசியுடன் வந்த ஈ.என்.டி.எல்.எப். குழுவைச் சார்ந்தவை. ஈ.என்.டி.எல்.எப். முக்கியத் தலைவர் ரீகன் கொல்லப்பட்டவர்களில் ஒருவர். ஈ.என்.டி.எல்.எப். கருணா குழுவோடு இணைந்து, அரசியல் தலைவர்கள், கலை இலக்கியவாதிகள், கல்வியாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளைப் படுகொலை செய்தன. ஆள் கடத்தல், சித்திரவதைகளை நடத்தின; நடத்துகின்றன. தமிழ் ஈழத்தில் தற்போதும் அமைதியைக் குலைக்கும் இந்த பயங்கரவாதத்தில் ‘ரா’வின் பங்கு உண்டு என்பது அதிர்ச்சிக்குரியதாகும்.

இவை மட்டுமல்ல, கருணா குழுவை உருவாக்கியதில் ‘ரா’ உளவு நிறுவனத்துக்குள்ள தொடர்பு குறித்து, பல்வேறு ஏடுகள் வெளியிட்ட செய்திகளையும் சான்றுகளாக பட்டியலிடலாம்

டெய்லி மிர்ரர்: இது கொழும்பிலிருந்து வெளிவரும், சிங்களர்களின் ஆங்கில நாளேடு. அதில் சிறீநாத் பிரசன்ன ஜெயசூரியா என்பவர்,

“விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் ‘ரா’ உளவாளிகள்?” என்ற தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரையை எழுதினார். இந்த கட்டுரை வெளியான நாள் 2004, ஜன.13. அப்போது - கருணா, விடுதலைப்புலிகளிடமிருந்து விலகவில்லை. கருணா கலகக் கொடி தூக்கியது. மார்ச் 3 ஆம் தேதி தான், அதற்கு 50 நாட்களுக்கு முன்பே - இப்படி ஒரு கட்டுரை வெளியானது என்பதுதான் வியப்புக்குரியது. அந்தக் கட்டுரையில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.

“விடுதலைப்புலிகளின் கட்டுப்பாடுப் பகுதியில் ‘ரா’ உளவு நிறுவன உளவாளிகள் ஊடுருவி இருப்பதாக எல்.டி.டி.ஈ. உளவுத் துறைக்கு தகவல் கிடைத்திருப்பதாகத் தெரிகிறது. ‘ரா’ உளவாளிகளைப் பிடிக்கும் முயற்சிகளில் எல்.டி.டி.ஈ. தீவிரமாக இறங்கியிருப்பதாகவும், அரசு ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மன்னாரில் தமிழ்நாட்டைச் சார்ந்த தொழிலதிபர் ஒருவரையும், வவுனியாவில் புலிகள் அமைப்பின் மேஜர் ஒருவரையும் ‘ரா’ உளவாளிகள் என்று எல்.டி.டி.ஈ. கைது செய்துள்ளதாகத் தெரிகிறது.

அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்தியாவுடன், சிறீலங்கா ராணுவ ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திட முடிவு எடுத்தவுடன், ‘ரா’ உளவாளிகள், தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவியிருக்கலாம் என்று புலிகள் கருதி, அவர்களைத் தேடும் வேலைகளை முடுக்கி விட்டுள்ளனர். புலிகளால் கைது செய்யப்பட்ட ‘ரா’ உளவாளியான தமிழகத் தொழிலதிபருக்கு நாகப்பட்டிணத்தில் பல விசைப் படகுகள் சொந்தமாக இருக்கின்றன என்றும், அவர் பல கோடி சொத்துக்களுக்கு அதிபர் என்றும் தெரிகிறது”

-இது இலங்கை நாளேடு டெய்லி மிர்ரர் வெளியிட்ட செய்தி.

கருணா கலகக் கொடி தூக்கி வெளியேறுவதற்கு 50 நாட்களுக்கு முன்பே இலங்கை நாளேடு, ‘ரா’வின் ஊடுருவலை உறுதியாக்கி இப்படி ஒரு செய்தியை வெளியிட்டது. கருணா பிளவுக்கு ‘ரா’ திட்டமிட்டிருந்த செய்தி, முன்கூட்டியே கசிந்ததால்தான் - புலிகள் அமைப்புக்குள்ளேயே ‘ரா’ ஊடுருவி விட்டது என்று அந்த ஏடு செய்தி வெளியிட்டிருக்கிறது.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த 2002-ஆம் ஆண்டு காலத்திலேயே - ‘ரா’வின் தலையீடு ஈழத்தில் மீண்டும் துவங்கி விட்டது என்பது இதிலிருந்து பெறப்படும் அதிர்ச்சியான உண்மை யாகும். ஈழத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்பதில் இவர்களுக்கு உண்மையான கவலை இல்லை என்பது, இதிலிருந்து விளங்குகிறது.

டெக்கான் ஹெரால்டு (பெங்களூர்) : டெக்கான் ஹெரால்டு நாளேடு (மார்ச் 16) கருணா விலகல் குறித்து 800 வார்த்தை களடங்கிய கட்டுரையை வெளியிட்டது. அதில்

“கருணா விலகலுக்குப் பின்னால் ‘ரா’ அல்லது அமெரிக்க உளவு நிறுவனத்தின் கை இருக்கக் கூடும் என்ற ஊகங்கள் உலா வருகின்றன. ஒருவேளை கருணாவின் பெயரைக் கெடுக்க, இப்படி புரளிகளைக் கிளப்பலாம். அதே நேரத்தில் கருணாவுக்கு பிரபாகரனை நேருக்கு நேர் எதிர்க்கும் துணிவு எப்படி வந்திருக்க முடியும்? இதற்குப் பின்னால் வலிமையான சக்தியின் ஆதரவு இருக்கிறது என்பதையும் புறக்கணிக்க முடியாது. இல்லாவிட்டால் கருணா இவ்வளவு துணிவோடு பிரபாகரனை எதிர்க்க முன் வந்திருக்க முடியாது”

-என்று எழுதியது ‘டெக்கான் ஹெரால்டு’.

திபயோனிர் (புதுடில்லி) : திபயோனிர் நாளேட்டில் (மார்ச் 24) ஓய்வு பெற்ற ராணுவ தளபதி அசோக் கே. மேத்தா, கருணா விலகல் பற்றி, 1280 வார்த்தைகளில் ஒரு கட்டுரை எழுதினார். இவர், தமிழ் ஈழத்தில் இந்திய ராணுவம் இருந்தபோது, அங்கே பணி செய்தவர். இவர் கருணா குழுவை பிளவுபடுத்தியதில் ‘ரா’வுக்கு தொடர் பில்லை என்றும், சிறீலங்கா ராணுவம்தான் சில அரசியல் நலன்களுக்காக, இதை செய்திருக்கும் என்றும் எழுதினார். ‘ரா’ உளவு நிறுவனத்தைக் காப்பாற்ற, அவர் முன் வைத்த மற்றொரு வாதம் தான், அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டது. இந்திய ராணுவம் - ஈழத்திலிருந்து 1990-ல் வெளியேறியவுடன், ‘ரா’, எல்.டி.டி.ஈ.வுடன் உள்ள தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துக் கொண்டு விட்டது என்று அவர் எழுதினார். இதில் பாதிதான் உண்மை.

‘ரா’ - எல்.டி.டி.யுடன் உள்ள உறவைத் துண்டித்துக் கொண்டது என்பது உண்மைதான். அதே நேரத்தில், விடுதலைப்புலிகளின் எதிர்ப்பு சக்திகளுடன் தீவிரமான நெருக்கம் கொண்டு, விடுதலைப் புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் ஒழிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்பதும், அதுவே ‘ரா’வின் முக்கிய இலக்கு என்பதும் மறுக்க முடியுமா? அசோக் மேத்தா, இந்த உண்மையை மறைக்க முயன்றதன் மூலம், ‘ரா’வைக் காப்பாற்றும் முயற்சியில் தோல்வியடைந்து விடுகிறார். அசோக் மேத்தா - இதே கட்டுரையில் மற்றொரு தகவலையும் குறிப்பிட்டுள்ளார். 1988 இல் இந்திய ராணுவம் ஈழத்தில் இருந்தபோது மட்டக் களப்பில் புலிகளின் தளபதியாக போரிட்டவர் கருணா.

