Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"காதல் கடிதம்"
 
 
காதலின் சின்னம் காதல் கடிதம் என்பார்கள். அங்கு தான் ஒருவர் மற்றவர் மேல் உள்ள மோகம் அல்லது அழகு வர்ணனையை தங்கு தடை இன்றி, வெட்கம் இன்றி, வெளிப்படையாக கூறமுடியும். யாருக்கு தெரியும் என் காதல் தவறான புரிதலுடனும், பிழையான இடத்தில் சேர்ந்த காதல் கடிதத்துடனும் மலர்ந்தது என்று!
 
“என் அன்பிற்கினியவளே, அழகின் தேவதையே என் மனதில் நான் உன்னோடு எப்பொழுதும் உரையாடுகிறேன். அதை நீ எப்ப அறிவையோ நான் அறியேன்? எனக்கு முன்னால் உன்னைப் பார்க்கிறேன், நான் தலை முதல் கால் வரை உன்னை அன்போடு மெல்ல வருடுகிறேன், உனக்கு முன்னால் முழந்தாளிட்டு உன்னை ரசிக்கிறேன், ‘அன்பே! உண்மையாக உன்னைக் காதலிக்கிறேன்!
 
உன்னுடைய இனிமை நிறைந்த தனித்துவமான இதயத்தை என் இதயத்துடன் சேர்த்து அணைக்கிறேன். அந்த சுகத்தில் நான் மெளனமாக போய்விடுவேன், ஒரு வார்த்தை கூடப் வாயில் வராது. என் உதடுகளினால் உன்னை முத்தமிட முடியாதலால் என்னுடைய நாக்கினுல்தான் உன்னை முத்தமிடுகிறேன், உன்னை வார்த்தைகளால் அலங்கரிக்கிறேன். நான் கவிதை கூட இப்ப எழுதுகிறேன்!
 
நான் என் பல்கலைக்கழக படிப்பை அடுத்த கிழமை பேராதனையில் ஆரம்பிக்கிறேன். இனி உன்னை, பாடசாலைக்கு போகும் பொழுது பார்க்கும் சந்தர்ப்பம் அற்றுப் போகப்போகிறது. அது என்னை வாட்டுகிறது. அது தான் என் உள்ளத்தின் கிளர்ச்சியை, இதுவரை சொல்லாத காதலை, ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு பார்வையிலும் என்னுடைய வாழ்க்கையின் மிகவும் சிறந்த, இனிமையான நினைவுகளைத் தூண்டிய அந்த முகத்திடம் எழுதுகிறேன்! பதிலை, என் பெயருடன், முதலாம் ஆண்டு, பொறியியல் பீடத்திற்கு அனுப்பலாம் பிரியமானவளே உனக்காக காத்திருப்பேன்!"
 
 
அவள் என் பாடசாலையிலேயே, நாவலர் வீதியில் அமைந்த, முன்றலில் மாமரங்கள் செழித்து அழகு பொழிந்த, யாழ்.கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்திலேயே படித்தாள் அவள் உயர்தர வகுப்பு முதலாம் ஆண்டு மாணவி. இம்முறை நான் மட்டுமே பொறியியல் பீடத்துக்கு அங்கிருந்து தெரிவாகி உள்ளேன், மொத்தமாக பத்துக்கு அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி உள்ளோம். எம்மை கௌரவித்து பாடசாலையில் நடந்த நிகழ்வுக்கு சாதாரண மற்றும் உயர் வகுப்பு மாணவர்களும் கலந்து கொண்டார்கள். அவள் முன் வரிசையில் தன் தங்கையுடன் இருந்தாள். தங்கை சாதாரண வகுப்பு முதல் ஆண்டு மாணவி என்பதை பின்பு தான் அறிந்தேன்.
 
என் கண்கள் சந்தர்ப்பம் வரும்பொழுது எல்லாம் மேடையில் இருந்து அவளையே பார்த்தது, இனி எப்ப இவளை பார்ப்பேனென ஏங்கியது!
 
“மைவடிவக் குழலியர்தம் வதனத்தை
நிகர்‘ஒவ்வா மதியே! மானே!!
செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்
திருநகையைத் தெய்வ மாக
இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ
நானறியேன்! உண்மை யாகக்
கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்
படைத்தனன் நல்கமலத் தோனே! ”
 
