Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்ணுக்குள் புதைந்த கிராமங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள், ஆறுகளில் மிதக்கும் உடல்கள் 4 மணி நேரத்தில் 3 நிலச்சரிவுகள்: அச்சம் தரும் வயநாடு கோரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
30 JUL, 2024 | 12:28 PM
image

வயநாடு:

மண்ணுக்குள் புதைந்த கிராமங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள், ஆறுகளில் மிதக்கும் உடல்கள் என்பது தான் வயநாடு மாவட்டத்தின் சூரல்மலா மற்றும் முண்டக்கை டவுன் பகுதியின் தற்போதைய நிலை. அங்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) அதிகாலை ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. அங்கு ஒரேநாளில் 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட இந்த துயரம் நிகழ்ந்துள்ளது.

பொதுவாகவே கேரளம் அதீத மழைப்பொழிவை சந்திக்கும் போதெல்லாம் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படுவது வயநாடு, மலப்புரம் மற்றும் இடுக்கி மாவட்டங்கள் தான். இந்த ஆண்டும் கனமழை அதிகமாக பெய்துவரும் கேரளத்தில், இன்று (ஜூலை 30) அதிகாலை வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரையிலான நான்கு மணிநேரத்தில் மூன்று பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.

wayanadu_13.jpg

இதில் முண்டக்கை டவுன் பகுதியில் இரண்டு முறை நிலச்சரிவு ஏற்பட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், சூரல்மலா கிராமத்தின் ஒரு பகுதி நிலச்சரிவில் சிக்கி முற்றிலும் சிதிலமடைந்துள்ளது. இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

wayanad_13.jpg

பாலம் சேதம்: மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள பேரிடர் படையினர், நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள பாதிப்பின் தாக்கம் சரியாக தெரியவில்லை என கூறுகின்றனர். அங்குள்ள பாலம் ஒன்று முற்றிலும் சேதமடைந்தது காரணமாக சேதங்களை மதிப்பிட முடியவில்லை.

சூரல்மலா கிராமத்தை தாண்டி தான் முண்டக்கை டவுனுக்கு செல்ல முடியும். இரண்டு ஊர்களையும் இணைக்கும் பாலம் கனமழை, நிலச்சரிவால் சிதிலமடைந்துள்ளது. இதனால், முண்டக்கை டவுனுக்கு மீட்புக்குழு செல்வதில் சிரமம் நிலவுகிறது. இதனால், முண்டக்கை டவுன் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாறியுள்ளது. சில நிமிடங்கள் முன் அரசின் இரண்டு ஹெலிகாப்டர்கள் அங்கு தரையிறங்க முயற்சித்தது. ஆனால், காலநிலை மோசமாக இருப்பதால், அங்கு தரையிறங்க முடியாமல் மீண்டும் கோழிகோட்டுக்கு திரும்பியது.

முண்டக்கை டவுன் பகுதியில் அதிகாலை 3.15 மணியளவில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதில் புனிச்சிரிமட்டம் பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக அங்குள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கியிருக்கும் யூனுஸ் என்பவர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். முண்டக்கை டவுனில் மட்டும் கிட்டத்தட்ட 100 வீடுகள் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்கிறது முதல்கட்ட தகவல்.

முண்டக்கை டவுனுக்கு அடுத்த அட்டமலை கிராமத்தில் ஓடும் ஆற்றில் ஆறு சடலங்களை அக்கிராம மக்கள் மீட்டெடுத்துள்ளனர். இவை, முண்டக்கை டவுனில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் என்று கூறப்படுகிறது. எட்டு மீட்டர் நீளமுள்ள இந்த ஆறு வெள்ளப்பெருக்கு காரணமாக தற்போது சீற்றத்துடன் பாய்கிறது என்பதால், முண்டக்கை டவுனில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் இந்த ஆற்றில் மேலும் கிடைக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதேபோல், பொதுகல்லு ஊராட்சியில் உள்ள சாலியாற்றில் இருந்து 3 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேப்பாடி பகுதியில் இருந்து உருவாகும் ஆறு தான் இந்த சாலியாறு. மேப்பாடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து வெளியேறும் நீரும் சகதியும் ஆற்றில் கலப்பதால், சாலியாறு பார்ப்பதற்கே அபாயகரமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியைச் சேர்ந்த மற்ற கிராம மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ள வேளையில், கண்ணூரில் இருந்து இந்திய ராணுவம் மீட்புப் பணிக்கு விரைந்துள்ளது. இதேபோல், தமிழகத்தின் குன்னூரில் இருந்தும் ராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்கு விரைந்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/189782

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேரளா: வயநாடு நிலச்சரிவில் சிக்கி 63 பேர் பலி

வயநாடு நிலச்சரிவு

பட மூலாதாரம்,REUTERS

30 ஜூலை 2024, 03:12 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மேப்பாடி அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

உள்ளூர் மருத்துவமனைகள் குறைந்தது 100 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் சுமார் 250 பேர் இதுவரை மீட்கப்பட்டு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் மேலும் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது

செவ்வாய்கிழமை அதிகாலை 2-3 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார்.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி மற்றும் சூரல்மலை அருகே செவ்வாய்க்கிழமை காலை நிலச்சரிவு ஏற்பட்டதாக ஏஎன்ஐ மற்றும் பிடிஐ செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்ற நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் ஜூலை 29 அன்று கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர் கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தின் மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் இந்த நிலச்சரிவால் வலுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை, உள்ளூர் மருத்துவமனையில் காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றும் ஏறத்தாழ 250-க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 

வயநாட்டில் தொடர் கதையாகும் நிலச்சரிவு

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் மலை மாவட்டமான வயநாட்டில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும், பழங்குடி மக்களும் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

வடக்கே கர்நாடகாவின் குடகு மற்றும் மைசூர் மாவட்டங்களை எல்லையாக கொண்டுள்ள இந்த மாவட்டத்தின் வடகிழக்கில் தமிழகத்தின் நீலகிரி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வடமேற்கே கண்ணூர் மாவட்டமும், தெற்கே மலப்புரம் மாவட்டமும், தென்மேற்கே கோழிக்கோடு மாவட்டமும் அமைந்துள்ளது.

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாகவே இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முண்டக்கை, அட்டமலை, குன்னோம் போன்ற பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அனைத்து சாலைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் இந்த கிராமங்கள் தனித்துவிடப்பட்டுள்ளன. மழைகாலங்களில் நிலச்சரிவு அதிகம் ஏற்படும் பகுதியாக இந்த மாவட்டம் அறியப்படுகிறது.

வயநாடு நிலச்சரிவு

பட மூலாதாரம்,ANI

தாமதமாகும் மீட்புப் பணிகள்

சூரமலையில் இருந்து முண்டக்கையை இணைக்கும் பாலமானது மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மீட்பு பணிகள் தாமதமாகி வருவதாக கேரள வனத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு துறை அமைச்சர் சசீந்திரன் பிபிசி இந்தியிடம் கூறினார்.

"தற்போது இருக்கும் சூழலில் எவ்வளவு பேர் இந்த இடர்பாடுகளில் சிக்கியிருக்கிறார்கள் என்று கூற இயலாது," என்பதையும் அவர் தெரிவித்தார்.

கேரள முதல்வர் அலுவலகம் இது குறித்து கூறுகையில், தற்காலிகமாக பாலம் அமைக்க ராணுவத்தின் உதவியை நாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக பாலம் அமைத்த பிறகு, மீட்பு குழுவினர் அங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ள தேயிலை தோட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலம் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர், விமானப்படை விமானங்கள், கண்ணூர் பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினரின் அனைத்து மீட்புப் பணிகளும் தாமதமாகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவி மைய எண்கள் அறிவிப்பு

மீட்பு உதவிகள் தேவைப்படும் மக்கள் 1077 என்ற எண்ணில் கட்டுப்பாட்டு மையத்திற்கு அழைக்கலாம் என்று அறிவித்துள்ளது வயநாடு மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு.

