Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வங்கதேசம்: கண்ணாடி விரியன் பாம்புகளை அடித்துக் கொல்ல படையெடுக்கும் மக்கள் – ஏன்? என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மணி நேரங்களுக்கு முன்னர்

வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக கண்ணாடி விரியன் பாம்புகள் குறித்த அச்சம் அதிகளவில் பரவி வருகிறது.

அந்நாட்டின் பல்வேறு இடங்களில், கண்ணாடி விரியன் எனத் தவறாகக் கருதி, வேறு வகையான பாம்புகள் பல அடித்துக் கொல்லப்படுகின்றன. இதுகுறித்துப் பல்வேறு வதந்திகளும் பரவி வருகின்றன.

வங்கதேசத்தில் காணப்படும் பாம்புகளில் 85 சதவீதத்திற்கும் அதிகமானவை நஞ்சற்றவை என்று வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால், சமீப நாட்களில் மக்கள் நஞ்சுள்ள கண்ணாடி விரியனுக்கு பயந்து கொல்லும் பாம்புகளில் பெரும்பாலானவை நஞ்சற்றவை மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பெரும் பங்காற்றக்கூடியவை.

பல்லுயிர்ப் பெருக்கத்தில் பாம்புகள் முக்கியப் பங்கு வகிப்பதாக உயிரியலாளர்கள் கூறுகின்றனர். பாம்புகளும், மற்ற உயிரினங்களைப் போலவே, சூழலியல் சமநிலையைப் பராமரிக்க மிகவும் முக்கியம்.

இப்போது மக்கள் சூழலியல் குறித்த சிந்தனையின்றி பாம்புகளைக் கொல்லும் விதம் சுற்றுச்சூழலில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

திடீரென பெருகிய கண்ணாடி விரியன் பாம்புகள்

கடந்த சில வாரங்களாக வங்கதேச ஊடகங்களில் அதிகம் பேசப்பட்ட பிரச்னைகளில் கண்ணாடி விரியன் பாம்பும் ஒன்று. இந்த வகைப் பாம்பு வங்கதேசத்தில் சந்திரபோடா அல்லது உலுபோடா என்று அழைக்கப்படுகிறது.

வங்கதேசத்தில் இந்தப் பாம்பு ஒருகாலத்தில் முற்றிலும் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது. ஆனால், சுமார் 10-12 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் அதன் கடியால் மீண்டும் இறக்கத் தொடங்கினர். கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இந்தப் பாம்பு நாட்டில் அதிகம் காணப்படுவதாக ஊர்வன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2021ஆம் ஆண்டில், நாட்டின் வடமேற்கில் சில பகுதிகளில், குறிப்பாக பத்மா ஆற்றின் சில மாவட்டங்களில் கண்ணாடி விரியன் கடித்ததால் இருவர் உயிரிழந்தனர், பலர் நோய்வாய்ப்பட்டனர். அப்போது இந்தச் சம்பவம் பெரும் செய்தியாக வெளியானது.

கடந்த 3 மாதங்களில் மாணிக்கஞ்ச் பகுதியில் பாம்பு கடித்து 5 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். தற்போது நெல் அறுவடைக் காலம். பயிர்கள் நிறைந்த வயல்களில் பாம்புகள் அதிகம் வாழ்வது இயற்கையில் அதிகம் அவதானிக்கப்பட்ட ஒன்று.

“கண்ணாடி விரியன் பாம்புகள் பத்மா படுகையில் உள்ள மாணிக்கஞ்ச் கடற்கரைப் பகுதியில் பரவியுள்ளன,” என்று சிட்டகாங் பல்கலைக் கழகத்தில் விலங்கியல் துறை பேராசிரியர் ஃபரித் அஹ்சன் பிபிசி பங்களாவிடம் தெரிவித்தார்.