‘கூடுதல் படைகளை அனுப்புகிறேன்; கருணாவை பிடித்து வா’ என்று, இந்திய ராணுவ தளபதி, மட்டக்களப்பு ராணுவப் பொறுப்பாளரிடம் கூறினாராம். அதற்கு அந்த ராணுவ பொறுப்பாளர்

“கூடுதல் படைகளை அனுப்பினால் கருணாவை பிடிக்க முடியாது. ரூ.5 கோடி பணம் தந்தால், கருணாவைப் பிடிக்க முடியும்”

-என்றாராம். அவ்வளவு பணம் இல்லாததால், அத்திட்டம் கைவிடப்பட்டதாம். அதே கட்டுரையில் இந்தத் தகவலையும், அசோக் மேத்தா வெளியிட்டுள்ளார். இந்திய ராணுவம் - ராணுவ பலத்தை நம்பாமல், விலை பேசுவதற்கும், சூழ்ச்சி வலைகளை வீசுவதற்கும் தயாராக இருந்திருக்கிறது என்பது இதிலிருந்து கிடைக்கும் அவமானகரமான செய்தி. 1988 இல் 5 கோடிக்கு மதிக்கப்பட்ட கருணா - பிறகு அதே உளவு நிறுவனத்தால் கூடுதல் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு விலை பேசப்பட்டாரா என்ற கேள்விக்கும் அசோக்மேத்தா தான் பதில் சொல்ல வேண்டும்.

www.globalsecurity.org:: அமெரிக்க இணையதளமான இது, ‘ரா’ உளவு நிறுவனம் பற்றி முக்கிய தகவல் ஒன்றைத் தெரிவிக்கிறது.

“இந்தியாவின் ‘ரா’ நிறுவனத்துக்கு -தனது விருப்பப்படி செலவிட (Discretionary Fund) ஆண்டு ஒன்றுக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. வெளிநாடுகளில் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தும் நடவடிக்கை களுக்கு இதை செலவிடலாம். தங்களது நோக்கத்தை நிறைவேற்ற தாராளமாக பணத்தைச் செலவிடும் உரிமை ‘ரா’வுக்கு உண்டு.

தி ‘ஹிண்டு’ - ‘பிரன்ட்லைன்’ (சென்னை): கருணா விலகல் பற்றி - ‘இந்து’ குழுமத்திலிருந்து வெளிவரும் ‘பிரன்ட்லைன்’ இதழ் (மார்ச் 27) 8 தலைப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டது. 15,425 வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன. அதில் ‘ரா’ உளவு நிறுவனம் பற்றி ஒரு வார்த்தைகூட கிடையாது. இதுதான் ‘இந்துபிரன்ட்லைன்’ பார்ப்பன குழுமத்தின் ‘பத்திரிகை தர்மம்’. இந்திய உளவுத் துறை அதிகாரிகளும், சர்வதேச ஊடகங்களுமே ‘ரா’வைப் பற்றிக் குறிப்பிடாமல், கருணா விலகலை எழுத முடியாத நிலையில் பார்ப்பன ‘பிரன்ட்லைன்’ மட்டும் தனது நீண்ட மவுனத்தின் மூலம் -‘ரா’ விசுவாசியாகவே தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறது.

தமிழர்கள் -இந்த பார்ப்பன சக்திகளோடு உளவு நிறுவனங்கள் இணைந்து நடத்தி வரும் சதிகளைப் புரிந்து விழிப்போடு, பிரச்சினைளை அணுகிட வேண்டும்.

ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டத்தைத் தீர்மானிக்க வேண்டியது அந்த நாட்டின் மக்கள் தான். மக்கள் ஆதரவு பெற்ற விடுதலை இயக்கங்கள் மட்டுமே தொடர்ச்சியாகப்போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்பதே வரலாறு கூறும் படிப்பினை. ஆனால் அண்டை நாடுகள் தங்களது ‘கைப்பிடிக்குள்’ அடங்கியிருக்க வேண்டும் என்பதற்காக, போராடும் இயக்கத்தை ஒழிக்க நினைப்பதும், போட்டிக் குழுக்களை உருவாக்குவதும் உளவு நிறுவனங்கள் தொடர்ந்து அரங்கேற்றி வரும் சதியாகும். அதைத் தான் இந்திய உளவு நிறுவனங்களும் நடத்தி வருகின்றன.

பயங்கரவாதத்தை அனுமதிக்கக் கூடாது என்று பார்ப்பன பத்திரிகைகள் “தேச பக்தர்கள்” கூக்குரலிடுகிறார்கள்.

இலங்கை அரசு நடத்தி வரும் பயங்கரவாதத்துக்கு ஆயுதங்கள் கொடுப்பது பயங்காரவாதம் அல்லவா?

ராணுவத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து உயிர்த்தியாகம் செய்து போராடும் ஒரு விடுதலை இயக்கத்துக்கு எதிராக போட்டிக் குழுக்களை உருவாக்கி, சகோதர யுத்தத்தைத் தூண்டிவிடுவதற்கு என்ன பெயர்? அதுதான் காந்தியம் காட்டிய அகிம்சையா? பார்ப் பனர்கள் பேசும் தர்மமா? உளவு நிறுவனங்களின் சதித் திட்டங் களால் மனித உரிமையாளர்கள், ஜனநாயக வாதிகள் படுகொலைக் குள்ளாக்கப்பட்டார்களே, இவை பயங்கரவாதம் அல்லவா?

உரிமைக்குப் போராடும் மக்களை, ஒடுக்கும் அரசுகளுக்கு ஆதரவாக, தனது நாட்டு ராணுவத்தை அனுப்புவதற்குப் பெயர் என்ன? அதுதான் அறவழியா? அமைதி வழியா?

இதைவிட பயங்கரவாதம் வேறு இருக்க முடியுமா? இந்திய உளவு நிறுவனங்கள் இதைத் தானே செய்தன. செய்தும் வருகின்றன.

உளவு நிறுவனங்கள் நாடாளுமன்றத்தின் விவாதங்களுக்கு அப்பாற்பட்டதாக ஏன் இருக்க வேண்டும்?

ஒரு ஜனநாயக நாட்டில் இதை அனுமதிக்க முடியுமா?

நாடாளுமன்றத்தின் பார்வையிலிருந்து ‘ரா’ தன்னை தற்காத்துக் கொள்ளலாம்; ஆனால், மக்கள் மன்றத்தின் முன் அவர்கள் அம்பலப்படுவதை தடுத்து நிறுத்த முடியாது.

அதற்கு பதில் சொல்லும் காலம் கட்டாயம் வந்தே தீரும்.

அந்த நோக்கோடு - மக்கள் மன்றத்தில் பல்வேறு ஆதாரங் களோடு - உளவு நிறுவனங்களின் பார்ப்பனியத்தை முன் வைத்துள்ளோம். இதைப் படிப்பதும், பரப்புவதும், தமிழர்களின் விழிப்புணர்வைக் கூர்மையாக்கும் அவர்களின் பார்வையை ஆழ மாக்கும் என்ற நம்பிக்கையுடன்.....

Edited by Aalavanthan

பின் இணைப்பு 1

‘R&AW’

சில தகவல்கள்

ஆய்வு மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு (Research and Analysis

Wing - R&AW) என்று அழைக்கப்படும் மத்திய உளவு நிறுவனம் 1968 ஆம் ஆண்டு, அன்றைய பிரதமர் இந்திராகாந்தியால் உருவாக்கப் பட்டதாகும். வெளிநாடுகளில் - குறிப்பாக, இந்தியாவின் அண்டை நாடுகளில், உளவு பார்ப்பதே இதன் நோக்கம். 1962 ஆம் ஆண்டு நடந்த இந்தோ-சீனா யுத்தம், 1965-ல் நடந்த இந்தோ-பாகிஸ்தான் யுத்தங்களைத் தொடர்ந்து - இப்படி ஒரு உளவு நிறுவனத்தின் தேவையை - மத்திய அரசு உணர்ந்தது. இதனுடைய தலைமை அலுவலகம், புதுடில்லியில், போதி சாலையில் இயங்குகிறது. தற்போது அதன் இயக்குனராக இருப்பவர் அசோக் சதுர்வேதி எனும் அய்.பி.எஸ். அதிகாரி (பார்ப்பனர்). 1970 ஆம் ஆண்டு அய்.பி.எஸ். முடித்து, அது முதல், இந்த நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

‘ரா’ அமைப்பு உருவாவதற்கு முன்பு - ‘அய்.பி.’ (Intelligence Bureau) என்ற உளவு நிறுவனம்தான் அண்டை நாடுகளுக்கான உளவு அமைப்பாகவும் செயல்பட்டது. 1947-ல், இந்தியாவில் இதன் முதல் இயக்குனராகப் பதவி ஏற்றவர் சஞ்சீவி பிள்ளை. சர்வதேச உளவுக்காக, ஒரு சிறு அமைப்பை இவர் ‘அய்.பி.’ அமைப்புக்குள்ளே உருவாக்கியிருந்தாலும், அது போதுமானதாக இல்லை. 1962-ல் இந்தோ-சீனா யுத்தத்தில் இந்தியாவுக்கு நேர்ந்த பின்னடைவுக்குக் காரணம், உளவு நிறுவனங்களின் தோல்வி தான் என்று உணரப்பட்டது. 1965-ல் நடந்த இந்தோ-பாகிஸ்தான் யுத்தத்தில் உளவு நிறுவனம், சரியாக செயல்படவில்லை என்று, ராணுவ தளபதி ஜெனரல் சவுத்ரி, அதிருப்தி தெரிவித்தார். இந்தப் பின்னணியில் தான் 1968-ல் இந்திரா காந்தி ‘ரா’ உளவு அமைப்புக்கு முழு வடிவம் தந்தார். அப்போது ‘அய்.பி.’யின் துணை இயக்குனராக இருந்த ஆர்.என்.கவோ (R.N.Kao), ‘ரா’ நிறுவனத்தின் முதல் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