மேலும் மாவட்ட அவசர செயல்பாட்டு மையத்தை அணுக 04936 204151 என்ற எண்ணுக்கும், 9562804151, 8078409770 என்ற அலைபேசி எண்களுக்கும் மக்கள் அழைக்கலாம்.

சுல்தான் பத்தேரியில் உள்ள தாலுக்கா அளவிலான அவசர செயல்பாட்டு மையத்தை 04936 223355 (அ) 04936 220296 என்ற எண்ணிலும் அழைக்கலாம். மேலும் 6238461385 என்ற அலைபேசி எண்ணிலும் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

மந்தவாடி தாலுக்கா அவசர செயல்பாட்டு மையத்தை அணுக 04935 241111, 04935 240231 என்ற எண்களிலும், 9446637748 என்ற அலைபேசி எண்ணிலும் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

வைத்திரி தாலுக்கா அவசர செயல்பாட்டு மையத்தை அணுக 04936 256100 என்ற எண்ணிலும், 8590842965, 9447097705 என்ற அலைபேசி எண்களிலும் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

வயநாடு நிலச்சரிவு: உதவி மைய எண்கள் அறிவிப்பு

பட மூலாதாரம்,CMO KERALA / X

படக்குறிப்பு,கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு

நிவாரண நிதியை அறிவித்த மத்திய அரசு

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ. 2 லட்சத்தை நிதி உதவியாக அறிவித்துள்ளது மத்திய அரசு.

பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வயநாடு நிலச்சரிவு 2024: நிதி உதவியை அறிவித்தது மத்திய அரசு

பட மூலாதாரம்,NARENDRA MODI / X

படக்குறிப்பு,நிவாரண நிதியை அறிவித்த மத்திய அரசு

நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

தீவிர கனமழை இன்றும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மத்திய மற்றும் வடக்கு கேரளாவில் அதிக கன மழைகான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் 204 மிமீ அளவுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தொடர்ந்து மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் வடக்கு கேரளா பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மிதமான அளவில் திடீர் வெள்ளப்பெருக்கு (Flash Flood) ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆதலால் கரையை ஒட்டி தாழ்வு பகுதியில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவைத் தொடர்ந்து வயநாட்டில் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வழிகாட்டுதல்களை முதல்வர் வழங்கியுள்ளார் என்றும் அமைச்சர்கள் மேற்பார்வையில் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, முழு அரசு இயந்திரமும் மீட்பு முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார் என்றும் கேரள முதல்வர் அலுவலக எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

கேரள முதல்வர்

''வயநாட்டில் மேப்பாடி அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் சிக்கியவர்கள் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்'' என ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி

மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் - மோதி நம்பிக்கை

கேரளத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்த தகவல் கேட்டு மிகவும் வேதனையுற்றதாக குறிப்பிட்டுள்ளார். "உறவுகளை இழந்த நபர்களைப் பற்றி நினைக்கிறேன். காயமடைந்தவர்களுக்காக பிரார்த்திக்கிறேன்," என்று பதிவிட்டுள்ளார் மோதி.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான அனைத்து மீட்பு நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

"கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் அலைபேசியில் உரையாடினேன். இந்த தருணத்தில் அம்மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என உறுதி அளித்தேன்," என்றும் குறிப்பிட்டிருக்கிறார் மோதி.

வயநாடு நிலச்சரிவு - கேரளாவுக்கு தேவையான உதவிகளை வழங்க தயார் நிலையில் உள்ளதாக மோதி அறிவிப்பு

பட மூலாதாரம்,NARENDRA MODI / X

படக்குறிப்பு,மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் - நரேந்திர மோதி அறிவிப்பு

உதவிக்கரம் நீட்ட தயார் - தமிழக முதல்வர் அறிவிப்பு

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக அரசு கேரளத்திற்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் செய்ய தயார் என்று அறிவித்துள்ளார்.

"வயநாட்டில் ஏற்பட்டுள்ள பெரிய அளவிலான நிலச்சரிவு மற்றும் அதனால் ஏற்பட்ட மனித உயிரிழப்புகள் குறித்து வேதனையுற்றேன். இந்த பகுதியில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று புரிந்து கொள்கிறேன். மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது என்றும் இடர்பாடுகளில் சிக்கியுள்ள அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்றும் நம்புகிறேன்," என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் தேவையான தளவாட, மனிதவள உதவிகளையும் இந்த இக்கட்டான தருணத்தில் சகோதர மாநிலமான கேரளத்துக்கு வழங்க தமிழகம் தயாராக உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

கேரளா நிலச்சரிவு 2024: கேரளாவுக்கு உதவ முன்வந்த தமிழகம்

பட மூலாதாரம்,MK STALIN / X

படக்குறிப்பு,உதவிக்கரம் நீட்டும் தமிழகம் - முக ஸ்டாலின் அறிவிப்பு
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மண்ணில் புதைந்த வீடுகள், தோண்டத்தோண்ட உடல்கள் - வயநாடு நிலச்சரிவின் கோரக் காட்சிகள்

நிலச்சரிவால் நிலைகுலைந்து போன சூரல்மலை

பட மூலாதாரம்,AFP PHOTO/INDIA'S NATIONAL DISASTER RESPONSE FORCE

2 மணி நேரங்களுக்கு முன்னர்

கேரள மாநிலம் வயநாட்டில் தொடர் கனமழை காரணமாக மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட இடங்களில் கடுமையான நிலச்சரி ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள வீடுகள், கடைகள், பள்ளிகள் உள்ளிட்ட கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்து போயின.

ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தோண்டத்தோண்ட உடல்கள் அடுத்தடுத்து கிடைத்து வருவதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வயநாடு நிலச்சரிவின் கோரத்தை விவரிக்கும் புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

கேரளா, வயநாடு நிலச்சரிவு

பட மூலாதாரம்,DEFENCE PRO

படக்குறிப்பு,நிலச்சரிவால் நிலைகுலைந்து போன சூரல்மலை
கேரளா, வயநாடு நிலச்சரிவு

பட மூலாதாரம்,DEFENCE PRO

படக்குறிப்பு,சூரல்மலையில் பள்ளி அருகே நிலச்சரிவின் தாக்கத்தை உணர்த்தும் படம்.
கேரளா, வயநாடு நிலச்சரிவு
படக்குறிப்பு,சூரல்மலை கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கி சிதைந்து போன ஜீப்.
கேரளா, வயநாடு நிலச்சரிவு
படக்குறிப்பு,சூரல்மலையில் நிலச்சரிவால் சேதமடைந்த வீடு  
கேரளா, வயநாடு நிலச்சரிவு

பட மூலாதாரம்,DEFENCE PRO

படக்குறிப்பு,சூரல்மலை கிராமத்தில் மண்ணில் புதைந்து போன வீடுகளுக்கு நடுவே மனித உயிர்களைத் தேடும் மீட்புக் குழுவினர்
கேரளா, வயநாடு நிலச்சரிவு

பட மூலாதாரம்,DEFENCE PRO

படக்குறிப்பு,திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து மீட்புப் பணிக்காக ராணுவ வீரர்கள் வயநாடு புறப்பட்ட காட்சி.
கேரளா, வயநாடு நிலச்சரிவு
படக்குறிப்பு,சூரல்மலையில் மண்ணுக்குள் புதைந்திருந்த ஒருவரை மீட்புக்குழுவினர் மீட்ட காட்சி.
கேரளா, வயநாடு நிலச்சரிவு
படக்குறிப்பு,சூரல்மலையில் மீட்கப்பட்ட ஒருவரை ராணுவ வீரர் ஒருவர் முதுகில் சுமந்து வருகிறார்.  
கேரளா, வயநாடு நிலச்சரிவு

பட மூலாதாரம்,DEFENCE PRO

படக்குறிப்பு,சூரல்மலை அருகே கரைபுரண்டோடும் ஆற்றுவெள்ளத்தில் கயிறு மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள்
கேரளா, வயநாடு நிலச்சரிவு
படக்குறிப்பு,சூரல்மலை அருகே ஆற்று வெள்ள கரைபுரண்டு ஓடும் இடத்தில் மீட்புப் பணியில் ஈடபட்டுள்ள வீரர்
கேரளா, வயநாடு நிலச்சரிவு
படக்குறிப்பு,வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த காளிதாஸ் (28)
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வயநாடு நிலச்சரிவு: 700 புலம்பெயர் தொழிலாளர்கள் மாயம்!