 
வங்கதேசம்: கண்ணாடி விரியன் பாம்புகளை அடித்துக் கொல்ல படையெடுக்கும் மக்கள் – ஏன்? என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மறுபுறம், இந்த வாரம் ராஜ்ஷாஹியில் பாம்புக்கடியால் ராஜ்ஷாஹி பல்கலைக்கழக மாணவர் உட்பட இருவர் இறந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நெல் அறுவடை சீசனில் கண்ணாடி விரியனால் தாக்கப்படுவதை எண்ணி விவசாயிகள் மத்தியில் அதிகபட்ச பீதி அடைந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ராஜ்ஷாஹி நகரத்திற்கு உட்பட்ட சார்காட் நகராட்சியில் உள்ள சாரதா பகுதியில் பத்மா நதிக்கரையில் அமைந்துள்ள போலீஸ் அகாடமி வளாகத்தில் 8 கண்ணாடி விரியன் குட்டிகள் மீட்கப்பட்டன. ஆனால், காவல்துறையினரே அவற்றை அடித்துக் கொன்றதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.

ஃபரித்பூரை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் கண்ணாடி விரியன்களைக் கொல்பவர்களுக்கு ஒரு பாம்புக்கு 50,000 டாக்கா (35,500 ரூபாய்) பரிசு வழங்கப்படும் என்று பகிரங்கமாக அறிவித்தார். இருப்பினும், அவர் தனது அறிவிப்பை ஞாயிறு அன்று திரும்பப் பெற்றார்.

கண்ணாடி விரியன்கள் மீது கொண்ட அச்சத்தால், கட்டுவரியன், மலைப்பாம்பு, பேண்டட் கிரைட் என்றழைக்கப்படும் கட்டுவரியன் வகையைச் சேர்ந்த மற்றொரு பாம்பு வகை, சாரைப் பாம்பு, நீர்க்கோலி போன்ற வேறு பல பாம்புகளும் கொல்லப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவற்றில் கட்டு வரியன் போன்ற பாம்புகள் கண்ணாடி வரியன்களை விழுங்கி இயற்கையின் சமநிலையைப் பேணுவதாகவும் அப்படிப்பட்ட பயனுள்ள பாம்புகள் மக்களின் அச்சத்திற்குப் பலியாவதாகவும் சொல்லப்படுகிறது.

 
வங்கதேசம்: கண்ணாடி விரியன் பாம்புகளை அடித்துக் கொல்ல படையெடுக்கும் மக்கள் – ஏன்? என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கண்ணாடி விரியன் பாம்புகள் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் பெருமளவிலான எதிர்மறை பதிவுகளால், இயற்கையின் நண்பர்களாகக் கருதப்படும் பல்வேறு வகையான நஞ்சற்ற பாம்புகளை, அவை குறித்து எதுவுமறியாத மக்கள் பீதியடைந்து கொன்று வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். வங்கதேசத்தின் இப்போதைய சூழலில் மக்கள் எந்தப் பாம்பைக் கண்டாலும் கொன்றுவிடுகிறார்கள்.

சைன்தலைமை வனப் பாதுகாவலர் முகமது அமீர் ஹுசைன் சௌத்ரி பிபிசி பங்களாவிடம் கூறுகையில், “கண்ணாடி விரியன் ஓர் ஆக்ரோஷமான பாம்பு அல்ல. அது காயமடைந்தால் மட்டுமே திருப்பித் தாக்கும். மக்கள் பாம்பைக் கண்டவுடன் கொல்ல வேண்டிய அவசியமில்லை. அதேநேரம், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்று கூறினார்.

வங்கதேச மருத்துவ சேவையின் தரவுகள்படி, நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 7,500 பேர் பாம்புக் கடியால் இறக்கின்றனர். இவர்களில் தோராயமாக 120 பேர் கண்ணாடி விரியன் கடியால் இறக்கின்றனர்.