வெளிநாட்டு உளவுப் பணிகளுக்காக ‘ரா’ - உள்நாட்டு உளவுப் பணிகளுக்காக அய்.பி., இதைத் தவிர ராணுவ உளவுப் பிரிவு ஒன்றும் இயங்குகிறது. (Defence Intelligence Agency - DIA). இந்த மூன்று நிறுவனங்களும், மத்திய அமைச்சரவை செயலகத்தின் கட்டுப்பாட்டில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தன. அதன் பிறகு 1999-ல் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதனுடைய கட்டுப்பாட்டின் கீழ், இந்த உளவு நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டன. இதன் தலைமைப் பொறுப்பில் இப்போது அமர்த்தப்பட்டுள்ளவர்தான் எம்.கே. நாராயணன். அமைச்சரவை செயலகத்தின், ஒரு பிரிவாகவே ‘ரா’ உளவு நிறுவனம் செயல்படுகிறது. எனவே, எந்தப் பிரச்சினை யிலும் ‘ரா’ நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசிய மில்லை. ‘ரா’வை கேள்வி கேட்கும் அதிகாரம், நாடாளு மன்றத்துக்கே கிடையாது. அதனால் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து, ‘ரா’வுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

‘ரா’ உளவு நிறுவனம், விமான ஆய்வு மய்யங்களை (Aviation Research Centre) நடத்தி வருவது, முக்கியமான - வெளியே தெரியாத செய்தியாகும். ‘ரா’ நிறுவனத்தின் விமான ஆய்வு மய்யங்கள், கட்டாக் (ஒரிசா), தின்சுக்கியா (அசாம்), சக்ரந்தா (உத்தர்காண்ட்) ஆகிய விமானப் படைத் தளங்களில் செயல்படுகின்றன. இது தவிர, தஜகிஸ்தான் நாட்டில் - ஃபர்க்கோர், விமான நிலையத்திலும், ‘ரா’வுக்கு, விமான ஆய்வு மய்யம் உண்டு.

‘ரா’வின் இந்த விமான ஆய்வுப் பிரிவுக்கு சொந்தமாக நவீனரக விமானங்கள் இருக்கின்றன. விமானங்கள் மூலம் வேவு பார்ப்பது, படங்கள் பிடிப்பது, சிக்னல் கருவிகளைப் பயன்படுத்தி தகவல் சேகரிப்பது (Gathering Information via Air horne signal

intelligence - SIGINT) போன்ற பணிகளுக்கும், எல்லைப் பாதுகாப்பு சிறப்பு அதிரடிப் படையினரை, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்வதற்கும் இந்த விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

‘ரா’வின் உளவாளிகள் - அனேகமாக அனைத்து இந்திய தூதரகங்களிலும், துணைத் தூதரகங்களிலும் செயல்படுகின்றனர். 10,000 ‘ரா’ உளவாளிகள், பாகிஸ்தானில் மட்டும் ரகசியமாக இயங்கி வருகின்றனர். மேலும் பல்லாயிரக்கணக்கில் உலகம் முழுதும் செயல்படுகிறார்கள்.

‘ரா’ வின் நோக்கங்கள்:

1. அண்டை நாடுகளில் நிகழும் -அரசியல், ராணுவ மாற்றங்களைக் கண்காணிப்பது.

2. சர்வதேச கம்யூனிசத்தின் வளர்ச்சியைக் கண்காணிப்பது, அந்த நாடுகளைக் கண்காணிப்பது, அந்த நாடுகளுடன் இந்தி யாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள்ள தொடர்புகளைக் கண்காணிப்பது.

3. பாகிஸ்தான் மற்றும் சீன நாடுகள், வாங்கும் நவீன ராணுவ ஆயுதங்களைக் கண்காணிப்பது.

4. சர்வதேச நாடுகளில் வாழும், இந்திய சமூகத்தினைப் பயன் படுத்தி, அந்தந்த நாடுகளில் கருத்துருவாக்கம் மற்றும் அரசியல் அழுத்தங்களை உருவாக்குதல்.

அமைப்பியக்கம்

அமெரிக்காவின் உளவு நிறுவனமான ‘சி.அய்.ஏ.’ போன்று, உருவாக்கப்பட்டதே ‘ரா’. இதன் தலைவர் -பிரதமர் அலுவலகத்தோடு இணைந்து செயல்படுகிறார்.

‘ரா’வில் பணியாற்றும் அதிகாரிகள் - அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் பயிற்சி பெற்றவர்கள். அண்மைக் காலமாக இசுரேல் நாட்டுக்கும் பயிற்சிக்கு அனுப்பப்படுகிறார்கள். ‘ரா’வின் தலைமை அதிகாரிக்கு செயலாளர் (ஆய்வு) என்று பெயர். அவர் அமைச்சரவை செயலாளருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளார். அமைச்சரவை செயலாளர் பிரதமருடன் தொடர்பு கொண்டுள்ளார். ஆனாலும், ஒவ்வொரு நாளும் - ‘ரா’ செயலாளர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகருடன் தொடர்பு கொண்டு செயல்பட்டு வருகிறார்.

• ‘ரா’வின் விமான ஆய்வு மய்யங்கள் - இரண்டு சிறப்பு செயலாளர்கள் மற்றும் ஒரு சிறப்பு இயக்குனரின் கீழ் இயங்குகின்றன.

• பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நான்கு கூடுதல் செயலாளர்களின் நிர்வாகத்தின் கீழ் விடப்பட்டுள்ளன.

• பல்வேறு தலைப்புகளின் கீழ் ‘ரா’ பிரச்சினைகளை கையாளுகிறது. 40க்கும் மேற்பட்ட கூடுதல் செயலாளர்கள்

-இந்தப் பிரிவுகளின் நிர்வாகத் தலைவர்கள்.

புதுடில்லியைத் தவிர, வேறு பல இடங்களிலும் ‘ரா’வின் மண்டல தலைமையகங்கள் உண்டு. சர்வதேச நாடுகளில், ரகசியமாக தகவல்களைத் திரட்டி அனுப்பும் வேலைகளை கள அதிகாரிகளும் மற்றும் அவர்களது உதவியாளர்களும் கவனித்து வருகிறார்கள். திரட்டப்பட்ட தகவல்கள் இறுதியாக, ‘ஆய்வு அதிகாரிகளின்’ பார்வைக்கு வரும். தகவல்களைத் திரட்டும் அதிகாரிகளாக பெண்கள் பெரும் எண்ணிக்கையில் செயல்படுவது குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலமாக ‘ரா’ நிறுவனம், பாகிஸ்தானைவிட, சீனாவிடமிருந்து, தகவல்களைத் திரட்டுவதில் அதிகக் கவனம் செலுத்தி, அதற்கென்றே தனிப் பிரிவுகளை அமைத்துள்ளது.

செயல்படும் முறைகள்

1. தகவல் சேகரிப்பு : இந்தியாவின் நலன் தொடர்பான தகவல்கள் - முறையான வழிகளிலும், முறைகேடான வழிகளிலும் திரட்டப்படுகிறது.

2. தகவல் பகுப்பு : சேகரிக்கப்பட்ட தகவல்கள் - தலைப்பு வாரியாக பகுக்கப்பட்டு, கணினி வழியாக பதிவு செய்யப்படு கின்றன. புதுடில்லியிலுள்ள குண்டு துளைக்காத 13 அடுக்கு தலைமையகத்தில், இதற்கென்று, தனித்தளம் உண்டு.

3. அதிரடி நடவடிக்கைகள்: உளவு பார்த்தல், கவிழ்ப்பு நடவடிக்கைகள், சதித் திட்டம், கலகக் குழுக்களை உருவாக்குதல் - ஆகியவையும், ‘ரா’வின் செயல்பாடுகள் ஆகும்.

4. ஊடுருவல் : எதிரிகளின் உளவு நிறுவனங்களில் ஊடுருவி செயல்படும் முறையையும் ‘ரா’ பின்பற்றி வருகிறது. ‘ரா’ நிறுவனத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாக இது கருதப்படு கிறது. ஆனாலும், ‘ரா’ உளவு நிறுவனங்களிலிருந்து பல முக்கிய அதிகாரிகள் வேறு நாடுகளின் உளவு நிறுவனங் களுக்கு தாவி விடுவது அதிகரித்து வருவதால், இந்த ‘ஊடுருவல்’ உளவு வேலைகளை இப்போது அதிகமாக ‘அய்.பி.’ மேற்கொண்டு வருகிறது.