31 JUL, 2024 | 10:27 AM
image
 

வயநாட்டில் மண்ணில் புதைந்திருந்த ஒருவரின் சடலத்தை மீட்டு எடுத்து வரும் மீட்புப் படையினர்.

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் மண்ணில் புதைந்து குழந்தைகள், பெண்கள் உட்பட 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில், 700 புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது.

wayanadu17.jpg

கேரளாவின் கொச்சி நகரை தலைமையிடமாகக் கொண்டு ஹாரிசன்ஸ் மலையாளம் பிளான்டேசன் லிமிடெட் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்துக்கு கேரளாவில் சுமார் 10-க்கும் மேற்பட்ட தேயிலை, காபி தோட்டங்கள் உள்ளன. 10-க்கும் மேற்பட்ட ரப்பர் தோட்டங்கள் உள்ளன. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு பகுதியில் ஹாரிசன்ஸ் மலையாளம் நிறுவனத்துக்கு சொந்தமான தேயிலை, காபி தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களுக்காக தேயிலை தோட்டப் பகுதிகளிலேயே தற்காலிக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தன. நிலச்சரிவு, வெள்ளத்தில் இந்த வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து ஹாரிசன்ஸ் மலையாளம் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் சுனில் ஜான் கூறும்போது, "எங்களது நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி கிரிஷ், அவரது மனைவி மற்றும் 3 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக எங்களது தொழிலாளர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. எங்களது தேயிலை தோட்டத்தில் உள்ள பங்களாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய முடியவில்லை" என்றார்.

கேரள போலீஸார் கூறியதாவது: இப்போதைய நிலையில் ஹாரிசன்ஸ் மலையாளம் நிறுவனத்தில் பணியாற்றிய 700 தொழிலாளர்களையும் காணவில்லை என்றே கருதுகிறோம். அவர்களில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சுகிறோம். தேயிலை தோட்ட பகுதிக்கு செல்வதற்கான பாலம் இடிந்துவிட்டது. மலைப்பகுதி முழுவதும் மேகமூட்டமாக இருக்கிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

பகலில் மட்டுமே முழுமையாக மீட்புப் பணியில் ஈடுபட முடியும். இரவில் வெளிச்சம் இல்லாத சூழலில் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்படும். தேயிலை தோட்டப் பகுதிக்கு செல்ல தற்காலிக பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதன்கிழமை அந்த பகுதிக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபடுவோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/189865

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Kerala-க்கு Warning கொடுத்தோம்; ஆனால்... Amit Shah பேசியது என்ன? மீட்புப் பணியில் என்ன சிக்கல்?

Kerala Landslide: Amit Shah பேசியது என்ன? மீட்புபணியில் என்ன சிக்கல்? kerala Chief Minister இன்று பேசியது என்ன?

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் குறைந்தது 150 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிலச்சரிவு காரணமாக நொடிப் பொழுதில் வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டங்கள் மண்ணுக்குள் புதைந்துவிட்டன.

ராணுவம், பேரிடர் மீட்புப் படையினர், மாநில தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்வு

01 AUG, 2024 | 10:32 AM
image
 

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. 

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. அப்பகுதியில் மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. காணாமல்போன 225 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

wayanadu_recue.jpg

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன் தினம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் ஏராளமான மக்கள் மண்ணில் புதைந்தனர். இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியில், 130 பேர் உயிரிழந்ததாக தெரியவந்தது. தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், கேரள போலீஸார், தீயணைப்பு படையினர் ஆகியோருடன் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படை வீரர்களும் களமிறங்கி தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

2-ம் நாளாக நேற்றும் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்றன. அப்போது, மண்ணில் புதைந்து உயிரிழந்த நிலையில் ஏராளமான சடலங்கள் மீட்கப்பட்டன. இரவு நிலவரப்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.

மீட்பு பணி குறித்து ராணுவ பிரிகேடியர் அர்ஜுன் சீகன் கூறியதாவது: தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவ வீரர்கள், மாநிலபோலீஸார், வனத்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் என 600-க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானப்படை ஹெலிகாப்டர்கள், கடற்படை வீரர்களும் மீட்பு பணியில் இணைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைத்தனர். சூரல்மலை, முண்டக்கை பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் மட்டுமே ஏராளமானோர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை பகுதி மிகப்பெரிய அளவில் அழிவை சந்தித்துள்ளது. அங்கு நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. அப்பகுதியில் வீடுகள் இருந்த தடயமே இல்லாமல் மண்மூடி காணப்படுகிறது. அனைத்து இடங்களும் சேற்று மண், மரங்கள், பாறைகளால் மூடப்பட்டுள்ளன. புதையுண்ட பலரை மீட்பு படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

உயிரிழப்பு எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ள நிலையில், முண்டக்கை பகுதியை சேர்ந்த 225 பேரின் நிலை குறித்து தெரியவில்லை. அவர்கள் மண்ணில் புதையுண்டனரா, ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனரா என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

உயிரிழந்தவர்களில் 94 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. உறவுகளை பறிகொடுத்தவர்கள் கதறி அழுதபடி உள்ளனர்.

பலர் மாயமான நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. முண்டக்கை பகுதியில் 500-க்கும்மேற்பட்ட வீடுகள் இருந்த நிலையில், தற்போது 50 வீடுகள் மட்டுமே எஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது.

தொடரும் மழையின் அச்சுறுத்தல்: வயநாடு, மலப்புரம், பத்தனம்திட்டா, இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர்,காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மலை அடிவார பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/189967

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேரளா, வயநாடு மண்சரிவு ;  இஸ்ரோ வெளியிட்ட புகைப்படம்

Published By: DIGITAL DESK 3   02 AUG, 2024 | 11:46 AM

image
 

பலத்த மழையினால் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்த பயங்கர மண்சரிவு காரணமாக முண்டக்கை, சூரல்மலை, ஆட்டமலா, நூல்புழா பகுதிகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. மண் குவியலில் ஏராளமான வீடுகள் மூழ்கிய நிலையில், 318 பேர் உயிரிழந்துள்ளனர். 

200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 4 நாட்களாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்ற போதும் 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால், உறவினர்கள் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர். உயிரிழப்பு அதிகரிக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

மீட்புப் பணியில் மாநில, தேசிய அனர்த்த முகாமைத்துவ குழுவினர், இராணுவத்தினர், தீயணைப்புத்துறையினர் என பல்துறையை சேர்ந்தவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து ஈடுபட்டு வருகின்றனர். 

பணிகளை விரைந்து முடிக்க இடிபாடுகளை அகற்ற வழிவகை செய்யும் வகையில் தற்காலிக இரும்பு பாலத்தையும் இராணுவத்தினர் விரைவாக கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் மீட்புப் பணிகள் துரிதமடையும் என்கின்றனர்.

இதனிடையே, இஸ்ரோ வெளியிட்ட செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் பார்ப்போரை அதிர்ச்சியடைய வைக்கிறது.

மண்சரிவுக்கு முன்பு இருந்த மலைப்பகுதி மற்றும் மண்சரிவுக்கு பிறகு உள்ள மலைப்பகுதியின் புகைப்படங்கள் மண்சரிவின் கோரமுகத்தை காட்டுகிறது.

86 ஆயிரம் சதுர மீற்றர் பரப்புக்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், 8 கிலோ மீற்றர் வரை மணல் ஆற்றுடன் கலந்து சரிந்துள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

5.jpg

மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் இருந்த மக்கள் மீட்கப்பட்டு 45 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து வழங்கி வருகின்றன. அதேபோல், நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கேரளவுக்கு நிதியுதவியை நிவாரணமாக வழங்கி வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/190061

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'குழந்தையின் சடலம் என நினைத்தேன்; ஆனால் வயது 47' - வயநாட்டில் பிபிசி செய்தியாளர் கண்டது என்ன?