பயிர்கள் விளையும் பகுதிகளில் பாம்புகள் அதிகம் இருப்பதாகவும் அவற்றைக் கொல்வதைத் தடுக்கவும் விவசாயிகளுக்கு அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக தலைமை வனப்பாதுகாவலர் ஹுசைன் தெரிவித்தார்.

மேலும், மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து சமூக ஊடகங்களில் எதிர்மறையான விளம்பரம் குறைவதாகவும் இந்த மோசமான நிலைமை இன்னும் சில நாட்களில் கணிசமாகக் குறையும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார்.

 

பாம்புகள் சுற்றுச்சூழலுக்கு எப்படி நன்மை பயக்கின்றன?

வங்கதேசம்: கண்ணாடி விரியன் பாம்புகளை அடித்துக் கொல்ல படையெடுக்கும் மக்கள் – ஏன்? என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாம்புகள் சுற்றுச்சூழலின் முக்கியமானதோர் அங்கம் எனவும் பல்லுயிர்ப் பாதுகாப்பில் பாம்புகளின் பங்கு மிக முக்கியமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

வங்கதேசத்தில் முகமது அபு சயீத், முகமது ஃபரித் அஹ்சன் ஆகியோர் இணைந்து எழுதிய ‘பாம்புகள், பாம்புக்கடி தடுப்பு மற்றும் சிகிச்சை’ என்ற நூலில், பாம்புகள் மிகுந்த சோம்பேறிகள் எனவும் அவை அப்பாவி உயிரினங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் பாம்புகள் மனிதர்களைக் கண்டு அஞ்சுகின்றன. மனிதர்களைக் கண்டவுடனேயே உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓட வேண்டும் என்பதே அவற்றின் முதல் எண்ணமாக இருக்கும். ஆனால், அவை மீது தாக்குதல் நடந்தால், தற்காப்புக்காக மனிதர்களைக் கடிக்கின்றன.

இந்த நூலை எழுதியவரும், சிட்டகாங் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை பேராசிரியருமான முகமது ஃபரித் அஹ்சன் பிபிசி பங்களாவிடம் பேசியபோது, பாம்புகள் சுற்றுச்சூழலில் வேட்டையாடி, இரை என இரண்டாகவும் செயல்படுகின்றன என்றார்.

அவை மற்ற உயிரினங்களை உண்பதன் மூலமும், மற்ற உயிரினங்களுக்கு உணவாக இருப்பதன் மூலமும் சூழலியலின் சமநிலையைப் பேணுவதில் பெரும் பங்காற்றுகின்றன.”

இந்த சுழற்சியில், எலி போன்ற உயிரினங்கள் எண்ணிக்கையில் பெருகிவிடாமல் தடுப்பதில் பாம்புகளின் பங்கு முக்கியமானது. அவற்றை உண்பதன் மூலம் பாம்புகள் சூழலியல் சமநிலையைப் பேணுவதாக உயிரியலாளர்கள் கூறுகின்றனர்.

இந்தப் பகுதியில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கண்ணாடி விரியன்கள் இருந்தன. சூழலியலில் ஏற்பட்ட மாற்றங்களால், அவற்றின் எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. அதாவது, இந்த வகைப் பாம்புகளை அதிகம் வேட்டையாடும் உடும்பு, கழுகு, பருந்து, போன்ற உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுவே கண்ணாடி விரியன்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மிக முக்கியக் காராணம்.”

கண்ணாடி விரியன்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாக, வங்கதேசத்தின் சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைச் சுட்டிக்காட்டுகிறார் அஹ்சன். “இந்தப் பாம்புகளை உண்ணும் உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்ததே இவற்றின் எண்ணிக்கைப் பெருக்கத்திற்குக் காரணம்,” என்கிறார் அவர்.

 

பாம்புகளைக் கொல்வது சுற்றுச்சூழலுக்கு ஏன் ஆபத்தானது?