செயல்படும் தளங்கள்

‘ரா’ உளவு நிறுவனத்தின் உளவாளிகள் - தூதரகங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், தகவல் தொடர்பு நிறுவனங்களான

பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றைத் தளமாகக் கொண்டு செயல்படுகிறார்கள். ஆப்கானின் “காட்” (முழஹனு), இஸ்ரேலின் மொசாத் அமெரிக்காவின் சி.அய்.ஏ. ஆகிய உளவு நிறுவனங்களோடு தொடர்பு கொண்டும் செயல்படு கிறார்கள். மேற்குறிப்பிட்ட உளவு நிறுவனங்கள் - பாகிஸ்தானின் அணு ஆயுதக் கொள்கைகளையும், அது தொடர்பான செயல்பாடு களையும் கண்காணிப்பதில் ஒத்த கருத்துள்ளவையாகும்.

ஆப்கானிஸ்தான், பிரிட்டன், ஹாங்காங், மியான்மர், சிங்கப்பூர் போன்ற நாடுகளைத் தளமாகக் கொண்டு, தீவிரமாக ‘ரா’ உளவு நிறுவனம் செயல்படுகிறது.

தங்களது உளவு வேலைக்கு, உள்ளூர் பகுதிகளிலிருந்தும் ஆட்களை தேர்வு செய்கிறார்கள். பார்ப்பன ‘சாணக்கியன்’ கொள்கையான மது, மங்கை, பணம் போன்ற பலவீனங்களையும் பயன்படுத்தி, தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. சில நேரங்களில் மிரட்டியும் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இனம், பிரிவு, பிரிந்து போகும் கொள்கை போன்ற உணர்வு ரீதியான பிரச்சினைகளை முன்வைத்து, தங்களது ஆதரவாளர்களை ‘ரா’ உருவாக்குகிறது. ராணுவத்தில் பணிபுரிவோரின் பலவீனங்களுக்கு தீனி போட்டு, தகவல்கள் சேகரிக்கப்படுவது அதிகம்.

‘ரா’ உளவு நிறுவனத்தின் கடந்தகால செயல்பாடுகள்

(1) வங்க தேசத்தைப் பிரித்தது:

பாகிஸ்தானில் வங்க மொழி பேசும், கிழக்கு பாகிஸ்தானை தனி நாடாக்கியதில் ‘ரா’ உளவு நிறுவனத்துக்கு பெரும் பங்கு உண்டு.

1970களின் முற்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் பங்களாதேஷ் விடுதலை கோரிய மக்கள் மீது, கடும்தாக்குதலை நடத்தியது. இலட்சக்கணக்கில் மக்கள் அகதிகளாக, இந்தியாவுக்கு ஓடி வந்தனர். போராடிய பங்களாதேஷ் மக்களுக்கு ஆதரவாக தனி நாட்டை உருவாக்கி, பாகிஸ்தானை கூறு போட ‘ரா’ முடிவெடுத்தது. ‘முக்திவாகினி’ என்ற படையை ‘ரா’ உருவாக்கி, அதன் பெயரில் வங்க மொழி மக்கள் வாழும் கிழக்கு பாகிஸ்தானில் ஊடுருவி, கொரில்லா தாக்குதல் நடவடிக்கைகளில், ‘ரா’ நிறுவனம் இறங்கியது. பாகிஸ்தானின் உடைமைகள் நசுக்கப்பட்டன. பாகிஸ்தான் ராணுவத்தினர், கிழக்கு பாகிஸ்தான் பகுதிக்குள்

நுழைய முடியாத அளவுக்கு பாதைகளை அழித்தார்கள். இறுதியில் பாகிஸ்தான் தோற்றது. பாகிஸ்தான் ராணுவ தளபதி ஏ.ஏ.கே. நிசாரி, இந்திய ராணுவ தளபதி ஜெக்ஜித் சிங் அரோராவிடம், பாகிஸ்தான் ராணுவத்தை சரணடையச் செய்யும் ஒப்பந்தத்தில், 1970 டிசம்பர் 16 இல் கையெழுத்திட்டார்.

(2) ‘சிரிக்கும் புத்தர்’ நடவடிக்கை :

1974 மே 18 ஆம் தேதி இந்தியா - பொக்ரானில் முதன்முதலாக அணுகுண்டு வெடித்தது. அத்திட்டத்தை மிகவும் ரகசியமாக பாதுகாக்கும் பொறுப்பை ‘ரா’ நிறுவனம் ஏற்றுக் கொண்டது. இந்த அணுகுண்டு வெடிப்புக்கு சூட்டப்பட்ட பெயர் ‘சிரிக்கும் புத்தர்’ (Operation Smiling Budha) என்பதாகும்.

(3) சிக்கிம் இணைப்பு:

இமயமலையின் கிழக்குப் பகுதியில் உள்ள நாடு சிக்கிம். சிக்கிமைச் சுற்றி, திபேத், நேபாளம், பூட்டான் நாடுகளும், மேற்கு வங்க மாநிலமும் அமைந்துள்ளன. சிக்கிமில் நடந்த மன்னராட்சியை இந்தியா அங்கீகரித்து, மன்னருக்கு ‘சோக்கியால்’ (தர்மராஜா) என்ற கவுரவப் பட்டத்தையும் வழங்கியிருந்தது. சிக்கிமில் மன்னராட்சியை ஒழித்துவிட்டு, இந்தியாவுக்கு ஆதரவான ஒரு ஜனநாயக ஆட்சியமைப்பை உருவாக்கும் பொறுப்பு 1972-ல் ‘ரா’ அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கேற்ற சதித் திட்டங்களை ‘ரா’ உருவாக்கி, அரங்கேற்றியது மூன்றே ஆண்டுகளில் சிக்கிம், இந்தியாவின் 22வது மாநிலமாக, 1975 ஏப்.26 இல் இணைக்கப்பட்டது.

(4) பாகிஸ்தான்-பஞ்சாபில்:

பஞ்சாபில், காலிஸ்தான் தனிநாடு கோரும் போராட்டத்தை, சீக்கியர்கள் தீவிரமாக நடத்தியபோது, ‘ரா’ உளவு நிறுவனம், ஒரே நேரத்தில், இரண்டு ரகசிய முறியடிப்பு குழுக்களை உருவாக்கியது. ஒரு குழுவுக்குப் பெயர் Counter Intelligence Team X(CIT-X); மற்றொரு குழுவுக்குப் பெயர் Counter Intelligence Team J(CIT-J) -முதல் குழு பாகிஸ்தானிலும் - இரண்டாவது குழு - காலிஸ்தான் போராட்டக் குழுவினரிடையேயும் ஊடுருவியது. காலிஸ்தான் போராட்டக் குழு ஒன்றை வழி நடத்திய ரபீந்தர்சிங் என்பவர். ‘ரா’ விரித்த வலையில் வீழ்ந்தார். பஞ்சாப் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கடத்தல் தொழில் நடத்தி வந்தவர்களைப் பயன்படுத்தி, அவர்கள் வழியாக ஆயுதங்களையும், நிதியையும், பாகிஸ் தானுக்கும், பஞ்சாபுக்கும் ‘ரா’ கொண்டு வந்தது. பஞ்சாபில் சீக்கியர் போராட்டத்துக்கு உதவி செய்த பாகிஸ்தான் உளவு நிறுவனமான ‘அய்.எஸ்.அய்.’யும், இதே வழியில்தான், ஆயுதத்தை

-காலிஸ்தான் குழுவினருக்கு அனுப்பியது. காலிஸ்தான் கோரிக்கைக்கு போராடிய பல்வேறு குழுக்களே, ‘ரா’ உளவு நிறுவனத்தின் நடவடிக்கைகளால், தங்களுக்குள் மோதி, அழித்துக் கொண்டனர். இதில் ‘ரா’ நிறுவனத்துக்கு உதவிய ரபீந்தர்சிங் 2004-ல், அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்துவிட்டார். “பஞ்சாபில் பாகிஸ்தான் உளவு நிறுவனத்தின் தலையீட்டால் நடந்த காலிஸ்தான் கிளர்ச்சியை ஒடுக்குவதில் ‘ரா’வின் இந்த முயற்சிக்கு நல்ல வெற்றி கிடைத்தது” என்று, ராணுவ ஆய்வாளர் பி.இராமன் எழுதினார். இந்த நடவடிக்கைகளுக்கு ‘ரா’ செலவிட்ட தொகை மிக மிக அதிகம். அய்.கே. குஜரால், பிரதமராக வந்தபோது, “இந்த நடவடிக்கைகளைத் தொடர வேண்டாம் என்று நிறுத்தினார்.

(5) மாலத்தீவு:

1988 இல் மாலத் தீவில், ஈழ விடுதலைக் குழுக்களில் ஒன்றான ‘புளோட்’ அமைப்பைப் பயன்படுத்தி, ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஏற்பாடு செய்த ‘ரா’ பிறகு, முயற்சி தோல்வியுற்றவுடன் கப்பல் மற்றும் விமானப் படைகளை அனுப்பி, கலகக் காரர்களைக் கைது செய்து, அப்துல் க்யூம் அரசை மீண்டும் நிலை நிறுத்தியது. (இது பற்றிய விரிவான செய்திகள் நூலில் இடம் பெற்றுள்ளன.) இந்த நடவடிக்கைக்கு ‘ரா’ சூட்டிய பெயர் ‘ஆபரேஷன் கேக்டஸ்’ (Operation Cactus) என்பதாகும்.

