Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   28 JUL, 2024 | 07:43 AM

image

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன்குன்றுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 12 சிறுவர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை ரொக்கட் தாக்கியது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

golan22.jpg

ட்ரூஸ் நகரத்தின் மஜ்டல் சாம்ஸினை இலக்குவைத்து லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பு மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

எனினும் ஹெஸ்புல்லா அமைப்பு இதனை மறுத்துள்ளது.

ஹெஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக பதில்தாக்குதலை மேற்கொள்ளப்போவதாக சூளுரைத்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அந்த அமைப்பு பெரும் விலையை செலுத்தும் என தெரிவித்துள்ளார்.

golan1.jpg

இந்த தாக்குதல் காரணமாக இஸ்ரேலிய படையினருக்கும் ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் இடையில் முழுமையான யுத்தம் வெடிக்கும். ஆபத்து எழுந்துள்ளது.

ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் இரு தரப்பும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இஸ்ரேலிய எல்லையின் மீது மேற்கொல்லப்பட்ட தாக்குதலில் அதிகளவானவர்கள் கொல்லப்பட்ட சம்பவமாக கோலான் குன்று தாக்குதல் காணப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/189565

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோலான் குன்று தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பேர் பலி - ஹெஸ்புலா இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் பதிலடி

இஸ்ரேல்: கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பேர் பலி

பட மூலாதாரம்,EPA

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பால் ஆடம்ஸ், பார்பரா பிளெட் உஷெர் & ஐடோ வோக்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலான் குன்றுகள் எனப்படும் பகுதியில் நடைபெற்ற ராக்கெட் தாக்குதலில் 12 குழந்தைகள் மற்றும் இளம்வயதினர் கொல்லப்பட்டதாகவும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

லெபனான் நாட்டைத் தளமாகக் கொண்டு இயங்கும் அதிகாரமிக்க ஹெஸ்புல்லா அமைப்பினர் ஏவிய ராக்கெட் ட்ரூஸ் நகரமான மஜ்தல் ஷாம்ஸ் பகுதியில் விழுந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளது. இதை ஹெஸ்புல்லா அமைப்பு உறுதியாக மறுத்துள்ளது.

இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஹெஸ்புல்லா அமைப்பு அதிக விலை கொடுக்க நேரிடும்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக லெபனானில் ஹெஸ்புல்லாவை குறிவைத்து தாங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் விமானப் படை தெரிவித்துள்ளது.

 

“ஹெஸ்புல்லாவின் எல்லைக்குள் ஏழு இலக்குகளைக் குறிவைத்து” ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

“ஆயுதக் கிடங்குகள் மற்றும் கட்டமைப்புகள்” உள்பட “தீவிரவாத இலக்குகளை” தாக்கியதாக இஸ்ரேல் விமானப் படை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் - காஸா இடையே சண்டை தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் மற்றும் ஹெஸ்புல்லா படைகள் மாறி மாறித் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், இச்சம்பவம் இரு தரப்புக்கும் இடையே விரிவான போரைத் தூண்டுவதற்கான சாத்தியம் கொண்டதாக உள்ளது.

சனிக்கிழமை நடைபெற்ற இந்தத் தாக்குதல், அக்டோபர் 7ஆம் தேதி முதல் போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலின் வட எல்லையில் அதிகமான உயிர்ப்பலி ஏற்பட்டிருக்கும் மோசமான தாக்குதலாக உள்ளது.

நம்ப முடியாத அளவுக்கு ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் பேரழிவுக்கு இட்டுச் செல்லும் வகையிலான பரந்த மோதலுக்கான அபாயம் உள்ள நிலையில், அனைத்துத் தரப்பில் இருந்தும் அதிகபட்ச கட்டுப்பாடு முக்கியமானது” என ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராக்கெட்டா?

ஹெஸ்புல்லா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முகமது ஆஃபிஃப், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்காத நிலையில், இத்தாக்குதல் இஸ்ரேலின் இன்டர்செப்டர் ராக்கெட்டால் (வெகுதொலைவுக்கு ஏவப்படும் பாலிஸ்டிக் ராக்கெட்டுகளை இடைமறித்துத் தடுக்கும் வகையிலான ராக்கெட்) நிகழ்த்தப்பட்டது என அந்த அமைப்பு ஐநாவிடம் தெரிவித்ததாக வரும் செய்திகளை பிபிசி சரிபார்க்க முயன்று வருகிறது.