வயநாடு நிலச்சரிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நிலச்சரிவால் வெகுவாக பாதிக்கப்பட்ட சூரல்மலை கிராமம்
3 ஆகஸ்ட் 2024, 03:30 GMT
புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

(வயநாடு நிலச்சரிவு குறித்து கடந்த மூன்று தினங்களாக அங்கு செய்தி சேகரித்து வரும் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் தான் நேரில் கண்ட அனுபவங்களை இங்கு வழங்குகிறார்.)

நானும் ஒளிப்பதிவாளர் ஜனார்த்தனன் மாதவனும் புதன்கிழமை காலை வயநாட்டுக்கு சென்றோம். நிலச்சரிவில் முதன்மையாக பாதிக்கப்பட்ட இரண்டு பகுதிகள் சூரல்மலை மற்றும் முண்டகை. தமிழ்நாட்டிலிருந்து வயநாட்டுக்கு செல்லும் போது முதலில் சூரல்மலை தான் வரும். நிலச்சரிவு பேரழிவின் கோரத்தாண்டவம் நிகழ்ந்த மூன்றாம் நாள் அது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் அதிகளவில் வரத்தொடங்கியிருந்தன.

சூரல்மலையில் பெரும்பாலான வீடுகள், கடைகள் என எல்லாமே அவை இருந்த சுவடுகூட இல்லாமல் நிலச்சரிவில் காணாமல் போயிருந்தன.

வயநாடு: "குழந்தையின் சடலம் என நினைத்தேன்; ஆனால் அவருக்கு 47 வயது" - செய்தியாளரின் கள அனுபவம்
படக்குறிப்பு,நிலச்சரிவில் கண்ட பல நிகழ்வுகள் வார்த்தைகளில் விவரிக்க முடியாததாக இருக்கிறது.

சூரல்மலையிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் முண்டகை பகுதி உள்ளது. சூரல்மலையில் உள்ள பாலம் வாயிலாகத்தான் முண்டகைக்கு செல்ல முடியும். ஆனால், அந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், சூரல்மலையிலிருந்து முண்டகைக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. (தற்போது அங்கே தற்காலிக பாலம் கட்டப்பட்டுள்ளது.)

அந்த பாலம் இருந்த இடத்திற்கு சென்று பார்த்தால் மிகவும் கொடூரமாக இருந்தது. மீட்புப் பணிகளில் ஈடுபடுவோர் மட்டுமே சென்றுவர முடிந்தது. ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோர் கயிறு கட்டி ஆற்றை கடந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஊடகவியலாளர்கள் அவ்வழியாக முண்டகை கிராமத்திற்கு செல்ல முடியாத நிலை இருந்தது. அதனால், முண்டகையில் என்ன நடக்கிறது என்பதை எங்களால் அப்போது அறிய முடியவில்லை.

ஆனாலும், சூரல்மலையில் நாங்கள் கண்ட காட்சிகளே இந்த இயற்கை பேரிடரின் துயரத்தை விவரிக்க போதுமானவையாக இருக்கின்றன.

 

உயிருடன் மீட்கப்பட்டவர்களின் நிலை

வயநாடு: "குழந்தையின் சடலம் என நினைத்தேன்; ஆனால் அவருக்கு 47 வயது" - செய்தியாளரின் கள அனுபவம்
படக்குறிப்பு,வீடுகள், கடைகள் என எல்லாமே அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

சூரல்மலையில் பெரும்பாலான வீடுகள் முழுவதும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள மேப்பாடி அரசு மருத்துவமனையில் தான் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கு தங்களின் அன்புக்குரியவர்களின் உடல்கள் இருக்கின்றனவா என தேடி வருபவர்களின் துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

காணாமல் போன உறவினர்களின் புகைப்படங்களுடன் அங்கு வருபவர்களை கண்கொண்டு காண முடியாத நிலைதான் இருந்தது.

அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள அரசுப்பள்ளியில் தான் நிலச்சரிவிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் பலர் தங்கள் உறவினர்களை இழந்தவர்கள்.

சான்றிதழ்கள், பணம், பொருட்கள், தங்களின் கடைகள், வீடுகள் என அனைத்தையும் இழந்தவர்கள் அவர்கள். எதுவுமே இல்லாமல் தங்களது வாழ்க்கையை பூஜ்யத்தில் இருந்து தொடங்க வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கையில் பணம் இல்லாமல் தங்கள் உறவினர்களை கூட தேட முடியாத நிலை அவர்களுடையது.

 

வேதனையை மறைத்து மீட்புப்பணி

வயநாடு: "குழந்தையின் சடலம் என நினைத்தேன்; ஆனால் அவருக்கு 47 வயது" - செய்தியாளரின் கள அனுபவம்
படக்குறிப்பு,தங்கள் வாழ்க்கையை இழந்தவர்கள் புதிதாக ஆரம்பிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

இரவு நேரத்தில் ஒருவர் இறந்த உடல் ஒன்றை ஏந்தியபடி சென்றுகொண்டிருந்தார். அவருடைய கையில் இருந்த உடல் குழந்தையுடையது என நினைத்து, ‘என்ன குழந்தை, என்ன வயது?’ என கேட்டேன். அப்போதுதான் தெரிந்தது அந்த உடல் குழந்தையுடையது அல்ல, 47 வயதான ஆண் ஒருவருடையது என்று. பாதி மட்டுமே அவரது உடல் கிடைத்ததால் அந்த அளவில் இருந்துள்ளது. தன் உறவினரின் பாதி உடலை மட்டுமே சுமந்து சென்றவருக்கு எவ்வளவு துயரமாக இருந்திருக்கும்?

பாலம் அடித்துச் செல்லப்பட்டிருந்ததால், முண்டகையில் இருந்து சூரல்மலைக்கு நடந்து வந்துகொண்டிருந்தோம். அப்போது வந்த ஒரு ஜீப்பில் இருந்தவர்கள் எங்களை ஏற்றிக்கொண்டனர். எனக்கு அருகில் மீட்புப்பணியில் ஈடுபட்ட ஒரு வீரர், முண்டகையை சேர்ந்தவர். நிலச்சரிவில் சிக்கிய அவருடைய சகோதரியின் சடலம் இன்னும் கிடைக்கவில்லை. தன் வலியை பொருட்படுத்தாமல் அவர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.

 

“நம்பிக்கை இழக்காதீர்”

வயநாடு: "குழந்தையின் சடலம் என நினைத்தேன்; ஆனால் அவருக்கு 47 வயது" - செய்தியாளரின் கள அனுபவம்
படக்குறிப்பு,பெரும்பாலான வீடுகள் மண்ணுக்குள் புதைந்து விட்டன.

திங்கட்கிழமை நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்ட போது, அதில் சிக்கிக் கொண்ட ஒருவர் உடனடியாக தாசில்தாரை மொபைல் வாயிலாக அழைத்துள்ளார். அப்போது, “நம்பிக்கை இழக்காதீர்” என தாசில்தார் கூறியுள்ளார். மொபைல் இணைப்பை துண்டித்த 20 நிமிடங்களில், நள்ளிரவு 2.15 மணிக்கெல்லாம் தீயணைப்பு வாகனங்களுடன் மீட்புப்படையினர் வந்துள்ளனர்.