(6) பர்மா:

அடர்ந்த காட்டுப் பகுதிகளைக் கொண்ட மியான்மர் நாடு எப்போதுமே, இந்திய உளவு நிறுவனத்துக்கு கவலை தரும் பகுதியாகும். வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்த பல ஆயுதம் தாங்கிப் போராடும் குழுக்களுக்குப் பயிற்சித் தளமாக இப்பகுதி விளங்குகிறது. எனவே, இந்தப் பகுதியில் நடக்கும் அரசு, இந்தியாவுக்கு ஆதரவான அரசாகவே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ‘ரா’ செயல்பட்டு வருகிறது. இதற்காகவே - பர்மிய கலவரக்குழு ஒன்றை ‘ரா’ உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. ‘கச்சின் சுதந்திரப் படை’ என்பதும் ‘ரா’ உருவாக்கிய அமைப்பு

என்று கூறப்படுகிறது. ‘கே.அய்.ஏ.’ எனும், இந்தக் குழுவுக்கு ஆயுதங்கள் தந்து உதவுவதோடு, இந்திய எல்லைக்குள், வைரம் போன்ற விலை உயர்ந்த கற்களைக் கடத்தி வர்த்தகம் நடத்தவும் ‘ரா’ உளவு நிறுவனம் அனுமதி தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அமைப்பின் தலைவர் மாறன் பிராங்சீய்ன் (Maran Brangsein என்பவர் ‘ரா’வின் தலைவரை, இரண்டு முறை டெல்லியில் சந்தித்துப் பேசியுள்ளார்.

‘ரா’வின் தோல்விகள்

கனிக்ஷா விமான விபத்து:

1985 ஜூன் 23 அன்று அயர்லாந்து அருகே ‘ஏர் இந்தியா’ விமானம் வெடித்து 329 அப்பாவிகள் உயிரிழந்தனர். அதே நாளில் டோக்கியோவில் நாரிதா விமான நிலையத்திலிருந்து, பயணிகளின் பெட்டிகள், பாங்காக் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்துக்கு மாற்றப்படும்போது, பெட்டியிலிருந்த குண்டு வெடித்தது, விமானம் தாமதம் ஆனதால், உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை. இந்தக் குண்டு வெடிப்புகளுக்குத் திட்டமிட்டது காலிஸ்தான் தீவிரவாதிகள் என்றும், ‘ரா’ நிறுவனம் இதை முன்கூட்டியே கண்டறியாமல் தோல்வி அடைந்துவிட்டது என்றும் கூறப்படுகிறது.

கார்கில் யுத்தம்:

1999 இல் கார்கிலில் பாகிஸ்தான் ஊடுருவியதைத் தொடர்ந்து நடந்த யுத்தத்தில் இந்திய ராணுவத்துக்கு கடும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. ‘ரா’ உளவு நிறுவனம், சரியாக செயல்பட்டு, தகவல்களைத் திரட்டாததே இதற்குக் காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் ‘ரா’ நிறுவனம் இதை அரசியல்வாதிகளின் தவறான குற்றச்சாட்டு என்று மறுத்தது.

சி.அய்.ஏ. உளவாளி:

‘ரா’ உளவு நிறுவனத்தின் - தென்கிழக்கு ஆசியா பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவர் ராபிந்தர்சிங். ‘ரா’ நிறுவனத்தில் கூடுதல் செயலாளர்; 2004 ஜூன் 5 ஆம் தேதி இவர் அமெரிக்காவுக்கு தப்பி விட்டார். தப்புவதற்கு முன்பு, ‘ரா’ புதுடில்லி தலைமை அலுவலகத்திலிருந்து பல முக்கிய ரகசிய கோப்புகளை எடுத்துச் சென்று விட்டார். ராபிந்தர்சிங் நடவடிக்கைகளை ‘ரா’ உளவு நிறுவனம் தொடர்ந்து சந்தேகத்துடன் கண்காணித்து வந்த நிலையிலும், அவர் தப்பிச் சென்றதைத் தடுக்க முடியவில்லை. நியுஜெர்சி மாநிலத்தில் அவர் காணப்பட்டதாக அண்மையில் ‘ரா’ நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. தப்பிச் சென்ற ராபிந்தர் சிங் அமெரிக்காவில் சி.அய்.ஏ. உளவு நிறுவனத்தோடு தொடர்புள்ளவாராகக் கூறப்படுகிறது.

கடும் விமர்சனங்கள்:

‘ரா’ உளவு நிறுவனம் - நாடாளுமன்றத்துக்கோ, நாட்டு மக்களுக்கோ கட்டுப்பட்டதல்ல. பிரதமருக்கு மட்டுமே கட்டுப் பட்டது என்று விதிகளை வகுத்திருப்பது கடும் விமர்சனத் துக்குள்ளாகி வருகிறது. அந்த அமைப்பு அண்மைக்காலமாக அதிகாரத்துவம் நிறைந்ததாகவும் அதிகார வர்க்கமாகவும் மாறி வருகிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதிகாரிகள் மட்டத்தில், பல்வேறு இனப் பிரிவுகளுக்கும் உரிய வாய்ப்புகள் தரப்படுவதில்லை. குறிப்பாக - பார்ப்பன உயர் சாதி அதிகாரிகளும், மலையாளிகளும் தான் ஆதிக்க சக்திகளாக இருந்து வருகிறார்கள். ‘அவுட் லுக்’ ஆங்கில வார ஏடு 2006 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதில் ‘ரா’ உயர் அதிகாரிகள் பதவிகளில் ஒரு முஸ்லீம் கூட இல்லை என்பதை சுட்டிக் காட்டியது. கீழ் மட்டத்தில் மட்டும் சில முஸ்லீம்கள் இருப்பதாக ‘ராய்ட்டர்’ செய்தி நிறுவனம் கூறுகிறது.

சர்வதேச உளவு நிறுவனங்கள் நடவடிக்கைகள் தொடர்பாக ஏராளமான ஹாலிவுட் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு, இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படு கின்றன. ஆனால், இந்தியாவில் ‘ரா’ ‘அய்பி’ உளவு நிறுவனங்கள் பற்றிய திரைப்படங்களைத் தயாரிக்க எவரும் முன் வருவதில்லை. தீவிரவாதம், உளவு, உளவு நிறுவன சதி பற்றி படங்கள் வந்தாலும், எந்தப் படத்திலும் ‘ரா’ நிறுவனம் என்ற பெயர், ஹாலிவுட் படங்களைப்போல், வெளிப்படையாக இடம் பெறுவது இல்லை.

‘ரா’ அமைப்பின் கீழ் நவீன தொழில்நுட்பப் பிரிவு ஒன்றும் (National Technical Research Organisation) என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.

பின் இணைப்பு : 2

இந்திய உளவு அமைப்பு

(IB - Intelligence Bureau)

உலகின் மிகப் பழமையான உளவு அமைப்பு இந்திய உளவு அமைப்பான ‘அய்பி’ 1885 இல் சிம்லாவில் இருந்த ‘பிரிட்டிஷ் இந்திய ராணுவ’த்தின் தளபதியாக இருந்த சார்லஸ் மெட் கால்ஃப் மேக்கரீன்’ என்பவர் முதலில் உளவு நிறுவனத்தைத் துவக்கினார். பிரிட்டிஷ் இந்தியாவை சோவியத் இராணுவம் ஆக்கிரமிக்கக் கூடும் என்று பிரிட்டிஷ் அரசு பயந்தது. ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருந்த ரஷ்ய துருப்புகள் - வடமேற்கு பகுதி வழியாக, இந்தியாவை ஆக்கிரமிக்கலாம் என்று அஞ்சிய பிரிட்டிஷார், ஆப்கானிஸ்தானில் ரஷ்ய துருப்புகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க இந்த உளவு அமைப்பை உருவாக்கினார். 1921 இல் பிரிட்டிஷ் ஆட்சியில், இந்திய அரசியலை கண்காணிக்க இந்திய அரசியல் புலனாய்வுப் பிரிவு (Indian Political Intelligence) உருவாக்கப்பட்டது. 1947 இல் இந்திய “சுதந்திரம்” என்ற நிலையில் உள்துறை அமைச்சகத்தின் கீழ் தற்போதுள்ள ‘அய்.பி.’ உருவானது.