இங்கே எந்தக் குறையும் இல்லாத சிற்பம் போன்று என் முன் இருக்கும் உயிருள்ள இப்பெண்ணின் வடிவத்தைப் படைத்தவன் யார் என்று எனக்குத் தெரியாது ஆனால் கம்பனின் மகன் அம்பிகாபதியின் பாடல் கட்டாயம் இவளுக்கு பொருந்தும். இவளைப் படைத்தவன் பிரம்மனாய் ஒருவேளை இருந்தால், நிச்சயம் இவளை உருவாக்குவதற்கு முன் ஒரு மாதிரிக்காக திருமகளை உருவாக்கிய பின் தான் அவளிடம் இருக்கும் குறைகளைச் சரிசெய்து விட்டு இவளை உருவாக்கி இருப்பான் என்பது மட்டும் நிச்சியம்! உனக்கு மட்டும் ஏன் இத்தனை அழகு! என்று நான் ஆச்சரியமாக மீண்டும் மீண்டும் அவளை பார்க்கும் பொழுது தான் அவளின் தங்கையும் வந்து அவள் அருகில் இருந்தாள். நீ இருக்கும் இடமெல்லாம் உன் அழகை அள்ளித் தெளித்து விடுகிறாய் போலும், அதனால் தான் உன் தங்கையும் அழகாவே காட்சியளிக்கிறாளே, என்றாலும் அவளின் முகத்தில் இன்னும் சிறுபிள்ளைத்தனமும் அப்பாவித்தனமும் குடிகொண்டு அக்காவில் இருந்து வேறுபடுத்திக் காட்டியது.
 
சாதாரண வகுப்பு முதல் ஆண்டு மாணவ மாணவிகளின் சார்பாக அவளின் தங்கையே வாழ்த்துமடல் வாசிக்க வந்தார். அப்ப தான் அவளின் பெயரை இழையினி என்று அறிந்தேன். என்னவளின் பெயரோ பூங்குழலி.
 
"பொன்காட்டும் நிறம்காட்டிப் பூக்காட்டும் விழிகாட்டிப்
பண்காட்டும் மொழிகாட்டிப் பையவே நடைகாட்டி
மின்காட்டும் இடைகாட்டி நன் பாட்டில் வாழ்த்து கூறினாள்!"
 
உண்மையில் அந்த அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது. அவள், மேடையில் இருந்த எங்களுக்கு கை கொடுத்து, தனிப்பட்ட வாழ்த்தும் கூறினாள். நான் பூங்குழலிக்கு எழுதிய கடிதம் இன்னும் என் கால்சட்டை பாக்கெட்டில் இருந்தது, மெல்ல அதை எடுத்து, அவள் எனக்கு கை கொடுக்கும் பொழுது, அதை அவள் கையில் திணித்து, அக்காவிடம் கொடு என்று மெல்லிய குரலில் கூறினேன். அவளுக்கு அது கேட்டு இருக்கும் என்றுதான் அந்தநேரம் நம்பினேன்.
 
அவள் மீண்டும் பூங்குழலியின் பக்கத்தில் போய் இருந்தாள். ஆனால் அந்த கடிதத்தை எனோ கொடுக்கவில்லை, அதை மெல்ல தனது பாடசாலை சீருடையின் பாக்கெட்டில் வைப்பதை மட்டும் கண்டேன். ஒருவேளை பின் தனிய பூங்குழலியுடன் வீடு திரும்பும் பொழுது கொடுக்கலாம் என்று நினைத்தேன். அதன் பின் நான் பூங்குழலியை காணவில்லை. நானும் பேராதனை புறப்பட்டு விட்டேன்.
 
நான் பேராதனை போய் ஒரு மாதம் ஆகிவிட்டது . இன்னும் ஒரு பதிலும் பூங்குழலியில் இருந்து வரவில்லை. என்றாலும் அவள் இன்னும் என் நெஞ்சில் இருந்து மறையவில்லை. பூங்குழலி என்ற பெயருக்கு ஏற்றவாறு அவள் கூந்தலில் ஒரு ரோசா பூ அன்று, நான் பார்த்த அந்த கடைசி நாளில் அழகு பெற்று இருந்தது. நீண்ட கரிய கூந்தல் சுருண்டு சுருண்டு விழுந்து அவளுடைய கடைந் தெடுத்த தோள்களை முத்தமிட்டு கொண்டு இருந்தது.
 
அளவோடு பொன் நகைகள் அவள் அணிந்து கொண்டிருந்தாள். அவை அவளுடைய மேனியில் பட்டதனாலோ என்னவோ அவையும் அழகு பெற்றிருந்தன. அழகே ஒரு வடிவமாகி வந்தால், அதற்கு எந்த ஆபரணத்தைக் கொண்டு அழகு செய்ய முடியும்? அப்படித்தான் பூங்குழலி அன்று இருந்தாள். அது தான் அவளை இன்னும் மறக்க முடியாமல் தவிக்கிறேன். 'அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன் நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?' எனக்கு அதன் தாக்கத்தை வர்ணிக்க முடியாது. ஆனால் அது அவளின் முடிவானால், நான் ஒன்றும் செய்யமுடியாது.
 
நான் அடுத்தநாள், பெப்ரவரி 14 ஆம் திகதி, வகுப்புக்கு போகமுன்பு, ஒரு நற்பாசையில் அன்றும் தபால் ஏதாவது வந்திருக்கா என்று மீண்டும் பார்த்தேன். கொஞ்சம் கனமாக, ஆனால் அனுப்பியவர் விபரம் வெளியே குறிப்பிடாமல் எனக்கு வந்திருந்தது. நண்பர்கள் பலர் அங்கு நின்றதால், அதை உடன் திறந்து பார்க்கவில்லை. மனது எனோ மகிழ்வாக இருந்தது, 'ஹாப்பி வேலன்டைன் டே' என யாரோ யாருக்கோ சொல்லுவது காதில் கேட்டது. என்றாலும் மதிய உணவு இடைவெளியில் என் அறையில் போய் அவசரம் அவசரமாக திறந்தேன். அனுப்பியவர் பெயரை பார்த்தவுடன் எனக்கு ஆத்திரம் ஆத்திரமாகத் தான் வந்தது . அது உங்கள் செல்ல நண்பி இழையினி என்று இருந்தது. என்றாலும் அந்த மடலை வாசிக்கத் தொடங்கினேன்.
 