நிலச்சரிவிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டவர்கள் தங்கியிருக்கும் முகாமில் படுக்கை, உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை சேர்ந்தவர்களும் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள சிலருக்கு தகவல் பரிமாற்றத்திற்காக செல்போனும் தரப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று சடலங்கள் அவ்வளவாக மீட்கப்படவில்லை. உடல்கள் மீட்கப்படுவது படிப்படியாக குறைந்து வருகிறது. இனி வரும் நாட்களில் உயிருடன் இருப்பவர்கள் குறித்த சமிக்ஞைகள் ஏதும் உள்ளதா என்பதை அறியும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபடுவார்கள் என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வயநாடு மண்சரிவு பலி 350 ஆக அதிகரிப்பு: கடற்படையின் மீட்புப் பணி நிலவரம் என்ன? - அரசு விளக்கம்

04 AUG, 2024 | 02:14 PM
image

புதுடெல்லி / வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டமண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 350 ஆக அதிகரித்துள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொடரும் கடற்படையின் பங்களிப்பு குறித்து மத்திய அரசு விவரித்துள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மோசமான வானிலை, கடினமான நிலப்பரப்பு அமைப்புகளுக்கு மத்தியில், வயநாடு மாவட்டத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய கடற்படை மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முழு வீச்சில் தீவிரமாகத் தொடர்கிறது. நிவாரண முயற்சிகளை அதிகரிக்கவும், பேரழிவால் பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்களுக்கு ஆதரவளிக்கவும் கூடுதல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

wayanad_12.jpg

தற்போது 78 கடற்படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் குழுக்கள் சூரல்மலா, முண்டக்கை பகுதிகளின் பல இடங்களில் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், பேரிடர் நிவாரணப் படையினர், உள்ளூர் நிர்வாகத்துடன் கைகோர்த்து செயல்படுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், உணவு மற்றும் இதர பொருட்களை தொடர்ந்து வழங்குவதற்காக ஒரு குழு செயல்படுகிறது. மற்ற குழுக்கள் பிழைத்தவர்களைத் தேடுதல், இடிபாடுகளை அகற்றுதல், உடல்களை மீட்டெடுக்கும் பணி போன்றவற்றில் ஈடுபடுகின்றது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக சூரல்மலாவில் மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள், 30 மாலுமிகளைக் கொண்ட ஒரு குழு, ஆகஸ்ட் 1 அன்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலா, முண்டக்கை பகுதிகளை இணைக்கும் ஆற்றின் மீது முக்கியமான பெய்லி பாலத்தை நிர்மாணிப்பதில் இந்திய ராணுவத்துக்கு உதவியது. கனரக இயந்திரங்கள், ஆம்புலன்ஸ்களின் இயக்கத்துக்கு உதவும் போக்குவரத்தின் முதுகெலும்பாக இந்தப் பாலம் செயல்படுகிறது. ஆகஸ்ட் 2 அன்று, கோழிக்கோட்டில் இருந்து இயக்கப்படும் ஐஎன்எஸ் கருடாவின் இந்திய கடற்படையின் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வான்வழி மீட்புப் பணியை மேற்கொண்டது.

சிக்கித் தவிக்கும் மக்களை விரைவாக வெளியேற்றுதல், அடிப்படை வசதிகள், மருத்துவ உதவிகளை வழங்குவதை உறுதி செய்வதற்காக இந்திய கடற்படை உள்ளூர் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது’ என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

wayanad14.jpg

தேடுதல் பணி தீவிரம்: வயநாடு நிலச்சரிவு உயிரிழப்பு 350 ஆக அதிகரித்துள்ள நிலையில், 341 பிரேத பரிசோதனைகள் முடிந்துள்ளதாகவும், அதில் 146 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவத்தின் குழு ஒன்று வியாழனன்று 190 அடி நீளமுள்ள பெய்லி பாலத்தின் கட்டுமானப் பணிகளை முடித்தது. இதன்மூலம், கனரக இயந்திரங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் செல்ல வசதியாக, தேடுதல் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

நிவாரண முகாம்: மேப்பாடியில் உள்ள 17 நிவாரண முகாம்களில் 707 குடும்பங்களைச் சேர்ந்த 2,597 பேர் தங்கியுள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் உள்ள 91 முகாம்களில் கிட்டத்தட்ட 10,000 பேர் தங்கியுள்ளனர். உயிர் பிழைத்தவர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பேரிடரின் பின்விளைவுகளைக் கையாளும் அதிகாரிகளுக்கு உளவியல் ஆதரவை வழங்குவதற்காக மனநலப் பேரிடர் மேலாண்மைக் குழுவை மாநில அரசு உருவாக்கியுள்ளது.

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ மேஜர் ஜெனரல் வி.டி.மேத்யூ கூறும்போது, “பாதிக்கப்பட்ட இடங்களில் சிக்கியிருந்த மக்களை மீட்கும் பணி ஏறத்தாழ நிறைவடைந்துவிட்டது. இப்போது உடல்களைத் தேடும் பணியில் மட்டுமே ஈடுபட்டிருக்கிறோம். எனினும், தெர்மல் ஸ்கேனரை பயன்படுத்தி, யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்றும் தேடி வருகிறோம்” என்றார். அதேவேளையில், நிலச்சரிவு பேரிடரில் இதுவரை 206 பேர் காணாமல் போயுள்ளதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/190240

  • கருத்துக்கள உறவுகள்

பேரிடர் இணைப்புகளுக்கு நன்றி ஏராளன் ..........!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய பலரை மீட்டவர் மாயம்

06 AUG, 2024 | 09:41 AM
image
 

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் சிக்கிய பலரை தனது உயிரை பணயம்வைத்து மீட்டவர் மாயமாகி உள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையால் சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூலை 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். இவர்களை மீட்கும் பணியில் தன்னார்வலர்கள், மீட்புக் குழுவினர் மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

அந்த வகையில், சூரல்மலை கிராமத்தைச் சேர்ந்த லாட் பிரஜீஷ் என்பவரும் நிலச்சரிவில் சிக்கிய பலரின் விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்றி உள்ளார். ஆனால் அவர் இப்போது காணாமல் போய் உள்ளார். நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பே சூரல்மலை பகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ள பிரஜீஷை சூப்பர்ஹீரோ என அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.

இதுகுறித்து சூரல்மலை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, “முண்டக்கை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதாக முதலில் தகவல் கிடைத்ததும் பிரஜீஷ் தனதுஜீப்பில் மலைப்பகுதிக்கு 2 முறைசென்று அங்கு சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டு வந்தார்.அதன் பிறகு தனது குடும்பத்தினருடன் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.

அப்போது ஒரு செல்போன் அழைப்பு வந்தது. இதையடுத்து, 3-வது முறையாக ஜீப்பில் மலைப் பகுதிக்குச் சென்றார். அதன் பிறகுஅவர் திரும்பி வரவே இல்லை. பின்னர் அவருடைய ஜீப் சேதமடைந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. ஆனால் பிரஜீஷ் என்ன ஆனார் என இதுவரை தெரியவில்லை” என்றார்.

மற்றொரு கிராமவாசி கூறும்போது, “எங்கள் ஊரில் நடக்கும் அனைவருடைய குடும்ப நிகழ்ச்சியிலும் பிரஜீஷ் கலந்து கொள்வார். திருமணமாக இருந்தாலும் ஒருவரின் மரணமாக இருந்தாலும் அந்தநிகழ்ச்சியின் தொடக்கம் முதல் இறுதி வரையில் உடன் இருந்து தேவையான உதவிகளை செய்வார். என் மகளின் திருமணத்துக்கும் உதவினார். அவரை இழந்துவிட்டோம்” என்றார்.

சட்டவிரோத சுரங்க நடவடிக்கையே காரணம்: மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி:

வயநாடு பகுதியில் கேரள அரசின் ஆதரவுடன் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. மேலும் மனிதர்கள் அங்கு குடியேறுவதும் சட்டவிரோதமாக நடைபெற்று வருகிறது. இதற்கு அங்குள்ள உள்ளூர் அரசியல்வாதிகள் உதவி வருகின்றனர். சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் அங்கு ஆக்கிரமிப்புகள் நடக்கின்றன.

சட்டவிரோதமாக இடங்களை ஆக்கிரமித்து அங்கு வீடுகள் கட்டப்படுகின்றன. இதுதொடர்பாக ஆய்வு செய்ய முன்னாள் வனத்துறை தலைமை இயக்குநர் சஞ்சய் குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் ஆதரவுடன் அங்கு தொடர்ந்து சட்டவிரோத குடியேற்றம், சட்டவிரோத சுரங்கப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு கேரள அரசுதான் முழு காரணம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

https://www.virakesari.lk/article/190387

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வயநாடு நிலச்சரிவு - குடும்பத்தையே இழந்த இளம்பெண் ஸ்ருதிக்கு மீதமுள்ள நம்பிக்கை என்ன?