முதலில் உள்நாட்டு, அயல்நாட்டு உளவுப் பணிகளை அய்.பி. தான் கவனித்து வந்தது. பிறகு அயல்நாட்டு உளவுப் பணிகளுக்காக தனியே ‘ரா’ அமைக்கப்பட்டவுடன், இந்திய உளவுப் பணிகளை, ‘அய்.பி.’ கவனித்து வருகிறது. ‘இந்திய போலீஸ் சர்வீஸ்’ மற்றும் ராணுவ அதிகாரிகளைக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் தற்போதைய தலைவர் நரசிம்மன், ஏனைய உளவுத் துறை நிறுவனங்களுக்கும், காவல் துறைக்கும் தகவல்களைத் தருகிறது. இந்த நிறுவனம் தூதரக அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் பதவி ஏற்புக்கான பாதுகாப்புகளை வழங்குகிறது. பத்திரிகைகளுடன் தொடர்பு கொண்டு கருத்துகளைத் திரட்டுகிறது. ‘வாரன்ட்’ இல்லாமல், தொலைபேசி பேச்சுக்களை பதிவு செய்யும் உரிமை அய்.பி.க்கு வழங்கப்பட்டுள்ளது. இது பல நேரங்களில் முறைகேடாக அரசியலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனால்,

அண்மையில் இப்படி ரகசியப் பதிவு செய்வதற்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. பல்வேறு பத்திரிகைகளுக்கும், நாளேடுகளுக்கும், ஆசிரியருக்குக் கடிதங்கள் எழுதி, அரசுக்கு ஆதரவாகக் கருத்துக்களை உருவாக்கும் வேலையையும் இந்த நிறுவனம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் உள்நாட்டு செய்தி நிறுவனமாக செயல்படும் இந்த அமைப்பு, ஆட்சிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கிறது. நாட்டின் பாதுகாப்பு நிலவரங்களை மதிப்பீடு செய்து, மாநில ஆளுநர்களுக்கு தெரியப்படுத்துகிறது. மாநில அரசியலை கண்காணித்து வரும் அய்.பி. - எதிர்கட்சிகளைக் குறி வைத்து செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டும் உண்டு. போட்டிக் குழுக்களை உருவாக்கும் (Counter -Intelligence Operation) வேலைகளையும் இது செய்கிறது.

மீனவர்கள் உருவில் உளவாளிகள்

தமிழ்நாட்டில் முகாமிட்டு, தீவிரமாக செயல்பட்டும் மத்திய அரசின் உளவுத் துறை கடற்கரைப் பகுதிகளில் பல மீனவர்களை தங்களின் உளவாளிகளாக மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்துக் குள்ளும் மீனவர்கள் உருவில் ‘ரா’ உளவாளிகள் ஊடுருவியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியக் கடற்பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடல் பகுதிக்குள் நுழைந்துவிட்டால், அவர்களை இலங்கைக் கடற்படை பிடித்து விசாரணை நடத்தி, பிறகு இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைப்பது வழக்கம். அவர்களை யாழ்ப்பாணத்துக்குள் நடமாட அனுமதிப்பதில்லை. ஆனால், அண்மைக்காலமாக, தமிழக மீனவர்கள் சிறீலங்கா ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியான யாழ்ப் பாணத்துக்குள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்கள் எப்படி உள்ளே நுழைந்தார்கள்? கடற்படையால் கைது செய்யப்பட் டிருந்தால், இப்படி நடமாட அனுமதிக்கப்பட்டிருப்பார்கள

பின் இணைப்பு : 3

மீனவர் பிரச்சினை: உளவுத் துறையின் நாடகம்

மார்ச் 4 ஆம் தேதி கன்யாகுமரியி லிருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் கரை திரும்பவே இல்லை. அவர்களை விடுதலைப்புலிகள் பிடித்து வைத்திருப்பதாக உளவுத் துறையும், காவல்துறையும் கூறுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் மறுத்துவிட்டது. தமிழக மீனவர்களைப் பிடித்து தமிழர்களோடு முரண்பாட்டை வளர்க்க வேண்டிய அவசியம் விடுதலைப்புலி களுக்கு என்ன வந்தது என்பது முதல் கேள்வி? தமிழகத் தமிழர்களின் நட்புக்கும், நேசத்துக்கும் ஆதரவுக்கரம் நீட்டி நிற்பவர்கள் - தமிழ் ஈழப் போராளிகள்.

தற்போது தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள உளவுத் துறையால் ‘கடற்புலிகள்’ என்று சுட்டப்படு கின்ற, 6 தமிழர் களும் யார்? அவர்கள் உண்மையில் கடற்புலிகளா? அல்லது மீன் பிடிக்க வந்த ஈழத் தமிழர்களா? யார் இவர்கள்?

இவர்கள் கன்யாகுமரி அருகே நடுக் கடலில் கடலோரக் காவல் படையின ரால் கைது செய்யப்பட்டவர்கள், இவர்கள் பிடிபடுவதற்கு ஒன்றரை மாதத்துக்கு முன்பு, கடலில் மீன்பிடிக்கப் போன 12 தமிழ்நாட்டின் குமரி மாவட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்களை சுட்டுக் கொன்றது, இப்போது பிடிப்பட்டவர்கள் தானா என்ற சந்தேகங்களும் பத்திரிகைகளால் எழுப்பப்பட்டன.

இது பற்றி -தமிழ் நாளேடுகளான ‘தினமணி’, ‘தினத்தந்தி’யில் வெளியான செய்திகள் என்ன கூறின?

• மார்ச் மாதம் 4 ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற 12 தமிழ்நாடு மீனவர்கள் கரை திரும்பவில்லை.

• மார்ச் 29 ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற தமிழ்நாடு மீனவர்கள் மீது நடுக்கடலில் சிலர் துப்பாக்கியால் சுட்டதில் 5 தமிழக மீனவர்கள் இறந்து விட்டனர். அதே படகில் இருந்த மற்றவர்கள் காயங்களுடன் உயிர் தப்பி, கரை திரும்பிவிட்டனர். அப்படி, தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் வந்த படகில் ‘மரியா’ என்று எழுதப்பட்டிருந்தது.

• ஏப்ரல் 11 ஆம் தேதி - இந்திய கடலோரப் பாதுகாப்புப் படை கடலில் ரோந்து சென்றபோது, தூத்துக்குடி அருகே தமிழக கடல் பரப்பில் 6 ஈழத் தமிழர் களையும், 6 தமிழக மீனவர்களையும், கைது செய்து அவர்களின் படகுகளை யும் பறிமுதல் செய்தனர். மீன் பிடிக்க வந்தபோது, படகு பழுதாகி, கடலில் தவித்துக் கொண்டிருந்த இலங்கைத் தமிழ் மீனவர்கள், தங்களிடம் உதவி கேட்டபோது, அவர்களைக் காப்பாற்றி அழைத்து வந்ததாக தமிழக மீனவர்கள் தெரிவித்தனர். ஈழத் தமிழ் மீனவர்களின் படகில் ‘மரியா’ என்ற பெயர் காணப்பட்டதால், ஒரு சந்தேகம் எழுந்தது. இதே பெயர் எழுதப்பட்ட படகில் வந்தவர்கள்தான் ஏற்கனவே தமிழக மீனவர்கள் 5 பேரை சுட்டுக் கொன்றதாக, அவர்களுடன் சென்று உயிர் தப்பி வந்த மீனவர்கள் கூறியிருந்தனர்.

• இந்த நிலையில் - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரி ஜான் நிக்கல்சன், இவர்களிடம் விசாரணை நடத்தினார். ஏற்கனவே நடந்த துப்பாக்கிச் சூட்டில், உயிர் பிழைத்து கரை திரும்பிய கன்யாகுமரி மீன வர்கள், தூத்துக்குடிக்கு அழைக்கப்பட்டனர். இப்போது மரியா படகில் பிடிப்பட்டுள்ளவர்களைக் காட்டி, “இவர்கள்தான், உங்களைச் சுட்டவர்களா?” என்று கேட்டபோது, தமிழக மீனவர்கள் அவர்களைப் பார்த்து - “எங்களைச் சுட்டது இவர்கள் இல்லை” என்று கூறிவிட்டனர். அத்தோடு இந்த ‘மரியா’ படகும் - எங்களைச் சுட்டவர்கள் வந்த படகு அல்ல என்றும் தெரிவித்தனர். பிடிபட்ட ஈழத் தமிழ் மீனவர்களின் பெயர், ஊர்க ளோடு பத்திகை களுக்கு செய்தி தரப்பட்டது. தமிழ் நாட்டு மீனவர் களை சுட்டது, பிடிபட்ட, ஈழத் தமிழ் மீனவர்கள் அல்ல என்று காவல்துறை திட்ட வட்டமாக அறி வித்தது. கைதானவர்களிடமிருந்து எந்த ஆயுதங்களும் கைப்பற்றப்படவில்லை. எல்லை தாண்டி - தமிழ் நாட்டுக்குள் நுழைந்தார்கள் என்பது மட்டுமே குற்றச்சாட்டு. அந்த வழக்கைப் பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்டார்கள்; பிரச்சினை முடிந்து விட்டது.

இதற்குப் பிறகு நடந்த சம்பவங்கள் தான் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன. ஏற்கனவே தமிழகத்தில் முகாமிட்டு, ‘கூட்டு ரோந்துக்கு’ உரிய அரசியல் சூழலை உருவாக்கும் நோக்கத்தோடு, திட்டமிட்டு செயல்பட்டு வரும் மத்திய உளவுத் துறை, தமிழ் ஈழப் போராளிகள் மீது பழி போட்டு, தமிழ் நாட்டுக்கும், ஈழப் போராளிகளுக்குமிடையே முரண் பாட்டை கூர்மைப்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்கத் தொடங்கின. இப்படிக் கருதுவதற்கு வலுவான காரணங்களும் இருக்கின்றன.