இத்தாக்குதலில் உயிரிழந்த அனைவரும் 10 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என இஸ்ரேல் அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், சிலர் மிகவும் சிறுவயதினர் என இஸ்ரேல் ஊடகங்கள் கூறுகின்றன.

கால்பந்து மைதானம் ஒன்றில் மக்கள் குழுமியிருப்பதையும், ஆம்புலன்ஸ்களில் ஸ்ட்ரெட்ச்சர்கள் மூலம் காயமடைந்தவர்கள் கொண்டு செல்லப்படுவதையும் சரிபார்க்கப்பட்ட காணொளிகள் மூலம் பார்க்க முடிகிறது.

கோலான் குன்றுகளில் உள்ள நான்கு கிராமங்களுள் ஒன்றான மஜ்தல் ஷாம்ஸ் கிராமத்தில், அரபுமொழி பேசும் ட்ரூஸ் இனத்தைச் சேர்ந்த சுமார் 25,000 பேர் வாழ்கின்றனர்.

இத்தாக்குதலின் பாதிப்புகள் குறித்த செய்திகள் வருவதற்கு முன்னர், ஹெஸ்புல்லா மற்ற நான்கு தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றது.

அதில், இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லைக்கு இடையே அமைந்துள்ள ஹெர்மோன் மலைத்தொடரின் சரிவில் அமைந்துள்ள ராணுவ சுற்றுப் பகுதிக்கு அருகே நடைபெற்ற தாக்குதலும் ஒன்று. அதன் அடித்தளம், கால்பந்து மைதானத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

'முழு அளவிலான போர்'

இஸ்ரேல்: கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பேர் பலி

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,மஜ்தல் ஷாம்ஸில் உள்ள கால்பந்து மைதானத்தில் இத்தாக்குதலால் பாதிப்பு ஏற்பட்டது.

தாக்குதல் நிகழ்ந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்ட இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, “இத்தாக்குதலுக்குத் தாங்கள் பொறுப்பல்ல என ஹெஸ்புல்லா பொய் கூறுவதாக” தெரிவித்தார்.

“ஹெஸ்புல்லா அமைப்பினர் பிரத்யேகமாக வைத்திருக்கும்” ஃபலாக்-1 (Falaq-1) எனும் இரானிய தயாரிப்பு ராக்கெட்டால் இத்தாக்குதல் நடைபெற்றதாக அவர் தெரிவித்தார்.

“எங்களின் உளவுத்துறை தகவல் தெளிவானது. அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு ஹெஸ்புல்லா அமைப்புதான் பொறுப்பு,” எனத் தெரிவித்த அவர், அதற்காக பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வருவதாகத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல், இஸ்ரேல், ஹெஸ்புல்லா மாறி மாறித் தொடுத்த தாக்குதலால் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும், தெற்கு லெபனானில் எல்லைப் போர் ஏற்படும் ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கான நடவடிக்கைகளை இருதரப்பும் தவிர்த்து வருகின்றன.

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னதாகவே நாடு திரும்ப உள்ளார்.

இஸ்ரேலின் ட்ரூஸ் இனத் தலைவரான ஷேக் மொவாஃபக் டரிஃப் வெளியிட்ட காட்டமான அறிக்கையில், “இந்தப் பயங்கரமான படுகொலை, அனைத்து சிவப்புக் கோடுகளையும் தாண்டிவிட்டதாக” தெரிவித்துள்ளார்.

“தங்கள் நாட்டு குடிமக்கள் மற்றும் குடியிருப்பவர்களுக்குத் தொடர்ச்சியாகத் தீங்கு ஏற்படுவதை முறையான ஓர் அரசு அனுமதிக்காது. கடந்த ஒன்பது மாதங்களாக வட பகுதியில் வாழும் சமூகத்தினர் எதிர்கொள்ளும் யதார்த்தமாக இத்தாக்குதல் உள்ளது,” என்றும் அவர் கூறினார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ், “ஒரு முழு அளவிலான போரை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம்,” என சேனல் 12 ஊடகத்திடம் தெரிவித்தார்.

இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் இத்தாக்குதல் “பயங்கரமான மற்றும் அதிர்ச்சிகரமான பேரழிவு சம்பவம்” எனத் தெரிவித்தார். மேலும், “நாட்டு குடிமக்கள் மற்றும் இறையான்மையை இஸ்ரேல் அரசு காக்கும்” என உறுதி தெரிவித்தார்.

நாடு திரும்பும் பெஞ்சமின்

பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

லெபனான் அரசு வழக்கத்திற்கு மாறாக அரிதாக அறிக்கை ஒன்றை இதுகுறித்து வெளியிட்டுள்ளது. அதில், “பொதுமக்களுக்கு எதிரான எந்தவித வன்முறை மற்றும் மோதல்களையும் கண்டிக்கிறோம். இத்தகைய மோதல்களை நிறுத்த வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்."

“பொதுமக்களை குறிவைப்பது சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும், மேலும் மானுட தத்துவத்திற்கே எதிரானது,” எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இத்தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா தூதுவர் டோர் வென்னஸ்லேண்ட், அனைத்து தரப்பும் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

“மத்தியக் கிழக்குப் பகுதி ஆபத்தின் விளிம்பில் உள்ளது; மற்றுமொரு வெளிப்படையான மோதலை உலகமும் இந்தப் பிராந்தியமும் தாங்காது,” என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ட்ரூஸ் சமூகத்தினர் பெரும்பாலானோர் வடக்கு இஸ்ரேல், லெபனான், ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர். இஸ்ரேலில் அவர்களுக்கு முழு குடியுரிமை உள்ளது. இஸ்ரேலின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் ட்ரூஸ் இனத்தினர் 1.5% உள்ளனர்.

சிரியாவிடம் இருந்து 1981இல் கோலான் குன்றுகள் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டதில் இருந்து அவர்களுக்கு அந்நாட்டு குடியுரிமை வழங்கப்படுகிறது, ஆனால் அவர்கள் எல்லோரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இஸ்ரேலில் உள்ள ட்ரூஸ் இனத்தினர் அங்கு படிக்கவும் வேலை செய்யவும் முடியும். ஆனால் குடியுரிமை உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். ட்ரூஸ் இனத்தைச் சேர்ந்த ஆண்கள் ராணுவத்தில் கட்டாயம் பணியாற்ற வேண்டும். இஸ்ரேல் ராணுவத்தில் யூதர்கள் அல்லாத மிகப்பெரிய குழுவாக ட்ரூஸ் இனத்தினர் உள்ளனர்.

கோலான் குன்றுகளை இஸ்ரேல் தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டதை பெரும்பான்மை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோலான்குன்று தாக்குதலிற்கு பதிலடி கொடுப்பதற்கு இஸ்ரேலிய அமைச்சரவை அனுமதி - முழுமையான யுத்தம் குறித்து அச்சநிலை

Published By: RAJEEBAN   29 JUL, 2024 | 12:33 PM

image

ஹெஸ்புல்லா அமைப்பு கோலான்குன்றுகள் மீது மேற்கொண்ட தாக்குதலிற்கு பதிலடி கொடுப்பதற்கு இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அந்த நாட்டின் அமைச்சரவை அனுமதிவழங்கியுள்ளது.

கோலான்குன்று தாக்குதலிற்கு எவ்வாறான விதத்தில் எந்த தருணத்தில் பதில்தாக்குதலை மேற்கொள்வது என்பதை தீர்மானிப்பதற்கான அனுமதியை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு அமைச்சரவை வழங்கியுள்ளது.

கோலான்குன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட ரொக்கட் தாக்குதலில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையிலேயே இஸ்ரேலிய அமைச்சரவை  பதில் தாக்குதலிற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

ஹெஸ்புல்லா அமைப்பு இந்த தாக்குதலை தான் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.

லெபானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் இலக்குகள் தாக்கப்படும் என எச்சரித்துள்ள இஸ்ரேல் விமானதாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

இஸ்ரேலிற்கும் ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் இடையில் முழுமையான யுத்தம் மூள்வது குறித்து சர்வதேச அளவில் அச்சநிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து தரப்பினரும் அதிகளவு பொறுமையை கடைப்பிடிக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/189680

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Israel: கால்பந்து விளையாடிய குழந்தைகள் மீது பாய்ந்த ராக்கெட்; பதிலுக்கு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 28/7/2024 at 19:02, ஏராளன் said:

கோலான் குன்று தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பேர் பலி - ஹெஸ்புலா இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் பதிலடி

இஸ்ரேல் ஒரு வருடமாக பலஸ்தீன மண்ணை சாம்பலாக்கிக் கொண்டிருக்கின்றது. இப்படி சம்பவங்கள் இருக்கும் போது அதென்ன புதிசாய் பதிலடி?
 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

இஸ்ரேல் ஒரு வருடமாக பலஸ்தீன மண்ணை சாம்பலாக்கிக் கொண்டிருக்கின்றது. இப்படி சம்பவங்கள் இருக்கும் போது அதென்ன புதிசாய் பதிலடி?
 

ஹெஸ்புலா இலக்குகளை குறிவைக்க காத்திருந்த இஸ்ரேலுக்கு இனி....?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, விசுகு said:

ஹெஸ்புலா இலக்குகளை குறிவைக்க காத்திருந்த இஸ்ரேலுக்கு இனி....?

ஒரு எதிரி இருந்தால் சமாளிக்கலாம். நாலா பக்கமும் எதிரிகள் இருந்தால்.....என்ன செய்யலாம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லெபனான் தாக்குதலில் ஹெஸ்பொலா தளபதி கொலை - இஸ்ரேல் அறிவிப்பு

பெய்ரூட்டில் வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிதிலமடைந்துள்ள குடியிருப்பு பகுதிகள் கட்டுரை தகவல்
  • எழுதியவர், குய்ன்டின் சோம்மர்வில், நவீஷ் கொனாவர்ட், மார்க் லோவன்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 36 நிமிடங்களுக்கு முன்னர்

லெபனான் தலைநகரான பெய்ரூட்டின் புறநகர் பகுதியில் நடத்தப்பட்ட வான்வவழி தாக்குதலில் ஹெஸ்பொலா தளபதி கொல்லப்பட்டார் என்று அறிவித்துள்ளது இஸ்ரேல்.

இரானில் ஹமாஸ் மூத்த தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக வெளியான தகவலுக்கு முன்னதாக இந்த அறிவிப்பை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

தாஹியேஹ் என்று அழைக்கப்படும் அந்த பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் காயம் அடைந்துள்ளனர். லெபனான் நாட்டின் ஆயுதமேந்திய போராளிகள் அதிகமாக வாழும் பகுதியாக இது அறியப்படுகிறது.

ஃபாவுத் ஷுக்கர் என்ற ஹெஸ்பொலா தளபதிதான் 'உளவு அடிப்படையிலான அழிப்புக்கு (intelligence-based elimination)' இலக்கானதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

சனிக்கிழமை அன்று இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கோலன் குன்றுகள் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு ஃபாவுத் தான் பொறுப்பு என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 நபர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவித்திருந்தது ஹெஸ்பொலா.

இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல் இது என்று லெபனான் நாட்டு பிரதமர் நஜீப் மிகாட்டி கண்டித்துள்ளார்.

 

தொடர் தாக்குதல் மூலம் பொதுமக்களை கொல்லுதல் என்பது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்றும் இது ஒரு குற்றச்செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு பிறகு, சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த இஸ்ரேலின் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவாவ் காலேன்ட், ஹெஸ்பொலா அதன் எல்லையை மீறிவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

உண்மையாகவே ஃபாவுத் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டாரா என்பது தெளிவாக தெரியவில்லை. அவர் அந்த கட்டடத்தில் இல்லை என்று பெய்ரூட் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஹெஸ்பொலா இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸிடம் பேசிய இஸ்ரேல் நாட்டு அதிகாரி ஒருவர், இஸ்ரேல் தனது பெய்ரூட் தாக்குதல் குறித்த அறிவிப்பை அமெரிக்காவிடம் முன்கூட்டியே தெரிவித்தது என்று உறுதிபடுத்தியுள்ளார்.

இஸ்ரேல் - லெபனான் எல்லைப்பகுதியில் அக்டோபர் மாதத்தில் இருந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையே அக்டோபரில் தாக்குதல் துவங்கிய பிறகு, இஸ்ரேல் - லெபனான் எல்லைப் பகுதியில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.

யார் இந்த ஃபாவுத் ஷுக்கர்?

ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் ஆலோசகராக ஃபாவுத் ஷுக்கர் செயல்பட்டார் என்று நம்பப்படுகிறது என்று அமெரிக்கா முன்பு தெரிவித்திருந்தது.

அவரைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 50 லட்சம் டாலர்கள் சன்மானம் வழங்குவதாக அறிவித்திருந்தது அமெரிக்கா. பெய்ரூட்டில் இருந்த அமெரிக்க ராணுவ முகாம் மீது 1983ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பங்காற்றியிருக்கிறார் ஃபாவுத் என்று குற்றம் சாட்டுகிறது அமெரிக்கா. இந்த தாக்குதலில் 241 அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

தாஹியே பகுதியானது ஹெஸ்பொலாவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பகுதியாகும். அங்கு மக்கள் தொகை நெருக்கமாக இருக்கும் ஹரெத் ஹ்ரெய்க் பகுதியில் இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் நடைபெற்றுள்ளது.

ஷேக் ஹசன் நஸ்ரல்லா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,ஷேக் ஹசன் நஸ்ரல்லா

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே போர் உருவாக வாய்ப்புள்ளதா?

இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து ஊடகவியலாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரீன் ஜான்-பியர், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையேயான பெரிய போரை தவிர்க்க முடியும் என்று நம்புகிறார் என்று தெரிவித்தார்.

"இந்த விவகாரம் பெரிதாவதை பார்க்க விரும்பவில்லை. ஒரு போரை பார்க்க நாங்கள் தயாராக இல்லை" என்று ஜான்-பியர் அறிவித்தார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய, பெயர் கூற விரும்பாத இரண்டு இஸ்ரேல் அதிகாரிகள், "ஹெஸ்பொலாவுக்கு எதிரான இந்த தாக்குதலில் லெபனானை போருக்குள் இழுக்க விரும்பவில்லை" என்று கூறினர்.

ஹெஸ்பொலாவிடம் இருந்து உடனடியாகவோ அல்லது முக்கியமான எதிர்வினையையோ எதிர்பார்க்கவில்லை என்பதால் இஸ்ரேல் நாட்டினர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லை என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

லெபனானுக்கு ஆதரவாக ஈரான் முன்வரக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்ற சூழலில் முழுமையான போர் ஏற்படும் பட்சத்தில் அதன் விளைவுகளை இரு தரப்பும் அறிந்திருக்கின்றன.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையே போர் உருவாவதை பார்க்க விரும்பவில்லை

அடுத்து நடக்க இருப்பது என்ன?

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கோலன் குன்றுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம், நெதன்யாஹூ மற்றும் காலன்ட்டுக்கு பதில் தாக்குதலை எப்படி நடத்தலாம் என்பதை தீர்மானிக்க உரிமைகள் வழங்கப்பட்டன.

சனிக்கிழமை அன்று மஜ்தால் ஷாம்ஸ் கால்பந்து மைதானத்தில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 நபர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு ஹெஸ்பொலாவை கைகாட்டியது இஸ்ரேல். ஆனால் அந்த அமைப்போ அதனை மறுத்து வந்தது.

இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையே அக்டோபரில் தாக்குதல் துவங்கிய பிறகு இஸ்ரேல் - லெபனான் எல்லைப்பகுதியில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.

ஹமாஸ் இஸ்ரேல் மீது அக்டோபர் 7ம் தேதி அன்று நடத்திய தாக்குதலுக்கு பிறகு இது நடைபெற்றது.

ஹாமாஸை ஆதரிக்கும் ஹெஸ்பொலா, இஸ்ரேலின் வடக்கு பகுதியில் தொடர்ச்சியாக தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

ஒரு முழுமையான போர் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகின்ற சூழலில் இந்த பிரச்னையை தணிக்க, சமீப காலமாக, உலக தலைவர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

போர் சூழலில் சிக்கிக் கொள்ளும் அபாயம் இருக்கின்ற காரணத்தால் பிரிட்டிஷ் நாட்டினர் உடனடியாக லெபனானை விட்டு வெளியேறுமாறு பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் அந்நாட்டு குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

டேவிட் லாம்மி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலேவுடன் ஆகியோர், காஸாவில் நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டுவரவும், அப்பகுதியில் பதட்டமான சூழலை முடிவுக்கு கொண்டு வரவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கத்தாருக்கு வந்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலகம் அறிவித்துள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.