வயநாடு நிலச்சரிவு - ஸ்ருதி
படக்குறிப்பு, நிலச்சரிவுக்கு பிறகு ஏற்பட்ட ஒரு விபத்தில் ஸ்ருதிக்கு இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. கட்டுரை தகவல்
  • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

‘‘புதிதாகக் கிடைத்த உறவாவது என்னோடு தொடரும் என்று நம்பிக்கையோடு இருந்தேன். அதுவும் இல்லை என்றாகிவிட்டது’’ மிகவும் மெல்லிய குரலில் பேசினார் ஸ்ருதி.

ஸ்ருதி, வயநாடு நிலச்சரிவில் தன் தாய், தந்தை, தங்கை ஆகியோரைப் பறி கொடுத்த 24 வயது இளம் பெண். வயநாடு மாவட்டம் சூரல்மலையைச் சேர்ந்த அவர், கோழிக்கோட்டில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், இந்த இயற்கைப் பேரிடரிலிருந்து தப்பினார்.

ஸ்ருதியின் தாய் சபிதா, தந்தை சிவண்ணா, தங்கை ஸ்ரேயா ஆகியோரைத் தவிர்த்து, பெரியப்பா, பெரியம்மா, அவர்களின் பேரன்கள் இருவர், சித்தப்பா, சித்தி என அவரின் குடும்பத்தில் மட்டும் 9 பேர் நிலச்சரிவில் உயிரிழந்தனர்.

இத்தனை துயரத்துக்குப் பின்னும் ஸ்ருதி, தன் வாழ்க்கையைத் தொடர்வதற்கு ஒரு நம்பிக்கையாக இருந்தவர் ஜென்சன், ஸ்ருதியின் காதலர்.

 

இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், போராடி இரு வீட்டார் சம்மதத்தையும் பெற்றுள்ளனர். வரும் டிசம்பரில் இருவருக்கும் திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்குப் பின்பே நிலச்சரிவில் தன் ஒட்டு மொத்தக் குடும்பத்தையும் இழந்தார் ஸ்ருதி.

 

இந்த சூழலில் ஸ்ருதிக்கு முழு ஆறுதலாய் இருந்து அவரைத் தேற்றியது ஜென்சன்தான்.

வயநாடு நிலச்சரிவின்போது முகாமில் தங்கியிருந்த ஸ்ருதிக்கு அருகிலேயே இருந்து, அவரைக் கவனித்து கொண்டார் ஜென்சன்.

வயநாடு நிலச்சரிவு - ஸ்ருதி

பட மூலாதாரம்,PTI

படக்குறிப்பு, ஜென்சன் மற்றும் ஸ்ருதி

இந்தநிலையில் தாய், தந்தை, தங்கை மற்றும் உறவினர்கள் எல்லோருக்கும் 40வது நாள் காரியம் செய்வதற்காக, ஸ்ருதியின் தந்தை வழிப் பாட்டி மாதேவி, மற்றும் உறவினர்கள் என பலரும், மாருதி ஆம்னி வேனில் கல்பெட்டாவுக்கு அருகிலுள்ள ஒரு கோவிலுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது மினி பஸ் –ஆம்னி வேன் மோதிய விபத்தில் எல்லோரும் காயங்களுடன் தப்பி விட, ஒருவர் மட்டும் உயிரிழந்தார். ஸ்ருதியின் காதலர் ஜென்சன்தான், அந்த விபத்தில் உயிரிழந்த ஒரே நபர்.

அந்த விபத்தில் ஸ்ருதிக்கும் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த பெரும்துயர், கேரளாவில் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பெருமளவில் பேசுபொருளானது.

ஸ்ருதிக்காக பலர் தங்கள் ஆறுதலை, பிரார்த்தனைகளை சமூக ஊடகங்கள் வழியாக பகிர்ந்தனர். இதையறிந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ஸ்ருதிக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று அறிவித்தார். அவருக்கு வீடு கட்டித்தருவதாக ஒரு தனியார் அமைப்பும் அறிவித்திருக்கிறது.

நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு, வீடிழந்தவர்களை சில நாட்கள் முகாம்களில் தங்க வைத்திருந்த கேரள அரசு, அதன்பின் மாதம் 6 ஆயிரம் ரூபாய் வீட்டு வாடகை, ஒரு நாளுக்கான செலவுத் தொகை 300 ரூபாய் வீதமாக மாதம் ரூ.15 ஆயிரம் வரை நிவாரணம் வழங்கி வருகிறது.

நிலச்சரிவுக்குப் பின், முகாம், மருத்துவமனை என்றிருந்த ஸ்ருதி, கல்பெட்டாவின் அம்பலேரி என்ற பகுதியில், ஒரு வீட்டில் தன்னுடைய உறவினர்களுடன் இணைந்து குடியிருக்கிறார்.

 
வயநாடு நிலச்சரிவு - ஸ்ருதி
படக்குறிப்பு தாய், தந்தை, தங்கையுடன் ஸ்ருதி

ஒரே புகைப்படம்...9 பேரின் நினைவுகள்

தன் 3 மகன்களையும் நிலச்சரிவில் பறி கொடுத்த தாயும், ஸ்ருதியின் தந்தை வழிப்பாட்டியுமான மாதேவி, ஸ்ருதிக்கு துணையாக உடனிருக்கிறார்.

அதே வீட்டில் ஸ்ருதியின் பெரியப்பா மகள் ஹரிதா, தன் இரண்டு குழந்தைகளுடன் அங்கு இருக்கிறார். இவருடைய மூன்று குழந்தைகளில் மூத்த மகன் 13 வயது அஸ்வந்த் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளார்.

தாய், தந்தையை நிலச்சரிவில் பறி கொடுத்த ஸ்ருதியின் சித்தப்பா மகன் அருண்குமாரும் அங்கே வசிக்கிறார். புதிதாக இவர்கள் குடியேறியுள்ள அந்த வாடகை வீட்டில் ஒரே ஒரு புகைப்படம் மட்டும் மாட்டப்பட்டுள்ளது. அதில் நிலச்சரிவில் உயிரிழந்த 9 பேரும் ஒன்றிணைக்கப்பட்டிருக்கிறார்கள்.

வயநாடு நிலச்சரிவு சம்பவத்துக்குப் பின், ஸ்ருதியை பல்வேறு மலையாள தொலைக்காட்சிகள் மற்றும் யூடியூப் சேனல்கள் சார்பில் பேட்டி எடுத்தபோது, ‘‘ஸ்ருதியை ஆதரவற்றவளாக விட்டு விட மாட்டேன். அவளுக்கு நானே இனி தாயும், தந்தையும், எல்லாமுமாக நான் இருப்பேன்,’’ என்று ஸ்ருதியின் கையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு கூறியுள்ளார் ஜென்சன்.

 
வயநாடு நிலச்சரிவு - ஸ்ருதி
படக்குறிப்பு, வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த ஸ்ருதியின் குடும்பத்தினர்

சிகிச்சையில் ஸ்ருதி

ஸ்ருதியின் தற்போதைய நிலையை அறிவதற்காக, பிபிசி தமிழ் அவருடைய வீட்டிற்குச் சென்றபோது, காயமடைந்த கால்களை நீட்டிய நிலையில் கட்டிலில் அமர்ந்தவாறு காதலனுடனும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், காணொளிகளையும் பார்த்துக் கொண்டிருந்தார் ஸ்ருதி.

நீண்ட யோசனைக்குப் பின், பிபிசியிடம் பேசிய ஸ்ருதி, தன்னுடைய தந்தை, அவரின் சகோதரர்கள் என மூவருடைய வீடுகளும் அருகருகில் இருந்ததையும், தீபாவளியின்போது மூன்று குடும்பத்தினரும் ஒன்று கூடி பெருமகிழ்வோடு கொண்டாடுவதையும் நினைவு கூர்ந்தார்.

ஜென்சனைப் பற்றிப் பேசத் துவங்கிய அவர், ‘‘எல்லா உறவுகளும் என்னை விட்டுப் போய் விட்டன. புதிதாக வந்த உறவு எனக்கு நிலைக்கும் என்று நினைத்தேன். அதுவும் இல்லை என்றாகிவிட்டது,’’ என்று கூறி, தொடர்ந்து பேச முடியாமல் நிறுத்தினார்.