தமிழக மீனவர்கள் - நடுக்கடலில் சுடப்பட்டது மார்ச் 29, 2007. அடுத்த நாளே - அதாவது மார்ச் 30 ஆம் தேதியே சிறிலங்கா அரசு, தமது கப்பல்படை, சுட வில்லை என்று மறுக்கிறது. அது மட்டுமல்ல, இதில் “விடுதலை புலிகளுக்கு தொடர்பு இருக்கலாம்” என்றும், பழியை விடுதலைப்புலிகள் மீது போடுகிறது. (The Srilanka Government said the complicity regarding the incident must be attributed to the LTTE, March 31, ‘Daily Mirror’)

சிறீலங்கா அரசு மறுப்பு வெளியிட்ட அதே நாளில், அதே குரலை அப்படியே எதிரொலிக்கிறார். இந்தியாவினுடைய கப்பல் படை தலைமை அதிகாரி அட்மிரல் சுரேஷ் மேத்தா, அதே மார்ச் 31-ல் அவரது பேட்டியை ‘இந்து’ நாளேடு வெளியிடுகிறது. “இதில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு உண்டு என்ற கருத்தை புறக்கணித்துவிட முடியாது” - என்கிறார், இந்திய கப்பல்படையின் தலைமை அதிகாரி. இன்னும் ஒரு படி மேலே போய், தமிழ்நாடு அரசையும் குற்றம்சாட்டுகிறார்.

“தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கைக் கடற்பகுதிக்குச் சென்று மீன் பிடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி, தமிழக மீனவர்களுக்கு போதுமான எச்சரிக்கை வழங்க, தமிழ்நாடு அரசு தவறிவிட்டது” என்றும் தமிழக அரசைக் குற்றம் சாட்டினார்.

மீனவர்கள் சுடப்பட்டது மார்ச் 29. உடனே - ஒரே நாள் இடைவெளியில் எந்த விசாரணையுமின்றி விடுதலைப்புலிகள் மீது, இந்திய கப்பல்படை அதிகாரி எப்படிப் பழி போட முடிகிறது? இப்படி யூகத்தின் அடிப்படையில் ஒரு குற்றச்சாட்டை, பொறுப்புமிக்க அதிகாரி ஏன் பிரச்சாரகர் போல் பரப்ப வேண்டும்? சிறீலங்கா அரசின் குரலை அப்படியே ஏன் எதிரொலிக்க வேண்டும்? தமிழக அரசையும் சேர்த்து, ஏன் குற்றக் கூண்டில் நிறுத்த வேண்டும்? ஆக, இதற்குப் பின்னால், திட்டமிட்ட உள்நோக்கம் ஒன்று இருக்கிறது என்ற சந்தேகம் எழத் தானே செய்கிறது?

இந்த நிலையில், அடுத்த நாளே - ஏப். முதல் தேதியன்று, விடுதலைப்புலிகளின் இராணுவ செய்தி தொடர்பாளர் இளந்திரையன், இது திட்டமிட்ட விசமப் பிரச்சாரம் என்று மறுத்து விடுகிறார்.

இதற்குப் பிறகு - இரண்டு வாரங்கள் ஓடுகின்றன. மீண்டும் ஏப்.17 ஆம் தேதி சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம், கடலில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கும், இலங்கை அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மீண்டும் அறிக்கை விட்டது. அடுத்த நாள் - ஏப். 18 ஆம் தேதி இலங்கை கடற்படை அதிகாரி, கமாண்டர் டி.கே.பி. தசநாய்க்கே என்பவர் கொழும்பில் பத்திரிகையாளர்களைக் கூட்டி, தமிழக மீனவர்களை சுட்டது விடுதலைப்புலிகள்தான் என்று கூறினார். அடுத்த இரண்டு நாட்களிலேயே தமிழ் நாட்டில், உளவுத் துறை தீவிரமாக செயல்படத் துவங்குகிறது. ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு, மீனவர்கள் தான் என்று உறுதி செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட, ஈழத் தமிழ் மீனவர்களை மீண்டும் தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு சிறையிலிருந்து வெளியே எடுத்து விசாரணை நடத்துகிறது. ஏப்.20 ஆம் தேதி காவல்துறை அவர்களை விசாரணைக்கு எடுக்கிறது. அடுத்த இரு நாட்களில் ஏப்.23 இல் உளவுப் பிரிவு, விசாரணைக்கு எடுக்கிறது. அடுத்த நான்கு நாட்களில் ஏப்.27-ல் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி தமிழக மீனவர்களை சுட்டது விடுதலைப்புலிகள் தான் என்று அறிக்கை விடுகிறார். தமிழக முதலமைச்சரும் இதே அறிக்கையை சட்டசபை யில் உறுதி செய்கிறார். மீண்டும் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இதை மறுத்துள்ளனர்.

உளவு நிறுவனமும், சிங்கள அரசும் இணைந்து தமிழ்நாட்டு மக்களிடமிருந்து போராளிகளை தனிமைப்படுத்த தயாரித்த திட்டம் - தமிழக காவல்துறை வழியாக, அமுலாக்கப்பட்டு, அதையே தமிழக முதல்வரின் அறிக்கையாகவும், சட்டசபையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற சந்தேகம் உறுதியாகி விட்டது.

காணாமல் போன 12 மீனவர்களில் 11 மீனவர்கள் கரை திரும்பிவிட்டனர். பத்திரிகையாளர்களை சந்திக்க விடாமல் உளவுத் துறை அவர்களை விசாரணைக்கு அழைத்துப் போய் தங்களைக் கடத்தியது விடுதலைப்புலிகள் என்று கட்டுப்பாடாக கூற வைத்தது. ஆனால், கரை சேர்ந்த அனிஸ்தன் என்ற மீனவச் சிறுவன், “நாங்கள் சிறீலங்காப் படையால் கடத்தப்பட்டு, சிறீலங்காப் படையால் தான் விடுவிக்கப்பட்டோம்” என்று உண்மையை உடைத்துக் கூறி விட்டார்.

அனிஸ்தன் அளித்த பேட்டி விவரம்: (‘தமிழ் ஓசை’ நாளேட்டிலிருந்து)

“நாங்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எங்களைப் பிடித்துச் சென்றவர்கள் முகமூடி அணிந்த ஆட்கள். இலங்கைக்கு கொண்டு சென்ற பின் அடுத்த நாளே எங்களை விடுதலை செய்து விடுவதாகக் கூறினார்கள். ஆனால் அவர்கள் 13 நாட்களாக அடைத்து வைத்தனர். நாங்களே சமைத்து சாப்பிட்டோம்.

திடீரென கடந்த வெள்ளிக்கிழமை எங்களைச் சிலர் அழைத்து வந்து, “இலங்கைக் கடற்படையின்” படகில் ஏற்றினார்கள். அந்தப் படகில் முதலில் எங்களைக் கடத்திச் சென்ற முகமூடி ஆட்களும் இருந்தனர். இராமேசுவரம் நோக்கி வரும்போது வழியில் சிங்களக் கப்பல் படையினர் எங்களை நோக்கித் துப்பாக்கியால் சுட முயன்றனர். அப்போது எங்களுடன் படகில் இருந்தவர்கள் வயர்லெஸ் மூலம் அப்படகைத் தொடர்பு கொண்டு நாங்களும் சிங்களப் படையினர்தான். மீனவர்களை விடுவிக்கச் செல்கிறோம் என்று கூறினார்கள். அதன் பிறகு அந்தக் கப்பல் எங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை” என்று சிறுவன் அனிஸ்தன் கூறினான்.

நடந்த உண்மையை அனிஸ்தன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கிளெமெண்ட்ஸ் (சென்னையில் ஊடகத்தாருக்கு புலிகளே கடத்தியவர்கள் என பேட்டியளித்தவர்) உள்ளிட்ட மீனவர்கள் அனிஸ்தனின் முதுகைக் கிள்ளிப் பேசவிடாமல் தடுத்து விட்டனர்.

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ 17.5.2007

பின் இணைப்பு : 4

இலங்கைக்கு உளவு பார்த்த ‘ரா’ அதிகாரி

1983 ஆம் ஆண்டில்தான் - பல ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்கள் உருவெடுத்தன. அவர்கள் இந்தியாவின் உதவி கோரி வந்த போது, அவர்களுக்கு அடைக்கலம் தந்து, பல்வேறு இடங்களில் இந்திய உளவு நிறுவனம் அவர்களுக்கு ராணுவப் பயிற்சிகளை ஒழுங்கு செய்த முக்கிய காலகட்டம். அந்தச் சூழலில் - இந்த தமிழ்ப் போராளிக் குழுக்கள் எல்லாவற்றுடனும் நேரடி தொடர்பு கொண்டு செயல்படுவதற்காக, நியமிக்கப்பட்டார் ஒரு ‘ரா’ அதிகாரி. அவரது பெயர் கே.வி. உன்னிகிருஷ்ணன். ஈழத் தமிழ்க் குழுக்களின் தலை வர்கள் - முன்னணியினர் எல்லோரிடமும் இவருக்கு நேரடியான தொடர்பு உண்டு. இவர்தான் ஒருங்கிணைப்பு அதிகாரி. ‘ரா’ - இந்திய வெளியுறவுத் துறை எடுத்த முடிவுகள்; தமிழ்க் குழுக்களுடன் நடத்திய ரகசிய பேரங்கள். அவர்களுக்கு இந்தியா தந்த ராணுவப் பயிற்சிகள் பற்றிய முழு உண்மைகளும் இவருக்குத் தெரியும். சென்னையில் அனைத்துக் குழுக்களுடனும் நேரடியாகத் தொடர்பு கொண்டு செயல்பட்ட மிக முக்கிய பொறுப்பை ஏற்றிருந்த இந்த அதிகாரியின் பின்னணி என்ன? இதுதான் அதிர்ச்சிக்குரியதாகும்.