வங்கதேசம்: கண்ணாடி விரியன் பாம்புகளை அடித்துக் கொல்ல படையெடுக்கும் மக்கள் – ஏன்? என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இயற்கையின் ஓர் அங்கமான பாம்புகளைக் கொல்வது ஒட்டுமொத்த சூழலியல் அமைப்பிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். விளைநிலங்களில் பாம்புகளைக் கொன்றால் எலிகளின் தொல்லை அதிகரிக்கும்.

எலிகள் பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் 10 முதல் 20 சதவீத பயிர்களை அழித்துவிடும். பாம்புகளைச் சிறிதும் யோசிக்காமல் கொன்றால் எலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால், பயிர்களின் உற்பத்தி குறையும்.

தலைமை வனப் பாதுகாவலர் ஹுசைன் கூறும்போது, “எலி, தவளை போன்ற உயிரினங்களை பாம்புகள் உண்ணுகின்றன. வயல்களில் பாம்புகள் எலிகளைச் சாப்பிடுகின்றன. எலிகளை உண்பதன் மூலம் பயிர்களைப் பாதுகாத்து, விவசாயிகளுக்கு நன்மை செய்கின்றன. கழுகு, பருந்து, காட்டுப்பூனைகள் போன்ற உயிரினங்கள் பாம்புகளை வேட்டையாடுகின்றன. மறுபுறம், நாகம், கட்டுவரியன் போன்ற பாம்புகள் கண்ணாடி விரியன் உள்ளிட்ட பிற வகைப் பாம்புகளைச் சாப்பிடுகின்றன.”

வங்கதேசம்: கண்ணாடி விரியன் பாம்புகளை அடித்துக் கொல்ல படையெடுக்கும் மக்கள் – ஏன்? என்ன நடந்தது?

பட மூலாதாரம்,PRITOM SUR ROY

இந்தச் சுழற்சியில் மனிதர்கள் இடையூறு செய்தால், எதிர்காலத்தில் எலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து, பயிர்களை நாசம் செய்துவிடும். இதனால், உற்பத்தி குறைந்து, உணவு சுழற்சியில் பாதகமான பாதிப்புகள் ஏற்படும்,” என்று விளக்கினார். பாம்புகள் இப்படியே தொடர்ந்து கொல்லப்படுமானால், எதிர்காலத்தில் இத்தகைய மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் ஹுசைன் எச்சரிக்கிறார்.

டாக்கா பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை பேராசிரியரான எம்.டி.அமினுல் இஸ்லாம் புய்யான், “வங்கதேசத்தில் பாம்புகள் மீதான எதிர்மறையான அணுகுமுறையால், அவை எந்தச் சிந்தனையும் இல்லாமல் கொல்லப்படுகின்றன. ஆனால், சுற்றுச்சூழலுக்கு அவை செய்யும் நன்மையை வேறு எந்த உயிரினத்தாலும் செய்ய முடியாது,” என்கிறார்.

பிபிசி பங்களாவிடம் அவர் பேசியபோது, “சுற்றுச்சூழலில் பாம்புகளின் பங்கை வேறு எந்த உயிரினத்தாலும் ஈடுசெய்ய முடியாது. ஒவ்வோர் உயிரினத்தின் வாழ்க்கை சுழற்சியில் ஏற்படும் இடையூறும் மற்றொன்றைப் பாதிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், பாம்புகள் இல்லாமல் போனால், முழு உணவுச் சங்கிலியும் பாதிக்கப்படும்,” என்றார்.

வங்கதேச காட்டுயிர் சட்டம் 2012இன் படி, கண்ணாடி விரியன் பாம்பு பாதுகாக்கப்பட்ட உயிரினமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, கண்ணாடி விரியன் பாம்பைக் கொல்வது, பிடிப்பது, ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்வது தண்டனைக்குரிய குற்றம்.

இதனிடையே, சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமும் பாம்புகளைக் கொல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cz47377z8x2o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.