தங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்களைப் பற்றி மீண்டும் மீண்டும் பேச விரும்பவில்லை என்று தெரிவித்த ஸ்ருதியின் சகோதரர் அருண்குமார், ‘‘ஸ்ருதியின் நிச்சயதார்த்தமே, திருமணம் போலத்தான் மிகவும் பிரமாண்டமாக நடந்தது. வரும் டிசம்பரில் திருமணத்தை இன்னும் சிறப்பாக நடத்த நினைத்திருந்தோம். எல்லாம் கனவாகக் கலைந்துவிட்டது.’’ என்றார்.

ஸ்ருதியின் பாட்டி மாதேவி, மூன்று மகன்களின் வீடுகளிலும் மாறிமாறி இருந்துள்ளார். நிலச்சரிவு நடந்த போது, அவருடைய ஒரே மகளின் வீட்டிற்குச் சென்றிருந்ததால், உயிர் தப்பியுள்ளார்.

ஆனால் ஜென்சன் உயிரிழந்த விபத்தில், இவருடைய கையும் உடைந்து கட்டுப் போட்ட நிலையில் இருக்கிறார்.

‘‘என்னோட மகன்கள் கடுமையாக உழைத்து, அந்த வீடுகளைக் கட்டினார்கள். ஒரே இரவில் எல்லாமே முடிந்துவிட்டது. இனிமே இந்த பிள்ளைங்களுக்கு யார் இருக்கா? எனக்கும் எங்க போறது, என்ன செய்யுறதுன்னு தெரியலை. இப்போதைக்கு இவளுக்குப் பக்கத்துல இருக்குறது மட்டும்தான் என்னால முடிஞ்சது,’’ என்றார் அவர்.

 
வயநாடு நிலச்சரிவு - ஸ்ருதி

கேரள முதல்வரின் அரசு வேலை அறிவிப்பும், ஒரு தனியார் நிறுவனத்தின் சார்பில் கட்டித்தரப்படும் வீடும் ஸ்ருதிக்கு எதிர்காலம் குறித்த ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பது அவரின் வார்த்தைகளில் வெளிப்பட்டன.

ஸ்ருதியின் சகோதரி ஹரிதா, தன் இரண்டு குழந்தைகளுடன், ஸ்ருதியையும் ஒரு குழந்தையைப் போலக் கவனித்துக் கொள்கிறார்.

‘‘அரசு வேலை அறிவித்திருப்பது கொஞ்சம் ஆறுதலாயிருக்கிறது. என்ன வேலை என்று தெரியவில்லை. அந்த அறிவிப்புக்குப் பின் யாரும் எனக்குத் தொடர்பு கொள்ளவுமில்லை. கால் குணமானதும் அதற்கு ஏற்பாடு செய்வார்கள் என்று நினைக்கிறேன்,” என்றார் ஸ்ருதி.

அரசுப் பணி கிடைத்தபின், எதிர்காலத் திட்டம் குறித்து ஸ்ருதியிடம் கேட்டதற்கு, ‘‘இப்போது வரையிலும் எதிர்காலம் குறித்து எந்த ஐடியாவும் இல்லை. காலில் ஒரு ஆபரேஷன் முடிந்து இருக்கிறது. இன்னொரு ஆபரேஷன் செய்ய வேண்டும். நடப்பதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதமாகும் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு முன்பே எழுந்து நடக்க முயற்சி செய்கிறேன்!’’ என்றார் ஸ்ருதி.

முன்பு காலில் மிகவும் வலி இருந்ததாகக் கூறிய ஸ்ருதி, இப்போது அது வெகுவாகக் குறைந்துவிட்டது என்கிறார்.

மலையாளத்தில் ‘ஒரு கொழப்பமும் இல்ல’ என்று அவர் சொல்லும் வார்த்தை, காலத்தின் ஓட்டத்தில் எல்லா வலிகளும் குறையும் என்ற அவரிடம் முளைத்தெழுகின்ற நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹாம் ரேடியோ: வயநாடு நிலச்சரிவில் பல உயிர்களை காப்பாற்றிய பொழுதுபோக்கு வானொலி சாதனம்

ஹாம் ரேடியோ: வயநாடு நிலச்சரிவு

பட மூலாதாரம்,SABU MATHEW

படக்குறிப்பு, வாக்கி டாக்கி போன்ற சிறிய ஹாம் ரேடியோ கருவி கொண்டு களத்தில் மீட்புப் பணியில் ஈடுபடும் ஹாம் ரேடியோ அமைப்பினர்
  • எழுதியவர், அம்ரிதா பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழ்

ஜூலை 30, 2024. கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களைப் பறிகொடுத்தனர். அங்குள்ள வீடுகள், கடைகள் எனப் பல கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்தன.

நிலச்சரிவில் சிக்கியவர்களை காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புக் குழு, மாவட்ட நிர்வாகம் ஆகியோர் மீட்டனர். கடும் வானிலையால் அங்கு தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், ஒரு வகை வானொலியைப் பயன்படுத்தியே பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மீட்புப் பணி குறித்த தகவல்கள் பரிமாறப்பட்டன. அதுதான் ஹாம் ரேடியோ.

வயநாட்டில் சுல்தான் பத்தேரி டி.எக்ஸ் அமைப்பின் (Sultan Bathery DX Association) உறுப்பினர்கள் சேர்ந்து ஹாம் ரேடியோ கொண்டு மாவட்ட நிர்வாகத்துக்கும், மீட்புக் குழுவினருக்கும் தகவல்கள் தெரிவித்தனர்.

தகவல் தொடர்பு எப்படி இருந்தது?

வயநாட்டில் நள்ளிரவு நிலச்சரிவு ஏற்பட்டது. ஆனால் காலையில்தான் மீட்புப் பணிகள் தொடங்கின.

"பேரிடர்க் காலத்தில் மின்சாரம், செல்ஃபோன் நெட்வொர்க் என எதுவும் இருக்காது. அதனால் முதல்கட்ட தகவல் தொடர்புக்கு மிகவும் எளிதான ஹாம் ரேடியோ முறையைப் பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டது. அது தக்க உதவியாகவும் இருந்தது," என்று கல்பேட்டா மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரி அருண் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

“ஜூலை 30ஆம் தேதியன்று காலையில் எங்கள் அமைப்பிற்கு கல்பேட்டா ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மீட்புப் பணியில் உதவுமாறு அழைப்பு வந்தது. உடனே எங்கள் அமைப்பைச் சேர்ந்த சில நபர்கள் அங்கு சென்று கல்பேட்டா ஆட்சியர் அலுவலகத்தில் மிகவும் விரைவாக ஹாம் ரேடியோ ஸ்டேஷன் ஒன்றை அமைத்தனர்” என்று பிபிசி தமிழிடம் பேசிய சுல்தான் பத்தேரி டி.எக்ஸ் அமைப்பின் தலைவர் சாபு மேத்யூ தெரிவித்தார்.

சூரல்மலை, நிலம்பூர் ஆகிய பகுதிகளில் இந்த அமைப்பு ஹாம் ரேடியோ நிலையங்களை அமைத்தனர்.

 

“மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆன்டெனா கொண்ட நிலையங்கள் அமைத்து எங்கள் குழுவினர் வாக்கி டாக்கி போல இருக்கும் சிறிய ஹாம் ரேடியோ கருவிகளைக் கொண்டு மீட்புக் குழுவினரோடு களத்திற்குச் செல்வோம், அதில் எப்போதும் ஃபோன் பேசுவது போலவே நாம் பேச இயலும்” என்றார்.

களத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அளவு பற்றிய தகவல்கள் ஹாம் ரேடியோ நிலையங்களுக்குப் பரிமாற்றப்பட்டு, அதிகாரிகள் அதற்கு ஏற்றது போல மீட்பு வசதிகள் செய்து மக்களைக் காப்பாற்றியதாகவும் விவரித்தார்.