1981 இல் இவர் கொழும்பில் ‘ரா’வுக்காக வேலை செய்த போது -அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவருடன் நட்பு கொண்டார். இருவரும் நெருக்கமாகி, பல ‘ஒழுக்கக் கேடான’ செயல்களில் ஈடுபட்டனர். பல பெண்களுடன், பாலியல் உறவுகளை வைத்திருந்தனர். அப்போது - அமெரிக்க தூதர் வழியாக - இந்திய உளவுத் துறையின் செய்திகளை அமெரிக்க உளவு நிறுவனமான ‘சி.அய்.ஏ.’க்கு அனுப்பி வந்தார். 1983 களில் தமிழ்ப் போராளிக் குழுக்களுடன் - நேரடி தொடர்பு கொண்டிருந்த காலத்தில், அவர், ‘ரா’வின் அதிகாரி மட்டுமல்ல; ‘சி.அய்.ஏ.’வுக்கும் உளவாளி! தமிழ்ப் போராளிக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு பொறுப்பு ஏற்ற பிறகு, அவர் - சிறீலங்கா உளவுத் துறைக்கும் நெருக்கமானார். கொழும்பில் -அவருக்கு பல பெண்களுடன் இருந்த உறவை சிறீலங்கா உளவுத் துறைப் பயன்படுத்திக் கொண்டு, உன்னிகிருஷ்ணனை தனது வலையில் சிக்க வைத்தது. ஒரே கட்டத்தில் ‘ரா’ - ‘சி.அய்.ஏ.’ ¬சிறீலங்கா உளவுத் துறைகளுடன், ரகசியமாக செயல்பட்டுக்

கொண்டும், அதே காலத்தில் ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுடனும் நேரடி தொடர்பு கொண்டும் செயல்பட்டுள்ளார். 1985 இல் சென்னையில். இவர் தமிழ் ஈழப் போராளிக் குழுக்களுடன் தொடர்பு கொண்டிருந்தபோது - பம்பாயில் - அமெரிக்காவின் ‘பான் விமான சேவை’யில் வேலை செய்த ஒரு அமெரிக்கப் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்தத் தொடர்பை ஏற்படுத்தித் தந்தவர் உன்னி கிருஷ்ணனின் நண்பரான கொழும்பில் இருந்த அமெரிக்க தூதரக அதிகாரி. சென்னையிலிருந்து - பம்பாய்க்குப் பறந்து கொண்டு, விமானப் பணிப் பெண்ணுடன், அடிக்கடி சிங்கப்பூருக்குப் போய், உல்லாசமாக இருந்தார், உன்னி கிருஷ்ணன். இவர்கள் இருவரும் ‘இணைந்த நிலையில்’ இருந்த படங்கள் எடுக்கப்பட்டன. ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள்; இந்தியாவின் வெளியுறவுத் துறை முடிவுகள்; ‘ரா’வின் திட்டங்கள் பற்றிய அனைத்துத் தகவல்களும் ¬உன்னிகிருஷ்ணன் வழியாக - சிறீலங்கா அரசுக்குக் கிடைத்து வந்தன.

இது பற்றி -கொழும்பில் இந்திய தூதராகவிருந்த ஜே.என்.தீட்சித் தனது நூலில் குறிப்பிடும் போது

“1986 ஆம் ஆண்டுகளில் - முதல் 6 மாதங்களில் - நான் லலித் அதுலத் முதலியுடன் (இவர் இலங்கையில் செல்வாக்குள்ள அமைச்சர்) நடத்திய உரையாடல்களில் ¬அவர் தெரிவித்த கருத்துக்கள் - என்னை வியப்பில் ஆழ்த்தின. இந்தியாவின் வெளி நாட்டுத் துறை அதிகாரிகள்; உளவு நிறுவன அதிகாரிகள்; இவர்களின் செயல்பாடுகள் பற்றி, ஏராளமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டது. என்னை வியப்பில் ஆழ்த்திவிட்டது. உடனே நான், இதுபற்றி டெல்லிக்கு தகவல் கொடுத்தேன்”

-என்று எழுதியுள்ளார். (நூல்: Assignment Colombo) இந்தத் தகவல்களை சிறிலங்காவுக்கு கொடுத்தது யார் என்பதையும் ¬ஜே.என்.தீட்சித் குறிப்பிடுகிறார்.

“சிறீலங்காவுக்கு, இந்தத் தகவல்களைத் தந்தது, எங்களது உளவு அமைப்பில் பணிபுரிந்த அதிகாரி உன்னி கிருஷ்ணன்தான் அவர். அமெரிக்க விமானப்பணிப்பெண் ஒருவர் மூலமாக, அமெரிக்கர் வலையில் வீழ்ந்துவிட்டார். அவரது ‘எதிர்மறையான’ நடவடிக்கைகள் 1986 மத்தியில் தெரிய வந்தது. தொடர்ந்து - அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. உன்னிகிருஷ்ணன் “அமைதியாக்கப்பட்ட” பிறகு, சிறீலங்காவுக்கு இந்தியா பற்றி கிடைத்து வந்த தகவல்கள் கடுமையாகக் குறைந்துவிட்டன. சிறீலங்காவுக்கு உன்னி கிருஷ்ணன்தான் ரகசியத் தகவல்களைத் தந்தார் என்பது இதன் மூலம் உறுதியானது”

-என்று எழுதியுள்ளார், ஜே.என்.தீட்சித்.

“The Sri Lanka source of information was a senior operative of our own intelligence agency, Unnikrishnan, who had been subverted most probably by the Americans through a foreign lady working for Pan-American Airlines. His negative activities were discovered sometime towards the middle of 1986, which was followed by appropriate procedural action against him. The fact that the Sri Lankan Government’s advance knowledge about Indian policies and intentions clearly diminished after Unnikrishnan was neutralized proved that he was a major source of information to the Sri Lankans. (Assignment Colombo-(1998) pg. 61)”

உண்மைகளை மறைக்க முடியாமல் - மென்மையான வடிவில் ஜே.என்.தீட்சித் தந்துள்ளார் என்றாலும், கே.வி.உன்னி கிருஷ்ணனின் நடவடிக்கைகளை அவரால் மறைக்க முடியவில்லை.

1985-86-இல் மூன்று உளவு நிறுவனங்களுடனும் கே.வி.உன்னி கிருஷ்ணன் தொடர்பு கொண்டிருந்த காலகட்டத்தில்தான் - தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் ஆகியோர் - ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டனர். வழக்கம் போல் விடுதலைப்புலிகள் மீதே பழிபோட்டு, பிரச்சாரங்கள் நடந்தன. ஆனால், அந்தக் காலகட்டத்தில், உளவுத் துறைக்காக இந்தக் கொலைக்கான கொலைக்காரர்களைத் தேர்வு செய்தது கே.வி. உன்னிகிருஷ்ணனாகத்தான் இருக்க முடியும் என்று எழுதுகிறார், ஆய்வாளரும், விஞ்ஞானியுமான சச்சி சிறீகாந்தா தனது 'Pirabakaran Phenomenon’ என்ற நூலில்.

“It is an easy guess that this Unikrishnan could have been a probable conspirator for the 1985 assasinations of Dharmalingam and Alala Sundaram.” (pg. 193)

தங்களை நம்பி வந்த தமிழ்ப் போராளிக் குழுக்களை, இந்திய உளவுத் துறை பகடைக்காய்களாக்கி, தனது விளையாட்டு மைதானங்களில் இப்படித்தான் பந்துகளாக்கியது; இந்த வலையில் சிக்காத ஒரே தலைவர் பிரபாகரன் மட்டும்தான்! இந்திய தேசிய அதிகாரவர்க்கத்தின் பார்ப்பன ஆணவ அணுகுமுறைக்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

சிங்கப்பூரில் - அமெரிக்க விமானப் பணிப் பெண்ணுடன் கேவி.உன்னிகிருஷ்ணன் நெருக்கமாக இருந்த படங்கள் கைப்பற்றப் பட்டு, அவரது கீழறுப்பு வேலைகள் கண்டறியப்பட்டு, 1987-இல் அவர் கைது செய்யப்பட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.