"அன்புள்ள அதிசயமே, என் அன்பே , அன்று நீங்கள் என் கையில் திணித்த அன்புக் கடிதம், அதில் உங்கள் உள்ளங்கை வேர்வையின் நறுமணம் என்னை என்னென்னவோ செய்து விட்டது. நீங்கள் அப்பொழுது எதோ சொன்னது கூட காதில் விழவில்லை, மன்னிக்கவும்! வரிகள் தொடுத்தல்ல, என் சுவாசம் தொடுத்து, சுவாசம் சுமக்கும் நேசம் தொடுத்து, நேசம் நெய்த உன் பாசம் தொடுத்து, இதழ் வாசம் தேடும் என் காதல் தேசம் தொடுத்து, எத்தனையோ தடவை வாசித்துவிட்டேன்!
 
அன்பு மணாளனே! என் பிரியமான தோழனே !!, உன் கவர்ச்சி இனிமையானது, தேன் போல் இனிமையானது. உன் வசீகரம் இனிமையானது, அமுதம் போல் இனிமையானது. நீ என்னை வயப்படுத்தி விட்டாய், எனவே எனது சுய விருப்பத்தில் நீ கேட்ட பதிலைத் தருகிறேன். காத்து வைத்ததுக்கு மன்னிக்கவும் என் இதயத்திற்கினிய காதலனே. காதலர் தினத்தில் என் பதில் உன்னை அடைய வேண்டும் என்பதால் அன்பே சுணங்கிவிட்டது. நீ என்னை மயக்கி விட்டாய், எனவே எனது கட்டற்ற துணிவில் நான் உன்னிடம் வருவேன்! நீயே என் மதிப்புள்ள காதற் கண்மணி, அதில் இனி மாற்றம் இல்லை, - அன்புடன், உங்கள் இழை"
 
நான் அழுவதா சிரிப்பதா எனக்குப் புரியவே இல்லை. அவள் இவ்வளத்துக்கு என்னை நம்பிவிட்டாள். இல்லை நான் தந்த கடிதம் பூங்குழலிக்கு கொடுக்கவே என்று சொன்னால், அவள் ஒரு மாதமாய் என்னென்னவோ கற்பனையில் மிதந்து காத்திருந்தவள், எப்படி அதை ஏற்பாளோ? எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை , நான் விரும்பியவளை விட, என்னை விரும்பியவள் எப்பவும் நல்லதே! இப்ப என் வாழ்க்கையில் குறுக்கிட்டவர்கள் இரண்டு பெண்களாக ஆகிற்று, ஒருத்தி, இழையினி என் தவறான கடிதத்தால், என்னை மிகவும் விரும்புகிறவள். மற்றொருத்தி, பூங்குழலி என்னால் மட்டுமே ஒருமுகமாக விரும்பப்பட்டவள், அவளுக்கு இன்னும் என் காதல் தெரியாது. இருவருமே நல்ல அழகு, ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல, வித்தியாசம் வயது மட்டுமே. கையில் இருக்கும் பறவையை கண்கள் தேடும் பறவையை நம்பி கைவிடலாமா ? அது தான் இப்ப எனக்குத் தடுமாற்றம்?
 
 
"உறங்கிக் கிடந்த மனது ஒன்று
உறக்கம் இன்றி தவிப்பது ஏனோ?
உறவு கேட்ட காதல் கடிதம்
கை மாறிப் போனது ஏனோ?"
 
"கண்கள் மூடி கனவு கண்டால்
பூங்குழலி அருகில் வருவது ஏனோ?
கருத்த கூந்தல் காற்றில் ஆட
இழையினி மடல் வரைந்தது ஏனோ?
 
"காற்றில் இதயத்தில் குரல் கேட்க
காத்திருந்து விழித்திருந்து ஏங்குவது எனோ?
காதல் மொழியில் வாழ்த்து அனுப்பி
காதலர்தினத்தில் தடுமாற்றம் தருவது ஏனோ?
 
"காந்தி மடியில் சரணம் அடைந்தேன்
காரணம் கூறி விடை கேட்டேன்?
காமம் துறந்த முனிவன் அவன்
தேடி வந்தவளை தேற்று என்றான்!"
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
341710027_796715862025223_568931537746920798_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=H8erol-n-hcQ7kNvgGuAY6F&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYCo95Gm70qJc4lVX8AGlz2XjibDBQC0C55MlLNZeDrkxQ&oe=66ABF02E No photo description available.
 
No photo description available. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.