வயநாடு பகுதியில் ஏற்கெனவே தகவல் தொடர்புக்கு வி.ஹெச்.எஃப் ரிபீட்டர் (VHF repeater) என்னும் ஆன்டெனா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது மலைகள் நிறைந்த பகுதி என்பதால் அது ஒன்றை மட்டும் பயன்படுத்தி நீண்டதூரம் தொடர்புகொள்ள முடியாது. இதனால் பல இடங்களில் ஹாம் ரேடியோ நிலையங்கள் அமைக்கப்பட்டதாகவும் அவர் விளக்கினார்.

இந்தக் குழுவினர் வயநாடு நிலச்சரிவின் மீட்புப் பணிகளில் 7 நாட்கள் தொடர்ந்து செயல்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

 

'வாழ்நாளில் மிகவும் தாக்கம் ஏற்படுத்திய நிகழ்வு'

ஹாம் ரேடியோ: வயநாடு நிலச்சரிவு

பட மூலாதாரம்,SABU MATHEW

படக்குறிப்பு, களத்தில் ஹாம் ரேடியோ நிலையங்கள் அமைத்து தகவல் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது

“இயல்பாகவே வயநாடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தகவல் தொடர்பு செய்வது சற்றுக் கடினமாகவே இருக்கும். ஆனால் அந்த மழையில், தகவல் தொடர்பு முற்றிலுமாகத் தூண்டிக்கப்பட்டு நாங்கள் மீட்புப் பணிகளைச் செய்வது மிகவும் கஷ்டமான நிலை இருந்தது. பல மணிநேரம் மக்கள் மண்ணுக்குள் சிக்கிய நிலையில் இருந்தனர்.

அவர்களை உயிருடன் மீட்க வேண்டும் என்ற நிலையில் நாங்கள் பணிகளைத் தொடங்கினோம்” என்று இந்த ஹாம் ரேடியோ அமைப்பைச் சேர்ந்தவரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டவருமான நிதீஷ் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், “முண்டக்கையில் ஹாம் ரேடியோ நிலையம் அமைத்தபோது இரண்டு மாடிகளைக் கொண்ட மசூதி ஒன்று முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்து இருந்ததைக் கண்டோம்” என்றார்.

“அந்த மசூதியின் தலைவரின் உடலை மீட்க ஆட்சியர் அலுவலகத்திற்கு ஹாம் ரேடியோ கொண்டு தகவல் தெரிவித்தோம். மீட்புப் படையினர் அவரது உடலை மண்ணுக்குள் இருந்து எடுக்க வந்தபோது, நிலச்சரிவு பாதிப்பில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக அந்த மசூதியில் தஞ்சம் புகுந்த ஏராளமான மக்களின் சடலங்களை மண்ணுக்குள் இருந்து எடுத்தனர்” என்று நிதீஷ் கனத்த குரலுடன் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் பல மணிநேரம் மண்ணுக்குள் புதைந்த நிலையில் இருந்ததாகவும், இது அவரது வாழ்நாளில் மிகுந்த தாக்கம் ஏற்படுத்திய நிகழ்வு எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது நடந்த பின்னரே, மசூதி அமைந்த சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து மக்களை மண்ணுக்குள் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவும், ராணுவமும் தொடர்ந்து ஈடுபட்டு மக்களைக் காப்பாற்றியதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

நிலச்சரிவு நடந்த சில நாட்களுக்குப் பிறகு தகவல் தொடர்புக்காக அரசுத் தரப்பில் இருந்து செல்போன் டவர் வைக்கப்பட்டதாகவும் அதுவரை ஹாம் ரேடியோ கொண்டு மட்டுமே தகவல் தொடர்பு நடந்ததாகவும் நிதீஷ் கூறினார்.

 

ஹாம் ரேடியோ என்றால் என்ன?

ஹாம் ரேடியோ: வயநாடு நிலச்சரிவு

பட மூலாதாரம்,SABU MATHEW

படக்குறிப்பு, கல்பேட்டா ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட ஹாம் ரேடியோ நிலையம்

அமெச்சூர் ரேடியோ அல்லது ஹாம் ரேடியோ என்பது லாபம் ஈட்டும் நோக்கமின்றி பொழுதுபோக்கிற்காக மட்டும் பயன்படுத்தப்படும் ஒரு வானொலி சேவை.

“தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம் போன்றவற்றில் ஆர்வமுள்ள மக்கள் வானொலி சேவைகளைத் தானே கற்று, ஆராய்ந்து அதில் புதுமைகளைக் கண்டுபிக்க ஹாம் ரேடியோவை பயன்படுத்தலாம்.

ஆனால் முறையாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே ஹாம் ரேடியோவை இயக்க முடியும். இவர்கள் ‘ஹாம்ஸ்’ என்று அழைக்கப்படுவர்” என்கிறார் சென்னை பல்கலைகழக்கத்தின் இதழியல் துறை பேராசிரியரும், ஹாம் ரேடியோ ஆர்வலருமான முனைவர் ஜெய் சக்திவேல்.

இந்தியாவில் 12 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு நபரும், இந்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சம் இதற்காக நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்று ஹாம் ரேடியோ இயக்குவதற்கான உரிமத்தைப் பெறலாம்.

உரிமம் பெற்ற அனைவருக்கும் ‘Call sign’ எனப்படும் தனித்துவமான ஒரு பெயர் வழங்கப்படும். அழைப்பு தொடங்கப்படுவதற்கு முன் ஒவ்வொரு நபரும் அவர்களுக்கான ‘Call sign’-ஐ சொல்லியே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வர்.

அமெச்சூர் வானொலியின் தேசிய நிறுவனத் தரவுகளின் படி, உலகம் முழுவதும் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஹாம் ரேடியோவை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்தியாவில் சுமார் 15,000 ஹாம் ரேடியோ ஆபரேட்டர்கள் உள்ளனர்.

 

ஹாம் ரேடியோ எவ்வாறு இயங்குகிறது?

ஹாம் ரேடியோ: வயநாடு நிலச்சரிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஹாம் ரேடியோ கருவிகள்

பொதுவாக வானொலியில் ஒரு வழித் தொடர்பு மட்டுமே நடத்த இயலும். ஆனால் ஹாம் ரேடியோவில் ஒரு தொலைபேசி அழைப்பு போல அனுப்புநர், பெறுநர் என இருவரும் தொடர்புகொள்ளலாம். ஹாம் ரேடியோ கொண்டு உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் மக்களுடனும் தொடர்பு கொள்ளலாம்” என்று முனைவர் ஜெய் சக்திவேல் தெரிவித்தார்.

இரண்டாயிரம் ரூபாயில் இருந்து பல லட்சம் ரூபாய் வரை ஹாம் ரேடியோ கருவிகள் உள்ளன. ஒரு பேட்டரி கொண்டு மட்டுமே இந்த ஹாம் ரேடியோ பல மணிநேரங்கள் வரை இயங்க முடியும்.

முன்பு ஹாம் ரேடியோவில் ‘மோர்ஸ் கோட்’ (morse code) எனப்படும் பிரத்யேக குறியீடு கொண்டு தகவல் பரிமாற்றம் நடக்கும். ஆனால் தற்போது தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக செல்போனில் பேசுவது போலத் தொடர்புகொள்ள முடியும். மொழி தெரியாதவர்களுடன் பேசுவதற்காக மட்டுமே மோர்ஸ் கோட் பயன்படுத்தப்படுகிறது.

“இதனால் உலகம் முழுவதும் மொழி தடையாக இல்லாமல் மக்கள் கருத்துகளைப் பரிமாற்றிக் கொள்ளலாம். ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட பொழுபோக்குகளுள் (hobbies) ஹாம்ரேடியோ ஒன்றாகும்” என்றும் அவர் தெரிவித்தார்.

“ஆனால் ஹாம் ரேடியோ பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் மட்டுமே மக்களுக்கு இதன் பயன்பாடு பற்றித் தெரிய வருகிறது” என்கிறார் முனைவர் ஜெய்சக்திவேல்.

கடந்த 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி, 2015 சென்னை வெள்ளம், 2018 கேரளா வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களில் ஹாம் ரேடியோ தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல் . .........நன்றி ஏராளன் ......!  👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.